ki venkatraman book release

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் எழுதிய “ஏழு தமிழர் விடுதலை - உச்ச நீதிமன்ற மறுப்பு - தமிழ்நாடு அரசு அதிகாரம்” - நூலின் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம், 28.02.2016 மாலை, சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்றது.  

சென்னை எம்.ஜி.ஆர். நகர் மகா மகால் அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி தலைமை தாங்கிப் பேசினார். தமிழறிஞர் அண்ணா தங்கோ அவர்களின் பெயரன் திரு. செ. அருட்செல்வன் அண்ணல் தங்கோ, தமிழ்த் தேசியப் பேரியக்கச் சென்னை நடுவண் செயலாளர் தோழர் வி. கோவேந்தன், வடசென்னை செயலாளர் தோழர் பா.க. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாவலர்கள் முழுநிலவன், பிரகாசு பாரதி ஆகியோர், “தூக்கைத் தூக்கிலிடுவோம்” என்ற தலைப்பில் பாவீச்சு நிகழ்த்தினர். 

முன்னதாக நிகழ்வின் தொடக்கத்தில், மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் வெளியிட்ட ‘உயிர்வலி’ ஆவணப்படம் திரையிடப்பட்டது. உணர்ச்சி பொங்க அதனைப் பார்வையாளர்கள் கண்ணுற்றனர். 

பின்னர் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கப் பொதுச் செயலாளர் இயக்குநர் திரு. ஆர்.கே. செல்வமணி, நூலை வெளியிட இயக்குநர் வெற்றிமாறன் முதற்படி பெற்றுக் கொண்டார்.

இயக்குநர் வெற்றிவெல் சந்திரசேகர், தொழில் முனைவோர் திரு. தாரை. மு. திருஞானசம்பந்தம், தமிழின உணர்வாளர் புலவர் இரத்தினவேலவர், தொழிலாளர் சனநாயகப் பேரியக்கச் செயலாளர் திரு. நெடுமாறன், ஊடகவியலாளர் திரு. கார்ட்டூனிஸ்ட் பாலா, ஓவியர் கு. புகழேந்தி, தமிழர் ஆன்மிகச் செயற்பாட்டாளர் திருவாட்டி. கலையரசி, ‘லாக்கப்’ நாவலாசிரியர் திரு. சந்திரக்குமார் ஆகியோர் சிறப்புப்படி பெற்றனர்.  

சிறப்பு விருந்தினர்களுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்பு செய்தார்.

நூலைத் திறனாய்வு செய்து, சென்னை உயர் நீதிமன்ற வழங்கறிஞர் திரு. அஜய் கோஷ் பேசினார். “தமிழினத்தைத் தவிர மற்ற எல்லா இனங்களிலும் இன ஒற்றுமை இருக்கிறது. ஆனால், தமிழினத்தில்தான் அது இல்லை” என இயக்குநர் ஆர்.கே. செல்வமணி ஆதங்கத்தோடு பேசினார். ஏழு தமிழர்களின் விடுதலைக்கு தடையாக உள்ள சிக்கல்கள் குறித்து, தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் கருத்துரை வழங்கினார்.

நிறைவில், நூல் ஆசிரியரும் தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளருமான தோழர் கி. வெங்கட்ராமன் ஏற்புரை நிகழ்த்தினார். “தமிழ்நாடு அரசு, உடனடியாக பேரறிவாளனுக்கும் மற்றவர்களுக்கும் முதற்கட்டமாக விடுப்பு (பரோல்) வழங்க வேண்டும். அதன்பின், மாநில அமைச்சரவையைக் கூட்டி, இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்கீழ் ஏழு தமிழர்களை விடுதலை செய்யத் தீர்மானம் இயற்றி, அதை தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி, அவர்களை விடுதலை செய்ய வேண்டும்” என அவர் வலியுறுத்தினார். 

நிகழ்வை தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் கவிபாஸ்கர், நெறிப்படுத்தினார். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன் நன்றி கூறினார். 

நிகழ்வில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ. ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.நல். ஆறுமுகம், தோழர் வெற்றித்தமிழன், தோழர் குடந்தை தீந்தமிழன், தென்சென்னை பேரியக்கச் செயலாளர் தோழர் கவியரசன் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

இருக்கைகள் போதாமல் பலரும் நின்றுகொண்டு கேட்ட, அரங்கம் நிறைந்த கூட்டமாக அமையும் அளவுக்கு, திரளான தமிழின உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

Comments

19 comments

19
Manikandan
உலகிலேயே தமிழகத்தில் மட்டும் தான் இப்படி எல்லாம் கோரிக்கை வைத்து போராட முடியும், இலங்கை பிரச்சனையில் எந்த வித சம்பந்தமும் இல்லாத அப்பாவி தமிழக மக்களை கொன்றவர்களை விடுவிக்க சொல்லி போராட இவர்களுக்கு எல்லாம் எங்கேயிருந்து துணிச்சல் வருகிறது என்று தெரியவில்லை. மனசாட்சி மனித நேயம் துளியும் இல்லாதவர்கள்
அருணபாரதி
இராசீவ் படுகொலை சதிச் செயலில் இந்த ஏழு பேருக்கும் தொடர்பில்லை என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பிலே தெரிவித்துவிட்ட பிறகும், இந்த ஏழு பேரையும் சிறை வைத்திருப்பது சட்டப் படி தவறு!

இந்த உண்மை நிலையை “மணிகண்டன்” போன்றவர்கள் தெரிந்து கொண்டு வாதாட வேண்டும்.
நல்லன்.கோ.சரன்
அநியாயத்திற்கு எதிராக போராட துணிச்சல் கட்டாயம் தேவை.. மனச்சாட்சியும் மனிதநேயமும் அதற்கு ஊற்றுக்கண். இவர்களை எப்படி குற்றவாளிலள் என்கிறீர்கள்? திரு. மணிகண்டன் அரசால் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு அநீதியாக தண்டிக்கப்பட்டிருக்கும் அப்பாவிகளை விடுவிக்க சொல்வது ஞாயமானதே.
Manikandan
அருணபாரதி: எந்த உச்ச நீதிமன்றம் சார் இவர்களை குற்றமற்றவர்கள் என்று சொன்னது, இவர்களின் விடுதலையை நிராகரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொன்ன வார்த்தைகள் இது 'ஆயுள் தண்டனை பெற்றவர்கள், 14 ஆண்டுகள் சிறை வாசத்துக்கு பின், தண்டனை குறைப்பு பெறலாம்' என்ற வாதத்தை நிராகரிக்கிறோம். ராஜிவ் கொலையாளிகள் மீது இரக்கம் காட்ட அவர்களுக்கு தகுதியில்லை. தண்டனை குறைப்போ, விடுதலை பெறவோ அவர்களுக்கு உரிமையில்லை. பாதிப்புக்கு உள்ளானவர்கள் கண்ட கனவு, அவர்களை சார்ந்து இருந்தவர்கள், சுற்றி இருந்தவர்களின் கனவு சிதைக்கப்பட்டுவிட்டது.படுகொலை செய்யப்பட்ட ராஜிவ் மீது நாட்டு மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். இந்த நாட்டின் வளர்ச்சிக்கு, அவர் அனைத்தும் செய்வார் என நம்பி, அவரிடம் பொறுப்பை அளித்திருந்தனர். திட்டமிட்ட கொலையால், நாட்டு மக்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டுவிட்டது. கொடூரமான, இரக்கமற்ற குற்றவாளிகளுக்கு சிறிதேனும் நம்பிக்கை அளிப்பது என்பது பொருந்தாது. அவ்வாறு, அவர்களுக்கு சாதகம் செய்தால், தவறான இடத்தில் இரக்கம் காட்டுவது போலாகிவிடும். மேலும் சமூகத்தின் நலன்களுக்கு உகந்ததாக இருக்காது.தண்டனை நிறுத்தம், குறைப்பு செய்வதை மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும்.

இன்று ராஜீவ் காந்தியை கொன்று விட்டு இவர்கள் தண்டனையில் இருந்து தப்பித்தால் நாளை வேறு ஒரு தீவிரவாத இயக்கம் தேசிய தலைவரையோ அல்லது மாநில தலைவரையோ கொன்று விட்டு தங்கள் ஆதரவு பத்திரிக்கை இயக்கங்கள் மூலம் பொய் பிரச்சாரங்களை செய்து விடுதலை பெறுவார்கள். நாட்டின் சட்டம் ஒழுங்கே கேள்வி குறியாகும்..
Manikandan
ல்லன்.கோ.சரன்: அப்பாவி தமிழக மக்களையும் இந்த நாட்டின் பிரதமரையும் இரக்கமே இல்லாமல் கொலை செய்த இவர்களை விடுதலை செய்ய கோருவது மனிதத்தன்மைக்கு எதிரானது
Manikandan
பசுவிற்கு தனது மகனை தேர்காலில் இட்டு நீதி வழங்கிய தமிழ் வம்சத்தில் வந்தவர்கள் இன்று பொய்கள் தீவிரவாதம் மனித நேயமற்ற செயல்களை செய்து கொண்டு தமிழ் இனத்திற்கே பெரும் இழிவை கொண்டு வந்து இருக்கிறார்கள்
சிவா
காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் எங்கே போய் ஔிந்து கொண்டார்களோ. ..?
சிவா
உண்மையான குற்றவாளி சுப்பிரமணியசாமி தான். சு.சாமியையும் , சந்திராசாமியையும் விசாரிக்க சொன்னதே ஜெயின் கமிஷன்....!

ஏன் விசாரிக்கவில்லை. ....?
சிவா
முன்னாள் பிரதமருக்கு தர வேண்டிய பாதுகாப்பா இது....?

தன் தலைவன் உயிரை காப்பாற்றுவதை விட கட்சி தலைவர்களுக்கு என்ன வேலை...?

காங்கிரஸ் தலைவர்களுக்கு இதிலுள்ள தொடர்பை விசாரிக்கவே இல்லை. ஒரு காங்கிரஸ் தலைவர்களா கூட சாகவில்லையே. ஓடி ஔிந்து கொண்ட உத்தமர்கள்.
Manikandan
ஏன் சொல்லுங்களேன் ராஜீவ் காந்தி அவருக்கு அவரே வெடிகுண்டு வைத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டார் வீணாக பழியை தூக்கி ஒன்றுமேமேமேமேமேமே தெரியாத புலிகளின் மீது வேண்டும் என்றே போட்டு விட்டார் என்று சொல்லுங்களேன், யார் வேண்டாம் என்றது.
Manikandan
சிவா: ராஜீவ் காந்தி பொது கூட்டத்திற்கு வரும் போது பொதுமக்களை தான் முதலில் சந்திப்பார், கட்சியினரை மேடையில் சந்திப்பார் இது பற்றி கார்த்திகேயன் விசாரித்து அது பற்றி அறிக்கை கொடுத்து இருக்கிறார். உங்களை போன்ற ஆட்கள் என்ன தான் பொய்களை பரப்பினாலும் உண்மையை மறைக்க முடியாது, புலிகள் தமிழக மக்களை அநியாயமாக கொன்றதை எந்த காரணத்தை கொண்டும் நியாயபடுத்த முடியாது. இந்த கொலைகாரர்களை ஆதரிப்பவர்கள் மனித இன விரோதிகள்
சிவா
ராசீவ் காந்திக்கு சரியான பாதுகாப்பு தரவில்லை. அப்போது சட்டத் துறை அமைச்சராக இருந்த சு.சாமி தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

ஒரு வெடிகுண்டு சோதனை கருவி கூட இல்லையா காவல்துறையிடம்.

ராசீவ் காந்தி கொல்லப்படுவது தெரிந்து தான் காங்கிரஸ் தலைவர்கள் ஓடி ஔிந்தார்கள். தனக்காக டில்லியிலிருந்து பிரச்சாரம் செய்ய வந்த தலைவர் பக்கத்தில் நில்லாமல் மரகதம் சந்திரசேகர் எங்கு போய் ஓடி ஔிந்தார்....?

" கொலைக்கு யாரையாவது தண்டிக்க வேண்டும். இல்லையென்றால் இந்தியாவிற்கு அவமானம் "என்ற வகையில் அப்பாவிகளை அடைத்து வைத்திருக்கிறார்கள்.

அவர்களின் தண்டனை காலம் முடிந்து விட்டது. விடுதலை செய் என்கிறோம். தொடர்ந்து சொல்லுவோம். மாரத மாதா பஜனை கோஷ்டிகளுக்கு மணியடிக்கும் மணிகண்டனை பற்றி எங்களுக்கு கவலையில்லை....
சிவா
300 பேர் கொலைக்கு காரணமான சஞ்சய் தத் சிறை தண்டனை அனுபவிக்கும் முன்பாகவே விடுதலை அடைவதெல்லாம் மணிகன்டன்களுக்கு தெரியாதா....?

சிறை தண்டனை முடிந்து விட்டது. விடுதலை செய் என்கிறோம். தேச துரோகம் என்று பட்டம் கொடுத்தால் மிக்க மகிழ்ச்சி. எங்களின் தேச துரோகம் தொடரும்.

ஏழு தமிழரை விடுதலைசெய்ய தொடர்ந்து குரல் கொடுப்போம். பாரத மாதா பஜனை கோஷ்டிகளுக்கு பாடமும் கொடுப்போம்..
Manikandan
சிவா: நல்லவர்கள் தான் தேசத்துரோகிகள் என்ற அவபெயருக்கு வருத்தம் அடைவார்கள் தீவிரவாதிகளுக்கும் இனவெறியர்களுக்கும் அந்த வருத்தம் கிடையாது காரணம் அவர்கள் அப்பாவி மக்களை கொலை செய்வதை கூட நியாயபடுத்தும் புண்ணியவான்கள். தமிழக மக்களை அநியாயமாக கொன்ற இவர்களின் விடுதலையை தமிழக மக்களாகிய நாங்கள் எதிர்க்கிறோம்.
Manikandan
சிவா: இவர்கள் குற்றமற்றவர்கள் என்றால் சர்வதேச நீதிமன்றத்தில் இவர்கள் நிரபராதிகள் என்று சாட்சிகள் மற்றும் ஆதாரம் மூலம் நீங்கள் நிருபியுங்கள் பார்க்கலாம். நளினியின் மகள் இங்கிலாந்தில் இருக்கிறாள் அவர் இங்கிலாந்த் நீதிமன்றத்தில் என் தாயார் எந்த குற்றமும் செய்யாதவர் அவரை இந்தியா அநியாயமாக சிறை வைத்து இருக்கிறது அவரை விடுவிக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்க சொல்லுங்களேன் பார்ப்போம். அப்போது தெரியும் உங்கள் லட்சணம், உங்களை போன்ற ஆட்கள் எல்லாம் மனித இன விரோதிகள்
Manikandan
சஞ்சய் தத் ஏன் கைது செய்யபட்டார் என்பதை முதலில் தெரிந்து கொண்டு பேசுங்கள், சஞ்சய் தத் தனது பாதுகாப்பிற்காக ஏகே 47 துப்பாக்கியை லைசென்சே இல்லாமல் வைத்து இருந்தார். தடா சட்டத்தின்படி அது குற்றம் அதற்காக அவருக்கு 5 வருடம் சிறை தண்டனை கொடுத்தார்கள். அந்த சிறை தண்டனையை அனுபவித்து விட்டு வெளியே வந்து இருக்கிறார். உங்கள் ஆட்களை போல் சொந்த மக்களையே கொன்று விட்டு சிறை செல்லவில்லை
Manikandan
எதிர் கட்சி தலைவருக்கு பாதுகாப்பு தர வேண்டியது உள்துறை அமைச்சரின் பொறுப்பு அதற்க்கு சட்ட அமைச்சருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உங்களை போன்ற ஆட்கள் பொய் சொல்வதில் கூட எந்த லாஜிக்கும் பார்க்காமல் பொய் சொல்கிறிர்கள். மேலும் ராஜீவ் காந்தி இந்திய மக்கள் மீது மிகுந்த அன்பு செலுத்தியவர் அதனால் தான் பாதுகாப்பை மீறி மக்களை சந்திப்பதில் ஆர்வம் கொண்டு இருந்தார் அந்த ஆர்வத்தை விடுதலை புலிகள் பயன்படுத்தி அவரை கொன்று விட்டார்கள்.
சிவா
சொந்த பாதுகாப்புக்கு ஏ.கே.47 துப்பாக்கி எவரவது வைத்திருப்பாரா....? 300 பேர் படு கொலையில் 6 வருடம் சஞ்சய் தத்துக்கு சிறை தண்டனை கிடைத்தது. அப்புறம் 5 வருடம். அப்புறம் பயபுளள 1.5 வருடம் மீதம் இருக்கும் போதே விடுதலை அடைகிறார்.

இவர் தண்டனை அனுபவிச்சு வராறா....? நல்லா இருக்குயா வாதம்.
சிவா
வரும் சனிக் கிழமை மாலை திருச்சியில் "ஏழு தமிழர் விடுதலை" புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபறவுள்ளது.

ஏழு தமிழர் விடுதலையை சாத்தியமாக்குவோம்.....!

சுப்பிரமணிய சாமியை கைது செய்ய வைப்போம்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.