சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை – ரூ.101.37; டீசல் விலை ரூ.94.15; வீட்டு எரிவாயு விலை – ரூ.850.50. வணிக எரிவாயு விலை ரூ.1725.50.
இது ஒன்றரை ஆண்டுகளாக பொது முடக்கத்தால் தொழில் நலிந்து, வருமானம் குறைந்து, நோய்த்தொற்றால் மருத்துவ செலவுகள் கூடி, இறப்புகளைச் சந்தித்து நிற்கும் ஏழை, நடுத்தர மக்களுக்கு மோடி அளித்துள்ள கொரோனா நிவாரணம்.
உலகச் சந்தையில் எரிபொருள்களின் விலை குறைந்து கொண்டே வருகிறது. உலகத்தின் எல்லா நாடுகளும் தம் மக்களுக்கு விலை குறைப்பின் பலனைக் கடத்தி வருகின்றன.
ஆனால் நம் ஒன்றிய அரசுக்கு மட்டும் அப்படி ஒரு தொலைதூர சிந்தனை இருப்பதாகக் கூடத் தெரியவில்லை. மாறாக, விலை குறைப்பின் பயனை மட்டுமல்லாது, விலையை ஏற்றி, அதன் பயனையும் மக்களிடமிருந்தே கொள்ளை அடிப்பதில் குறியாக இருக்கிறது மோடியின் ஒன்றிய அரசு.
திறமையற்ற நிர்வாகத்தால், தறிகெட்ட தந்தையால், தாயற்ற ஒரு குடும்பம் படும் பாட்டை இந்த நாட்டு மக்கள் பட்டுக் கொண்டிருக்கிறோம்! ஆம்! வருவாய் ஈட்ட வேறு வழிகள் தேடாமல், ஒரு பக்கம் பெரும் பணக்காரர்களின் கடன்களுக்குத் தள்ளுபடி, வரிச் சலுகை என வாரி வழங்கியும், மறுபக்கம், தங்கள் குற்றங்களை மறைக்க ஊடகம், நீதித்துறை என எல்லா சுதந்திர அமைப்புகளிலும் பதவி, பணம் என வாரி இறைத்தும், இந்துத்துவக் கட்டுமானங்கள், நாடு முழுவதும் சமூகப் பதற்றம், எல்லைகளின் இராணுவப் பதற்றம் என நாட்டின் நிதிச் சுமையை கூட்டிக் கொண்டு போகிறது ஒன்றிய அரசு.
ஒன்றிய அரசின் வெளிக் கடனானது முன்னெப்போதும் இல்லாத அளவு கடந்த 7 ஆண்டுகளில் இரட்டிப்பாகி உள்ளதே திறமையற்ற நிர்வாகத்திற்குச் சான்றாகும்.
டீசல் விலை:
பொதுவாக டீசல் விலையை முந்தைய அரசு வரை கட்டுப்படுத்தியே வைத்திருந்தார்கள். பெட்ரோல் விலை ரூ.70 களில் இருந்தபோது, டீசல் விலை ரூ.40களில் இருந்தது. ஏறக்குறைய பாதியாக இருந்த டீசல் விலை, இப்போது ஏறக்குறைய பெட்ரோல் விலைக்கு இணையாக வந்து நிற்கிறது. இரட்டிப்பு விலையையும் கடந்து டீசல் விலை ஏறி இருக்கிறது.
வணிக வாகனங்களுக்குப் பெரிதும் பயன்படுத்தப்படுவது டீசல் தான். அதன் விலையேற்றம் என்பது நேரடியாக வணிகப் பொருள்களின் விலை ஏற்றத்திலும் அதுவே எளிய நடுத்தரமக்களின் வாங்கும் சக்தியின் மீதான தாக்குதலாகவே போய் முடியும். ரூ.100/- விற்ற ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் இப்போது ரூ.200/-. ரூ.20/-க்கு விற்ற சோப்பு விலை இப்போது ரூ.40/-. டீசல் விலை ஏற்றத்தின் நேரடி விளைவுகள் இப்படி உள்ளன.
இதில் மருந்தில்லா இயற்கை, ஆரோக்ய மளிகைப் பொருள்களின் விலை இதைக் காட்டிலும் இரட்டிப்பு விலை. மக்கள் பசியாறவே இயலாத சூழலில், ஆரோக்ய உணவுகள் அவர்களின் கற்பனைக்கு மட்டுமே சாத்தியமாக்கிக் கும்மியடிக்கிறது மோடியின் அரசு.
மாநில அரசுகள் எவ்வளவு முயன்றாலும் இந்த விலை ஏற்றத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற இயலாது. ஒன்றிய அரசு எரிபொருள்களின் மீதான வரியைக் குறைக்காமல், மாநில அரசு மட்டும் ஒன்றும் செய்ய இயலாத கையறு நிலையே நீடிக்கும்.
அதனால்தான் நம் தமிழ்நாட்டு நிதி அமைச்சர் கூட பெட்ரோல், டீசல் மீது முதலமைச்சர் அறிவித்த வரிச் சலுகையை இப்போதைக்கு நடைமுறைப்படுத்தினாலும் பயன் இல்லை என்றார். ஒன்றிய அரசு அந்த வரியையும் தனக்கே கிடைக்கும்படி மீண்டும் ஏற்றிவிடும் அபாயம் உள்ளது.
எரிவாயு
சமையல் எரிவாயு ரூ.350/-க்கு மானியத்துடன் விற்கப்பட்டு வந்தது. மானியம் சுமார் ரூ.230/- ஐ வங்கியில் செலுத்துகிறோம் என்று ஒரு மாயையை உருவாக்கிய ஒன்றிய அரசு, கொஞ்சம் கொஞ்சமாக மானியத்தைக் குறைத்து இப்போது ரூ.20/-க்கும் குறைவாக வங்கியில் செலுத்துகிறது. மறுபக்கம் எரிவாயுவின் விலையை உருளைக்கு ரூ.250/- ஏற்றிவிட்டது.
ஒவ்வொரு குடும்பமும் இதனால் ரூ.500/- ஒவ்வொரு உருளைக்கும் அதிகமாக செலவு செய்ய வேண்டியுள்ளது. எனக்குத் தெரிந்தே பல நடுத்தரக் குடும்பங்களில் விறகடுப்பை மீண்டும் உயிர்ப்பித்து உள்ளார்கள். ஏழை எளிய குடும்பங்கள் என்ன செய்வார்கள்? விறகு அடுப்பால் ஏற்படப்போகும் சுற்றுச் சூழல் பாதிப்புகளை இந்த அரசு கவனத்தில் கூட எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.
ஆடம்பர, மிகை, அலங்காரச் செலவுகளுக்கு அல்லாமல் அன்றாட உயிர் வாழ்தலுக்கே மாதந்தோறும் கடும் உழைப்பைச் செலுத்தும் எளிய குடும்பங்களின் செலவு இரட்டிப்பாகிப் போயிருக்கிறது. வருமானம் குறைந்து போயிருக்கிறது. நாங்கள் வாழவேண்டுமா? இல்லை, முடித்துக் கொள்ளலாமா? பல குடும்பங்கள் விடைகளை எதிர்மறையாகச் சொல்லிச் சென்றுவிட்டார்கள்.
மோடியின் தலைமை எனும் தவறான பாதையை நாம் கட்டாயம் மாற்றி ஆகவேண்டும். அதற்கான எல்லா வாய்ப்புகளையும் நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். தவறிவிட்டால், நம் வாழ்வாதரங்களின் மீதான இந்தப் போரை நாம் வெல்லவே முடியாது! நம் மக்களில் பலரின் இழப்பை நம்மால் தடுக்கவும் இயலாது!
- சாரதாதேவி