Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureBook Review
புத்தக விமர்சனம்

பாரதி புத்தகலாயத்தின் 100 புத்தகங்கள் - ஒரு பருந்துப் பார்வை
ச.தமிழ்ச்செல்வன்


Bharathi ஸ்தாபனத்தைப் பற்றி..
ஸ்டாலின்
தமிழில் : வீ.பா.கணேசன்
(24 பக்கம் ரூ.5)

நம்மில் சிலர், கட்சி தனது சரியான பாதையைத் தீர்மானித்து, அதைப்பற்றி பலத்த பிரச்சாரம் செய்து பொதுவான கொள்கைகளாகவும் தீர்மானங்களாகவும் ஒருமனதாக நிறைவேற்றிவிட்டால் எல்லாப் பகுதிகளிலும் வெற்றி தானாகவே வந்து சேர்ந்து விடும் என்று நம்புகிறார்கள். இது தவறானது. இது ஒரு பிரமை. என்றுமே வெற்றி தானாக வருவதில்லை. அதை அடைய வேண்டும். சரியான அரசியல் வழியை உருவாக்கிய பிறகு ஸ்தாபன வேலையே வெற்றி தோல்வி அனைத்தையும் தீர்மானிக்கிறது என்கிற தெளிவுடன் துவங்கும் புத்தகம் ஸ்தாபனம் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி விரிவாகப் பேசி அனுபவத்தின் அடிப்படையில் தீர்வுகளையும் முன்வைக்கிறது.

ஊழியர்களும் மக்களுமே இந்த உலகத்தின் மிக உயர்ந்த செல்வம், மூலதனம், தீர்மான சக்தி என்பதை உணரவேண்டும். வெறும் படிப்பினால் மட்டும் ஊழியர்கள் உருவாகிவிட மாட்டார்கள். இடையூறுகளை எதிர்த்த போராட்டத்தில்தான் உண்மையான ஊழியர்கள் உருவாகிறார்கள். ஒரு சரியான அரசியல் கொள்கை செயல்படுத்தப்பட அதைத் தனது சொந்தக் கொள்கையாகக் கருதும், அதைச் செயல்படுத்தத் தயாராய் உள்ள, அதைச் செயல்படுத்தும் திறமையுள்ள அதில் எழும் கேள்விகளுக்கு விடையளிக்கக் கூடிய, அதைப் பாதுகாத்து அதற்காகப் போரிடக்கூடிய ஊழியர்கள் வேண்டும். சரியான நேரத்தில் சரியான ஊழியர்களைத் தேர்வு செய்வது துணிச்சலாக அவர்களை உயர்த்துவது, தலைமைப் பண்புகளை ஊட்டுவது மக்களிடமிருந்து கற்றுக் கொண்டு மக்களுக்குக் கற்றுக் கொடுப்பது போல பல அடிப்படையான ஸ்தாபனப் பிரச்னைகள் பற்றிய தெளிவைத் தருகிற அடிப்படை நூல். குழப்பமற்ற தெளிவான மொழிபெயர்ப்பில் வந்துள்ளது. அரசியல் ஊழியர்களுக்கான அடிப்படையான கையேடு.

Bharathi கட்சியில் நிலவும் தவறான கருத்துக்களை திருத்துவது எப்படி?
மாசேதுங்
தமிழில் : வீ.பா.கணேசன்
(16 பக்கம் விலை.ரூ.5)

செஞ்சேனையின் நான்காவது சேனையிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனத்தில் அன்று நிலவிய பாட்டாளி வர்க்கத்துக்குப் புறம்பான கருத்துக்களை அடையாளம் கண்டு அவற்றைக் களைவதற்கான வழிமுறைகளை முன்வைக்கிற முயற்சியாக வந்துள்ள இப்புத்தகம் காலம்தோறும் உலகம் முழுவதுமுள்ள கம்யூனிஸ்ட் இயக்கங்கள் சந்திக்கும் ஸ்தாபன பிரச்னைகளைத் தீர்க்க உதவும் அனுபவங்களை உள்ளடக்கியுள்ளது.
செஞ்சேனையின் ராணுவப்பணிகளும் அரசியலும் ஒன்றுக்கு ஒன்று முரணானது என்னும் கருத்து சில தோழர்களிடம் இருந்தது. இன்னும் சிலர் அக, புற நிலைமைகளைப் புறக்கணித்து புரட்சியில் அவசரத் தன்மை என்ற நோயால் அவதிப்பட்டனர். வேறுசிலர் தம்மை விடப் புரட்சிகரமானவர் யாருமில்லை என்கிற உணர்வில் இருந்தனர். இன்னும் சிலர் அதீத ஜனநாயக வியாதிக்கு ஆளாகி எல்லா முடிவுகளும் கீழிருந்துதான் மேலே போக வேண்டும் என்கிறார்கள். தங்களது கருத்து நிராகரிக்கப்படும் சிறுபான்மையினர் பெரும்பான்மை முடிவை விசுவாசமாக அமல் படுத்த தயங்குவது, மறுப்பது, வயதையோ உடல் நலத்தையோ பாராது சமமான வேலைப்பிரிவினை கோரும் சமத்துவ வாதம், கட்சிக்குள் பழி வாங்கும் சுபாவம், சிறு கும்பல் வாதம், கூலி மனப்பன்மை, இன்ப நாட்ட வாதம் போன்ற பல வியாதிகளின் தன்மைகள் அவற்றின் மூலங்கள் அவற்றைத் தீர்ப்பதற்கான உபாயங்கள் என புத்தகம் விவாதிக்கிறது.

Bharathi நான் நாத்திகன் ஏன்?
பகத்சிங்
தமிழில்: ப.ஜீவானந்தம்
(24 பக்கம் ரூ.5)

பகத்சிங் ஒரு நாத்திகராக இருப்பதற்குக் கரணம் அவரது ஆணவமும் அகந்தையுமே என்று அவரோடு சிலகாலம் பழகிய தோழர்கள் கருதுவதாக அறிந்த பகத்சிங் அது அப்படியா என்று தனக்குள் பயணம் செய்து விடை காணும் புத்தகம் இது. தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான அமரர் ஜீவா அவர்களின் இலகுவான கூர்மையான மொழிபெயர்ப்பில் வந்துள்ளது. சிறுவயதில் கடவுள் பக்தராகவே பகத்சிங் இருந்துள்ளார். தினசரி காலை மாலை பிரார்த்தனைகள் செய்கிறவராக காயத்ரி ஜெபம் செய்கிறவராகவே இருந்தார். அவருடைய தந்தையாரும் பக்திமானாகவே இருந்தார். பின்னாட்களில் புரட்சிகர இயக்கங்களில் பங்கேற்கத் துவங்கிய பிறகு அவர் படித்த புத்தகங்களும் தோழர்களுடன் விவாதித்ததுமே அவரை நாத்திகராக மாற்றியது. அராஜகவாதத்தில் நம்பிக்கை கொண்ட தலைவரான பக்குனின் எழுதிய கடவுளும் ராஜ்ஜியமும் (God and State) எனும் நூல், நிர்லம்ப சாமியால் எழுதப்பட்ட பகுத்தறிவு (Common Sence) போன்ற நூல்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஏகச் சக்ராதிபத்திய ஆதிக்க இருள் சூழ்ந்த தங்கள் நாட்டில் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த லெனின், ட்ராட்ஸ்கி போன்றோர் பச்சை நாத்திகர்கள் என்பதை அறிந்தேன். நானும் பச்சை நாத்திகனானேன் என்கிறார் பகத் சிங்.

வெள்ளையரின் பிடியில் சிக்கி வதைபட்ட காலத்திலும் கூட தான் நாத்திகனாகவே நின்று நிலைத்ததைக் கூறுகிறார். பின் ஆத்திகர்களை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை வைக்கும் பகத்சிங், என் நாத்திகம் பற்றிச் சந்தேகம் கொண்டு மரண வாசலில் நிற்கும்போது நிச்சயம் நான் கடவுளைப் பிரார்த்திப்பேன் என ஆருடம் கூறிய நண்பர்கள் உண்டு. இதோ தூக்குக் கயிறு என்னை நெருங்கி வந்து கொண்டிருக்கும் இந்த நிமிடத்திலும் நான் நாத்திகனாகவே இருக்கிறேன் என்பதை உலகத்துக்குச் சொல்லுங்கள் என்று முடிக்கிறார்.

Bharathi ஊழியர்களைப் பற்றி..
கியோர்கி டிமிட்ரொவ்
தமிழில் : வீ.பா.கணேசன்
(16 பக்கம்.ரூ.5)

ஊழியர்களைப் பற்றிய சரியான கொள்கை என்றால் என்ன என்கிற கேள்வியோடு துவங்கும் புத்தகம் முதலாவதாக ஊழியர்களைப் புரிந்து கொள்வது என்கிற விஷயத்தை எடுத்துக் கொண்டு ஆராய்கிறது. உலகின் பல கம்யூ. கட்சிகளின் அனுபவத்தை முன்வைக்கிறது. போல்ஷ்விக் என்னும் பூதக்கண்ணாடி கொண்டு ஊழியர்களைப் பரிசீலிக்கும் போது இதுவரை நம் கண்ணில் தென்படாத ஊழியர்களெல்லாம் முன்னுக்கு வருவார்கள். அன்னிய வர்க்கக் கருத்துள்ளவர்களை அடையாளம் கண்டு களைய முடியும். இரண்டாவதாக ஊழியர்களை சரியான முறையில் உயர்த்துவது மூன்றாவது சிறந்த முறையில் ஊழியரைப் பயன்படுத்துவது நான்காவதாக ஊழியர்களுக்கு முறையான உதவி அளிப்பது ஐந்தாவதாக ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முறையான கவனம் செலுத்துவது என வரிசைப்படுத்துகிறது புத்தகம். அடுத்து ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பது என்னும் பிரச்னை பற்றிக் கூறுகையில் முதலாவதாக ஊழியர்களுக்கு தொழிலாளி வர்க்கத்தின் லட்சியத்தின் மீது முழுமையான ஈடுபாடு, கட்சியின் மீது உண்மையான பற்று இரண்டாவதாக வெகுஜனங்களுடன் நெருக்கமான தொடர்பு மூன்றாவதாக சுதந்திரமான முறையில் ஊழியரின் திறனை உணரும் திறமை - முடிவுகள் எடுப்பதில் பொறுப்பேற்பது நான்காவதாக வர்க்க எதிரியையும் கம்யூனிஸ்ட் வழியிலிருந்து விலகுவதையும் எதிர்த்து ஊசலாட்டமின்றிப் போராடுவது என வரிசைப் படுத்துகிறது.

நாம் தத்துவம் பேசிக் கலையும் கூட்டமல்ல. எல்லா நேரத்திலும் ஒவ்வொரு அடி வைக்கும் போதும் கற்றுக்கொள்வது அவசியம். கற்றுக்கொள்வதற்காகப் போராடுவது. போராடுவதற்காகக் கற்றுக் கொள்வது. நமது எல்லா வேலைகளிலும் போராட்டங்களிலும் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஆகியோரின் சிறந்த போதனைகளை ஸ்டாலினிஸ்ட் உறுதியோடு இணைக்க வேண்டும் என முடிக்கிறது

Bharathi மார்க்சியத்தின் எதிர்காலம்
பிரபாத் பட்நாயக்
(32 பக்கம் ரூ.5)

மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்கிற கூக்குரல் காலந்தோறும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் மனித குல விடுதலையே மார்க்சியத்தின் அடிப்படை நோக்கம் என்னும்போது அது முதலாளித்துவத்தில் சாத்தியமில்லை. அதற்கு முற்றிலும் வேறொரு சோசலிச சமூகம் அவசியமாகிறது. சோசலிசம் என்னும் அமைப்பில்தான் சமூக நடவடிக்கைகளுக்குப் பின்னணியில் இருக்கும் எண்ணங்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் இடையில் ஒத்திசைவு இருக்கும். ஆனால் பிரச்னை எங்கே வருகிறது எனில் கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்விகளை எங்கனம் புரிந்து கொள்வது? ஒன்றை ஆசிரியர் தெளிவு படுத்துகிறார். மார்க்சியம் என்பது உறைந்துபோன உடலாக இருக்கும் கருத்துக்கள் (Frozen body of ideas) அல்ல. மார்க்சியம் என்பது அதன் மூலக்கருவைச் (core) சுற்றி காலத்துக்கு ஏற்றாற் போல அதன் ஸ்தூலமான நிலைமையை தீர்க்கமாக ஆய்ந்து தொடர்ந்து மறுசீரமைக்கப்படும் கருத்துப் பெட்டகமாகும். இந்த மறு சீரமைப்பு சோவியத் யூனியனும் இதர பல சோசலிச நாடுகளும் சிதைந்து போன பின்னணியில் மூலதனத்தின் ஆதிக்கம் புதிய ரூபங்களை எடுத்துள்ள இன்றைய காலத்தில் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்கிற கேள்விக்கான விடையாக இந்நூல் வந்துள்ளது. மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்று கூறுபவர்கள் மனித குல விடுதலைக்கு புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டதால் அவ்விதம் கூறவில்லை. மாறாக மனிதகுல விடுதலை என்னும் செயல்திட்டத்தை அவர்கள் கைவிட்டு விட்டதால் கூறுகிறார்கள்.

Bharathi மே தின வரலாறு
அலெக்சாண்டர் ட்ராச்டென்பர்க்
தமிழில்:எம்.சிவக்குமார்
(32 பக்கம் ரூ.5)

1886ஆம் ஆண்டு சிகாகோ நகரில் ஹே மார்க்கெட்டில் எட்டுமணி நேர வேலைக்காகப் போராடிய தொழிலாளர் மீது ஏவப்பட்ட வன்முறையில் கொல்லப்பட்ட தொழிலாளிகளின் குருதியில் தோய்ந்ததுதான் மேதினம் என்கிற வரைக்கும் தமிழ்நாட்டில் உள்ள எல்லா தொழிலாளிக்குமே தெரியும். அதற்குமேல் மேதினம் உருவான வரலாற்றுப் பின்னணி பற்றி விரிவாக அறிந்து கொள்ள தமிழில் வந்துள்ள எளிய புத்தகம் இதுவே. சம்பள உயர்வுக்காகவும் சங்கம் வைக்கும் உரிமைக்காகவும் அமெரிக்கத் தொழிலாளர்கள் போராடி வந்தாலும் கார்ல் மார்க்ஸ் மூலதனத்தில் எழுதியது போல அமெரிக்காவில் பாட்டாளி வர்க்கத்தின் பெரும்பகுதியான கறுப்பு இனத் தொழிலாளி அடிமையாக நீடிக்கும் வரை வெள்ளைத் தொழிலாளியின் வாழ்க்கையிலும் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. உள்நாட்டுப் போருக்குப் பின் அடிமைத்தனத்தின் அழிவிலிருந்து புதிய உத்வேகம் பிறந்தது. எட்டு மணி நேர வேலைக்கான போராட்டம் வெடித்தது. சர்வதேசத் தொழிலாளர் காங்கிரசும் எட்டுமணி நேர வேலைக்கான கோரிக்கைக்காகப் போராட உலகத் தொழிலாளிகளுக்கு அறைகூவல் விடுத்தது. இது ஒரு இயக்கமாக அதிவேகத்துடன் அட்லாண்டிக் முதல் பசிபிக் வரையிலும் ந்யூ இங்கிலாந்து முதல் கலிபோர்னியா வரையிலும் பரவியது. இந்த நிகழ்ச்சிப் போக்குகள் மேதினத்தை நோக்கி நகர்ந்த வரலாறுதான் இப்புத்தகம்.

Bharathi எது மூடநம்பிக்கை?
சு.பொ.அகத்தியலிங்கம்
(24 பக்கம் ரூ.5)

பூனையின் பாய்ச்சலுக்கும், பல்லியின் சொல்லுக்கும், பயந்து வாழ்வது அநேகமாகச் செத்ததற்குச் சமமே என்னும் கவிஞன் காஸி நஸ்ருல் இஸ்லாமின் கவிதை வரிகளோடு துவங்கும் இப்புத்தகம் மூடநம்பிக்கை என்பது எது? பழையதெல்லாம் மூடநம்பிக்கை என்று தூக்கிப் போடுவது முட்டாள்தனம். புதியதெல்லாம் புத்திசாலித்தனமானது என்று முடிவுக்கு வருவதும் மூடத்தனம் என்கிற புரிதலோடு நகரும் புத்தகம் நம் மக்கள் மத்தியில் உலவுகிற அவர்களை பல சமயம் ஆட்டிப்படைக்கிற பல நம்பிக்கைகள் கருத்துகள் பழக்க வழக்கங்களை அறிவியல் பார்வையுடன் அலசி ஆராய்கிறது. சோதிடம், நல்ல நேரம், கெட்ட நேரம், தோஷங்கள், பேய் பிசாசுகள் என பல விஷயங்களை ஆராயும் புத்தகம் புதிய மூட நம்பிக்கைகளாக மக்களிடம் விதைக்கப்படும் விளம்பரங்களைக் கைவைத்து இறுதியில் எது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் படவில்லையோ, எது முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக தடுக்கிறதோ, எதைக் கேள்வி கேட்காமல் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்கிறோமோ, எதைப் பரிசீலித்துப் பார்க்காமல் ஒப்புக்கொள்கிறோமோ அதெல்லாம் மூடநம்பிக்கை என்கிற தெளிவுடன் முடிகிறது. கிண்டலும் நகைச்சுவை உணர்வும் ததும்பும் மொழி இப்புத்தகத்தின் சிறப்பாகும்.

Bharathi ஜோதிராவ் பூலே:
சமூக சீர்திருத்தத்தின் தந்தை
ஜி.பி.தேஷ்பாண்டே
தமிழில் : ச.கனிதா
(24 பக்கம் ரூ.5)

இந்தியாவின் முதல் சூத்திர அறிஞர் என அழைக்கப்படும் சமூக சீர்திருத்தத்தின் தந்தை ஜோதிராவ் பூலே அவர்களின் வாழ்க்கையையும் சிந்தனைகளையும் அறிமுகம் செய்கிற நூல். மரராட்டிய மாநிலத்தின் சூத்திர சாதிகளில் ஒன்றான மாலி (தோட்டக்காரன்) என்னும் சாதியில் பிறந்து பூக்களை வளர்த்ததால் பூலே என்கிற பெயர் வாய்க்கப்பட்ட குடும்பம் ஜோதிராவ் பூலேயினுடையது. மெட்ரிக் வரை படித்த பூலே 1848ஆம் ஆண்டில் மிகவும் தாழ்த்தப்பட்ட சூத்திராதி சூத்திரப் பெண் குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடத்தை இந்தியாவிலேயே முதன் முதலாகத் துவங்கினார். உயர்சாதியினரின் கடும் எதிர்ப்பையும் மீறி அப்பள்ளியை நடத்தினார். அதைத் தொடர்ந்து எல்லாச் சாதிப் பெண்குழந்தைகளுக்கான பள்ளியைத் துவங்கினார். தன் வீட்டுக்கிணற்றில் தீண்டாச் சாதி மக்களை நீர் எடுக்கத் திறந்து விட்டார். ஆதிக்க சாதியார் அவரைக் கொலை செய்ய முயற்சித்தனர். உண்மையைத் தேடுபவர் மன்றமான சத்ய சோதக் சமாஜ் துவக்கப்பட்டது. தன் இறுதி நாட்களில் பக்க வாத நோயினால் வலது பக்க உடல் அசைவற்றுப்போனது. இடது கையாலேயே சர்வஜனிக் சத்யதர்மா புஸ்தக் (உண்மை நம்பிக்கையின் நூல்) கை எழுதி முடித்தார். பிராமண ஆதிக்கத்துக்கு எதிராக மட்டுமின்றி பெண்களின் விடுதலையையும் சேர்த்தே பேசியவர் பூலே. பிராமணப் பெண்களையும் கூட சூத்திராதி சூத்திரர் பட்டியலிலேயே பூலே வைத்தார். மதம், வர்ணாசிரமம், சடங்குகள், மொழி, இலக்கியம், ஆங்கிலேய ஆட்சி, ஆண் பெண் சமத்துவம், விவசாயப் பிரச்னைகள் எனப் பரந்துபட்ட தளங்களில் வேகத்துடன் செயல்பட்ட மகாத்மா பூலேயை எளிமையாக அறிமுகம் செய்துள்ள புத்தகம்.

Bharathi கார்-ஆ பேருந்தா?
பேரா. என். மணி, பிரஃபுல் பிட்வாய்
(16 பக்கம் ரூ.5)

அதிகம் பேசப்படாத ஒரு பொருளைப்பற்றி இப்புத்தகம் பேசுகிறது. சமீப ஆண்டுகளில் இந்திய நகரங்களில் கார்கள், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அபரிமிதமாகப் பெருகியுள்ளது ஏன்? பெருநகரங்களெங்கும் உலக வங்கிக் கடனுதவியுடன் பெரும் பெரும் பாலங்கள் ஏன் கட்டப்படுகின்றன? தனியார் வாகனங்களின் எண்ணிக்கை பெருகியுள்ள அதே நேரத்தில் பொதுப் போக்குவரத்துக்கான பேருந்துகளின் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் 4 மடங்கு குறைக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து வாகனங்கள் திட்டமிட்ட முறையில் குறைக்கப்படுவதானது மக்களை தனியாக ஏதோ ஒரு வாகனம் வாங்க நிர்ப்பந்திக்கும் அரசியல் ஆகும்.
கார்களின் எண்ணிக்கை பெருக அரசின் கார்களுக்கு ஆதரவான கொள்கையும் வரி குறைப்பும் கார் தொழிலுக்கு வட்டி குறைப்பும் எளிய தவணைகளில் கார் கடன் வழங்குவதும் முக்கிய காரணங்களாகும். கார் பெருக்கத்தால் காற்று மாசுபடுவது அதிகரிக்கிறது. போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. எரிபொருள் மூலாதாரங்கள் அதிவேகமாகக் காலியாகின்றன. நகர்ப்புறத்தை அண்டி வாழும் ஏழை எளிய மக்கள் ஒரு நாளின் பெரும் பகுதி நேரத்தை வாகனங்களுக்குக் காத்திருப்பதிலேயே செலவிட வேண்டிய நிலை. கார்களின் பெருக்கத்துக்கு மத்திய தர வர்க்கத்தின் ஆடம்பர கௌரவ மோகமும் ஒரு முக்கிய காரணமாகும். ஆகவே காரா பேருந்தா என்னும் கேள்வியில் ஒரு வர்க்கப்போராட்டமே அடங்கியுள்ளது.

Bharathi ஆண் குழந்தைதான் வேண்டுமா?
மைதிலி சிவராமன்
(32 பக்கம். விலை.ரூ.5)

ஆண், பெண் பாலின விகிதம் வேகமாகக் குறைந்து வரும் இன்றைய சூழலில் அதற்கான காரணங்களை அலசி ஆய்வு செய்து இந்நிலை தொடராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்கிற பரிந்துரைகளையும் முன் வைக்கிறது இப்புத்தகம். பெண் பாலின எண்ணிக்கைக் குறைவின் காரணமாக ஹரியானாவில் ஆண்கள் மணம் செய்து கொள்ள உள்ளூரில் பெண் கிடைக்காமல் வெளியிலிருந்து ஏஜண்டுகள் மூலம் கடத்திக்கொண்டு வரும் பெண்களை வீட்டுக்கு வெளியே குடிசை போட்டு வைத்து எந்த மரியாதையும் இல்லாமல் அப்பெண்களை நடத்துவதும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் கேவலமாக நடத்தப்படுவதும் தொடர்பான அ.இ. ஜனநாயக மாதர் சங்கத்தின் அறிக்கை அதிர்ச்சியூட்டுகிறது. பெண் சிசுக்கொலையில் வேகமாக ஹரியானாவைப் பின் தொடரும் தமிழகத்துக்கும் இந்நிலை வராது என்பது என்ன நிச்சயம்? பார்ப்பனீயக் கலாச்சாரமான வரதட்சிணை இப்போது எல்லாச் சாதியாரிடத்தும் பரவியுள்ளது. அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் வேலை வாய்ப்புகள் குறைந்து உத்தரவாதமற்ற வாழ்க்கை பற்றிய பயம் கொள்ளும் ஆண்கள் வரதட்சணை மூலமாவது ஒரு பாதுகாப்புக் கிடைக்காதா என எண்ணும் போக்கு வளர்கிறது. விளைவு பெண் சிசுக்கொலைகள். இது மாதர் அமைப்புகள் மட்டுமே போராடிச் சாதித்து விடக்கூடிய பிரச்னை அல்ல. எல்லா அமைப்புகளும் இணைந்த ஒட்டு மொத்த சமூகமே களமிறங்கிப் போராட வேண்டிய புனிதப் போராலேயே மாற்றம் கொண்டுவரமுடியும் என அறைகூவல் விடுக்கும் புத்தகம்.

Bharathi ஏகாதிபத்தியம்
ஓர் அறிமுகம்
பிரபாத் பட்நாயக்
தமிழில் : விஜயராகவன்
(48 பக்கம் ரூ.10)

லெனினிசம் முழுமை பெற்று வெளிப்பட்ட நூல்களில் மிக முக்கியமானது ‘ஏகாதிபத்தியம்’ ஆகும். மார்க்சியத்தை மறுசீரமைக்கும் போக்கில் லெனின் இப்புத்தகத்தின் மூலம் சிக்கலான பல கேள்விகளுக்கு விடையளித்துள்ளார். முதலாவதாக உச்சகட்டம் பற்றியது. ஏகாதிபத்தியம் ஒரு நாட்டுத் தொழிலாளியை இன்னொரு நாட்டுத் தொழிலாளியைக் கொல்லும் யுத்தத்தில் தள்ளி விடுகிறது. ஒரே ஒரு தெரிவைத்தான் ஏகாதிபத்தியம் தருகிறது. அதாவது தங்களையும் தங்கள் சக தொழிலாளிகளையும் அழித்து ஒழிப்பது அல்லது முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவது என்பதே. இரண்டாவதாக வளர்ந்த நாடுகளின் பாட்டாளி வர்க்கம் காலனி நாடுகளின் விடுதலைப் போராட்டங்களிலும் தலையிட வேண்டும் என்பது. மூன்றாவதான விளக்கம் உலகப்புரட்சி நிகழ்ச்சி நிரலுக்கு வந்து விட்ட பிறகும் சமூக ஜனநாயகக் கட்சியின் மாபெரும் தலைவர்கள் பலர் திருத்தல்வாதப் பாதையில் செல்வது ஏன் என்பது பற்றியது. நான்காவதாக 1. என்ன செய்ய வேண்டும்? 2. அரசும் புரட்சியும் ஆகிய இரு நூல்களிலுமாக மலர்ந்து வந்து கொண்டிருந்த லெனினிசம் என்பது ஏகாதிபத்தியம் நூலின் மூலம் முழுமை பெறுகிறது. ஐந்தாவதாக மார்க்சினுடைய பணிகளின் மூலக்கருவாக விளங்கியவை எவை அதைச் சுற்றியுள்ளவை எவை என்று இப்புத்தகத்தில் லெனின் பிரித்தறிந்ததாகும். ஒவ்வொரு தோழரும் ஆழ வாசிக்க வேண்டிய புத்தகம்.

Bharathi இந்தியாவில் ஹாரிபாலிட்
தமிழில்: முகவை ராஜமாணிக்கம்
(56 பக்கம் ரூ.10)

1953இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3வது காங்கிரசிற்காக இந்தியாவுக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் ஹாரிபாலிட் எழுதிய நாட்குறிப்புகளின் மொழிபெயர்ப்பாக இந்நூல் வந்துள்ளது. பம்பாயில் தொழிலாள மக்கள் வாழும்படியான பிரதேசங்களில் நான் கண்ட காட்சிகளை என்னால் எளிதில் மறந்து விடவே முடியாது. வறுமையின் எத்தகைய கோரமான இருப்பிடம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பேராசைக்கும் பகற்கொள்ளைக்கும் இக்காட்சியைவிட வேறு விளக்கம் வேண்டியதில்லை. முதல் பொதுக்கூட்டத்தில் பம்பாயிலுள்ள தொழிலாள வர்க்க இயக்கத்தின் ஒவ்வொரு பகுதி தொழிலாளர் சார்பாகவும் பல தோழர்கள் 50க்கு மேற்பட்ட மலர் மாலைகளை என் கழுத்தில் போட்டார்கள். இந்த மலர் மாலைகளும் உபச்சாரமும் என் மனத்தை உருக்கி விட்டன, என் இரு கன்னங்களிலும் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. உணர்ச்சிகரமாகவும் உயர்ந்த நகைச்சுவை உணர்வோடும் எழுதப்பட்டுள்ள இக்குறிப்புகள் ஒரு சரித்திர ஆவணமாக மதிக்கத் தக்கவை ஆகும்.

Bharathi கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை
(எளிமையான சுருக்கம்)
விழி பதிப்பகம்
இரா.ஜவஹர்
(24 பக்கம் ரூ.5)

கார்ல் மார்க்சும் ஏங்கல்சும் கூட்டாகத் தயாரித்து 1848 ஆம் ஆண்டு வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை என்னும் நூலின் சாரத்தை (மூல நூலை வாசிக்கத் தூண்டும் விதத்தில் இப்புத்தகம் அறிமுகம் செய்கிறது. உலகப் புகழ்பெற்ற வாசகங்கள் பலவற்றை உள்ளடக்கிய இந்நூலின் நான்கு அத்தியாயங்களும் முதலாளி வர்க்கத்தின் தோற்றத்தில் துவங்கி அதன் தனித்தன்மைகள் உற்பத்தி சக்திகளின் வரலாறு காணாத பிரம்மாண்ட வளர்ச்சிக்குக் காரணமான முதலாளித்துவம் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்குத் தடையாக நிற்கும் வினோத முரண்பாடு போன்றவை விளக்கப்படுகின்றன. முதலாளி வர்க்கத்துக்கே சமாதி கட்டும் ஆயுதங்களை அதாவது உற்பத்தி சக்திகளை முதலாளி வர்க்கமே உருவாக்கியுள்ளது. தொழில்துறை வளர வளர தொழிலாளியின் ஏழ்மையும் அதிகரிக்கிறது. முதலாளி வர்க்கம் ஆளத்தகுதியற்றதாகிவிட்டது. ஆகவே பாட்டாளி வர்க்கம் தனிச்சொத்துரிமையை ஒழிக்கும் கம்யூனிச சித்தாந்தத்தைக் கையிலேந்தி ஒன்றுபட வேண்டும். பாட்டாளிகள் இழப்பதற்கு அடிமைச்சங்கிலியைத் தவிர வேறு ஒன்றுமில்லை. வென்று அடைவதற்கோ ஒரு உலகமே இருக்கிறது. உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று புத்தகம் அறைகூவி முடிகிறது.

Bharathi பஞ்சாயத்து: அனைத்து அதிகாரமும் மக்களுக்கே
டாக்டர் சூரியகாந்த் மிஸ்ரா
(தமிழில் எஸ். நூர்முகமது) & க.பழனிதுரை
(எழுத்தாக்கம் திருப்பூர் தூயவன்)
(16 பக்கம் ரூ.5)

மேற்குவங்கத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சர் டாக்டர் சூரிய காந்த் மிஸ்ரா கோவையில் ஆற்றிய உரையில் மேற்கு வங்கத்தில் 28 ஆண்டுகளாக இடது முன்னணி வெற்றி பெறுவதின் ரகசியம் உள்ளாட்சிகளுக்கு உண்மையான அதிகாரம் வழங்கியதில் அடங்கியுள்ளது என்பதை விளக்குகிறார். சமூக மாற்றத்துக்காக அவர்கள் வைத்துள்ள ஐந்து முழக்கங்களை விளக்குகிறார்: 1.வேகம். 2.திறமை. 3.நேர்மை. 4.வெளிப்படைத்தன்மை 5.சுய கட்டுப்பாடு - அதிகாரம் மக்களுக்கே என்பதுதான் நமது கோஷம். மக்களுக்கு அதிகாரம் என்றால் உள்ளாட்சிகளுக்கு அதிகாரம். அவரது உரையைத் தொடரும் முனைவர் க.பழனிதுரை தமிழகத்தில் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்குமான உறவு பயனாளிகள் அல்லது வாக்காளர்கள் என்கிற வடிவிலேயே இருக்கிறது. மக்களை மனுக்கொடுக்கும் பயனாளிகளாக மாற்றுவதால் மக்களின் சுய கௌரவம் பாதிப்படைகிறது. ஆனால் மே.வங்கத்தில் மக்கள் அதிகாரத்தின் பங்காளிகளாக உள்ளனர். இதுவே நாம் செல்ல வேண்டிய பாதை என்கிறார்.

Bharathi வகுப்புவாதமும் வரலாறும்
ரொமிலா தாப்பர்
தமிழில் : பூவுலகின் நண்பர்கள்
(24 பக்கம் ரூ.5)

புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளரான ரொமிலா தாப்பர் அவர்களின் உரை கேள்வி பதில் வடிவில் புத்தகமாக்கப்ப்பட்டுள்ளது. ஏன் பிற அறிஞர்களைக் காட்டிலும் வரலாற்று அறிஞர்கள் மட்டும் வகுப்புவாதம் குறித்து அதிக அக்கறை காட்ட வேண்டும்? நம்பிக்கை வரலாற்றுக்கு அடிப்படையாக இருக்க முடியாதா? ‘ஆரிய வம்சம்’ என்ற கூற்று தொடர்பான பிரச்னை என்ன? இது பற்றி இந்துத்வவாதிகளின் கூற்று என்ன? தேசிய வரலாற்று அறிஞர்களின் கருத்து என்ன? வரலாற்று ஆதாரங்கள் என்ன சொல்கின்றன? மொழிக்கும் இனத்துக்குமான வேறுபாடு என்ன? முஸ்லீம்கள் ஏன் இந்துக்கோவில்களை இடித்தார்கள்? என்பது போன்ற ஏராளமான சமகாலக் கேள்விகளுக்கான விடைகளோடு வந்துள்ள புத்தகம்.

Bharathi பஞ்சாயத்தும் கிராமப்புற வறுமை ஒழிப்பும்-மேற்கு வங்க அனுபவம்
டாக்டர்.சூரியகாந்த மிஸ்ரா
தமிழில் : கி.இலக்குவன்
(16 பக்கம். ரூ.5)

1973-76 ஆண்டுகளில் மேற்கு வங்க கிராமப்புறங்களில் மக்கள் தொகையில் 73.16 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வந்தனர். ஆனால் இடது முன்னணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 1999-2000 ஆண்டுகளில் கிராமப்புற வறுமையின் அளவு 31.85 சதமாகக் குறைந்தது. இது எப்படி நடந்தது? பல காரணங்கள் உண்டெனினும் நிலச்சீர்திருத்தமே முக்கிய காரணம். அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலமான 4 லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேரில் 4 லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டேர் மக்களுக்கு (28 லட்சம் பேருக்கு) விநியோகம் செய்யப்பட்டது. விவசாயப் பொருட்கள் வழங்கப்பட்டன. சிறு சிறு நீர்ப்பாசன திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டன. அதன் காரணமாக உணவுதானியங்களில் பற்றாக்குறை மாநிலமாக ஒரு காலத்தில் இருந்த மேற்கு வங்கம் இப்போது உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது. இது மட்டுமன்றி பஞ்சாயத்து அமைப்புகளின் கைகளில் அனைத்து அதிகாரமும் பரவலாக்கப்பட்டு அவர்களும் வறுமை ஒழிப்பில் பங்கேற்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோலப் பல காரணங்களை ஆதாரங்களோடும் புள்ளி விவரங்களோடும் விளக்கும் புத்தகம்.

Bharathi ஜனநாயக எழுச்சிகளின் நூற்றாண்டு
அய்ஜாஸ் அகமது
தமிழில்:சஹஸ்
(16 பக்கம் ரூ.5)

ஐரோப்பாவின் ஒரு சிறு மூலையில் தடுமாற்றத்துடன் உருவான ஜனநாயகத்துக்கான கோரிக்கை 20 ஆம் நூற்றாண்டில் புதுப்புது வடிவங்கள் எடுத்துப் பெரும் சூறைக்காற்றாக வீசியடித்தது. சுதந்திர சந்தையை மட்டுமே அர்த்தப்படுத்தும் முதலாளித்துவ ஜனநாயகத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்ட தொழிலாளிகள், விவசாயிகள், பெண்கள், காலனியாதிக்க நுகத்தடியின் கீழ் இருந்த மக்கள், தாழ்த்தப்பட்ட சாதியினர், தேசிய இனக்குழுவினர் ஆகியோர் ‘ஜனநாயகம்’ என்பதற்கு வரலாற்று ரீதியான புதிய பொருளையும் புரட்சிகரமான திசைவழியையும் உருவாக்கினர். 1990 வரையிலான 20ஆம் நூற்றாண்டின் இதயமாக ஜனநாயகக் கோரிகைகளே இருந்தன என்பதை வரலாற்றுப் பூர்வமாக விளக்கும் இந்நூல் சோசலிசப் பின்னடைவுக்குப் பிறகான நிலைமைகளையும் பரிசீலிக்கிறது. சனநாயக இயக்கம் இன்று ஒரு நெருக்கடிக்குள் சிக்கியிருந்தபோதும் சோசலிசம் மற்றும் தேச விடுதலைக்கான போராட்டங்களோடு இணையாமல் அது நீடிக்க முடியாது என்பதை அழுத்தமாக உணர்த்தும் புத்தகம்.

Bharathi கருவாச்சி
(நமது வம்சத்தின் வரலாறு)
த.வி.வெங்கடேஸ்வரன்
(40 பக்கம் ரூ.10)

மனித குலத்தின் ஆதித்தாய் எந்த ஊர்க்காரி? குரங்கிலிருந்து பிறந்தோம் என்பது மட்டும் போதுமான விளக்கமாக அமைய முடியாதல்லவா? மரபணு ஆராய்ச்சிகளின் முடிவுகளை ஆதாரமாகக் கொண்டு நம் வம்சத்தின் வரலாற்றைத் தேடும் முக்கியமான புத்தகம் இது. செல்லில் இரண்டு வகை டி.என்.ஏக்கள் உள்ளன. ஒன்று உட்கரு டி.என்.ஏ. மற்றொன்று மைடி.என்.ஏ. உட்கரு டி.என்.ஏ தான் நமது நிறம், மூக்கின் நீளம், முகத்தின் அமைப்பு மற்றும் தலைமுடி வரை நிர்ணயிக்கிறது. இன்னொரு டி.என்.ஏ வான மைடி.என்.ஏ என்பது செல்லின் சைட்டோபிளாசத்திலுள்ள மைட்டோகாண்ட்ரியாவில் உள்ளது. இந்த டி.என்.ஏ வில் தான் நமது மூததையரைப் பற்றிய ரகசியம் புதைந்துள்ளது. உட்கரு டி.என்.ஏ வை அம்மாவும் அப்பாவும் வழங்கிட மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏவை அம்மா மட்டுமே வழங்க முடியும். ஆகவே பல்வேறு கண்டங்களைச் சேர்ந்த பிரசவமான தாய்மார்களின் நஞ்சுக்கொடிகளின் வழியே ஆய்வு செய்து நம் அனைவருக்குமான தாய் மூதாய் ஆப்பிரிக்கக் கறுப்பினப் பெண் என்பதை விஞ்ஞானிகள் நிறுவியுள்ளனர். ஆகவே முஷாரப்பும் அத்வானியும் காஸ்ட்ரோவும் புஷ் வகையாறாக்களும் கூட ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றாகிறது. அவசியம் ஒவ்வொருவரும் வைத்திருக்க வேண்டிய வாசிக்க வேண்டிய புத்தகம்.

Bharathi வரலாறு என்றால் என்ன?
பேராசிரியர் அ.கருணானந்தன்
(32 பக்கம் ரு.5)

இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பதில் துவங்கி வரலாறு என்றால் என்ன என்பதற்கு ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட விதவிதமான விளக்கங்கள் உள்ளன. வரலாற்றினூடாகப் பயணம் செய்து வரலாறு என்றால் என்ன என்பதற்கான விடையைத் தேடும் சுவையான புத்தகம் இது. நமது பழைய வரலாறு என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட கற்பனைகளே என்ற வால்டேரின் கணிப்பிலிருந்து மாறுதலே இல்லாத பழைய காலத்தின் ஆவணம்தான் வரலாறு என்னும் அரிஸ்டாட்டிலின் கருத்து வரை ஆய்வு செய்யும் புத்தகம் இந்தியாவில் புராணங்களையும் இதிகாசங்களையும் அப்படியே வரலாறாக எடுத்துக்கொண்டு அரசியல் நடத்தும் போக்கினைப் பற்றி விவரிக்கிறது. ஆய்வின் முடிவாக வரலாறு என்பது மாற்றங்களின் வரலாறே என்ற கணிப்புக்கு நாம் வருகிறோம்.

மாற்றங்களைக் கொண்டுவரும் உழைப்பின் வரலாறு. போராட்டங்களின் வரலாறு. வரலாறு என்றால் என்ன என்ற கேள்விக்கான விடையும் விளக்கமும் வரலாற்றைப் பார்க்கும் கண்ணோட்டத்திலும் வரலாற்றைப் பயன்படுத்துவதிலுள்ள நோக்கத்திலும்தான் உள்ளன. மனித குல விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும் அமைதிக்குமான உணர்வாகவும் உந்துதலாகவும் கருவியாகவும் இருப்பதே நம்மைப் பொறுத்தவரை வரலாறாக இருக்க முடியும் என்று கச்சிதமாக முடிகிறது புத்தகம்.

Bharathi கடவுள் பிறந்த கதை
எஸ்.ஏ.பெருமாள்
(32 பக்கம் ரூ.5)

கடவுளுக்கு எதிரான போராட்டம் என்பது கடவுள் பிறந்த கதையை மதங்கள் பிறந்த கதையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்தான் துவங்குகிறது என்பார்கள். அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்துள்ள புத்தகம் இது. பிடிபடாத மர்மங்களோடு இருந்த இயற்கையின் சக்திகளை சில மந்திரங்களின் மூலம் சில சடங்குகள் மூலம் கட்டுப்ப்டுத்த முயன்ற மனித நடவடிக்கையே ஆரம்ப கால நம்பிக்கையாக இருந்தது. நம்மோடு கூட இருந்து மரணத்தினால் காணாமல் போகிற மனிதர்கள் ஆவி ரூபத்தில் நம்மோடு இருப்பதான மனத் தேறுதலை அடிப்படையாகக் கொண்டு ஆவி வழிபாடு தோன்றியது. மக்கட்பேற்றைத் தரும் ஆண் பெண் குறிகளை வழிபடும் போக்கும் முன்னோரை வழிபடும் போக்கும் தம் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் உதவியாக இருக்கும் அல்லது இடைஞ்சலாக இருக்கும் விலங்குகளை பாம்புகளை வழிபடும் போக்கும் என மெல்ல மெல்ல வழிபாடுகள் வளர்ந்த கதை சுவையான உதாரணங்களுடன் சொல்லப்பட்டுள்ளன. பல கடவுள்களுக்கு பதிலாக ஒரு கடவுளை ஆதிக்க வர்க்கம் கொண்டுவந்து மதங்களை நிறுவி மக்களின் எதிர்ப்புணர்வுகளை மழுங்கடிக்கும் கதையும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. மதமென்னும் மதமதப்பிலிருந்து மீண்டால்தான் துயரங்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என புத்தகம் முடிகிறது.

<-- முந்தைய பக்கம் அடுத்த பக்கம் -->


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com