தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில்

முதல் முறையாக

தமிழ் நிகழ்ச்சி

எப்போது ஒளிபரப்பாகும்?

 

ரயில் தண்டவாளத்தில்

நிற்கும் கைகாட்டி

மரமாய்

நின்று கொண்டு

கடலை போடும்

தொகுப்பாளர்களின்

தொண்டைச்சிறையில்

சிக்கித்தவிக்கும்

எம்மொழி தமிழுக்கு

எப்போது கிடைக்கும் விடுதலை?

 

பிறந்ததில் இருந்து

தாலாட்டுக் கேட்டு வளர்ந்து

சாகும் போது

ஒப்பாரியோடு முடியும்

தமிழனின் வாழ்க்கையில்

அன்றாடம் கடக்கும்

நான்ஸ்டாப் பாடல்களின்

தொல்லையின் எல்லை எது?

 

கேள்விகள்

கொசுவர்த்திச்சுருளாய்

படம் காட்டுகின்றன.

 

கோலிவுட் படத்தில்

பெரும்பாலானோர்

தமிங்கிலம் பேச

ஹாலிவுட் படத்தில்

மிருகம் கூட தமிழ் பேசுகிறது.

 

பசும்பால் குடிக்கும்

குழந்தைச்செல்வங்களை விட

பசுமாடுகளே

இப்போது தமிழை

நன்றாக உச்சரிக்கின்றன.

 

குழந்தைகளில்

கழுத்தில் தொங்கும் "டை" போல

ஊசலாடிக்கொண்டிருக்கிறது

ஆரம்பப்பள்ளிகளில்

தமிழ்.

 

தமிழ்ப்படங்களுக்கு

தமிழில் பெயர் வைத்தால்

மானியம்.. . .

நன்றாய்த் தான்

வளர்க்கிறார்கள்

தமிழை.. . .  போ !

 

குப்பைத் தொட்டி கூட

"யூஸ்மீ" என்கிறது.

"டஸ்ட்பின்னாய்" மாறுகிறது

வீடுகளில் தமிழ்.

அம்மாக்கள் மம்மிகளாக

அழுகி நாறுகிறது மொழி.

 

சாலைகளில்

ஆலைகளில்

நீதிமன்றங்களில்

கோவில்களில்

தொலைக்காட்சிகளில்

பள்ளிகளில்

எங்கும் இல்லை

கலப்படமற்ற தமிழ்.

 

கணவாய் வழியாக வந்த மொழி

கோவில்களில்  . . . . .

கப்பல் மூலம் வந்த மொழி

ஆட்சிக் கட்டிலில்.

அன்னைத்தமிழ் மொழி

அனாதையாகத் தெருவில் .  .  .

 

- ப.கவிதா குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It