காட்ஸ் குறித்து முன்னாள் கல்வி அமைச்சர் திரு. அரங்கநாயகம் தமிழ் இந்து பத்திரிக்கையில் தெரிவித்த கருத்துகளுக்கு மறுப்புரை

காட்ஸ் ஒப்பந்தம் முன் வைக்கும் இந்திய கல்விக் கொள்கைக்கான அம்சங்களை எதிர்ப்பது குறிப்பாக இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் நுழைவதை எதிர்ப்பது என்பது பகுத்தறிவுக்குப் போடப்படும் தடை அல்ல. மாறாக இந்த அரசியல் சாசனமே சொல்லிக் கொண்டபடி, மக்களுக்கான உரிமையாக இருக்கின்ற கல்வியைக் காக்கும் தலையாய கடமையாகும். ஏற்கனவே நம் நாட்டில் 80களின் இறுதிவாக்கில் புகுத்தப்பட்ட தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கைகளின் விளைவாக கல்வி என்பது உரிமை எனும் நிலையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு விற்றுத் தீர்க்கும் பண்டமாக சிதைக்கப்பட்டு வருகிறது. இதே காலகட்டத்தில் தான் அரசுக் கல்வியைத் தவிர தனியார் வழங்கும் மெட்ரிக் போன்ற பல்வேறு கல்விப் பாடத்திட்டங்கள் தரம் எனும் பெயரில் படுவேகமாக புகுத்தப்பட்டன. இன்றைக்கு அதே தரம் என்ற பெயரில் இத்துணை ஆயிரங்களை கட்டு என்று சொல்லும் கட்டணக் கொள்ளையை எதிர்த்து மக்கள் நீதிமன்றங்களின் படியேறியிருக்கிறார்கள்.

சிங்கார வேலர் கமிட்டியின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தும் பரிந்துரைகளைக் கூட அமல்படுத்தமுடியாத அளவிற்கு தனியார்மயத்தின் கோரமுகமும் அரசின் பாராமுகமும் இங்கே தாண்டவாமாடுகிறது. இதன் தொடர்ச்சியாக உயர்கல்வியிலும் தனியார்மயம் அனுமதிக்கப்பட்டது. இதன் விளைவு இன்று புற்றீசல் போல இந்தியா முழுவதும் முளைத்திருக்கும் ஆயிரக்கணக்கான தனியார் உயர்கல்வி நிறுவனங்கள். அதில் படிப்பதற்காக வாங்கிய கல்விக்கடனை கட்டமுடியாமல் உழைக்கும் வர்க்க பின்புலத்திலிருந்து உயர் கல்வி கற்க வந்த ஏராளமான மாணவர்களும் பெற்றோர்கள் தவிக்கின்றனர்.

இந்நிலையில் காட்ஸ் முன்தள்ளும் கல்வித்துறை சீர்த்திருத்தங்கள் நம்நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை கல்வியிலிருந்து முற்றிலும் ஒதுக்கி வைக்க எத்தனிக்கிறது. ஏற்கனவே நமது உயர்கல்வியானது சாதியப்படிநிலையிலும் பொருளாதார ரீதியிலும் பின்தங்கியிருக்கும் பெரும்பான்மையான மக்களுக்கு மூடுண்ட அமைப்பாகத்தான் இருக்கிறது. தற்பொழுது காட்ஸ் ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக புதிய கல்விக்கொள்கை-2015 மோடி அரசு உருவாக்கியுள்ளது. அதன் மிக முக்கியமான சரத்துகளில் ஒன்று, எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தொழில் சார்ந்த பட்டயப் படிப்பை கட்டாயப்படுத்துகிறது. இதன் மூலம் ஏராளமான திறன்மிகு உழைப்பு சக்திகளை உருவாக்கி மேக் இன் இந்தியா திட்டத்திற்கு பயன்படுத்த முடியும் என இந்திய அரசு கூறுகிறது.

சாதியப் படிநிலையும் பொருளாதார ஏற்றத்தாழ்வையும் பின்புலமாக கொண்ட இந்திய சமூகத்தில் காசு உள்ளவனுக்கு மட்டுமே கல்வி என்ற தற்போதைய நிலையில் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தொழில் சார்ந்த பட்டயப் படிப்பை முன்வைப்பதன் வாயிலாக உயர்கல்வியிலிருந்து பெரும்பான்மையானவர்களை அகற்றி ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே உயர்கல்வி என்பதை மோடி அரசு காட்ஸ் வாயிலாக உறுதி செய்கிறது. இது ஒரு வகையில் குலத்தொழிலை நடைமுறைக்கு கொண்டுவருமே தவிர சிறந்த அறிவாளிகளை-விஞ்ஞானிகளை உருவாக்காது. ஆனால் யதார்த்தத்திற்கு முரணாக திரு அரங்கநாதனோ காட்ஸில் கையெழுத்திடுவதின் மூலம், நோபல் பரிசு வாங்கக்கூடிய விஞ்ஞானிகளை இந்தியாவில் உருவாக்க முடியும் என வாதிடுகிறார்.

காட்ஸ் முன்மொழிகிற மற்றொரு பாதகமான விசயம் leveling of play field. இதன்படி, கல்லூரி மேம்பாட்டிற்காக பல்கலைக்கழக மானியக் குழுவிலிருந்து (யூ.ஜி.சி) எவ்வளவு நிதி அரசு பல்கலைக்கழங்களுக்கு கொடுக்கப்படுகிறதோ அதே அளவு நிதியை வெளிநாட்டு பல்கலைக்கழங்களுக்கும் வழங்க வேண்டும். அதாவது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 75 கோடியை யூ.ஜி.சி வழங்கினால் அதே அளவு நிதியை இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டு ட்ரைவாலி போன்ற உப்புமா பல்கலைக்கழகத்திற்கும் வழங்க வேண்டும். பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி ஏற்கனவே கல்விக்கான மானியங்களை குறைத்துக்கொண்டிருக்கிறது இந்திய அரசு. காட்ஸின் மேற்கண்ட நிபந்தனை கல்விக்கான மானியத்தையே முற்றிலுமாக நிறுத்த வழிவகை செய்யும். இதன் மூலம் ஏகாதிபத்தியங்கள் கொள்ளை இலாபமடைய முடியுமே தவிர நோபல் பரிசுவாங்கும் தகுதியான விஞ்ஞானிகள் எக்காலத்திலும் உருவாக முடியாது. மேலும் இங்குள்ள தானியார் பல்கலைக்கழகங்கள் ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் ஏற்கனவே போட்டுள்ளன. SRM, VIT, AMITY, LOVELY பல்கலைக்கழகங்கள் என ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கல்வி நிலையங்களை தொடங்கும் போது இங்குள்ள பல்கலைக்கழகங்கள் அவர்களுக்கு உற்ற நண்பனாக இருப்பதன் மூலம் தங்களுடைய இருப்பை உறுதி செய்வதோடு மட்டுமில்லாது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களோடு சேர்ந்து கொள்ளை இலாபமடிக்கவே செய்வார்கள். Trade Policy Review Mechanism (TPRM), Independent Regulatory Authority (IRA) போன்றவைகளின் மூலம் கல்வி சம்பந்தமாக நாடாளுமன்றம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளையும் காட்ஸ் கண்காணிக்கும். மேற்கண்ட அமைப்புகளின் ஒப்புதல் பெற்ற பிறகே கல்வி சம்பந்தமான முடிவுகளை அரசு வெளியிட முடியும். இவைகளின் நோக்கமே ஏகாதிபத்தியங்களின் கொள்ளை இலாபத்திற்கு எந்த இடையூறும் வராமல் அரசின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தான். இன்னும் தெளிவாகக் கூறினால் இந்திய நாட்டின் இறையாண்மையே ஒழிக்கப்ப்டும். எனவே கல்விக்கான ஊக்கத்தொகைகள், இடஒதுக்கீடு, மானியங்கள் போன்ற சமூகநீதிக்கான வாய்ப்புகள் அனைத்தும் இல்லாதொழிக்கப்படும்.

காட்ஸ், கல்வியை ஒரு வியாபார பொருளாகவே வரையறுக்கிறது. ஆனால் திரு அரங்கநாதனோ “மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” எனக் கூறுகிறார். மிகச் சமீபத்தின் அரசின் அறிவுப்புகள் கூட காட்ஸ் ஒப்பந்தத்தை அடியொற்றியவையே. பள்ளிக்கல்வியில் வெக்கஷனல் பாடத்திட்டத்தையும் அதன் வழியாக குலக்கல்வித் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது, என்.ஐடிக்களில் மாணவர்களின் கல்வி கட்டணம் சில இலட்சங்களில் நிர்ணயிக்கப்படுவது, தேசிய திறனறித்தேர்வு அல்லாத உதவித்தொகையை(UGC non-net fellowship) இரத்து செய்தது, சி.எஸ்.ஐ.ஆர் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கலில் இருந்து அரசு விலகி விட்டு பன்னாட்டு மூலதனத்திற்கு தாரைவார்த்தது என கல்வித்துறை சந்தித்துவரும் தாக்குதல்கள் கொடுமையானவை.

இந்நிலையில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியா வந்தால் கல்வியின் தரம் உயரும் என்று சொல்பவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டில் எது போன்று இயங்குகிறது என்பதற்கு முகம் கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் செயல்படும் பல்கலைக்கழகங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்வதில் இருந்து அரசு தனது பொறுப்பை கைகழுவிக்கொண்டு மாணவர்களைக் கல்விக்கடனை நோக்கி தள்ளி விட்டது. அமெரிக்காவில் 43 மில்லியன் மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் தொகை மட்டுமே 1.3 டிரில்லியன் டாலர்களாகும். 2006லிருந்து தற்போது வரை இந்தக் கடன் தொகையின் வீதம் அமெரிக்காவில் 300 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இதுதவிர அமெரிக்க பல்கலைக்கழகங்கள் முதன்மையாக கார்ப்பரேட்டுகளின் தயவிலும் முன்னாள் மாணவர்கள் வழங்கும் நன்கொடை மூலமாகவும் செயல்படுகின்றன. இதன் அபாயகரமான விளைவுகளை பொருளாதார நெருக்கடிக்கு பிந்தைய காலத்தில் அமெரிக்க மாணவர்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அனுபவித்து வருகின்றனர். இதே மாடலைத்தான் காட்ஸ் இந்தியாவிலும் அமல்படுத்தத் துடிக்கிறது.

நாட்டில் 80%க்கு மேற்பட்டோர் வறியவர்களாக இருக்கும் பொழுது, இந்திய உயர்கல்வித்துறையை அக்குவேறு ஆணிவேறாக தனியார் துறைக்கும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கும் திறந்துவிடுவது யாருடைய நலன்களைப் பிரதிபலிப்பதாக இருக்கும்? அதிலும் திரு. அரங்கநாயகம் அவர்கள் போர்டு நிறுவனம் இங்கு வந்து தயாரிக்கும் கார் என்பது வேறு; கேம்ப்ரிட்ஜ் இங்கு கல்வி கொடுப்பது வேறு; கார் தங்காது; ஆனால் கல்வி இங்கு தங்கும் என்று பகுத்தறிவான வாதம் ஒன்றை முன் வைக்கிறார். கல்வி தங்குமா? தங்காதா? என்பது ஒருவாதம் தான். ஆனால் காசுள்ளவனுக்குத்தான் கல்வி என்பது ஒரு மக்கள் நல அரசின் இலட்சணமாக இருக்க முடியுமா? என்பது நாம் பரிசீலிக்க வேண்டிய மையமான கேள்வி. இந்த கேள்வியே அடிபட்டு போய்விட்டால் இங்கு தங்குகிற கல்வி என்ன நிலையில் யாருக்காக எதற்காக தங்கும்? என்பது விளக்கித் தெரியவேண்டியதில்லை.

இங்கே உள்ள முக்கியமான முரண்பாடே கல்வியைச் கடைச்சரக்காக்கி அதன் மூலம் கொள்ளை இலாபமடிக்க துடிக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் அதனை எதிர்த்துப் போராடும் பெரும்பன்மையான உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையே உள்ள முரண்பாடேயாகும். ஆனால் இதை ஏதோ சுயநிதி கல்லூரிகளை வைத்துள்ள அரசியல்வாதிகளுக்கும் கல்வியறிவை அடையத் துடிக்கின்ற மாணவர்களுக்கும் இடையேயான பிரச்சனையாகக் காட்டுகிறார் திரு. அரங்கநாதன். அதாவது பிரச்சனையின் மையஓட்டத்தை மடை மாற்றுவதன் மூலம் ஏகாதிபத்தியங்கள் இந்திய கல்விச் சந்தையை சூறையாடுவதையும் பெரும்பான்மையானவர்கள் கல்வியிலிருந்து விலக்கி வைக்கப்படுவதையும் ஆதரிக்கிறார்.

காட்ஸ்-புதிய கல்வி கொள்கை 2015 வெறும் கல்வியை சந்தைப் பொருளாக மாற்றுகிறது என்பதைத் தாண்டி அது ஒட்டுமொத்த இந்திய அறிவு துறையையே, சிந்தனை முறையையே ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள மறுகாலனியாக்க கொள்கைகளுக்கு ஏற்ப வடிவமைக்கிறது. இதனை எதிர்த்து மாணவர்கள், ஜனநாயக சக்திகள், மற்றும் உழைக்கும் மக்கள் என அனைவரும் போராடுவது தான் காலத்தின் தேவை மட்டுமல்ல பகுத்தறிவுமாகும். பெரியாரின் மண்ணான தமிழ்நாடு இப்போராட்டத்தில் முன்னிலை வகிப்பதாக திரு. அரங்கநாயகம் கூறுவது அவ்வகையில் நம்மண்ணுக்கு பெருமைதான்.

- அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் (ஐ.ஐ.டி - சென்னை)

Pin It