எழுதத் தொடங்கியிருக்கும் இளைஞர்கள் எனக்கு எழுதும் கடிதங்களில் "சிருஷ்டி வேலைக்கு நேரம் கிடைக்கவில்லையே" என்றும் "வாழ்க்கை கடினமாயிருக்கிறது" என்றும் குறை தெரிவித்திருக்கிறார்கள். சிருஷ்டி வேலை என்ற சொல்லோ நகைப்பைத்தான் உண்டாக்குகிறது. அது மிகவும் ஆடம்பரமான சொல். கண்டிப்பும், உழைப்புக் கடுமையும் உள்ள நம் காலத்துக்குப் பொருத்தமற்றது.
ஆனமட்டும் முயற்சி செய்து, குறை எதுவும் தெரிவிக்காமல் ஆற்றல் மிகுந்த கவிதை அல்லது கதையைவிட மனிதகுலத்துக்கு அளப்பரிய விசயங்களைச் சிருஷ்டித்து வரும் தொழிலாளி வர்க்கத்தின் சன்னிதானத்தில் இந்தச் சொல்லை உபயோகிப்பது பொருத்தமற்றது.
உரைநடைத் துறையிலோ, கவிதைத் துறையிலோ எழுத முற்படுபவர்களுக்கு "சிருஷ்டி முயற்சிகள்" என்கிற உயர்குலச் சொல்லைத் தமது அகராதியிலிருந்து எடுத்துவிட்டு "வேலை" என்கிற எளிமையான சரியான சொல்லைப் பயன்படுத்துமாறு அறிவுரை கூற விரும்புகிறேன்.
என்னைப் பொறுத்தவரை என்னை "எழுத்தாளன் அன்றி வேறில்லை" என்று என்றைக்கும் நான் கருதிக் கொண்டதில்லை. ஏதாவது ஒரு வழியில் என்வாழ்க்கை முழுவதும் நான் பொது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறேன். இன்றுவரை எனக்கு அவற்றில் உற்சாகம் ஒழிந்ததில்லை"
("நான் எவ்வாறு எழுதக் கற்றுக் கொண்டேன்" நூலில்)