இராஜாக்கமங்கலம் வில்லிசைக் கலைஞர் கலைமாமணி சுயம்புராஜனிடமிருந்த கையெழுத்துப் பிரதிகளில் மகாபாரதம் தொடர்பாக ஆறு கதைகளைப் பார்த்தேன். அவற்றில் பஞ்ச பாண்டவர் வனவாசம் வில்லுப்பாட்டு கதையை அவர் எனக்குத் தந்தார்.

முழுப்பக்க நீண்ட நோட்டுப் புத்தகத்தில் எழுதப்பட்ட அந்தக் கதை 5600 வரிகளைக் கொண்டது. கையெழுத்து தெளிவாக இருந்ததால் சீக்கிரம் படித்து விட்டேன். 1956 இல் அந்தக் கதையைப் பிரதி செய்திருக்கிறார். பஞ்சபாண்டவர் வனவாசம் வில்லுப்பாட்டு புகழேந்திப் புலவரின் பெயரில் உள்ள பஞ்சபாண்டவர் வனவாசம் அம்மானையை முழுதும் அடியொற்றி எழுதப்பட்டது என்றாலும் பாரதக் கதை தொடர்பான வட்டாரக் கதைகள் அதில் நிறையவே சேர்க்கப்பட்டிருந்தன.drama 700உதாரணமாக பாரதக் கதையில் வரும் நச்சுப் பொய்கை அர்ஜுனன் தவம் செய்த இடம். அர்ஜுனன் பன்றியை வீழ்த்தி பரமசிவனிடம் சண்டைக்குச் சென்ற இடம் என சில நிகழ்ச்சிகள் கன்னியாகுமரி மாவட்ட ஊர்களுடன் சார்த்திக் கூறப்பட்டன. இதேபோக்கு தோல்பாவைக் கூத்து கலை நிகழ்ச்சிகளிலும் உண்டு. பரமசிவராவ் ஊருக்குத் தகுந்தவாறு கதையைச் சேர்த்தோ குறைத்தோ சொல்லுவார்.

பாண்டவர்களின் வனவாசத்தில் முதல் ஆண்டின் போது வியாசர் தருமரைச் சந்திப்பார். அப்போது பீமன் விறகு கீறிக் கொண்டிருந்தான். திரெளபதி மண்பானையைக் கழுவிக் கொண்டிருந்தாள். இதையெல்லாம் பார்த்து தருமர் சோகத்தோடு உட்கார்ந்திருந்தார். வாய்விட்டுப் புலம்பினார். இதைப் பார்த்த வியாசர் தருமரைச் சமாதானப்படுத்தினார். நளன் தமயந்தி கதையை விரிவாகச் சொல்லி அவர்களைப் போல் துன்பம் மிக்கவர்கள் உலகில் யாராவது இருக்கின்றார்களா என்று கேட்டார்.

இரண்டாம் ஆண்டு வனவாசத்தின் போது வியாசர் தருமரைச் சந்தித்தார். அப்போது புரூவ சக்கரவர்த்தி கதையைச் சொன்னார். இந்தக் கதை சுயம்புராஜன் தந்த பஞ்சபாண்டவர் வனவாசம் வில்லுப்பாட்டில் சுருக்கமாக வருகிறது. புகழேந்திப் புலவர் பேரில் உள்ள பஞ்ச பாண்டவர் வனவாசம் கதையில் புரூவச்சக்கரவர்த்தியின் கதை இல்லை.

நான் மறுபடியும் சுயம்புராஜனைச் சந்தித்தபோது பஞ்சபாண்டவர் வனவாசம் கதை வில்லுப்பாட்டில் புரூவ சக்கரவர்த்தி கதையை யார் சேர்த்தார்கள் என்று கேட்டேன். ஆனால் அவருக்கு அதைப் பற்றி தெரியவில்லை. ஆனால் பெரும்பாலும் வில்லிசைக் கலைஞர் சித்திரை குட்டி சேர்த்து இருக்கலாம் என்று சொன்னார். எண்பதுகளின் ஆரம்பத்தில் நான் சித்திரை குட்டி கலைஞரை சந்தித்தபோது அவருக்கு வயது தொண்ணூறைக் கடந்து விட்டது. விரிவாக அப்போது இது பற்றிப் பேசவில்லை.

பஞ்ச பாண்டவர் வனவாச வில்லுப்பாட்டு கதையில் வரும் நிகழ்ச்சிகள் வித்தியாசமானவை. இதில் வரும் புரூவனும் ஊர்வசியும் படும் துயரம் மிகுவித்து காட்டப்படுகிறது. அதோடு ஊர்வசிக்கும் புரூவனுக்கும் ஒன்பது குழந்தைகள் பிறக்கின்றன. அவர்களில் எட்டு பேர் காட்டு விலங்குகளால் கொல்லப்படுகின்றனர். எஞ்சிய ஒருவரின் வம்சாவளியினரே பாண்டவர்களும் கௌரவர்களும் புரூ சக்கரவர்த்தியின் மனைவி தன் கணவன் எப்படியாவது ஊர்வசியை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று நோன்பு நோற்பதாகவும் உள்ள நிகழ்ச்சிகள் வில்லுப்பாட்டில் வருகின்றன.

புரூவின் கதை மூலம் ரிக் வேத காலத்தில் தொடங்குகிறது. ஊர்வசி புரூவின் கதை ரிக் வேதத்தில் வருகிறது என்கின்றனர். மேலும் சதப பிரமாணம், விஷ்ணு புராணம், மகாபாரதம், கதா சரித்திர சாகரம், பாகவத புராணம் ஆகியவற்றிலும் இந்தக் கதை வருகின்றது என்கின்றனர்

ரிக் வேதத்தின் படி புரூவன் சூரியவம்சத்தில் பிறந்தவன் பின்னர் சந்திர வம்சத்தினராக காட்டப்படுகிறான். இவன் திரேதா யுகத்தில் வாழ்ந்தவன். இவனது தந்தை புத்தன்; தாய் இளா; புத்தன் சந்திரனின் மகன் அதனால் சந்திர வம்சத்தினன் எனக் கொள்ளப்படுகிறான். இவன் புரூ மலையில் பிறந்ததால் ப்ரூவன் எனப்பட்டான். இப்படியாக சில கதைகள் உள்ளன.

புராணங்களின்படி புரூவனின் நாடு பிரஸ்தானம் (பிரயாசை) எனப்பட்டது. பிரம்மா புரூவனுக்கு உலகம் முழுவதையும் ஆளுவதற்கு வரம் கொடுத்தார். இவன் நூறு யாகங்கள் செய்தான். மகாபாரத கதைப்படி இவன் கந்தர்வ லோகத்தில் இருந்து மூன்று வகை நெருப்பை பூமிக்குக் கொண்டு வந்தவன். இப்படியான கதைகளை விஷ்ணு புராணமும் கூறுகிறது.

புரூவன் ஒருமுறை பிராமணர்களிடம் மாறுபாடு கொண்டான். அதனால் சனத்குமாரர் இவனைப் பழித்தார். புரூவனின் மகன் ஜனமே ஜெயன் ஆவான். இவனது பேரன் துஷியந்தன். விஷ்ணு புராணம் இவனது சந்ததியர் 19 பேரைக் கூறுகின்றது. இவர்களில் பாண்டவர்களும் கவுரவர்களும் அடங்குவர்.

புரூவனைப் பற்றி புராணங்களில் மட்டுமல்ல. வாய்மொழியில் வழங்கும் கதைகளும் உள்ளன. இவை கதாகாலட்சேபக்காரர்களால் புராணங்களில் இடைச்செருகல்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ஊர்வசியைப் புரூவன் காதலிக்கும் போது அவள் அவனுடன் கூடுவதற்கு இரண்டு நிபந்தனைகளை விதித்தாள்.

ஊர்வசி மேய்க்கும் மாடுகளை புரூ பராமரிக்க வேண்டும். ஊர்வசி புரூ இருவரும் சூரிய ஒளியில் ஒருவரை ஒருவர் நிர்வாணமாக பார்த்துக் கொள்ளக் கூடாது. இந்த நிபந்தனைகளுக்கு புரூ இணங்கினான். ஆனால் இந்திரனின் சூழ்ச்சியால் புரூ நிபந்தனையை மீற வேண்டி வந்தது. இதனால் ஊர்வசி புரூவை விட்டுப் பிரிந்தான்.

புரூவனும் இந்திரனும் நண்பர்கள். ஒருமுறை புரூ சொர்க்கலோகத்திற்குப் போகும்போது கே சி என்ற அரக்கனிடமிருந்து ஊர்வசியைக் காப்பாற்றினான். அதனால் ஊர்வசி புரூவிடம் காதல் கொண்டாள். இந்தக் கதை வேறு வடிவங்களிலும் உள்ளது.

ஒருமுறை பரத முனிவன் இலக்குமியின் திருமணம் என்ற நாட்டிய நாடகத்தை நடத்தினார். லட்மியாக ஊர்வசி நடித்தாள். நாரதர் அவளிடம் நீ யாரை நினைக்கின்றாய் என்று கேட்பார். அவள் மகாவிஷ்ணுவின் பெயரைச் சொல்ல வேண்டும். ஆனால் அப்போது புரூவின் நினைவாக இருந்த ஊர்வசி ப்ரூவை நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லிவிட்டாள்.

இந்த நாடகத்தைப் பார்த்த சொர்க்கவாசிகள் சிரித்தனர். பரதருக்குக் கோபம் வந்தது. நீ யாரை நினைத்து நாடகத்தை சீரழித்தாயோ அவனை மறந்து விடுவாய் என்று சாபம் கொடுத்தார். பின் சாப விமோசனமும் கொடுத்தார். அதன்படி புரூ உன்னை மணந்து சில நாள் சேர்ந்திருப்பான் என்றார். அதன் படி தும்புரு முனிவர்களின் சாபத்தால் ஊர்வசியைப் பிரிந்தான் புரூவன்.

தமிழகத்தில் ஊர்வசியின் கதை சிலப்பதிகார காலத்தில் வாய்மொழியாக பேசப்பட்டிருக்க வேண்டும். முழுக்கதை துணுக்குகளாக அன்று வழங்கப்பட்டிருக்கலாம். ஊர்வசியும் ஜெயந்தனும் அகத்தியரின் சாபத்தால் பாதிக்கப்படுகின்றனர். இந்திரனின் மகனான ஜெயந்தன் மூங்கிலாக பிறக்கின்றான். சிறந்த நடனக் கலைஞருக்குக் கொடுக்கப்படும் தலைக்கோல் என்ற நினைவுப் பொருளாக ஜெயந்தன் மாறுகிறான்.

ஊர்வசி மாதவியாகப் பிறந்து துன்பத்தை அனுபவிக்கிறாள். ஜெயந்தனும் ஊர்வசியும் சாப விமோசனம் பெற்று மறுபடியும் சொர்க்கலோகத்திற்குச் செல்கின்றனர். துறக்க உலகில் ஊர்வசி இந்திரனின் நர்த்தகியாக இருக்கும் போது பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இவள் ஒரு ரிஷியின் தொடையில் (ஊரு) பிறந்தவள் என்ற கதையும் உண்டு. சிலப்பதிகார உரையாசிரியர்கள் காலத்தில் இந்தக் கதைகள் பரவலாக அறியப்பட்டு இருக்கிறது.

இப்படியாக பல வாய்மொழிக் கதைகளைச் சேகரித்த மகாகவி காளிதாசன் வியாசரின் பாரதத்தின் அடிப்படையில் விக்கினமோர்வசியம் என்ற நாடகத்தை இயற்றியுள்ளான்.

சமஸ்கிருத செவ்வியல் இலக்கியங்களைப் படைத்தவர்களில் காளிதாசனும் பவபூதியும் முக்கியமானவர்கள். இவர்கள் இருவரும் நாட்டார் வழக்காற்று மரபுச் செய்திகளைச் சேகரித்தவர்கள், வாய்மொழி மரபின் செல்வாக்கு உடையவர்கள் என்று கூறுகின்றனர்.

காளிதாசனின் படைப்புகளில் சாகுந்தலம், மேகதூதம், ரகுவம்சம், குமார சம்பவம், மாளவிகாக்கினி மித்திரம். விக்ன மோர் வசியம் ருதுசம்காரம் ஆகியவை முக்கியமானவை. விக்கின மோர்வசியம், புரூவன் ஊர்வசி ஆகியோரின் காதல் பிரிவு தொடர்பான நாடகம்.

காளிதாசன் குப்தர்களின் காலத்தவன். இவன் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்கின்றனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இவன் வாழ்ந்திருக்கிறான் (இமயமலை பகுதி, மத்திய இந்தியா, உஜ்ஜயினி, ஒடிசா, ஆந்திரா).

விக்கினமோர்வசியத்தில் புரூரவஸ், ஆயுஸ் (புரூவின் மகன்) ஊர்வசி, சித்திரலேகா (தோழி) தேவி (புரூவின் பட்டத்து ராணி) முதலாக பதினோரு கதாபாத்திரங்கள் வருகின்றன. இந்த நாடகத்தின் சுருக்கம் வருமாறு:

பிரதிஷ்டா நகரத்தின் அரசன் புரூரவன். ஒரு முறை தேவ உலகின் நர்த்தகியான ஊர்வசியை இரணிய குல கேசி என்பவன் கவர்ந்து சென்றான். புரூரவன் கேசியுடன் போர் புரிந்து ஊர்வசியை மீட்டான், இதன் பிறகு இருவரும் பரஸ்பரம் காதல் கொண்டனர். பல இடையூறுகளுக்குப் பின் இருவரும் ஒன்று சேருகின்றனர். விக்கிரமம் (வீரம்,), ஊர்வசியம் (ஊர்வசியின் காரணமாக,) அதாவது ஊர்வசியின் காரணமாக ஏற்பட்ட வீரம் விக்கிர மோர் வசியம் ஆகும்.

புரூவச் சக்கரவர்த்தி கதை சில மாற்றங்களுடன் திரைப்படம் ஆயிருக்கிறது. "அழைக்காதே நினைக்காதே அவைதனிலே என்னையே ராஜா ஆருயிரே" என்னும் பாடலை யாரும் மறக்க முடியாது. பி.சுசீலா பாடிய இந்தப் பாடல் 1954 இல் வெளியான மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற திரைப்படத்தில் வந்தது

இந்தப் படத்தை இயக்கியவர் வேதாந்தம் ராகவய்யா. தயாரித்தவர் ஆதிநாராயணன். இவரது மனைவி அஞ்சலிதேவி ஸ்வர்ண சுந்தரி (ஊர்வசி) வேடத்தில் இப்படத்தில் நடித்திருந்தார். ஜெமினிகணேசனுக்கு ஜெயந்தன் வேடம் (புரூ) மேலும் பி எஸ் துரைராஜ், எஸ்.வி.சுப்பையா, கருணாநிதி, ராஜ சுலோசனா ஆகியோரும் நடித்திருந்தனர்

இந்தத் திரைப்படம் பற்றி வெளியான விளம்பரங்களிலும் திரைப்பட பாட்டு புத்தகங்களிலும் இக்கதை நாட்டுப்புறக் கதையைத் தழுவி எழுதப்பட்டது என உள்ளது. இப்படம் வெளிவந்த காலத்து திரைப்பட விமர்சனங்களிலும் இது நாட்டுக்கதை எனக் குறிப்பிடப்பட்டது. உண்மையில் இந்தத் திரைப்படக் கதை புகழேந்திப் புலவர் பெயரில் உள்ள புரூ சக்கரவர்த்தி கதையைத் தழுவி எடுக்கப்பட்டது.

சொர்ண சுந்தரி இந்திரலோகத்தில் வாழும் நடன மங்கை. இந்தப் பேரழகி முழு நிலவு காலத்தில் பூ உலகத்திற்கு வருகிறாள். ஒரு முறை ஜெயந்தன் (புரூ) அவளைப் பார்க்கிறான். இருவருக்கும் காதல் அரும்புகிறது. அவர்களின் சந்திப்புக்கு இந்திரன் இடையூறாக இருக்கிறான். இந்தப் படத்தில் 12 பாடல்கள். மூன்றேகால் மணி நேரம் ஓடும். இந்த படம் தெலுங்கு மொழியிலும் வந்தது.

பெரிய எழுத்து புரூ சக்கரவர்த்தி கதை 1886 இல் முதலில் அச்சில் வந்தது. பல பதிப்புகளைக் கண்டது. உரைநடையில் அமைந்த 107 பக்கங்களைக் கொண்ட பதிப்புகளில் வரைபடங்கள் இருந்தன. 1902 ஆம் ஆண்டு பதிப்பு ஒன்றில் புகழேந்திப் புலவர் பெயர் உள்ளது. ஆனால் பிற்காலத்தில் ரத்தின நாயக்கர் சன்ஸ், பி.ஆர் என் சன்ஸ், ஸ்ரீ மகள் கம்பெனி வெளியிட்ட பதிப்புகளில் புகழேந்தி பெயர் இல்லை.manaalane mangaiyin bakkiyamதமிழில் வந்த புரூ சக்கரவர்த்தி கதை புராணங்களும் பாரதமும் கூறும் கதைகளிலிருந்து வேறுபட்டது. புரூவை சனீஸ்வரன் ஏழரை ஆண்டுகள் பிடித்து ஆட்டினான். அதனால் விளைந்த கஷ்டம் ஆகிய நிகழ்ச்சிகள் விரிவாகப் பேசப்படுகிறது. ஒரு வகையில் நளனை சனீஸ்வரன் பிடித்து ஆட்டி துன்புறுத்திய நிகழ்ச்சிகள் புரூ சக்கரவர்த்திக்கும் பொருந்துமாறு காட்டப்படுகிறது.

புரூ மட்டுமல்ல அவனது மனைவி ஜெயப்பிரதா இரண்டு மக்கள் ஆகிய எல்லோருமே சனியால் துன்பப்படுகிறார்கள். சனி பிராமண உருவம் எடுத்து புரூ சக்கரவர்த்தியைத் தொடர்ந்து செல்லுகிறான். பெரிய எழுத்து வடிவில் உள்ள இந்தக் கதையின் பல பகுதிகள் முந்திய புராணக் கதைகளில் இல்லாதவை. முழுக்கவும் இது நாட்டார் கலைஞரின் கற்பனை. இந்தக் கற்பனையில் பெரிய அளவிலான மாற்றம் மணாளனே மங்கையின் பாக்கியம் திரைப்படத்தில் உள்ளது.

பின் இணைப்பு: புரூ சக்கரவர்த்தியின் கதைச் சுருக்கம்

புகழேந்திப் புலவரின் பெயரில் மகாபாரதம் தொடர்பாக அல்லி அரசாணி மாலை முதலாக 13 கதைகள் உள்ளன. இவை எல்லாமே மூலக்கதைகளில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்றன.

மகாபாரத அம்மானை அல்லாமல் வேறு கதைகளும் புகழேந்திப் புலவர் பெயரில் உள்ளன. இந்தக் கதைகளில் புரூ சக்கரவர்த்தி கதை உரைநடையில் அமைந்தது. உத்தேசமாக இது 18ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம். பிற அம்மானைகளைப் போலவே புரூ சக்கரவர்த்தி கதையும் மூலக் கதையிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது.

காமிய வனத்தில் பாண்டவர்கள் வனவாசம் செய்த போது வியாசர் வருகிறார். நளனின் கதையைக் கூறி தருமரை சமாதானம் செய்கிறார். அப்போது வியாசர் "தருமனே உன்னுடைய முன்னோர் ஒருவனும் இதுபோன்று துன்பப்பட்டான். அவன் சந்திர வம்சத்தில் பிறந்த புரூ என்ற அரசன்" என்று கூறினார்.

வியாசர் தர்மரிடம் அர்ஜுனன் காம மூர்த்தியை நோக்கி தவமிருந்து பாசுபதாஸ்திரத்தைப் பெற்றால் வெற்றி கிடைக்கும் என்றார். அர்ஜுனன் சிவனை நோக்கி தவம் இருக்க இமயமலை சென்றான். சிவனைக் கண்டான். வெற்றி பெற்றான்.

ஒருமுறை இந்திரன் அர்ஜுனனை இந்திரலோகத்திற்கு அழைத்துச் சென்றான். இந்த நேரத்தில் வியாசர் தருமனைப் பார்க்க வந்தார். அவர் அப்போது புரூ சக்கரவர்த்தியின் கதையைச் சொன்னார். இந்தச் செய்திகள் எல்லாம் புரூசக்கரவர்த்தி கதையின் பாயிரத்தில் வருகின்றன.

மனுவால் உருவாக்கப்பட்ட இளா தேவி என்பவள் ஒருமுறை புதனின் ஆசிரமத்துக்கு சென்றாள். புதன் இளாதேவியைப் பார்த்தான். பேரழகியான அவளைக் கண்டதும் கந்தர்வ மணம் செய்து கொண்டான். அவளுடன் கூடிக் கலந்து புரூரவ என்னும் புத்திரனைப் பெற்றான் பின் புதன் இளாவைப் பிரிந்து சென்றான்.

இளா தன் மகனை அழைத்துக் கொண்டு வசிட்டரிடம் போனாள். அவர் இருவரையும் ஆசீர்வதித்தார். இளா தேவி ஆணாக மாறும் வரம் உள்ளது. உன் மகன் பிரதிஷ்டானபுரத்தை ஆண்டு வருவான். இறுதியில் வானப்பிரஸ்தமடைவான் என்றார் வசிட்டர்

இது இப்படி இருக்க தேவ உலகில் இந்திர சபையில் மித்ர வர்ணாள் என்னும் நடன மாது வந்தாள். ஊர்வசி அவளைக் கவனிக்காமல் இருந்தாள்.இதனால் கோபம் கொண்ட மித்ரவர்ணாள் ஊர் வசியைப் பார்த்து நீ கொஞ்ச நாள் பூவுலகில் ஒரு மானுடனுடன் வசிப்பாய் என்று சாபம் கொடுத்தாள். ஊர்வசி ஏற்கனவே பூவுலகு அரசனான புரூவனை அடைய நாரதரிடம் வேண்டி இருந்தாள்.

 ஒருமுறை புரூவன் உச்சியான வனத்துக்குச் சென்ற போது ஊர்வசியைக் கண்டான். அவளைக் கந்தர்வ மணம் செய்து கொண்டு சுகம் அனுபவித்தான். அவள் என் முந்தைய சாபப்படி எப்படியும் நான் உன்னை விட்டுப் பிரிந்து விடுவேன். அப்போது நீ விடை கொடுக்க வேண்டும் என்றாள். அவனும் அதற்கு இணங்கினான்.

இந்த நேரத்தில் இந்திரன் கந்தர்வர்களிடம் ஊர்வசி தேவ உலகில் நடனமாட வரவேண்டும் அழைத்து வாருங்கள் என்று ஆணையிட்டான். அவர்கள் ஊர்வசி பூவுலகு காட்டில் இருப்பதை அறிந்து அங்கே சென்றனர். ஊர்வசி வளர்த்து வந்த ஆட்டைத் திருடினர். அதைக் கண்டு ஊர்வசி புரூவை எழுப்பினாள். அரசன் திருடர்களின் பின்னே சென்றான். ஆட்டை மீட்டான். ஊர்வசி அதற்குள் இந்திரலோகம் சென்று விட்டாள்.

புரூவன் ஊர்வசியைத் தேடினான். கண்டுபிடித்தான். அவள் அவனிடம் ஒரு ஆண்டு கழித்து உன்னிடம் வருவேன். அதுவரை தனியே இருப்பாய் என்றாள். பின் மறுபடியும் வந்தாள். அவனுடன் சேர்ந்து இருந்தாள். ஏழு ஆண் மக்களைப் பெற்றாள்.

இது இப்படி இருக்க விசால தேசத்து அரசன் காமதத்தன் என்பவனின் மகள் ஜெயப்பிரதைக்கு சுயம்வரம் வைத்தான். எல்லா மன்னர்களையும் அழைத்தான். புரூவன் சென்றிருந்தான். ஜெயப்பிரதா புரூவனுக்கு மாலையிட்டாள். அவளை அழைத்துக் கொண்டு தன் நாட்டிற்கு சென்றான்.

அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது. ஜெயப்பிரதை இரண்டு குழந்தைகளைப் பெற்றாள். ஒருமுறை சிற்றரசர்கள் எல்லோரும் படையுடன் புரூவின் நாட்டை சுற்றி வளைத்தார்கள். புரூவனை அப்போது சனீஸ்வரன் பிடித்திருந்தால் அரசனுக்கு வேறு வழி இல்லை. போரிட முடியாது. குடியானவனைப் போல் வேடமிட்டு மக்களை அழைத்துக் கொண்டு காட்டு வழி சென்றான்.

காட்டைக் கடந்து ஒரு சிறு கிராமத்தை அடைந்தான். அங்கே மராமத்து ஒப்பந்தக்காரர் ஒருவரிடம் கணக்கெழுதும் வேலையில் அமர்ந்தான். ஒரு சமயம் செட்டியார் ஒருவர் வேண்டுகோளுக்காக மராமத்து ஒப்பந்தக்காரருடன் குளம் தோண்ட போயிருந்தான். செட்டியார் கூலியாட்கள் உட்பட எல்லோரின் மனைவிகள் மட்டுமே கூலி வாங்க வரவேண்டும் என்று நிபந்தனை விடுத்தார்.

கூலி வாங்குவதற்குக் கணக்கு எழுதியவரின் மனைவி ஜெயப்பிரதா போனாள். செட்டியார் அவளைப் பார்த்ததும் ஆசை கொண்டார். எளிய உடையில் அவள் அழகாக இருந்தாள். செட்டியார் அவளைச் சூழ்ச்சியாக ஒரு அறையில் அடைத்தார். அவள் அந்த அறையில் இருந்த பெட்டிக்குள் அமர்ந்து கொண்டாள். செட்டியார் பெட்டியைத் திறக்க முயன்றார்; முடியவில்லை.

செட்டியாருக்குப் பயம் பிடித்துக் கொண்டது. பெட்டியுடன் அங்கே ஒரு தீவிற்குச் சென்றார். அங்கே வணிகம் செய்து சம்பாதித்து வீடு கட்டிக் கொண்டார். பெட்டியை ஒரு இடத்தில் வைத்து பாதுகாத்தார். ப்ரூவன் மனைவியைத் தேடினான். காணவில்லை. மக்களை அழைத்துக் கொண்டு செட்டியாரின் வீட்டுக்குப் போனான். அங்கு அவரது வீடு எரிந்து சாம்பலாகக் கிடந்தது.

சனீஸ்வரன் புரூவனை மேலும் துன்புறுத்த நினைத்தான். பெரும் மழை பெய்தது. மழை வெள்ளத்தில் இரண்டு மக்களும் அவனை விட்டு பிரிந்தனர். புரூவன் இடையர் ஒருவரிடம் அடைக்கலம் ஆனான். அவர்களின் மாடுகளை மேய்த்தான். அவர்களின் தயவைச் சம்பாதித்தான்.

இந்தச் சமயத்தில் புரூவனின் மக்களை இடைச்சி ஒருத்தி கண்டெடுத்து வளர்த்தாள். அவர்களை பள்ளிக்கூடம் அனுப்பவில்லை: மாடு மேய்க்க அனுப்பினாள். ஆனால் அவர்கள் வீரர்கள் அரசு மரபினர் என்பதைப் புரிந்து கொண்டு போர்க்கலை கற்க அனுப்பி வைத்தாள்.

புரூவன் மாடு மேய்க்கும் தொழிலை ஒழுங்காக செய்து வந்தான். ஒருமுறை சனியின் சூழ்ச்சியால் அவன் அந்த நாட்டுஅரசரின் மனைவியின் அணிகளை திருடியவன் என்று சந்தேகப்பட வைத்து காட்டில் விடப்பட்டான். அவனது கை கால்களை வெட்டும்படி உத்தரவிட்டான் அரசன். ஆனால் காளியின் அருளால் அவனது காயம் குணமாகியது. ஆனால் முடவனாக இருந்தான்.

ஒரு முறை காலை இழந்த புரூவன் தன் சோக அனுபவத்தை நினைத்துப் பாடினான். புஷ்பாஞ்சலி என்ற இந்த இளவரசி அவனின் பாட்டைக் கேட்டு மயங்கி அவனை மணக்க விரும்பினாள். அவள் தந்தைக்கு அதில் விருப்பமில்லை. என்ன செய்வது என்று திகைத்து நின்றான். அப்போது அவனது மந்திரி ஒருவன் ஒரு கதை சொல்லுகிறேன் கேளுங்கள் என்று சொன்னார்.

மந்திரி அரசனிடம் "அரசு விதி வலிமையானது. ஒருவனைச் சனி பிடித்துக் கொண்டால் காப்பாற்ற முடியாது. விஷால் நகரத்தில் பூபதி என்ற அரசன் இருந்தான். அவனுக்கு ஒரு அழகான மகள் இருந்தாள். அரசனின் மனைவி தன் அண்ணன் மகனுக்கு மகளைக் கட்டிக் கொடுக்க விருப்பப்பட்டாள். அரசனுக்கு அதில் விருப்பமில்லை.

இப்படியாக அரசனும் அரசியும் மகளுக்குத் திருமணம் செய்து வைப்பதில் முரண்பாடு கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்த போது பிரம்மா விஷ்ணுவிடம் இவள் யாரை கல்யாணம் செய்வாள் தெரியுமா என்று கேட்டார். விஷ்ணு பதில் பேசவில்லை. பிரம்மா இவளது விதிப்படி தொழுநோய் பிடித்த ஒருவனை இவள் திருமணம் செய்யப் போகிறாள். அவன் இந்த ஊர் எல்லையில் ஒரு கோவில் வாசலில் இருக்கிறான்" என்றார்.

விஷ்ணு இதை நான் மாற்றிக் காட்டுகிறேன் பார் என்றார். கருடனை அழைத்து அந்தத் தொழு நோயாளியை ஏழு கடலுக்கு அப்பால் ஒரு தீவில் கொண்டு வைக்கச் சொன்னார். கருடன் அப்படியே செய்தான். அப்போது தொழு நோயாளி ஐயா என்ன பாவம் செய்தேன். இப்படி என்னை செய்து விட்டீர் எனக்கு உணவாவது தரக்கூடாதா?" என்று கேட்டான். கருடன் சரி எடுத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு. போனார்.

இதற்கிடையில் பூபதி தன் மகளுக்குச் சுயம்வர ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான். அவனது மனைவியோ மகளை ஒரு பெட்டியிலிருத்தி நிறைய உணவுப் பொட்டலங்களை வைத்து அவள் கையில் ஒரு மாங்கல்யத்தை கொடுத்து பெட்டி திறப்பவன் உனக்கு இந்த மாங்கல்யத்தைக் கட்டுவான் என்று சொன்னாள். பெட்டியை வேலைக்காரன் கையில் கொடுத்து என் தம்பி மகனிடம் இந்தப் பெட்டியை ஒப்படைத்துவிடு என்றாள்.

வேலைக்காரன் பெட்டியைத் தூக்கிக் கொண்டு போகிறான். அப்போது அங்கு வந்த கருடன் பெட்டியில் சுவையான உணவு இருப்பதை அதன் வாசனையால் அறிந்தான். பெட்டியைத் தூக்கிவந்த வேலைக்காரனை விரட்டினான். பெட்டியை அப்படியே தூக்கிக் கொண்டு போய் குஷ்ட நோயாளியின் முன்னே வைத்தான். இதில் உள்ள பலகாரங்களை சாப்பிடு என்றான்.

குஷ்டரோகி பெட்டியைத் திறந்தான். அங்கே ஒரு அழகி இருந்தாள். அவள் கையில் உள்ள மாங்கல்யத்தைப் பார்த்தான். அதை அவள் தன் கழுத்தில் கட்டச் சொன்னாள். அவன் அப்படியே செய்தான். விதி வெற்றி பெற்றது.

அந்தத் தீவில் இருவரும் தனியாக இருந்தனர். இதையெல்லாம் தன் ஞான திருஷ்டியால் அறிந்த விஷ்ணு பிரம்மாவிடம் விதியை மாற்ற முடியாது என்று எண்ணி நமது விளையாட்டுக்கு இந்த இளவரசி பலியாக வேண்டாம். இவளை நல்லபடியாக வாழவிடுவோம் என்று நினைத்தார். அந்தத் தொழுநோயாளியைக் குணப்படுத்தினார். அவனை ராஜகுமாரனாக மாற்றி பெற்றவர்களிடம் ஒப்படைக்கிறேன் என்றார். அப்படியே செய்தார்.

இந்தக் கதையை மந்திரி புஷ்பாஞ்சலியின் தந்தைக்குச் சொன்னார். அவர் உடனே சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தார். சுயம்வரத்திற்கு முடவராக இருந்த புரூவனும் போனான். அவன் கழுத்தில் மாலை விழுந்தது. புஷ்பாஞ்சலியின் தாய் இதை என்னால் பார்க்க முடியவில்லை என்று மயங்கினாள்.

அடுத்த நாள் முடவனான இடையனும் இளவரசியும் காட்டிற்கு அனுப்பப்பட்டார்கள். அங்கே சனீஸ்வரன் வந்தான். உன்னைப் பிடித்த சனி இன்றுடன் தீர்ந்து விட்டது என்றான். உடனே இடையன் முழு உருவம் பெற்று இளமையோடு இருந்தான். அவன் புரூவன் என்பதை அரசன் அறிந்து கொண்டான். மகளையும் மருமகனையும் தன் அரண்மனைக்கு அழைத்துக் கொண்டான்.

இடையர்களிடம் வீரர்களாக இருந்த இரண்டு மக்களும் தந்தையை அடையாளம் கண்டு புரூவனுடன் சேர்ந்து கொண்டனர். இந்த நேரத்தில் அவனது மனைவி ஜெயப்பிரதா இருந்த பெட்டியை செட்டியார் கொண்டு வந்தார். புரூவனிடம் கொடுத்து நீயே திறப்பாய் என்றார். அவன் பெட்டியைத் திறந்தான். ஜெயப்பிரதா இருந்தாள். எல்லோரும் ஒன்று சேர்ந்தனர்.

இந்தக் கதையில், விதி திரும்பத் திரும்ப வற்புறுத்தப்படுகிறது. ஒருவனை சனி பிடித்துக் கொண்டால் அவனை எதுவும் தடுக்க முடியாது காப்பாற்ற முடியாது என்பதை வலியுறுத்துவது போல் அமைந்தது. இத்தக் கதை தருமனைச் சமாதானப்படுத்த வியாசர் கூறுவதாக புனையப்பட்டுள்ளது..

- அ.கா.பெருமாள், ஓய்வுபெற்ற பேராசிரியர். நாட்டார் வழக்காற்றியல் மற்றும் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.

Pin It