செல்போன் இல்லாத வீடு இல்லை, என்பது போல் இரண்டு சக்கர வாகனம் இல்லாத வீடு இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது. எனவே, பெட்ரோல் விலை உயர்வு என்பது அனைத்து மக்களையும் பாதிக்கும் ஒரு பிரச்சனையாகும்.

இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 41 கோடி மக்கள் தொழிலாளர்களே. இவர்கள் தினச்சம்பளம், வாரச் சம்பளம், மாதச் சம்பளம் என வருமானம் ஈட்டுகின்றனர். இவர்களில் மாதச் சம்பளம் வாங்குவோருக்கு மட்டும் ஆண்டுக்கு இருமுறை பஞ்சப்படி உயர்வு வழங்கப்படுகிறது, மற்றவர்களுக்கு எதுவும் இல்லை.

பெட்ரோல் விலை ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகிறாதா? என்றால் இல்லை. தேவைப்படும்போதெல்லாம் பெட்ரோல் விலை உயரும், எவ்வளவு உயரும், தெரியாது. எவ்வளவு வேண்டுமானாலும் உயரும். ஏன் இந்த நிலை? ஏழைத் தொழிலாளர்கள் இதனை எப்படி எதிர்கொள்வர்? என்ற வினா எழுப்பினால் பெட்ரோல் தேவையில் 80 விழுக்காடு நாம் வெளிநாட்டிலிருந்து பெறுகிறோம். எனவே, விலை உயர்வைத் தவிர்க்க முடியாது என்பர் ஆளும்கட்சியினர்.

பெட்ரோல் விலையை எதிர்த்துப் போராடுவர் எதிர்க்கட்சியினர். இன்று போராடும் எதிர்க்கட்சியினர் நாளை ஆளுங்கட்சியாக மாறும்போது இது போல் பெட்ரோல் விலையை உயர்த்துவர். இன்று பெட்ரோல் விலையை உயர்த்தியவர்கள், நாளை பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து போராடுவர். அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவது மக்களுக்காக அல்ல, தாங்களும் மக்களுக்காகப் போராடுகிறோம் என்பதை மக்களுக்குத் தெரிவிப்பதற்கே.

1971 இல் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.1.10 அப்போது மத்திய அரசில் பணிபுரியும் எழுத்தரின் மாதச் சம்பளம் ரூ.300.00 இப்போது பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.75.40 எழுத்தரின் மாதச் சம்பளம் ரூ.10,000 பெட்ரோல் விலை 68 மடங்கு உயர்ந்துள்ளது. மாதச் சம்பளம் 33 மடங்கு உயர்ந்துள்ளது. இது நியாயமா? இது நியாயமில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். அதைப்பற்றி அவர்களுக்கு கவலையில்லை அவர்கள் ஆட்சியில் அமர்வது தங்களை உயர்த்திக் கொள்வதற்குத்தானே தவிர மக்கள் நலனுக்காக அல்ல மக்கள் நலனுக்காகத்தான் ஆட்சி செய்கிறோம் என்றால் மதுவை அரசு விற்குமா? மதுக் கடைகளை அரசு நடத்துமா?

ஏழைகளைப் பெரிதும் பாதிக்கும் அடுத்த திட்டம் தனி நபர் வருமானத்தின் மீது வசூலிக்கப்படும் வரி ஆண்டுக்கு ரூ.2 லட்சத்திற்கு மேல் சம்பாதிப்பவர்கள் 10 விழுக்காடு வரி செலுத்த வேண்டும். அதாவது மாதம் ரூ.16,000/–க்கு மேல் சம்பாதிப்பவர்கள் அரசுக்கு வரி செலுத்த வேண்டும். இவர்கள் என்ன சொகுசு வாழ்க்கையா வாழ்கிறார்கள் இவர்களிடம் வரி வசூலிப்பதற்கு?

பெரிய வணிகர்கள், தொழில் அதிபர்கள், நிலச்சுவான்தார்கள், திரைப்படத்துறையினர் தங்கள் வருமானத்தைக் கணக்கில் காட்டுகிறார்களா? விற்பனை வரியைச் செலுத்துகிறார்களா? விற்பனை கணக்கில் காட்டினால்தானே வரி செலுத்துவதற்கு இவர்களிடமிருந்து முறையாக வரி வசூலித்தாலே உபரி வரவு செலவு திட்டத்தைத் தாக்கல் செய்யலாம். கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டுவந்தால் நடுத்தர மக்கள் 25 ஆண்டுகளுக்கு வரி செலுத்தத் தேவை இருக்காது. அரசு இதைச் செய்யுமா? செய்வதற்கு யோக்கியதை உண்டா? ஆனால் மாதச்சம்ளக்காரர்களிடமிருந்து வரி வசூல் செய்வதற்கு இவர்கள் வெட்கப்படுவதில்லை.

நடுத்தர மக்களிடம் வருமான வரி என்றும் பெட்ரோல் வரி என்றும் பல வரிகளை விதித்து அவர்களின் இரத்தத்தை உறிஞ்சி எலும்புக் கூடாக்கி வேடிக்கைப் பார்ப்பவர்கள் நம்மை ஆளும் அரசில்வாதிகளே. பெட்ரோல் விலையில் ரூபாய் இரண்டு குறைத்திருந்தாலும் அடுத்த மாதம் அதனைக் கூட்டிச் சமன் செய்துவிடுவார்கள்.

1947 ஆம் ஆண்டு சூன் திங்களில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரதமர் கிளைமண்ட் ஆல்டி (Clement Alltee) இந்தியாவுக்கு விடுதலை தருவது தொடர்பான சட்டத்தை முன்வைத்தபோது, அதனைக் கடுமையாக எதிர்த்து உரையாற்றினார் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர் தனது உரையில்:

“இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்தால், ஆட்சி அதிகாரம் கயவர்களிடமும், வஞ்சகர்களிடமும், கொள்கைக்காரர்களிடமும் போய்ச் சேரும். இந்திய தலைவர்கள் அனைவரும் திறமையற்றவர்கள். வைக்கோல் பொம்மைகளுக்குச் சமமானவர்கள். அவர்கள் இனிமையாகப் பேசும் நாக்கு படைத்தவர்கள். ஆனால், இரக்கமற்ற இதயம் படைத்தவர்கள். அவர்கள் பதவிக்காக அடித்துக் கொள்வார்கள். இந்தியாவின் அரசியல் வெறும் கூச்சலும், குழப்பமுமாகவே இருக்கும். ஒரு நாள் இவர்கள் காற்றுக்கும், தண்ணீருக்கும்கூட வரி விதிப்பர்.'' என்றார்.

65 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுப்பதை எதிர்த்துத் தனது கருத்தை இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பதிவு செய்தார் வின்ஸ்டன் சர்ச்சில். அவரின் கருத்து உண்மைதான் என நிலைநாட்டி, அரசியல் பித்தலாட்டம் செய்கிறார்கள் நமது அரசியல்வாதிகள்.

Pin It