veerasenan and ganapathyமலேயா தொழிலாளர்கள், தமிழர்களின் எழுச்சிக்கு வித்திட்ட தோழர் ’மலேயா’ கணபதி, தோழர் வீரசேனன் - 71 ஆம் ஆண்டு வீரவணக்கம்

ஆங்கிலேயரால் பல்வேறு வழிகளில் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு மலேசியாவிற்கு கூலிகளாக கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் தமக்குள்ளாக அரசியல் ஆற்றலாகத் திரள இயலாமல் இருந்தனர். இதில் சாதியும், ஆங்கில அரசின் ஒடுக்குமுறையும் முதன்மையானவை. இந்நிலையில் 1929-ல் பெரியாரின் மலேசியா பயணத்திற்குப் பின் மலேசியா - சிங்கப்பூரிலிருந்த தமிழர்களிடத்தில் பெரிய அளவிலான எழுச்சி உருவாகியிருந்தது. தங்களது சாதிய பிளவுகளைக் கடந்து ஒன்று திரள ஆரம்பித்தனர். தமது அடிமை நிலையிலிருந்து மீளும் கருத்துக்கள் தமிழர்களிடத்தில் பரவின.

சஞ்சிக் கூலிகள் என்றழைக்கப்பட்ட பெருமளவில் உழைப்புச் சுரண்டலில் சிக்குண்டிருந்த, அடிமைகளாக நடத்தப்பட்ட தமிழர்கள், பெரியாரின் மானமிகு பேச்சினால் அவர்களது உரிமையைக் கோரும் நிலைக்கு மாறியிருந்தனர். முதலாளிகள் வந்தால் காலணிகளைக் கழட்டி கையில் வைத்துக் கொள்வதிலிருந்து மாறி காலணிகளை அணிந்தே நடக்கத் தொடங்கினர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஆங்கிலேய காலனிக்கு கீழ் ஒன்றாக இருந்த மலேயா (மலேசியா) சிங்கப்பூர்-ல் கூலிகளாக இருந்த தொழிலாளர்கள், ஆங்கிலேய காலனியத்திற்கு எதிராகவும், தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட உழைப்புச் சுரண்டலுக்கும் எதிராகவும் பெருமளவில் அணியமானார்கள். இந்த எழுச்சியை சாத்தியமாக்கியவர் மலேயா கணபதி. புரட்சிகர செயல்பாட்டில் ஈடுபட்ட கணபதியுடன் இணைந்து செயல்பட்டவர் வீர சேனன்.

மலேயா கணபதியும் சிங்கப்பூர் வீரசேனனும்:

தோழர். மலேயா கணபதி அகில மலேயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக இருந்தவர். 1912-ல் தமிழ்நாட்டில் ஆறுமுகத் தேவர் - வைரம்மாள் ஆகியோருக்கு மகனாக தம்பிக்கோட்டை எனும் ஊரில் பிறந்தவர்.

தோழர். வீரசேனன் சிங்கப்பூர் பொதுத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும் துறைமுகத் தொழிலாளர் சங்கச் செயலாளராகவும் இருந்தவர். மலேயா கணபதிக்குப் பிறகு மலேயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராகவும் இருந்தார். இவர் 1927 ஆம் ஆண்டு பிறந்தவர் என்பதைத் தவிர அவரைப் பற்றிய வேறு தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.

தொழிலாளர்கள் போராட்டம்:

மலேயா கணபதியும் வீரசேனனும் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் தொழிலாளர்களை பெருமளவில் ஒன்றிணைத்து அடிப்படை தொழிலாளர் உரிமைக்கான பல்வேறு வெற்றிகரமான போராட்டங்களை முன்னெடுத்தனர். மேலும், இந்திய விடுதலைப் போராட்டத்திலும் தங்களை இணைத்துக் கொண்டு நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்திலும் பங்காற்றினர். பின்னர், 1946 ஆம் ஆண்டு முதல் இருவரும் இணைந்து தொழிலாளர் உரிமைக்காக களம் கண்டனர். பல்வேறு பொது வேலை நிறுத்தங்களை அரசே அஞ்சும்படி நடத்தினர்.

எடுத்துக்காட்டாக, 1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ராபின்சன் பூங்காவில் மிகப் பெரிய அளவில் தொழிலாளர்களது போராட்டம் நடைபெற்றது. அதில் மலேயா கணபதி, வீரசேனன், சம்சுதீன் ஆகியோர் வீர உரை ஆற்றினார்கள். அவர்களது உரை தொழிலாளர்களது உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பியது. அவர்களை ஒடுக்க நினைத்த அரசு கைது செய்ய முயற்சி செய்தபோது, ஆங்கிலேய காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. அதில் இரண்டு சீனத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஆனால், அந்த எழுச்சி மிகு பேரணியின் விளைவாக தொழிலாளர்களின் கோரிக்கைகள் பல அரசால் நிறைவேற்றப்பட்டன.

இப்படியாக தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டங்கள் தொடர்ந்தன. குறிப்பாக, 1947 ஆம் ஆண்டு வாரத்துக்கு இரண்டு நாள் வேலைநிறுத்தம் என்ற கணக்கில் அந்த ஆண்டு மட்டும் 89 தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் நடத்தப்பட்டன. 1946,1947,1948 ஆம் ஆண்டுகளில் தொழிலாளர்களால் மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

தொழிலாளர்களது வேலைநிறுத்தங்கள் நாள்களில் தொடங்கி வாரங்கள், பிறகு மாதங்களாக நீடித்தன. அவற்றிற்குத் தலைமை தாங்கிய மலேயா கணபதி மற்றும் வீரசேனன் ஆகியோரை அச்சுறுத்தலாக அரசும் முதலாளிகளும் பார்த்தனர். இதுமட்டுமல்லாமல், மலேயா கம்யூனிசக் கட்சி, அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், 1948 ஆம் ஆண்டு மலேசிய - சிங்கப்பூர் மண்ணில் ஆங்கிலேய அரசால் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. கம்யூனிசக் கட்சி உறுப்பினர்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு மலேயா தொழிற்சங்க சம்மேளனத்தின் அலுவலகத்தில் தொடர் சோதனைகளை காவல்துறை நடத்தியது.

அரசுக்கு எதிரான தலைவர்களையும் தொழிலாளர் தலைவர்களையும், கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்பிருப்பவர்கள் என்று கூறி கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியது அரசு. இதனால், மலேயா கம்யூனிச கட்சியினைச் சேர்ந்தவர்கள் காடுகளில் தஞ்சம் அடைந்து அங்கிருந்து போராட்டங்களை ஒருங்கிணைக்கத் தொடங்கினர். மலேயா கணபதியும் காடுகளில் தலைமறைவாகி, தொழிலாளர் போராட்டங்களை ஒருங்கிணைக்க முயற்சி செய்தார்.

தூக்கு மேடையிலும் தொழிலாளர் நலன் முழங்கிய தோழர்.மலேயா கணபதி:

1948 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மலேயா கணபதி ஆங்கிலேய காவல் துறையால் கைது செய்யப்பட்டார். 'அவர் ஒரு கம்யூனிஸ்ட், அவர் கம்யூனிஸ்ட்டுகளுக்கு உதவுகிறார் என்று நம்பப்படுகிறார், கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து ஆட்சியைக் கைப்பற்ற ஆயுதப் போர் செய்வார், கைது செய்த போது துப்பாக்கியுடன் ஆறு தோட்டக்களை வைத்திருந்தார்’ ஆகிய காரணங்களுக்காக அவசரகால சட்டத்தின்படி அவருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, குத்தூசி குருசாமி, ப.ஜீவானந்தம், பி.இராமமூர்த்தி, கல்யாணசுந்தரம், சிந்தன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். தூக்கு தண்டனையைத் தவிர்க்க வேண்டும் என்பதாக ஜவஹர்லால் நேரு பிரிட்டனுக்கான இந்தியத் தூதுவர் மூலம் நேரடி முயற்சிகளை மேற்கொண்டார்.

தண்டனைக்கு எதிராக மலேயா கணபதி மேல்முறையீடு செய்தார். அதில் அவருக்கான தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. முதலில் நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டு பின்னர், மலேயா கணபதிக்கு 4.05.1949-ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் சிறையில் இருந்த தொழிலாளர்களிடத்தில் தமிழிலும், சீன மொழியிலும் உணர்ச்சிமிக்க உரையினை நிகழ்த்தினார் மலேயா கணபதி. தன்னோடு மக்களுக்கான மற்றும் தொழிலாளர்களுக்கான போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டவர்களை நினைவு கூர்ந்து, தன்னாட்சி, மக்கள் விடுதலை, தொழிலாளர் உரிமை என்று தொழிலாளர்களிடம் தன்னிடம் கனன்ற நெருப்பினைக் கடத்துவதாக உரையாற்றினார்.

தூக்கிலிடும் முன்னும், ”மலேயா மண் மாற்றாரிடமிருந்து விடுதலை பெறட்டும், மலேயா நாட்டுத் தொழிலாளர் வர்க்கம் வெற்றி காணட்டும், மலேயா நாட்டு மக்களுக்குப் புதிய வாழ்வு மலரட்டும், மலேயா மட்டுமின்றி உலகின் எந்தவொரு பகுதியிலும் அடிமைத்தனம் விரைந்து முடிவிற்கு வரட்டும், இதுவே எனது இறுதியான உறுதியான விருப்பம், வாழ்க வையகம்!” என்று தூக்கு மேடையிலும் மக்களைப் பற்றி சிந்தித்த மாபெரும் போராளி மலேயா கணபதி.

‘மாமனிதர் கணபதிக்கு மறைவு ஏது?

காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ?

கரைசேற்றால் தாமரையின் வாசம் போமோ?

பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மையாமோ?

பிறர் சூழ்ச்சி செந்தமிழை அழிப்பதுண்டோ?

நேர் இருத்தித் தீர்ப்புரைத்துச் சிறையில் போட்டால் நிறை தொழிலாளர்களுணர்வு மறைந்த போமோ?’

என்று மலேயா கணபதி பற்றி உணர்ச்சிமிகு வரிகளை பாரதிதாசன் எழுதினார்.

தோழர். வீரசேனன் கொலை:

மலேயா கணபதி தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நாள் முன்பு (3.05.1949) ஜெலுபூ எனும் இடத்தில் நடைபெற்ற ஆயுதம் ஏந்திய தாக்குதலில் ஆங்கிலேய சிப்பாயால் வீரசேனன் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது 22!

தோழர். மலேயா கணபதி மற்றும் தோழர். வீரசேனன் தொழிலாளர்களது உரிமைக்காகவும், மக்களின் உரிமைக்காகவும் பல்வேறு போராட்டங்களை அரசுக்கு எதிராக நிகழ்த்தி மலேசியா - சிங்கப்பூர் மண்ணில் ஆங்கிலேய அரசுக்கு பெரும் மிரட்டலாக இருந்தனர். இவர்களது வரலாறு தமிழ்ச் சமூகத்துக்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. தமிழ் மக்களுக்காகவும் தொழிலாளர் நலனுக்காகவும் உயிரையும் துச்சமென மதிக்காமல் போராடி உயிர்த் தியாகம் செய்த தோழர். மலேயா கணபதிக்கும், தோழர். வீரசேனனுக்கும் 71ஆம் ஆண்டு வீரவணக்கம் செலுத்துவோம். புலம்பெயர் தேசத்தில் கணக்கின்றி சுரண்டப்பட்ட தமிழ்த் தொழிலாளர்களுக்கும், ஆங்கில அரசினால் இது போல சுரண்டப்பட்ட பல தேசியத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அயராது போராடி சாவைத் தழுவிய வீரத்தமிழர்கள், பொதுவுடைமைப் போராளிகள், தொழிலாளர் தலைவர்களான இருவருக்கும் தாய்த் தமிழகத்திலிருந்து வீரவணக்கம் செலுத்துவோம்.

- மே 17 இயக்கக் குரல்

Pin It