தமிழ் நாவல் சிறப்பிதழ் (1990 -2010)

கடந்த நான்கு இதழ்களிலும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பொருண்மையைக் கவனப்படுத்தினோம். கால்டுவெல், இந்தியப் பொருளாதாரம், கல்வி மற்றும் ரோஜா முத்தையா நூலகம் என அப்பொருண்மைகள் அமைந்தன. இந்தப் போக்கில் அண்மைக்காலத் தமிழ் நாவல்களின் (1990 -2010) சிறப்பிதழாக, இவ்விதழை வடிவமைக்க முயன்றுள்ளோம். முழுமையாகச் செய்ய முடியவில்லை. மாறாக இக்காலப் போக்கைப் பதிவு செய்திருப்பதாகக் கருதுகிறோம். வருங்காலத்தில் இக்காலத்திய நாவல் குறித்து ஒரு கலைக்களஞ்சியம் உருவாக்குவதற்கு இவ்விதழ் தடம் போட முயன்றுள்ளது. தமிழ் நாவல் வரலாற்றை இவ்வகைப் போக்கில் எழுதத் தூண்டுவதாக இவ்விதழ் அமையும் என்று நம்புகிறோம்.

தமிழ்ப் புனைகதை மரபின் புதிய வெளிகள் (1990 -2010)

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் உருவான தமிழ்ப் புனைகதை மரபு, இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் புதிய பரிமாணத்தை உள்வாங்கியுள்ளது. இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தமிழ்ப் புனைகதை வெளி முன்மரபுகளின் வளங்களை உள்வாங்கி அடுத்த பரிமாணத்தை நோக்கி செல்வதாகக் கருதலாம். இதனைக் கீழ்க்காணும் முறைகளின் வழி உரையாடலுக்கு உட்படுத்தலாம்.

1990 - 2010 என்ற காலப் பகுதியில், தமிழில் சுமார் ஐம்பது புதிய படைப்பாளர்கள், புனைகதைக் துறையில் உருவாகியுள்ளனர். ஐம்பது பேரில் சுமார் முப்பது பேர் பெரிதும் கவனத்துக்குரிய படைப்பாளர்கள். முப்பது பேரில் மூன்று வகையான புனைவுப் பரிமாணங்களை நாம் உள்வாங்க முடிகிறது.

கடந்த இருபது ஆண்டுகளின் தமிழ்ப் படைப்புச் சூழல் முன்னி ருந்த தன்மைகளிலிருந்து வேறுபட்டு உருவாகியுள்ளது. கதைசொல் லும் முறை, கதைக்குத் தேர்வு செய்யும் பொருண்மை ஆகியவை குறித்த உரையாடல்கள் 1980களில் தொடங்கியது. 1990களில் பல்வேறு புதிய கதை சொல்லும் முறையில் புனைவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இக்காலப் பகுதிகளில் புனைகதைப் படைப்பாளர்கள் யார் எவர்? என்ற பட்டியலை உருவாக்கினால் சுமார் ஐம்பது பேர் தேறுகிறார்கள். இவர்களின் நாவல் ஆக்கங்கள் மட்டும் சுமார் 120 தேறுகிறது. ஒரு மொழியில் இருபது ஆண்டுகளில் இவ்வளவு எண்ணிக்கையில் உருப் பெறுவது, அம்மொழியின் வளத்தைக் காட்டுகிறது. கடந்த இருபது ஆண்டுகளின் தமிழ்ப் புனைகதை மரபை அறிய விரும்பும் வாசிப்பாளர், இவ்வளவு ஆக்கங்களையும் வாசிக்க வேண்டும். இதற்கு முந்திய ஆண்டுகளில் உருவான ஆக்கங்களிலிருந்து, இந்த இருபது ஆண்டு களில் உருவானவை எண்ணிக்கை அளவிலும் அதிகம் என்றே கூறமுடியும். இத்தன்மையை நாம் அக்கறையோடு கவனப்படுத்தி உரையாடலுக்கு உட்படுத்துவது அவசியம்.

மேற்குறிப்பிட்ட ஐம்பது படைப்பாளர்களுள் சுமார் முப்பது பேரின் மொழி புதிதாக இருக்கிறது. ஒரு பிரிவினர் முற்றிலும் புதிய மொழியில் எழுதுகிறார்கள். இன்னொரு பிரிவினர் பழைய மொழியும் புதிய மொழியும் இணைந்த வடிவத்தில் செயல்படுகிறார்கள். பிறிதொரு மரபினர் பழைய மொழியின் தொடர்ச்சியாகப் புதிய பொருண்மைகளைக் கதை சொல்வ தற்குத் தேர்வு செய்துள்ளனர். இந்த மரபைக் கீழ்க்காணும் சுமார் முப்பது படைப்பாளிகளின் ஆக்கங்களை, நமது வசதிக்காக வரிசைப்படுத்திக் கொள்ளலாம். (இத்தன்மை க.நா.சு.வின் பட்டியல் மரபைச் சார்ந்ததன்று)

- ஜோ - டி -குரூஸ், பிரான்சிஸ் கிருபா, பா. வெங்கடேசன், கோபாலகிருஷ்ணன், கோணங்கி, எம்.ஜி.சுரேஷ், ஜெயமோகன், சு.வெங்கடேசன், எஸ்.இராமகிருஷ்ணன், சல்மா ஆகியோர் ஆக்கங்கள் தமிழில் புதிய பொருண்மையும் காவிய மரபை உள்வாங்கும் எத்தனங்களையும் கொண்டிருப்பதாகக் கருத முடியும்.

- லட்சுமி மணிவண்ணன், யூமா வாசுகி, தமிழவன், யுவன் சந்திரசேகர், சுதேசமித்திரன், கோபிகிருஷ்ணன், தஞ்சை ப்ரகாஷ் மற்றும் உமா மகேஸ்வரி ஆக்கங்கள், புதிய மொழியில் அமைந்த கதை சொல்லலாக அமைகிறது. இவர்கள் தேடும் பொருண்மையும் முன்னிலிருந்து வேறுபடுகிறது.

- இமையம், சு.தமிழ்ச்செல்வி, பாமா, ச.பாலமுருகன், பெருமாள் முருகன், அழகிய பெரியவன், கீரனூர் ஜாகீர் ராஜா, சோ. தர்மன், கண்மணி குணசேகரன், ராஜ் கௌதமன் மற்றும் சோலை சுந்தரப் பெருமாள் ஆகியோர் மரபான மொழியின் புதிய வளங்களாக அமைகின்றனர்.

இவ்வகையான வேறுபட்ட கதைசொல்லல், தமிழ் நாவல் புனைவில் இதற்குமுன் இருந்த தொடர்ச்சியும் புதிதும் இணைந்து, இதன் மூலம் இன்னொரு மரபைத் தமிழ் நாவல் மரபு உள்வாங்கியுள்ளது. இக்கூறு களை உரையாடலுக்கு உட்படுத்துவது இவ்விதழின் நோக்கமாக அமைகிறது.

மேற்குறித்த உரையாடலில் கீழ்க்காணும் தன்மைகளைக் கவனத்தில் கொள்ளவில்லை.

-      ஈழத்துப் படைப்பாளர்களை மேற்குறித்த உரையாடலுக்குள் கொண்டு வரவில்லை. அதனைத் தனியாகவே மதிப்பிட வேண்டு மென்று கருதுகிறோம்.

-      1990களுக்கு முன்பிலிருந்து எழுதி வரும், படைப்பாளர்களின் ஆக்கங்கள் இக்காலப் பகுதியிலும் வெளிவந்துள்ளன. அதனையும் உரையாடலில் இணைத்துக் கொள்ளவில்லை. (இதற்குப் புற நடையாக அண்மையில் வெளிவந்த பொன்னீலனின் ‘மறுபக்கம்’ குறித்த உரையாடல் இவ்விதழில் மேற்கொள்ளப்பட்டுள்ளது)

-      தமிழில் தலித்தியம், பெண்ணியம் ஆகியவை சார்ந்த கருத்து நிலைகள் இக்காலத்தில்தான் உருப் பெற்றன. புதிய தலித் எழுத்து உருவானது. பெண் கவிஞர்கள் மிக அதிகமாக இக்காலத்தில்தான் எழுதத் தொடங்கினார்கள். இப்பரிமாணத்தையும் இவ்விதழ் கவனத்தில் கொள்ளவில்லை. கவிதை மற்றும் சிறுகதைகளில் உருப்பெற்ற அளவிற்கு இத்தன்மைகள் நாவலில் உருப்பெற்றுள் ளதா? என்ற உரையாடலும் தேவைப்படுகிறது.

-      தலித்தியம், பெண்ணியம் குறித்த உரையாடல்கள் கவனப்படுத்தப் பட்ட அளவிற்கு, தமிழ் நாவல் உருவாக்கத்தின் புதிய தன்மைகள் உரையாடலுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கருதமுடியவில்லை. நாவல் வடிவத்தின் புனைவுவெளிக்குள், பொருண்மைகளின் விரிந்த பரிமாணங்கள் சொல்லபடுகின்றன. இதற்குள் குறிப்பிட்ட கருத்துநிலைச் சார்புகள், கவிதை மற்றும் சிறுகதை மொழியில் வெளிப்படும் முறையில் நாவலில் வெளிப்பட முடியுமா? என்ற உரையாடலையும் முன்னெடுப்பது அவசியம்.

மேற்குறித்த தன்மைக்கு களம் அமைக்கும் வகையில் இச்சிறப்பிதழ் ஆக்கங்களை உரையாடலுக்கு உட்படுத்த வேண்டுமென்று எதிர்பார்க் கிறோம்.

இந்தக் காலச்சூழலில் புதிய படைப்பாளிகளைத் தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்தி பல புதிய நாவல்களை வெளியிட்ட ‘தமிழினி’ பதிப்பகம், குறிப்பாக திரு.வசந்தகுமார் அவர்களுக்கு மாற்றுவெளி தனது நன்றியைப் பதிவு செய்ய விரும்புகிறது.

Pin It