மனிதர்க்கு முதுமையில் இறப்பு நிகழ்வது இயற்கை. ஆனாலும் சில மிகச்சிறந்த மாமனிதர்களின் இறப்பு தேசத்தின் இழப்பாக அதிரச் செய்துவிடுகிறது.

95 வயது வரை வாழ்வாங்கு வாழ்ந்த மாமனிதர் ஜோதிபாசுவின் இறப்பு அதிர்வு இந்தியாவில் மட்டுமல்ல, இந்தியாவின் எல்லைகளைக் கடந்தும் உணரப்பட்டிருக்கிறது.

'தேசத்தின் ஜோதியாகிய அவர் இனி இல்லை' என்கிற நிஜம் தோழர்களின், உழைக்கும் மக்களின் இதயங்களை உலுக்கியெடுத்தது.

"ஜோதிபாபு"வை இழந்து வங்க பூமி அழுதது. இந்தியப் பெருந்தேசமே பேரிழப்பின் சோகம் படிந்து வாடியது.

நாட்டின் தலைசிறந்த மனிதரை நாடு இழந்துவிட்டதென்றும், உறுதிமிக்க மாமனிதரென்றும், தன்னலமற்று சேவையாற்றியவரென்றும், கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் இடதுசாரி இயக்கத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் ஈடுசெய்ய இயலாப் பேரழப்பென்றும், கடந்த நூற்றாண்டின் சிறந்த ஆட்சியாளர்களில் ஒருவரென்றும், மிகச்சிறந்த தேசபக்தரென்றும், இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் பேசப்பட்டவரென்றும், பல தலைவர்கள் சாதிக்க முடியாதவற்றைச் சாதித்துக் காட்டியவரென்றும், 23 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சராகப் பொறுப்பு வகித்து மக்கள் பணியாற்றிய தலைவர் இ ந்தியாவிலேயே இவர் போல் வேறு எவருமில்லையென்றும், அந்தச் சாதனையிலும் இவரே முதல்வர் என்றும், இவர் ஒரு சகாப்தமென்றும்... இன்னும் இன்னும் ஏராளமாக அரசுத்தலைவர்களும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் உழைக்கும் வர்க்க அமைப்புத் தலைவர்களும் கலை - இலக்கிய அமைப்புகளும் வேறு பல அமைப்புகளும் மற்றும் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களும் ஜோதிபாசுவுக்கு போற்றுதல் கூறி புகழ் மாலைகள் சூட்டி அஞ்சலி செலுத்தினர். 

பல வெளிநாடுகளின் அரசுத் தலைவர்கள், சகோதர கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியோரும் அவரது மறைவுக்கு இரங்கற்தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.இந்தியா முழுவதுமிருந்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சென்று கொல்கத்தாவில் குவிந்த அந்தக் காட்சி, மறைந்த மக்கள் தலைவருக்கு இறுதிவிடை கொடுக்க இந்தியாவே அங்கு சென்றிருந்தது போல் இருந்தது.

"காலம் வேகமாகத்தான் போகிறது. நேரடியான அரசியலில் நான் இறங்கி 50 ஆண்டுகள் முடிந்துவிட்டன. முதலில் நான் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்தபோது நாட்டின் விடுதலைக்கான போராட்டம் மிக முக்கியமானதொரு கட்டத்தை அடைந்திருந்தது. அந்த நேரத்தில் எங்களது இலக்கு என்பது விடுதலை பெறப்போகிறோம் என்பது மட்டுமின்றி, அதன் பிறகு தேசத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்பதாகவும் இருந்தது. ஆனால் நமது இறுதி இலக்கு என்பது ஏழைகளின் விடுதலையை உறுதிப்படுத்துவதுதான்"

-ஜோதிபாசு தமது சுய சரிதையை இப்படித்தான் ஆரம்பிக்கிறார்.

பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிரான சுதந்திரப் போரில் ஈடுபட்ட இளைய ஜோதிபாசுவின் அவரது சகாக்களின் கனவு விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் ஏழைகள் வறுமையிலிருந்தும் துயர வாழ்க்கையிலிருந்தும் விடுதலை பெற வேண்டுமென்பதாகவும் இருந்தது. இந்த இலட்சியக் கனவின் ஒரு பகுதி நிறைவேற்றம்தான். தாம் முதலமைச்சராக இருந்த காலத்தில் நிலமில்லா ஏழை உழவர்களுக்கு 13 லட்சம் ஏக்கர் நிலம் நிலச்சீர்திருத்தத்தின் மூலமாக வழங்கியது.

அவர் தமது சுயசரிதை நூலின் ஆரம்ப வரிகளில் மேலும் கூறுகிறார்:

"கடந்த ஆண்டுகளில் நல்லதாகவும் மோசமானதாகவும் பிரம்மாண்டமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை இப்போது என்னால் காணமுடிகிறது. எனினும், உண்மையான பிரச்சனை என்பது இன்னமும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. நமது நாட்டில் சாதாரண, எளிய மக்களின் ஆட்சி என்பது இன்னமும் கைக்கெட்டாத கனவாகத்தான் நீடிக்கிறது"

சுதந்திர இந்தியாவின் வளர்ச்சி ஏழைகளுக்குப் போய்ச் சேரவில்லை, சுதந்திர இந்தியாவின் அதிகாரத்தை பெரும் முதலாளிகள் எடுத்துக் கொண்டனர். உழைக்கும் ஏழைகளின் கைக்கு இன்னும் அது எட்டாக் கனியாகவே -கனவாகவே இருக்கிறது. தமது இந்தக் கனவு எப்போது மெய்ப்படும் என்கிற ஆதங்கம் அவருள் மறையாமலே இருந்திருக்கிறது.

ஜோதிபாசுவின் அரசியல் வாழ்க்கை இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் தொடங்குகிறது.

அப்போது அவர் சிறார் பருவம். 1930ஆம் ஆண்டில் கல்கத்தாவில் செயின்சேவியர் பள்ளியில் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.

ஒருநாள் கல்கத்தாவில், இன்று தியாகிகள் நினைவு மைதானம் என்று சொல்லப்படும். ஷகீத்மினார் மைதானத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேச வருகிறார் என்பதை ஜோதிபாசு கேள்விப்பட்டதும் தனது உறவுக்காரப் பையனை உடன் அழைத்துக் கொண்டு நேதாஜியின் வீர உரையைக் கேட்பதற்காக ஆர்வமுடன் அங்குச் சென்றபோது கூட்டத்திற்குத் தடைவிதிக்கப்பட்டு ஒரு போர்க்களம் போல் அந்த மைதானம் முழுவதும் போலீஸ்படை குவிக்கப்பட்டிருந்தது. அச்சமூட்டும் அந்தச் சூழலிலும் துணிச்சலுடன் அதை மீறி மைதானத்தினுள் செல்ல முயன்றபோது அவர்கள் இருவரின் முதுகிலும் போலீஸின் பிரம்படிகள் பலமாய் விழுகின்றன.

"இருந்தாலும் நாங்கள் ஓடி ஒளியவில்லை. அப்படிச் செய்தால் நாங்கள் பயந்துவிட்டோம் என்று தோன்றக்கூடும். நாங்கள் விரைவாக நடந்து என் தந்தையின் மருத்துவமனையை அடைந்தோம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எனது முதலாவது எதிர்ப்பு இதுதான்" என்றார் ஜோதிபாசு.

சிறார் பருவத்திலேயே சுதந்திர வேட்கை துளிர்விடத் துவங்கிய ஜோதிபாசுவின் அரசியல் வாழ்க்கை இப்படி பிரிட்டிஷ் போலீசின் பிரம்படியோடுதான் ஆரம்பமானது.

ஜோதிபாசுவின் குடும்பத்திற்கு வங்கத்தின் சுதந்திரப் போராட்டப் புரட்சியாளர்களோடு நேரடி ஈடுபாடு இல்லையென்றாலும் பிரிட்டிஷ் போலீஸின் பிடியில் சிக்கிவிடாமலிருக்க அவர்களுக்கு வீட்டில் அடைக்கலம் தந்து உணவளித்துப் பாதுகாத்தனர். குறிப்பாக, ஜோதிபாசுவின் அம்மா இதில் முக்கிய அக்கறையெடுத்துக்கொண்டார். ஒரு நாள் வீட்டில் போலீஸ் சோதனையிட வந்தபோது அங்கே தலைமறைவாய் இருந்த ஒரு புரட்சியாளரின் ஆயுதத்தை போலீஸின் கண்ணில்பட்டுவிடாமலிருக்க தன் புடைவைக்குள் மறைத்து வைத்துக் கொண்டார் அம்மா. அந்தப் புரட்சியாளர் பின்னாளில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் சிறையில் கொடும் சித்ரவதைக்குள்ளானார். இதுபற்றி ஜோதிபாசு கூறுகையில், "என் அம்மா அவருக்கும் கிட்டத்தட்ட ஒரு தாயைப் போலவே தான் இருந்தார். நான் அம்மா என்றழைப்பது போல் அவரும் என் அம்மாவை அழைத்து வந்தார்".

இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ராஜாராம் மோகன்ராய், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், மதுசூதன தத்தர், ஜகதீச சந்திரபோஸ், சரத்சந்திரர், கிஷன் சந்தர், பங்கிம் சந்திர சாட்டர்ஜி, ரவீந்திரநாத் தாகூர் முதலான மகான்களும் அறிஞர்களும் சுதந்திரப் போராட்டத் தலைவர்களும், சமூக சீர்திருத்தவாதிகளும் புகழ்பெற்ற கலை-இலக்கிய மேதைகளும் தோன்றிய மண். வீரமும் தியாகமும் நிறைந்த மண். அத்தகைய சிறப்புகள் செழித்த வங்க பூமியில் 1914 ஆகஸ்ட் 8ஆம் நாளன்று நமது பாசு பிறந்தார்.

ஜோதிபாசுவின் பெற்றோர் இன்றைய பங்களாதேஷில் தலைநகர் டாக்கா மாவட்டத்தின் பார்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கல்கத்தாவுக்கு குடிபெயர்ந்த பின்னர் அங்கு ஜோதிபாசு பிறந்தார்.

சிறார் பருவத்திலேயே வங்கத்தின் தடை செய்யப்பட்ட புரட்சிகர நூல்களைப் படிப்பதில் ஜோதிபாசுவுக்குத் தனி ஆர்வம். அவரது பெரியப்பா நளினிகாந்தபாசு வெடிகுண்டு வீச்சு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய சமயம். பிரிட்டிஷ் போலீசால் தடை செய்யப்பட்ட நூல்கள் நீதிபதி பெரியப்பாவின் வீட்டில் அவரது மேஜை மீது வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். பெரியப்பா நீதிமன்றத்திற்குச் சென்றுவிட்ட நேரம் பார்த்து வந்து அந்த நூல்களை எடுத்துப் படித்துவிட்டு மறுபடி அது இருந்த இடத்தில் இருந்த மாதிரியே வைத்து விடுவார்.

நாவலாசிரியர் "சரத் சந்திர சாட்டர்ஜியின் 'பதேர்தாபி' என்ற நூல் 1926 ஆகஸ்ட்டில் வெளியானது. அதற்கு அடுத்த மாதங்களுக்குள்ளேயே இந்த நூல் தடை செய்யப்பட்டுவிட்டது. இருந்தாலும், அதற்குள் அந்த மூடப்பட்ட நான்கு சுவர்களுக்குள் நான் இந்த நூலைப் படித்து முடித்துவிட்டேன்" என்கிறார் ஜோதிபாசு.

சிறுவயதிலேயே தேச விடுதலைக்கான சுதந்திர உணர்ச்சி கொண்டு சுதந்திரப் போராட்டக் களங்களில் இறங்கிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான் ஜோதிபாசுவும்.

கல்கத்தாவின் மாநிலக் கல்லூரியில் கலைத்துறையில் ஹானர்ஸ் பட்டம் பெற்ற மகன் ஜோதிபாசுவை பாரிஸ்டர் மேற்படிப்புக்காக லண்டனுக்கு அனுப்பி வைத்தார் அப்பா நிஷி காந்த பாசு. மகன் பெரிய வழக்கறிஞராக வேண்டும் என்பது அப்பாவின் ஆசை. ஆனால் படித்து முடித்து 1944ஆம் ஆண்டு கல்கத்தாவுக்குத் திரும்பியதும் அவர் ஏற்றுக் கொண்ட பணி தனது கம்யூனிஸ்ட் கட்சி பணித்ததற்கு இணங்க ரயில்வே தொழிலாளர் சங்கத்தை அமைப்பது!

லண்டனிலிருந்து அவர் கல்கத்தா திரும்பிய போது ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் சிந்தனையாளராக இருந்தார். வடக்கு வங்கம் - கிழக்கு வங்கம் - அஸ்ஸாம் ஆகிய பகுதிகளின் ரயில்வே தொழிலாளர்களை ஒன்று திரட்டி சக்தி வாய்ந்த பெரும் தொழிற்சங்கத்தை உருவாக்கினார்; அதன் பொதுச் செயலாளராகவும் ஆனார். நீதித்துறையில் பணியாற்றுவதற்காகப் படித்தவர் ரயில்வே துறையின் தொழிலாளர்களுக்குப் பணியாற்ற வந்துவிட்டார். அப்போதே அவரது தன்னலமறுப்பு, தியாக உள்ளம், எளிமைப் பண்புகள் வெளிப்பட ஆரம்பித்தன. ஒரு முன் மாதிரியான சிறந்த கம்யூனிஸ்ட்டாகவும் உயர்ந்தார்.

ஜோதிபாசு லண்டனில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், இந்திய விடுதலைக்கு மக்களின் ஆதரவைத் திரட்டுவது, நன்கொடைகள் வசூலிப்பது என்கிற நோக்கத்துடன் 'லண்டன் மஜ்லிகள்' என்ற அமைப்பினை அவரும் அங்குப் படித்துக் கொண்டிருந்த இந்திய மாணவர்களும் சேர்ந்து உருவாக்கினர். ஜோதிபாசுதான் அதன் செயலாளர். கேம்ப்ரிட்ஜ், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகங்களில் படித்துக் கொண்டிருந்த  இந்திய மாணவர்கள் கம்யூனிஸ்ட் குழுக்களை உருவாக்கியிருந்தனர். மோகன்குமாரமங்கலம், இந்திரஜித் குப்தா, புபேஷ் குப்தா, நிகில் சக்ரவர்த்தி, என்.கே.கிருஷ்ணன், அருண்போஸ், ரஜினிபடேல், பெரோஸ்காந்தி போன்றோரெல்லாம் அந்தக் கம்யூனிஸ்ட் குழுக்களில் இருந்தனர்.

ஜோதிபாசு செயலாளராக இருந்த லண்டன் மஜ்லிக்கு ஜவகர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ், விஜயலட்சுமி பண்டிட், யூசுப் மெஹர் அலி போன்ற இந்தியத் தலைவர்கள் விருந்தினராக வருகை தந்துள்ளனர். அன்று லண்டனில் "இந்தியன் லீக்" தலைவராக இருந்தவரும், பிற்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக ஆனவருமான வி.கே.கிருஷ்ணமேனன்தான் லண்டனில் ஜவகர்லால் நேருவுக்கு ஜோதிபாசுவை அறிமுகம் செய்து வைத்தார்.

ஜோதிபாசு கல்கத்தாவில் பிரசிடென்ஸி கல்லூரியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த காலத்தில் வகுப்பு முடிந்த நேரங்களில் சக மாணவர்களுடன் பேசி அரட்டையடித்துக் கொண்டிருப்பதை விரும்பமாட்டார். வகுப்பு முடிந்த நேரங்களில் நகரில் உள்ள பழைய புத்தகக்கடைகளுக்குத் தனியாகவே சென்று நல்ல புத்தகங்களை தேடி வாங்குவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பாரிஸ்டர் சட்டக் கல்வி பயில லண்டனுக்குச் சென்றிருந்தபோதும் ஆரம்பத்தில் இந்த வழக்கத்தை ஜோதிபாசு மாற்றிக் கொள்ளவில்லை.

லண்டனில் நாக் என்பவரின் வீட்டில் அவர் சில இந்திய மாணவர்களுடன் தங்கியிருந்தார். வகுப்புக்கு காலையில் சென்றால் இரவு 7 மணிக்குத்தான் திரும்பி வருவார். வகுப்பு முடிந்தால் வாரன்ஸ்ட்ரீட் ஸ்டேஷனிலிருந்து பாதாள ரயிலில் ஏறி விரும்பிய இடங்களைப் பார்க்கப் போவார். இவ்வாறு போவதில் அவரைக் கவர்ந்த ஒரு முக்கிய மையமாக இருந்தது 'ஹைட்பார்க்' அங்கே 'ஸ்பீக்கர்ஸ் கார்னரில் பல மேடைகள் இருக்கும்.

பல மேடைகளிலுமாக ஒரே சமயத்தில் பலரும் உரையாற்றிக் கொண்டிருப்பார்கள் ஒரு மேடையில் சோஷலிஸ்ட் தலைவர் பேசுகிறாரென்றால் மற்றொரு மேடையில் ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் பேசிக் கொண்டிருப்பார்; இன்னொரு மேடையில் பேசுகிறவர் ஒரு பாசிஸ்டாக இருப்பார். பிறிதொரு மேடையில் ஒரு சுவிசேஷ பிரசங்கம் நடக்கும்.

மற்ற  இந்திய மாணவர்கள் தங்கள் இங்கிலீஷ் வெள்ளைக்காரக் காதலிகளுடன் சேர்ந்து உல்லாசமாகச் சுற்றித்திரிந்து கொண்டிருக்க, ஜோதிபாசு ஒவ்வொரு மேடைக்குமாக மாறி மாறிச் சென்று ஒவ்வொருவரின் பிரசங்கத்தையும் கேட்டுக் கொண்டிருப்பார்.

உலகம் பாசிஸத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் இரு அணிகளாகப் பிரிய ஆரம்பித்திருந்த அச்சமயத்தில் (1936)இந்தச் சொற்பொழிவுகள் ஜோதிபாசுவினுள் ஒரு அரசியல் வடிவம் பெற உதவின.

மற்ற மாணவர்களைப் போல வாரம் ஒரு முறை லண்டன் பொருளாதாரப் பள்ளியில் நடைபெறும் பேராசிரியர் ஹாரோல்டு லாஸ்கியின் சொற்பொழிவுகளைக் கேட்பதற்குப் ஜோதிபாசும் சென்றுவிடுவார். பாசிஸத்திற்கு எதிராகவும் இந்தியாவை ஆதிக்கம் செய்யும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவுமான 'லாஸ்கியின் கனல்பறக்கும் சொற்பொழிவு ஜோதிபாசுவை மிகவும் ஆகர்ஷித்தது.

அவர் பிரிட்டனில் நடைபெற்ற பாசிஸ்ட் எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்றதன் மூலம் அரசியலில் முனைப்போடு ஈடுபட ஆரம்பித்தார். மார்க்ஸியத் தத்துவ நூல்களைத் தேடிப்பெற்று இரவு நீண்டநேரம் வரை படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

தனது அப்பா இறந்த போது ஜோதிபாசு வங்கத்தின் டம்டம் நகர சிறையில் இருந்தார். இந்திய - சீன யுத்தத்தின்போது, சீன ஆதரவாளர் என்று முத்திரை குத்தி போலீஸ் அவரைக் கைது செய்து சிறையிலடைத்தது.

1962 நவம்பர் 21 அன்று நள்ளிரவிற்குப் பிந்தைய நேரத்தில் இந்துஸ்தான் பார்க்கில் உள்ள ஜோதிபாசுவின் வீட்டுக்குள் போலீஸ் சென்று அவரைக் கைது செய்தது.

கடும் நோய்வாய்ப்பட்டு மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த அப்பாவை ஒரு முறை போய்ப் பார்க்கக்கூட போலீஸ் அனுமதிக்கவில்லை. அப்போது அவர் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவராக இருந்தார்.

அப்பா இறந்த பிறகு தகனக் கிரியையில் கொஞ்ச நேரம் பங்கேற்க மட்டும் அவர் அனுமதிக்கப்பட்டார். அன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஏ.கே.கோபாலன் தலையிட்டதைத் தொடர்ந்து பிரதமர் ஜவகர்லால் நேருவே கட்டளையிட்டதற்குப்பின்னர் அப்பாவைப் பார்க்க ஜோதிபாசு விடுவிக்கப்பட்டார்.

ஒரு கிரிமினலைப் போலே போலீஸ்கார்களின் வளையத்திற்குள் வீடுவந்து சேர்ந்தார். இறுதிச் சடங்குகள் முடிந்ததும் அவரை மீண்டும் போலீஸ் சிறைக்குக் கொண்டு சென்றது.

அதுவரையும் துக்கத்தை அடக்கிச் சமாளித்து வந்த ஜோதிபாசு சிறையின் அறைக்குள் அப்பாவை பற்றிய நினைவுகளில் மூழ்கி கதறி அழுதார். அப்பாவின் பிரிவை அவரால் தாங்க முடியவில்லை.

பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக சிறார் பருவத்தில் கல்கத்தாவில் ஆரம்பித்த அவரது சுதந்திர வேட்கை லண்டனில் வாலிபப் பருவத்தில் வளர்ச்சிபெற்று செயல்பட்டது.

பாரிஸ்டர் படித்து பாட்டாளிகளுக்குத் தலைவரான ஜோதிபாசு, 1946இல் நடைபெற்ற தேர்தலில் ரயில்வே தொழிலாளர்கள் நிறைந்த சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு செல்வாக்குமிக்க காங்கிரஸ் தலைவராகிய ஹுமாயூன் கபீரைத் தோல்வியுறச் செய்து மகத்தான வெற்றி பெற்றார். சட்டமன்றத் தேர்தலில் அவரின் முதல் போட்டியும் முதல் வெற்றியும் இதுதான். அதன்பிறகு ஜோதிபாசு எல்லா தேர்தல்களிலும் மக்களின் பெருத்த ஆதரவுடன் வெற்றிகளின் நாயகனாவே உயர்ந்தார். மேற்குவங்கத்தில் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தார்த்த சங்கர்ரேயின் அரைப் பாசிஸ்ட் ஆட்சியின்போது 1972இல் சட்டமன்றத்திற்கு நடைபெற்ற மோசடித் தேர்தலில் பாராநகர் தொகுதியில் போட்டியிட்ட ஜோதிபாசு தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரது வெற்றி வரலாற்றில் இது ஒரு விதிவிலக்கு என்பதைத் தவிர அவர் எல்லா சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றிகளின் வரலாற்றையே படைத்தார்.

மேற்குவங்கத்தில் 1977இல் அமைந்த இடது முன்னணிக்கு முந்தைய காலத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் அஜய் முகர்ஜியின் பங்க்ளா காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஐக்கிய முன்னணி அமைக்கப்பட்டது. இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸை வீழ்த்தி ஐக்கிய முன்னணி வெற்றி பெற்றது. முன்னணியில் குறைந்த இடங்களைப் பெற்ற கட்சியின் தலைவர் அஜய்முகர்ஜி தானே. முதல்வராக வரவேண்டும் என்று அநியாயமாய் முரட்டுப் பிடிவாதம் செய்தார். மாநிலத்தில் ஜனநாயகத்தையும் மக்கள் உரிமைகளையும் மக்கள் நலன்களையும் மீட்டெடுக்க ஐக்கிய முன்னணியைப் பாதுகாப்பது அவசியம் என்ற நோக்கில், அதிக இடங்களைப் பெற்ற கட்சியின் தலைவர் ஜோதிபாசு தமக்குக் கிடைக்க வேண்டிய முதலமைச்சர் பதவியை அஜய்முகர்ஜிக்கே விட்டுக்கொடுத்து துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இரண்டு முறையும் இவ்வாறே நடந்தது.

இவற்றுக்கெல்லாம் மேலாக நூறுகோடி மக்களின் இந்தியப் பெருந்தேசத்தின் பிரதமர் பதவியே இருமுறை அவரை விரும்பி நாடி வந்த காலத்தில் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டு அந்த உச்சிநிலைப் பதவியை ஏற்க மறுத்துவிட்டவர் ஜோதிபாசு. ஒரு சின்ன பதவிக்குக் கூட சகல தந்திர உத்திகளையும் பயன்படுத்தி கலாட்டா பண்ணும் இந்திய அரசியலில் இப்படியொரு மனிதரா! இப்படியொரு தியாகமா! என்று நாடே வியந்தது. அந்தவியப்பு இன்றுவரையும் மறையவில்லை.

மக்கள் பணி, தன்னலமறுப்பு, தியாக சிந்தை, தன் நலனைவிட கட்சியின் நலனே மேலானதுஎன்கிற தன் கட்சியின் மீதான அழுத்தமான பற்று. இவைதான் அவரின் அரசியல் பண்பாக - அடையாளமாகப் பிரகாசித்தது.

1975-77 காலத்தில் காங்கிரஸின் அரைப்பாசிச அவசரநிலை அரக்கனிடம் சிக்கிச் சித்திரவதைப்பட்ட மேற்குவங்கத்தின் ஜனநாயகத்தையும் உரிமைகளையும் சுதந்திரமான அரசியல் வாழ்க்கையையும் மீட்டெடுத்து  அந்த மாநிலத்தை ஒரு முன்னுதாரண மாநிலமாக வளர்த்தெடுத்ததில் ஜோதிபாசுவின் தலைமைப் பங்கு மகத்தானதாகும். மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் புதிதாய் இடதுமுன்னணி அரசு அமைத்து ஆளுமைமிக்க அதன் சாரதியாய் வெற்றிப் பவனி வந்தார். நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 13 லட்சம் ஏக்கர் நிலம் வழங்கிய மெய்யான நிலச்சீர்திருத்தம் அமல் நடத்தினார். பிற மாநிலங்கள் உள்ளாட்சி அமைப்புகளை ஊட்டமில்லா நோஞ்சான்களாக வைத்திருக்கும் நிலையில் தன் மாநிலத்தில் அவற்றுக்கு அதிக நிதியும் அதிக அதிகாரங்களும் வழங்கி வலுசேர்த்தார்.

எந்தச் சூழலிலும் வங்கத்தில் சாதிக் கலவரங்கள் இல்லை; மதக்கலவரங்கள் இல்லை; இனக்கலவரங்கள் இல்லை; இத்தகைய இல்லாமைகளோடு நல்லவை காத்தார்.

பல உயர்வுகளின், மேன்மைகளின், உன்னதங்களின் அடையாளம் ஜோதிபாசு. அந்த அடையாளத்தை இந்த தேசத்திற்கும்,தனது தோழர்களுக்கும் பெரும் சொத்தாகவிட்டுச் சென்றுள்ளார்.

சுதந்திரப் போராட்டக் காலம் முதல் தாம் ஜீவித்திருந்த காலம் முழுவதும் இந்நாட்டுக்காகத் தம்மை அர்ப்பணித்திருந்த அவர், தேசத்திற்காக உழைத்த தம் தேகத்தையும் கண்களையும் மருத்துவ ஆராய்ச்சிக்குத் தானமாக வழங்கி - தம்மை இறந்த பின்னும் இந்நாட்டுக்காக அர்ப்பணித்துக்கொண்டார்! இது அர்ப்பணிப்பின் புதிய இலக்கணம்!

ஜோதிபாசு எனும் ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது உண்மை; இந்தியாவில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைப்பதற்கான வழிகாட்டும் ஆதர்சத்தைத் தன் தோழர்களுக்கு வழங்கிவிட்டு அந்தச் சகாப்தம் மறைந்தது என்பதும் உண்மை.

மீண்டும் ஜோதிபாசுவின் அந்தச் சொல்- "நமது நாட்டில் சாதாரண, எளிய மக்களின் ஆட்சி என்பது இன்னமும் கைக்கெட்டாத கனவாகத்தான் நீடிக்கிறது."

இந்த உத்தமரின் கனவுகள் ஒருநாள் மெய்ப்படும்! அதற்கு அவரிடமிருந்து பெற்ற நம்பிக்கை நமக்கு உறுதி தரும்!

வெற்றிப் பெருமிதம்

எனது கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடிந்தது என்பதே நீண்டகாலம் நான் முதலமைச்சராக இருந்ததன் மிகப்பெரிய வெற்றி. மேற்குவங்கத்தில் அரசியல் உறுதி, ஜனநாயகக் கலாச்சாரம், நிலச்சீர்திருத்தம், கிராமப் பொருளாதார வளர்ச்சி, மதவெறிக்கு எதிரான மனோபாவத்தை வளர்த்தது. தொழில்துறையிலும் இதர துறைகளிலும் பெற்ற வளர்ச்சிகள்..." - என்று 2000-மாவது ஆண்டில் தாம் முதல்வர் பொறுப்பிலிருந்து விடைபெற்ற போது மன நிறைவோடும் பெருமிதத்தோடும் ஒவ்வொன்றாய்க் கூறி மகிழ்ந்தார் ஜோதிபாசு.

"மனிதருடனான நட்பைவிடப் பெரிய சொத்து வேறு இல்லை. இறப்பதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். ஆனால், மரணம் வரும்போது வாழ்க்கையை வீணாகப் பாழாக்கிவிட்டோமே என்கிற ஏமாற்றத்திற்கு இடமளிக்கக் கூடாது. எனது கடைசி நாளில் என்னால் சொல்ல முடியும், மனிதகுலத்தின் விடுதலைக்காக வாழ்க்கைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தேன் என்று"

ஜோதிபாசு 

Pin It