அடுத்தடுத்து கல்வியை இந்திய - பன்னாட்டு ஆதிக்கத்திற்கு உட்படுத்தும் அறிவிப்புகளை இந்திய அரசு வெளியிட்டு வருகின்றது. இந்தி பேசாத மாநில மாணவர்கள் இந்தி படிக்க வேண்டும் என்றும், உயர்கல்வியில் பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கூறிவந்த இந்திய மனிதவள அமைச்சர் கபில்சிபல் இப்போது இத்திசையில் அடுத்த அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி தேசிய ஆணையம், அனைத்திந்திய அளவில் பள்ளிப் பாடத்திட்டம், அனைத்திந்திய அளவில் நுழைவுத் தேர்வு என்று அடுக்கடுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இவையனைத்தும் தேசிய இனங்களின் தனித்தன்மைகளை மறுத்து, மாநில உரிமைகளைப் பறித்து உலகமயத்திற்கு கல்வியைத் திறந்து விடும் உள்நோக்கம் கொண்டவை.

மனித வளத்துறை நிறுவிய வல்லுநர் குழு, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புக்கான தேசிய ஆணையம் குறித்த வரைவை வெளியிட்டுள்ளது. உயர்கல்வியில் திட்டமிடுதல், நிர்வாகம், ஒழுங்குமுறை, நிதிஏற்பாடு உள்ளிட்ட அனைத்தையும் இந்திய மைய அதிகாரத்தில் குவிக்கிற ஏற்பாடே இந்த ஆணையம்.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கல்விக் கொள்ளைக்கு வழிவகுத்த நிலை குறித்து சில வாரங்களுக்கு முன்னால் இந்திய அரசு எழுப்பியக் கூச்சல் உண்மையில் கல்வியின் பால் உள்ள அக்கறையினால் அல்ல, மாறாக இச்சிக்கலை பயன்படுத்திக் கொண்டு உயர்கல்வியை தனது பேராதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான கெட்ட நோக்கத்திற்காக எழுப்பப்பட்டதே என்பது இப்போது தெளிவாகிறது.

உயர்கல்வியில் ஊழல்மயம், அரசியல் குறுக்கீடு ஆகியவற்றை தடுத்து கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கும் நல்ல நோக்கத்திலேயே இவ்வாறான தேசிய ஆணையம் அமைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ள வரைவு சொல்லிக் கொண்டாலும், உண்மை நிலை அதற்கு நேர்மாறாக உள்ளது.

தேசிய உயர்கல்வி ஆணையம், தேர்தல் ஆணையத்தைப் போல உயர் தன்னாட்சி பெற்ற கல்வி நிர்வாக அமைப்பு என்று சொல்லப்பட்டாலும் இந்த வரைவை கூர்ந்து பார்த்தால் அதிகாரமும் ஊழலும் மையப்படுவதற்கே இது வழிவகுக்கும் என்பது புலனாகும்.

ஒரு கல்வியாளர் தலைமையில் ஏழு பேர் கொண்ட ஆணையமாக இந்த உயர்கல்வி ஆணையம் இருக்குமாம். இதற்கு ஆலோசனை வழங்க நோபல் பரிசு பெற்றவர்கள், பல்துறை வல்லுநர்கள், புகழ்பெற்ற கல்வியாளர்கள் ஆகியோரைக் கொண்ட பேரவை ஒன்று நிறுவப்படும் என்று இந்த சட்டவரைவு கூறுகிறது. இப்பேரவையில் அடிப்படை உறுப்பினர்கள் என்று சிலரும் இணைக்கப்பட்ட உறுப்பினர்கள் என்று வேறு சிலரும் இருப்பார்கள். அடிப்படை உறுப்பினர்கள் கூடுதல் அதிகாரம் பெற்றவர்களாகவும் இணை உறுப்பினர்கள் அதிகாரம் குறைந்தவர்களாகவும் இருப்பார்கள். அடிப்படை உறுப்பினர்களை இந்திய அரசு நியமிக்கும். இணை உறுப்பினர்களை மாநில அரசுகளின் ஆலோசனைப் பட்டியலிலிருந்து ஆணையம் பொறுக்கி எடுத்துக் கொள்ளும்.

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் முழுக்க முழுக்க உயர்கல்வி ஆணையத்திடம் மட்டுமே இருக்கும். மாநில அரசுகளின் அரசியல் குறுக்கீட்டிலிருந்து உயர்கல்வியைப் பாதுகாப்பதற்கே இந்த ஏற்பாடு என வரைவுச் சட்டம் கூறிக்கொள்கிறது. மாநில அரசுகளின் அரசியல் குறுக்கீட்டிற்கு துணைவேந்தர் நியமனம் அடிக்கடி உள்ளாகிறது என்பது உண்மையே. ஆனால், இந்திய அரசு நிறுவனமான ஆணைய அதிகாரத்தின் கீழ் துணைவேந்தர் நியமனம் நடைபெற்றால் அங்கே அரசியல் குறுக்கீடு இருக்காது என்று நம்புவதற்கு மக்கள் ஒன்றும் அறியாதவர்களல்ல. இன்றைய தேர்தல் ஆணையர், சி.பி.ஐ. போன்ற நிறுவனங்கள் ஆளுங்கட்சியின் ஆணைக்கு ஏற்ப ஆடுவதை நாடு பார்த்துக் கொண்டுதானிருக்கிறது.

இதே போன்ற நிலை தான், உயர்கல்வி ஆணையத்திற்கும் ஏற்படும்.

மாநில அரசுகள் பல்கலைக்கழகங்கள் நிறுவும் உரிமை இவ்வாணைய அதிகாரத்தின் கீழ் வெகுவாக கட்டுப்படுத்தப்படும்.

உயர்கல்வியை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு திறந்து விடுவதற்கு எந்தத் தடையும் இல்லாத வகையில் இவ்வாறான அதிகாரக்குவியல் உருவாக்கப்படுகிறது. ஏற்கெனவே பல்கலைக்கழக நல்கைக் குழு(ஹி.நி.சி.) தொழில்நுட்பக் கல்வி தேசியக் கழகம், இந்திய மருத்துவக் குழு (வி.சி.மி.) போன்ற பல்வேறு அமைப்புகளின் மூலம் கல்வித்துறையில் மாநில அரசுகளின் அதிகாரம் குறுக்கப்பட்டது. அவசரநிலை காலத்தில் கல்வி அதிகாரம் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நடுவண் அரசின் அதிகாரம் வலுப்பட வழிசெய்யப்பட்டது.

இப்போது நடுவண் அரசிற்குள்ளேயே பல்வேறு துறைகளின் அதிகாரத்தின் கீழிருந்த உயர்கல்வி ஏழு நபர் ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்படுகிறது.

உலகமயமும், இந்தியமயமும் இணைந்து நின்று மாநிலங்களின் கல்வி அதிகாரத்தை பறிக்கின்றன. கேள்வி முறையின்றி உயர்கல்வியை உலகமய வேட்டைக்கு திறந்து விடும் நோக்கில் இந்த அதிகாரக் குவியல் நடக்கிறது. தில்லி ஆளுங்கட்சி கைப்பாவை அமைப்பாக உயர்கல்வி ஆணையத்தை மாற்றும் முயற்சி நடக்கிறது.

இதற்கு ஏற்ப பள்ளிக் கல்வியை இந்திய மயப்படுத்தும் முயற்சி தான் கபில்சிபல் அறிவித்துள்ள ‘தேசியக் கல்வித் திட்டம்’ என்பது. பள்ளிக்கல்வியிலும் தேசிய இனத் தனித்தன்மை, மாநில அரசின் உரிமை ஆகியவற்றை மறுக்கும் திட்டமே இது. புவியியல், உயிரியல், கணிதம் போன்றவற்றில் கூட பா.ச.க. ஆட்சிக் காலத்தில் ஒரே பாடத்திட்டம் என்ற பெயரால் இந்துத்துவ கருத்துகள் புகுத்தப்பட்டதை நாடறியும்.

பல்வேறு தேசிய இன மாநிலங்களின் தனித்தன்மைகள், அவற்றின் குறிப்பான தேவைகள் ஆகியவற்றை மறுத்து ஒற்றைத் தன்மையில் இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் புகுத்தப்பட இது வழிவகுக்கும்.

பள்ளிக்கல்வியின் சி.பி.எஸ்.சி., கேந்திர வித்தயாலயா போன்ற வழிகளில் குறுக்கிட்டது போதாதென்று இப்போது தேசியப் பாடத்திட்டம் என்ற போர்வையில் தனது பிடியை இறுக்குவதற்கு தில்லி அரசு முனைகிறது. இது இந்தித் திணிப்பை இணைத்துக் கொண்டே வரும் என்பது தெளிவு.

கல்வியை இந்தியமயமாக்கும் அடுத்த முயற்சியே அனைத்திந்திய நுழைவுத் தேர்வு என்பதும் ஆகும். தொழில் வகைப் படிப்புகளுக்கு இனி அனைத்திந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருக்கும் சில அனைத்திந்திய நுழைவுத் தேர்வுகள் பெரிதும் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தை ஒட்டியே அமைந்திருக்கின்றன. சி.பி.எஸ்.சி. 12ஆம் வகுப்புப் பாடங்களிலிருந்தே பெரும்பாலான வினாக்கள் கேட்கப்பட்டு, மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் வெளியில் நிறுத்தப்படுவது மெய்நிலையாகும்.

சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் பார்ப்பன - இந்தி மயமான பாடத்திட்டமாகும். தேசிய இனங்கள், சிறுபான்மை மதங்கள் ஆகியவை இப்பாடத் திட்டங்களில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டிருப்பதை கல்வியாளர்கள் பலரும் எடுத்துக்காட்டி இருக்கின்றனர்.

ஆனால், அதனைத் திருத்திக் கொள்ளாமல் அதே திசையிலேயே இன்னும் வேகமாக தில்லி அரசு பயணிக்கிறது என்பதற்கான அடையாளமே இந்த அனைத்திந்திய நுழைவுத் தேர்வுத் திட்டமாகும்.

தமிழகத்தில் நுழைவுத்தேர்வு நீக்கப்பட்ட பிறகு, மருத்துவம், பொறியியல் போன்ற உயர்படிப்புகளில் கிராமப்புற மாணவர்கள் முன்பை விட அதிகம் இடம் பிடிக்க முடிந்திருப்பது மெய்ப்பிக்கப்பட்ட நிலை. இப்போது அனைத்திந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதால் கிராமப்புற மாணவர்கள் மட்டுமின்றி நகர்ப்புறத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் புறந்தள்ளப் படுவார்கள்.

இந் நுழைவுத்தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமின்றி இந்தியிலும் நடைபெறும் என்பது திண்ணம். தமிழ்நாட்டு அரசு சார் உயர்கல்வி நிறுவனங்களில் வடநாட்டு மாணவர்கள் அதிகமாக இடம் பிடிப்பதற்கு இது வழி ஏற்படுத்தும்.

ஏற்கெனவே உயர்கல்வியில் தன்நிதிக் கல்லூரிகள் கோலோச்சுவதன் காரணமாக கேள்வி முறையின்றி வெளிமாநில மாணவர்கள் தமிழ்நாட்டிற்குள் பெரும் எண்ணிக்கையில் புகுந்து இனச் சமநிலையை சீர்குலைத்தது போதாதென்று அரசு சார் கல்லூரிகளிலும் வெளியார் குவிவது தீவிரப்படும். தமிழக மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு இன்னும் சுருக்கப்படும்.

உயர்கல்வி ஆணையம், அனைத்திந்தியப் பள்ளிப் பாடத்திட்டம், அனைத்திந்திய நுழைவுத் தேர்வு ஆகிய இந்த அறிவிப்புகள் ஒன்றுக்கொன்று ஒத்திசைவானவை. தேசிய இன உரிமைகளைப் பறிக்கும் நோக்கம் கொண்டவை. உலகமய வேட்டைக்கும் வெளியார் ஆதிக்கத்திற்கும் வழி ஏற்படுத்துபவை. எனவே, இந்திய அரசின் இந்த அறிவிப்புகளை தமிழ்நாட்டு மாணவர்களும், அனைத்து சனநாயக சக்திகளும் ஒன்றிணைந்துப் போராடி முறியடிக்க வேண்டும்.

- கி.வெங்கட்ராமன் (தமிழ்த் தேசத் தமிழர் கண்ணோட்டம் மார்ச் 2010 இதழில் வெளியான கட்டுரை)

Comments

2 comments

2
sundararajan
Generally your approches towards all the problems comes out from the linguistic nationality. But you are not ready to claim the same,why? It shows that you know pretty well linguistic nationality could not be established at this juncture.The other way solution for all our problems are distribution of power from Panchayet to Parliament with definite unequivocal decesive power.No political party or organisation is ready to share power with the people.
nagasundaram
anniya naattup palkalaik kazhagangalai indhiyaavil seyalpada anumathippathu aabaththaanathu. nam naatup palkalaikkazhagangalaith tharam kuraiyach cheivathu.indhiya maanavargalai moolai ch chalavai seyvathu. uyar vasathi ullavargal mattume uyar kalvi padikka vazhikoluvathu. indha anumathiyai anaivarum ethirkka vendum.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.