கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

(நீதிக்கட்சியின் நூற்றாண்டு சிறப்புக் கட்டுரை)

சென்ற இதழ் தொடர்ச்சி

ஆதித் திராவிடர்களுக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக ஏராளமான  தொகை கடன் உதவியாக அளிக்கப்பட்டுள்ளது.  31.10.1931 இல் சட்டமன்றத்தில் ரங்கநாத முதலியார் நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ஆதித்திராவிடர்களுக்குக்  கூட்டுறவுச்சங்கள் மூலம் எவ்வளவு கடனாக தரப்பட்டது. அதில் எவ்வளவு தொகை திரும்பப் பெறப்பட்டது என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு அரசு தெரிவித்த விடை வருமாறு:

census 1 350

(ஆதாரம் சென்னை சட்டமேலவை விவாதக் குறிப்புகள்  தொகுதி   LVIII பக் 268)

அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டம் G.O.No.376  சட்டம் (கல்வி) நாள் 9.3.1923 மூலம், தொடக்கக் கல்விக்கு முக்கியத் துவம் அளித்தனர். நீதிக் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கல்வித்துறையில் உயர்கல்விக்கே அதிகமாகச் செலவழித்து வந்தனர். இதனால் பெரிதும் பயனடைந்தவர்கள் பார்ப்பனர் களே.  அதை மாற்றிப் பெருமளவு நிதி தொடக்க கல்விக்குச்  செலவழிக்க வேண்டுமென நீதிக்கட்சியின் மாநாடுகளில் வலியுறுத்தப்பட்டது. அதனை ஆட்சிக்கு வந்தவுடன் செயல் முறையிலும் நடைமுறைப்படுத்தினர். தொடக்கக் கல்விக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளித்து வந்த மானியம் விவரம்:

census 2 360

(ஆதாரம் சட்டமன்ற விவாத குறிப்புகள் பக் 407 நாள் 27.8.1927.) அந்தக் காலத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தான் தொடக்கக் கல்வியைப் - பள்ளிகளை நடத்தி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

28.7.1929 இல்  மு.ஏ.ஹ சாமி என்பவர் சட்டமன்றத்தில் 1921 முதல் 1928 வரை புதிதாகத் தொடங்கப்பட்ட தொடக்கப் பள்ளிகள் எத்தனை என்று கேள்வி கேட்டார். அரசு தரப்பில் 19,095 பள்ளிகள் என்று பதில் அளிக்கப்பட்டது.

1925 - 26 இல் அரசு ஊழியர் வகுப்பு வாரி விவரத்தைச் சென்னை அரசின் நிர்வாக ஆண்டறிக்கையில் வெளியிடப் பட்டுள்ள புள்ளிவிவரம்.

census 3 360

ஆதாரம்: 1925 - 26 ஆம் சென்னை மாகாண அரசின் ஆண்டறிக்கையின் பக்க எண் 201

census 4 360

(1.04.1935 இல் வெளியிடப்பட்ட அரசு ஆண்டறிக்கை பக் 207)  

இந்த இரண்டு புள்ளிவிவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஆதித் திராவிடர்கள், மற்றும் பார்ப்பனரல்லாதார் அரசு வேலைகளில் சற்று அதிகரித்திருப்பதைக் காணலாம்.

முத்தையா முதலியர் பிறப்பித்த உத்தரவில் வகுப்புவாரி சுழற்சி முறை 1928இல் அறிமுகப்படுத்தப்பட்

census 5 360

இந்தப் பனிரெண்டு  இடங்களும் சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட்டன.

1.            பார்ப்பனரல்லாத இந்துக்கள்

2.            முகமதியர்கள்

3.            பார்ப்பனரல்லாத இந்துக்கள்

4.            ஆங்கிலோ இந்தியர், இந்திய கிறித்தவர்

5.            பார்ப்பனர்கள்

6.            பார்ப்பனரல்லாத இந்துக்கள்

7.            ஆதித் திராவிடர்

8.            பார்ப்பனரல்லாத இந்துக்கள்

9.            முகமதியர்

10.          பார்ப்பனரல்லாத இந்துக்கள்

11.          ஆங்கிலோ இந்தியர், இந்தியக் கிறித்தவர்

12.          பார்ப்பனர்கள்

இந்த வரிசை அடிப்படையில் தான் பதவிகள் நிரப்பப்பட்டன. ஆதித் திராவிடர்களில் படித்தவர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால் தான் அவர்களுக்குக் குறைந்த அளவு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் உயர்கல்வியில் பார்ப்பனர் ஆதிக்கத்தைக் குறைக்க முயற்சி செய்தது. ‘கல்லூரி மாணவர் சேர்க்கைக் குழுவைக்’ கலை அறிவியல் கல்லூரி, பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டம் உட்பட அனைத்துக் கல்லூரிகளிலும் ஏற்படுத்தியது.

அந்தக் குழுவில் கல்லூரியின் முதல்வர், நீதிக்கட்சியைச் சார்ந்த துறைரீதியான அறிவு பெற்ற அறிஞர் ஒருவர் அந்தத் துறையின் இயக்குநர் (அ) செயலாளர் கல்லூரி முதல்வர் ஆகியோர் அக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். 50 விழுக்காடு இடங்களுக்கு மேல் பார்ப்பனர் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என்று அக்குழுவிற்கு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. (அரசு ஆணை எண் 536 கல்வி நாள் 20.05.1922)

1922 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் அக் கல்லூரி மாணவர் சேர்க்கைக் குழுவில் டாக்டர் நடேச முதலியார் இடம் பெற்றிருந்தார். மொத்தம் இடங்கள் 242. பார்ப்பன மாணவர்கள் 167 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். 50 விழுக்காடு  அடிப்படையில் 121 பார்ப்பன மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மீதம் 46 பார்ப்பன மாணவர்களை சேர்க்க மறுத்தனர் (Madras mail 21.07.1922). கடந்த இரண்டாயிரம் ஆண்டு இந்திய வரலாற்றில் முதல் முறையாகப் பார்ப்பன மாணவர்களுக்கு இடமில்லை என்று சேர்க்க மறுத்த சமூகப் புரட்சி, நீதிக் கட்சி ஆட்சியில் தான் நடைபெற்றது. 

7.12.21 இல் சி. நடேச முதலியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை வகுப்புவாரி அடிப்படையில் தெரிவிக்க வேண்டும் என்றார்.

18.9.22. எஸ். சீனிவாச அய்யங்கார் மருத்துவக்  கல்லூரி மாணவர் சேர்க்கையை வகுப்புவாரி அடிப்படையில் தெரிவிக்க வேண்டும் என்றார். இவர்கள் இருவர் கேள்விக்கும் அவரவர்கள் கேட்ட தேதியிலேயே சட்ட மன்றத்தில் பதில் அளிக்கப்பட்டது. ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக இரண்டையும் இணைத்துக் கொடுத்துள்ளேன்.

census6 360

மருத்துவக் கல்லூரிச் சேர்க்கையில் 1921க்கும் 1922க்கும் இடைப்பட்ட ஓர் ஆண்டுக் காலத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காணலாம்.1921 இல் 58 ஆக இருந்த பார்ப்பன மாணவர் எண்ணிக்கை 1922 இல் 33 ஆகக் குறைந்தது. 1921 இல் 15 ஆக இருந்த பார்ப்பனரல்லாத மாணவர் எண்ணிக்கை 36 உயர்ந்துள்ளதைக் (இரண்டு மடங்கு) காணலாம். இது கல்லூரி மாணவர் சேர்க்கைக் குழுவால் ஏற்பட்ட நன்மையாகும்.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தாங்கள் ஆட்சியில் பணி புரிய உயர் கல்வி படித்த இந்தியர்களை உருவாக்குவதற்காக 1857 இல் சென்னை, மும்பை, கல்கத்தா ஆகிய மூன்று இடங்களில் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டன. அவை இந்தியப் பல்கலைக் கழகச் சட்டத்தின் படி இயங்கி வந்தன.

1920 இல் நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு 1921 முதலே வகுப்பு அடிப்படையில் மாணவர் சேர்க்கை முதலானவற்றுக்குச்  சென்னைப் பல்கலைக் கழகம் இணங்க மறுத்து வந்தது. எனவே நீதிக்கட்சி அரசு 1923 இல் சென்னைப் பல்கலைக் கழகச் சட்டமசோதாவைச்  சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி, மாகாண அரசின் கட்டுப் பாட்டில் பல்கலைக் கழகத்தைக் கொண்டு வந்தது. சட்டப்படி, கல்வி அமைச்சர், துணை வேந்தருக்கும் மேலாக இணை வேந்தராக்கப்பட்டார்.

பல்கலைக் கழகச் செனட் அவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்தினர். நீதிக் கட்சியினர் பலர் நடேச முதலியார் உட்பட செனட் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அதன் பிறகு தான் அதில் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டது.

உயர்கல்வியில் பார்ப்பனர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் சமஸ்கிருதத்தை ஒரு பாடமாகப் படிக்காமல் தமிழ் உள்ளிட்ட எந்த மொழியிலும் பட்டம் வாங்க முடியாத நிலை இருந்தது.

1924 இல் கல்வி அமைச்சராக இருந்த ஏ.பரசுராம பாத்ரோ சட்டமன்றத்திலேயே, இது திராவிட அரசு,இந்த அரசின் பணம் திராவிட மொழிகளுக்கு மட்டுமே செலவிடப்படும் என்று அறிவித்ததோடு நில்லாமல், அரசாணையும் பிறப்பித்தார். (அரசாணை எண் 2123 சட்டம் (கல்வி) நாள் 08.12.1925.)

அதன் பிறகு தான், 1925 இல் சென்னைப் பல்கலைக் கழகச் செனட் கூட்டத்தில் சமஸ்கிருதம் படிக்காமலேயே தமிழைப் படித்து புலவர் பட்டம் பெறலாம் என்ற நிலை உருவாயிற்று. 1926 முதல் தமிழை மட்டுமே படித்துத் தமிழ் பண்டிட்-பிற்காலத்தில் புலவர் படிப்புப் படிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. 1927 முதல் சமஸ்கிருதம் படிக்காமல் பி.லிட் படிக்க வாய்ப்பு ஏற்பட்டது.

தமிழ் மொழிக்கு சமஸ்கிருதத்திலிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்தது நீதி கட்சி ஆட்சி தான்.

இங்கிலாந்தில் I.C.S. படித்துவிட்டுத் தமிழகத்தில் வேலைக்கு வருபவர்களுக்குத் தமிழறிவு இருக்க வேண்டும் என்பதற்காகத், தமிழ் லெக்சிகன் தொகுக்கும் பணிக்கு 1906ல் பணம் ஒதுக்கியது ஆங்கில அரசு.  பணம் செலவானாதே தவிர, ஒரு வேலையும் நடக்கவில்லை. 1921 க்குப் பிறகு பனகல் அரசர் திட்டமிட்டுப்  பணம் ஒதுக்கி, 1922 இல் தமிழ் லெக்சிகன் முதல் தொகுதி வெளிவந்தது. நீதிக் கட்சி ஆட்சி முடிவதற்குள் 1936 இல் தமிழ் லெக்சிகன் ஏழாம் தொகுதி வெளியிடப்பட்டது. அவர்கள் தெலுங்கு மொழிக்கு இப்படி ஒரு லெக்சிகன் உருவாக்கிக் கொள்ளவில்லை. தமிழ் மொழிக்கு மட்டும் தான் செய்தார்கள்.

நீதிக் கட்சி  தொடங்கிய காலத்தில் அரசியலில் காங்கிரசின் பேரால் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். கவர்னர் கவுன்சிலுக்கும், கவர்னர் ஜெனரல் கவுன்சிலுக்கும் பெரும்பாலும் பார்ப்பனர்களே தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தேர்தல் நடைபெற்றால் பார்ப்பனர்கள் மட்டுமே வெற்றி பெறுவார்கள் பார்ப்பனரல்லாதார்கள் முன்னேறுவது  கடினம் என்று கருதிய நீதிக்கட்சியினர், அதன் செயல் தலைவர் டாக்டர் டி.எம். நாயரை இரண்டு முறை இலண்டனுக்கு அனுப்பிப்  பார்ப்பனரல்லாதாருக்குத் தேர்தலில் நிற்கத் தனித்தொகுதியைப் பெற்றனர்.

 Non. Brahmin Reserved Seatஎன்ற பெயரில் தான் முதல் அரசாணை வெளிவந்தது.

(MRO Public (Retorms) G.O.335 A May25 - 1920)  பார்ப்பனரல்லாதார் என்ற பெயர் இருக்கக் கூடாது என்று கூறிப் பார்ப்பனர்கள் ஆங்கிலேயே அரசிடம் கோரிக்கைவைத்து, ஒரே மாதத்தில், ‘முகமதியர் அல்லாத தொகுதி’ என்று பெயர் மாற்றம் செய்து விட்டனர். முகமதியர்களுக்கு மிண்டோ மார்லி சீர்திருத்தப் படி 1909 முதலே அரசு பதவிகளில் 25ரூ  இட ஒதுக்கீடு, வழங்கப்பட்டிருந்தது.

நீதிக் கட்சியைச் சார்ந்த கிருஷ்ணன் நாயர் 4.7.1921 இல் பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டும் என்று சென்னை சட்ட சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். 44 பேர் ஆதரித்த னர் 13 பேர் எதிர்த்து வாக்களித்தனர். அதை உடனடியாகச்  சட்டமாக்க ஆளுநர் மறுத்தார். 1926 முதல் தான் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.

அதனால் தான், 1927 இல் முத்துலட்சுமிரெட்டி சட்டசபைக்கு நியமனம் செய்யப்பட்டார். அவைத் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வாய்ப்பைப்  பயன்படுத்திக் கொண்ட முத்து லட்சுமி ரெட்டிப் தேவதாசி ஒழிப்பு மசோதாவை முன்மொழிந்தார். அவர் நீதிக்கட்சியினரை நம்பாமல் சர். சி.பி. ராமசாமி அய்யரிடம் கொடுத்து மசோதாவைத் தயார் செய்திருந்தார். 1.12.1929 இல் அது சட்டமன்றத்தில் நிறைவேறிச்  சட்டமானது. ஆனால் 18 வயது நிரம்பிய பெண்கள் தாமாக விரும்பினால் தேவதாசியாக ஆகலாம் என்று அந்தச் சட்டத்தில் ஒரு ஓட்டை இருந்தது.

9.10.1947 இல் ஓமந்தூரார் ஆட்சியில் அமைச்சராக இருந்த டாக்டர் சுப்பராயன், தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டு வந்து தேவதாசியாக மாறும்படி வற்புறுத்துவோருக்கு 500 ரூபாய் அபராதமும் ஆறுமாதம் சிறையும் என்று சட்டம் கொண்டு வந்து அந்த முறையை முற்றிலுமாக ஒழித்தார்.

பெண்கள் முன்னேற்றத்திற்காகச் சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் ஆற்றிய பங்களிப்புகள் ஏராளம். பெண்கள் கல்விக்காகப் பெண்களுக்கான ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கினர். இந்தியாவில் பெண்கள் முன்னேற்றம் எந்த அளவில் இருக்கிறது என்பதை ஆராய்வதற்காக ‘அண்டர்’ (Hunter) தலைமையில் 1928 இல் ஒரு குழுவை இந்தியா முழுவதும் அனுப்பியது அன்றைய இந்திய அரசு. அக்குழுவின் அறிக்கைiயில் சென்னை மாகாணத்தில் பெண்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததைப் பாராட்டியுள்ளது.

பெண்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. படிப்பு வரை கட்டணமில் லாமல் இலவசக் கல்வி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படிச் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் உண்டாக்கவும் பாடுபட்டது. நீதிக்கட்சி ஆட்சி இப்படிப்பட்ட ஒரு நல்ல ஆட்சி இந்தியாவில் வேறு எந்த மாகாணத்திலும் அன்று இல்லை என்பதை வரலாறு நமக்கு காட்டுகிறது.

இந்துமத பரிபாலன போர்டு:

தென்னகத்தில் ஆட்சிபுரிந்த அரசர்கள் பெரிய பெரிய கோவில்களைக் கட்டி அவற்றிற்கு ஏராளமான சொத்துக்களையும் வைத்துச் சென்றனர். இவற்றைப் பார்ப்பனர்கள் கொள்ளையடித்து வாழ்ந்து வந்தனர். இந்தப் பார்ப்பனக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த பனகல் முயன்றார். இந்துமத பரிபாலனைச் சட்ட மசோதாவை 18.12.1922இல் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். கோவில்களின் வருமானத்தை அரசு ஊழியர்களைக் கொண்டு பராமரித்தல், உபரிநிதியைக் கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்குப் பயன்படுத்துதல் முதலானவை இச்சட்டத்தின் நோக்கங்களாகும். நீண்ட விவாதத்திற்குப் பிறகு, பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு 1923 நவம்பரில் இது சட்டமாக்கப்பட்டது. இதை நடைமுறைப் படுத்துவதற்குள்  1923 நவம்பர் மாதத்தில் முதல் அமைச்சரவையின் பதவிக் காலம் முடிவுற்றது.

இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு மீண்டும் 19.11.1923இல் பனகல் அரசரே முதல்வராகப் பொறுப்பேற்றார். இம்முறை ஒரு தமிழர் சிவஞானம் பிள்ளை அமைச்சராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இந்துமத பரிபாலனைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவண்ணம் பார்ப்பனர்கள் சதி செய்து, ஆளுநரும் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டார்.

பனகல் அரசர் சளைக்கவில்லை. எப்படியாவது இதை நிறைவேற்றியே தீருவது என்று முடிவுசெய்து, மீண்டும் ஒரு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இம்முறை சத்தியமூர்த்தி அய்யர் சென்னைப் பல்கலைக்கழக பட்டதாரித் தொகுதி மூலமாகச் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந் தார். அவர் இதை எதிர்த்து ஓயாமல் சட்டமன்றத்தில் பேசினார்; திட்டினார்.

475 திருத்தங்களை அவர் ஒருவர் மட்டுமே கொண்டு வந்தார். மொத்தம் 800 சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. திருப்பதி கோவிலுக்கு மட்டும் விலக்கு அளித்தால் ரூ.5 இலட்சம் கையூட்டுத் தருவதாக பனகலிடம் பேசிப்பார்த்த னர். எதற்கும் பனகல் மசியவில்லை. 1925 நவம்பரில் வெற்றிகரமாகச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்தினார்.  பனகல் அரசுமீது மடாதிபதிகளும் கோவில் நிர்வாகிகளும் 50க்கும் மேற்பட்ட வழக்குகளை உயர்நீதி மன்றத்தில் தொடுத்தனர். இதனால் காங்கிரசில் இருந்த பெரியாருக்கு, பனகல் அரசர் மீது நேசம் ஏற்பட்டது. காங்கிரசை விட்டுப் பெரியார் வெளியேறிய காலகட்டமும் அதுதான்.

பனகல் அரசர் காலத்தில்தான், 1924இல் சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் சமஸ்தான அரசுக்கும்,  இடையே காவிரி நீர்ப் பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் பயனாக மேட்டூர் அணைகட்டத் திட்டம் உருவாக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று 1924 முதல் 1933க்குள் 10 ஆண்டுகளில் 5,91,38,000ரூ. செலவில் கட்டி முடிக்கத்திட்டமிடப் பட்டுச் செயல்படுத்தப்பட்டு 3,10,000 ஏக்கர் பாசன வசதி பெற்றுத் தமிழகம் பஞ்சமில்லாமல் இருக்க வழிவகை செய்தார்.

ஆதித்திராவிடர்களின் நலனுக்காகச் செயல்பட்ட நீதிக் கட்சியைத் தலித்துக்கள் ‘மேல்சாதியினருக்கான கட்சி’ என்று கூறுவதும்,  சமஸ்கிருதப் பார்ப்பன மேலாண்மைக்கு எதிராகப் போராடி தமிழ் மொழிக்கு சமஸ்கிருதத்திலிருந்து விடுதலைப்  பெற்றுத் தந்த நீதிக் கட்சியை ‘தெலுங்கர்கள் கட்சி’ என்று தமிழ்த் தேசியர்கள் கூறுவதும், உழைக்கும் மக்களின் முனனேற்றத்திற்காகப் பாடுபட்ட நீதிக்கட்சியைப் பொதுவுடைமை வாதிகள் ‘நிலக்கிழாரியக் கட்சி’ என்று கூறுவதும் ஏற்கத்தக்கதல்ல.

ஆயிரம் ஆண்டுகளாகச் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை மற்றச் சாதிமக்களோடு இரண்டறக்கலந்து பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததே நீதிக்கட்சி ஆட்சி தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.