Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureBook Review
புத்தக விமர்சனம்

பாரதி புத்தகலாயத்தின் 100 புத்தகங்கள் - ஒரு பருந்துப் பார்வை
ச.தமிழ்ச்செல்வன்


Bharathi உலகமயமாக்கலும் பணி அமர்வுத் தரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றமும்
விஜயராகவன்
(56 பக்கம்.ரூ.10)

உள்நாட்டுச் சந்தையையும் உலகச் சந்தையையும் தாராளமயமாக்குவதன் மூலம் வர்த்தகம் நிதிமூலதனம் மற்றும் தகவல் ஆகியவை நாடுகளின் எல்லைகளைக் கடந்து தங்கு தடையற்றுப் பரவுவதற்கான ஏற்பாடுதான் உலகமயமாக்கல் என்பதை நாம் அறிவோம். பணித்தரத்தைப் பற்றி முதலாளித்துவம் நிறையப் பேசி பணியமர்வுத்தரம் பற்றிப் பேசவொட்டாமல் செய்துவிட்டது. முதலாளித்துவ அமைப்பில் உழைப்பும் ஒரு சரக்கு என்றாகிவிட்ட போது பணியமர்வு முறையையும் சரக்காகவே கொள்ள வேண்டும். எல்லா விஷ்யங்களிலும் தர அளவு பார்ப்பதுபோல் பணியமர்விலும் தரம் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. அப்படிப் பார்க்கையில் அதிக ஊதியமும் சமூகப் பாதுகாப்பும் கொண்ட பணியமர்வே அதிகப் பணியமர்வுத் தரமுடையதாக இருக்க முடியும் எனத் துவங்கும் இப்புத்தகம் பணியமர்வுத் தரத்தை தீர்மானிக்க நான்கு முக்கிய அளவுகோல்களை முன் வைக்கிறது. 1.பணியின் நிரந்தரத்தன்மை 2.உற்பத்தியின் பங்களிப்புக்கேற்ற ஊதியம் 3.பணியமர்வுப் படிநிலை முன்னேற்றம் 4.சமூகப் பாதுகாப்பு. உலகமயமாக்கலின் விளைவாக பணியமர்வுத் தரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் துறைவாரியாக வரலாற்றுப் பூர்வமாக இப்புத்தகத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. அதிகம் பேசப்படாத பொருள் பற்றிய தெளிவான புத்தகம்.

Bharathi தமிழக ஆறுகளின் அவல நிலை
பேராசிரியர் எஸ்.ஜனகராஜன்
(16 பக்கம் ரூ.5.)

தமிழகத்தின் ஆறுகள், ஏரிகள் குளங்கள் போன்ற நீர் நிலைகள் குறித்த நேரடி ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட டாக்டர் கனகராஜ் எழுதிய அவலநிலையில் தமிழக ஆறுகள் என்னும் புத்தகத்திலிருந்து இக்கட்டுரை சுருக்கித் தரப்பட்டுள்ளது. பாலாற்றுப்படுகையில் வாணியம்பாடியிலிருந்து தாமல் கிராமம் வரை மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகள் அதிர்ச்சியூட்டுகின்றன. நிலத்தடி நீர் தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவுகளால் முற்றிலும் மாசடைந்து போன கிராமங்களாக இவை மாறியுள்ளன. விவசாய நிலத்தில் 50 சதவீதம் சாகுபடியற்ற பரப்பாக மாறியுள்ளது. நீர்வளமிக்க பகுதிகளாக இருந்த இப்பகுதியில் இப்போது நீர் வியாபாரம் அதிகமாக நடைபெறுகிறது. கிராமங்களை விட்டு மக்கள் வெளியேறும் நிலை உருவாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் கால்நடைகளின் எண்ணிக்கை 70 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது. சராசரி மழைப்பொழிவு குறையவில்லை. ஆனாலும் ஏன் இந்த நிலை என்பதை புத்தகம் ஆய்கிறது. பூமி உள்வாங்கும் நீரின் அளவைவிட இறைக்கப்படும் நீரின் அளவு அதிகமாகி வருவதால் வறட்சிக்காலங்களில் நிலத்தடி நீர் கடும் பாதிப்புக்குள்ளாகிறது. சக்திமிக்க நீர் மேலாண்மையும் கேட்பாரற்றுக் கிடக்கும் ஆயிரக்கணக்கான ஏரிகள் குளங்களைப் பராமரிப்பதும் உடனடித் தேவை என்பது நமக்கு உணர்த்தும் புத்தகம்.

Bharathi விடுதலைப்புலி திப்பு சுல்தான்
டாக்டர் வெ.ஜீவானந்தம்
(40 பக்கம் ரூ.10)

அடிமைப்படுத்த வந்த ஆங்கிலேயரிடம் சமரசம் செய்து கொண்டு சன்மானம் பெற்று சொகுசு வாழ்க்கை தேடிக்கொண்ட சமஸ்தான அதிபர்கள் மத்தியில் விடுதலை வீரனாக போர்க்களத்திலேயே வீர மரணமெய்திய ஒரே இந்திய மன்னன் திப்பு சுல்தான். அவர் சுயசார்பு அரசை உருவாக்க பிரஞ்சு உதவியுடன் ஏவுகணைகள் செய்தார். சீன வல்லுநர்களை வரவழைத்து பட்டு உற்பத்தி செய்தார். கண்ணம்பாடி அணைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னே அடிக்கல் நாட்டி தரிசு நிலங்களை விளை நிலமாக்க முயன்றார். விவசாய ஆராய்ச்சி மையம் உருவாக்கினார். மக்களின் அறிவை விசாலமாக்க பெரும் நூலகம் அமைத்தார். மது ஒழிப்பை தீவிரப்படுத்தினார். நெப்போலியனுடனும் துருக்கியுடனும் ஆப்கனுடனும் உறவு கொண்டு அணிசேரா நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். எனினும் வரலாற்றில் அவருக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அக்குறை நீக்கிட சிறு பங்கினை ஆற்றும் புத்தகம் இது.

பின் இணைப்பாக தரப்பட்டுள்ள திப்புவின் மரணத்துக்குப் பின் நடந்த கொள்ளை பற்றிய கட்டுரை வாசக நெஞ்சங்களை நிச்சயம் பதறச்செய்யும்.

Bharathi 150 ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் அறிக்கை
பிரபாத் பட்நாயக்
தமிழில் : விஜயராகவன்
(32 பக்கம் ரூ.5)

மார்க்ஸ், ஏங்கல்ஸ் இருவருடைய உலகக் கண்ணோட்டத்தை முதன் முதலில் வெளிப்படையாக அறிவித்த புத்தகம் கம்யூனிஸ்ட் அறிக்கைதான். இது ஒரு அறிக்கை என்பதால் சுருக்கமாகவும் அடர்த்தியான ஆற்றல் மிக்கதாகவும் சமூக மாற்றத்துக்கான புரட்சிகர நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகவும் இருக்கவேண்டிய அவசியம் இருந்தது. இப்புத்தகம் வெளியாகி 150 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட நிலையிலும் அதன் இன்றைய பொருத்தப்பாடு மறுக்க முடியாததாக இருக்கிறது. அதற்கான காரணங்களை பிரபாத் பட்நாயக் இச்சிறு நூலில் விரிவாக ஆய்வு செய்து இந்த உலகமயமாக்கல் நாட்களிலும் சோசலிசத்தைப் புதுப்பிக்க உருவாக்கப்பட வேண்டிய ஒருங்கிணைக்கப்பட்ட கோட்பாடுகளுக்கு கம்யூனிஸ்ட் அறிக்கையில் தரப்பட்டுள்ள கண்டுபிடிப்புகள் அடித்தளமாக அமையும் என நிறுவுகிறார். வரலாற்றை பொருள்முதல்வாதப் பார்வையில் விளக்கியதும் வரலாற்றை வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகப் பார்த்ததும் மனித குலத்தை “வரலாற்றுக்கு முன்பான” நிலையிலிருந்து “வரலாறு படைக்கும்” நிலைக்குக் கொணரப்போகும் பட்டாளிவர்க்கம் என்கிற வரலாற்றுச் சக்தி எப்படி உருவாகப் போகிறது என்பதை விளக்கியதுமான சாராம்சம் கம்யூனிஸ்ட் அறிக்கையை நிலைபெற்று நிற்க வைத்துவிட்டது.

Bharathi 20ஆம் நூற்றாண்டு
அரசியலில் இந்தியா
அய்ஜாஸ் அகமது
தமிழில்:சஹஸ்
(16 பக்கம் ரூ.5.)

உலகின் பிற பகுதிகளைப் போலவே முதல் உலகப்போருக்கும் ரஷ்யப் புரட்சிக்கும் இடைப்பட்ட காலத்தில்தான் இந்தியாவிலும் நவீன அரசியல் காலம் துவங்கியது. இந்திய தேசிய இயக்கம் முன்னணிக்கு வந்த 1919-22 வரையிலான சுருக்கமான காலம் உலகின் பெரும் பகுதிகளுக்கு ஒரு அசாதாரண காலமாகும். ருஷ்யப் புரட்சியின் பின்னணியில் ஐரோப்பாவின் பெரும்பகுதி வர்க்க எழுச்சிகளைச் சந்தித்தது. சீனாவின் மே 4 இயக்கம், 1919 ஆம் ஆண்டின் எகிப்தியப் புரட்சி, ஆப்கன், துருக்கி, ஈரானிலும் இக்காலகட்டத்தில் பல எழுச்சிகள் ஏற்பட்டன.

உலகைச் சுற்றிலும் பல கம்யூனிஸ்ட் நாடுகள் உருவான பின்னணியில்தான் 1925இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டதைக் காண வேண்டும். அதே ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் துவக்கப்பட்டதையும் இந்தியாவில் நடந்த தனித்த நிகழ்வாக நாம் பார்க்க முடியாது. உலகின் பிற பகுதிகளில் இத்தாலியிலும் ஜெர்மனியிலும் பாசிச சக்திகள் பெரும் வேகத்துடன் வளர்ந்த பின்னணியில்தான் ஆர்.எஸ்.எஸ் துவக்கப்பட்டதைக் காண வேண்டும்.

இன்று இந்திய தேசியத்தின் ஆதார சாரமான ஏகாதிபத்திய எதிர்ப்பு, மத சார்பற்ற தன்மை ஆகியவை கைவிடப்பட்டுள்ளது எந்த உலகத்தின் பின்னணியில் என்பதையும் நாம் காண வேண்டும். இப்படியாக இந்தியாவின் அரசியலை 20ஆம் நூற்றாண்டு உலக நிகழ்வுகளின் பின்னணியில் புரிந்து கொள்ள உதவும் புத்தகம் இது.


Bharathi கல்வித் துறையால் - வறுமையால் நசுக்கப்படும் குழந்தைகள்
மைதிலி சிவராமன்
(32 பக்கம் ரூ.5.)

கருத்துப்பூர்வமாக மட்டுமே பேசி புள்ளிவிவரங்களை அள்ளி வீசாமல் உண்மைச் சம்பவங்களையும் பொது விசாரணையில் குழந்தைகள் பேசிய பேச்சுக்களையும் அடுக்கிச் சொல்வதன் மூலம் ஒரு உணர்ச்சிகரமான புத்தகமாக மாறிவிடுகிறது. கல்விச்சாலைகளின் வன்முறை பெற்றோரின் சம்மதத்தோடுதான் நடைபெறுகிறது. வகுப்பறைத் தண்டனைகள் சிறார்களிடையே ஏற்படுத்தும் வெறுப்பு, பீதி, அவமானம் பற்றி யாருக்குமே அக்கறையில்லை. குழந்தை உழைப்பாளிகள் பொது விசாரணையில் பேசிய பேச்சுகளின் பதிவுகள் இப்புத்தகத்தை வேறு ஒரு தளத்துக்கு எடுத்துச் செல்கிறது.

Bharathi வங்கித்துறையும் இந்தியாவின் எதிர்காலமும்
க.கிருட்டிணன்
(16 பக்கம் ரூ.5)

வங்கிகள் பொதுத்துறைக்குள் வருவதற்கு முன்னால் தனியார் வங்கிகள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றிச் செயல்பட்டு வந்தன. வங்கிகளின் உடைமையாளர்கள் அவரவர் வங்கிகளின் மூலம் பொதுமக்களிடமிருந்து திரட்டிய சேமிப்புத் தொகையை பெரும்பாலும் தம் சொந்த பந்தங்களுக்காகவே பயன்படுத்தினர். ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பும் கிடையாது. விளைவு ஏராளமான வங்கிகள் திவாலாகிப் போயின. பணம் போட்ட மக்கள் நிலை பரிதாபத்துக்குரியதானது. வெள்ளைக்காரன் நடத்திய வங்கியும் பணத்தைச் சுருட்டிக்கொண்டு ஓடியது. இதைக் குறிப்பாக உணர்த்தியே பாரதி “பொழுதெலாம் எமது செல்வம் கொள்ளை கொண்டு போகவோ” என்கிற வரிகளை எழுதினான் என்பார் தொ.மு.சி.ரகுநாதன். இந்தியா விடுதலையடைந்த பிறகு 1949ல்தான் வங்கித்தொழில் ஒழுங்கமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1950க்கும் 1969க்கும் இடைப்பட்ட 19 ஆண்டுகளில் மட்டும் 500க்கு மேற்பட்ட தனியார் வங்கிகள் திவாலாகிக் காணாமல் போயின. எல்லாம் போனது போக எஞ்சியிருந்தவற்றில்தான் 14 வங்கிகளை 19 ஜுலை 1969ல் அரசு நாட்டுடமை ஆக்கியது.
அன்று வங்கிகளின் வைப்புநிதியாக ரூ.4646 கோடி மட்டுமே இருந்தது. நாட்டுடமை ஆக்கப்பட்ட பின் இன்று வைப்பு நிதி ரூ.16,75,000/ கோடியாக வளர்ந்துள்ளது. இந்த வரலாற்றுப் பின்னணியை விளக்கும் இப்புத்தகம் வங்கிகள் இணைப்பு, வங்கிகளில் அந்நிய நேரடி முதலீடு என்கிற ஆபத்தான முயற்சிகளில் இறங்கியுள்ள மத்திய அரசு இம்முயற்சிகளில் வெற்றி பெற்றால் கடும் விளைவுகளை இந்தியா சந்திக்கவேண்டி வரும் என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறார் ஆசிரியர்.

Bharathi பெண்ணியம் பேசலாம் வாங்க
உ.வாசுகி
(32 பக்கம்.ரூ.5)

உரையாடல் பாணியில் பெண்ணியம் பற்றி பெண் சமத்துவம் பற்றிப் பேசுவோர் நம் சமூகத்தில் எதிர்கொள்ளும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் விதமாக இப்புத்தகம் வந்துள்ளது. கிண்டலும் கோபமும் கலந்த நடை புத்தகத்தின் வரிகளுக்கு உயிர் தருகின்றன. சும்மா வாசிச்சுட்டுப் போயிட முடியாது. பெண் என்கிற காரணத்துக்காக பாரபட்சம் இருக்கக்கூடாது என்பதுதான் பெண்ணியத்தின் சாரம். என்றாலும் அமேசான் பெண்ணியம், தனித்துப் பார்க்கும் பெண்ணியம், சுற்றுச்சூழல் பெண்ணியம், தாராளவாதப் பெண்ணியம், பொருள்முதல் வாதப் பெண்ணியம் எனப் பலவாக அறியப்பட்டுள்ள பெண்ணியச் சிந்தனைகளை அறிமுகம் செய்யும் இந்நூல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஜனநாயகம், சமத்துவம், பெண்விடுதலை என்கிற முழக்கங்களாகப் பெண்ணியத்தை முன்வைப்பது ஏன் என விளக்குகிறது. ஆண், பெண் இருபாலரிடத்தும் அவசியம் பரவலாக எடுத்துச் செல்லப்பட வேண்டிய எளிய புத்தகம்

Bharathi இன்சூரன்ஸ் துறை எதற்கு?
க.சுவாமிநாதன்
(32 பக்கம் ரூ.5)

பொதுத்துறை நிறுவனங்களை அந்நியருக்கும் தனியாருக்கும் குறைந்த விலையில் விற்றுத்தள்ள முயலும் மத்திய அரசு எத்தனை போராட்டங்களை பாட்டாளி வர்க்கம் நடத்தியபோதும் சற்றும் மனந்திருந்தாமல் மீண்டும் மீண்டும் தன் முயற்சியைத் தொடர்ந்து பல பொதுத்துறை நிறுவனங்களைக் காவு கொடுத்து வருகிறது. ஆனால் 1980களிலிருந்து இன்சூரன்ஸ் துறையை அழிக்கப் போராடிவரும் மத்திய அரசும் பன்னாட்டு நிறுவனங்களும் பாச்சா பலிக்காமல் தொடர்ந்து தோற்று வருகிறார்கள்.

காரிருள் சூழ்ந்த கரிய வானத்தில் தாரகை போல் ஜொலித்து நிற்கும் இந்தியாவின் இன்சூரன்ஸ் துறை உலகமயமாக்கல் நாட்களில் போராடும் மக்களுக்கு நம்பிக்கை தரும் யதார்த்தமாக தாக்குப் பிடித்து நிற்க முடிவது எப்படி? இந்தக் கேள்விக்கு விடை காணும் பயணத்தில் நம்மை அழைத்துச்செல்லும் இப்புத்தகம் வரலாற்றின் பக்கங்களினூடாக நடந்து செல்கிறது. ராஜாராம் மோகன் ராயும் லாலா லஜபதிராயும் ஈஸ்வர்சந்திர வித்யாசாகரும் கை வைத்துத் துவக்கிய இன்சூரன்ஸ் துறை என்பதால்தான் இன்றைய டோட்டல் பிராடு அரசியல்வாதிகளால் அமைச்சர்களால் ஆளும்+எதிர் கட்சிகளால் இத்துறையை அழித்து விட முடியவில்லை என்று மனம் வரலாற்று அதிர்வு கொள்கிறது. இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தன் ஊழியர்களை மிகச் சரியாக அணிதிரட்டிக் கல்வி புகட்டி சற்றும் மனந்தளராத போராட்டத்தில் இறக்கிவிட்டிருக்கும் வரலாறும் இப்புத்தகத்தில் பதிவாகியுள்ளது. சங்கப்பணிகளும் மக்கள் இயக்கமும் இணையும் போதுதான் நாட்டில் நல்லது நடக்கும் என்பதற்கு உதாரணமாகத் திகழும் இன்சூரன்ஸ் ஊழியர் இயக்கத்தின் பணிகளும் வரலாற்று ரீதியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. தேசப் பொருளாதார நிர்மாணத்துக்குக் கோடி கோடியாகக் கொட்டித் தரும் கற்பதருவான இன்சூரன்ஸ் துறையை காக்க நம்மாலான ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்கிற மன உந்துதலை வாசகர் மனங்களில் ஏற்படுத்தும் விதமாக இப்புத்தகம் வந்துள்ளது.

Bharathi மார்க்சியப் பார்வையில் அம்பேத்கர்
பி.பி.சான்ஸ்கிரி
(40 பக்கம். ரூ.5.)

அண்ணல் அம்பேத்கர் பற்றி பலரும் பல காலங்களில் பலவிதமான மதிப்பீடுகளை முன் வைத்தனர். முன் வைத்து வருகின்றனர். அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி எழுதப்பட்ட இக்கட்டுரை அம்பேத்கருக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையே நிலவிய முரணும் நட்பும் பற்றி ஆய்கிறது. அம்பேத்கரின் காலத்திலும் அவரது வருகைக்கு முன்னும் இந்திய சமூகத்தில் பிறந்து வளர்ந்த அத்தனை சமூக சீர்திருத்த இயக்கங்களும் பாரம்பரியமிக்க இந்திய நாகரீகம் மற்றும் கலாச்சாரம் ஆகிய உயிரோடிருக்கும் மரத்தின் மீது நவீன முதலாளித்துவக் கலாச்சாரம் என்னும் ஒட்டுக்கிளையை ஒட்டுப்பயிர் செய்ய முயன்றவையே ஆகும். இதே வழியில்தான் காங்கிரசும் பாரம்பரியம் என்ற பெயரில் உயர்சாதி மனோபாவத்தை விட்டொழிக்க முடியாமலிருந்தது. ஆகவே அம்பேத்கர் காங்கிரசோடு முரண்பட்டு நின்றதில் நியாயமுண்டு.
ஆனால் கம்யூனிஸ்ட்டுகளுடன் அவர் ஏன் சேர்ந்து நிற்கவில்லை? தொழிலாளி வர்க்க ஒற்றுமை என்பது சாதிய அமைப்பு உருவாக்கியிருந்த தடைகளை வலிமையிழக்கச் செய்வதை அவர் ஏன் பார்க்கத் தவறினார்? இக்கேள்விகள் கம்யூனிஸ்ட்டுகள் சாதியம் பற்றி அன்று கொண்டிருந்த கோட்பாட்டு ரீதியான நிலைபாட்டை பரிசீலிக்கத் தூண்டுகின்றன. தலித் மக்களின் விடுதலைக்காக பிரத்யேகமான முயற்சிகள் தேவையில்லை. வர்க்கப் போராட்டத்தின் வீச்சில் சாதியம் அழியும் என்கிற செக்டேரியன் பார்வை அன்று கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு இருந்ததையும் தொழிலாளி வர்க்க ஒற்றுமை என்பது தலித் ஒற்றுமை என்பதை சீர்குலைக்கும் முயற்சியாக அம்பேத்கர் காண நேர்ந்ததையும் இப்புத்தகம் விளக்குகிறது. மக்கள் ஜனநாயகப் புரட்சியின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாக சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும் என இந்நூல் வலியுறுத்துகிறது.

Bharathi உழைப்பு, உழைப்பாளர், உலகமயம்
என்.குணசேகரன்
(32 பக்கம்.ரூ.5)

இன்று உலகமயமாக்கலுக்கு எதிரான தொழிற்சங்கப் போராட்டங்கள் நாடு முழுவதும் இடைவிடாது நடைபெற்று வந்த போதிலும் பொதுவாக தொழிற்சங்க இயக்கத்தில் ஒரு தளர்வு ஏற்பட்டது போல தோற்றம் உருவாகியுள்ளது. இது ஏன்? இது உண்மையா? என்கிற கேள்விகளோடு விசாரணையைத் துவக்குகிறது புத்தகம். உலகமயமாக்கல் கொள்கை இந்தியாவை ஆட்டிப்படைக்கத் துவங்கிய பிறகு முறைசார்ந்த தொழில்களில் வேலை வாய்ப்பு திட்டமிட்டு குறைக்கப்பட்டு வந்துள்ளது. இன்னொரு புறம் வேலைகளை உப காண்ட்ராக்ட்களுக்கு விடுவது, அவுட்சோர்சிங் போன்ற நடைமுறைகள் காரணமாகவும் முறைசாராத் தொழிலாளர் எண்ணிக்கை பெருகி வருகிறது. உலகமயத்தின் இன்னொரு விளைவாக விவசாயம் அழிந்து கிராமப்புறத்திலிருந்து வேலை தேடி நகர்ப்புறம் வரும் மக்களும் முறை சாராத் தொழிலாளர் படையில் சேருகின்றனர்.

ஆகவே வலுவான தொழிலாளர் இயக்கத்தின் பலம் குறைகிறது. இதன் பொருள் இனி தொழிற்சங்க இயக்கம் முன்போல எழுச்சி கொள்ள முடியாது என்பதல்ல. முறைசாராத் தொழிலாளர்களைப் பெருமளவுக்கு அணிதிரட்ட வேண்டிய மிகப்பெரும் சவாலும் கடமையும் தொழிற்சங்க இயக்கத்தின் முன் உள்ளது. தேசிய எல்லைகளைத் தாண்டி கரம் நீட்டும் நிதி மூலதனத்தின் வருகைக்குப் பின் முதலாளித்துவ அதிகாரத்தின் மையம் எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதே சிரமமாகியுள்ளது. இதை எவ்விதம் எதிர்கொள்வது என்பது குறித்தும் இப்புத்தகம் ஆழமாகப் பேசுகிறது.

Bharathi மிரட்டும் குளிர்பானங்கள்
அசுரன்
(பக்கம் 16 ரூ.5)

பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீரிலும் (பிஸ்லரி, அக்வாஃபினா, கின்லே) பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பானங்களிலும் பூச்சிக்கொல்லிகள் இருப்பதை டெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மையம் கண்டுபிடித்து வெளியிட்டு பெரும் பரபரப்பை எற்படுத்தியது. அம்மையத்தின் அறிக்கையிலிருந்து தொகுக்கப்பட்ட தகவல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளன. பூச்சிக்கொல்லிகள் மிரண்டா லெமனில் 70 மடங்கும் கோகோகோலாவில் 45 மடங்கும் ஃபாண்டாவில் 43 மடங்கும் பெப்சியில் 37 மடங்கும் தம்ஸ் அப்பில் 22 மடங்கும்... என்று பட்டியல் நீளும் போது நமக்கு அடிவயிறு கலங்குகிறது. அதைவிடவும் பூச்சிக் கொல்லியே இல்லாவிட்டாலும் இந்தத் தண்ணீர் பாட்டிலும் குளிர் பானங்களும் ஆபத்தானவை என்று விளக்கப்படும் வரிகள் மேலும் அதிர்ச்சியைத் தருகின்றன. அரசாங்கத்தின் கையாலாகாத்தனமும் சரியாகத் தோலுறித்துக் காட்டப்பட்டுள்ளது.

Bharathi கல்வித்துறை அவலங்கள்
சாவித்திரி கண்ணன்
(32 பக்கம் ரூ.5)

தமிழகத்தின் கல்வித்துறை குறித்து ஆரம்பக் கல்வி, உயர்கல்வி குறித்தெல்லாம் நம் உள்ளங்களில் அலைமோதும் கேள்விகளே இப்புத்தகத்தில் வரிசையாகத் தொகுக்கப்பட்டு அவற்றுக்கான விடைகள் தேடும் முயற்சியில் கல்வித்துறையின் அவலங்கள் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பள்ளி செல்லும் பருவத்தில் உள்ள 22 கோடி குழந்தைகளில் 12 கோடி குழந்தைகள் மட்டுமே பள்ளி செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளன என்கிற அதிர்ச்சித் தகவலோடு துவங்கும் புத்தகம் தன்னுடைய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 30 சதவீதம் செலவழிக்கும் மத்திய அரசு கல்விக்காக 3.4 சதவீதம்தான் ஒதுக்குகிறது. இதை 10 சதவீதமாக உயர்த்தவேண்டும் என்கிற கோரிக்கை கேட்பாரற்றுக் கிடக்கிறது. தமிழகத்தில் 70000 ஆசிரியப் பணி இடங்கள் நிரப்பப்படவில்லை. அரசுப்பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. 1950-60கள் வரையிலும் பெரும் செல்வந்தர் வீட்டுப்பிள்ளைகள் கூட அரசுப் பள்ளிகளில்தான் படித்து வந்தனர். ஆனால் 60களுக்குப் பிறகு திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு ஆங்கிலவழிக் கல்விக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பெரும் ஊக்கமளித்து வளர்த்த வரலாறு நமக்கு மேலும் அதிர்ச்சி தருகிறது. பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பெருகிவரும் ‘நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்’ என கல்வித்துறை சார்ந்த சகல விஷயங்கள் பற்றிய அலசலாக இப்புத்தகம் வந்துள்ளது.

Bharathi மேதினம்
செல்வபெருமாள்
(30 பக்கம் ரூ.5)

“நேரம் வரும் அப்பொழுது, எங்களது மௌனம் மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். இன்று நீங்கள் எங்கள் குரலை நெறிப்பதை விட..’’ தூக்கு மேடையில் நின்று சிகாகோ தியாகி ஆகஸ்ட் ஸ்பைஸ் முழக்கிய இவ்வார்த்தைகளோடு புத்தகம் துவங்குகிறது. 1880களில் அமெரிக்காவில் தொழிலாளிகளின் சராசரி ஆயுட்காலம் வெறும் 30 வருடம் மட்டுமே என்கிற செய்தி 1886இல் மேதினம் அமெரிக்காவில் வெடித்ததன் பின்னணியாக உள்ளது. சாசன இயக்கத்திலிருந்து மேதினத்தை நோக்கி நகர்ந்த தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாறு சுருக்கமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 1862இல் இந்திய ரயில்வேத் தொழிலாளிகள் 8 மணி நேர வேலை கேட்டு வேலைநிறுத்தம் செய்தது முதல் வ.உ.சி நடத்திய தொழிற்சங்க இயக்கம் வரையிலான வரலாற்றின் இந்தியப் பக்கம் விரிகிறது. வேலை நிறுத்த உரிமை, சங்கம் வைக்கும் உரிமை அச்சுறுத்தலுக்கு ஆளாகி வரும் இந்த நாட்களில் மேதினத்தின் சாரத்தை உழைப்பாளி மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளது. அதற்கு உதவும் வகையில் இப்புத்தகம் வந்துள்ளது.

Bharathi அதிரடித்தயாரிப்பு - ஏகாதிபத்திய ஜனநாயகம்
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்
அருந்ததிராய்
(32 பக்கம் ரூ.5)

ஐ.நா வைப் பயன்படுத்தி பொருளாதாரத் தடைகள் மற்றும் ஆயுதச் சோதனை மூலம் ஈராக்கை மண்டியிடச் செய்வதற்கு அதன் மக்களைப் பட்டினி போட்டு அரை மில்லியன் குழந்தைகளைங் சாகடித்துவிட்டு அந்நாட்டின் கட்டுமானங்களைச் சிதைத்து விட்டு அந்நாட்டின் பெரும்பகுதி ஆயுதங்கள் அழிக்கப்பட்டதை உறுதி செய்து கொண்டு அதன் பின்னர் ஆக்கிரமிப்பு ராணுவத்தை அந்நாட்டுக்குள் அனுப்பி அமெரிக்கா கோழைத்தனமான போரை நடத்தியது. அப்போரை முன் வைத்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஜனநாயக கபடத்தைத் தோலுரித்து நியூயார்க் ஹார்லேமில் உள்ள ஆற்றோர சர்ச்சில் எழுத்தாளர் அருந்ததி ராய் ஆற்றிய முழு உரையின் தமிழாக்கமே இந்நூல். வரலாறு நெடுகிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஜனநாயகத்தின் பெயரால் நடத்தி வரும் படுகொலைகளைப் பட்டியலிடும் அருந்ததிராய் யுத்தத்தில் ஈடுபடுவதும் அதற்கான செலவுக்கான பணத்தைத் தருவதும் சாதாரண ஏழை அமெரிக்கர்களே என்பதை சுட்டிக்காட்டுகிறார். ஈராக்கின் பாலைவன வெப்பத்தில் வெந்து கொண்டிருக்கும் படைவீரர்கள் பணக்கார வீட்டுக் குழந்தைகளல்ல. ஆனால் இப்போரை ஏகாதிபத்தியம் இவ்வமெரிக்க மக்களின் பேராலேயே நடத்துகிறது. ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அமெரிக்க மக்கள் போராடிவருவதை பாராட்டும் அருந்ததிராய் உரையின் இறுதியில் அமெரிக்க மக்களை நோக்கியே பேசுகிறார். “உங்கள் ஜனாதிபதியின் கருத்தை நான் வெறுப்புடன் மறுக்கிறேன். உங்கள் நாடு எந்த வகையிலும் மகத்தானதல்ல. ஆனால் நீங்கள் மகத்தான மக்களாக முடியும். வரலாறு உங்களுக்கு அந்த வாய்ப்பைத் தருகிறது. காலத்தே துணிந்து செயல்படுங்கள்”

Bharathi உலகமயமாக்கலும் தமிழக விவசாயிகள் மீதான தாக்குதலும்
கே.வரதராஜன்
(32 பக்கம் ரூ.6)

உலகமயமாக்கல் கொள்கைகளை மத்திய மாநில அரசுகள் போட்டி போட்டு அமுல்படுத்தியதன் விளைவாக தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மண்ணில் 21 விவசாயிகள் பட்டினியால் செத்து மடிந்தார்கள். ஆந்திராவில் தற்கொலைச் சாவுகள்.

பிரதானமாக உலகமயமாக்கல் விவசாயத்துறையில் என்ன செய்கிறது? இடுபொருள் விலையிலோ விளைபொருள் விலையிலோ அரசு தலையிடாது. நீர்ப்பாசனம் உள்ளிட்ட முக்கிய விவசாயத் துறைகளில் அரசின் மூலதனம் படிப்படியாகக் குறைக்கப்படும். மின்சாரம், விதைகள் உரம், பூச்சிமருந்து ஆகிய எல்லாவற்றுக்கும் மானியம் ஒழிக்கப்படும் அல்லது பெருமளவு வெட்டப்படும். வெளிநாட்டுப் பொருட்களின் இறக்குமதிக்கு கதவுகள் அகலத் திறந்து விடப்படும். இக்கொள்கைகள் காரணமாக விவசாய விளை பொருட்களின் விலைகள் வீழ்ச்சி அடைந்தன. கரும்பு, தேயிலை, காட்டன் விவசாயிகள் வாழ்க்கை அதளபாதாளத்தில் விழுந்துள்ளது. நாட்டின் உணவு தானிய உற்பத்தி வீழ்ச்சியடைந்ததன் காரணமாக ரேஷன் அரிசிக்கும் ஆபத்து வந்தது. இத்தனைக்கும் மேலாக தண்ணீர் வியாபாரத்துக்கு இந்திய நாட்டைத் திறந்து விட்டதன் காரணமாக விவசாயத்துக்குத் தேவையான தண்னீர் விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிலைகளில் உடனடியாக மாற்றம் கொண்டுவந்தாக வேண்டும். அதற்கான விவசாயிகள் விவசாயத் தொழிலாளிகளின் போராட்டங்கள் எழுந்து வரவேண்டிய அவசியத்தை இந்நூல் அழுத்தமாக வலியுறுத்துகிறது.

Bharathi வேலை நிறுத்த உரிமை மறுப்பு நீதியா?
உ.ரா.வரதராசன்
(32 பக்கம் ரூ.5)

13 லட்சம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நடத்திய வீரஞ்செறிந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒட்டி சி.ஐ.டி.யு.வின் சார்பாக தோழர். டி.கே.ரெங்கராஜன் உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் எந்தத் துறையில் வேலை நிறுத்தமானாலும் சரி, அந்த ஆயுதம் நீதி இழைப்பதை விடவும், அதிகமான தீங்கையே இழைக்கிறது. அதனால் பாதிக்கப்படுவது சமுதாயமும் பொதுமக்களுமே என்றும் “இன்றைய நிலையில் காரணம் நியாயமானதாக இருந்தாலும் சரி நியாயமற்றதாக ஆனாலும் சரி வேலை நிறுத்தத்தை நியாயப்படுத்த முடியாது” என்று கூறினர். இவ்வாசகங்கள் நாடு முழுதும் உழைப்பாளி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இத்தீர்ப்பு வாசகங்கள் பற்றிய முழுமையான அலசலாக இந்நூல் வந்துள்ளது. தங்கள் குறைகளைக் களைவதற்கான வழிமுறையாக உழைக்கும் மக்களின் படைகளிலுள்ள முக்கியமான ஆயுதமே வேலை நிறுத்த உரிமைதான் என்பதை உலகில் பல ஜனநாயக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த வேலை நிறுத்த உரிமையும்கூட காலங்காலமாக பாட்டாளி வர்க்கம் நடத்திய போராட்டங்களின் மூலமாக வென்றெடுக்கப்பட்ட ஒன்றுதான். எந்த அரசின் பெருந்தன்மையாலோ நீதிபதிகளின் தீர்ப்பினாலோ கிடைத்ததல்ல. உலகமயம் தாராளமயத்தின் பின்னணியில் வேலை நிறுத்தங்களுக்கு எதிராக நீதிமன்றங்களின் அணுகுமுறை மாறியுள்ளதை இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது. இத்தீர்ப்பின் பின்னாலுள்ள வர்க்க அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது

Bharathi மனசே டென்சன் ப்ளீஸ்
நளினி
(16 பக்கம் ரூ.5)

பொதுவாக மத்திய தர வர்க்கத்து அன்றாட வாழ்வில் எங்கும் டென்சன் டென்சன் என்பதே பேச்சாக இருக்கும். டென்சன்களுக்கான காரணங்களையும் அதைக் குறைப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பேசுகிறது இப்புத்தகம். டென்சன்களை தர வாரியாக வகைப்படுத்தும் புத்தகம் தனிநபரே சரி செய்து விடக்கூடிய மன அழுத்தங்களை யோகா போன்ற பயிற்சிகள் மூலம் குறைக்க முடியும் என விளக்குகிறது. பொருளாதாரம், வேலையின்மை போன்ற சமூகப் பிரச்னைகளால் வரும் மன அழுத்தத்தை அப்பிரச்னைகளை முழுமையாகப் புரிந்து கொள்வதன் மூலமும் சமூக இயக்கங்களில் பங்கேற்பதன் மூலமும் குறைத்துவிட முடியும் என அறிவியல் பூர்வமான தீர்வுகளை முன்வைக்கிறது. நாம் கைக்கொள்ளத்தக்க பலவிதமான மனப் பயிற்சிகளையும் அறிமுகப்படுத்துகிறது. எளிய தமிழில் நம் அன்றாட வாழ்வின் உதாரணங்களோடு பல இடங்களில் பேச்சு வழக்கில் கருத்துக்களை எடுத்துச் சொல்லி விளங்க வைக்கும் புத்தகமாக வந்துள்ளது.

Bharathi அரசியல் எனக்குப் பிடிக்கும்
ச.தமிழ்ச்செல்வன்
(48 பக்கம். ரூ.10)

அரசியல் என்றால் என்ன? அதை ஏன் பலரும் சாக்கடை என்று சொல்கிறார்கள்? அரசியலின் வரலாறு என்ன? அரசு என்பதன் பொருள் என்ன? இப்படியான எளிய கேள்விகளோடு துவங்கும் புத்தகம் அரசு என்னும் அடக்குமுறைக் கருவி மனித குல வரலாற்றில் தோன்றிய கதையிலிருந்து இடதுசாரி என்றால் என்ன? வலது சாரி என்றால் என்ன போன்ற கேள்விகளுக்கு விவாத பாணியில் விளக்கம் சொல்கிறது. விதவிதமான ஆட்சி முறைகள் பற்றிப் பேசி ஜனநாயகம் என்பதன் பின்னணியில் உள்ள முதலாளித்துவ அரசியலை சமகால கட்சி அரசியலோடு இணைத்து விளக்குகிறது. அரசியல் பற்றி சமீபத்தில் வந்துள்ள இந்த எளிய புத்தகத்தில் கலாச்சார அரசியல் பற்றியும் முதலாளித்துவத்தை ஆவேசமாக எதிர்க்கும் பாட்டாளி வர்க்கம் கருத்து ரீதியாக அதே முதலாளித்துவத்தின் கலாச்சார நிறுவனங்களிடமே மாட்டிக்கொண்டிருக்கும் யதார்த்தம் பற்றியும் அதற்கெதிராக பாட்டாளி வர்க்கம் நடத்த வேண்டிய கலாச்சார அரசியல் பற்றியும் பேசுகிறது.

Bharathi கிராம்ஷியின் சிந்தனைப்புரட்சி
இ.எம்.எஸ் & பி.கோவிந்தப்பிள்ளை
தமிழாக்கம் : வி.கே.பாலகிருஷ்ணன்
(104 பக்கம். ரூ.40)

இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக வாழ்ந்து பாசிச முசோலினிக்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராடிய காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு இந்த மூளை செயல்படக்கூடாது என்கிற நீதிமன்றத் தீர்ப்போடு சிறையில் அடைக்கப்பட்ட தோழர் அந்தோனியோ கிராம்சியின் வாழ்க்கையை அவருடைய சிந்தனைகளை சுருக்கமாக எடுத்துரைக்கும் புத்தகம். சொல்லத் தரமற்ற சிறைக்கொடுமைகளை அனுபவித்தபடியே பாசிசம் பற்றியும் கலாச்சாரம் பற்றியும் மர்க்சிசம் பற்றியும் அவர் எழுதிய சிறைக்குறிப்புகள் அவரது மரணத்துக்குப் பிறகு கடத்தப்பட்டு சோவியத் நாட்டில் முதன் முதலாக அச்சிடப்பட்டது. 2848 பக்கங்கள் கொண்ட அச்சிறைக்குறிப்பு மர்க்சிசம் லெனினிசத்தை மேலும் வளர்த்துச் செழுமைப்படுத்தும் உயிர்ப்புள்ள வழிகாட்டும் ஆவணங்களாக இன்று உலகெங்கும் பாட்டாளி மக்களால் கொண்டாடப்படுகின்றன. சமூகத்தை சிவில் சமூகம் அரசியல் சமூகம் எனக் கட்டுடைத்த கிராம்சியின் முக்கிய சிந்தனைகளான கலாச்சார மேலாண்மை (Cultural hegemony), உயர் அறிவாளிகள் பாரம்பரிய அறிவாளிகள் ,கற்பித்தலின் தத்துவம் போன்றவை இந்நூலில் விளக்கபட்டுள்ளன. பாசிச சக்திகளைப் புரிந்து கொண்டு போராட வேண்டிய நிலையில் உள்ள களப்பணியாளர்கள் கிராம்சியை உள்வாங்காமல் ஒரு அடி கூட முன்னேற முடியாது.


<-- முந்தைய பக்கம்


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com