சசிகலா, தினகரன், எடப்பாடி, ஓபிஎஸ் ஆகிய நால்வரும் இணைந்தால் சதியும் விதியும் இணைந்த கதையாகத்தான் இருக்கும். இந்த நால்வராலும் மக்களாட்சிக்கு வர முடியாது. அந்த அளவுக்கு சொத்துக்களை குவித்திருக்கிறார்கள். ஊரைக் கொள்ளை அடித்து உலையில் போட்டிருக்கிறார்கள்.

இவர்களால் தமிழ் நாட்டுக்கு என்ன இலாபம் கிடைத்திருக்கிறது? தமிழ் நாட்டுக்காக இவர்கள் சாதித்தது என்ன? எந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி இருக்கிறார்கள்? ஏழை எளிய மக்களுக்கு இவர்கள் அள்ளிக் கொடுத்தது எவ்வளவு? கடனில் தத்தளிக்கும் பொதுமக்கள் எத்தனை பேருக்கு உதவிக்கரம் நீட்டி அவர்களை வாழ வைத்திருக்கிறார்கள்?

Stalin and thoppu venkadasalamகந்து வட்டிக்காரர்களின் பிடியில் சிக்கி, அன்றாடம் செத்துப் பிழைக்கும் சிறு தொழில் செய்வோர் எத்தனை பேருக்கு, வங்கிக் கடன் பெற்றுத் தந்து அவர்களுக்கு மறு வாழ்வு கொடுத்திருக்கிறார்கள்?

சசிகலா, தினகரன், எடப்பாடி, ஓபிஎஸ் இவர்கள் நால்வரும் நடிப்பதில் வல்லவர்கள். மோசடியில் கில்லாடிகள். மக்களை மயக்குவதில் மாமேதைகள். இதுவரை சேர்த்தது போதாதென்று மீண்டும் ஓர் அவதாரம் எடுக்க எத்தனிக்கிறார்கள். மீண்டும் “ராஜா ராணி” ஆட்சியைக் கொண்டு வரத் துடிக்கிறார்கள்.

இவர்கள் நால்வரும் சேர்ந்து விட்டால், தமிழகத்தில் ஏதோ அதிசயம் நடந்து விடும் என்று நினைக்கிறார்கள். வினை விதைத்தவர்கள் வினை அறுக்காமல் எப்படித் தப்பிக்க முடியும்? செய்த பாவங்களுக்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்? அதுவே விதி.

சசிகலா, தினகரன், எடப்பாடி, ஓபிஎஸ் ஆகிய நால்வரையும் ஒன்று திரட்டி, கூட்டணி அமைத்து வருங்காலத் தேர்தல்களைச் சந்திக்க பாஜக கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதில் வெற்றி கிட்டலாம். ஆனால் தேர்தல் வெற்றி என்பது பாஜகவுக்கு பகல் கனவாகவே முடியும். ஏனெனில் பாஜகவுக்கென எந்த ஆளுமையும் தமிழகத்தில் இல்லை. சரியான தலைமை இல்லை.

குறிப்பாக நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க மறுப்பது, புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற ஒப்புக் கொள்ளாதது போன்றவை தமிழக மக்களிடம் ஒரு வெறுப்பை ஏற்படுத்தி இருப்பதை பாஜக உணர்ந்து கொள்ள மறுக்கிறது. அது பாஜக மீது தமிழக மக்கள் வைத்துள்ள வெறுப்பை கடந்த சட்ட சபைத் தேர்தல் மூலம் வேகப்படுத்தி விட்டது.

இந்த எதிர்ப்பு தற்போது கொழுந்து விட்டு எரிகிறது. இனி அதை அணைக்க முடியாது. பாஜக கூட்டணி, வரும் தேரதல்களிலும் படுதோல்வியைச் சந்திக்கப் போகிறது. குறிப்பாக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 38 இடங்களை இழந்த பாஜக கூட்டணி இம்முறை 39 இடங்களையும் இழக்கப் போகிறது.

சசிகலா, தினகரன், எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர் இடையே ஒற்றைத் தலைமையை உருவாக்குவதிலுள்ள இழுபறியால் இவர்கள் நால்வர் மீதும் எம்ஜிஆர், ஜெயலலிதாவை நம்பி அரசியலுக்கு வந்தவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இந்த நால்வரும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகழை நிலை நிறுத்தப் போவதில்லை என்ற நிலைக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் வந்து விட்டார்கள். இனி இவர்களை நம்பிப் பயனில்லை; வேறு கட்சியில் சேர்வதே காலத்தின் கட்டாயம் என்ற முடிவையும் எடுத்து விட்டார்கள்.

அவர்களில் பெரும்பாலோர் திமுகவையே தேர்ந்தெடுப்பதைப் பார்க்க முடிகிறது; ஏனெனில் இவர்களை இருகரம் நீட்டி வரவேற்க, திமுக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறது. திமுக ஆட்சி மன்னர் ஆட்சியல்ல; மக்களாட்சி என்பதை எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் நன்கு புரிந்து கொண்டார்கள்.

எனவேதான் அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் தீவிர விசுவாசிகளும், அவர்கள் வழி வந்தவர்களும் வேறெங்கும் செல்லாமல் திமுகவை நோக்கி அலை அலையாய், அணி அணியாய் , படையெடுத்து வருகிறார்கள்.

வரும் எல்லாத் தேர்தல்களிலும் திமுகவுகே வெற்றி என்ற கோஷத்தோடு வருகிறார்கள். 2024 பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றும் என்ற முழக்கத்தோடு வருகிறார்கள். அவர்கள் வருகையை எதிர்கொள்ள முடியாமல் அண்ணா அறிவாலயம் திக்கு முக்காடி வருகிறது. வந்தோரை வரவேற்கிறார், வாழ்த்துகிறார், மு. க. ஸ்டாலின் - இது ஒரு நாளல்ல, இரு நாளல்ல, ஒவ்வொரு நாளும்;

- அ. திருமலை, தேனி மாவட்டம்

Pin It