“தமிழ் தாய்மொழி மட்டுமல்ல தமிழ்நாட்டின் தேசிய மொழி!’’ என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசினார்.

“நமது கல்வி முறையும், அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வித் திணிப்பும்’’ என்ற தலைப்பில், தமிழ்ச் சமூகக் கல்வி இயக்கம் சார்பில், 01.06.2013 அன்று காலை முதல் மாலை வரை சென்னை இலயோலா கல்லூரியில் நடை பெற்றது.

காலை 10.30 மணியளவில், உலகத் தமிழக் கழக நெறியாளர் பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா அவர்களது தலைமையில் தொடங்கி, நடைபெற்றக் கருத்தரங்கில் மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்திதேவி, மூத்தக் கல்வியாளர் முனைவர் எஸ்.எஸ். இராசகோபாலன், தோழர் தியாகு, பொதுக் கல்விக்கான மாநில மேடைப் பொதுச் செயலாளர் திரு. பிரின்ஸ்கசேந்திரபாபு, தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளித் தலைவர் திரு. பிரபா.கல்விமணி, தமிழ் உரிமைக் கூட்டமைப்புத் தோழர் கோ.பாவேந்தன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன் நிறைவுரையாற்றினார்.

உணவு இடைவேளைக்குப் பின் தொடர்ந்த இரண்டாம் அமர்வுக்கு, பேராசிரியர் யாழினிமுனுசாமி தலைமையேற்றார். கோவை பேரூர் இளைய பட்டம் தமிழ்த்திரு. மருதாசலஅடிகள், அனைத்திந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச் செயலாளர் திரு. வா.அண்ணாமலை, தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்புத் தோழர் தினேசு, தமிழக மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திரு. பாரிமைந்தன், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக்குழுத் தோழர் பெருமாள், தமிழீழத்திற்கான மாணவர் போராட் டக் குழுத் தோழர் எழிலன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மாநிலத் துணைச் செயலாளர் தோழர் சி.மகேந்திரன் நிறைவுரையாற்றினார்.

மாலை நடைபெற்ற நிறைவு நிகழ்வுக்கு, தமிழ்ச் சமூகக் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் கண.குறிஞ்சி தலைமையேற்றார். ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. பண்ருட்டி வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தமிழகத் துணைத் தலைவர் திரு. குணங்குடி ஹனீபா, இந்திய சமூக சனநாயகக் கட்சி (எஸ்.டி. பி.ஐ.) தலைவர் திரு. தெகலான்பாகவி, தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் அமர்நாத், தமிழக மக்கள் புரட்சிக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் அரங்க.குணசேகரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசுகையில்,

“தமிழை வெறும் தாய்மொழி என நாம் கொண்டாடுவது சரியானதல்ல. தமிழ் தமிழ் நாட்டின் தேசியமொழி. அதற்குப் பிறகு தான், அது நம் தாய்மொழி.

தமிழ்இனம் போல், மொழிக்காக உலகில் எந்த வொரு இனமும் ஈகம் செய்ததில்லை. 1938லிலும், 1965லிலும் இந்தியை எதிர்த்து தமிழகத்தில் மிகப் பெரும் எழுச்சியுடன் நடைபெற்ற போராட்டங்களின் போது, எத்தனை உயிர்கள் பறிபோயின. இந்தியை எதிர்த்துப் போராடிய 300க்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் 'தமிழ் வாழ்க' என தமிழ் மொழிக்காகவே இந்த ஈகங்களைச் செய்தனர். ஆனால், அதன் பலன்களை நாம் அனுபவித்தோமா? இல்லை. தமிழ் வாழ்கவென்றுத்தான் அன்றைக்குப் போராட்டம் நடைபெற்றதென்றாலும், அன்றைக்குப் போராட்டத்தை வழிநடத்தியவர்கள் அதன் பலனை ஆங்கிலத்திற்கு வழங்கினர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இணைப்பு மொழி என்றோ, தொடர்பு மொழி என்றோ ஒன்று கிடையாது.

ஆனால், அரசியலமைப்புச் சட்டத்திலே இல்லாத ஒன்றாக இணைப்பு மொழி, தொடர்பு மொழி என்றெல்லாம் சொல்லி, இந்தியை நேரடியாக திணிக்க முடியாத காரணத்தால், நேரு உள்ளிட்ட வடநாட்டுத் தலைவர்கள் ஆங்கிலத்தைத் திணித்தனர். அன்றொரு சரியான மொழிக் கொள்கையை முன்வைக்காத காரணத்தால்தான், இன்றுவரை தமிழ்நாட்டிலேயே, தமிழை கல்வி மொழியாக்க, வழக்கு மொழியாக்க, ஆட்சி மொழியாக்க நாம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.

கிழக்குப் பாகிஸ்தானில் உருது மொழித் திணிப்புக்கு எதிராகப் போராடிய வங்காளிகள், தங்களுடைய மொழி உரிமைப் போராட்டத்தை தாயக விடுதலையுடன் இணைத்தார்கள். அதில் வெற்றி பெற்றார்கள், அதனால்தான், இப்போராட்டத்தின் போது 11 பேர் இறந்ததை, அந்நாடு ஐ.நா.வில் சொல்லி, தங்களுடைய போராட்டத்தை உலகத்தால் மொழிநாளாக அறிவிக்கச் செய்தனர்.

ஆனால், அதைவிட ஈகம் செய்த தமிழினம், எந்தவொரு உரிமையுமின்றி இந்தியாவில் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. தமிழை தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக்க முடியாதென இந்திய அரசுச் சொன்னால், நாம் எதற்காக இந்தியாவில் இருக்க வேண்டும்? நம்முடைய மொழி உரிமைகளுக்கானப் போராட்டம், தமிழ்த் தேசத்தின் தாயக விடுதலை யுடன் இணைய வேண்டும். அப்போதுதான், நமக்கு நிரந்தரமான விடுதலை கிடைக்கும்.

தற்போதைய அ.தி.மு.க.அரசு, விஷன் (Vision) 2013 என்றொரு திட்டத்தை அறிவித்தது. தமிழ்நாட்டை தொழில் வளர்ச்சி என்ற பெயரில் அயல்நாட்டு நிறுவனங்களுக்கு விற்கின்றத் திட்டமே அது. பன்னாட்டு நிறுவனங்களை பெருமளவில் தமிழகத்தில் குவிப்பதற்காக போடப்பட்டது அத்திட்டம். முன்பு தி.மு.க.அரசு இதைச் செய்தது, இப்போது அ.தி.மு.க.அரசு இதைச் செய்கிறது. இவர்களுக்குள் எவ்வளவு கோடி அதிகமாக முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாட்டை அடிமையாக்குவது என்பதுதான் போட்டி. பன்னாட்டு நிறுவனங்களுக்கான பணியாளர்களை உற்பத்தி செய்வதற்குத்தான், அ.தி.மு.க.அரசு இது போன்ற ஆங்கில ஆதரவு ஆணைகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான அரசின் இச்சதித் திட்டத்தை அம்பலப்படுத்தி முறியடிக்காமல், வெறும் மொழி உரிமைக்கானப் போராட்டத்தை நாம் நடத்திக் கொண்டிருக்க முடியாது.

கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான தேர்வை ஆங்கிலத்தில்தான் நடத்த வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு, திரும்பப் பெற்றுள்ளது. அன்றைக்குதான் நாம், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் சார்பில் சென்னையில் பள்ளிக் கல்வி இயக்குநரகம் முன்பு காலையில் ஆர்ப்பாட்டம் நடத் தினோம். அன்றைக்கு மாலை ஆங்கிலத் தேர்வு உத்தரவை திரும்பப் பெற்றது அரசு. தனக்குத் தெரியாமல் இது நிகழ்ந்துவிட்டதாகவும் முதல்வர் செயலலிதா சொன்னார். எது எப்படியோ, அதைத் திரும்பப் பெற்றதை வரவேற்கிறோம். அதே போல், தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக்கும் முடிவை தமிழக அரசுத் திரும்பப் பெறவேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

நிறைவில், தீர்மானங்களை முன்மொழிந்து திரு. இராசன் நன்றி கூறினார்.

Pin It