கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- நா.ராஜேந்திர பிரசாத்
- பிரிவு: தொழில்நுட்பம்
கதிரியக்கமானது மின்காந்த ஆற்றல் (உ.ம்: காமா மற்றும் எக்ஸ் - கதிர்கள்) மற்றும் துகள் கதிர்களால் (உ.ம்: நியூட்ரான் மற்றும் ஆல்பா துகள்கள்) ஆனது. கதிரியக்கம் அது செல்லும் பாதையில் உள்ள பொருட்களின் மீது ஆற்றலைக் குவித்து அயனியாக்கம் செய்கிறது.
கதிரியக்கம் உயிரினங்களில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. கதிரியக்கம் உயிரியல் மூலக்கூறுகளை தாக்கி சேதப்படுத்துகிறது. மிக முக்கியமாக மரபணு மூலக்கூறுகளான நியூக்ளிக் அமிலங்களை (DNA) நேரடியாகவோ (கதிரியக்க ஆற்றலை நியூக்ளிக் அமிலங்களின் மீது குவித்து சேதப்படுத்துதல்) மறைமுகமாக செல்களில் உள்ள நீரினை நீராற்பகுத்து தனிநிலை மூலக்கூறுகளை (DNA) உருவாக்குவதன் மூலமாகவோ சேதமடையச் செய்கிறது.
கதிரியக்கம் உண்டாக்கிய நியூக்ளிக் அமில சேதமானது செல்களில் தன்னிச்சையாக இயற்கையான முறையில் சரிசெய்யப்படுகிறது. கதிரியக்கம் உருவாக்கிய DNA சேதம் செல்களின் சரிசெய்யக்கூடிய அளவினைத் தாண்டும்பொது மரபணுவில் நிரந்தரமான முடக்கம் (mutation) ஏற்பட்டு புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கு வகை செய்கிறது. இது பெரும்பாலும் கதிரியக்கம் தொடர்ச்சியாக உயிரினங்ககளின் மீது பாய்ச்சப்படும்போது நிகழ்கிறது.
கதரியக்கம் புற்றுநோயை உருவாக்குகிறது என்ற போதிலும் அதே கதிரியக்கமானது (உ.ம்: X -கதிர்கள்ஃ கொபால்ட் கதிர்கள்) பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. சுமார் 80 சதவிகித புற்றுநோயாளிகள் அறுவைசிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் (chemotherapy) மட்டுமல்லாது கதிரியக்க சிகிச்சையும் மேற்கொள்கின்றனர். புற்றுநோய்க்காக கொடுக்கப்படும் கதிரியக்கத்தின் பக்கவிளைவாக இரண்டாம்வகை புற்றுநோயினை உருவாக்கக்கூடிய வாய்ப்புகளும் அதிக அளவில் உள்ளது. முக்கியமாக கதிரியக்கமானது இரத்தப் புற்றுநோயை உருவாக்குகிறது.
எல்லா செல்களிலும் கதிரியக்கம் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. கதிரியக்கமானது உடலின் வெவ்வேறு உறுப்புகளில் வெவ்வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. முக்கியமாக மிக விரைவான வளர்ச்சித்திறன் கொண்ட செல்களான இரத்த செல்கள் (குறிப்பாக வெள்ளையணுக்கள்) மற்றும் எலும்பு மஜ்ஜை செல்களில் மிக அதிக விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதனைத் தொடர்ந்து விந்தணு செல்கள் மற்றும் குடல் எபீதிலிய செல்கள் கதிரியக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. விந்தணுக்களின் எண்ணிக்கையை கதிரியக்கம் வெகுவாக குறைக்கிறது. இது மலட்டுத் தன்மைக்குக் காரணமாகிறது. குடல் எபிதிலிய செல்கள் கதரியக்கத்தால் வெகுவாக பாதிக்கப்படுவதால் இந்த செல்களில் உணவு மற்றும் ஊட்டங்களை உறிஞ்சும் ஆற்றல் குறைகிறது. இதனால் கதிரியக்கம் தாக்கப்பட்ட மனிதனின் பொதுவான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு வகையான தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தோல் மற்றும் நரம்பு செல்கள் மிக அதிக அளவில் கதிரியக்கத்தால் பாதிக்கப்படுகிறது.
ஒருமுறை கதிரியக்கம் உடலில் செலுத்தப்பட்டாலும் அது அதனுடைய விளைவுகளை உடலில் உடனடியாகவோ அல்லது தாமதமாகவோ உயிர்வாழ்வினங்களில் ஏற்படுத்துகிறது. சில உடனடி விளைவுகளான வாந்தி, மயக்கம், காய்ச்சல் மற்றும் இரத்த செல்களில் மாறுபாடு, சிறுகுடல் புண், எலும்பு மஜ்ஜை சேதம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
இதைத்தவிர கதிரியக்கமானது நீண்ட கால விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியது. கதிரியக்கத்தின் தாக்குதலுக்கு தொடர்ச்சியாக உட்படும்பொது இரத்தப் புற்றுநோய் (leukemia), எலும்பு புற்றுநோய், தைராய்டு சுரப்பி புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆகியவை உருவாகின்றது. மேலும் கதிரியக்கத்தால் மரபணு செல்களில் ஏற்படும் மாற்றமானது குறைபாடுகளுடன் உடைய குழந்தைகள் பிறக்கக் காரணமாகின்றது. விரைவாக வளரும் கருவின் செல்கள் கதிரியக்கத்தின் தாக்குதலுக்கு வெகுவாக உட்படுகிறது. கர்ப்பிணிகள் கதிரியக்கத்தின் தாக்குதலக்கு உள்ளாகும்போது உடல் வளர்ச்சிக் குறைபாடு மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறக்கின்றன. மேலும் இந்தக் குழந்தைகள் எதிர்காலத்தில் எளிதாக புற்றுநோயின் தாக்குதலுக்கு உட்படுகின்றன.
நியூக்ளியர் அணு உலைகளுக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் கதிரியக்கத்தின் தாக்குதலால் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். அணு உலைகளிலிருந்து வெளியேறும் கதிரியக்க சீசியம் மற்றும் கதிரியக்க அயோடின் போன்றவை அணு உலைகளுக்கு அருகாமையில் வசிக்கும் உயிரினங்களில் மிக அதிக அளவில் பாதிப்புகளை நிச்சயமாக உருவாக்கும்.
- விவரங்கள்
- இராசேந்திர சோழன்
- பிரிவு: தொழில்நுட்பம்
அணுகுண்டு தயாரிப்பும், அணுமின் உற்பத்திக்காக வெப்பத்தை உற்பத்தி செய்யும் அணு உலையும் அடிப்படையில் ஒரே தத்துவத்தைக் கொண்டது என்றும், அணுகுண்டு என்பது கட்டுப்பாடற்ற ஒரு முழு வீச்சான செயல்முறை என்றும், ஆனால் அணு உலையில் இந்தக் கட்டுப்பாடற்ற இயக்கத்தைக் கட்டுப்படுத்தவே தணிப்பான்கள் (Moderators) பயன்படுத்தப்படுகின்றன என்றும் ஏற்கெனவே பார்த்தோம். இந்த தணிப்பான்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் ஒவ்வோர் அணு உலையும், ஒவ்வோர் அணு குண்டுக்கு ஒப்பானதுதான் என்று சொல்லலாம்.
இன்று உலகில் அணுசக்தித் தொழில் நுட்பம் எவ்வளவோ வளர்ந்திருப்பதாகவும், மேலும் மேலும் பாதுகாப்பான, பல புதிய வடிவமைப்பில் அணு உலைகள் தயார் செய்யப்படுவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது என்றாலும், அதன் அடிப்படை எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் பொருளின் அணுக் கருவை நியூட்ரான் துகள்களைக் கொண்டு தாக்கி, தொடர் நிகழ்வினை உண்டுபண்ணி, அதன் மூலம் அளவு கடந்த வெப்பத்தை உருவாக்குவதே; அந்த வெப்பத்தைக் கொண்டு வெளிக் குழாயில் உள்ள நீரை ஆவியாக்கி, அதன் மூலம் டர்பைனை இயக்கி ஜெனரேட்டரைக் கொண்டு மின் சக்தியைப் பெறுவதே.
இதில் எவ்வெவ்வகையான வடிவமைப்புகள் கொண்ட அணு உலைகள், எவ்வெவ் வகையில் செயல்படுகின்றன என்கிற உள்ளார்ந்த தொழில் நுட்பங்கள் பற்றிய விவரங்களைப் போதுமான அளவு நாம் அறிய வாய்ப்பில்லை என்றாலும் இன்று பத்திரிகை, மற்றும் இதழ்களில் வெளி வந்திருக்கும் விவரங்களைப் பார்க்க, அணுசக்தித் தயாரிப்பு என்பது மூன்று வகை உலைகளில் நடைபெறுவதாகப் புலனாகிறது.
1. யுரேனியம் 235ஐ எரிபொருளாகக் கொண்டு செயல்படும் அணு உலை இது. இது 440 மெகாவாட் திறன் கொண்டதும், 1000 மெகாவாட் திறன் கொண்டதுமான இரண்டு வகைப்பட்டதாக வடிவமைக்கப்படுகிறது. இதில் கன நீரை தணிப்பானாகப் பயன்படுத்துவது Water Electricity Reactor - WER எனப்படுகிறது. இத்துடன் நீரைக் குளிர்விப்பியாகவும் தணிப்பானாகவும் கொண்ட Water Cooled Water Moderated Energy Reactor என்னும்ஒரு வகையும் செயல்படுத்தப் படுகிறது. இதுவே, WWER எனவும், VVER எனவும் அழைக்கப் படுகிறது. மற்றொன்று, கிராஃபைட்-ஐத் தணிப்பானாகப் பயன்படுத்துவது. இது RBMK என அழைக்கப் படுகிறது. இந்த அணு உலை ருஷ்யத் தொழில் நுட்ப அடிப்படையில் செயல்படுவதாகும்.எனவே ஆங்கிலத்தில் High Power Channel Type Reactor என அழைக்கப்படும் இது ருஷ்ய மொழியில் Reaktor Bolshoy Moschnosti Knalniy-RBMK என அழைக்கப்படுகிறது. செர்னோபில் விபத்துக்குள்ளானது இவ்வகை அணு உலையே என்றும் அதனால் அதனின்றும் பாதுகாப்பாக வடிவமைக்கப் பட்டதே (VVER) அணு உலை எனவும் சொல்லப்படுகிறது.
2. யுரேனியம் 235ஐ எரிபொருளாகப் பயன்படுத்தும், முதல்வகை அணு உலைகளில் ஏற்படும் கழிவான புளூடோனியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துவது இரண்டாவது வகைப்பட்ட உலையாகும். இது முதல் வகைப்பட்ட அணு உலையை விடவும் அதிக அளவு ஆற்றலையும் வெப்பத்தையும் தர வல்லது. இதை அதிவேக ஈனுலைகள் (Fast Breeder Reactor -சுருக்கமாக FBR) என்கிறார்கள். இந்தத் தொழில் நுட்பம் இதுவரை எந்த நாட்டிலும் வெற்றிகரமாக, அதாவது இடையூறின்றியும், விபத்தின்றியும், பாதுகாப்பாகவும் நிறைவேறியதாகத் தெரியவில்லை. அடிக்கடி பணி முடக்கம், சிறு சிறு விபத்துகள், கசிவுகள் என்பன சாதாரண நிகழ்ச்சிகளாகிப் போய், இப்படிப்பட்ட இடையூறுகளுடனேயே இவை இயங்கி வருகின்றன.
3. இரண்டாவது வகை அணு உலைகளில் அதாவது FBR உலைகளில் வெளிப்படும் கழிவுகளான, எரிபொருளாகப் பயன்படாது போன, ப்ளூட்டோனியம் மற்றும் தோரியத்திலிருந்து பெறப்படும் யுரேனியம் - 233. இவற்றில் தோரியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் அணு உலை இந்த மூன்றாவது வகைப்பட்டதாகும். இது இன்னும் எந்த அளவுக்கு நடைமுறையாக்கப்பட்டுள்ளது என்றும், இப்படிப்பட்ட உலைகளுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.
ஆனால், எந்த ஓர்அணு உலை வடிவமைப்பிலும், அந்த அணு உலையில் பயன்படுத்தும் தணிப்பான் அணு உலை வெப்பத்தைத் தாங்கி வெளிவந்து சாதாரண நீருக்கு தந்து, செல்லும் குழாயில் பயன்படுத்தப்படும் நீர், அணு உலையில் பயன்படுத்தப்படும் எரிபொருள், இவற்றின் தன்மை அல்லது பயன்பாட்டு முறைக்கேற்ப இவற்றிற்கான பெயர்கள் வைக்கப்படுகின்றன. இது பற்றிய உள் விவரங்களைத் தெரிந்து கொண்டு அணு உலைகளை, அவற்றின் இயக்க முறைகளுக்கு ஏற்ப வகைப்பிரிவு செய்யப் போதுமான விவங்களை ஆராய வேண்டியுள்ளது. ஆராய்வோம்.
ஆனால், எல்லா உலைகளுக்கும் பொதுவானது என்று இதுவரை வளர்ந்து வந்துள்ள விஞ்ஞானத் தொழில்நுட்பம் என்பது பொதுவாக ஒன்று உண்டு. அந்தத் தொழில்நுட்பம், அணுசக்தி உற்பத்தியில் இதுவரை தொட்டுள்ள எல்லைகள், தொடாத எல்லைகள் எது என்பதே இத்தொழில் நுட்ப விஷயத்தில் பிரதானமாய் நமக்கு முன் உள்ள கேள்வி.
முதலாவதாக, அணுக் கருப் பிளவு என்பது அளவு கடந்த, அபரிதமான வெப்ப ஆற்றலை மட்டும் தரவில்லை. மாறாக, அது அபாயகரமான அழிக்க முடியாத கதிரியக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. எனவே, இன்றுள்ள அணுசக்தித் தொழில்நுட்பம் என்பது கதிரியக்கமற்ற அணுக் கருப் பிளவு பற்றியோ, அணுசக்தியைப் பற்றியோ பேசவில்லை. மாறாக, கதிரியக்கத்தோடு கூடிய வெப்ப ஆற்றலைப் பற்றி மட்டுமே பேசுகிறது. எனவே, எப்படிப்பட்ட வடிவமைப்பு கொண்ட உலை யானாலும், அது எவ்வளவு நவீனத் தன்மை கொண்ட தானாலும், அது பேசுவதெல்லாம் இந்தக் கதிரியக்கத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது பற்றி மட்டும்தானே தவிர, கதிரியக்கமே இல்லாத அல்லது தோன்ற முடியாத ஒரு தொழில் நுட்பத்தைப் பற்றி அது பேசவில்லை.
காரணம், இக் கதிரியக்கம் என்பது அத்தனிமத்தின் இயற்கைப் பண்பு. அதாவது, பழுத்த பழம் மணம் வீசுவதைப் போல, ஒரு குறிப்பிட்ட அணுப் பொருண்மை கொண்ட தனிமங்களெல்லாம் இயற்கையிலேயே கதிரியக்கத் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. இயற்கையில் மிக மெதுவான, சீரான, பரவலான அளவில் உள்ள இக்கதிரியக்கம் அணுக்கருப் பிளவின் போது அபரிமிதமாகவும், ஒருங்கு குவிக்கப்பட்டதுமாகவும்,ஒரே நேரத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. எனவே இது கட்டுப்பாடற்றதாக, தடுத்து நிறுத்த முடியாததாக இருக்கிறது என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.
இரண்டாவதாக, இக்கதிரியக்கத்தை அழிக்க முடியாது என்று சொல்வதன் காரணம், அது ஆற்றலின் அழியாமை விதி போல, ஓர் ஆற்றல் இன்னோர் ஆற்றலாக உடனடியாக மாற்றப்படுவது போல, இக்கதிரியக்க ஆற்றலை உடனடியாக வேறு ஓர் ஆற்றலாக மாற்றிவிட முடியாது என்பதுதான்.
உதாரணமாக, கதிரியக்கம் பரவிய சுற்றுச் சூழலில் இக்கதிரியக்கம் சுற்றிலுமுள்ள உயிரினங்களை, மனிதர்களை, விலங்குகளை, தாவரங்களைப் பாதிக்கும்; காற்றைப் பாதிக்கும். இதிலிருந்து மறைந்து கொள்வது அல்லது ஒளிந்து கொள்வது, தப்பித்துக் கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. காரணம், இது கனமான கான்க்ரீட் கட்டடங்களையும் தாண்டி ஊடுருவ வல்லது. அதுவும் சாதாரண வேகத்தில் அல்ல, ஒளியின் வேகத்தில் நம் கண்ணுக்குத் தெரியாமல்.
இப்படிப் பரவிய கதிரியக்கமானது ஏதோ சில மணிநேரம் அல்லது ஒரு நாள் இரண்டு நாள் கிடந்து பிறகு மறைந்துபோய் விடுமா? விடாது. மண்ணில் பரவிய கதிரியக்கம் அது முளைக்கும் புல்லில், அந்தப் புல்லைத் தின்னும் மாட்டில், அது கறக்கும் பாலில், அதன் இறைச்சியில், இப்படித் தாவித் தாவி மாறிக்கொண்டே உயிருடன் இருக்கும். சரி. இப்படி உயிராயிருக்கிறதே என்று எரித்துத் தொலைக்க முயன்றாலும் அது காற்றில் கலந்து நம் சுவாசத்தில் கலந்து உள்ளே புகுந்துவிடும். அந்த அளவுக்கு அபாயகரமானது இந்தக் கதிரியக்கம். கதிரியக்கத்தின் இப்படிப்பட்ட அபாயம் பற்றி இன்றுள்ள எந்த விஞ்ஞானமும் மறுக்கவில்லை.
அடுத்து, இப்படியெல்லாம் அபாயம் நிறைந்த ஒரு அணுசக்தி நிலையத்தைக் கட்டி முடிக்க 15 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகும் என்கிறார்கள். அதாவது இது அடிக்கல் நாட்டியதிலிருந்து, அணு உலையைக் கட்டி முடித்து அது செயல்படத் துவங்கும் தன்மையை எட்டுவது வரை உள்ள காலப்பகுதியாகும். இப்படி ஓர் அணு உலை செயல்பாட்டு நிலையை அடைவதை Critical Stage என்கிறார்கள். இந்த நிலையை அடைந்தபிறகே ஒரு அணு உலை செயல்படத் துவங்கும். அதாவது எரிபொருளைப் பிளந்து வெப்பத்தை வெளிப்படுத்தும் பணியைத் துவங்கும்.
இப்படிப்பட்ட பணி துவங்கியபின் அது எத்தனை ஆண்டுகள் செயல்படும் என்று நினைக்கிறீர்கள்? 25 முதல் 30 ஆண்டுகள் வரை மட்டுமே. அதற்கு மேல் இவ்வுலை இயங்க முடியாதாம். வேறு உலைதான் கட்ட வேண்டுமாம்.
சரி. இந்த உலை பயன்படாது என்றால் அதை அப்படியே விட்டுவிட்டு வேறு உலை கட்ட முடியுமா என்றால் அதுவும் முடியாது. பயன்படுத்திய உலை அபரிதமான கதிரியக்கத் திரட்சிக்கு உள்ளானதாயுள்ளதால், அதன் மீது மிக மிக கனமான கான்கீரிட் சமாதி கட்டி அதைப் பாதுகாப்பாக மூடித்தான் அதன் அபாயத்தைத் தணிக்க முடியுமாம். இப்படித் தணிக்காவிட்டால் அது ஏற்படுத்தும் விளைவுகள் அபாயகரமானதாய் இருக்குமாம்.
சரி. இப்படி 15 - 20 ஆண்டு கால சிரமத்தில் உருவாக்கி 25 - 30 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்தி மீண்டும் சமாதியாக்கிக் கல்லறை கட்டப்பட வேண்டிய நிலையில் உள்ள இந்த அணு உலை, அது செயல்படும் நாளிலாவது அபாயமின்றி இருக்குமா என்றால் அதுவும் இருக்காது. காரணம், அணு உலை செயல்படும்போது, முறைப்படுத்தி சரியாய் இயங்காவிட்டால் அணு உலை அணுகுண்டாய் மாறும் அபாயம் இருக்கிறது.
அணு உலையிலிருந்து வெப்பத்தைத் தாங்கி வெளிவரும் குழாய் வெப்ப வரம்பைத் தாண்டும் நிலை ஏற் பட்டால் வெடிப்போ கசிவோ ஏற்படும் அபாயம் இருக்கிறது. இக் குழாயைக் குளிரூட்டும் எந்திரம் பழுதடைந்தாலோ, வேறு காரணங்களால் செயல்படாமல் போனாலோ, வெப்பம் மிகையாகி அது ஏற்படுத்தும் அபாயம், ஆக இப்படிப்பட்ட அபாயங்களோடு கூடியதுதான் இந்த அணுசக்தித் தொழில் நுட்பம்.
எல்லாத் தொழில் நுட்பமுமே அபாயமுள்ளதுதான் என்று சிலர் கருதலாம். ஆனால் மற்றத் தொழில்நுட்ப அபாயங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் வேறு. அணுசக்தித் தொழில் நுட்பம் ஏற்படுத்தும் அபாயம் வேறு. மற்ற தொழில் நுட்ப அபாயம் சில மணிநேரம் அல்லது சில நாள் மட்டுமே இருந்து மறைந்து போவது. ஆனால் அணுசக்தித் தொழில்நுட்ப அபாயம் ஆண்டுக் கணக்கில் பல்லாண்டு காலம் நீடிப்பது. மனித குலத்தையே தலைமுறை தலைமுறைக்கும் நசிப்பது, முடமாக்குவது, முற்றாக அழிப்பது, ஊனப்படுத்துவது.
இதில், இப்படிப்பட்ட விபத்துகள் நேர வாய்ப்பில்லை என்றுதான் அணுசக்தித் தொழில்நுட்பம் கூறுகிறதே தவிர அணுசக்தி வல்லுநர்கள் கூறுகிறார்களே தவிர, இப்படிப்பட்ட அபாயங்கள் எதுவுமே கிடையாது என்று எவரும் கூறவில்லை.
இப்படிப்பட்ட அபாயங்களோடு செயல்படும் அணு உலை, அது செயல்படுவதால் வெளிப்படுத்தும் கழிவுப் பொருள்கள் பற்றிய அபாயம் ஒருபுறம். உதாரணமாக, யுரேனியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் அணு உலை புளூட்டோனியத்தைக் கழிவாகத் தருகிறது. இதுவும் கடுமையான கதிரியக்கத் தன்மை உடையது. எனவே கதிரியக்கத்தால் ஏற்படும் எல்லாவித ஆபத்துகளையும் இதுவும் தோற்றுவிக்கிறது. எனவே இந்தக் கழிவை என்ன செய்வது என்று தெரியாமல் பல நாடுகள் திண்டாடிக் கொண்டிருக்கின்றன.
இதை உலோகப் பெட்டிகளிலும், பீப்பாய்களிலும் அடைத்து பூமிக்கு அடியில் ஆழக் குழி தோண்டிப் புதைக்கின்றனர். அல்லது இதை ஆழ் கடலுக்குள் தள்ளுகின்றனர். இப்படி இந்தக் கழிவை அப்புறப்படுத்துவதை அல்லது பாதிப்பற்றதாக அதாவது வீரியத்தைச் செயலிழக்கச் செய்வதான முயற்சியை Decommissioning என்கிறார்கள். எனவே அணு உலை என்பது அதன் உருவாக்கத்தோடு கூடவே அதைச் ‘செயலிழக்கச் செய்தல்’ என்பதும் ஒரு பெரிய பிரச்சினையாகவே இருந்து வருகிறது.
ஆக, இதுவரை வளர்ந்துள்ள அணுசக்தித் தொழில் நுட்பம் என்பது,
1. அணு உலைகளில் நிகழும் அணுப் பிளவு காரணமாக ஏற்படும் அபாயகரமான கதிரியக்கத்தை மறுக்கவில்லை.
2. அணு உலை செயல்படும் காலங்களில் அணு உலை உருகுதலோ அல்லது வெப்ப வெளியேற்றக் குழாய்களில் வெடிப்போ கசிவோ ஏற்படும் ஆபத்தை மறுக்கவில்லை.
3. அணு உலைகள் அபாயகரமான கதிரியக்கத் தன்மையுள்ள கழிவுகளை வெளிப்படுத்துகின்றன என்பதையும், இக் கழிவுகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் மனித குலத்துக்குப் பிரச்சினையாய் இருந்து வரும் என்பதையும் மறுக்கவில்லை.
எனவே, இதரத் தொழில்நுட்பங்களை நோக்க அணுசக்தித் தொழில்நுட்பம் என்பது 1. அதன் கட்டுமானத்தில், 2. அதன் செயல்பாட்டில், 3. அது உண்டாக்கும் அபாயத்தில், இது எல்லாவற்றிலுமே முழுக்க முழுக்க வேறானது, வித்தியாசமானது, அது நம் கட்டுப்பாட்டுக்குள் அடங்காதது. நம்மால் கட்டுப்படுத்த இயலாதது என்பதை நாம் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையிலேயே நாம் அணுஆற்றலின் அதாவது அணுக்கரு ஆற்றலின் சாதக பாதகங்கள் பற்றி ஆராயவும் வேண்டும்.
- இராசேந்திர சோழன்
- விவரங்கள்
- இராசேந்திர சோழன்
- பிரிவு: தொழில்நுட்பம்
இதுவரை அணுக்கருப் பிளவு, அப் பிளவினால் வெளிப் படும் ஆற்றல், கதிரியக்கத்தினால் வெளிப்படும் கதிர் வீச்சு, அதன் பண்புகள் பற்றி ஓரளவு பார்த்தோம்.
இனி அணுகுண்டு எவ்வாறு செயல்படுகிறது, அணு உலை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து ஓரளவு பார்ப்போம்.
அணுகுண்டு என்பது அணுக் கருச் சக்தியைக் கொண்டு அதாவது அணுக்கருவைப் பிளப்பதன் மூலம் வெளிப்படும் ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது என்று நமக்குத் தெரியும்.
இந்த அடிப்படையில் யுரேனிய அணுக் கருவின் மீது நியூட்ரான் துகள்களை அதிவேகமான பாய்ச்சலோடு செலுத்தித் தாக்குதல் தொடுக்கிறார்கள். இந்த நியூட்ரான் துகள்கள், யுரேனிய அணுக்கருவைப் பிளந்து, அதிலுள்ள துகள்களை அதே துரித வேகத்தில் வெளிப்படச் செய்கிறது. அதே சமயம் அணுக் கருப் பிளப்பினால் உண்டான நியூட்ரான் துகள் களிலிருந்து ஏராளமான ஆற்றல் பிறக்கிறது. யுரேனியத்தின் அணுக் கருவிலிருந்து பேரியம் மற்றும் கிரிப்டான் ஆகியவற்றின் இரண்டு அணுக்கருக்கள் உண்டாகின்றன. கூடவே சில நியூட்ரான்களும் 20 கோடி எலக்ட்ரான் வோல்ட் ஆற்றலும் வெளிப்படுகிறது. இவ்வணுக் கருப்பிளவின் மூலம் உண்டான நியூட்ரான் தொடர்ந்து யுரேனியத்தின் அடுத்தடுத்த அணுக் கருக்களைத் தாக்க மேற்கூறியவாறு ஒரு தொடர் நிகழ்வை ஏற்படுத்துகிறது.
இந்தத் தொடர் நிகழ்வு வெறும் சாதாரண ஒரு சங்கிலித் தொடர்போல் அல்லாமல் பல கிளைகளாகக் கிளைத்துப் பரவுகிறது. உதாரணமாக ஒரு நியூட்ரான் துகள் தாக்கி மூன்று நியூட்ரான்களை உருவாக்குகிறது என்று சொன்னால் அந்த மூன்று நியூட்ரான்களிலும் அதன் இருமடிப் பெருக்கமாக ஒன்பது நியூட்ரான்களையும், இதேபோல அந்த ஒன்பதும் எண்பத்தொரு நியூட்ரான்களையும் என்று இப்படியே இப் பெருக்கம் தொடர்கிறது. இப்படிப் பெருக்கம் செய்யும் இத் தொடர் நிகழ்வையே ‘Chain Reaction’ என்கிறார்கள்.
இந்தத் தொடர் நிகழ்வினால் வெளிப்படும் வெப்பமும், கதிரியக்கமும் கூடவே மற்றொரு தொடர் நிகழ்வாகிறது. இந்தத் தொடர் நிகழ்வு கட்டுப்படுத்தப்படாது அதன் போக்கிற்கு வெளிப்படும்போது அதுவே அணுகுண்டு வெடிப்பாக மாறுகிறது. கீழ்க்கண்டுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு இத்தொடர்வினை நிகழ்கிறது.
கிட்டத்தட்ட இப்படி ஓர் அணுகுண்டு செயல்படும் இதே அடிப்படையில்தான் அணு உலையும் செயல்படுகிறது.
ஆனால், அணு உலை இம்மாதிரி வெடிப்பு ஏற்படாத வண்ணம், கட்டுப்பாட்டுடன் பாதுகாப்பு வசதிகளோடு செயல் படுவதாகச் சொல்லப்படுகிறது.
அணு உலை என்பது மேலும் கீழும் வலுவாகச் சீல் வைக்கப்பட்ட கனமான உலோகத்தால் செய்யப்பட்ட பாய்லர் போன்ற ஓர் உலையாகும். இவ்வுலையின் உட்புறம் பாது காப் பான பெட்டகம் போன்ற துளைகள் நிறைந்த கனமான உலோகப் பெட்டியில், துளைகளில் யுரேனியத் தண்டுகள் செருகப்பட்டிருக்கும். இதுவல்லாமல் அணு உலைக்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகள் பல இருக்கின்றன அவை பற்றிய முழு விவரமும் இங்கே நமக்குத் தேவையில்லை.
இங்கே நமக்குத் தேவையானது, பாதுகாப்பான பெட்டகம் போன்ற துளைகளில் செருகப்பட்டுள்ள யுரேனியத் தண்டுகள் மட்டுமே. இந்த யுரேனியத் தண்டுகள் குறிப்பிட்ட வேகத்தில் பாயும் நியூட்ரான் துகள்களால் (Slow Neutron or Thermal Neutron) தாக்கப்படுகின்றன. இந்தத் தாக்குதலால், அணுகுண்டின் செயற்பாட்டில் நிகழ்வது போலவே தொடர் நிகழ்வு ஏற் படுகிறது. அதன்மூலம் அளவு கடந்த வெப்பமும், ஆற்றல் மிக்க கதிர்வீச்சும் வெளிப்படுகிறது. இந்தத் தொடர்நிகழ்வு கட்டுப்படுத்தப்படாவிட்டால் இதுவே அணுகுண்டாக மாறி அணு உலை வெடித்து, ஓர் அணுகுண்டைப் போட்டால் என்ன விளைவை ஏற்படுத்துமோ அதே போன்ற விளைவை ஏற்படுத்தும் என்கிறார்கள் என்பதை முதலிலேயே பார்த்தோம்.
ஆகவே, இப்படி ஆபத்து எதுவும் ஏற்பட்டு அணு உலை வெடித்துவிடாது இருக்க, இந்த அணுக்கருப் பிளவை ஒரு கட்டுப்பாட்டுக்குள் நிகழ்த்த, அதாவது இந்த அணுக்கருப் பிளவைத் தேவைக்கேற்ப நிகழ்த்தவும் வரம்புக்குள் வைக்கவும், காட்மியம் (Cadmium) அல்லது போரான் (Boron) ஆகிய பொருள்களை கட்டுப்படுத்துக் கழிகளாகப் (Control Rods) பயன்படுத்துகிறார்கள். இது எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பதைப் பிறகு பார்ப்போம். ஆக கட்டுப்படுத்துக் கழிகளைப் பயன்படுத்தி அணுக்கருப் பிளவைக் கட்டுக்குள் வைக்க முயல்கிறார்கள்.
சரி, அணுக்கருப் பிளவினால் உண்டான வெப்பமும், கதிர்வீச்சும் அடுத்து என்ன ஆகிறது என்று பார்ப்போம்.
இவ்வாறு அணு உலையில் உண்டான வெப்பம் அணு உலையோடு பொருத்தப்பட்டுள்ள, நீர்க்குழாயிலுள்ள அழுத்தம் நிறைந்த நீரை (Pressurised Water) வெப்பப்படுத்து கிறது. இந்த நீர் அணு உலையில் ஏற்பட்ட வெப்பத்தைத் தாங்கி, கொதிநிலையில் குழாய் வழியாக வெளிவருகிறது. இப்படி வெளிவரும் குழாய் நீர், நீராவி, டர்பைனை நோக்கிச் செல்லும் வழியில் இடை நிறுத்தப்படுகிறது. அங்குச் சாதாரண நீர் அடங்கிய குழாய் ஒன்று இந்த அழுத்தம் நிறைந்த வெப்பத்தைத் தாங்கி வெளிவரும் குழாய்க்குள் குழாயாகப் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, அழுத்தம் நிறைந்த வெப்ப நீரைத் தாங்கி வரும் குழாய் தன் வெப்பத்தைச் சாதாரண நீர்க் குழாய்க்குத் தந்து குளிரூட்டும் பகுதிக்குச் சென்று பின் மீண்டும் அணு உலைக்குச் செல்கிறது. இதோடு பொருத்தப் பட்டு உட்புறமாக உள்ள சாதாரண நீர்க் குழாய் அணு உலையிலிருந்து வெளிப்படும் அழுத்த நீர்க் குழாயின் வெப்பத்தை ஏற்று நீராவியாகி, டர்பைனை நோக்கிச் சென்று அதை இயங்கச் செய்து, கண்டென்சர் வழியாக மீண்டும் அழுத்த நீர்க் குழாய்க்குள் வருகிறது. வந்து மீண்டும் வெப்பமூட்டப் பட்டு டர்பைனை நோக்கிச் செல்கிறது.
ஆக அணுசக்தி உற்பத்தி என்பது மிக முக்கியமாக
1. அணு உலை, 2. அணு உலையில் உற்பத்தியாகும் வெப் பத்தைத் தாங்கி வெளிவந்து சாதாரண நீர்க்குழாய்க்கு வெப்பத்தைத் தந்து குளிரூட்டும் பகுதிக்குச் சென்று மீண்டும் அணு உலைக்கே செல்லும் அழுத்த நீர்க்குழாய், 3. அழுத்த நீர்க் குழாய்க்குள் பொருந்தி, அழுத்த நீர்க்குழாயின் வெப்பத்தை ஏற்று, வெளிவந்து டர்பைனை இயக்கி மீண்டும் கண்டென்சர் வழியாக அழுத்த நீர்க் குழாய்க்குள்ளாகவே செல்லும் சாதாரண குழாய் நீர், 4. டர்பைன் அதன் மூலம் இயங்கும் ஜெனரேட்டர். இப்படி நான்கு பகுதிகளைக் கொண்டதாக இயங்குகிறது.
இன்று அணு உலைகளில் பல புதிய கட்டமைப்புகள் வந்திருக்கலாம். என்றாலும் அதன் அடிப்படைச் செயல்முறை மேற்சொன்ன இந்த நான்கு பகுதிகளைக் கொண்டதாகவே இயங்குகிறது.
இங்கே ஒரு கேள்வி எழலாம். அதாவது அணு உலை யிலிருந்து வெப்பத்தைத் தாங்கிவரும் அழுத்தம் நிறைந்த நீர்க் குழாயை அப்படியே நேராக டர்பைனுக்கு அனுப்பிச் சுழலச் செய்து, பின் குளிரூட்டும் பகுதிக்கு அனுப்பிக் குளிரச் செய்து, அப்படியே அணு உலைக்கு அனுப்பினால் என்ன என்று தோன்றலாம்.
ஆனால் பிரச்சனையே இங்கேதான் இருக்கிறது. காரணம், அணு உலையில் அணுக் கருப்பிளவு ஏற்படும்போது அளவு கடந்த வெப்பம் மட்டும் ஏற்படுவதில்லை. கூடவே அபாய கரமான கதிரியக்கமும் ஏற்படுகிறது என்று பார்த்தோ மில்லையா?
இந்தக் கதிரியக்கம் என்பது ஒளி வேகத்தில் பாயக் கூடியது. கனமான எஃகுத் தகடுகளையும்கூட கடந்து ஊடுருவ வல்லது. உயிர்ச் செல்களுக்கு அபாயம் விளைவிக்கக்கூடியது, உயிர்ச் செல்களை எரித்துப் பொசுக்கிவிடும் தன்மையுடையது என்பதும் நமக்குத் தெரியும் இல்லையா.
எனவேதான் கதிரியக்கமுள்ள அபாயகரமான அந்த நீரை அப்படியே ஜெனரேட்டருக்கு அனுப்பினால் ஜெனரேட்டர், டர்பைன் மற்றும் அதைச் சார்ந்த கருவிகள் எல்லாம் கதிரியக்கத்துக்குள்ளாகி, அங்குப் பணி புரிபவர்களின் உயிருக்கு அபாயம் விளைவிப்பதோடு, அக்கதிரியக்கம் வெளியிலும் பரவி, அப்பகுதி வாழ் மக்களது உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் என்பதால், அக்கதிரியக்க அபாயமுள்ள நீரை அப்படியே நேராக ஜெனரேட்டருக்கு அனுப்பாமல், அதைச் சாதனமாகக் கொண்டு அதற்கு அப்பால் உள்ள சாதாரண கதிரியக்கமற்ற நீரை ஜெனரேட்டருக்கு அனுப்புவதாகச் சொல்கிறார்கள்.
நியாயம். இந்த அளவுகூட பாதுகாப்பு இல்லையென்றால் ஓர் அணுமின் நிலையம் கூட இயங்க முடியாது இல்லையா? எனவே, இப்படிப்பட்ட காப்பு ஏற்பாடுகள் அவசியமானதுதான். ஆனால் இந்த ஏற்பாடு முழுமையான பாதுகாப்புள்ளவை தாமா.... பாதுகாப்பு உள்ளவை என்றால் எவ்வாறு? என்று இதையெல்லாம் தெரிந்து கொண்டு பின் அணு சக்தியின் சாதக பாதகங்களைப் பற்றி ஆராய்வோம்.
- விவரங்கள்
- இராசேந்திர சோழன்
- பிரிவு: தொழில்நுட்பம்
இயற்கையில் பல தனிமங்கள் கதிரியக்கத் தன்மை உடையனவாக இருக்கின்றன என்றும், இக்கதிரியக்கம் அணுக்கருவில் நிகழும் மாற்றம் காரணமாக ஏற்படுவது என்றும், இக்கதிரியக்கமில்லாமல் அணுக்கரு ஆற்றலைப் பெற முடியாது என்றும் பார்த்தோம். இப்போது கதிரியக்கம் (Radio-activity), கதிர்வீச்சு (Radiation) என்றால் என்ன என்று பார்ப்போம்.
சாதாரணமாக வெப்பம் மூன்று வகைகளில் பரவுகிறது என்று நாம் பள்ளிக்கூட அறிவியல் பாடங்களில் படித்திருக்றோம். அதாவது வெப்பம், கடத்தல், சலனம், கதிர்வீச்சு என்ற மூன்று முறையில் பரவுகிறது. உதாரணமாக, இரும்புக்கம்பி ஒன்றை எடுத்து வெப்பப்படுத்துகிறோம். இந்தக் கம்பி சூடேறி கையைச் சுடுகிறது. அதாவது இந்தக் கம்பியில் உள்ள துகள்கள் வெப்பத்தை ஏற்று அதை அடுத்தடுத்த துகள்களுக்குத் தருகிறது. அதாவது, துகள்கள் இடம் மாறாமல் அது ஏற்கும் வெப்பம் மட்டும் அடுத்தடுத்த துகள்களுக்குக் கடத்தப் படுகிறது. இவ்வாறு கடத்தப்படும் முறையை வெப்பக் கடத்தல் என்கிறோம்.
ஒரு குவளையில் நீரை வைத்துக் காய்ச்சுகிறோம். கீழே மூட்டப்படுகிற வெப்பம் நீரைக் கொதிக்க வைக்கிறது. அதில் நீரிலுள்ள துகள்கள் வெப்பத்தால் இடப்பெயர்ச்சி அடைகின்றன. இதில் துகள்கள் இடம் பெயர்வதன் மூலமே வெப்பம் பரவுகிறது. அதனாலேயே நீர் கொதிக்கவும் முடிகிறது. ஆகவே, இதை வெப்பச் சலனமுறை என்கிறோம்.
ஆனால் அடுப்பு எரிகிறது. நாம் சற்றுத் தொலைவில் இருந்தாலும் அனல் அடிக்கிறது. வெப்பத்தை உணர்கிறோம். சூரியன் நமக்கு 5 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இருந்தாலும் அதன் வெப்பம் நமக்குக் கிடைக்கிறது. இதெல்லாம் எப்படிக் கிடைக்கிறது? நாம் எதிலிருந்து வெப்பத்தைப் பெறுகிறோமோ அந்தப் பொருட்கள் அதனதன் சக்திக்கேற்ப ஆற்றல் குறைந்ததும், ஆற்றல் அதிகமானதுமான வெப்பக் கதிர்களை, ஒளிக்கதிர்களை வெளியிடுகின்றன. இக்கதிர்களை வெளிப்படுத்தும் பொருள்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், அதனதன் ஆற்றலுக்கு ஏற்ப கதிர்வீச்சு முறையில் பரவி நம்மை வந்தடைகின்றன.
இக்கதிர்கள் துகள் பண்பு கொண்டவையாகவும் இருக்கலாம். அலைப் பண்பு கொண்டவையாகவும் இருக்கலாம். அந்த ஆராய்ச்சி இங்கு நமக்கு முக்கியமல்ல. நமக்கு வேண்டியது வெப்பமோ, ஒளியோ குறிப்பிட்ட ஓர் ஊடகம் எதையும் சார்ந்திருக்காமல் தானே துகளாகவோ அலையாகவோ பரவி சுற்றுப்புறத்தைப் பாதிக்கிறது என்பது தான், இந்தச் செயல்முறையே கதிர்வீச்சு என அழைக்கப்படுகிறது என்பதுதான்.
இந்தக் கதிர்வீச்சு முறை மற்ற கடத்தல், சலன முறைகளிலிருந்து அடிப்படையில் எங்கு மாறுபடுகிறது என்றால், இந்த முதல் இரு முறைகளிலும் வெப்பமூட்டப்பட்ட பொருள்களைத் தொடும்போது மட்டுமே நாம் வெப்பத்தை உணர்கிறோம், பாதிப்பு அடைகிறோம். ஆனால், இந்தக் கதிர்வீச்சு முறையில் பொருளை நாம் தொட வேண்டிய அவசியமேயில்லை. அதுவே தானாக நம்மை வந்து அடைந்துவிடும். இதுதான் இந்தக் கதிர்வீச்சு முறையில் மிகவும் முக்கியம். இதுதான் இந்தக் கதிர்வீச்சின் சிறப்புப் பண்பும்.
சரி இந்தக் கதிர்வீச்சு என்பது சில இயற்கைத் தனிமங்களிலிருந்து கதிரியக்கம் காரணமாக தானாக வெளிப்படுகிறது என்று பார்த்தோமில்லையா? இதுவல்லாமல் நம் பயன்பாட்டுக்காக நாம் உருவாக்கும் பல்வேறு விதப் பொருள்களிலிருந்தும் கதிர்வீச்சு நிகழ்கிறது. உதாரணமாக, சமைக்க அடுப்பு மூட்டுகிறோம். குளிர்காய மூட்டம் போடுகிறோம். ஒளியைப் பெற மண்ணெண்ணெய், மின்விளக்குகள் ஏற்றுகிறோம். இவற்றிலிருந்தெல்லாம் கதிர்வீச்சு வெளிப்படுகிறது. ஆனால் இதையெல்லாம் நாம் கதிரியக்கம் என்று சொல்வதில்லை. காரணம் இக் கதிர்வீச்சு நிகழ்வுகள் எதுவும் அணுக்கருவிலிருந்து வெளிப்படுவதில்லை. ஆகவே அணுக்கருவிலிருந்து ஏற்படும் கதிர்வீச்சு நிகழ்வை மட்டுமே நாம் கதிரியக்கம் என்கிறோம்.
அதோடு, செயற்கையாக நம் பயன்பாட்டுக்காக நாம் உருவாக்கும் பொருள்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சை நாம் எப்போது வேண்டுமானாலும் தடுத்து நிறுத்திவிட முடியும். ஆனால், இயற்கையாக வெளிப்படும், அதாவது அணுக் கருவிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது, கட்டுப்படுத்தவும் முடியாது. அது அதன் சக்தியுள்ளவரை எத்தனை ஆயிரம் இலட்சம் அல்லது கோடி ஆண்டுகள் கதிரியக்கத் தன்மை கொண்டதாக நிலவுகிறதோ, அத்தனை ஆண்டுகளுக்கும் அதன் கதிர்வீச்சு நிகழ்ந்துகொண்டே இருக்கும். இதை யாராலும் எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்திவிடவோ கட்டுப்படுத்தவோ முடியாது.
இங்கே இன்னொரு விசித்திரத்தையும் நாம் பார்க்க வேண்டும். இந்தக் கதிர்வீச்சு முறையில் வெப்பமும் ஒளியும் பரவுகிறது என்று பார்த்தோமில்லையா? இதில் சமைக்க என்று அடுப்பு மூட்டுகிறோம். நமக்குத் தேவை வெப்பம் மட்டும்தான். ஆனால் கூடவே ஒளியும் பிறக்கிறது. இருளைப் போக்க என்று மின்விளக்கு ஏற்றுகிறோம். நமக்குத் தேவை ஒளி மட்டுமே. ஆனால் கூடவே வெப்பமும் பரவுகிறது. ஒரு 40 வாட், 60 வாட் பல்பில் இந்த வெப்பம் நமக்குச் சட்டென்று தெரியாமலிருக்கலாம். ஆனால் ஒரு 100 வாட் 1000 வாட் பல்பில் வெப்பத்தை உடனே உணரலாம். எனவே வெப்ப மில்லாமல் ஒளியில்லை, ஒளியில்லாமல் வெப்பமுமில்லை என்பது புலனாகிறது அல்லவா?
ஆகவே வெப்பம் கதிர்வீச்சு மூலம் பரவுகிறது என்றால் அது ஒளியையும் பரப்புகிறது. ஒளி கதிர்வீச்சு மூலம் பரவுகிறது என்றால் அது வெப்பத்தையும் பரப்புகிறது என்றே பொருள்.
உதாரணத்துக்குச் சூரியன். அது கதிர்வீச்சின் மூலம் ஆற்றல் மிக்க வெப்ப ஒளிக் கதிர்களை உமிழ்கிறது. நாம் சூரியனுக்குப் பல இலட்சக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதாலும், நம் பூமியைச் சூழ்ந்துள்ள வளிமண்டலத்தில் நிலவும் பல்வேறு வாயுப் படிமங்களை ஊடுருவி இக்கதிர்கள் நம்மை வந்து அடைவதாலும் நாம் எரிந்து சாம்பலாகிப் போகாமல் இருக்கிறோம்.
இதேபோலத்தான், நாம் மேலே பார்த்த, இயற்கை மற்றும் செயற்கைக் கதிர்வீச்சுகளும். இக் கதிர்வீச்சுகளும் வெப்ப ஆற்றலையும், ஒளி ஆற்றலையும் தாங்கியே வெளிப்படுகின்றன. ஆனால் சாதாரண அடுப்பு எரியும், விளக்கு எரியும் வெளிச்சம்போல, இதர ஆற்றல் மிக்க கதிர்வீச்சுகளின் ஒளி நம் கண்ணுக்குத் தெரிவதில்லை.
இதற்குக் காரணம், சாதாரண ஒலி அலைகளைப் பற்றிப் பேசும்போது 20 Hz முதல் 20,000 Hz வரை அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளைத்தான் நம் காதுகள் கேட்க முடியும். 20 க்குக் குறைவாகவோ அல்லது 20,000 க்கு அதிகமாகவோ அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளை நம் செவிப்புலன் உணர முடியாது என்று சொல்கிறார்கள் அல்லவா, அதேபோல ஒளி அலைகளுக்கும் சில கணக்கு வைத்திருக்கிறார்கள்.
ஒளியின் அலை நீளத்தை அளக்கப் பயன்படும் அலகு ஆங்ஸ்ட்ராங் அலகு A எனப்படுகிறது. இதன்படி 7,500 A க்கு மேற்பட்ட அலகுகள் அலை நீளம் கொண்டவை அகச்சிவப்புக் கதிர்கள் (Infrared rays) எனவும், 4000A க்குக் கீழ்ப்பட்டவை புறஊதாக் கதிர்கள் (Ultraviolet rays) எனவும் அழைக்கப் படுகின்றன. இதில் இதற்கு இடைப்பட்ட அலகுகள் கொண்ட ஒளியை மட்டுமே நாம் நம் கண்ணால் காண முடியும். இதற்கு அதிகமானாலோ குறைந்தாலோ அவ்வொளியை நம் கண்ணால் காணமுடியாது.
இயற்கையில் நிகழும் கதிரியக்கம் மூலமாக வெளிப்படும் ஆற்றல் மிக்க ஒளிக்கதிர்கள், புற ஊதாக் கதிர்களை விட மிகமிகக் குறைந்த அலை நீளம் உடையவை. ஆகவே இது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. இவற்றுள், 4000Aஅலை நீளத்திற்கும் கீழே 100A வரை ஆங்ஸ்ட்லாங் அலகு கொண்ட ஒளி புற ஊதாக் கதிர்கள். 100Aக்குக் கீழே 1A வரை அலகு கொண்டவை எக்ஸ் கதிர்கள். 1க்குக் கீழே உள்ளவை எல்லாம் காமாக் கதிர்கள் எனப்படுகின்றன. இவையெல்லாம் நம் கண்ணால் காண முடியாத கதிர்கள்.
எனவே, கதிர்கள் நம் கண்ணுக்குத் தெரியவில்லை என்பதால் இவை வெப்பமற்ற கதிர்கள் என்றோ அல்லது ஆற்றல் அற்ற கதிர்கள் என்றோ கருதிவிடக் கூடாது. காட்டாக எக்ஸ்ரே புகைப்பட நிகழ்வு மூலம் இதைத் தெளிவாய் உணரலாம்.
சாதாரணமாய் நம் புறத் தோற்றத்தைப் படம் பிடிக்கும் புகைப்படக் கருவிக்கே ஒரு குறிப்பிட்ட அளவு ஒளி, நம் கண்ணுக்குத் தெரிந்த ஒளி, நம் உடம்பின் மீது படவேண்டியது அவசியமாயிருக்கிறது. இப்படிப்பட்ட ஒளி போதுமானதாக இல்லாத இடங்களில் ஃப்ளாஷ் பொருத்திய காமிராக்கள் மூலம் ‘பளிச் பளிச்’ என்று ஒளியைப் பாய்ச்சிப் புகைப்படம் எடுக்கிறோம். தற்போது டிஜிட்டல் புகைப்படக்கருவி வந்துள்ள நிலையிலும், இந்த ஒளி தேவைப்படுகிறது.
நம் புறத்தோற்றத்தைப் படம் எடுக்கவே இந்த ஒளிக் கதிர்கள் தேவை என்றால், நம் உடம்பிலுள்ள உள் உறுப்புகளை, எலும்புகளை, நாம் போட்டிருக்கும் உடைகளை மீறி, மூடியிருக்கும் தசைகளை மீறி படம் எடுக்க எப்படிப்பட்ட ஆற்றல் மிக்க ஒளிக்கதிர்கள் தேவைப்படும் என்று சிந்தித்துப் பார்க்க இது புரியும்.
எக்ஸ்ரே படம் எடுக்க நாம் போய் நிற்கும்போது என்ன நிகழ்கிறது? சாதாரண வெளிச்சமுள்ள ஓர் அறையில், ஓர் எந்திரத்தின் முன்னே நம்மை ஏறி நிற்கச் சொல்கிறார்கள். ஏதாவது நிகழும் என்று நாம் யோசிப்பதற்குள்ளாகவே... சரி, முடிந்துவிட்டது போகலாம் என்கிறார்கள். ரெடி இல்லை, ஃப்ளாஷ் இல்லை, பளிச் இல்லை. எதுவும் இல்லை. ஆனால் எந்திரம் புகைப்படம் எடுத்துவிடுகிறது. அடுத்த சில நிமிடங்களில் நம் எலும்புக்கூட்டின் படம் வந்துவிடுகிறது.
இதுதான் இக்கதிர்களின் ஆற்றல். இதுதான் சாதாரணமாக நிகழும் கதிர் வீச்சுக்கும், கதிரியக்கத் தனிமங்கள் மூலமாக அல்லது அணுக்கருப் பிளவின் காரணமாக, நிகழும் கதிரியக்கத்திற்குமான அடிப்படை வேறுபாடு. அதாவது, செயற்கையாக, நாம் உருவாக்கும் கதிர் வீச்சு என்பது கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. நம்மால் தடுத்து நிறுத்தக் கூடியது. அடுப்பு, விளக்கு மற்றவை.
ஆனால், இயற்கையாக, கதிரியக்கத் தனிமங்களின் கதிரியக்கம் காரணமாக ஏற்படும் கதிர்வீச்சு நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது. நம்மால் தடுத்து நிறுத்த முடியாது. காரணம் அது இயற்கையானது. நம் கட்டுக்கு அடங்காதது. சூரியன், மற்ற கதிரியக்கத் தனிமங்கள், அணுக்கருப் பிளவு ஆகியன இவ்வகை.
அதோடு, நம்மைச் சுற்றி நம் கண்ணுக்குத் தெரிந்து எந்த ஒளியும் தென்படவில்லை என்பதாலேயே, அங்கே எவ்வித கதிர்வீச்சும் இல்லை என்றும் கருதிவிட முடியாது. காரணம் நாம் ஏற்கெனவே பார்த்தபடி, நம் கண்ணுக்குத் தெரியாத ஒளியைப் பாய்ச்சும் கதிர்வீச்சுகள் பல நிலவுகின்றன என்பதுடன், நம் கண்ணுக்குத் தெரிந்த ஒளியை உமிழும் கதிர்வீச்சை விட நம் கண்ணால் காண முடியாத ஒளியை உமிழும் கதிர்வீச்சு மிகவும் ஆற்றல் மிக்கது, அபாயகரமாது என்பதும் மிகவும் முக்கியம்.
இந்த மட்டத்தில் நாம் கதிரியக்கத்தைப் புரிந்து கொண்டு இனி அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்குச் செல்வோம்.
கதிரியக்கத்தின் பண்புகள்
சாதாரண ஒரு மல்லிகைச் சரம் இருக்கிறது. இந்த மல்லிகைச் சரம் தான் இருக்கும் இடத்தைச் சுற்றிலும் மணம் பரப்புகிறது. மணம் பரப்புகிறது என்றால் என்ன அர்த்தம்? அந்தச் சரம் தன்னைச் சுற்றிக் காற்றில் கலந்துள்ள வாயுக்களின் பண்பில் ஏதோ ஒரு மாற்றத்தை நிகழ்த்துகிறது. அந்த மாற்றத்தின் வாயிலாகவே நாம் மணத்தை உணருகிறோம். இதேபோல ஒரு கழிவு நீர்க் குட்டை இருக்கிறது. அதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. துர்நாற்றம் வீசுகிறது என்றால் என்ன அர்த்தம்? இதுவும் தன்னைச் சுற்றிக் காற்றில் கலந்துள்ள வாயுக்களின் பண்பில் ஒருவித மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனாலேயே துர்நாற்றத்தை நம்மால் உணர முடிகிறது என்று அர்த்தம்.
மணம் என்பதும் துர்நாற்றம் என்பதும் வாயுக்களில் ஏற்படும் பண்பு மாற்றம் என்பதனாலேயே வேதியியல் முறையில் வெவ்வேறு பழச்சாறுகளின் தன்மையுள்ள குளிர்பானங்கள், மணம் பரப்பும் அழகு சாதனப் பொருள்கள் எல்லாவற்றையும் செயற்கையாக உற்பத்தி செய்ய முடிகிறது. சில சுத்திகரிப்புப் பொருள்கள், அழுக்கு, கறைநீக்கிகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் எல்லாம் துர்நாற்றம் மிகுந்ததாகவும் இருக்கிறது. ஆக, மணமோ துர்நாற்றமோ இவையெல்லாம் சாதாரணப் புலன்களால் உணர முடிந்த புலன் அறிஉணர்ச்சிகள்.
ஆனால் கதிரியக்கம் என்பது இப்படி நாம் சாதாரணப் புலன்களால் அறிய முடிகிற உணர்ச்சிகள் அல்ல. இவை நம் கண்ணுக்குத் தெரியாதவை, ஒளி அற்றவை, ஒலியற்றவை, மணம் அற்றவை, ருசியற்றவை. சாதாரண அளவில் எரிச்சலற்றவை. ஆகவே இவை எளிதில் நம்மால் உணர முடியாதவை.
அடுத்து மணமோ, துர்நாற்றமோ அது ஏற்படுத்தும் பொருளைச் சுற்றி, ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே இருக்கிறது. இது பொருளின் அளவு, தன்மையைப் பொறுத்து மாறுபடலாம். உதாரணமாக ஒரு மாம்பழத்தைவிட ஒரு பலாப்பழத்தின் வாசனை சற்று விரிவான பரப்பு கொண்டதாக இருக்கலாம். ஒரு சிறிய கழிவுநீர்க் குட்டையைவிட ஒரு கழிவுநீர்க் கால்வாய் அல்லது ஓடை அதிகமான தூரத்துக்குத் துர்நாற்றத்தைப் பரப்பலாம். ஆனால் எப்படியானாலும் சில கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் இதன் பாதிப்பு இருக்க முடியாது.
ஆனால், கதிரியக்கம் காரணமாக ஏற்படும் கதிர்வீச்சு என்பது பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரம் வரை பரவி ஆபத்து விளைவிக்கும் ஆற்றல் மிக்கது. எப்படி மணம் பரப்பும் அல்லது துர்நாற்றம் வீசும் பொருளை நெருங்க நெருங்க, அந்த மணமோ துர்நாற்றமோ அதிகமாகப் பாதிப்பதும், அப்பொருளை விட்டு விலக விலகப் பாதிப்பு குறைவாகவும் இருக்கிறதோ அதேபோல ஒரு கதிரியக்கப் பொருளை நெருங்க நெருங்க கதிர்வீச்சின் பாதிப்பு அதிகமாகவும், விலக விலகப் பாதிப்பு குறைவாகவும் இருக்கிறது. ஆனால் மற்ற பொருள்கள் சில அடிகள் சில கிலோமீட்டர்கள் சுற்று வட்டாரத்தில் மட்டுமே பாதிப்பு ஏற்படுத்த முடியும். ஆனால் கதிரியக்கத்தின் மூலம் ஏற்படும் கதிர்வீச்சு பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் ஆரம் கொண்ட ஒரு வட்டம் வரைந்தால் எவ்வளவு பெரியதாக இருக்குமோ அவ்வளவு தூரத்துக்கும், அவ்வளவு பரப்புக்கும் அதிகமாகப் பாதிப்பை விளைவிக்கும். இதனால், மற்றப் பொருள்களில் அபாயத்தை உணர்ந்து, விரைந்து அந்த அபாய எல்லையைக் கடப்பதுபோல் கதிரியக்க அபாயத்திலிருந்து தப்ப முடியாது.
அடுத்து, மிக மிக முக்கியமான மற்றொன்று. ஒரு மல்லிகைச் சரம் புத்தம் புதிதாய் இருக்கும்வரை மணம் பரப்பும். பிறகு வலுவிழந்துவிடும். சாலையில் அடிபட்டு இறந்த நாய் ஒரு மூன்று நான்கு நாட்கள் வரை சகிக்க முடியாத துர்நாற்றத்தை வீசி வயிற்றைக் குமட்டும். பிறகு அதுவும் வலுவிழந்து அதாவது இயற்கையாகவே மண்ணாலும், காற்றாலும் சீரணிக்கப்பட்டு விடும். ஆனால் ஒரு கதிரியக்கத் தனிமம் தன் ஆற்றலை இழக்க அதனதன் சக்திக்கேற்ப சில நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பிடிக்கும்.
காட்டாக, யுரேனியம் தனிமம் தன்னில், தன் கதிரியக்கத்தில் பாதியை இழக்க 22,400 ஆண்டுகள் ஆகின்றன என்கிறார்கள். பிறகு எஞ்சியதில் பாதியை இழக்க மேலும் 22,400 ஆண்டுகள். இப்படியே தொடர்ச்சியாக அதில் பாதியை இழக்க 22,400 ஆண்டுகள். இவ்வாறு ஒரு கதிரியக்கத் தனிமம் தன் கதிரியக்கத்தில் பாதியை இழக்க எடுத்துக் கொள்ளும் காலத்தை அரை வாழ்வுக் காலம் என்கிறார்கள். இந்த அரைவாழ்வுக் காலம் தனிமத்துக்குத் தனிமம் சில விநாடிகள் முதல் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரை வேறுபட்டதாய் இருக்கிறது. எனவே, மற்றப் பொருள்களிலிருந்து வீசும் மணம், துர்நாற்றம் போல இது வெறும் அற்ப ஆயுள் கொண்டதோ ஒரு சில மணிகளில், நாட்களில் வலுவிழந்து போவதோ கிடையாது.
அதோடு, இதில் மிகவும் முக்கியமானது. மேற்சொன்ன மணமோ, துர்நாற்றமோ எதுவும் நாம் நினைத்தால் தடுத்து நிறுத்தக் கூடியது, கட்டுப்படுத்த அல்லது அப்புறப்படுத்தக் கூடியது, அல்லது முற்றாக மாற்றிவிடவும் சாத்தியமுடையது. ஆனால் இந்தக் கதிரியக்கம் என்பது அப்படியல்ல. இது நம்மால் கட்டுப்படுத்த முடியாதது, தடுத்து நிறுத்த முடியாதது, கட்டுக் கடங்காதது, அளப்பரிய ஆற்றல் மிக்கது. அழிக்கவோ வேறு ஒன்றாக மாற்றவோ முடியாதது, கொடும் ஆபத்தையும் விளைவிக்க வல்லது.
சாதாரணமாய் இப்படிப்பட்ட கதிரியக்கம் காரணமாக வெளிப்படும் கதிர்களைப் பொதுவில் விஞ்ஞானிகள் மூன்று வகையாகக் குறிப்பிடுகிறார்கள். இவை ஆல்ஃபா, பீட்டா, காமா எனப்படுகின்றன. இவை கிரேக்க மொழியின் அகர வரிசை எழுத்துகளில் முதல் மூன்று எழுத்துகளைக் குறிப்பதாகவும் அதனடிப்படையில் இவற்றுக்கு இப்பெயர் இடப்பபட்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஆல்ஃபாக் கதிர் : இது இரண்டு புரோட்டான் துகளும், இரண்டு நியூட்ரான் துகளும் கொண்டது. எனவே இதை இரண்டு எலக்ட்ரான்கள் நீக்கப்பட்ட ஹீலியம் அணுக்கருவுக்கு ஒப்பாகச் சொல்வார்கள். இதில் இரண்டு புரோட்டான்கள் இருப்பதால் இரண்டு அலகு நேர்மின்சுமை உடையது. இதன் ஊடுருவும் தன்மை மிகவும் குறைவு. சாதாரண தாள்கள், அட்டைகள் போன்ற பொருள்களை மட்டும் இது ஊடுருவும்.
பீட்டாக் கதிர் : முழுக்கவும் எலக்ட்ரான் துகள்களால் ஆனவை. எலக்ட்ரான்கள் எதிர் மின்சுமை கொண்டவை என்பதால் இது ஓரலகு எதிர்மின் சுமைகளால் ஆனவை என்று சொல்லப்படுகிறது. இதன் ஊடுருவும் திறன் ஆல்பாக் கதிரைவிட 100 மடங்கு அதிகம். கிட்டத்தட்ட ஒளியின் வேகத்துக்கு நெருக்கமாகப் பாயும் ஆற்றல் கொண்டவை என்பதால், மனித உடல் உறுப்புகளையும் ஊடுருவும் சக்தி வாய்ந்தது.
காமாக் கதிர் : இது துகள்கள் ஏதும் கொண்டதாகச் சொல்லப்படவில்லை. எனவே, இக்கதிர்களில் மின்சுமையும் ஏதும் இல்லை. ஆகவே மின்புலம், காந்தப்புலம் எதனாலும் இது பாதிக்கப்படுவதில்லை. இப்படிப் பாதிப்பு எதுவுமற்றதாய் இருப்பதாலேயே இதன் ஊடுருவும் திறன் அதிகமாக உள்ளது. அதாவது இது, எக்ஸ் கதிர்களைவிட அதிகமாக ஊடுருவும் திறன் கொண்டது. ஒளியின் வேகத்துக்குச் சமமான வேகத்துடன் பாயக்கூடியது.
இம்மூன்று கதிர்களிலும் முதற்சொன்ன இரண்டு கதிர்களும் கதிர்கள் என்கிற பண்பு வகையில் அடங்காமல் இவை துகள் வடிவில் நிலவுவதால், இவற்றை ஆல்பாத் துகள், பீட்டாத் துகள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்றாலும், அவை கதிர்ப் பண்புகளும் கொண்டு நிலவுவதால் அவற்றையும் கதிர்கள் என்று அழைப்பதே வழக்கில் உள்ளது. அல்லது கதிர் என்றும், துகள் என்றும் இரு வகையாலும் அழைக்கப்படுகிறது. இவற்றை (Alpha rays, Beta rays) என்றும் (Alpha Particles, Beta Particles) என்றும் அழைக்கிறார்கள்.
ஆனால், காமாக் கதிர்கள் பொதுவில் காமாத் துகள்கள் என்று அழைக்கப் படுவதில்லை. காரணம் காமாக் கதிர்கள் ஆல்பா, பீட்டாக் கதிர்கள் போல அறியப்பட்ட துகள்களால் ஆக்கப்படாமல் உள்ளன. ஒருவேளை இது, இதுவரை அறியப்பட்ட நுண்ணிய துகள்களாலும் இதுவரைஅறியப்படாத மிக நுண்ணிய துகள்களாலும் ஆக்கப்பட்டிருக்கலாம். ஒளி என்பது எப்படி அலைப் பண்பு கொண்டதாகவும், துகள் பண்பு கொண்டதாகவும் நிலவுகிறதோ, அதேபோல பீட்டாவும் அலைப் பண்பு கொண்ட தாகவும், துகள் பண்பு கொண்டதாகவும் நிலவலாம். ஆனால் அது ஒளியின் வேகத்துக்குப் பாயக்கூடியது, மிகக் கனமான உலோகத் தகடுகளையும் ஊடுருவும் தன்மை மிக்கது என்று மட்டும் நாம் நினைவில் இருத்திக் கொண்டால் போதும்.
இந்தக் காமாக் கதிர்களின் ஊடுருவும் திறனைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணம் சொல்லலாம். சாதாரணமாக ஒரு பூனை அல்லது ஒரு நாய் நுழையக் கூடிய ஒரு கட்டம் கட்டமான ஒரு கம்பி வலையைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதில் மனிதன் நுழையமுடியாது. நாய் அல்லது பூனை போன்ற சிறு மிருகங்கள்தான் நுழைய முடியும். இப்போது வீட்டு ஜன்னல்களில் பொறுத்தப்படுகிற கம்பி வலைகளை நினைத்துக் கொள்ளுங்கள். இதில் நாய், பூனை நுழைய முடியாது. ஆனால் பாம்பு, எலி நுழைய முடியும். அதை விடவும் மிகச் சிறிய துவாரமுள்ள கம்பி வலையானால் பாம்பு, எலி நுழைய முடியாது. ஆனால் பூரான், பல்லி நுழைய முடியும்.
இப்படியே நுழையும் பொருளையும், நுழைவாயில் துவாரங்களையும் சிறிதாக்கிக் கொண்டே செல்லுங்கள். காட்டாக, மணல் சலிக்கும் சல்லடை, ரவை சலிக்கும் சல்லடை, மாவு சலிக்கும் சல்லடைகளை நினைத்துப் பார்க்க, இது புரியும். ஆக, நுழையும் பொருள் சிறிது ஆக ஆக நுழைவுத் துவாரங்களும் சிறிதாகிக் கொண்டே வருகின்றன இல்லையா..? மாவு வரைக்கும் வந்தாயிற்று. இனி தண்ணீர், காற்றுக்கு வருவோம்.
ஒரு சிமெண்ட் சுவரில் சில துளி தண்ணீரை வீசுவோம். ஜிவ்வென்று உறிஞ்சி விடுகிறது. நீரை இழுக்கும் துவாரங்கள் சுவரில் உள்ளன என்று இதற்குப் பொருள். ஒரு காய்ந்த மண்கட்டியை எடுத்து நீரில் போடுவோம். காற்றுக் குமிழ்கள் வரும், காரணம் மண்கட்டியில் உள்ள துவாரங்களில் காற்று இருக்கிறது என்று அர்த்தம். ஆக, பொருள் அல்லது துகள் சிறிது ஆக ஆக அது மிகச் சிறிய துவாரத்திலும் ஊடுருவும் என்பதே இதன் பொருள்.
காற்றுக்கே இந்த நிலை என்றால், அதாவது ஹைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன்-டை-ஆக்சைடு என்று பல்வேறு வாயுக்கள் கலந்த காற்றுக்கே இந்த ஊடுருவும் திறன் என்றால், இந்தக் காற்றை நாம் தனித்தனி வாயுவாகப் பிரித்து அவ்வாயுவில் உள்ள அணுக்களையும் பிரித்து அந்த அணுவையும் துகள்களாகப் பிரித்து, அந்த அணுவிலிருந்து வெளிவரும் மிக மிகச் சிறிய துகள்கள் அல்லது கதிர்கள் பற்றி ஆராயும்போது அவை எந்த அளவு மிகமிகச் சிறிய மிகமிக நுண்ணிய துகள்களாக இருக்கும். அவை எப்படிப்பட்ட துவாரங்களை ஊடுருவும் என்று புரிந்து கொள்ளலாம். அதுவும் எப்படிப்பட்ட வேகத்தில்? ஒளி வேகத்தில், விநாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில். ஆகவே இதன் ஆற்றல் எப்படிப்பட்டதாயிருக்கும் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
- அணுக்கரு ஆற்றலும் இதர ஆற்றல்களும்
- அணுக்கரு ஆற்றல்
- பல்வகை ஆற்றல்கள்
- அணுவின் இயற்பியல் & வேதியியல் பண்புகள்
- அணுவின் வகைகள்
- அணு ஆற்றல் என்றால் என்ன?
- மின் ஆற்றலை வழங்கும் ’செயற்கைச் சூரியன்’கள்
- லேப்டாப் பேட்டரி சக்தியை பராமரிக்க வேண்டுமா!
- அறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும்
- உருப்பெருக்கியை உருவாக்கிய ஜோசப் ஜாக்சன் லிஸ்டர்
- வெப்பமானி எப்போது முதலில் உருவாக்கப்பட்டது?
- புதிய முறையில் மின்சார தயாரிப்பு
- மின்கலத்தில் இயங்கும் இரு சக்கர வண்டி
- டன்னல் டையோடு
- செயற்கை மூளையை உருவாக்க முடியுமா?
- ஒரு பொருளை நாம் பார்ப்பது எப்படி?
- கூடங்குளம் மின்திட்டம் - மாற்று சிந்தனை + எரிபொருள்
- மின்னணுவியல் மூக்கு
- தண்ணீருக்குள் சுவாசிக்க ஒரு திரவ நுரையீரல்
- EPR சோதனை என்பது என்ன?