பனித்துளிகளால்
கழுவிக் கொண்ட கண்களை
பத்திரமாக வைத்திருக்கிறேன்
நகர்வலமற்ற பரிசுத்த மேகத்தை
அணிந்து கிளம்புகையில்
தூரத்து வெயில் மினுமினுக்கும் 
கிட்டத்து வானம் சிலு சிலுக்கும்
நடுமுதுகில் துள்ளிடும் தகிப்புக்கு
ஏழு மலை ஏழு கடல் தாண்டிய நினைப்பு
எங்கிருந்து எப்போது கிளம்பினேன் 
என்றெல்லாம் தெரியாது
மனம் குடித்த குருதிக்கு மாற்று 
யாருமற்ற பொழுதுகளை 
தலைக்குள்ளிருந்தெடுத்து 
சாலையோரம் மரம் நடுகிறேன்  
 
தயவு செய்து பின்னால் வராதீர்கள் 
நிழலைக் கொண்டாடுங்கள் 
நிஜங்கள் போர்வாள்களில் 
சிக்கிக் கொண்டிருக்கின்றன
மரங்களே மானுட சுத்திகரிப்பு
அசோக வனம் சாட்சி   
கலிங்க போரை நிகழ்த்திய பிண்டத்தை  
இலையாக்கி இதயம் செய்கிறது 
இன்னொரு மரமும்.......!  
 
- கவிஜி