பேராசிரியர் ராமசாமி அவர்களின் ‘நிஜ நாடகக்’ குழுவினர் தமிழகம் முழுதும் அரங்கேற்றி - பாராட்டுகளைப் பெற்ற ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ நுண் குறுந்தகடு வெளியீட்டு விழா 3.12.2006 அன்று, சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமையில் நடந்தது. கவிஞர் கனிமொழி குறுந்தகட்டை வெளியிட, கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெற்றுக் கொண்டார்.

விழாவில் தோழர் கி.மகேந்திரன் (சி.பி.அய்), பேராசிரியர் நெடுஞ்செழியன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், இயக்குனர் சீமான், நடிகர் நாசர் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். விழாவின் இறுதியில் நாடகத்தை உருவாக்கியவரும், தஞ்சை தமிழ்ப் பல்கலையின் நாடகத் துறைப் பேராசிரியருமான இராமசாமி ஆற்றிய ஏற்புரை:

ஒரு சிறு நிகழ்ச்சியாக நடத்தத் திட்டமிட்ட இந்த நுண் குறுந்தகடு வெளியீட்டு விழா, இத்தனை பெரிய விழாவாக நடந்துள்ளதற்கும், அதில் என்/எங்கள் மரியாதைக்குரியவர்கள் பங்கேற்றுள்ளதற்கும், இந் நிகழ்ச்சியைச் சிறப்புடையதாக்குவதற்குப் பார்வையாளர்களாக இத்தனை நல்லுள்ளங்கள் வருகை தந்துள்ளதற்கும் நானோ/நிஜ நாடக இயக்கமோ காரணம் என்று நான் நம்பவில்லை. அந்தக் கலகக்காரர் தோழர் ‘பெரியார்’தான் இதனைச் சாத்தியமாக்கியிருக்கிறார்.

ஒடுக்கப்பட்டோர் உரிமை, பெண் விடுதலை, கடவுள் மறுப்பு ஆகிய மூன்றின் ஒருமித்த முகமாக வாழ்ந்து கடைசி மூச்சு உள்ள வரை சமூகப் பற்றுள்ளம் கொண்டு செயல்பட்ட பெரியாரின் நாடக நுண் குறுந்தகட்டை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமை ஏற்கவும், பெண்ணுரிமைக்கான போராட்டத்தளத்தில் செயல்பட்டு வரும் ஒருவர் வெளியிடவும், கடவுள் மறுப்பு என்பதையே தம் உயிர் மூச்சாய்க் கொண்டு இச்சமூக விடுதலைக்குச் செயலாற்றி வரும் ஒரு களப்பணி வீரர் அதன் முதல் பிரதியைப் பெறுவதும் என்பதாக நாங்கள் நினைத்தபடியே தோழர் சுபவீயின் உதவியால் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி அவர்கள் தலைமையேற்க நண்பர் மணாவின் உதவியால் கவிஞர் கனிமொழி அவர்கள் நுண் குறுந்தகட்டை வெளியிட, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் முதல் நுண் குறுந்தகட்டைப் பெற்றுக் கொள்வதுமாக அமைந்து போனது என்பது மனதிற்கு மிகவும் நிறைவாக இருக்கிறது.

முப்பதாண்டுகளுக்கு முன் பெரியாரியல்வாதியாக எனக்கு அறிமுகமானவர் பேரா.க.நெடுஞ்செழியன். அப்போது மார்க்சியத்தை வாசிக்க ஆரம்பித்திருந்த நான், பெரியாரை ஒரு ‘வறட்டு நாத்திகவாதி’ என்பதாகவே அவருடன் வாதிட்டு அவருடன் மல்லுக்கு நின்றிருக்கிறேன். ஆனால் இப்பொழுதுதான் உண்மையில் என்னுடைய ஐம்பதாவது வயதிலேதான் - நான் பெரியாரைப் புரிந்திருக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது என்பதை ஒப்புக் கொள்வதில் எனக்கு வருத்தமில்லை.

அதுதான் கலகக்காரர் தோழர் பெரியார் நாடகமாகி இருக்கிறது. பெரும்பாலும் தழுவல் நாடகங்களையும், மொழி பெயர்ப்பு நாடகங்களையும் மட்டுமே நிகழ்த்திக் கொண்டிருந்தேனாயினும் அவை எல்லாம் வாழும் காலத்திற்கு ஒவ்வாத வெறும் தழுவல்களாகவோ அல்லது மொழி பெயர்ப்புகளாகவோ மட்டுமேயாகவோ அமைந்துவிடவில்லை என்பதைச் சொல்ல வேண்டியதிருக்கிறது.

கி.பி. 470 காலகட்டத்தில் எழுதப் பெற்ற கிரேக்கத்தின் அவல நாடகமான சோபாக்ளிஸின் ஆன்டிகணியின் தழுவலான ‘துக்கிர அவலம்’ எதேச்சதிகாரத்தின் வெளிப்பாடான அவசர நிலையின் கொடுங்கோன்மையை அடையாளம் காட்டவே பயன்பட்டது.

கலிலிலோ இறந்து சுமார் 362 ஆண்டுகளுக்குப் பிறகு, கலிலியோவுக்குக் கொடுத்த தண்டனை தவறானது என வாடிகன் தன் தீர்ப்பைத் திருத்தி எழுதிய செய்தியை அறிந்த நிலையில் மதவாத சக்திகள் இந்திய மண்ணில் மேலாண்மை செலுத்திய நிலையில், அறிவியலின் முன் மதம் மண்டியிட்ட வரலாற்றைச் சொல்ல வேண்டிய அவசியத்தில் எழுந்தது கலிலியோ நாடகம்.

கி.மு.500-களில் கிரேக்கத்தில் ஈஸ்கைலஸ் எழுதிய “கட்டுண்ட பிராமிதியஸ்” என்னும் நாடகம், ஜீயஸுக்குத் தெரியாமல், நெருப்பை எடுத்து வந்து, அதனை அறிவுக்கான ஆயுதமாக மனிதர்களிடம் கொடுத்த பிராமிதியஸ், காசியஸ் மலைப்பகுதியில் தினம் தினம் செத்துப் பிழைக்கிற தண்டனையை அனுபவித்திருந்த கொடுமையைச் சொல்லுகிறது.

அந்நாடகத்தை எடுத்துத் தமிழாக்கும்போது, பிராமிதியஸ் அறிவாகக் கொடுத்த நெருப்பை, ஆக்கத்திற்கான அறிவுத் தீயாகப் பயன் படுத்தாமல், சாதி, மதம் கலவரங்களில் மனித உயிர்களை அழிக்கிற அழிவுத் தீயாகப் பயன்படுத்திய கொடுமை கண்டு, இன்றைய மனிதர்களுக்கு அறிவை ஆக்கத்திற்குப் பயன்படுத்த பிராமிதியஸ் அறைகூவல் விடுவதாக அந்நாடகம் நிகழ்த்தப்பட்டது.

ஆயினும், நண்பர்கள், தொன்மங்களுக்குள், ஒளிந்து கொண்டுதானே உங்கள் கருத்துக்களைச் சொல்லுகிறீர்கள். வெளிப்படையாக வெளியே வந்து, எதார்த்தத் தளத்தில் நின்று, உங்கள் கருத்துக்களைச் சொல்லப் பாருங்கள்” என்று சொன்னதன் வெளிப்பாடாக நிஜநாடக இயக்கத்தின் 25வது ஆண்டு நிகழ்வை எப்படி நிகழ்த்தலாம் என்று யோசிக்கையில், இவர்கள் எல்லோருடைய முகத்திலும் அடிக்கிற மாதிரி ஒரு தமிழ் நாடகம் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கையில் அது என்னைப் பெரியாரிடம் கொண்டு வந்து சேர்த்தது.

அதுவே, நடந்தது. எவரெல்லாம் நான் எதற்குள்ளோ ஒளிந்து கொண்டு கருத்துக்களைச் சொல்வதாக விமர்சித்தார்களோ, அவர்களெல்லாம் மிரண்டு போய், இதற்கு அந்தத் தழுவல் நாடகங்களே பரவாயில்லை என்பதாகப் புலம்புகிற, அதிசயத்தைச் செய்து, ‘கலகக்காரர் தோழர் பெரியார் ‘நாடகம். அவர்களுக்குத் தெரியாத ஒன்று, இந்த நாடகத்திலும் நான் பெரியாருக்குள் ஒளிந்து கொண்டுதான் என் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறேன் என்பது! எல்லாப் படைப்புகளுக்கும் இதுதான் பொதுவிதி என்கிற உண்மையும் அப்பொழுதுதான் புரியத் தொடங்கியது. அப்படி யோசித்துப் பார்க்கையில்தான் என் / எங்களின் எல்லா நாடகங்களுக்குள்ளும் ஒரு பெரியாரோ, ஒரு காரல் மார்க்சோ ஒளிந்து கொண்டிருப்பது எனக்கே புரிபடத் தொடங்கியது.

அது மட்டுமல்லாது, 28 ஆண்டுகால என் நாடக அனுபவத்தில் எல்லாவிதமான நாடக அனுபவங்களையும் ஒரு சேரக் கற்றுத் தந்தது. ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ நாடகம் என்பதைச் சொல்லுவதில் பெருமிதம் அடைகிறேன்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம், தமிழர் கண்ணோட்டம், மக்கள் கலை இலக்கியக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்று பல்வேறு அமைப்புகள் சார்ந்த பல்வேறு தோழர்களின் தோள்களில் கைகளைப் போட்டுக் கொண்டு, அவர்களுடன் உண்டு, விவாதித்து, அது இயங்கியல் முறையில் நாடக வெளிப்பாட்டையும் பாதித்து, ஒவ்வொரு நாளும் புதுப்புது நாடகமாகக் ‘கலகக்காரர் தோழர் பெரியா’ரை மெருகேற்றித் தந்திருக்கிற அனுபவம், நாடகம், பார்த்தவர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திய சேதியை பல நிகழ்வுகளில் பகிர்ந்து கொண்டிருந்த அனுபவம், இங்கிருக்கிற எத்தனை நாடகக் குழுக்களுக்கு அது வாய்த்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

நாடகத்தைக் காண வந்த பார்வையாளர்கள் நாடகத்தின் ஊடாக எழுப்பிய கேள்விகள், நாடக நிகழ்வுக்குப் பின் எழுப்பிய கேள்விகள், இரண்டாம், மூன்றாம் முறை என்று இந்த நாடகத்தைப் பார்க்க வந்த நிலையில் தங்கள் குழந்தைகள் கேட்டதாக வந்து கேட்ட கேள்விகள் இவைகள் எல்லாம் மனதற்குள் பதியமாகி ஒவ்வொரு நாள் நிகழ்விலும் பிரதிக்குப் புது ரத்தம் பாய்ச்சிக் கொண்டிருந்தன.

புதுச்சேரியில்

புதுச்சேரியில் நாடகம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பெரியவர் வே.ஆனைமுத்து கூட நாடகம் பார்த்துக் கொண்டிருக்கிறார். பார்வையாளர் பகுதியிலிருந்து, நடித்துக் கொண்டிருக்கிற பெரியாரை நோக்கி ஒரு குரல்: ‘பெரியார் செத்துப் போனதுக்கு அப்புறம், அந்தப் பொணத்தைத் தூக்கினது எந்தச் சாதிக்காரன்’ ... பெரியாராக நடித்துக் கொண்டிருக்கிற நிலையில், எனக்கு ஒரு சிக்கல். பெரியாராக இருந்து பதில் சொல்வதா? அல்லது நாடகக்காரன் மு. இராமசாமியாகப் பதில் சொல்வதா? யோசிப்பதற்கான கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்து, ‘நான் தான் கல்லு கணக்கா உசுரோட இருக்கேனே... செத்ததுக்கு அப்புறமுள்ள அதப் பாக்கணும்’ என்று கூறவும், பார்வையாளர் பகுதியிலிருந்து சிரிப் பொலி எழவும், கேள்வி கேட்டவர் அமைதியானது தெரிந்தது.

இதுபோல் எண்ணற்ற கேள்விகள்; எண்ணற்ற ஊர்களில்! நாடகத்திற்கு உள்ளிருந்து கேள்விகள், நாடகத்திற்கு வெளியே இருந்தும் கேள்விகள், பெரியாரைப் பற்றிக் கேள்விகள், பெரியாராக நடிப்பவரைப் பற்றியும் கேள்விகள் - இவைகள் அனைத்திற்கும் பதில் சொல்லியபடியே - பதில் தேடியபடியேதான் ‘கலகக்காரர் தோழர் பெரியார் நாடகம்’ இறுதி வரையில் நடந்து முடிந்திருக்கிறது.

பெரியாரை மறுவாசிப்பு செய்ய அல்லது முதல் வாசிப்பு செய்ய பலரையும் தூண்டியிருக்கிறது இந்த நாடகம். தோழர் மகேந்திரன் கோடிட்டுக் காட்டியதுபோல், இது இன்னொரு வகை புதிய நாடக அழகியல், இந்த நாடகம் மிக எளிமையானது. பெரியாரின் எளிமையைப் போல் எளிமையாக இருக்க வேண்டும் என்னும் திட்டத்தோடு நிகழ்த்தல், காட்சியமைப்பு என அனைத்திலும் எளிமையையே வேண்டி நின்றது.

கூட்டங்களில் கேள்வி கேட்டு, பதில் சொல்லுகிற நடைமுறையை உருவாக்கியவர் பெரியார் என்பதால் அதுவே நாடக அமைப்பின் பல நிலைகளில் /தளங்களில் செயல்பட்டு வரும் பாணியாக நாடகம் அதை இயல்பாக ஏற்றுக் கொண்டது.

இரண்டு முறை அறிவிப்புகளின் வாயிலாகவே கலகக்காரர் தோழர் பெரியார் நாடகத்தை நிறுத்திக் கொண்ட பிறகும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் நண்பர் இளையபாரதி கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒட்டுத்தாடி வைத்தபடி ஒரு புதிய பெரியாராக 2006 இல் மீண்டும் வலம் வரவேண்டியதாயிற்று.

ஏற்கனவே தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நாடகத்தைப் பதிவு செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும், பலமுறை தள்ளிப் போட்டு வந்த நிலையில், நடிகர் நாசர், தானே அதை ஒளி-ஒலிப் படம் எடுத்துத் தருவதாக வாக்குறுதி அளித்த போதும்கூட காரியப்பாட்டில் எதுவும் சாத்தியமாகவில்லை.

கலகக்காரர் தோழர் பெரியார் சம்பாதித்துக் கொடுத்த பணத்தை வைத்துக் கொண்டு, வேறு ஒரு புதிய நாடக முயற்சியில் நிஜ நாடக இயக்கம் ஈடுபடாத சூழலில், நாட்கள் ஆக ஆக கலகக்காரர் தோழர் பெரியாரை அதே வீச்சுடன் நிகழ்த்த முடியுமா என்கிற எங்கள் உடலியல் சார்ந்த அய்யங்கள் தலை தூக்கிய நிலையில் சேமித்த பணத்தைக் கொண்டு அதையே நுண் குறுந்தகடாக வெளியிடலாம் என்று முடிவு செய்தோம்.

எந்த உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தும் உதவி பெறாமல் கலகக்காரர் தோழர் பெரியார் தேடித் தந்த பணத்தைக் கொண்டு இந்த நுண் குறுந்தகடு இங்கு வெளியிடப்படுகிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழர் சுபவீ சொன்னதுபோல பெரியாரின் மொழி கலகமொழி மட்டுமல்ல, அது அடித்தட்டு மக்களின் - விளிம்பு நிலை மக்களின் வெளிப்பாட்டு மொழியாகவும் அமைந்து போனதும் அதையே ஒரு தலைவர் தன் பேச்சு மொழியாக ஆக்கிக் கொண்டிருப்பதும் வரலாற்றில் வேறு எங்கும் காணக் கிடைக்காதவை. தோழர் சீமானின் உரையில் அதற்கான சாயல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிவது மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்த நுண் குறுந்தகட்டைப் பற்றிச் சொல்வதாக இருந்தால் ஒன்றே ஒன்றுதான் சொல்ல முடியும். இந்த நுண் குறுந்தகடானது இச் சமூகத்தின் மீது அந்த ஈரோட்டுக் கிழவர் வைத்திருந்த மிகப் பெரும் நம்பிக்கையை, போராட்ட உணர்வை பார்ப்பவர் மனதில் விதைக்கும். சோர்ந்து போகிற எந்த நேரத்திலும் இந்தக் கிழவர் ஜெர்மானியக் கிழவரைப் போலவே நம்பிக்கையைத் தருவார் என்கிற உறுதியோடு அனைவருக்கும் நிஜ நாடக இயக்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Pin It