பெரியாறு அணைச் சிக்கலில் இரு கட்சி அரசு களும் (தி.மு.க. - அ.தி.மு.க.) அடிமை மனப்பான்மையுடன் செயல்படுவதால் நமது உரிமையை இன்றைய நாள் வரை நிலைநாட்ட முடியவில்லை. பெரியாறு அணை சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்சினைக்கும் உச்ச நீதிமன் றத்தில் மனுப்போட்டு தங்கள் கடனை முடித்துக் கொள்கின்றனர்.

அணையின் பராமரிப்புப் பணிகளில் கேரள அரசு எவ்வித இடையூறும் செய்யக் கூடாதென உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவாகக் கூறிய பிறகும் கேரள அரசு, அணையைப் பராமரிக்க விடுவதில்லை. உரிய ஆணை பிறப்பிக்கவும் என உச்ச நீதிமன்றத்தை மறுபடியும் அணுகியுள்ளது தமிழக அரசு. இன்னும் எம்மாதிரியான ஆணையை உச்ச நீதிமன்றத்திடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்? உச்ச நீதிமன்றம் என்ன ஆணை யிட்டாலும் அதனை செயலாக்கும் உறுதி தமிழக அரசுக்கு இல்லாதபோது என்ன பயன்?

அணையின் பாதுகாப்பு தமிழக அரசின் அதிகாரத் திற்கு உட்பட்டது. 2006இல் நடுவண் அரசின் உள் துறையைச் சார்ந்த அணைகள் பாதுகாப்புக்குழு ஒரு நடுவண் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அணையை ஆய்வு செய்து, “கேரளக் காவல்துறையினர் இருக்கும்வரை அணைக்குப் பாதுகாப்பு இல்லை” என அறிக்கை கொடுத்தப் பிறகும், தொடர் நடவடிக்கை எடுக்காமல் அணையின் பாதுகாப்பிற்கு “நடுவண் தொழில் பாதுகாப்புப் படையை” நியமிக்க ஆணையிட உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது தமிழக அரசு.

தேனியில் பணியாற்றிய ஒரு தமிழ் மாவட்ட ஆட்சியரின் செயல்பாடும் பிற மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியரின் செயல்பாடும் இங்கு ஒப்பு நோக்கப்பட்டுள்ளது.

நான் 2008இல் தேனி மாவட்டக் கட்டடக் கோட்ட செயற்பொறியாளராகப் பணியாற்றினேன். அப்பொழுது, பெரியாறு அணையின் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஐயப்பன் என்ற உதவி செயற் பொறியாளரைக் கேரள வனத்துறையினர் பணியாற்ற விடாது தடுத்து தாக்கியிருந்தனர். இது குறித்து புகார் அளிக்க பீர்மேடு காவல் நிலையம் சென்றவர் மீதே கேரள வனத்துறையினரைத் தாக்கியதாக வழக்குப்பதிவு செய்தது கேரள காவல்துறை! (பொறியாளர் ஐயப்பன் பதவி ஓய்வு பெற்றப் பிறகும், இந்த வழக்கு தொடர்பாக பீர்மேடு நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருந்தார்). அப்பொழுது, தேனி மாவட்ட ஆட்சியராக திரு. பசீர் அகமது (இவர் ஒரு தமிழர்) பணியில் இருந்தார்.

இந்த சம்பவம் நடந்த அடுத்த நாள் மாவட்ட ஆட்சியரது வீட்டு அலுவலகத்தில் (Camp Office), கூரை யில் நீர்க்கசிவு உள்ளதாக அதனை ஆய்வு செய்ய என்னை அழைத் திருந்தார். அப்பொழுது, மாவட்ட ஆட்சியர் இல்லம் கட்டியிருக்க வில்லை. நெடுஞ்சாலைத் துறையின் பயணியர் விடுதியில் சில மாற் றங்கள் செய்து கொடுக்கப் பட்டு, அதை இல்லமாகப் பயன்படுத்தி வந்தார். அதில் ஒரு அறையை வீட்டு அலுவலகமாகப் (Camp Office) பயன்படுத்தி வந்தார்.

நான் சென்றபோது, யாரு டனோ கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார். நான் அவர் பேசி முடிக்கட்டு மென்று, ஒரு ஆசனத் தில் அமர்ந்து விட்டேன். முந்தின நாள் பெரியாறு அணையில் நடந்த சம்பவத்தை யாருக்கோ தகவல் அனுப்பிக் கொண்டிருந்தார். “நம் முடைய பொதுப் பணித்துறைப் பொறியாளர்கள் தகராறு பண்ணி விட்டார்கள். அவர்களால் எப்போ தும் பிரச் சினைதான்” என்ற பாணி யில் இருந்தது அவரது பேச்சு.

அவர் பேசி முடித்ததும், “ஐயா எங்களது பொறியாளர்களைப் பணி செய்யவிடாது தடுத்து வன்முறை யில் ஈடுபட்டுள்ளார்கள் கேரள வனத்துறையினர். நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் தவறானத் தகவலைக் கொடுத்துக் கொண்டிருக் கிறீர்கள். எங்கள் பொறியாளர் சங் கத்திற்கு இது தெரிந்தால் விளைவு விபரீதமாகிவிடும்” என்றேன்.

அப்போதுதான் என்னைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்து, “நீங்கள் எப்போது வந்தீர்கள்? உங்களை வைத்துக் கொண்டு பேசி விட்டேனா?” என அதிர்ச்சி காட்டி னாரே தவிர, தனது செயல் குறித்து எந்த வருத்தமோ குற்ற உணர்வோ இல்லை.

2007இல் நான் மதுரையில் நீர் வள ஆதார அமைப்புத் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றினேன். அப்போது, பெப்ரவரி மாதத்தில் ஒருநாள் நான் அலுவலகத்தில் இருந்த போது, தேக்கடியில் பணி யாற்றும் நமது பொறியாளர் களிடமிருந்து காலை 11 மணியள வில் எனக்கொரு தொலைப் பேசி அழைப்பு. (தேக்கடியில் இரு துணைக் கோட்டங்களும், 6 பிரிவு களும் பெரியாறு அணை பராமரிப் புப் பணியில் உள்ளன). அலுவலகத் தைச் சுற்றி அரம்பர்கள் (ரவுடிகள்) கூட்டம் சூழ்ந்து கொண்டு தாக்குவ தாகவும், அலுவலகர்கள் அனை வரும் கதவைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருப்பதாகவும் தங்கள் உயிருக்கு ஆபத்து எனவும் பொறி யாளர்கள் பதறினார்கள். நான் உடனே நடவடிக்கை எடுப்பதாக வும் தைரியமாக இருக்கும் படியும் அவர்களுக்கு ஆறுதல் கூறினேன்.

ஆபத்தில் உள்ள பொறியாளர் களுக்கு ஆறுதல் சொல்லி விட் டேனே தவிர என்ன செய்வது எனக் குழப்பமாக இருந்தது. நான் கிளம்பி தேக்கடி போய்ச் சேர 4 மணிநேரம் ஆகும். தனி மனி தனாகப் போய் என்ன செய்வது?

தேனி மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு விவரம் தெரி வித்து, இது சட்டம் ஒழுங்கு பிரச் சினை, நமது பொறியாளர்கள் உயிருக்கு ஆபத்து, உரிய நட வடிக்கை எடுங்கள் எனக் கூறினேன்.

அப்பொழுது தேனியில் மா வட்ட ஆட்சியராகத் திரு. ஹர் சகாய் மீனா என்ற இராசஸ் தான் காரர் இருந்தார். அவர், “கவலைப் படாதீர்கள், நான் பார்த்துக் கொள் கிறேன். உங்கள் பொறியா ளர்களை அலுவலகத்திற்கு உள்ளேயே இருக் கச் சொல்லுங்கள். வெளியே செல்ல வேண்டாம்” எனக் கேட்டுக் கொண்டார்.

அடுத்த, அரை மணி நேரத்தில் தேக்கடியில் உள்ள நமது பொறியா ளர்களிடமிருந்து அழைப்பு வந்தது. ரவுடிகள் கேரளக் குமுளி நகர் காவல்துறையினரால் விரட்டி அடிக்கப்பட்டதாகவும், தற்சமயம் பிரச்சினை ஏதுமில்லை என்றும் கூறினார்கள். எனக்கு, மிகுந்த வியப் பாக இருந்தது. மாவட்ட ஆட்சி யாளரின் உதவியாளரைத் தொடர்பு கொண்டு மாவட்ட ஆட்சியர் எடுத்த நடவடிக்கை விவரம் கேட் டேன்.

தேனி மாவட்ட ஆட்சியர் கேரள இடுக்கி மாவட்ட ஆட்சி யரைத் தொடர்பு கொண்டு நிலை மையை விளக்கி, “நீங்கள் நட வடிக்கை எடுக்கிறீர்களா? அல்லது நான் தேனி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரை தேக்கடிக்கு அனுப்பி கலவரத்தை அடக்கட் டுமா?” எனக் கேட்டுள்ளார். இடுக்கி மாவட்ட ஆட்சியர்தானே நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

இன்னொரு சமயம் தேனி மாவட்ட ஆட்சியர் ஹர்சகாய் மீனாவிடம் பேசிக் கொண்டிருந்த போது என்னிடம், “உங்கள் தமிழர் கள் முழு முட்டாள்களா? அல்லது உலகம் தெரியாத அப்பாவிகளா? எனப் புரிந்து கொள்ள முடிய வில்லை” என்றார். ஏன் எனக் கேட் டேன். “கர்நாடகாவில் தேவ கவுடா என ஒரு முதல்வர் இருந் தார். சிறிது காலம் பிரதமராகவும் இருந்தார். தனது ஆட்சிக்காலத்தில் காவிரி யிலிருந்து ஒரு சொட்டு நீர்கூட தமிழகத்துக்குத் தரமாட்டோம் எனக் கூறியவர். அவர் தமிழகத் துக்கு சாமி கும்பிட வருகிறார். (அந் நேரம் கும்பகோணத்திற்கு நவக்கி ரக தரிசனத்திற்கு வந்திருந்தார்). அவருக்கு கட் அவுட் வைத்து மேள தாளத்துடன், வரவேற்பு கொடுக்கி றீர்கள். இதுவே இராசஸ்தானாக இருந்தால் அவர் உள்ளே வர முடி யாது. வந்தால் வெளியேற முடி யாது” என்றார். இவர்கள் அல் லவோ மனிதர்கள் என்று என்னால் ஏக்கப் பெருமூச்சு தான் விட முடிந் தது.

தேவகவுடாவின் கட்சிக்கு தமிழ்நாட்டிலும் கிளைகள் உண்டு. தேர்தலிலும் பங்கேற்கிறார்கள்.

2011 திசம்பர் மாதம் முல்லைப் பெரியாறு பிரச்சினை உச்சத்தில் இருந்த நேரம். தமிழகத்திலிருந்து, கேரளாவுக்கு கூலி வேலை செய்வ தற்கு சென்ற 250 பெண் கூலித் தொழிலாளிகளை கேரள அரசியல் ரவுடிகள் பிடித்து வைத்துக் கொண்டு, இரண்டு நாட்கள் அவர் களை பல்வேறு வகையில் அசிங்கப் படுத்திக் கொண்டிருந்தனர். தகவல் அவர்களிட மிருந்து கைப்பேசி மூலமாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அவர்களது உறவினர் களுக்குத் தெரிய வந்தது.

தமிழக முதல்வர் என்ன நட வடிக்கை எடுத்திருக்க வேண்டும்? மாவட்ட ஆட்சியர் ஹர்சகாய் மீனா எடுத்த நடவடிக்கை போல, கேரள முதல்வர் உம்மன் சாண்டி யைத் தொடர்பு கொண்டு “தமிழக பெண் கூலித் தொழிலாளர்களை பாதுகாப்புடன் அனுப்ப ஏற்பாடு செய்கிறீர்களா? இல்லை நான் தமிழகக் காவல் படையை அனுப்பி அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யவா?” எனக் கேட்டிருந்தால், உம்மன்சாண்டி அலறி அடித்துக் கொண்டு நடவடிக்கை எடுத்திருப் பார்.

மாறாக, இத் தகவலறிந்து தன் னிச்சையாக கம்பத்தில் ஆண்-- பெண் என பொதுமக்கள் 1 இலட் சம் பேர் கூடி கையில் பெருக்கு மாறுடன் குமுளி நோக்கி சென்றவர் களை தமிழகக் காவல் துறையினர் அடித்து விரட்டினர். அந்தக் காவல் படைக்குத் தலைமை தாங்கியவர், அப்பொழுது டி.ஐ.ஜி. ((D.I.G.) யாக இருந்த ஜார்ஜ் என்ற கேரள மாநிலத்தவர். அதற்குப் பரிசாகவோ என்னவோ, தற்போது சென்னை மாநகரின் ஆணையராக அவர் பணியாற்றுகிறார்.

தமிழகத்தை தி.மு.க. - அ.தி.மு.க. ஆளும்வரை தமிழனுக்குப் பாது காப்பில்லை. தமிழர்கள் உரிமைகள் பாதுகாக்கப்படப் போவதுமில்லை. தமிழன் சுயமரியாதையுடன் வாழ முடியாது என்பதுதான் கடந்த கால வரலாறு!

Pin It