அன்புள்ள எஸ்.வி.ஆர். அவர்களுக்கு வணக்கம்.

S.V.Rajadurai இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஜெர்மனியை தளமாகக் கொண்ட இயங்கும் ஐ.என்.எஸ்.டி எனும் தன்னார்வ அரசு சாரா நிறுவனத்தின் அனுசரணையில் திருவனந்தபுரத்தில் நடந்த மாநாட்டில் தாங்கள் சிறப்புரை ஆற்றினீர்கள் (எதுவரை - செப்டம்பர்-அக்டோபர் - 2009) என்பதைக் கேட்டு நான் அதிர்ந்து போனேன்.

 இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை எனச் சொல்கிற சுசீந்திரனின் முன்முயற்சியில் நடைபெற்ற நிகழ்வுதான் திருவனந்தபுரம் கூட்டம் என்பதைத் தாங்கள் அறிவீர்கள் என நான் நம்புகிறேன்.

 இந்து பத்திரிக்கையின் என்.ராமினாலும், சிங்கள இனவாதக் கட்சியான ஜே.வி.பியினாலும் தகவமைக்கப்பட்ட இலங்கை குறித்த அரசியல் பார்வை கொண்ட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழுத்தாளர்களான ச.தமிழ்ச் செல்வன், ஆதவன் தீட்சண்யா போன்றவர்களோடு திருவனந்தபுரம் கூட்டத் தளத்தை நீங்கள் பயன்படுத்தியிருந்தீர்கள் என அறிந்தபோது மேலும் அதிர்ந்து போனேன்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலங்கை சார்ந்த நிலைபாட்டுக்கு ஆதரவாக, சுசீந்திரன் போன்றவர்களை முன்வைத்து, இவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதையும் நீங்கள் அறியாதவரல்ல என நினைக்கிறேன். இலங்கை அரசின்பாலான ஒரு மென்மையான நிலைபாட்டுடன் விடுதலைப் புலிகளை மட்டுமே நடந்து முடிந்த கொலைகளுக்குக் காரணமாக நிறுத்துகின்ற அரசியலை சுசீந்திரன் போன்றவர்கள் முன்வைத்து வருகிறார்கள். இந்த அரசியலைத் தமிழகத்தில் முன்னெடுத்து வருகிறவர் அ.மார்க்ஸ் என்பதையும் தாங்கள் அறியாதிருக்க வாய்ப்பில்லை. 
 
 இலங்கை பற்றிய, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலுக்குகந்த வகையிலான சுசீந்திரன் போன்றவர்களின் நேர்முகங்களையும், இவர்களுக்கு ஆதரவாக அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினது ஆதவன் தீட்சண்யா அங்கம் வகிக்கிற புதுவிசையில் அவர்தம் கட்சியினது அரசியல் பிரச்சாரத்தின் பகுதியாக வெளியிட்டார்கள் என்பதனையும் தாங்கள் அறிந்தே இருப்பீர்கள்.

சுசீந்திரன் தனது தன்னார்வ நிறுவன அரசியலுக்கும், தனது இலங்கை அரசின்சார்பு அரசியலுக்கும் ஒரே தளத்தில் தங்களையும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இணைத்திருக்கிறார் என்பதுதான் இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
 
 அன்புள்ள எஸ்.வி.ஆர் அவர்களே, இனப்படுகொலை நடக்கவில்லை என்று சொல்கிற சுசீந்திரன் கூட்டிய திருவனந்தபுரம் மாநாட்டில் தாங்கள் ஏன் கலந்து கொண்டீர்கள் எனச் சொல்வீர்களா?

அன்று முதல் இன்று வரை இலங்கை அரசு சார்பான இந்து என்.ராமினதும், சிங்கள இனவாதக் கட்சியான ஜே.வி.பியினதும் அரசியலையுமே முன்னெடுக்கும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினது எழுத்தாளர்களுக்கும் தங்களுக்குமான, அக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான, பொதுக் காரணிகள் என்ன எனச் சொல்வீர்களா?

தன்னார்வ மற்றும் அரசு சாரா அமைப்புகளின் அரசியல் பற்றித் தாங்கள் அறியாதிருப்பீர்கள் என நான் நம்பவில்லை. உலகெங்கிலும் புரட்சிகர அரசியல் முன்னெடுக்கப்படாது முடக்குவதும், அமெரிக்க ஐரோப்பிய பாணியிலான ஜனநாயகத்தையும் சிவில் சமூகத்தையும் அமைப்பதுமே அவர்களது அரசியல் என்பதையும் தாங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்றே நம்புகிறேன். 

 ஐ.என்.எஸ்.டி எனும் அமைப்பு ஜெர்மனியைத் தளமாகக் கொண்ட ஒரு தன்னார்வ அரசு சாரா அமைப்பு. இந்த அமைப்பு இலங்கை அரசியலும் இனப்பிரச்சினையும் தொடர்பான கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. கருத்தரங்குகள் ஜெர்மனியின் பேட் போல் நகரில் அமைந்துள்ள பிராதஸ்தாந்து கிறித்தவ அமைப்பான எவாஞ்ஜலிக் அகாதமி துணையுடன் நடத்தப்பட்டு வருகிறது. Aadhavan 
ஐ.என்.எஸ்.டி அமைப்புக்காக சலுகையில் இக்கருத்தரங்குகளை இந்த அமைப்பு நடத்துகிறது. இக்கருத்தரங்கு தொடர்பு முகவரியாகவும் இந்த அமைப்பினது முகவரியே இக்கருத்தரங்க அழைப்பிதழில் உள்ளது.

உலக தேவாலயக் கூட்டமைப்பிலும் எவாஞ்ஜலிக்கா அகாதமி அங்கம் வகிக்கிறது. ஜெர்மானிய அரசு, இலங்கை அரசு, அரசு சாரா அமைப்புக்கள், பிற ஈடுபாடுள்ள குழுக்கள் போன்றவற்றுக்கு இடையில் புரிந்துணர்வுக்காகவும் ஒத்துழைப்புக்காகவும் இக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. ஜெர்மனியிருந்தும், இலங்கையிலிருந்தும், உலகெங்கிலுமிருந்தும் ஐரோப்பியர்களும் ஆசியர்களும் இக்கருத்தரங்ககளில் பங்கு பெறுகிறார்கள்.

 மேலும் ஜெர்மனியிலும் உலகெங்கிலும் பிராதஸ்தாந்து அறத்தைப் பரப்புவதன் ஒரு பகுதியாகவே இந்தக் கருத்தரங்குகளை இவ்வமைப்பு நடத்தி வருகிறது.

மார்க்ஸியர்களும் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவர்களும் தன்னார்வ அமைப்புக்களின் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் போது எழுப்பப்படும் கேள்விகளையே தங்கள் முன்பாகவும், தங்களோடு அக்கூட்டத்தில் பங்கு பற்றிய, தன்னார்வ நிறுவனங்கள் குறித்து புரட்சிகரமான அறம் பேசுகிற மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழுத்தாளர்களான ச.தமிழ்ச்செல்வன் மற்றும் ஆதவன் தீட்சண்யா முன்பாகவும் முன் வைக்கிறேன்.

தன்னார்வ நிறுவனங்கள் என்கிறபோது அதனது நிதியாதாரம் பற்றிய கேள்விகளை இடதுசாரிகளும் மார்க்சியர்களும் எழுப்புவது தவிர்க்க இயலாதது. பெருமளவிலான நிதிச்செலவுகளோடுவும் பயணச் செலவுகளோடும் உலகெங்கிலும் கருத்தரங்குகளை நடத்தும் ஐ.என்.எஸ்.டியின் நிதியாதாரம் குறித்த ஒரு ஆர்வலரின் கேள்விக்கு ஐ.என்.எஸ்.டி தளத்தில் பதில் சொல்லப் பட்டிருக்கிறது. இலங்கை அரசின் நிதியாதாரத்தில் ஐ.என்.எஸ்.டி இயங்குகிறது என்பது குற்றச்சாட்டு. இலங்கை அரசின் பணத்திலோ அல்லது விடுதலைப் புலிகள் பணத்திலோ ஐ.என்.எஸ்.டி இயங்கவில்லை எனப் பதில் தரப்பட்டிருக்கிறது. திட்டவட்டமாக இதில் ஐ.என்.எஸ்.டியின் நிதியாதாரம் குறித்த பதில் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

எவாஞ்ஜலிகல் அகாதமியாவின் உறவு, நிதி தொடர்பாக எழுந்திருக்கும் கேள்விகள், தமிழர்கள் மீதான இனப்படுகொலை எனச் சிக்கலானதொரு சூழ்நிலையில் தன்னார்வ மற்றும் அரசு சாரா நிறுவனமான ஐ.என்.எஸ்.டி நடத்திய கருத்தரங்கில், மார்க்சியராகத் தம்மை முன்னிறுத்தும் தாங்கள் கலந்து கொண்டதற்கான நிதி ஆதாரம் குறித்த தெளிவுறுத்தலையும், நியாயப்பாட்டையும் அன்புள்ள எஸ்.வி.ஆர் அவர்களே, தாங்கள் முன்வைக்க வேண்டும்.

உலகெங்கிலும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் தமது உரிமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள். இவ்வாறான மக்கள் இயக்கங்களை வழிநடத்துகிறவர்கள், நிறைய அரசியல் தவறுகளும் செய்கிறார்கள்.

மதவழி நின்று இதனை அணுகுகிறவர்கள் இருக்கிறார்கள். வஹாபிசத்தையும் பிராதஸ்தாந்து அணுகுமுறையையும் இந்துத்துவ அணுகுமுறையையும் தீர்வாக முன்வைக்கிற அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். மார்க்சியர்கள் எனத் தம்மைக் கருதிக் கொள்கிறவர்கள் இவ்வழிகளில் பிரச்சினைக்கான தீர்வுகளை முயல்வதில்லை .

 அப்படி எனில், அன்புள்ள எஸ்.வி. ஆர். அவர்களே, தன்னார்வ மற்றும் அரசு சாரா நிறுவனமான ஐ.என்.எஸ்.டி நடத்திய இலங்கைத் தமிழர் தொடர்பான திருவனந்தபுரக் கூட்டப் பங்கேற்பை மார்க்சியர்களாகத் தம்மைக் கருதிக்கொள்ளும் தாங்களோ, தங்களோடு கூட்டத்தில் கலந்துகொண்ட ச.தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா போன்றவர்கள் எவ்வகையில் நியாயப்படுத்த முடியும் எனக் கருதுகிறீர்கள்?

தமிழ்செல்வனுக்கும், ஆதவன் தீட்சண்யாவுக்கும் ஒரு கேள்வியை இங்கே முன்வைக்கிறேன். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உலக தன்னார்வ அரசு சாரா நிறுவனங்களின் எதிர்ப்புரட்சி அரசியல் பற்றி ஒரு நூலையே எழுதியிருக்கிறார்.

புS.Tamilselvanரட்சியாளர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் ச.தமிழ்ச்செல்வனும் ஆதவன் தீட்சண்யாவும், இலங்கை அரசு சார்பான, தன்னார்வ அரசு சாரா நிறுவனக் கருத்தரங்கில் கலந்து கொண்ட தங்கள் நடத்தைக்கு என்ன காரணத்தை முன்வைக்கிறீர்கள்?

அன்புள்ள எஸ்.வி.ஆர் அவர்களே, இறுதியாக ஒரு முக்கியமான கேள்வி. தாங்கள் இலங்கை அரசைக் கடுமையாக எதிர்த்து வருகிறீர்கள். ஐ.என்.எஸ்.டி நடத்தி வரும் இலங்கை தொடர்பான கருத்தரங்குகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வரும் பத்திரிக்கையாளர் பௌஸர் என்பவர் யார் எனத் தங்களுக்குத் தெரியுமா?

அவர் இலங்கை அரசுடன் செயல்பட்டு வரும் ஈ.பி.டி.பி செயலர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஐரோப்பியப் பிரதிநிதிகளில் ஒருவர் என்பது தங்களுக்குத் தெரியுமா?

 பௌஸர் ஆசிரியராக இருந்து நடத்தும் "எதுவரை" இதழில்தான் உங்கள் திருவனந்தபுரச் சிறப்புரை பற்றிய செய்தி வந்ததும், வேறு எந்த இலங்கைத்தமிழ் பத்திரிக்கைகளிலும், ஐ.என்.எஸ்.டி தளம் உள்பட படத்துடன் அந்தச் செய்தி வரவில்லை என்பதும் தங்களுக்குத் தெரியுமா?

 பௌஸர் பெயரிலோ, சுசீந்திரன் பெயரிலோ அக்கட்டுரை வராமல் தாஸ் எனும் அநாமதேயத்தின் பெயரில் அக்கட்டுரை வெளியாகி இருக்கிறது என்பதனையும் தாங்கள் அறிவீர்களா?

தோழர் எஸ்.வி.ஆர். அவர்களே, இலங்கை அரசு சார்பான கொள்கையுடைய தன்னார்வ அரசு சாரா நிறுவனமொன்று இலங்கை அரசியல் தொடர்பாக நடத்தியிருக்கிற திருவனந்தபுரம் கருத்தரங்கில் நீங்கள் கலந்து கொண்டிருப்பதானது தாங்கள் இதுவரை பேசி வந்திருக்கிற புரட்சிகர மார்க்சியத்துக்கு ஒரு களங்கம் என்றே நான் நினைக்கிறேன்.

இது பற்றி எங்களுக்குச் சொல்ல நீங்கள் என்ன பதிலை வைத்திருக்கிறீர்கள்?

மற்றபடி என்றும் போல அன்புடன்,
அசோக் யோகன்.

Pin It