ஈரோடு குறுநடைப் பயணத்தைத் தொடர்ந்து சென்னையில் கோரிக்கைப் பரப்புரை – கையெழுத்து இயக்கம் தோழர் வா.செல்வகுமார் தலைமையில் 20.06.2010 தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் கோரிக்கைகள் ஆவன:

சிங்களப் போரினவாத அரசு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழ் மக்களை இனப் படுகொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த ஏர் – டெல் முதலான இந்தியப் பன்னாட்டுப் பெருங் குழுமங்கள் இன்றளவும் இலங்கைச் சந்தையில் வலைவிரித்து ஆதாய வேட்டையில் ஈடுபட்டுள்ளன. இனக்கொலைக் குற்றவாளிகளைக் கூண்டிலேற்றவும், ஈழத் தமிழ் மக்களுக்கு அவர்கள் விரும்பும் படியான அரசியல் தீர்வு கிடைக்கச் செய்யவும் வேண்டுமானால், ஏர் – டெல் முதலான நிறுவனங்களைப் புறக்கணித்து சிங்கள அரசைப் பொருளியல் வகையில் தனிமைப்படுத்த வேண்டும். இதன் முதற்கட்டமாக ஏர் - டெல் புறக்கணிப்பு இயக்கத்தை முன்னெடுக்கிறோம்.

தமிழ் மக்களின் பொருளியலையும் பண்பாட்டையும் சீர்குலைக்கும் வகையில் குடிவெறி மென்மேலும் பரவி வருகிறது. அரசே இந்தக் கேட்டினை வளர்க்கும் விதமாக டாஸ்மாக் என்ற பெயரில் சாராயக்கடை நடத்தி வருவது தமிழ்நாட்டையே பாழாக்கி வருகிறது. இந்தக் கொடுமைக்கு உடனே முற்றுப்புள்ளி வைத்திட, டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுமாறும் முழுமையான மதுவிலக்கைச் செயலாக்குமாறும் கோருகிறோம்.

சாராயக்கடை நடத்திக் காசு பார்க்கும் அரசு நம் குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்கும் கடமையைப் புறக்கணித்துவிட்டது. அரசின் கண்துடைப்பு நடவடிக்கைகளால் கல்விக் கொள்ளையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் கோடிகளை வாரியிறைத்துக் கோவை நகரில் செம்மொழி மாநாடு நடத்தும் ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டில் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழைக் கல்விமொழியாக்க உருப்படியாக எதுவும் செய்துவிடவில்லை. சமச்சீர் கல்வி என்ற பெயரில் அரைமனதாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யானைப் பசிக்குச் சோளப் பொரி என்ற அளவில்தான் உள்ளன. அனைவர்க்கும் கல்வி, அனைத்துக் கல்வியும் தமிழில் என்ற முழக்கத்தைச் செயலாக்கும் வகையில், தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் தமிழ் வழி சமச்சீர் கல்வி வழங்கிட இந்திய, தமிழக அரசுகளைக் கோருகிறோம்.

பணவீக்கம் பத்து விழுக்காட்டைத் தாண்டி பறந்து போய்க் கொண்டிருப்பதாக் அரசின் அறிவிப்புகளிலிருந்தே தெரிகிறது. இன்றியமையாப் பண்டங்களின் மொத்த விலைகளே இந்த அளவுக்கு உயரும் போது சில்லறை விலைகள் உயர்வதைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. விண்ணில் பறக்கும் விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசு இணைய வழி (ஆன்லைன்) வணிகம் போன்ற சூதாட்டங்களை அனுமதிப்பதும் ஊக்கப்படுத்தி வருவதும் எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் தீச்செயல் ஆகும். மக்களுக்கு நெருக்கமான சிறு வணிகர்களை விரட்டியடிக்கும் விதத்தில் ரிலையன்ஸ் போன்ற பெருங் குழுமங்கள் சில்லறை வணிகத்தில் தங்குதடையின்றி நுழைய அனுமதிக்கப்படுகின்றன. விலையுயர்வைக் கட்டுப்படுத்துமாறும், ‘ஆன்லைன்’ வணிகத்தைத் தடை செய்யுமாறும், சில்லறை வணிகத்தில் பெருங்குழுமங்கள் நுழைவதைத் தடை செய்யுமாறும் கோருகிறோம்.

            இந்த நான்கு உடனடிக் கோரிகைகளுக்கும் ஆதரவு தரும் வித்த்தில் கோரிக்கைப் படிவங்களில் கையொப்பமிட வேண்டுகிறோம்.

எமது இயக்கத்தின் தமிழ் மீட்பு நிதியத்திற்குப் பங்களிப்பீர்!

தொடர்புக்கு:

87/31,காமராசர் நகர் 3 ஆம் தெரு,

சூளைமேடு,

சென்னை – 600 094.

பேசி: 044-23610603