Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureBook Review
புத்தக விமர்சனம்

பாரதி புத்தகலாயத்தின் 100 புத்தகங்கள் - ஒரு பருந்துப் பார்வை
ச.தமிழ்ச்செல்வன்


Bharathi உடல் உறுப்புகள்
பேராசிரியர் எஸ்.மோகனா
(64 பக்கம் ரூ.10)

எந்தப் பீடிகையும் இல்லாமல் நம் உடலின் முக்கிய உறுப்புகளின் பணிகள், அவற்றைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் பற்றி நேரடியாகப் பேசத்துவங்குகிறது புத்தகம். 13 தலைப்புகளில் ஒவ்வொரு உறுப்பைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது. உடலுக்கு என்ன தேவையோ அதையே நாக்கு தேடுகிறது. கால்சியம் சத்துக் குறைவான பிள்ளைகள் பலப்பம், சாக்பீஸ், சுண்ணாம்பைத் தேடுகின்றன. தாது உப்புக் குறைவாயுள்ள பிள்ளைகள் மண்ணைத் தின்கின்றன. ஒரு பொருள் பதார்த்தம் நீர்ம நிலையில் இருந்தால்தான் அதன் சுவையை சுவை அரும்புகள் உணர்ந்து தகவலை மூளைக்கு அனுப்ப முடியும். பல்லைச் சுத்தம் செய்வது போலவே தினமும் நாக்கையும் மென்மையாகச் சுத்தம் செய்வது அவசியம்.

உங்களின் சிரிப்பு, அழுகை, கோபம், பயம் என்று நவரச உனர்ச்சிகளை வெளிப்படுத்துபவை முகத்திலுள்ள 40 தசைகளே! சின்னச் சிரிப்புக்கு 11 தசைகளும் அழுகைக்கு 17 தசைகளும் செயல்பட வேண்டும். உடலில் அதிகம் உழைப்பவை கண்களின் தசைகளே. ஒரு நாளைக்கு 10 லட்சம் தடவைக்கு மேல் மூடி மூடித் திறக்கின்றன. தசைகளைக் காக்க புரதச் சத்தும் நல்ல ஓய்வும் தொடர்ந்த உடற்பயிற்சியும் தேவை. இப்படியான உபயோகமான தகவல்களை வெகு சுவாரஸ்யமாகச் சொல்லிச் செல்லும் இப்புத்தகம் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும்.

Bharathi வ.உ.சியின் சுதேசிக்கப்பலும்
தொழிற்சங்க இயக்கமும்
ச.தமிழ்ச்செல்வன்
(24 பக்கம் ரூ5.)

பன்னாட்டு மூலதனக் கம்பெனிகள் நம் தேசத்தில் நுழைந்து நம் செல்வங்களையெல்லாம் கொள்ளை கொண்டு போகத் தலைப்பட்டுள்ள இந்த நாளில் வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சுதேசிக் கப்பல் கம்பெனியைத் துவக்கி எதிர்ப்புகளுக்கும் மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் அதை நடத்திய வ.உ.சியின் கதை தொழிலாளி வர்க்கத்துக்கு எடுத்துச் சொல்லப்படுகிறது. பாரடா தோழா இதுதான் உன் பாரம்பரியம் என்கிற தொனியில் 1908 இல் தூத்துக்குடியில் வ.உ.சி துவக்கிய கோரல் ஆலைத் தொழிலாளர் சங்கம் நடத்திய முதல் வேலை நிறுத்தம் பற்றியும் அதற்கு ஆதரவாகத் தூத்துக்குடி நகர மக்களை வ.உ.சி திரட்டி மக்களுக்கும் தொழிற்சங்கத்துக்கும் வலுவான பிணைப்பை ஏற்படுத்திய வரலாறு பற்றியும் சொல்லப்படுகிறது.

ஆத்திரமடைந்த வெள்ளை நிர்வாகம் வேறு காரணம் சொல்லி வ.உ.சியைக் கைது செய்கிறது. உடனடியாக கோரல் ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து தெருவில் இறங்கினர். இந்தியாவின் முதல் அரசியல் வேலை நிறுத்தம் இதுதான் என்பதை ஆதாரத்துடன் புத்தகம் சொல்கிறது. வ.உ.சி கைதை ஒட்டி நெல்லை நகரம் கொதித்து எழுகிறது. பொதுமக்களும் மாணவர்களும் தொழிலாளிகளும் பங்கேற்கும் ஊர்வலத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடக்கிறது. ஒரு முஸ்லீம், ஒரு பறையர், ஒரு பூசாரி, ஒரு ரொட்டிக்கடைத் தொழிலாளி என நான்கு பேர் களப்பலி ஆகின்றனர். தூத்துக்குடியில் வெள்ளையருக்கு ஆதரவாகப் பேசும் அதிகாரிகளுக்கு சவரம் செய்ய நாவிதர்கள் மறுக்கிறார்கள். துணி துவைக்க சலவைத் தொழிலாளிகள் மறுக்கிறார்கள். துப்புரவுப் பணியாளர்களின் மறுப்பு காரணமாக வெள்ளையர் வீடுகள் நாறுகின்றன. தொழிற்சங்கமும் பொதுமக்களும் இரண்டறக் கலந்து நின்ற வரலாறு உணர்ச்சிகரமாக நம் கண்முன்னே விரிகிறது.

Bharathi ஆயிஷா
இரா.நடராசன்
(24 பக்கம் ரூ.5)

ஒரு சிறுகதை. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் கல்வி வட்டாரங்களில் பணிபுரியும் எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் சிறுகதை. இன்று பாரதியின் மூலம் எல்லோருக்குமான வாசிப்புக்கு வந்துள்ளது. பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் ஆயிஷா என்கிற மாணவிக்கும் இடையில் கல்வி தொடர்பான கேள்விகள் முலம் மலரும் உறவு கதையின் அடிச்சரடாக ஓடுகிறது. ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான நட்பு, அப்பா, மகன் உறவு - அம்மா, மகள் உறவு பற்றியெல்லாம் கூடக் கதைகள் சில வந்ததுண்டு. பாடத்திட்டத்தோடு கூடிய கேள்விகள் அக்கேள்விகள் வழியே அக்குழந்தையின் மேதமையை சட்டெனெ அடையாளம் கண்டுவிடும் ஆசிரியை. ஆனால் அவளை சரியாக அடையாளம் காண முடியாத செக்குமாட்டு வாழ்க்கையில் சிக்கிக் கொண்ட பிற சக ஆசிரியர்கள் அவளை நடத்தும் விதம் அவள் மீது பிரயோகிக்கும் வன்முறை, இதையும் மீறி இந்த ஆசிரியையுடன் அவள் கொள்ளும் சினேகம், நேசம், புரிந்து கொண்ட ஒருவராவது பள்ளியில் இருக்கிறாரே என்கிற பெருமிதம், கேள்விகளால் தொடரும் இந்த நட்பு, ஆனால் இறுகிப் போன கல்விமுறை ஆயிஷாவை என்ன செய்து விட்டது? கதையை வாங்கிப் படித்துத்தான் ஆக வேண்டும்.

Bharathi காந்தி புன்னகைக்கிறார்
ஜா. மாதவராஜ்
(32 பக்கம் ரூ.10)

அவனது பரிணாமம் என்பது இருளில் நடந்தது. அவனது பயணத்தின் தடயங்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. சாத்தானின் பிரவேசம் என்பது இப்படித்தன் இருக்கும் போலும். அவன் பெயர் நாதுராம் கோட்சே! அவரது வாழ்வு என்பது ஒளி நிறைந்தது. அவரிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை. அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும் உலகமே அறிந்திருந்தது. அவர்தான் தேசப்பிதா காந்தி மகான். ஒரு திரைப்படத்தின் இணைக் காட்சி (parallel shot) பாணியில் விறுவிறுப்பாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் சொல்லப்படும் வரலாறு இப்பக்கங்களில் விரிகிறது. காந்தியும் கோட்சேயும் தனி நபர்கள் அல்லர். வெவ்வேறான எதிரெதிரான இரு கருத்துக்களின் தத்துவங்களின் பிரதிநிதிகள். கோட்சேயைக் கொலைகாரனாக மாற்றிய இந்துத்துவ தத்துவம் இந்திய வரலாற்றில் இயங்கிய வரலாறும், கோட்சே அதன் பிடியில் சிக்கி வளர்ந்த கதையும் ஆதாரங்களுடன் சொல்லப்படுகிறது. மதச் சார்பற்ற அரசியலுக்கு வித்திட்ட மகாத்மா இந்துத்துவத்தை எதிர்கொண்ட தருணங்களும் விதமும் கூர்மையாக விளக்கப்பட்டுள்ள புத்தகம். காந்தி கொலையுண்ட நிகழ்வும் அதற்கு முன்னர் அவரைக் கொலை செய்ய நடந்த முயற்சிகளும் ஒரு மௌனப்படம் போல நம் முன்னே காட்சிபூர்வமாக நகர்கின்றன. காந்தி கொலைக்குப் பிறகு நாட்டில் நடந்த நிகழ்வுகளும் சமீப காலங்களில் வெறி கொண்டு எழுந்து நிற்கும் இந்துத்வா சக்திகள் கோட்சேயைத் தியாகியாகக் காட்ட எடுக்கும் முயற்சிகளும் வெளிச்சமிட்டுக் காட்டப்படுகின்றன. காந்தி பிறந்த குஜராத் மண்ணில் ரத்த ஆறு ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் 1947 ஆகஸ்ட் 15 அன்று காந்தி நின்ற இடமான கல்கத்தா அமைதிப்பூங்காவாக மணக்கிறது ஹூக்ளி நதி அமைதியாப் பாய்ந்து கொண்டிருக்கிறது. இதில் பொதிந்துள்ள உண்மையை அடையாளம் கண்டு காந்தி நம்பிக்கையுடன் புன்னகைக்கிறார்.

Bharathi பெரியாரும்
சுயமரியாதை இயக்கமும்
விஜயன்
(16 பக்கம் ரூ.5)

திராவிடக் கட்சி மேடைகளின் பின்புலத்திலும் கட்சிப்பாடல் வரிகளிலும் பழைய புகைப்படங்களிலும் தவறாமல் இடம் பெறும் பெரியார் இவர்களின் கொள்கைகளில் காணாமல் போயிருப்பது வரலாற்றுச் சருகலா? அரசியல் சந்தர்ப்பவாதமா? இரண்டும் இல்லை. இங்கு நடப்பது விலகல் என்று சூடாகத் துவங்குகிறது புத்தகம்.

ஆரம்ப நாட்களில் காந்தியின் தேசியத்தினால் கவரப்பட்டு பின் உயர்சாதி விருப்பு வெறுப்புகளையும் பிற்போக்கான கருத்துக்களையும் நடைமுறைகளையும் விட்டொழிக்க மனமில்லாத “தேசியவாதிகளை” வெறுத்து விலகிப் பின் மதவாத உணர்வுகளைச் சவுக்காலடிக்கப் புறப்பட்டுப் பின் சோசலிசத்தின் சிறப்பை உணர்ந்து இடது பக்கம் சிறிது தூரம் சென்று பின் பிராமண எதிர்ப்பு நிலை எடுத்து மீண்டும் சீர்திருத்தப் பணிக்கே திரும்பி சுதந்திரம் என்ற பேரால் பிராமண ஆட்சி வருவதை விட வெள்ளைக்காரனே மேல் என்று பிரிட்டிஷ் ஆதரவு நிலை எடுத்து - என பெரியார் என்னும் கட்டுக்கடங்காத சக்தியின் தனிமனித சரிதையும் தமிழகத்தின் வரலாறும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. இந்த வரலாற்றின் பக்கங்களின் முக்கிய வரிகளை சுருக்கமாக மறுவாசிப்புச் செய்கிறது இப்புத்தகம்.

அம்மறுவாசிப்பின் மூலம் பெரியார் ஒவ்வொரு கட்டத்திலும் முந்தைய நிலைபாட்டிலிருந்து விலகிய புள்ளிகளை நமக்கு அடையாளம் காட்டி வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொள்ள உதவி செய்கிறது. பொப்பிலி அரசரை ஆதரித்துக்கொண்டே ஜமீந்தார் அல்லாதார் மாநாட்டை நடத்தினார். நாட்டுக்கோட்டை செட்டியார்களை வைத்துக்கொண்டே லேவாட்ர்ஹேவிக்காரர்கள் இல்லாதார் மாநாட்டை நடத்தினார். தரகு வணிகர்களும் நிலப்பிரபுக்களும் அமர்ந்த மேடையில் ஏகமனதாக சமதர்மத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என அவர் மீது விமர்சனங்கள் உண்டு என்றாலும் தமிழ் மண்ணில் ஒரு மாற்றம் வரவேண்டும் என விரும்பும் எவரும் பெரியாரை மறந்து விட்டு அல்லது அவரைக் கற்காமல் ஓரடியும் எடுத்து வைக்க முடியாது எனத் தெளிவான குரலில் சிக்கனமான வார்த்தைகளில் வலுவான வாதங்களை முன் வைக்கும் புத்தகம்.

Bharathi என்றென்றும் மார்க்ஸ்
ஜா.மாதவராஜ்
(32 பக்கம் ரூ.10)

தன் நேயர்களிடம் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் உலகின் மிகச் சிறந்த சிந்தனையாளர் யார் என்று லண்டன் பி.பி.சி. நிறுவனம் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. உலக முதலாளிகளும், நடத்திய பி.பி.சி.யும் அதிர்ச்சியடையும் வண்ணம் மக்கள் காரல் மார்க்ஸ் என்று விடையளித்தனர். முதலாளித்துவம் என்னும் விருட்சத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் சபிக்கப்பட்ட காலம் என்னும் வேதாளத்தை விடுதலை செய்து தன் தோள்களில் தூக்கிச் செல்லும் காரல் மார்க்ஸிடம் கேள்விகளைக் கேட்டபடி வருகிறது வேதாளம். விக்கிரமாதித்தனைப்போல அல்லாமல் ஒவ்வொரு கேள்விக்கும் தன் ஆய்வுகளிலிருந்து ஆகச் சரியான பதிலைச் சொல்லிக்கொண்டே காலத்தின் புதிர்களை விடுவித்துக்கொண்டே தன்னை மேலும் மேலும் தெளிவு படுத்திக் கொண்டே காலத்துடன் நகர்கிறார் மார்க்ஸ். இப்படியான ஒரு படிமத்துடன் வாசகரையும் காலத்தின் கேள்விகளுக்கு முன் நிறுத்தி மார்க்ஸோடு சேர்ந்து நாமும் புதிர்களை அவிழ்த்து இனக்குழு வாழ்க்கையிலிருந்து தனிச்சொத்து தோன்றிய வரலாற்றையும் அதன் நிலைநிறுத்தலில் தத்துவங்கள் ஆற்றிய பங்கு பற்றியும் அறிந்தபடியே கார்ல் மார்க்ஸ் என்னும் இளம் போராளியின் கால்தடம் பற்றிக் கூடவே நடந்து செல்கிறோம்.

வழிநெடுகிலும் மார்க்ஸ் ஹெகலையும் ஃபோயர்பாக்கையும் ஆடம் ஸ்மித்தையும் ரிக்கார்டோவையும் உட்கொண்டு பின் நிராகரித்து முன்னோக்கி நடந்து செல்வதைப் பார்க்கிறோம். மார்க்ஸின் காலத்திலேயே 73 நாட்கள் ஆட்சியிலிருந்த பாரீஸ் கம்யூன் சரிகிறது. அவர் காலத்துக்குப் பின் 73 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த சோவியத்தும் கீழை ஐரோப்பிய நாடுகளும் சரிகின்றன. ஆனாலும் மார்க்ஸ் இன்னும் வீறு நடை போடுகிறார் உலகெங்கும் நடைபெறுகிற போராட்டங்களின் வடிவில். 32 பக்கங்களுக்குள் 40க்குமேற்பட்ட புகைப்படங்கள் ஏராளமான பக்கக் குறிப்புகள், கவிதைகள் என வாசகர் நெஞ்சம் உவகை கொள்ளும் விதமான தயாரிப்பாக ஒவ்வொரு பாட்டாளியும் வீட்டில் வைத்திருந்து அவ்வப்போது எடுத்துப் படித்துக் கொள்ள வேண்டிய புத்தகமாக இருக்கிறது.

Bharathi சிலந்தியும் ஈயும்
வில்ஹெல்ம் லீப்நெஹ்ட்
தமிழில் : இரா.கிருஷ்னையா
(16 பக்கம்.விலை ரூ.5)

லீப்நெஹ்ட் (1826-1900) ஜெர்மானியத் தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த ஒரு பெயர் என்றார் லெனின். இத்தலைப்பில் தொழிலாளி வர்க்கத்தோடு அவர் பேசிய உரை இந்நூலாக வந்துள்ளது. ஈக்களை தன் வலைப்பின்னலில் விழ வைத்துப் பின் அவற்றைக் கொலைவெறியோடு உண்டு புசிக்கும் கொழுத்த சிலந்தியை முன் வைத்து பாட்டாளிகளுக்கு நீங்கள்தான் அந்த ஈக்கள். உங்கள் ஆண்டைகளும் முதலாளிகளும் தரகு முதலாளிகளும்தான் அந்தச் சிலந்திகள் என்று புரிய வைக்கிறார். சிலந்திகள் பின்னும் சிக்கலான வலைகளுக்குள் மாட்டிக்கொண்டு விதியை நோவதற்கு மாறாக எண்ணிக்கையில் அதிகமான ஈக்களெல்லாம் ஒன்றாக முடிவெடுத்தால் தங்களின் சிறகசைப்பில் எத்தனை சிக்கலான வலைப் பின்னல்களையும் அறுத்தெறிந்து விடுதலை பெற முடியும் என்பதை ஆவேசத்துடன் விளக்கும் புத்தகம்.


Bharathi ஹரப்பா வேதங்களின் நாடா?
த.வி.வெங்கடேஸ்வரன்
(24 பக்கம் ரூ.5)

வேதங்கள் பிறந்தது இந்தியாவில்தான். ஆதிக்கலாச்சாரமான ஹரப்பா/மொஹஞ்சோதரா கலாச்சாரம் ஆரிய மரபுதான். ஆரியர்கள் வெளியிலிருந்து வரவில்லை. இங்கிருந்துதான் வெளியே போனார்கள். ராமபிரானும் அவருடைய சந்ததியினரும் இம்மண்ணின் மூதாதைகள் என்பது போன்ற ஏராளமான ‘சரித்திர உண்மைகள்’ எல்லாம் சங் பரிவாரங்கள் அவுத்து விடும், சரடு திரித்து விடும் கயிறு என்பதை வலுவான சரித்திர மற்றும் மொழியியல் ஆதாரங்களோடு நிறுவும் புத்தகம். இந்திய மொழிகளிலும் பாரசீகத்திலும் ஈரான் ஈராக் பகுதியில் பேசப்படும் மொழியிலும் இருக்கும் பொதுவான வேர்ச்சொற்கள் பலவற்றை உதாரணமாக எடுத்துக்கொண்டு எப்படி அவை மேற்குக் கதவு வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தன என்பதை விளக்குகிறது.

ஆப்கானிஸ்தானத்தின் ஒரு பகுதியில் இன்னும் புழக்கத்தில் உள்ள பிருஹி என்னும் திராவிட மொழி பற்றிய தகவல்கள் நமக்கு முற்றிலும் புதியவையாகும். “ஆரிய வருகை” என்னும் சரித்திர நிகழ்வு பற்றிய செய்தியை இந்தியாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு சிந்தனைப்போக்கு உள்ளவர்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள் என்கிற செய்தியெல்லாம் வாசகருக்கு சுவையான செய்திகளாக அமைகின்றன. குதிர்கள் இந்தியப்பகுதிக்கு வந்தது கி.மு.2000க்குப் பிறகுதான். சோம பானம் பற்றி வேதங்கள் சிலாகித்துப் பேசுகின்றன. ஆனால் அதைத் தயாரிக்கத் தேவையான எபித்திரா என்னும் தாவரம் இங்கு விளையவில்லை. அது பாரசீக நிலப்பரப்பில்தான் இப்போதும் விளைந்து கொண்டிருக்கிறது. தவிர ரிக் வேதத்தில் திரும்பத் திரும்பக் கூறப்படும் நிலப்பரப்பு பனி படர்ந்த மலை முகடுகளுக்கு நடுவே உள்ளதாக வருகிறது. ஹரப்பா அப்படியான நிலப்பகுதியல்ல. பாரசீகம்தான் அது. இன்னும் இதுபோலப் பல வானவியல், அகழ்வாய்வுச் சான்றுகளோடு வேதங்கள் பாரசீகச் சமவெளிகளிலும் இந்துகுஷ் மலைப் பகுதியிலுமாகத்தான் எழுதப்பட்டிருக்க முடியும் என்பதை ஆணித்தரமாக நிறுவுகிறது இந்நூல்.

Bharathi இந்திய மண்ணில் பொருள் முதல்வாதம்
வி.பி.சிந்தன்
(32 பக்கம் ரூ.5)

பொருள்முதல்வாதம் அந்நியச் சரக்கு. தொன்மையான காலத்திலிருந்தே இந்திய மண்ணில் வேரூன்றி ஆல்போல் தழைத்து வேர்கொண்டிருப்பது ஆன்மீகம்தான் என்று பலகாலமாகச் சிலர் பரப்பிவரும் கருத்து முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. ஒரு பெருமைமிக்க வரலாறு இந்தியப் பொருள்முதல்வாதச் சிந்தனைக்கு உண்டு என்பதை எளிய தமிழில் எடுத்துச்சொல்லும் நூல். பொருள்முதல் வாதம் இந்திய மண்ணில் பலமடைந்திருந்த காலத்தில்தான் மருத்துவம், கணிதம், வானசாஸ்திரம் மற்றும் பல்வேறு துறைகளில் அளப்பரிய சாதனைகள் படைக்கப்பட்டன. எல்லாம் எங்கள் இந்தியாவில் இருந்தது இன்று சிலர் பெருமைப்பட்டுக்கொள்ளும் பல சாதனைகள் இந்தியப் பொருள்வாதத்தின் சாதனைகளே. அந்த வரலாற்றை எராளமான நூல்களை நூலகங்களை எல்லாம் ஆன்மீகவாதம் அழித்ததுதான் இந்தியாவின் சோக வரலாறு. விஞ்ஞான வளர்ச்சியோ இயந்திர நுட்பங்களோ இல்லாத அக்காலத்தில் தோன்றிய பொருள்முதல்வாதச் சிந்தனைகள் அதற்கேயுரிய பலவீனங்களோடுதான் இருந்தன. மாற்றங்களின் காரணம் பொருளேதான். கடவுளல்ல என்று சொன்ன அசேதன காரணவாதத்தை முன் வைத்த சாங்கியம், அணுக்கள்தான் மூலப்பொருட்கள் என்று வாதாடிய நியாய வைசேஷிகர்கள், கண்முன் இருக்கும் உலகத்தைத் தவிர வேறு கற்பனைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது, ஐம்புலன்களைத் தவிர அறிவுக்கு வேறு தோற்றுவாய் இல்லை என வாதாடிய லோகாயதம், எந்தப் புதிய கடவுளையும் முன்வைக்காமல் தனியுடமையையும் வேத மரபுகளையும் நிராகரித்து எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது என்று எழுந்த பௌத்தம், என ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் இந்தியப் பொருள்முதல்வாதத்துக்கு உண்டு என்பதை பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவரின் நெகிழ்ச்சிமிக்க வார்த்தைகளில் வாசிக்கிறோம்.

Bharathi மலராத அரும்புகள்
பேரா.ஆர்.சந்திரா
(24 பக்கம் ரூ.5)

“9 அல்லது 10 வயதுக் குழந்தைகள் காலை 3 அல்லது 4 மணிக்கு படுக்கையிலிருந்து இழுத்து வரப்பட்டு இரவு 10 அல்லது 11 மணிவரை வேலை செய்யக் கட்டாயப் படுத்தப்பட்டு, அவர்கள் உடல் சுருங்கி முகம் வெளுத்து நினைக்கவே பயமாக இருக்குமளவுக்கு கற்களாக குழந்தைகள் ஆக்கப்படுகின்றனர்” 150 ஆண்டுகளுக்கு முன்னால் மூலதனம் நூலில், இங்கிலாந்து நாட்டில் நடப்பது பற்றி மாமேதை காரல் மார்க்ஸ் எழுதிய வரிகள் இவை. இவ்வரிகளை வாசிக்கும்போது ஏதோ தமிழ்நாட்டில் சிவகாசியைப் பற்றி எழுதியது போல இருக்கிறது. வாசகர் நெஞ்சம் அதிரும்படியான பல புள்ளிவிவரங்களோடு, குழந்தை உழைப்பாளிகளின் வாழ்வுபற்றியும் மாற்றத்துக்கான போராட்டத்தின் அவசியம் பற்றியும் பேசும் புத்தகம். தீப்பெட்டித்தொழில், பட்டாசு, கண்ணாடித்தொழில், மண்பாண்டம் மற்றும் கல்குவாரி, கொலுசுப்பட்டறை, தையல் வேலை, பாலியல் தொழில் என சுகாதாரத்தைச் சீர்குலைக்கும் பல தொழில்களில் நம் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். கல்வியும் விளையாட்டுமாகக் கழிய வேண்டிய பால்யம் இப்படிக் கழிகிறது.

“தினசரி உலகில் 10 கோடி குழந்தைகள் தினமும் வெறும் வயிற்றுடன் மௌனமாகப் படுக்கைக்குச் செல்கிறார்கள்” என்னும் யூனிசெஃப்பின் அறிக்கையில் உள்ள இந்த ஒருவரி எந்த உலக மகா இலக்கியமும் ஏற்படுத்தாத மன உளைச்சலையும் வேதனையையும் குற்ற உணர்வையும் கண்ணீரையும் வாசகருக்குத் தருகிறது. இதுபோன்ற ஏராளமான தகவல்கள். மட்டுமின்றி ராணுவத்துக்கு 40 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யும் நம் உலகம் இந்த உலகத்துக் குழந்தைகளுக்கெல்லாம் சத்தான உணவை வழங்கிடத் தேவையான 50300 கோடிப் பணம் இல்லாமல் முகம் திருப்புகிறது. குழந்தைகள் மீது எந்த அக்கறையுமற்ற இந்த உலகம் மாற்றப்பட்டே தீரவேண்டும்.

Bharathi காந்தி அம்பேத்கர் - மோதலும் சமரசமும்
அருணன்
(48 பக்கம் ரூ.10)

ஏதோ காந்திஜியும் அம்பேத்காரும் ஜென்மப் பகைவர்கள் போல வாழ்ந்ததாக இன்றைக்குச் சில பேர் சித்தரிக்கிறார்கள். யதார்த்தம் நேர் மாறாக இருந்ததை வாசகர் மனம் கொள்ளும் விதமாக இப்புத்தகம் விளக்குகிறது. உயர்சாதி மனோபாவம் ஆதிக்கம் செலுத்திய காங்கிரசின் பிரதிநிதியாக காந்திஜி பேசியபோதெல்லாம் முரண்பட்டு நின்ற அண்னல் அம்பேத்கார் காந்திஜியின் மனதை அறிந்தவராக செயல்பட்ட வரலாற்றின் தருணங்கள் நம் முன் விரிகின்றன.

எந்தக் காலத்திலும் காங்கிரசிலேயே இருந்திராத அம்பேத்கர் சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அதுவும் சட்ட அமைச்சராக. அதிலும் குறிப்பாக சுதந்திர இந்தியாவின் புதிய அரசியல் சாசனம் வரையப்படுகிற வேளையில். இதற்குக் காரணகர்த்தாக்களாக விளங்கியவர்கள் காந்திஜியும், நேருவும் என்பது சரித்திர உண்மையல்லவா?

இதே போல பூனா ஒப்பந்தம் என்ற பேரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் காந்திஜி துரோகம் செய்துவிட்டார் என்கிற குரலும் இப்போது கேட்கிறது. சாதி இந்துக்களின் சூழ்ச்சியே பொதுத் தொகுதிமுறை. அம்பேத்கரின் இரட்டை வாக்குரிமையை நாம் வென்றெடுக்க வேண்டும் என்கிற ஆவேச முழக்கங்கள் சில தலித் இயக்கத் தலைவர்களால் எழுப்பப்படுகிறது.

பூனா ஒப்பந்தம் என்பது என்ன? இரட்டை வாக்குரிமையை அம்பேத்கர் எந்த வரலாற்றுப் பின்னணியில் முன் வைத்தார்? எரவாடா சிறையில் காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையில் நடந்த உரையாடலின் சாரம் என்ன? காந்தியின் மனநிலையில் எப்படி அம்பேத்கர் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார், இவை எல்லாம் ஒரு சரித்திர நாவலின் அத்தியாயங்கள் போல ஜீவனுள்ள மொழிநடையில் விரிந்து செல்கிறது. இரட்டை வாக்குரிமைதான் இறுதி லட்சியம் என அம்பேத்கர் கருதியிருந்தால் அவர் அரசியலமைப்புச் சட்டத்தில் அதை ஏன் சேர்க்கவில்லை?

இது போன்ற கேள்விகளுக்கு நிதானமாக விடையளித்து வரலாற்றை மறுவாசிப்புச் செய்யத் தூண்டும் புத்தகம்.

Bharathi ஒரு நிமிடம் ஒரு மரணம்
காச நோய் பற்றிய ஒரு விளக்கம்
டாக்டர் ராமன் கக்கர்
தமிழில்: வி.என்.ராகவன்
(90 பக்கம் ரூ.15)

காசநோய், ஷயரோகம், எலும்புருக்கி எனப் பல பெயர்களால் அறியப்படும் TB தாக்கி நம் நாட்டில் ஒரு நிமிடத்துக்கு ஒருவர் இறக்கிறார். உலகிலேயே நம் நாட்டில்தான் காச நோயாளிகள் அதிகமாக இருக்கின்றனர். உலகின் காச நோயாளிகளில் மூன்றில் ஒருபங்கு இந்தியாவில். சுமார் 3 லட்சம் குழந்தைகள் இதன் காரணமாக ஆண்டுதோறும் பள்ளியை விட்டு நிற்கின்றனர். ஒரு லட்சம் பெண்கள் இந்நோய் காரணமாக விவாகரத்து செய்யப்படுகின்றனர். பெரும்பாலும் ஏழைகளையே இந்நோய் தாக்குகிறது. ஆகவே எய்ட்சுக்குச் செலவிடும் அளவில் பாதிகூட காச நோய்க்குச் செலவிட பணக்கார நாடுகள் தயாராக இல்லை. இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் இந்நோய்க்கு மருந்து கண்டுபிடித்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இந்த மரணங்கள் ஏன்? இந்த மரணங்கள் தவிர்க்கப் படக்கூடிய சாத்தியமுள்ளவையே. தேவை காசநோய் பற்றியும் அதற்கான சிகிச்சை பற்றியுமான விழிப்புணர்வு. கவிஞர் ஜான் கீட்ஸையும், ஷெல்லியையும், டி.எச்.லாரன்ஸையும், ஆர்.எல்.ஸ்டீவன்சனையும், பிரஞ்சுப்புரட்சிக்கு வித்திட்ட ரூசோவையும், ஜெர்மானியக் கவி கோத்தெயையும், பிரான்ஸ் கஃப்காவையும், தாஸ்தவ்ஸ்கியையும், ஆண்டன் செகாவையும், புகழ்பெற்ற நாவலான ‘அனிமல் ஃபார்ம்’ எழுதிய ஜார்ஜ் ஆர்வில்லையும், நம் கணிதமேதை சீனிவாச ராமானுஜத்தையும் தாக்கிய இக்காசநோயை நாட்டை விட்டு விரட்டும் போராளியாக ஒவ்வொரு வாசகரையும் ஆக்கிவிடும் வலுவான புத்தகமாக இது அமைந்துள்ளது.

Bharathi தண்ணீர்.. தண்ணீர்... தண்ணீர்...
பேராசிரியர் ஆர்.சந்திரா
(32 பக்கம் ரூ.5)

97 சதவீதம் உப்பு நீராகக் கடலில் உள்ளது. 2 சதவீதம் பூமியெங்கும் பனிக்கட்டியாக உறைந்துள்ளது. மீதி 1 சதவீதம் தண்ணீரைத்தான் குடிநீராகவும் விவசாயத்துக்கும் மற்ற வேலைகளுக்கும் நாம் பயன்படுத்த முடியும். ஆனால் மனிதகுலம் எந்தெந்த வகையிலெல்லாம் நீர் கிடைக்குமோ அவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக உறிஞ்சத் துவங்கி விட்டது என்கிற அபாய எச்சரிக்கையுடன் துவங்குகிறது புத்தகம். வளர்ந்த நாடுகள் 85 சதம் நீர்வளத்தை தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்துகின்றன. ஆப்பிரிக்க நாடுகள் 88 சதவீத நீரையும், பல வளரும் நாடுகள் 70 சத நீரையும் விவசாயத்துக்காகப் பயன்படுத்துகின்றன. இந்தியாவும் சீனாவும் நிலத்தடி நீரில் 100 சதவீதத்தையும் பயன்படுத்தி விட்டன.
இந்தப் பின்னணியில் நீர் வியாபாரம் நீரைத் தனியார்மயமாக்குதல் நடந்து வருகிறது. 1987ல் கொண்டுவரப்பட்ட தேசிய நீர்க்கொள்கை நீர்ப்பயன்பாட்டில் முன்னுரிமை பற்றிக் குறிப்பிடும்போது முதலில் குடிநீர், அடுத்து நீர்ப்பாசனம், மூன்றாவதாக மின்சார உற்பத்தி, நான்காவதாக தொழிற்சாலை/மற்ற பயன்பாடுகள் என வரிசைப்படுத்தியது. ஆனால் 2002 புதிய தேசிய நீர்க்கொள்கையில் இந்த முன்னுரிமை இல்லை. நீர் வியாபரத்துக்கு அகலக் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. இப்பின்னணியில் அனைவருக்கும் பொதுவான சொத்தான நீர்வளத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்கிற பத்துக் கட்டளைகளுடன் புத்தகம் முடிவடைகிறது.

Bharathi மார்க்சிய தத்துவம் - ஓர் அறிமுகம்
எஸ்.ஏ.பெருமாள்
(32 பக்கம். விலை ரூ.7)

தமிழகமெங்கும் நெடுங்காலமாக இடதுசாரி இயக்கத் தோழர்களுக்கு வகுப்புகள் எடுத்த அனுபவத்தோடு பளிச்சிடும் இச்சிறுநூல் மிகவும் பயனுள்ள ஆரம்பக் கையேடாகத் திகழும் என தோழர் என்.சங்கரய¢யா தனது அணிந்துரையில் குறிப்பிடுகிறார். லுத்விக் போயர்பாக் மற்றும் வில்லியம் ஹெகல் ஆகிய இரு படிக்கட்டுகளைத் தாண்டி வந்த மார்க்சிய தத்துவம் தோன்றிய வரலாற்றுப் பின்னணியில் துவங்கி இயக்கவியலின் அடிப்படை அம்சங்களை விளக்கி இயக்கவியலுக்கே உரித்தான மூன்று அடிப்படை விதிகளை எளிய உதாரணங்களுடன் பல்வேறு உப தலைப்புகளில் விரிவாகவே விளக்குகிறது. மார்க்சின் காலத்துக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள் எவ்விதம் மார்க்சியத்துக்கு வலுச்சேர்த்தன என்பதை விளக்கும் புத்தகம், இந்திய தத்துவவியலின் இரு பிரதான போக்குகளைப் பற்றிய அறிமுகத்தையும் செய்து, தத்துவப் போராட்டம் என்பது அடிப்படையில் எதிர் எதிர் வர்க்கங்களுக்கிடையிலான போராட்டத்தின் சாரமே என்கிற லெனின் கருத்தை தெளிவாக விளக்குகிறது. வரலாற்றியல் பொருள்முதல்வாதம் பற்றிய அறிமுகத்தோடு ஆதி பொதுவுடமைச் சமூகத்தில் துவங்கி சோசலிச சமூகம் வரையிலான சமூக வளர்ச்சியின் 5 கட்டங்களை விளக்கி வர்க்கப்போராட்டத்துக்கான தொழிலாளி வர்க்கக் கட்சியைக் கட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தி முடிகிறது.

Bharathi உலகமயமாக்கல்
சகாப்தத்தில் கலாச்சாரம்
சீதாராம் யெச்சூரி
(16 பக்கம் ரூ.5)

பொருட்களை உற்பத்தி செய்யும் சாதனங்களை வைத்திருக்கும் வர்க்கமே, அறிவுச்சாதனங்களையும் வைத்திருக்கும். எனவே அவர்கள் சிந்தனையாளர்களாகவும் எண்ணங்களை உற்பத்தி செய்பவர்களாகவும் இருந்து உற்பத்தியை ஒழுங்குபடுத்துகிறார்கள். அவர்களின் எண்ணங்களே அந்த சகாப்தத்தின் ஆளும் எண்ணங்களாகி விடுகின்றன என்கிற மார்க்ஸ், ஏங்கல்சின் கருத்தை மேலும் விளக்கும் கிராம்சி “ஆளும் வர்க்கங்களின் எண்ணங்களை அரசு மட்டும் செயல்படுத்துவதில்லை. அரசு என்பது சமுதாயம் என்ற கோட்டையைச் சுற்றியுள்ள அகழியே. அந்தக் கோட்டைக்குள்தான் கலாச்சார நிறுவனங்களும் ஆளும் வர்க்கங்களின் ஆட்சியை நியாயப்படுத்தும் காரண காரியங்களும் பின்னிப் பிணைக்கப்படுகின்றன” என்கிறார் என்று துவங்கும் புத்தகம் எளிய நடைமுறை உதாரணங்களுடன், கலாச்சாரம் பற்றிய ஆழமான புரிதலை வாசகருக்கு ஏற்படுத்துகிறது. மக்கள் மீது ஆளும் வர்க்கங்களின் எண்ணங்களை ஆதிக்கம் செலுத்த வைப்பதற்காக குடும்பம், சமுதாயம், சாதி, மதம், வழிபாட்டு ஸ்தலங்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. ஏதோ எல்லோருக்கும் ஒரு பொதுவான கலாச்சாரம் இருப்பதாக ஒரு மாயை ஏற்படுத்தப்படுகிறது. உலகமயமாக்கலும் வகுப்புவாதமும் கலாச்சாரத்தைப் பயன்படுத்தி தங்களின் அன்றாடப் பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசை திருப்புகின்றன. மார்க்ஸ் சொன்னது போல முதலாளித்துவ உற்பத்தியானது, மக்களுக்காகப் பொருட்களை உற்பத்தி செய்வதோடு, பொருட்களுக்காக மக்களையும் உற்பத்தி செய்கிறது. கலாச்சாரம் அப்பணியைச் செய்யப் பயன்படுகிறது. ஆகவே நாம் தற்போதுள்ள நமது கலாச்சார வடிவங்களை மாற்றி மேம்படுத்துவதோடு பொது மக்களின் கலாச்சாரத்திற்கான புதிய வடிவங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற அறைகூவலே புத்தகத்தின் இறுதி வரிகளாக வந்துள்ளன.

Bharathi ரோஸ்
இரா.நடராசன்
(64 பக்கம் ரூ.10)
ஆயிஷாவைப் போல மனதை உலுக்கும் இன்னொரு கதை. கதை என்று கூடச் சொல்ல முடியாது. ஒரு வாழ்க்கைச் சித்திரம். ’ஒரு’ என்கிற அடைமொழி கூடச் சரியில்லை. நம் அன்றாட வாழ்வின் ஒரு பக்கம் அப்படியே நம் கண்முன் ரீவைண்ட் ஆகி நம் குழந்தைகளின்பால் நாம் செலுத்தும் வன்முறையை நம் உள்ளம் அதிர உணரச் செய்கிறது. ஒரு மௌனப்படம் போல நம்மை அழுத்தும் இக்கதையில் சம்பவங்களோ விவரணைகளோ எதுவுமே இல்லாமல் பேசும் வசனங்களால் மட்டுமே கதையை நகர்த்திச் செல்லும் உத்தி வலுவாகப் பயன்பட்டுள்ளது. ஒரு பெண்ணை லாட்ஜுக்கு அழைத்துச்செல்லும் ஒரு கதையில் பூமணி இந்த உத்தியைப் பயன்படுத்தி எழுதியிருப்பார். அதற்குப் பிறகு இவ்வளவு வலுவுடன் இந்த உத்தி இக்கதையில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்து வீட்டிலும், வேலைக்குச் செல்லும் பெற்றோரும், பள்ளி ஆசிரியர்களும், ஒவ்வொருவரும் தினசரி இரவு படுக்கைக்குச் செல்லுமுன் ஒரு முறை இப்புத்தகத்தை வாசித்துத் தங்கள் மனசாட்சியுடன் பேசிக்கொள்ள வேண்டும். இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை. புத்தகத்தை வாங்கிவிடுவோம்.

Bharathi மனிதமும்
உரிமைகளும்
ச.பாலமுருகன்
(64 பக்கம் ரூ10)

மனித உரிமைகள் பற்றிய தகவல் தொகுப்புகளாகவும், கருத்துக்குவியல்களாகவும், புதிய வாசகர்களுக்கு அயர்ச்சியூட்டும் விதமாகவும், பல புத்தகங்கள் இதுவரை வந்துள்ளன. அவை எல்லாவற்றிலிருந்தும் முற்றிலுமாக மாறுபட்டு எளிய தமிழில் தமிழகத்திலும், நாட்டின் பிற பகுதிகளிலும், பிற நாடுகளிலும் நடைபெற்ற பல உண்மைச் சம்பவங்களை முன்வைத்து இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரில் மனித உயிர்களுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போனதைக் கண்டு அதிர்ந்து போன அறிஞர்கள், இனியும் இப்படி ஒரு துயரம் நிகழாது இருக்க மனிதம் பாதுகாக்கப்பட சில சட்டங்கள் தேவை என உணர்ந்தனர். அதன் விளைவாக 1948 டிசம்பர் 10இல் சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை ஐ.நா.பொதுச்சபை வெளியிட்டது. ஆனாலும் ஐ.நாவில் உறுப்பு நாடாக இருந்து கொண்டே பல மனித உரிமை மீறல்களைச் செய்யும் அரசுகளும் மீறல்களைக் கண்டு கொள்ளாத அரசுகளும் இருக்கத்தான் செய்கின்றன.
சிலியிலும், குஜராத்திலும், சந்தனக்கடத்தல் வீரப்பனைத் தேடும் பெயரால் கர்நாடக தமிழக எல்லைப்பகுதி மக்கள் மீதும் என நடத்தப்பட்ட கொடுமைகளை முன்வைத்து சித்திரவதை பற்றிய ஐ.நா.பிரகடனம் விளக்கப்பட்டுள்ளது. பெண் சிசுக்கொலையிலிருந்து காதல் திருமணங்கள் முறியடிக்கப்படுவது மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் வரை எவ்விதம் பெண் உரிமைகள் பற்றிய பிரகடனம் மீறப்படுகிறது என்பது விளக்கப்பட்டு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனைகளையும், முன்வைக்கிறது. பழங்குடி மக்கள் வாழ்வுரிமை, குழந்தைகளுக்கான உரிமைகள், வீடற்றவர்களுக்கான மனித உரிமைகள், சாதியின் பேரால் மனித உரிமை மீறல்கள் என நகர்ந்து செல்லும் புத்தகம், மரண தண்டனை தேவையா என்கிற விவாதத்தை முன்வைத்து சட்டத்தின் மீதும் நீதிமன்றங்களின் மீதும் அதீத நம்பிக்கை வைத்துவிடாமல் அதே சமயம் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி நாம் மனித உரிமைகளை நிறுவப் போராட வேண்டும் என்கிற அறைகூவலோடு புத்தகம் முடிகிறது.

Bharathi மார்க்சியமும்
கலாச்சாரப் பணியும்
நாராயண் சுர்வே
தமிழாக்கம் : கமலாலயன்
(16 பக்கம்ரூ.5)

1944இல் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து தொழிற்சங்கவாதியாக இடைவிடாத மக்கள் பணியாற்றிக்கொண்டே கலாச்சாரத் தளத்திலும் தொழிலாளர் மத்தியில் பணிபுரியும் அனுபவத்தோடு கலாச்சார தளத்தில் இடதுசாரி இயக்கம் தவறிய இடங்களை இயக்கத்தின் மனசாட்சியாக நின்று நேரடியாகப் பேசுகிறார் சுர்வே. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வரும் சாதீய அமைப்பு, சடங்கு வெறி, மதவாதம், மறுபிறப்புக் கோட்பாடுகள் போன்றவையெல்லாம் நமது கலாச்சார வரலாற்றின் பகுதியாக உள்ளன. நாம் எந்த அளவுக்கு வரலாற்றின் இந்தப் பகுதிக்குப் பொறுப்பேற்றிருக்கிறோம்? நாம் எதுவுமே செய்யவில்லை என்று கூறவில்லை. ஆனால் பிரதான இலக்கை நோக்கி எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறோம்? என்று கேள்விகளை எழுப்பி விடைகாண முயற்சிக்கும் புத்தகம் இது. பொருள் உற்பத்தியும் பிற சமூக நடவடிக்கைகளும் மனிதனின் தூலமான தேவைகளின் அடிப்படையில் எழுகின்றன. ஆனால் கலாச்சார நடவடிக்கைகளோ அவனது மானசீகமான தேவைகளின் அடிப்படையில் எழுகின்றன என்கிற தெளிவான புரிதலோடு நகரும் புத்தகம், ஒரு மனிதன் வெறுமை உணர்வினாலும், உள்ளீடற்ற தன்னுணர்வினாலும் துன்புறும்போது மதத்தின் பக்கம் திரும்புகிறான் என்பதை உணர்த்தி கலாச்சாரத் தளத்தில் செய்ய வேண்டிய வேலைகள் பற்றிய முன்வைப்புகளோடு முடிகிறது. நேரடியாக வாசிக்கும் உணர்வை ஏற்படுத்தும் நல்ல மொழிபெயர்ப்பு.

Bharathi தற்காலத் தமிழகத்தில்
சமூக வன்முறைகள்
டாக்டர்.கா.அ.மணிக்குமார்
(32 பக்கம் ரூ.5)

கடந்த காலங்களில் எழுதப்பட்ட வரலாறுகளில் கலவரங்களாகவும் கிளர்ச்சிகளாகவும் வன்முறைகளாகவும் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த பல நிகழ்வுகள் இன்று மறுவாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டு அவற்றில் பல சமூக இயக்கங்களாகவும் சமூக மாற்றத்துக்கான முன்னோட்ட நிகழ்வுகளாகவும் கண்டறியப்பட்டு புதிய வரலாறு எழுதப்பட்டு வருகிறது என்கிற வரிகளோடு துவங்குகிறது இப்புத்தகம். கடந்த ஐநூறு ஆண்டு கால தமிழக வரலாற்றில் சமுதாய மாற்றம் ஏற்பட்ட ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூக வன்முறை நிகழ்ந்துள்ளது. அது வலக்கை, இடக்கைச் சாதிகளின் மோதலாகவோ நாடார்களுக்கும் பிற சாதியினருக்குமான மோதலாகவோ தலித்துகளுக்கும் ஆதிக்க சாதிகளுக்குமான மோதலாகவோ அவ்வவ் காலகட்டத்தில் வடிவம் எடுத்துள்ளன. 1652 இன் பிளாக் டவுன் கலவரம், 1707 இன் பெத்தநாயக்கர் பேட்டை மோதல், 1789 இன் இரண்டாம் பிளாக் டவுன் கலவரம் போன்றவையும் பிற்காலத்தில் மத மாற்றத்துக்கு எதிராக நடந்த 1829 நல்லூர் கலவரம் போன்றவை சரியான சமூகப் பின்புலத்தோடு வாசகருக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன.

ஐரோப்பியப் பாதிரியார்களின் ஊக்கத்தாலும் காலனி அரசின் ஆதரவாலும் பொருளாதார முன்னேற்றம் பெற்ற நாடார்கள், தங்கள் சமூக அந்தஸ்து இன்னும் கீழான நிலையில் இருப்பதை எண்ணிக் கவலை கொண்டு கோவில் நுழைவு, உயர்சாதித் தெருக்கள் வழியே மண ஊர்வலம் செல்லுதல் போன்றவற்றுக்காகப் போராடத் துவங்கினர். இதன் காரணமாக வெடித்த 1895 இன் கழுகுமலைக் கலவரம், தென் மாவட்ட மக்களின் நினைவுகளில் இன்றும் அசைகிற 1899 இன் சிவகாசிக் கொள்ளை, தென்காசித் தாக்குதல் போன்ற வன்முறை நிகழ்வுகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

20 ஆம் நூற்றாண்டு, தலித்துகளின் எழுச்சியோடு திறக்கிறது. ஆகவே ஆதிக்க சாதிகளின் தாக்குதல் பெரும் வன்முறை நிகழ்வுகளாகின்றன. தென் தமிழக வரலற்றில் இன்றுவரை எதிரொலிக்கும் 1957 இன் முதுகுளத்தூர் கலவரம், வர்க்க ரீதியாகத் திரண்ட தஞ்சைப் பகுதி தலித் மக்கள் மீது ஏவப்பட்ட 1968 இன் கீழ வெண்மணிப் படுகொலைகள் என்று துவங்கி 1995 கொடியன்குளம் வன்முறை 1995 திருநெல்வேலிக் கலவரங்கள், 1997 மேலவளவுப் படுகொலை, 1999 தாமிரபரணிப்படுகொலைகள் என சரித்திரம் நம் கண்முன்னே விரிகிறது. சமூக மாற்றத்தில் அக்கறையுள்ள ஒவ்வொரு களப்பணியாளர் கையிலும் எப்போதும் இருக்க வேண்டிய புத்தகம்.

Bharathi அரசு
லெனின்
(32 பக்கம் ரூ.5)

அரசு என்பது என்ன? அது எவ்வாறு தோன்றியது? முதலாளித்துவத்தை அறவே தூக்கியெறியப் போராடும் தொழிலாளி வர்க்கக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி அரசைப் பற்றிக் கொள்ளவேண்டிய அடிப்படையான உறவு நிலை யாது? என்கிற கேள்விகளுக்கு விடையாக 1919 இல் தோழர் லெனின் ஆற்றிய உரையின் தமிழ் வடிவமே இப்புத்தகம். முதலாளித்துவ அறிஞர்கள், எழுத்தாளர்கள், தத்துவ ஞானிகளால் மிக அதிகமாகக் குழப்பிவிடப்பட்ட பிரச்சனையான அரசு பற்றி வரலாற்றுப்பூர்வமாக லெனின் விளக்குகிறார். வன்முறைகளைப் பயன்படுத்தும் வன்முறைக்கு மக்களைக் கீழ்ப்படுத்தும் முறையான தனி இயந்திரமான அரசு ஆதிகால இனக்குழு வாழ்க்கை முறையில் இருந்ததில்லை. அப்பொதெல்லாம் பொதுத் தொடர்புகள், சமுதாயக் கட்டுப்பாடு, வேலை ஏவுதல் முறை ஆகிய எல்லாமே பழக்க வழக்கம் மரபு ஆகியவற்றின் பலத்தினாலோ, குலத்தின் மூத்தோர்கள் அல்லது மகளிர் பெற்றிருந்த செல்வாக்கினாலோ, உயர் மதிப்பினாலோ நிர்வகிக்கப்பட்டன. சமூகம் வர்க்கங்களாகப் பிளவுண்ட பிறகே அரசென்பது ஒரு வர்க்கத்தின் மீது மற்றொரு வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக உள்ள ஓர் இயந்திரமாக உருவாகிறது. சுரண்டலுக்கு வாய்ப்பே இல்லாமல் போகும் போது, நில உடமையாளரும் ஆலை முதலாளிகளும் எங்குமே இல்லை என்னும்போது சிலர் வாரி வாரி விழுங்க மற்றவர் பட்டினி கிடக்கும் நிலை நீடித்திராத போது, இதற்கெல்லாம் இனி வாய்ப்பே இல்லை என்னும் நாளில்தான் அந்த இயந்திரத்தை நாம் குப்பையில் வீசுவோம். இதுதான் கம்யூனிஸ்ட்டுகளின் நிலை என முடிகிறது புத்தகம்.

<-- முந்தைய பக்கம் அடுத்த பக்கம் -->


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com