"இந்தியை அனைவருக்கும் கற்பிக்க நடவடிக்கை எடுக்க இதுவே தக்க தருணம்” என்கிறார் அமைச்சர் கபில் சிபல். தில்லியில் நடந்த உயர்க்கல்வி வாரியக் குழுக் கூட்டத்தில் 24.08.09 அன்று பேசிய இந்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் “நாட்டிலுள அனைத்துப்பள்ளிகளிலும் இந்தி கற்பிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். சென்ற தேர்தலை விட சற்று கூடுதல் வலு பெற்றவுடனேயே எந்த சிறு தயக்கமும் இன்றி தனது ஆதிக்க நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சித் தீவிரப்படுத்தத் தொடங்கியிருக்கிறது. அதற்கொரு சான்று தான் கபில் சிபலின் இந்த இந்தித் திணிப்பு முயற்சி. 

கேட்டுக் கேட்டு புளித்துப் போன பழைய வாதங்களையே இந்தித் திணிப்பிற்கு காரணங்களாக கபில் சிபல் முன் வைக்கிறார். மாணவர் இந்தியில் கூடுதல் அறிவுப் பெற்றிருந்தால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கிடையே ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் ஏற்படும் என்றார். சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து இந்தியைத் திணிக்க காங்கிரசார் முன் வைக்கிற பழைய வாதமே இது. இந்தித் தேசிய இனத்தின் மேலாதிக்கத்தின் கீழ் பிற மொழிகளை அடிமைப்படுத்தும் ஆக்கிரமிப்பை ஒற்றுமை என்ற பெயரால் பரப்புவதே காங்கிரஸ் கட்சியின் கைவந்த கலை. இதன் மூலம் உண்மையில் இவர்கள் கூறும் ஒற்றுமையும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. 

உயர்தனிச் செம்மொழியாம் தமிழை தாய் மொழியாக கொண்டு தமிழினம் என்றைக்கும் இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இந்தித் திணிப்பின் மூலம் தமிழர்களை இந்தியாவில் கட்டிப்போடுவது இயலாத ஒன்று.  

பதவிக் கூட்டணிக்காக மொழியுரிமையை பலியிடும் தி.மு.க., அ.தி.மு.க., புதிதாக கிளம்பியுள்ள தே.மு.தி.க. ஆகிய எந்தக் கட்சி காங்கிரசுக்குத் துணை நின்றாலும் தமிழ்நாட்டில் இந்திய அரசின் இந்தித் திணிப்பு செல்லாது. ஒருபுறம் சனவரி 25 மொழிப் போர் நாளில் வீரவணக்கக் கூட்டங்ள்  நடத்திக் கொண்டு மறுபுறம் இக்கழகங்கள் இந்தித்திணிப்பை இருகரம் நீட்டி வரவேற்கின்றன. தி.மு.க.வின் சுப்புலட்சுமி ஜெகதீசன் இந்திய அரசின் இந்திப் பரப்பல் குழுவில் முக்கிய உறுப்பினர். நாடு முழுவதும் உள்ள  இந்திய அரசின் பல்வேறு துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும், உலகெங்கும் உள்ள இந்தியத் தூதரகங்களிலும் இந்தியைப் பரப்ப மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஆளிணிளிணிளிணிளிணிளிணிந்து அதனை ஊக்கப்படுத்த இக்குழு பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு அளித்த வண்ணம் உள்ளது. நேற்று வரை தி.மு.க.வின் டி.ஆர்.பாலு பொறுப்பில் இருந்த நெடுஞ்சாலைத்துறை தமிழ்நாட்டிலேயே இந்தியைத் திணிக்கும் முக்கியக் களமாக விளங்கியது. 

செயலலிதா எப்போதுமே இந்திக்கும் ஆங்கிலத்திற்கும் ஆதரவானவர். தமிழ் மொழி உரிமையை தமிழ்வழிக் கல்வியைப் புறக்கணிப்பவர். தே.மு.தி.க. தமிழக இளைஞர்களை இந்தியை ஏற்கும்படி வெளிப்படையாகக் கூறி வரும் கட்சி. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சியின் மொழிக் கொள்கையைத் தவிர வேறுத் தனிக் கொள்கை கிடையாது. இந்தத் துணிச்சலில் தான் கபில் சிபல் இந்தியைத் திணிக்க இதுவே தக்க தருணம் என்று கொக்கரிக்கிறார். அதற்கேற்ப பள்ளிக் கல்வியிலிருந்து அனைத்து மட்டக் கல்வியையும் மாநில அதிகாரத்திலிருந்து நடுவண் அதிகாரத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சிகள் நடக்கின்றன. நாடு முழுவதும் ஒரே பள்ளிக் கல்வி வாரியம் அமைத்து பள்ளிக் கல்வியை அதன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டுமென்பதை கடந்த சூலை மாதம் கொள்கை அறிவிப்பாகவே இந்திய அரசு அறிவித்துள்ளது. 

ஏற்கெனவே தமிழகத்தில் தொடர்வண்டித் துறை, வரித்துறை அலுவலகங்கள், தகவல் தொடர்புத்துறை, எண்ணெளிணிளிணிளிணிளிணிளிணி நிறுவனங்கள் போன்ற பலவற்றில் இந்தி இன இளைஞர்கள் அலை அலையாக படையெடுத்து வருகின்றனர்.  

திட்டமிட்ட முறையில் இங்கெல்லாம் தமிழர்களைப் புறக்கணித்து வடநாட்டாரை பணியமர்த்துவதில் இந்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றது.  

இத்துறை அலுவலகங்களில் இந்திப் படிவங்கள், இந்தியில் உரையாடல் போன்றவை கொஞ்சம் கொஞ்சமாக கட்டாயம் ஆக்கப்படுகின்றன. இந்தியத் தேசியம் என்ற போர்வை போர்த்தி தமிழ்நாட்டிலேயே தமிழையும் தமிழர்களையும் இரண்டாம்தர மக்களாக தாழ்த்துவதற்கு இம்முயற்சிகளில் இந்திய அரசு தீவிரம் காட்டுகின்றது. 

அரசமைப்புச் சட்டத்தில் தேசிய மொழி என்பதாக எதுவும் சொல்லப்படவில்லை என்றாலும் இந்திய அரசின் அலுவல் மொழி என்ற மேலாண்மையை பயன்படுத்தி “இந்தி தான் தேசிய மொழி”, “இது தான் இந்தியாவுக்குப் பொதுவான தொடர்பு மொழி” என்ற பரப்பல் கடுமையாக நடந்து வருகின்றது. அந்த அடிப்படையில் தான் கபில் சிபல் அனைத்து மாநில மாணவர்களும் ‘தேசிய மொழியான இந்தியை’ கட்டாயம் கற்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். வெளிநாடு சென்றால் அங்கே ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் பிற மாநில மாணவர்கள் இந்தியில் உரையாட முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று குறைபட்டுக் கொள்கிறார். 

வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை இந்தியாவில் கடைவிரிக்க அனுமதிப்பது, பள்ளிக் கல்வியிலிருந்து அனைத்து நிலையிலும் சிறப்பு மையங்கள் என்ற பெயரால் பன்னாட்டு நிறுவனங்களை கல்விக் கொள்ளையில் வரவேற்பது என்ற மன்மோகன் அரசின் உலகமயக் கொள்ளைக்கு ஏற்ற நபராக அமைச்சர் கபில் சிபல் கிடைத்திருக்கிறார். பல்வேறு தேசிய இன தனித்தன்மைகள் நீக்கப்பட்ட மைய அதிகாரத்தின் கீழ் இயங்குகிற ஒற்றைத் தன்மை ஆட்சிப் பரப்பு உலகமயக் கொள்ளைக்கும் உகந்தது. அதனால் தான் உலகமயம் இந்திய மயத்தோடு கைகோத்து வருகின்றது.  

கல்வித்துறையில் விரிவடைந்து வரும் உலகமயத்திற்கு ஏற்பவே கல்வியதிகாரத்தை நடுவண் அரசில் குவித்துக் கொள்வதும், இந்தி-ஆங்கில திணிப்பு இணைந்து வருவதும் நடக்கிறது. 

தமிழ்நாட்டை வடவரின், வேற்று மாநிலத்தவரின் வேட்டைக் காடாக மாற்றி தமிழர் தாயகத்தை கலப்பின மாநிலமாக மாற்றுகிற முயற்சியின் ஒரு கூறு தான் கபில் சிபலின் இந்த இந்தித் திணிப்பு. இந்திப் படித்தால் வடமாநிலத்தில் எளிதாக வேலை கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டி தமிழ்நாட்டு இளைஞர்களை இந்தியை ஏற்கும்படி செய்துவிட்டால் தமிழ்நாட்டில் இந்திக்காரர்கள் நுழைவது இன்னும் எளிதாகிவிடும். ஏனெனில் இந்தியை அயல்மொழியாக கற்கிற ஒரு மாணவனும் அம்மொழியை தாய் மொழியாகக் கொண்ட இன்னொரு மாணவனும் இந்தியில்  நடக்கும் போட்டித் தேர்வுகளை சமநிலையில் சந்திக்க முடியாது. இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட மாணவர்கள் அதிக இடங்களை பிடிப்பது எளிது.  

இந்தித் திணிப்பை எதிர்த்த போராட்டம் தமிழகத்தில் நடைபெறாமல் போயிருந்தால் மும்மொழி என்ற பெயரால் மாநில அளவிலேயே இந்தியின் பயன்பாடு கூடுதலாகி இருக்கும். அவ்வாறான சூழலில் தமிழக அரசுப் பணிகளிலேயே இந்திக்காரர்கள் இடம் பிடிப்பது நடந்திருக்கும். இந்த ஆபத்தை தடுத்து நிறுத்தியவர்கள் நமது மொழிப்போர் ஈகியர் ஆவர்.  

தமிழ் மொழிப் பற்றும், மொழி உணர்ச்சியும் குன்றிப் போனால் தமிழ்நாட்டிலேயே தமிழின மாணவர்கள் கல்வி வாய்ப்பையும் வேலை வாய்ப்பையும் பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். தமிழகம் கலப்பின மாநிலமாக குழம்பிப் போகும். தனக்கென உறுதியான ஒரு தாயகம் இல்லாத உதிரி ஏதிலிகளாக தமிழர்கள் அலைய வேண்டிய நிலை ஏற்படும். 

கபில் சிபலின் இந்த இந்தித் திணிப்பு அறிவிப்பை எதிர்த்து தமிழர்கள் குறிப்பாக தமிழின மாணவர்கள் கிளர்ந்தெழ வேண்டும். தேர்தல் கட்சிகள் இந்தத் தற்காப்புப் போராட்டத்திற்கு பயன்படப் போவதில்லை. எனவே அக்கட்சிகளுக்கும் அக்கட்சித் தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுப்பதில் எந்தப் பயனும் இல்லை. மொழி, இன, தற்காப்புப் போராட்டத்தை பதவி அரசியலுக்கு அப்பால் இளைஞர்கள் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். கபில் சிபலின் இந்தித் திணிப்பு முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். 

Pin It