கீற்றில் தேட...

மார்ச் 20, 2022 அன்று தமிழ்த் தேச நடுவம் சார்பில் ‘பாவலரேறு தமிழ்க் களத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸை தடை செய்ய வேண்டும் - ஏன்?’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் சுருக்கம்:

தமிழ்த் தேச நடுவத்தின் சார்பில் ஆர்.எஸ்.எஸ்.சை தடை செய்க என்ற முழக்கத்துடன் தோழர் பொழிலன், இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல; அது பார்ப்பனியத் துக்கான கருத்தாக்கம். அமைப்பை தடை செய்தாலும் அதன் பாசிச பார்ப்பனிய கருத்தாக்கத்தை எதிர்ப்பு இயக்கங்கள் வழியாகவே தடுத்து நிறுத்த முடியும். ஏற்கனவே அவசர நிலை காலத்திலும், காந்தி கொலையின் போதும், பாபர் மசூதி இடிப்பின் போதும் தடை செய்யப்பட்ட அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ்., ஆனாலும் அது தடைகளிலிருந்து தந்திரமாக மீண்டு வந்து தனது செயல்பாடுகளை திரைமறைவாகவும், வெளிப்படையாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது ஒன்றிய ஆட்சியை இயக்கும் ‘மூளை’யாகவும் இயங்குகிறது. எனவே ‘தடை செய்’ என்ற நமது முழக்கம், அதன் பார்ப்பனிய கருத்தியல்களைத் தோலுரிக்கும் இயக்கத்தின் ஒரு பரப்புரையே தவிர, அரசு அதிகாரத்தைக் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பது அல்ல.

இங்கே தோழர் பொழிலன், ஏராளமான வரலாற்றுச் சான்றுகளோடு மிகச் சிறந்த உரையாற்றினார். தனது கொள்கைகளுக்கு எதிராக இருந்தவர்களைக் கொண்டே தந்திரமாக தனது திட்டங்களைச் சாதுர்யமாக எப்படி செயல் படுத்தி வருகிறது என்ற நுட்பமான கருத்துகளை முன்வைத்தார். லால்பகதூர் சாஸ்திரி, நேரு அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தபோது ‘குடிஅரசு’ தின அணி வகுப்பில் லால்பகதூர் செல்வாக்கைப் பயன்படுத்தி, தனது சீருடையுடன் அணி வகுந்து வந்தது ஆர்.எஸ்.எஸ். பிறகு பிரதமர் நேரு இதை அறிந்து லால்பகதூரைக் கண்டித்தார். கன்யாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தை உருவாக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து இயக்கம் - காங்கிரஸ் ஆட்சியிலேயே எப்படி தந்திரமாக ஒப்புதல் பெற்றார்கள் என்ற செய்திகளையும் பொழிலன் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டு களாக தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க.வைப் பயன்படுத்தி தங்களது செயல் திட்டங்களை நிறைவேற்றி தமிழ்நட்டில் வலுவாகக் காலூன்ற வேண்டும் என்ற திட்டத்துக்கு பயன்படுத்திக் கொண்டார்கள்.

சூழ்ச்சிகரமான திட்டங்களோடு பல்வேறு முகமூடிகளை அணிந்து வரும் ஆர்.எஸ்.எஸ்.ஸை தமிழ்நாட்டில் நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது நமக்குள் உள்ள ஒரு கேள்வி. இதற்காக ஒரு வரலாற்று அணியை நாம் உருவாக்க வேண்டும். அந்த அணி பரந்த அளவில் விரிவான தளத்தில் நாம் சார்ந்த இயக்கம், அமைப்புகளுக்கு முன் னுரிமை தராமல் ஆபத்தை முறியடிப்பதற்கான முதன்மை நோக்கத்தோடு புரிதல் உணர்வு களுடன் செயலாற்ற வேண்டும். இது வரலாற்றுக் கடமை. இதைச் செய்யத் தவறினால் தமிழ்நாட்டில் நாம் கட்டி எழுப்பிய தனித்துவங்களைப் படிப்படியாக இழக்கும் ஆபத்துகளைச் சந்திக்க நேரிடும் என்ற உணர்வோடு அந்த அணி உருவாக வேண்டும்.

ஆக இந்த எதிர்ப்பை நாம் எப்படி முன் நகர்த்துவது, இளைஞர்களை எப்படி அணி திரட்டுவது, தமிழ்நாடு ஒரு மதவெறி பூமியாக மாறிவிடக் கூடாது. தமிழ்நாடு தனக்கென்ற ஒரு அடையாளத்திற்குள் அதற்கான உரிமைப் பதாகையை உயர்த்திப் பிடிப்பதற்குப் போராடு வதற்கு இங்கு இருக்கிற இளைஞர்களை இன்னும் சொல்லப் போனால் இந்து மதம் எது? இந்துத்துவா எது? என்பதைப் புரிந்து கொள்ளாமல் குழம்பிக் கிடக்கின்ற மக்களை, இளைஞர்களைத் திரட்டி ஒரு அணியிலே கொண்டு வருவதற்கான செயல் உத்திகளாக நாம் எதை வகுக்கப் போகிறோம்? இவை குறித்து சிந்திக்க வேண்டும்.

இப்போது நான் வெளிப்படையாகவே பேசுகிறேன். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி வந்திருக் கிறது. இந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அப்படியே பெரியாருடைய கொள்கைகளை ஏற்றுக் கொண்ட கட்சி, திராவிட நாட்டுப் பிரிவினை இலட்சியத்தை நாத்திக கருத்துகளை ஏற்றுக் கொண்ட கட்சி அதே உணர்வுடன் இன்று ஆட்சி அதிகாரத்திலே வந்து அமர்ந் திருக்கிறதா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை.

ஆட்சிக்கு என்று ஒரு எல்லை உண்டு. இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். மக்கள் உணர்வுகளை மதித்து செயல்பட்டால்தான் தேர்தலில் வாக்குகளைப் பெற முடியும். இந்நிலையில்தான் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியாக இருந்தாலும் செயல்பட வேண்டி யிருக்கிறது. ஆட்சியின் நோக்கம் ஆட்சியை கட்சியை வழி நடத்தும் தலைமையின் கொள்கை நமக்கு எதிராக இருக்கிறதா அல்லது உடன்பாடாக இருக்கிறதா என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் பா.ஜ.க.வை வன்மையாக எதிர்க்கக் கூடிய கட்சியாக மாநில உரிமைகளுக்கு மொழி, இன உரிமைகளுக்கு, கல்வி, பொருளியல் உரிமை களுக்கு குரல் கொடுக்கும் கட்சியாக தி.மு.க. ஆட்சி மட்டும் தான் இருக்கிறது.

ஊழலிலே திளைத்த ஜெயலலிதாவை உச்சி மீது பார்ப்பனர்கள் தூக்கி வைத்துக் கொண்டா டினார்கள். அவர்களின் குருவான சங்கராச்சாரியை கைது செய்த நிலையிலும் ஜெயலலிதாவை பகைத்துக் கொள்ள தயாராக இல்லை. ஒரு சங்கராச்சாரி போனால், வேறு ஒருவர் வருவார். ஆனால், அரசியலில் ஒரு ஜெயலலிதா போய் விட்டால், வேறு ஒரு தலைவரை நமக்காக இங்கே உருவாக்கவே முடியாது என்ற தெளிவான புரிதல் அவர்களுக்கு இருந்தது.

இப்போது தி.மு.க.வை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற பதைப்புடன் எதிரிகள் களத்தில் நிற்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே அவர்களின் உண்மையான விருப்பம். அதற்கு வாய்ப்பில்லை என்கிறபோது அ.இ.அ.தி.மு.க.வை அது எவ்வளவு மோசமான நிர்வாகத்தை நடத்தினாலும் பாராட்டு கிறார்கள். சிறு எதிர்ப்பைக் கூட வெளிப்படுத்த தயாராக இல்லை.

ஆட்சிக்கு ஆதரவாக இருந்த குறைகளை தவறுகளை பொறுப்புடன் சுட்டிக் காட்டுவது நமது கடமை. ஆட்சியையே வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அணுகுவது பார்ப்பனி யத்துக்கும் ஒன்றிய ஆட்சியின் அடக்கு முறைகளுக்குமே வலிமை சேர்க்கும்.

சில நல்ல செயல்கள் ஒரு ஆட்சியில் இருந்து வருகிறது என்று சொன்னால் அந்த ஆட்சிக்குப் பாஜகவிடம் இருந்தும் எதிர்ப்பு வருகிறது. இந்துத்துவாவிடமிருந்தும் எதிர்ப்பு வருகிறது. நம்மைப் போன்ற முற்போக்கு சக்திகளிட மிருந்தும் என்ன குறை கண்டுபிடிக்க முடியும் என்று அதைக் கண்டுபிடித்து இங்கிருந்தும் அந்த எதிர்ப்பு வருகிறது. அப்படி இரண்டு எதிர்ப்புகளையும் தாங்கிக் கொண்டு ஒரு ஆட்சி என்ன செய்யும்? ஆட்சி எந்தப் பக்கம் சாய்வது என்று முடிவெடுக்க முடியாத சூழ்நிலைக்கு நாமே தள்ளி விடக் கூடாது.

உதாரணத்திற்கு நான் ஒன்று சொல்கிறேன். தமிழ்நாடு அரசின் ஒரு அறிவிப்பு நேற்று வந்திருக்கிறது. ஏற்கெனவே மூவலூர் ராமாமிர்தத்தம்மையார் திட்டம் என்ற ஒரு திட்டம் அந்தத் திட்டம் பத்தாவது படிக்கின்ற மாணவிகளுக்கு ரூ.50,000, ரூ.1,00,000 என்று பணம் கொடுத்து உதவுகின்ற ஒரு திட்டமாக ஏற்கெனவே இருந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு அந்தத் திட்டத்தில் ஒரு புதிய பிரிவை நுழைத்தார். என்ன பிரிவு? 10ஆவது 12ஆவது படித்த மாணவிகளுக்குத் திருமணம் என்று சொன்னால் அதற்கு அரசாங்கம் 8 கிராம் தாலி வாங்குவதற்கு தங்கம் கொடுக்கும் என்ற ஒரு திட்டத்தை அதில் கொண்டுவந்தார் ஜெயலலிதா. கல்வி வளர்ச்சிக்கான திட்டத்தை நம்முடைய பார்வையில் சொல்லப்போனால் பெண்களை அடிமைப்படுத்துகிற ஒரு தாலியினுடைய சின்னத்தை பயன்படுத்துவதற்கான ஒரு திட்டமாக மாற்றினார்.

இந்தத் திட்டம் நூற்றுக்கு 90ரூ முறை கேடாகப் பயன்பட்டது. மோசடியாக பல திருமணங்கள் நடக்கிறது என்று கண்டுபிடிக்கப் பட்டது. அது பயனில்லாத ஒரு திட்டமாக மாறிப்போய் இன்னும் சொல்லப் போனால் அது பால்ய விவாகத்தைத் தடுக்கும் வரதட் சணையைத் தடுக்கும் என்ற பிரச்சனைகளை எல்லாம் எதிர் பார்த்துக் கொண்டு வந்த திட்டம் அதிலும் வெற்றி பெற முடியவில்லை என்ற நிலையில் இப்பொழுது அரசு என்ன முடிவு எடுத்து இருக்கிறது? தாலிக்கு தங்கம் கொடுப் பதை நிறுத்தி, 12ஆவது படித்த மாணவிகள் அரசுப் பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வி எவ்வளவு தூரம் படிக்கிறார்களோ அதுவரைக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குகிற ஒரு திட்டமாக அதை மாற்றி அமைத்திருக்கிறது.

ஆக தாலி என்ற மத அடையாளம் நீக்கப்பட் டிருக்கிறது. குடும்ப வாழ்க்கை என்ற நிகழ்வுக்குத் தரப்படுகின்ற உதவியைவிட அவர் களுடைய கல்வி வளர்ச்சிக்குத் தரப்படுகின்ற உதவி முக்கியம் பெண்ணுரிமை கல்வி எனும் முற்போக்கு பார்வையோடு அந்தத் திட்டம் வருகிறபோது பெண்ணுரிமையைப் பேசுகிற பெண் விடுதலையை பேசுகிற மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மகளிரணி தாலி வழங்கும் திட்டத்தை நிறுத்தாதே என்று எதிர்க்கிறது. தி.மு.க.வை எதிர்க்கும் அத்தனை கட்சிகளும் இதை எதிர்த்தன. அந்தக் கருத்தை நாமும் சேர்ந்து கொண்டு ஒழிக்கலாமா.

இதில் அடங்கி இருக்கிற பிரச்சனை என்னவென்று பார்க்க வேண்டாமா?

(அடுத்த இதழில் முடியும்)

- விடுதலை இராசேந்திரன்