வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் 215 அரசு அலுவலர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் 30.9.2023 அன்று தீர்ப்பளித்தது. சுதந்திர இந்தியாவில் அரசு அலுவலர்கள் இத்தனை பேர் ஒரே சமயத்தில் தண்டிக்கப்பட்டதில்லை. சமுதாயத்தின் கடைக்கோடியில் வாழும் எளிய பழங்குடியினப் பெண்கள் மீது முப்பது ஆண்டுகளுக்குமுன் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள், தாக்குதல்களுக்காகத் தொடுக்கப்பட்ட வழக்கில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், அரூர்-பாப்பிரெட்டிப்பட்டி இடையே கல்வராயன் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது வாச்சாத்தி எனும் சிற்றூர். வாச்சாத்தி மக்கள் சந்தன மரங்களை வெட்டிப் பதுக்கி வைத்துள்ளனர் என்கிற செய்தியின் அடிப்படையில் 1992 சூன் 20 அன்று வனத்துறையினர் 155 பேர், காவல் துறையினர் 108 பேர், வருவாய்த் துறையினர் 6 பேர் என மொத்தம் 269 பேர், 665 பேர் வாழும் வாச்சாத்தியை முற்றுகையிட்டனர். இத்தனை பேர் ஊர்திகளில் வருவதைக் கண்டதும் வாச்சாத்தியில் இருந்த ஆண்கள் ஓடிப்போய்க் காடுகளில் பதுங்கிக் கொண்டனர். பெண்களைத் தாக்க மாட்டார்கள் என்று அவர்கள் நம்பினர். ஆனால் காவல்துறையினரும் வனத் துறையினரும் வீடுகளுக்குள் புகுந்து பண்டம் பாத்திரங்களையெல்லாம் அடித்து உடைத்தனர்.vachathi tribal women90 பெண்கள், 28 சிறுவர்கள், 15 ஆண்கள் என 133 பேரை ஊரின் நடுவில் உள்ள ஆலமரத்தடிக்கு இழுத்து வந்தனர். அவர்களில் 18 இளம்பெண்களைத் தேர்வு செய்து, பதுக்கி வைக்கப்பட்டுள்ள சந்தன மரக்கட்டைகளைக் காட்டுவதற்காக என்று கூறி, அப்பெண்களை ஊர்தியில் ஏற்றி ஏரிக் கரைப் பக்கம் அழைத்துச் சென்றனர். பெண் காவலர்கள் தாங்களும் உடன் வருவதாகக் கூறினர். ஆனால் ஆண் அதிகாரிகள் வேண்டாம் என்று மறுத்துவிட்டனர். 18 பெண்களையும் மாறி, மாறி கூட்டு வன்புணர்வு செய்தனர். எட்டாம் வகுப்புப் படிக்கும் 13 அகவை சிறுமி, ‘அய்யா, நான் பள்ளியில் படிக்கிறேன்; என்னை விட்டுவிடுங்கள்’ என்று கதறி அழுத போதும், கொடிய விலங்கு மனம் கொண்ட அதிகாரிகளின் மனம் இரங்க வில்லை. எட்டு மாதம் கருவுற்றிருந்த பெண்ணையும் அந்த விலங்குகள் விட்டுவைக்கவில்லை.

அச்சுறுத்தவும், இழிவுபடுத்தவும், பழிவாங்கவும் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கும் ஆணாதிக்க மனப்போக்கு, சட்டம் ஒழுங்கையும் மக்களையும் காக்க வேண்டிய அரசு அலுவலர்களிடம் இருப்பது இந்திய சனநாயகத்திற்கே இழுக்காகும்.

அடுத்த நாள் 90 பெண்களையும், 15 ஆண்களையும் அரூர் வனத்துறை அலுவலகத்தில் அடைத்து வைத்தனர். ஊர்க் கவுண்டர் என்று அழைக்கப்பட்ட வாச்சாத்தி சிற்றூரின் தலைவரை அங்கிருந்த பெண்களின் ஆடைகளைக் களையுமாறு கட்டாயப்படுத்தினர். பிறகு அப்பெண்கள் ஊர்க் கவுண்டரைத் துடைப்பத்தால் அடிக்கச் செய்தனர். வாச்சாத்தியின் பழங்குடியினரை இவ்வாறு கொடுமைப்படுத்தியது ஏன்?

வாச்சாத்திக்கு அருகில் கலசம்பாடி என்கிற சிற்றூர் உள்ளது. வனத்துறையினரும் அ.தி.மு.க.வினர் சிலரும் கூட்டுச்சேர்ந்து சந்தன மரங்களை வெட்டிக் கடத்தி வந்தனர். கூலிக்கு சந்தன மரத்தை வெட்டும் வேலையில் கலசம் பாடி ஆட்களும் வாச்சாத்தியில் சிலரும் இருந்தனர். இவ்வாறு வெட்டி ஏற்றி அனுப்பப்பட்ட சந்தன மரங்களில் 30 முதல் 60 டன் சந்தன மரங்கள் கணக்கில் வரவில்லை. இந்த மரங்கள் வாச்சாத்தியில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்கிற செய்தியின் அடிப்படையில்தான் 269 அரசு அலுவலர்கள் வாச்சாத்தியை முற்றுகையிட்டுத் தாக்கினர்.

1992 சூன் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களும் வனத்துறையினரும் காவல் துறையினரும் வாச்சாத்தியில் தங்கி பல அட்டூழியங்களைச் செய்தனர். கோழி, ஆடுகளை வெட்டி சமைத்து உண்டனர். வீடுகளில் இருந்த அரிசியுடன் மண்ணெண்ணையைக் கலந்தனர். கிணறுகளில் ஆடு, கோழிகளின் கழிவுகளைக் கொட்டினர். பல வீடுகளை இடித்தனர்.

அச்சமயத்தில் தமிழ்நாடு மலைவாழ் பழங்குடியினர் சங்கம் என்பது அமைக்கப்பட்டிருந்தது. அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணை அமைப்பாக இருந்தது. இச்சங்கத்தின் தலைவர் சண்முகத்திற்கு பல நாட்கள் கழித்துதான் வாச்சாத்தியில்நடந்த கொடுமை தெரிய வந்தது. சண்முகம் 1992 சூலை 14 அன்று வாச்சாத்திக்குச் சென்று அக்கொடுமைகளைக் கேட்டறிந்தார். அரூர் காவல் நிலையத்துக்குச் சென்று இதுகுறித்து புகார் அளித்தார். ஆனால் காவல்துறை அதை ஏற்க மறுத்துவிட்டது.

அதன்பின், பழங்குடியினர் சங்கத் தலைவர் சண்முகம், மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நல்லசிவம், இந்திய சனநாயக மாதர் சங்கத்தின் தலைவராக இருந்த மைதிலி சிவராமன் ஆகியோர் வாச்சாத்தி வன்கொடுமை குறித்து அப்போது முதலமைச்சராக இருந்த செயலலிதாவுக்கு தனித்தனியே மடல் எழுதினர். கருணை மிகுந்த தாயுள்ளத்துடன் செயலலிதா அதன்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சட்டப் பேரவையில் வாச்சாத்தி வன்கொடுமை குறித்து வினா எழுப்பிய போது, வனத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன், ‘சந்தன மரக்கடத்தலைத் தடுக்கவே அரசு அலுவலர்கள் வாச்சாத்திக்குச் சென்றனர். சந்தன மரக் கடத்தல்காரர்கள் வேண்டுமென்றே பாலியல் வன்கொடுமை நடந்ததாக இட்டுக்கடடிக் கூறுகின்றனர்’ என்று முழுப்பூசணிக் காயைச் சோற்றில் மறைப்பது போல் கூறினார்.

வாச்சாத்தி வன்கொடுமையைக் கண்டித்து 1992 செப்டம்பர் 24 அன்று சென்னையில் குறளகம் எதிரில் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வாச்சாத்தியிலிருந்து 60 பெண்கள் இதில் பங்கேற்றனர். அ.தி.மு.க. ஆட்சி எதற்கும் அசையவில்லை. அதனால் பழங்குடியினர் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாச்சாத்தி வன்கொடுமையை வழக்காக விசாரிக்கக் கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றத்தின் முதலாவது பெண் நீதிபதியாக அமர்த்தப்பட்ட நீதிபதி பத்மினி ஜேசுதுரை முன் இது விசாரணைக்கு வந்தது. படித்துப் பதவியில் இருப்பவர்கள் இதுபோன்ற இழிசெயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்றுகூறி நீதிபதி பத்மினி ஜேசுதுரை அந்த விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்து விட்டார். இது வெள்ளையாக இருப்பவன் பொய்ப் பேசமாட்டான் என்பது போன்றதாகும். கீழ்வெண்மணி வழக்கின் தீர்ப்பிலும் பண்ணையார் தலித்துகள் வாழும் சேரிப் பகுதிக்கு வந்து குடிசைக்குத் தீயிட்டிருக்க மாட்டார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ஒரு திருப்புமுனை நிகழ்ந்தது. இந்திய சனநாயக மாதர் சங்கம் வாச்சாத்தி வன்கொடுமை குறித்து விசாரிக்குமாறு பட்டியல் வகுப்பினர் - பழங்குடியினர் நலனுக்கான தேசிய ஆணையத்திற்கு எழுதிய மடலின் அடிப்படையில் அந்த ஆணையத்தின் தென்மண்டலத் துணை இயக்குனராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பாமதி வாச்சாத்திக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் பேசி உண்மையை அம்பலப்படுத்தும் வகையில் அறிக்கை அளித்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவையின் உறுப்பினர் ஏ. நல்லசிவம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தை விசாரிக்குமாறு ஆணையிட்டது. அதன்பின் உயர்நீதிமன்றம் இதை சி.பி.ஐ. விசாரிக்குமாறு அறிவுறுத்தியது.

1995இல் சி.பி.ஐ. இதை வழக்காகப் பதிவு செய்தது. 1996இல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தருமபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் வாச்சாத்திக்கு 1992 சூன் 20 அன்று சென்ற அரசு அலுவலர்கள் 269 பேரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். வழக்கு விசாரணைக் காலத்தில் வாச்சாத்தியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மலைவாழ் பழங்குடியினர் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்தனர். சங்கத்தின் தலைவர் சண்முகம் ஒவ்வொரு விசாரணை நாளிலும் நீதிமன்றத்தில் இருந்தார்.

தமிழ்நாட்டு அரசின் முழு அரவணைப்பு இருந்ததால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, குற்றஞ்சாட்டப்பட்ட அரசு அலுவலர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க முயன்றனர். ஆனால் சி.பி.ஐ.இன் விசாரணை அதிகாரியாக அமர்த்தப்பட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஜெகந்நாதன், சிறப்பு வழக்குரைஞர் ஜெயபாலன் ஆகியோர் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்பதில் நேர்மையுடனும் திறமையாகவும் செயல்பட்டனர்.

இவ்வழக்கில் தருமபுரி மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.குமரகுரு 2011 செப்டம்பர் 29 அன்று தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் அப்போது உயிருடன் இருந்த 215 பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமையில் 17 பேர் ஈடுபட்டதாக உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 12 பேருக்கு 10 ஆண்டுகள், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை என்று சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் தண்டிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

அ.தி.மு.க. ஆட்சியும், தி.மு.க. ஆட்சியும் காவல்துறை, வனத்துறை, வருவாய்த் துறை ஆகியவற்றின் உயர் அதிகாரிகளும் வாச்சாத்தியில் கைது செய்யப்பட்டவர்கள் சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதையே தொழிலாகக் கொண்டவர்கள் என்பதால் அதைத் தடுக்கச் சென்ற அரசு அலுவலர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்துகின்றனர் என்கிற கருத்தை உயர்நீதிமன்றத்திலும் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி கிடைக்க வேண்டும்; குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதிப்பாட்டுடன் இருந்தனர்.

பழங்குடியினர் சங்கமும், சமூகச் செயற்பாட்டாளர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பழங்குடியினப் பெண்களுக்கு உறுதுணையாகச் செயல்பட்டனர். மேலும் பத்து ஆண்டுகளுக்கு மேல் இவ்வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை முடிந்த பின், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வேல் முருகன் வாச்சாத்திக்குச் சென்று கள ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்து உரையாடினார்.

அதன்பின் 29.9.2023 அன்று உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், தருமபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கினார். அத்தீர்ப்பில் நீதிபதி வேல்முருகன், “உண்மையில் சந்தன மரங்களைக் கடத்துபவர்களையும் பெரும் புள்ளிகளையும் காப்பாற்றுவதற்காக வனத் துறையினரும், காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் கூட்டுச் சேர்ந்து இந்த நாடகத்தை நடத்தி உள்ளனர். இதனால் ஏதுமறியாத அப்பாவிப் பழங்குடியினப் பெண்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது உயிருடன் உள்ள குற்றவாளிகள் அவர்களின் மீதமுள்ள தண்டனைக் காலத்தைச் சிறையில் கழிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

31 ஆண்டுகளுக்குப்பின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு, நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது என்று வாச்சாத்தி மக்களும், முற்போக்கு அமைப்பினரும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் நீதிபதி வேல்முருகன் எழுதிய தீர்ப்பின் மை காய்வதற்கு முன்பே, தண்டிக்கப்பட்டவர்களுள் ஓய்வுபெற்ற இந்திய வனப்பணி அதிகாரி எல்.நாதன் உள்ளிட்ட 30 பேர் சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்சநீதிமன்ற நீதிபதி பங்கஜ் மித்தல் 10.11.2023 அன்று மேல்முறையீடு செய்த 30 பேரின் தண்டனையை நிறுத்தி வைத்து, அவர்களுக்குப் பிணை வழங்கி, சரணடைவதிலிருந்து விலக்கு அளித்து ஆணையிட்டுள்ளார்.

ஆட்சி அதிகாரமும், எதையும் தன் விருப்பத்திற்கு ஏற்ப வளைக்கக் கூடிய செல்வாக்கும், பண வலிமையும் கொண்டவர்கள், எத்தகைய குற்றத்தைச் செய்தாலும், தம் வாழ்நாளில் அதற்கான தண்டனையைப் பெறாமல் தப்பித்துக் கொள்வதற்கு ஏற்ற வகையில் இந்நாட்டின் அரசியலும், அதிகார அமைப்பும், நீதித் துறையும் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதே உண்மையாகும். ஆனால் இந்தக் கட்டமைப்பு ஏழை-எளிய மக்களை நசுக்கிப் பொசுக்கி வருகிறது.

- க.முகிலன்

Pin It