புத்தக விமர்சனம்
பாரதி புத்தகலாயத்தின் 100 புத்தகங்கள் -
ஒரு பருந்துப் பார்வை
ச.தமிழ்ச்செல்வன்
எங்கிருந்து தொடங்குவது? யார் தொடங்குவது? என்று நெடுங்காலம் புகைந்து கொண்டிருந்த தயக்கங்களை எல்லாம் உடைத்து வெள்ளம் போலப் பாய்ந்து வந்துள்ள பாரதியின் 100 புத்தகங்கள் தமிழகக் கலாச்சார வரலாற்றில் ஒரு புதிய திறப்பு. நூலக இயக்கத்தில் வாசிப்பு இயக்கத்தில் ஒரு புத்தம் புதிய பக்கம். இவ்வளவு அதீதமான வார்த்தைகளுடன் இவ்வரிகளைத் துவக்குவதற்கான காரணம் இப்புத்தகங்கள் யாருக்காக எழுதப்பட்டுள்ளன? யாரால் எழுதப்பட்டுள்ளன? எப்படி யாரால் எடுத்துச் செல்லப்படுகின்றன? என்கிற கேள்விகளுக்கான பதில்களில் அடங்கியுள்ளது.
தமிழகத்தின் ஏழை எளிய உழைப்பாளி மக்களுக்காக துடிப்பு மிக்க இளைஞர்களுக்காக சமூக அக்கறை மிக்க மாணவர்களுக்காக புகை மூட்டத்திலிருந்து வெளியேறிச் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தவிக்கும் பெண்களுக்காக இப்புத்தகங்கள் படைக்கப்பட்டுள்ளன. காட்சி இன்பம் தந்து மனங்களை வசீகரிக்கும் வண்ணமயமான அட்டைப்படங்களுடன் ஐந்து ரூபாய் விலையில் (பக்கம் அதிகமான ஒரு சில புத்தகங்கள் மட்டும் பத்து ரூபாய்) இது எல்லாமே நமக்கே நமக்கா என்கிற பிரமிப்பை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டுள்ளன.
பாரதி புத்தகாலயத்தின் மாவட்டக் கிளைகள் மூலமாக ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள ஜனநாயக இயக்க வீரர்கள், தொழிற்சங்கத் தொண்டர்கள், தொண்டுள்ளம் கொண்ட வாலிப சேனை, மாணவர்கள், பிரமுகர்கள், தலைவர்கள், எழுத்தாளர்கள், இடதுசாரிகள் என உள்ளூர் சமூகத்தின் உயிர்த்துடிப்பு மிக்க மக்கள் பகுதியினர் இப்புத்தகங்களை வீதி வீதியாக தங்கள் தோள்களில் சுமந்து செல்கிறார்கள். காணக்கிடைக்காத காட்சி. பல ஊர்களில் பெரியவர்கள் பேசிக்கொள்வது நம் செவிகளில் விழுகிறது. ‘‘ரொம்ப காலம் கழிச்சு நம்ம தோழர்கள் எல்லோர் கையிலேயும் புத்தகங்களை இப்பதான் பாக்கறோம் இல்லீங்க..” உலக புத்தக தினம் கடந்து போய்விட்டது. கண்காட்சிக்கென அறிவிக்கப்பட்ட தேதிகளெல்லாம் முடிந்து போய்விட்டன. ஆனால் துவக்கப்பட்ட புத்தகப் பயணம் பட்டி தொட்டிகளுக்கெல்லாம் இன்னும் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கிறது. அதை இனி யாரும் நிறுத்த முடியாது.
இப்புத்தகங்களை எழுதியவர்களில் சிலர் ஏற்கனவே அறிமுகமான எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் தலைவர்கள். ஆனால் கணிசமான புத்தகங்களை புதிய கைகள் எழுதியிருக்கின்றன. பாரதி புத்தகாலயத்தின் (காலத்தின்) அறைகூவலை ஏற்று உழைப்பாளி மக்களுக்காக நீங்கள் எழுதாவிட்டால் பிறகு யார்தான் எழுத முடியும் என்கிற அன்புக் கட்டளையை மனதார ஏற்று குறுகிய காலத்துக்குள் வாசகர்களின் மீது கொண்ட தீராத அன்பிலும் அக்கறையிலும் பேனாவைத் தொட்டு எழுதி முடித்த புத்தகங்கள் இவை. நடைபெற்று வரும் கலாச்சாரப் போரின் புதிய படை வீரர்களான இப்புதிய படைப்பாளிகளின் கரங்களை இறுகப்பற்றி முத்தமிட்டு வரவேற்கிறோம். இன்னும் நூறு நூறு படைப்பாளிகள் பேனாவை எடுத்தாக வேண்டும். நூறு நூறு புத்தகங்கள் வந்தாக வேண்டும். ஆயிரமாயிரம் தோள்கள் அவற்றை நம் மக்களிடம் எடுத்துச் சென்றாக வேண்டும். அதற்கான உந்துதலை பாரதி 100 நிச்சயமாகத் தருகிறது.
இனி இப்புத்தகங்கள் என்ன சொல்கின்றன என்பது பற்றி....
ஏமாளியும் திருடனும்
(நாட்டுப்புறக் கதைகள்)
கதைத் தேர்வும் விவாதக் குறிப்பும்: பேராசிரியர் ச.மாடசாமி
(32 பக்கம் ரூ 5.)
எட்டுக் கதைகளின் தொகுப்பு இது. தமிழ்நாட்டில் அறிவொளிக் காலத்தில் தொகுக்கப்பட்ட கதைகளும் சில வெளிநாட்டுக் கதைகளும் விவாதக் குறிப்புகளுடன் தரப்பட்டுள்ளன. எவரும் வாசித்து விடக்கூடிய எளிய நடையில் கதைகள் சொல்லப்பட்டு எவரிடம் சென்று இக்கதைகள் வாசிக்கப்பட வேண்டும் என்கிற சுவாரஸ்யமான சிபாரிசுகளுடன் வந்துள்ள புத்தகம். உதாரணத்துக்கு ஒரு கதை. மறைந்த அறிஞர் ஏ.கே.ராமானுஜம் அடிக்கடி எடுத்துக்காட்டிப் பேசும் கதை. ஒரு ஊரில் ஒரு விதவைத் தாய். அவளுக்கு இரண்டு மகன்கள். இருவருக்கும் கல்யாணம் ஆனதும் கிழவ¤க்கு மரியாதை குறைகிறது. மகன்களும் மதிப்பதில்லை. ஆகவே மருமகள்களும் மதிப்பதில்லை. நாலு பேரும் திட்டத் திட்ட தாயின் மனப்பாரம் பெருகி உடலும் பருத்து விடுகிறது. முடிவில் அவள் ஊரின் கடைசியில் நிற்கும் சத்திரத்தின் குட்டிசுவருடன் பேசத் துவங்குகிறாள். மூத்த மகன் ப்ச்சின் கொடுமையைச் சொல்லி அழவும் ஒரு சுவர் இடிந்து விழுகிறது. அவளுடைய பாரம் கொஞ்சம் குறைகிறது. இப்படியே நாலுபேர் கொடுமையும் சொல்லி முடிக்க நாலு குட்டிச்சுவர்களும் இடிந்து வீழ அவள் உடலும் மெலிந்து போகிறாள். இப்போது அவளைப் பார்க்கும் மக்கள் இரக்கப்படுகிறார்கள். இது கதை. இக்கதையை பேச்சுப் புறக்கணிக்கப்பட்ட குடும்பங்களிலும், வகுப்பறைகளிலும், அலுவலகங்களிலும் வாசிக்க வேண்டுமென தொகுப்பாளர் குறிப்பு முடிகிறது.
ஹோமியோபதி மருத்துவம்
ஓர் அறிமுகம்
டாக்டர் எஸ்.வெங்கடாசலம்
(40 பக்கம், ரூ.10)
அலோபதியின் பக்க விளைவுகளையும் பின் விளைவுகளையும் கண்டு விரக்தியடைந்த ஜெர்மானிய டாக்டர் சாமுவேல் ஹானிமன் M.D அவர்களின் கண்டுபிடிப்பான ஹோமியோபதி மருத்துவம் மற்றும் வீட்டிலேயே வைத்து அவசரத்துக்குப் பயன்படுத்தத் தக்க ஹோமியோ மருந்துகளின் பட்டியலும் அவை பற்றிய குறிப்புகளுமென ஒரு சரியான அறிமுகத்தை நமக்குத் தரும் புத்தகம் இது. பிற வைத்திய முறைகளில் மருந்து உட்கொண்டு இரைப்பைக்குச் சென்ற பிறகுதான் வேலை செய்ய ஆரம்பிக்கிறது. ஆனால் ஹோமியோபதியில் மருந்தின் மூலப்பொருள் நாவின் மிக நுட்பமான நரம்புத் தொகுதிகளின் வழியாக ஊடுறுவிச் சென்று துரிதமாகச் செயல்படத் துவங்குகிறது. ஹோமியோபதியிலே போனா ரொம்ப லேட்டாகுமே என்கிற மூடநம்பிக்கையை உடைத்துத் தகர்க்கும் பல அவசியமான தகவல்களை இப்புத்தகம் நமக்குத் தருகிறது. ஹோமியோபதியில் நோய்க்கு மருந்து தருவதில்லை. மாறாக நோயாளிக்கு அதாவது நோயாளியின் உடல் நல சரித்திரம், அவரது மரபுக்கூறு, பழக்க வழக்கங்கள், அவரது பசி, தூக்கம், கழிவு, விருப்பு வெறுப்பு, ஆசைகள், கோபப்படும் விதம், குடும்பச்சூழல் எனப் பலவற்றையும் முழுமையாகக் கணக்கில் கொண்டு நோயாளிக்கு மருந்து தரப்படுகிறது. வேறு மருத்துவத்துக்கே போகாதீர்கள் என்கிற அடிப்படைவாதம் இப்புத்தகத்தில் இல்லை. தேவைப்படும்போது சிறப்பு நிபுணர்களையும் பார்த்துக்கொண்டு அச்சிகிச்சையுடன் ஹோமியோ மருந்தையும் இணைத்துக் கொண்டால் விரைவில் நலம் பெறலாம் என்கிறது புத்தகம். தவிரவும் லண்டனைச் சேர்ந்த டாக்டர் எட்வர்டு பேட்ச் அவர்களின் மலர் மருத்துவம் பற்றியும் லேசான அறிமுகத்தை இந்நூல் செய்கிறது. மிக முக்கியமாக ஒரு மருத்துவரின் பார்வையிலிருந்து பேசாமல் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சாதாரண ஏழை மக்களின் மருத்துவத் தேவைகளைக் கணக்கில் கொண்டு இப்புத்தகம் பேசுகிறது
கடவுள் உண்டா இல்லையா?
ஏ.பாலசுப்பிரமணியன்
(16 பக்கம் ரூ.5)
மதத்தின் பெயரால் பயங்கர யுத்தங்கள் நடந்துள்ளன. படுகொலைகள் இன்றும் நடக்கின்றன. ஆனால், நாத்திகர்கள் ஆத்திகர்களைக் கொலை செய்ததாகவோ தங்கள் கருத்தைப் பிறர் ஏற்க வேண்டும் என்பதற்காக யுத்தம் நடத்தியதாகவோ வரலாறு இல்லை என்கிற வரிகளோடு துவங்கும் இப்புத்தகம் ஒரு ஆத்திகருக்கும் நாத்திகருக்கும் இடையில் நடக்கும் உரையாடலின் மூலம் கடவுள் இருக்கிறது என்கிற நம்பிக்கையின் ஆணி வேரை அசைக்கிறது. பித்தப்பை எனப்படும் Gall Bladder என்னென்ன செய்கிறது என்பதுகூட நமக்கு முழுசாகத் தெரியாது. உடற்கூறு விஞ்ஞானத்தின் அறியாமை காரணமாக நம் உடல் பற்றியே பல தவறான கருத்துக்கள், மூட நம்பிக்கைகளை நாம் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும்போது பிரபஞ்சம் முழுவதும் பற்றிய ஞானத்தில் நிச்சயமாகக் குறைபாடுகள் இருக்கும். ஆனால் எவ்விதச் சந்தேகமும் இல்லாமல் பிரபஞ்சத்தைக் கடவுள் படைத்தார் என்று கூறுவது எப்படி சரியாகும் என்கிற மாதிரி சின்னச் சின்னக் கேள்விகள், பின் அவற்றுக்கான விடைகள், பின் அதைத் தொடரும் அடுத்த கேள்வி என்கிற பாணியில் நகர்ந்து செல்லும் இப்புத்தகம் நாத்திகத்தை முரட்டடியாக அல்லாமல் அறிவியல் அடிப்படையில் ஆத்திகரும் ஒப்புக்கொள்ளும் வண்ணம் எடுத்துச் சொல்கிறது. இப்பிரபஞ்சத்தில் என்றென்றும் பொருள் இருந்தே வந்திருக்கிறது. படைப்பு என்பதே இல்லை. ஆகவே படைத்தவனும் இல்லை என்று கச்சிதமாக உரையாடல் நிறைவுபெற புத்தகம் முடிகிறது. வெறும் 16 பக்கங்களில் இவ்வளவு விஷயங்களை இவ்வளவு எளிமையாகச் சொல்லி இருப்பது நூலாசிரியரின் மேதமையன்றி வேறென்ன?
தமிழர் திருமணம்
அன்று முதல்.. இன்று வரை
பேராசிரியர் ச.மாடசாமி
(32 பக்கம் ரூ.5)
“ஒரே கூரையால் பாதுகாக்கப்பட்ட இதயங்களின் இணைப்பு” என்று ஐ.நா.சபை குடும்பத்துக்கு விளக்கம் தருகிறது. ஆனால் குடும்பம் அந்தக் கூரையோடு மட்டுமில்லை. மறித்து எழுப்பப்பட்ட சுவர்களோடும், எல்லைகளைக் குறுக்கும் வேலிகளோடும்தான் இருக்கிறது என்கிற வரிகளில் வேகம் பிடித்து நகர்கிற இப்புத்தகம் மிகவும் இயல்பான ஆனால் அடர்த்தியான அதே சமயம் கூர்மையான வரிகளில் குடும்பம் பற்றியும் தமிழர் வரலாற்றில் திருமணங்கள் அடைந்து வந்துள்ள மாற்றங்கள் பற்றியும் அம்மாற்றங்களுக்கான சமூகப் பின்புலங்கள் பற்றியும் பேசுகிறது. ஆழமான ஆய்வுதான் என்றாலும் அலுக்காமல் படிக்கவைக்கும் அனுபவ வார்த்தைகளால் புத்தகம் மிளிர்கிறது. தலை நரைச்ச கிழவனுக்குத் தாலி நான் கட்ட மாட்டேன் என்று பெண் அடம் பிடித்து விடாமலிருக்க கல்யாணத்தின் போது மணமகளைக் கண்ணைப் பொத்தி மேடைக்கு அழைத்து வரும் ஒரு சாதிப் பழக்கத்திலிருந்து பீட்சாவுக்கும் பர்கருக்கும் பழகிவிட்ட இந்திய இளைஞர்கள் கல்யாணம் என்று வந்துவிட்டால் மட்டும் தங்கள் நவீன மனதை மூட்டை கட்டி வைத்துவிட்டு ஜாதி, ஜாதகம் என்று பாய்ந்து விடும் வீழ்ச்சி வரையிலும் திருமணங்கள் எப்படிப் பெண்ணுக்குப் பாரபட்சமாக காலந்தோறும் இருந்து வருகின்றன என்பதை தகுந்த ஆதாரங்களோடும் வாசக மனதில் உறைக்கும் விதமாகவும் இப்புத்தகம் பேசுகின்றது. தமிழ் அடையாளங்கள் என்று எதுவும் தமிழர் திருமணங்களில் இல்லை. மனிதநேய அடையாளங்களாவது மிஞ்ச வேண்டுமே என்கிற நியாயமான கவலையோடு புத்தகம் முடிகிறது.
நாமும் நமது கலைகளும்
முகில்
(32 பக்கம் ரூ.5)
கேரளத்தின் கதகளியைப் போல, கன்னடத்தின் யக்க்ஷகானத்தைப் போல, ஆந்திராவின் வீதி நாடகத்தைப் போல, மகாராஷ்டிரத்தின் தமாஷாவைப் போல, உத்திரப்பிரதேசத்தின் நெடங்கியைப் போல, வங்காளத்தின் ஜாத்ராவைப் போல, அஸ்ஸாமின் ஆங்கிய நாட்டைப் போல, தமிழ்நாட்டின் மண்ணோடும் சேறோடும் புரண்டுகொண்டிருக்கும் கலை தெருக்கூத்தல்லவா என்கிற உணர்ச்சிகரமான வரிகளோடு துவங்குகிறது புத்தகம். 400 வயது கடந்துவிட்ட தெருக்கூத்து இன்றும் இளமையோடு மக்களின் மனங்கவர்ந்து நிற்பதற்கான உள்ளார்ந்த கூறுகளை ஆய்வு செய்யும் இந்நூல் தெருக்கூத்தில் கட்டியங்காரனின் பங்கு பற்றி விரிவாகப் பேசுகிறது. கூத்தின் கதையோடு அன்றாட நாட்டு நடப்புகளை இணைக்கும் பிரதான பணியைச் செய்யும் கட்டியங்காரன் பார்வையாளர்களின் பிரதிநிதியாகத்தான் மேடையில் நிற்கிறான். உலக நாடக இயக்கத்துக்கு தமிழகத்தின் கொடை என்றே கட்டியங்காரனைக் குறிப்பிட முடியும். இத்தோடு தமிழகத்து ஆட்டக்கலைகள் பற்றிய அறிமுகத்தையும் இப்புத்தகம் நமக்குத் தருகிறது. கரகாட்டம், காவடியாட்டம், கரடியாட்டம், புலியாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், ஒயிலாட்டம். கும்மியாட்டம், பேயாட்டம், பொய்க்கல் குதிரையாட்டம், மகுடாட்டம், தேவராட்டம், ஹெக்கலிக்கட்டை ஆட்டம், பாம்பாட்டம், தப்பாட்டம் என ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு சிறிய அறிமுகம் வாசகருக்குக் கிடைக்கிறது. இக்கலைகளைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பது தொடர்பாக சில முன் வைப்புகளோடு புத்தகம் நிறைவு பெறுகிறது.
பன்முகப் பண்பாட்டுச் சூழலில் சைவ, வைணவ சமயங்கள்
(இந்துத்துவத்துக்கு ஒரு மறுப்பு)
என்.குணசேகரன்
(16 பக்கம் ரூ.5)
ஏடறியாக் காலத்திலிருந்தே இந்தியா ஒரு இந்து தேசியச் சமூகமாகவே இருந்து வருகிறது என்கிற வரலாற்றுக்கும் அறிவியலுக்கும் விரோதமான பச்சைப் பொய்யை நாகூசாமல் பரப்பி வரும் சங் பரிவாரங்களை உள்ளிருந்தே தாக்கும் முயற்சியாக சமய வரலாறுகளின் ஊடாகப் பயணிக்கிறது இப்புத்தகம். தமிழகத்தில் சைவமும் வைணவமும் வளரக் காரணமாக இருந்த பக்தி இயக்கத்தின் தோற்றம், அதன் வரலாற்று சமூகப் பின்புலம் போன்றவற்றைச் சுருக்கமாக ஆய்வு செய்யும் இந்நூல் வேதமரபுச் சிந்தனைகள், பௌத்த மற்றும் சமண நீரோட்டங்களோடு மாற்றம் பெற்று பக்தி இயக்கமாகப் பரிணமித்த கதையை நமக்குக் கூறுகிறது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் நடத்திய சமயச் சொற்போர்கள், ஆதிசங்கரருக்கு மறுப்பாக அன்றே மத்வாச்சாரியார் மக்களிடம் பரப்பிய துவைதக் கருத்துக்கள், வடகலை தென்கலைப் போராட்டங்கள் என தொடர்ந்து மக்கள் தம் வாழ்க்கைப் போராட்டங்களின் ஊடாக கொண்டும் நிராகரித்தும் வந்த தத்துவங்கள் பற்றியெல்லாம் எளிய தமிழில் எவரும் உள்வாங்கும் விதமாகச் சொல்லிச் செல்கிறது இப்புத்தகம். சைவமும் வைணவமும் அன்று சங்கரரின் கொள்கைகளுக்கு எதிராகவே நின்றிருந்தபோதும் அடிப்படையில் எல்லாத்துக்கும் காரணம் கடவுள்தான் என்று சொல்வதில் இரண்டும் ஒத்துப்போயின. அதன் மூலம் சமூக வாழ்க்கையில் உள்ள முரண்பாடுகளை மறைத்து அன்றைய ஆளும் வர்க்கத்துக்கு அடிபணியும் மனநிலையை மக்களிடம் உருவாக்கும் வேலையில் அனைத்துத் தத்துவ நோக்குகளும் ஒற்றுமையாகச் செயல்பட்டதை வெட்ட வெளிச்சமாக்குகிறது இந்நூல். எல்லோரும் ஓர் நிறை. எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்கிற பாரதியின் பிரகடனமே நாம் அடையவேண்டிய இலக்கு என்பதைச் சுட்டி நிறைவடைகிறது புத்தகம்.
நாடகம் என்ன செய்யும்?
சி.அண்ணாமலை
(16 பக்கம் ரூ.5)
மனிதன் கூடிவாழத் தொடங்கிய நாள்முதலாக அவனோடு கூட வரும் கலைவடிவம் நாடகம். தமிழகத்தில் இந்நாடக வடிவத்தின் தோற்றம் பற்றிய விவாதங்களில் துவங்கி கூத்தின் மரபுகளை உள்வாங்கிய சங்கரதாஸ் சுவாமிகளின் இசை நாடக பாணி மற்றும் மேற்கத்திய வடமொழி மரபுகளை உள்வாங்கிய பம்மல் சம்பந்த முதலியாரின் சபா நாடக பாணி என இரு பெரும் போக்குகளாக நாடகம் தமிழில் நிலை பெற்றது பற்றிப் பேசுகிறது நூல். சபா நாடகப்போக்கு சென்னையின் மத்திய வர்க்கத்து மனிதர்களைக் குறிவைத்த கடி ஜோக்ஸ் கதம்பங்களாகத் தேய்ந்து போனதைக் குறிப்பிடும் ஆசிரியர் அப்பாணியிலேயே சாதனைகள் படைத்த கோமல் சுவாமிநாதன், எஸ்.வி.சகஸ்ரநாமம் போன்றோர் பற்றியும் மறவாமல் குறிப்பிடுகிறார். சுவாமிகள் துவக்கி வைத்த இசை நாடக வடிவம் இன்றளவும் தென் பகுதிகளில் ஸ்பெஷல் நாடகம் என்ற பெயருடன் புராண இதிகாசக் கதைகளையும் சில சமூகக் கதைகளையும் கொண்டு சினிமாவின் பாதிப்புகளோடு கிராமங்களில் நடத்தப்பட்டு வருவதைக் குறிப்பிடுகிறார். சுதந்திரப் போராட்ட காலத¢திலும் திராவிட இயக்கத்தின் ஆரம்ப நாட்களிலும் நாடகங்கள் ஆற்றிய பங்கு பற்றியும் இந்நூல் பேசுகிறது. இவ்விரு போக்குகளையும் தாண்டி 70களுக்குப் பின் தமிழகத்தில் அறிமுகமான நிஜ நாடகங்கள் அப்புறம் வீதி நாடகங்கள் போன்றவை எரியும் சமூகப் பிரச்னைகளைக் கையிலெடுத்து வளர்ந்த விதம் பற்றிப் பேசுகிறது. இன்று தொலைக்காட்சி, சினிமாக்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்ட சூழலிலும் கல்வியில் நாடகம் ஆற்றும் பங்கு, சுனாமி போன்ற பேரழிவுக்குள்ளான மக்களிடம் நாடகம் ஏற்படுத்தியுள்ள தாக்கம், அறிவொளி இயக்கத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்திய நாடகங்கள் எனத் தொடரும் பாரம்பரியம் பற்றிக் குறிப்பிடும் புத்தகம் இக்கலை வளர நாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றிய முன்வைப்புகளோடு முடிகிறது.
நூலகங்களுக்குள் ஒரு பயணம்
கமலாலயன்
(24 பக்கம் ரூ.5)
உலகின் முதல் நூலகம் எங்கிருந்தது? இந்தியாவின் முதல் நூலகம்? தமிழகத்தில்? என்கிற வரலாற்றுக் கேள்விகளுடன் தன் பயணத்தைத் துவங்கும் இப்புத்தகம் மிகப்பெரிய நூலகங்களான நாகார்ச்சுன வித்தியாபீடம் மற்றும் நாளந்தா பல்கலைக்கழக நூலகம் பற்றி விரித்துப் பேசுகிறது. நூலக இயக்கத்தின் துவக்க காலம் மத அமைப்புகளின் கையிலிருந்ததைக் குறிப்பிடும் நூல், ஞான பண்டாரங்கள் என்ற பெயரில் சமண சமயம் நிறுவிய நூலகங்கள், செழுங்கலை நியமம் என்ற பெயரில் பௌத்தம் நிறுவிய நூலகங்கள் சரஸ்வதி பண்டாரம் என்ற பெயரில் சைவம் அமைத்த நூலகங்கள் மற்றும் வைணவ நெறியின் ஞான பிரதிஷ்டை பற்றிய விவரங்களோடு விரிகிறது. மொகலாயர் காலத்திலும் தொடர்ந்த நூலகத்தின் பயணம் பற்றியும் பாபர் நாமா என்னும் புகழ் பெற்ற நூலை பாபர் அவர் அமைத்த நூலகத்தில் வைத்தே எழுதினார் என்பது போன்ற சுவையான தகவல்களையும் தருகிறது. நூலகத்துறை என ஒன்றைத் முதலில் நிறுவியது பரோடா சமஸ்தானம். நூலகத்துறை பற்றி இந்தியாவில் வந்த முதல் இதழ் ‘லைப்ரரி மிசலேனி’ யையும் பரோடா சமஸ்தான நூலகத்துறையே வெளியிட்டது. இன்றைய நவீன நூலக இயக்கத்தின் முன்னோடிகளான ஆந்திரத்தின் அய்யங்கி வெங்கட்டரமணய்யா பற்றியும் தமிழகத்தின் சீர்காழி ராமாமிர்தம் ரங்கநாதன் (S.R.ரெங்கனாதன்) பற்றியும் குறிப்பிடும் புத்தகம் உலக நூலக இயக்கத்துக்கே பயன்படும் கோலன் பகுப்பு முறையை உருவாக்கிய ரங்கநாதனின் பணிகளை விரிவாகப் பேசுகிறது. நூல்களுக்கும் மக்களுக்குமான இடைவெளி பற்றிக் கவலை கொண்ட அவர் கிராம நூலகம், நடமாடும் நூலகம் போன்ற கருத்துக்களை, கனவுகளை தன் வாழ்நாளிலேயே நடைமுறைப்படுத்திப் பார்த்தார்.
நூலக இயக்கத்தின் மூன்று தூண்களாக எழுத்தாளர், பதிப்பாளர், நூலக நிர்வாகி ஆகியோரைக் குறிப்பிடும் ஆசிரியர் பயிற்சியும் பட்டறிவும் நூல்கள் குறித்த உள்ளார்ந்த உத்வேகமும் உடையோரே நூலகராகப் பொறுப்பேற்க வேண்டுமெனக் கூறுகிறார்.
தாமஸ் ஆல்வா எடிசன்
வெ. சாமிநாத சர்மா
(32 பக்கம் ரூ.5)
கி.பி.1492இல் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டான். அதன் பிறகு ஐரோப்பா அங்கு போனது. லட்சக்கணக்கான சுதேசிகளைக் கொன்று அவர்களுடைய எலும்புக்கூடுகளின் மீதுதான் ஐரோப்பிய ஆதிக்கம் என்கிற கட்டடம் சமைக்கப்பட்டது. அப்படி அங்கு குடிபோன ஒரு குடும்பத்தின் வாரிசுதான் தாமஸ் ஆல்வா எடிசன் என்று துவங்கும் இப்புத்தகம் எடிசனின் வாழ்க்கை வரலாற்றை 1949லேயே தமிழர்களுக்குச் சொல்லுவதற்காக எழுதப்பட்டதாகும்.
டைனமோ, பேட்டரி, லவுட் ஸ்பீக்கர், ஸ்டென்சில் உருட்டும் எந்திரம், சினிமாவுக்கு முன்னோடியான கினிட்டோகிராப் போல 1328 அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளைக் கண்டுபிடித்து வடிவமைத்த எடிசன் முறையாகப் படித்த ஒரு கல்வியாளரோ விஞ்ஞானியோ அல்லர். ஓடும் ரயில் வண்டியில் தினசரி பேப்பர் போடும் பையனாக வாழ்வைத் துவங்கிய ஒரு குழந்தை உழைப்பாளி. அதில் கிடைத்த காசில் வீட்டுக்குக் கொடுத்தது போக தன் அறிவியல் ஆர்வத்துக்காக வீட்டிலேயே சிறிய பரிசோதனைக்கூடம் ஒன்றை அமைத்தவர். 1860 இல் உள்நாட்டுப்போரை ஒட்டி அமோகமாக நடந்த பத்திரிகை விற்பனையில் முதலிடம் பிடித்த எடிசன் ஓடும் ரயிலில் பத்திரிகைகள் ஸ்டாக் வைக்க என்று தனக்கென ஒரு தனி கம்பார்ட்மெண்டைப் பெற்றுக்கொண்டு அதிலேயே தன் பரிசோதனைச் சாலையை நிறுவிக்கொண்டு ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அதன் பிறகு தந்தி குமாஸ்தாவாக சொந்த பத்திரிகை நடத்துபவராக வேலை இல்லாமல் அலைகிறவராக எனப் பலவிதமாக வாழ நேர்ந்தது. பின்னர் நியூயார்க்கில் சொந்தத் தொழில் துவங்கி அதில் வெற்றியும் பெற்று வணிகரீதியாகப் பயன்படும் ஏராளமான கருவிகளைச் செய்து பெரும் பொருள் ஈட்டினார். 1931ஆம் ஆண்டு உயிர் நீத்த எடிசன் தன் 75ஆவது வயதிலும்கூட நாள் ஒன்றுக்கு 18 மணி நேரத்துக்கு மேல் உழைத்த கதையை அக்கறையுடன் சொல்கிறது இப்புத்தகம். குழந்தைகளுக்கும் அவசியம் வாங்கித் தர வேண்டிய புத்தகம்.
வெளிச்சம் தருமா
புதிய மின்சாரச் சட்டம்?
வெ.மன்னார்
(24 பக்கம் ரூ.5)
அண்ணல் அம்பேத்கரும் பண்டித ஜவகர்லால் நேருவும் பெரும் கனவுகளுடன் இயற்றிய இந்திய மின் வழங்கல் சட்டம் 1948 பற்றிய சரித்திரக் குறிப்புகளோடு புத்தகம் தொடங்குகிறது. அனைவருக்கும் மின்சாரம் வழங்குதல், நீர்ப்பாசனம், ஆலைகள், தகவல் தொடர்பு, ரயில், போக்குவரத்துக்கு மின்சாரத்தைக் கூடுதலாகப் பயன்படுத்துதல். கிராமப்புறங்களுக்கு மின் வசதியை உத்தரவாதப் படுத்துதல், சட்டமன்ற நாடாளுமன்றப் பரிசீலனைக்கு மின்துறையை உட்படுத்துதல் போன்றவை அவ்விரு தலைவர்களின் கனவுகளாக இருந்தன. அது பெருமளவு நனவாகியும் உள்ளது. 1947இல் வெறும் 1700 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி தற்பொழுது 1,14,000 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.
அதிக முதலீட்டைக் கோரிய மின்துறையில் முதலீடு செய்ய அன்று இந்திய முதலாளிகள் தயாராக இல்லை. மிகப்பெரிய கட்டுமானம் நிலைபெற்று விட்ட இப்போது அதைத் தனியார் மயமாக்க முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள். அதற்குக் கதவைத் திறந்து வைக்கும் முயற்சியாக 1998இல் பா.ஜ.க அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக மின்சாரச் சட்டம் 2003ஐ பாஜகவும் காங்கிரசும் இரட்டைக்குழல் துப்பாகியாகச் செயல்பட்டு இடதுசாரிகளின் எதிர்ப்பை முறியடித்து நிறைவேற்றி விட்டன. மின் துறையில் தனியார் முதலீட்டை அனுமதிக்கும் இச்சட்டம் முதலாளிகள் 15 முதல் 16 சதம் லாபம் ஈட்ட அனுமதிக்கிறது. ஏழை இந்தியாவுக்கு மின்சார மறுப்பு பணக்கார இந்தியாவுக்கு ஜொலிக்கும் மின் சப்ளை என்கிற நிலையை நோக்கி நாட்டை இழுத்துச்செல்லும் இச்சட்டத்தின் முழுமையான அம்சங்களை மிகமிக எளிய தமிழில் மக்களை இச்சட்டத்துக்கு எதிராகக் கோபம் கொள்ளச் செய்யும் வரிகளோடு புத்தகம் வந்துள்ளது.
மீடியா அரசியல்
பிரபாத் பட்நாயக்
தமிழில் : சாமி
(20 பக்கம் ரூ.5)
ஜனநாயகத்தின் கண்களென மீடியாவைக் குறிப்பிடுவார்கள். நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிப் போக்குகளை மக்களிடம் எடுத்துச்செல்லும் விதத்தால் மக்கள் விழிப்புணர்வு பெறுவார்கள். மக்களின் கருத்து உருவாக்கப்படும். போபோர்ஸ் பீரங்கி ஊழல் பற்றிப் பத்திரிகைகள் மக்களுக்கு எடுத்துச் சென்ற விதம் ஒரு அரசாங்கத்தையே கவிழ்த்தது. ஆனால் இன்று ஊடகங்களுக்கு அத்தகைய ஆற்றல் இருக்கிறதா? என்கிற கேள்வியுடன் புத்தகம் பேசத் துவங்குகிறது. குஜராத்தில் நடந்த மனிதப் படுகொலைகளுக்குப் பின்னால் மாநில அரசின் கை இருக்கிறது என்பதை பத்திரிகைகள் (குறைந்த பட்சம் ஆங்கில மொழி ஏடுகள் அனைத்தும்) ஒரே குரலில் மக்களுக்கு எடுத்துச் சென்றன. எனினும் குஜராத் அரசோ மோடியோ பதவியிறக்கம் செய்யப்படவில்லை. சாகசங்கள் புரிந்து பாதுகாப்புத் துறையில் நடந்த பேரங்களை டெகல்கா டாட் காம் வெளிக்கொண்டு வந்தது. எனினும் எந்தப் பெரிய மாற்றமும் நடைபெறவ¤ல்லை. பாதுகாப்பு அமைச்சர் அலுங்காமல் பதவியில் நீடித்தார். இவை காட்டும் உண்மை என்ன? ஊடகங்களின் ஆற்றல் குறைந்து போயுள்ளது. அதற்கான காரணங்கள் என்ன? இரண்டு வகையான காரணங்களை புத்தகம் அடையாளம் காட்டுகிறது. ஒன்று ஊடகங்கள் குறிப்பிட்ட ஊழல்களைச் சுற்றியே செய்திகளைப் பரிமாறி ஒரிசாவின் பழங்குடி மக்கள் உண்ண உணவின்றி வதைபட்டதைப் போன்ற ‘சாதாரண’ விஷயங்கள் பற்றிக் கண்டு கொள்ளாமல் விடுவதன் மூலம் தம் நம்பகத்தன்மையை இழக்கின்றன. இன்னொன்று தார்மீக நெறிமுறைகள் பற்றிய மக்களின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாசிசக் கருத்துக்கள் செல்வாக்கடையும் போது பாசிசக் கருத்துக்கள் ஆட்சியில் இருக்கும் போது, இவை நடைபெறுகின்றன.
வளர்ச்சிக்கு உதவாத ஊக வணிகத்துக்கும் இத்தகைய கருத்துநிலை வீழ்சிக்குமான உறவைப் பற்றியும் விரித்துப் பேசும் புத்தகம் அரசியல்வாதிகள் மீது அவநம்பிக்கை கொண்டுள்ள மக்கள் பத்திரிகைகள் மீது ஓரளவு நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த தார்மீக மூலதனத்தைப் பயன்படுத்தி ஊடகங்கள் சரியான திசை வழியில் செல்லமுடியும் என வலியுறுத்தி முடிகிறது.
மனிதர்கள் நாடுகள் உலகங்கள்
(உலகமயமாக்கல் சில உண்மைகள்)
ஜா.மாதவராஜ் & சு.வெங்கடேசன்
(48 பக்கம் ரூ.10)
‘உலகமயமாக்கல்’ என்கிற ஒற்றை வார்த்தை பிரபலமாகியிருக்கிறது. ஆனால் வரலாற்று நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியில் வைத்து இதன் முழுப்பரிமாணத்தையும் பார்க்க வேண்டும். இந்த ஆதங்கத்துடன் துவங்குகிற இப்புத்தகம் கவித்துவமிக்க மொழியில் ஏராளமான பயனுள்ள பக்கக் குறிப்புகளோடும் படங்களோடும் பொருத்தமான ஆழமிக்க கவிதை வரிகளோடும் உலகமயமாக்கல் என்பதன் சதிகள் நிறைந்த வரலாற்றை, அது ஏழை எளிய நாடுகளுக்கு அர்த்தமாகும் விதத்தை மூலதனத்துக்குச் சகல வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக அது நடத்திட்ட போர்களை விரிவாக நமக்குச் சொல்கிறது. நேரடி யுத்தங்கள், பொருளாதாரத் தடைகள், காப்புரிமை மோசடிகள், கலாச்சாரத் தாக்குதல்கள் என உலகமயம் நாட்டுக்கு நாடு காலத்துக்குக் காலம் புதுப் புது வடிவங்கள் எடுத்து பன்னாட்டு நிதி மூலதனங்கள் நடந்து செல்ல பட்டுக்கம்பளம் விரிக்கிறது.
சூரியன் உதிப்பதும் மறைவதும் கூடத் தெரியாத தொடர் ஒளிபரப்பில் மனிதர்கள் வேறு திசையில் சிந்திப்பதற்கான அவகாசமே தரப்படுவதில்லை. நம் மீது திணிக்கப்படும் அவர்கள் மொழி, அவர்கள் உணவு, அவர்கள் கலாச்சாரம், அவர்கள் உலகம் எல்லாம் எதற்காக அவர்களின் சந்தை - அவர்களின் பொருட்கள் அதற்காக.
ஆனால் அவர்கள் நினைப்பது போல் மக்கள் ஒன்றும் அப்படியே மதிமயங்கிப் போய்விடவுமில்லை. போராட்டங்கள் வெடிக்கின்றன. உலகமயமாக்கலுக்கு எதிரான ஆவேசமான போராட்டங்களைப் பற்றிய உணர்ச்சிகரமான செய்திகளை இந்நூல் பதிவு செய்கிறது. இந்தியாவின் பல பாகங்களிலும் ஏன் தமிழகத்தில் படமாத்தூர் போன்ற இடங்களில் நடைபெற்ற, நடைபெறும் போராட்டங்களும் பதிவாகியுள்ளன. இதுபோன்றதொரு விஷயம் பற்றிக்கூட இவ்வளவு சுவையாகவும் உணர்ச்சிகரமாகவும் அழகாகவும் ஒரு புத்தகம் கொண்டுவர முடியும் என்பதை நிரூபித்து வாசகரை வியப்பிலாழ்த்தும் புத்தகம்.
செப்டம்பர்
நினைவுகள்
அருந்ததிராய்
தமிழாக்கம் : விஜயன்
(32 பக்கம் ரூ.5.)
2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் உலக வர்த்தக நிறுவனத்தின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. செப்டம்பர் 11 என்றாலே அந்த நிகழ்வு மட்டும்தானா? இல்லை. இதே போன்றதொரு செப்.11 இல் 1973ஆம் ஆண்டில் சிலி நாட்டில் ஜெனரல் பினோசெ அமெரிக்க சி.ஐ.ஏ.வின் ஆதரவுடனான ராணுவ சூழ்ச்சி மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சல்வடார் அலெண்டேயின் அரசாங்கம் தூக்கியெறியப்பட்டது. அலெண்டே கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானோர், பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர் ‘காணாமல் போயினர்’. தேசத்தையே ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து சி.ஐ.ஏ வின் ஆதரவுடன் அந்நாட்டை ஆண்ட பினோச்செவுக்கு “நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு அமெரிக்காவில் இருக்கும் எங்களின் ஆதரவு உள்ளது. உங்கள் அரசாங்கம் வெற்றி பெற வாழ்த்துகிறோம். சிலி நாட்டின் மக்கள் பொறுப்பற்றவர்கள் என்பதற்காக அந்நாடு மார்க்சியப் பாதையில் செல்ல அனுமதிக்க முடியாது” என்று வாழ்த்துச் செய்தி அனுப்பினார் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்றைய அமெரிக்க அரசின் செயலாளர் ஹென்றி கிஸிஞ்சர். இதுபோல அமெரிக்கா தாங்கிப்பிடித்த லத்தீன் அமெரிக்க நாடுகளின் உதவாக்கரை சர்வாதிகாரிகள், எதேச்சதிகாரிகள், போதை மருந்து வியாபாரிகள், ஆயுத வியாபாரிகள் போன்ற 60000க்கும் மேற்பட்டோர் அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் ஸ்கூல் ஆப் அமெரிக்காஸ் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள்.
செப்டம்பர் 11 மேற்காசியப் பகுதியில் சோக நினைவுகளைத் தூண்டும் தேதி. 1922 செப்.11இல் தான் பிரிட்டிஷ் அரசு பாலஸ்தீனப் பகுதிக்குள் யூதர்களின் நாடு ஒன்றினை உருவாக்க ஆணை பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக பாலஸ்தீனத்தில் 76 சதவீத நிலப்பரப்பை அபகரித்து இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப் பட்டது. அப்பிரகடனம் வெளியான சில நிமிடங்களுக்குள்ளாகவே அமெரிக்கா அந்நாட்டை அங்கீகரித்தது. இன்றுவரை பாலஸ்தீனியர்கள் நாடற்ற மக்களாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். 1922 செப்.11 முதல் 2001 செப்.11 வரை 80 ஆண்டுகளாக நடக்கும் இப்போர்களை பின்னிருந்து நடத்தி வருவது யார்? ஆதரவளிப்பது யார்? என்பது போன்ற கேள்விகளோடு ஏராளமான வரலாற்றுத் தகவல்களை அடர்த்திமிக்க இலக்கிய மொழியில் நமக்குத் தரும் புத்தகம் இது.
நமக்கான குடும்பம்
ச.தமிழ்ச்செல்வன்
(16 பக்கம் ரூ.5)
ஒரு ஆண் எதற்காகத் திருமணம் செய்து கொள்கிறான்? ஒரு பெண் எதற்காகத் திருமணம் செய்து கொள்கிறாள்? ஒரு ஆண் எப்படி வளர்க்கப்படுகிறான்? ஒரு பெண் எப்படி வளர்க்கப்படுகிறாள்? மதம் ஆணை எப்படிப் பார்க்கிறது? மதம் பெண்ணை எப்படிப் பார்க்கிறது? நமக்கான குடும்பத்தில் ஒரு ஆண் என்ன செய்ய வேண்டும்? ஒரு பெண் என்ன செய்ய வேண்டும்? என்கிற எளிமையான கேள்விகளை முன் வைத்து அவற்றுக்கு விடை தேடும் முயற்சியில் நம் குடும்ப வாழ்வின் அடிப்படைகளை அசைக்கிற நடவடிக்கைகளை நோக்கி வாசகரை நெட்டித்தள்ளுகிறது இப்புத்தகம். ஒரு கேள்விக்கான பதிலின் முடிவில் அடுத்த கேள்வி பிறக்கிற பாணியில் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. பெண் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறாள் அல்லது கட்டமைக்கப் படுகிறாள். அக்கட்டமைக்கும் போக்கில் மதங்கள் ஆற்றும் பங்கு ‘மகத்தானது’. பெண் அவளது சகல பரிமாணங்களையும் இழந்து ஒரு உடம்பாக மட்டுமே தன்னை உணரும்படியாக ஆக்கப் படுகிறாள். தாய்மை, பெண்மை போன்ற போலி அடையாளங்கள் அவள் மீது திணிக்கப்படுகின்றன. அறிவியலுக்குப் புறம்பாக சில குணாதிசயங்களும் கூட மென்மையானவள், அச்சம் - மடம் - நாணம் மிக்கவள், அவள் மீது ஏற்றப்படுகின்றன. இப்படிப் பல்லாயிரம் ஆண்டுகாலமாக அவள் மீது படிந்து கிடக்கும் புழுதியை ஊதித்தள்ளுகிறது இப்புத்தகம். பாய்ச்சல் வேகத்தில் காலங்களைக் கடந்து நேரடியாக இன்றைய வாசகரை நோக்கி விரல் நீட்டிக் கேள்விகளை முன் வைக்கிறது. படித்து ரசிப்பதற்காக அல்ல. செயல்பாட்டுக்கான உந்துதலை வாசக நெஞ்சில் எற்படுத்தும் புத்தகம்.
சார்லஸ் டார்வின்
வெ.சாமிநாத சர்மா
(24 பக்கம் ரூ.5)
மனிதன் கடவுளின் சிருஷ்டி என்பர் பலர். ஆனால் பல அறிஞர்கள் இயற்கைச் சக்திகளின் வளர்ச்சிதான் மனித உருவம் என்றும் இதில் கடவுளின் கைவேலை ஒன்றும் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் சார்லஸ் ராபர்ட் டார்வின் என்பார்தான் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை முன் வைத்து இப்பரப்பில் நிலவி வந்த யூகங்களுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளியை வைத்தார்.
பாதிரியாருக்குப் படித்து தேவ ஊழியம் செய்யப் போயிருக்க வேண்டிய டார்வின் பூச்சியினங்களின் ஆராய்ச்சிக்காக பீகிள் என்ற கப்பலேறி ஐந்தாண்டுகள் பயணம் செய்து தென் அமெரிக்காவின் பல பாகங்களுக்கும் சென்று பரிணாம வளர்ச்சி விதிகளோடு திரும்பினார். டார்வின் பிறந்து வளர்ந்து உருவான கதையை தமிழ் வாசகர்களுக்குச் சொல்லும் முயற்சியாக இந்நூல் வந்துள்ளது. 1809ஆம் ஆண்டு பிறந்து 1882ஆம் ஆண்டு மறைந்த அவருடைய பால்ய காலம், திருமண வாழ்க்கை எனப் பலவற்றையும் இந்நூல் சொன்னாலும் “டார்வினை அவருடைய அறிவுக்காகவோ பொறுமைக்காகவோ விடாமுயற்சிக்காகவோ உலகம் போற்றவில்லை. மனித எண்ண்த்திலே ஒரு புரட்சியை உண்டு பண்னி விட்டார். அதனாலேயே உலகத்தாரின் மனதில் சாசுவதமான இடத்தைப் பெற்று விட்டார்” என்று பொருத்தமான வரிகளுடன் புத்தகம் முடிகிறது. குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய புத்தகம்.
நலம் நலமறிய ஆவல்
எஸ்.வி.வேணுகோபாலன்
(32 பக்கம் ரூ.5)
மத்திய தர வர்க்கத்தை எப்போதும் சில பூதங்கள் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கும். அல்சர், கொலஸ்ட்ரால், பிரஷ்ஷர், டயபடீஸ், அனீமிக், ஸ்பாண்டிலிடீஸ்-மூட்டு வலி, யூரினல் பிரங்னை, கிட்னியில் ஸ்டோன் ஆகிய இந்த இங்கிலீஷ் பேர் கொண்ட பூதங்களால் அலைக்கழிக்கப்படாத நடுத்தர வர்க்கத்து நடுத்தர வயது மனிதனோ மனுஷியோ இருக்க முடியாது. இந்த பூதங்களுக்கெல்லாம் வேப்பிலையடித்து விரட்டுவதற்கான எளிய உபாயங்களை நமக்குச் சொல்கிறது இப்புத்தகம். கொழுப்பு பற்றிய மூட நம்பிக்கைகள் பல நம்மிடம் உண்டு. நமது உணவில் 15 விழுக்காடு வரை கொழுப்பு இருப்பது அவசியம் தான். தாவர எண்ணெய் எதிலும் கொலஸ்ட்ரால் இல்லை. சில விளம்பரங்கள் தேவையற்ற பயத்தை ஏற்படுத்தி நிம்மதியாக நம்மை சாப்பிட விடாமல் தடுக்கின்றன. அப்புறம் சின்னதாக உடல் உபாதை ஒன்று வந்து விட்டால் பதறியடித்து உடனே மருத்துவரிடம் ஓடோடிச் சென்று தேவையற்ற டெஸ்ட்டுகள் செய்து அளவுக்கு அதிகமான மாத்திரைகள் ஊசிகள் அறுவை சிகிச்சை என உடம்பையும் மனசையும் இம்சிக்கிறோம். மாற்று மருத்துவ முறைகளில் துன்பமில்லாமல் நிவாரணம் இருக்கையில் நாம் அறிவியல்பூர்வமானது என்கிற நம்பிக்கையில் அலோபதியிலேயே விழுந்து கிடக்கிறோம். இப்படியாக நமக்கு அன்றாடம் பயன்படக்கூடிய மருத்துவக் குறிப்புகளுடன் சரியான உணவுப் பழக்கத்துக்கான சிபாரிசுகளுடன் வந்துள்ள புத்தகம். நல்ல நகைச்சுவையுணர்வு மிக்க நடையில் நம் கைகளில் தவழும் இப்புத்தகம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம். படித்துக் குடும்பத்தோடு தெளிவு பெற உதவக்கூடிய புத்தகம்.
ஸர். ஐசக் ந்யூட்டன்
வெ.சாமிநாத சர்மா
(24 பக்கம் ரூ.5.)
1642 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி பிறந்து 1727 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி மறைந்த சர். ஐசக் நியூட்டனின் வாழ்க்கைக் கதையின் சில பக்கங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் புத்தகம். நியூட்டன் என்பது இங்கிலாந்து நாட்டிலே லங்காஷையர் மாகாணத்திலே உள்ள ஒரு சிற்றூரின் பெயர்.
குறைப்பிரசவத்தில் பிறந்த ஐசக் நியூட்டன் பிறப்பதற்குச் சில மாதங்கள் முன்பாகவே தந்தையை இழந்தார். தாயும் வேறு திருமணம் செய்து கொண்டு போய்விட பாட்டியிடம் வளர்ந்த நியூட்டன் பள்ளிப் பருவத்திலேயே எதையும் உற்று நோக்கும் குணத்துடன் இருந்தார். எனினும் தொடர்ச்சியாகப் படிக்க முடியாத வறுமை வீட்டிலிருந்தது. படிப்பை நிறுத்திவிட்டு உழைக்கப் போனார். பின்னர் இவருடைய கற்கும் ஆர்வத்தைக் கண்டு பாதிரியார் அவருடைய படிப்புத் தொடர ஏற்பாடு செய்கிறார். 1665இல் அவர் கேம்ப்ரிட்ஜில் படித்துக்கொண்டிருந்தபோது பிளேக் நோய் பரவியது. அதனால் கல்லூரியை மூடிவிட்டார்கள். ஆகவே தன் அம்மாவுடன் இருக்க உல்ஸ்தோர்ப் கிராமத்துக்கு வந்திருந்த போதுதான் ஆப்பிள் விழுவதைப் பார்த்து பூமிக்கு ஈர்ப்பு விசை உண்டு என்பதைக் கண்டு பிடித்தார். ஆகாய மண்டலத்தில் தோன்றி மறையும் வால் நட்சத்திரங்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்து அவைகளைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடிய கருவிகளையும் கண்டுபிடித்தார். 1705ஆம் அண்டு பிரிட்டிஷ் மகாராணியார் தனது பரிவாரங்களுடன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்துக்கு விஜயம் செய்து நியூட்டனுக்கு சர் பட்டம் கொடுத்துச் சென்றார். இவை போன்ற சுவையான செய்திகளை உள்ளடக்கிய இப்புத்தகம் இளம் வாசகர் மத்தியில் பரவலாக எடுத்துச் செல்லப் படவேண்டிய ஒன்று.
தமிழில் தலித் இலக்கியம்
முகில்
(32 பக்கம் ரூ.5)
தலித் என்பவர் யார்? ஒரு சாதியைக் குறிக்கிற ஒன்றாக தலித் என்ற சொல்லைக் குறுக்கி விடக்கூடாது. தலித் என்பது வேதனையின் குறியீடாக இருக்கட்டும். அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் அடையாளப்படுத்துகிற ஒரு சொல்லாக அதை எடுத்துக் கொள்வோம் என்கிற புரிதலோடு இப்புத்தகம் பேசுகிறது. தலித் இலக்கியம் மராட்டியத்தில் பிறந்திடக் காரணமாய் அமைந்த மகாத்மா பூலேயின் பணிகள் சிந்தனைகள் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் பன்முகப்பட்ட செயல்பாடுகள் பற்றிக் குறிப்பிடும் இந்நூல், அம்பேத்கர் துவக்கிய சித்தார்த்தா கல்லூரியிலிருந்து படித்து வெளியேறிய இளைஞர்களால் துவக்கப்பட்ட சித்தார்த்தா இலக்கிய சங்கமே பின்னாளில் மராட்டிய மாநில தலித் இலக்கிய சங்கம் உருவாகக் காரணமாக அமைந்ததைக் குறிப்பிடுகிறது.
மராட்டிய தலித் இலக்கியத்தில் தலித் படைப்பாளிகளின் தன் வரலாற்று நூல்கள் ஏற்படுத்திய தாக்கம் பற்றிச் சரியாகக் குறிப்பிடும் போது தமிழில் தலித் இலக்கியமெனெப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட எழுத்தாளர் பாமாவின் ‘கருக்கு’ ஒரு தன் வரலாற்று நூலே என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். தமிழ் நாட்டில் தலித் இலக்கியச் சொல்லாடல்களை உலவச் செய்த முன்னோடிகளென ராஜ்கௌதமன், ரவிக்குமார், அ.மார்க்ஸ் போன்றோரைக் குறிப்பிடும் ஆசிரியர் அவர்களோடு முரண்படும் இடங்களையும் நட்புணர்வோடு பேசுகிறார். கொச்சை மொழியே தலித் இலக்கிய மொழியாக இருக்க முடியும் என ஒரு கட்டத்தில் பெரும் விவாதம் தமிழில் நடந்து கொண்டிருந்தது. ஆதிக்க இலக்கியத்தின் மொழி ஒடுக்கப்பட்ட மக்களின் மொழியைக் கொச்சையெனப் புறக்கணிக்கும்போது கொச்சை மொழியை உயர்த்திப் பிடிக்கும் எதிர் மனநிலையின் நியாயத்தை அங்கீகரிக்கும் ஆசிரியர், தலித் இலக்கியம் கறுப்பர் இலக்கியத்திலிருந்தும் பெண்ணிய இலக்கியத்திலிருந்தும் தன்னுடைய அழகியலை வளர்த்துக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையைப் பதிவு செய்கிறார். வர்க்கப்போராட்டத்துக்கும் சாதி ஒழிப்பு/தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்துக்கும் சம அழுத்தம் தரும் இயக்கங்களின் தேவையைச் சொல்லி நூல் நிறைவு பெறுகிறது.
காரல் மார்க்ஸ்
புது யுகத்தின் வழிகாட்டி
இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்
தமிழில்:பி.ஆர்.பரமேஸ்வரன்
(32 பக்கம்.ரூ.5.)
பெரும்பான்மையினரான சாதாரண மக்களால் தெளிவாக வெளிப்படுத்த முடியாத அவர்களின் சொந்த உணர்வுகளுக்கும் கருத்துக்களுக்கும் விருப்பங்களுக்கும் வடிவம் அளிக்க மார்க்ஸினால் முடிந்தது. ரிஷிகளையும் தேவதூதர்களையும் பற்றிக் கூறுவது போல ஏதோ ஒரு அசாதாரண ஆற்றலின் மூலம்தான் மார்க்ஸ் புதிய தத்துவங்களையும் சித்தாந்தங்களையும் உருவாக்கினார் என்று சொல்வது மார்க்சுக்குச் செய்யும் மிகப் பெரிய அநீதியாகும். மார்க்சியம் என்று பரவலாக அறியப்படும் கருத்துப் பெட்டகம். டாக்டர் காரல் மார்க்ஸ் என்ற அறிஞர் அ முதல் ஃ வரை தனது மூளையிலிருந்து உருவாக்கிய தத்துவம் அல்ல. மாறாக அவர் பிறந்த காலத்துக்கு முன்னாலேயே வளர்ந்து நிற்கும் புரட்சிகர சித்தாந்தங்களைக் கற்று உள்வாங்கிப் பின் அவற்றோடு முரண்பட்டு அவற்றின் குறைபாடுகளை அடையாளம் கண்டு புதிய தத்துவத்தை கட்டி எழுப்பினார்.
ஹெகலிடமிருந்து இயக்கவியலையும் ஃபாயர்பாக் போன்றவர்களிடமிருந்து பொருள்முதல்வாதத்தையும் உள்வாங்கி அவற்றின் குறைகளை நீக்கியே இயக்கவியல் பொருள்முதல் வாதத்துக்கு மார்க்ஸ் வந்து சேர்ந்தார் என்கிற வரலாற்றை இப்புத்தகம் தயக்கமும் சந்தேகமுமற்ற தெளிவான குரலில் பேசுகிறது. ஆரம்ப ஆண்டுகளில் தத்துவ ஞானப் பிரச்னைகளில் அதிகக் கவனம் செலுத்திய மார்க்ஸ் தன் வாழ்வின் கடைசி முப்பது ஆண்டுகளை நவீன முதலாளித்துவத்தின் செயல்பாட்டை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்யவும் அதனைக் கட்டுப்படுத்துகிற பொது விதிகளைக் கண்டறியவுமே செலவிட்டார்.
அந்த நாட்களில் முதலாளித்துவம் வளர்ச்சி பெற்றிருந்த இங்கிலாந்திலேயே பல ஆண்டுகள் தங்கியிருந்து தன்னுடைய ஆராய்ச்சியை நடத்தினார். அதன் விலைவாகவே தொழிலாளி வர்க்கத்தின் பைபிள் என்றுப் பிறர் சொல்லும் மூலதனம் என்னும் நூல் நமக்குக் கிடைத்தது. தத்துவ ஞானத்துறையில் ஜெர்மனியும் பொருளாதாரத் துறையில் இங்கிலாந்தும் என்பது போல சோசலிச சிந்தனைத் துறையிலும் புரட்சிகரப் போர்த்தந்திரங்களின் துறையிலும் அன்று முன்னேறியிருந்தது பிரான்ஸ். இம்மூன்று நிலப்பரப்புகளிலுமாகத் தன் ஆய்வுகளை விரித்த காரல் மார்க்ஸின் சிந்தனையின் வரலாறாகவே இந்நூல் அமைந்து மார்க்சைப் புரிந்து கொள்ள வாசகருக்கு நல்ல வழிகாட்டியாக விளங்குகிறது.
1947
ச.தமிழ்ச்செல்வன்
(32 பக்கம் ரூ.5)
விடுதலையின் ஆண்டாக நம் மனங்களில் படிந்து போயிருக்கும் 1947இன் மறு பக்கத்தை நமக்குத் திறந்து காட்டும் புத்தகம். இந்தியா இரண்டு நாடுகளாக இந்தியா, பாகிஸ்தான் என ஆன கதையை மனம் அதிரும் ஆதாரங்களுடன் பேட்டிகளுடன் உண்மைச் சம்பவங்களுடன் விளக்கிச் சொல்லும் புத்தகம். பிரிவினையின் போது லட்சோப லட்சம் மக்கள் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக இடம்பெயர்ந்தனர். மனித குல வரலாற்றில் மிக அதிகமான மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்தது 1947இல் இந்தியாவில்தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவார்கள். அகதிகளானது மட்டுமல்ல துயரம், மதப் பகைமை மூட்டி வளர்க்கப்பட்டதன் விளைவாக இருபக்கமும் படுகொலைகள் நடந்தன. பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானதன் காரணமாக கருவுற்றனர்.
கருச்சிதைவு செய்து கொள்வதற்காக மருத்துவமனை வளாகங்களில் வரிசையில் நின்ற பெண்கள் ஆயிரமாயிரம். பத்து மாதம் சுமந்து அக்குழந்தைகளைப் பெற்று அவர்களை அரசாங்க அனாதை ஆசிரமங்களில் விட்டுச் சென்ற பெண்கள் இன்னும் பல ஆயிரம். அக்குழந்தைகள் சிலர் இரக்கமுள்ள மனிதர்களால் தத்து எடுத்துக் கொள்ளப்பட்டனர். பலர் அனாதைகளாக பிச்சைக்காரர்களாக பிக்பாக்கட் திருடர்களாக இந்திய மற்றும் பாகிஸ்தான் தெருக்களில் அலைய விதிக்கப்பட்டது. வழியில் தொலைந்து போன பெற்றோர்களைத் தேடும் பிள்ளைகளும் பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோரும் இரு நாட்டு எல்லைகளிலும் நின்று மகளே என்றும், மகனே என்றும், அம்மா என்றும், அப்பா என்றும் கதறும் ஒலிகள் காலங்கள் தாண்டியும் வந்து கொண்டிருக்கும் அவலத்தைப் பதிவு செய்துள்ள உணர்ச்சிகரமான புத்தகம். பிரிவினையை அறியாத இன்றைய தமிழ் வாசகர்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டிய புத்தகம்.
|