தனக்காக வாழாமல் பிறருக்காக வாழவேண்டும் என்ற உணர்வுள்ளவர்கள் சிலர் வாழ்வதாலும், புகழுக்காக உயிரைக் கொடுக்கக்கூடியவர்கள் வாழ்வதாலும், பாவத்திற்கு பரிசாக உலகையே தந்தாலும் அப்பாவச் செயலை செய்ய மறுப்பவர்கள் வாழ்வதாலும், தேவர்கள் உண்ணக்கூடிய அமுதமே கிடைத்தாலும் தான் மட்டும் உண்ணாமல் பிறருக்கு கொடுத்து உண்ணும் இயல்புடையவர்கள் சிலர் வாழ்வதாலும் தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டுள்ளதாக கடலுள் மாய்ந்த இளம்வழுதி; “உண்டாலம்ம” என்னும் பாடலில் சொல்கிறார்.

சமூகத்திற்காக வாழக்கூடியவர்கள்தான் சமூகத்திற்கு திசை வழி காட்டக்கூடியவர்களாக விளங்குகிறார்கள். புரட்சியாளர்கள் புதைக்கப்படுவது இல்லை. விதைக்கப்படுகிறார்கள். புரட்சியாளர்களின் வாழ்வே சாவிலிருந்துதான் தொடங்குகிறது. புரட்சியாளர்கள் துரோகிகளால் கொல்லப்பட்டாலும் அவர்களது கருத்துக்களை நெஞ்சிலேந்தி லட்சக்கணக்கானோர் அணிவகுப்பார்கள்.இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியப்  பொதுவுடைமைக் கட்சி தடை செய்யப்பட்டிருந்த  காலத்தில் கீழத் தஞ்சையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிகழ்ந்த சாட்டையடி, சாணிப்பால் கொடுமைகளுக்கு முடிவுகட்ட தோழர் சீனிவாசராவ் தலைமையில் விவசாயிகள் சங்கம் அமைத்துப் போராடினார்கள். இந்தப் போராட்டத்தில் ஆதிக்கசக்திகள் உதவியோடு காவல்துறை சுட்டுக்கொன்ற மாவீரர்கள் வாட்டாக்குடி இரணியன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் ஆகியோரின் கதைதான் “தோழர்கள” நாடகம்.

தமிழ்ப்பல்கலைக்கழக நாடகத்துறைப் பேராசிரியரும், மதுரை நிஜ நாடக இயக்கத்தின் தலைவரும், இடதுசாரி சிந்தனையாளருமான முனைவர் மு. இராமசாமி அவர்களின் நெறியாளுகையில் “தோழர்கள” நாடகம் 22.08.2009 அன்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் திருத்துறைப்பூண்டியில் அரங்கேற்றப்பட்டது.

தோழர்கள் என்றால் கார்ல் மார்க்ஸ் - ஏங்கல்ஸ், பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, பகத்சிங் மற்றும் தோழர்கள் குறித்த சிந்தனைதான் நமக்கு வரும். உள்ளூர் ஆளுமைகள் குறித்த உணர்வு நமக்கு மிகக்குறைவு. இராமன் - குகன், பாரி - கபிலர், அவ்வை - அதியமான் இவர்களின் நட்பு குறித்து கூட நாம் எண்ணுவது குறைவு. இலட்சியத்திற்காகப் போராடுவோரிடையேயும், இலட்சியத்திற்காக உயிர்த்துறக்கத் துணிந்தோர் இடையேயும் உள்ள உறவும், உணர்வும் தோழமையாகக் கருதப்படுகிறது.

நட்பில் உயர்ந்த வடிவம்தான் தோழமை.  குருதியும் சதையுமாய் நடந்த நிகழ்வை, போராட்ட வரலாற்றை அற்புதமாய் நாடகமாக்கியுள்ளார் முனைவர் இராமசாமி. பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள வடக்கு வாட்டாக்குடி பகுதியில் பிறந்த வெங்கடாசலம் என்ற இளைஞன் சிங்கப்பூருக்கு பிழைக்கப்போகிறான். இந்திய தேசிய ராμஷீத்துக்குத் தலைமை ஏற்க நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சிங்கப்பூர் வந்தார். வெங்கடாசலமும் நேதாஜி தலைமையில் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தார். இந்த வெங்கடாசலம்தான் இரணியன் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார்.

சம்மந்தம் என்ற துரோகியால் காட்டிக் கொடுக்கப்பட்டு வடசேரி என்ற இடத்தில் காவல்துறை 05.05.1950 அன்று இரணியனை சுட்டுக்கொன்றது. ஆறுமுகத்திற்கு பிடிவாரண்டு இல்லாத காரணத்தால் ஓடிப்போகச் சொன்னது காவல்துறை. ஆறுமுகம் காவல்துறையின் சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு, மறுக்க காவல்துறை ஆறுமுகத்தையும் சுட்டுக்கொன்றது.

அனைத்து சாதியினரின் ஒன்றுபட்ட போராட்டத்தால்தான் சாட்டையடி, சாணிப்பால் கொடுமை தடுத்து நிறுத்தப்பட்டது. முனைவர் மு. இராமசாமி இந்தத் தியாகிகளின் வரலாற்றை நெஞ்சில் பதியும் வண்ணம் நாடகமாக்கியுள்ளார். 1950-களில் கீழத்தஞ்சையில் இருந்த நிலைமைகளை அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகிறது நாடகம்.

இரணியன் - ஆறுமுகம் கதையை எடுத்த எடுப்பிலேயே சொல்லாமல் ஸ்பார்ட்டகசை அறிமுகப்படுத்தி அவர் மூலமாக பகத்சிங், புலித்தேவன், திப்பு, மருது, கட்டபொம்மன், தீரன் சின்னமலை போன்ற தியாகிகளின் போர்குணத்தை, வெளிப்படுத்தி பின்னர் கதையை சொல்வது நல்ல உத்தி.

அண்டிப்பிழைக்காமல் வெள்ளையருக்கு எதிராகப் போராடி மடிந்தாலும் வாழையடி வாழையாக இந்தப் போர்க்குணம் தொடர்கிற வரலாற்றை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொரு விடுதலைப் போராட்டத்திலும் அர்ப்பணிப்பும், துரோகமும் இணைந்தே உள்ளது. விதையொன்று விருட்சமாகி தன் கிளை பரப்பிய வரலாறும், கிளை பரப்பிய விருட்சத்தில் கருநாகம் நஞ்சு கக்கிய வரலாறும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஈழப்போர் நல்ல எடுத்துக்காட்டு. நஞ்சு கக்கிய கருநாகமாக கருணா, (கருணாநிதியை கூட நீங்கள் குறித்துக்கொள்ளலாம்).

சுமார் ஒரு மணி நேரத்திற்குள்ளான நாடகத்தில் நறுக்குத் தெரித்தாற் போன்ற வசனங்கள் அருமை. ஸ்பார்ட்டகஸ் தன்னைப்பற்றி கூறும்போது “போராளியின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள புலியின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவேண்டும். என்று கூறுகையில் பலத்த கைத்தட்டல்.

“இரண்டாயிரம் ஆண்டுகள் ஆடுகளாய் வாழ்வதைவிட இரண்டு நாட்கள் புலிகளாய் வாழ்ந்து  மடிவது மேல்” (பலத்த கைத்தட்டல்) “ஒருவருடைய பிறப்பு என்பது அவரால் தீர்மானிக்க முடியாதது. அவன் அடிமையாகக்கூட பிறக்கலாம். தப்பில்லை. ஆனால் அவன் சாகும்போது அடிமையாக சாகக்கூடாது.” “புலி சோர்வடையாது வீரமிகுந்தது” “முதலில் விவசாய தொழிலாளர் சங்கம் கட்டவேண்டும் காம்ரேட்” என்று தோழர் சீனிவாசராவ் சொல்லும்போது, காம்ரேட்வார்த்தை குறித்து மற்றவர்கள் விவாதிப்பதும், கடைசியாக ‘தோழர்’ என்ற சொல்லைத் தேர்வு செய்வதும் சுவையான காட்சி.

பெரியார் தொண்டர்களும், மார்க்சியத் தொண்டர்களும் ஒன்றுபட வேண்டியதை ஓரிடத்தில் சுட்டுகிறது

நாடகம். வாட்டாக்குடி இரணியன் ஒரு வீட்டில் உணவு கேட்க அந்த குடும்பத்தின் தலைவி வறுமையைச் சொல்ல, அம்மா, தாயி உன் பெயர் என்ன என்று இரணியன் கேட்க, அவள் ‘செங்கொடி’ என்பாள். உடனே இரணியன் அம்மா நான்தான் இரணியன். என் தலைக்கு அரசாங்கம் ஆயிரம் ரூபாய் அறிவிச்சிருக்கு. என்னைப் பிடித்துக்கொடுத்து வாங்கிக்க தாயி என்று சொல்லும்போது கண்கள் குளமாகின்றன. சாணிப்பால், சாட்டையடி குறித்த பாடல் காட்சியும் நம்மை உருக வைக்கின்றன.

ஆறுமுகத்தை தப்பிச் செல் என்று காவல்துறை சொல்லும்போது என்னை ஓடவிட்டு பின்னால் சுடலாமுன்னு பார்க்கிறீயா? என் தோழன் உயிருக்கு முன்னால் என் உயிரு மயிருக்குச் சமம்டா என்று சொல்லி ஆறுமுகமும், இரணியனும் சாகிற சாட்சி; உணர்ச்சிமயமானது. நன்கு நடித்திருந்தார்கள்.  ஆறுமுகம் சாகும்போது அவருக்கு வயது 22. திகைப்பாக இருக்கிறது. ஸ்பார்ட்டகஸ், சீனிவாசராவ் தோற்றங்களில் முனைவர் மு. இராமசாமி, இரணியனாக சிவக்குமார், ஆறுமுகமாக மகாராஜன்; புலிக்குணத்தை வெளிப்படுத்துகிற தங்கத்துரை உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக நடித்தனர்.

ஈழப்போர் பின்னடைவு இயக்குநருக்கு ஏற்படுத்தியுள்ள தாக்கம் நாடகத்தின் உரையாடல்களிலும் காட்சியமைப்புகளிலும் தெரிகிறது. ஒரு நம்பிக்கை உணர்வை ஊட்டும் தன்மையில் நாடகத்தின் தொடக்கமும் முடிவும் அமைந்துள்ளது. “நான் மீண்டும் வருவேன் இலட்சம் இலட்சமாய், கோடிகோடியாய் பெருகி நான் மீண்டும் வருவேன்” என்று போராளியின் போர்க் குரலாய் தொடங்கி, இரணியனும், ஆறுமுகமும் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு “விழ விழ எழுவோம் ஒன்று விழ நாங்கள் ஒன்பதாக எழுவோம்” என்று காசி ஆனந்தன் வரிகளைச் சொல்லிவிட்டு “ஒளி கொண்டு வருவான்; பேரொய் ஊற்றென மீண்டும் மீண்டும் மீண்டு வருவான்; சூரியக் குழந்தை அவன்” என்ற சி.மோகனின் கவிதையோடு நாடகம் முடியும்போது கைதட்டல் அதிர்கிறது.

Pin It