நவம்பர் 7 (2012) அன்று தருமபுரியில் நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய தலித் கிராமங்கள் எரிக்கப்பட்டன. சரியாக ஒன்பது மாதங்கள் கழித்து ஆகஸ்ட் 7 அன்று தருமபுரி காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் அளித்த அறிக்கை பத்திரிகைகளில் வந்தது. அதில் இளவரசன் தற்கொலை தான் செய்து கொண்டார் என்று கூறியிருந்தார். இந்த இடைப்பட்ட ஒன்பது மாதகாலத்தில் நடந்தவை எல்லாம் நாம் ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய வாழ்க்கைக்குப் பின்னிழுக்கப்பட்டுவிட்டோமோ என்கிற உணர்வையே தந்தன.

சூலை 4 அன்று இளவரசனின் உடல் தண்டவாளத்தின் அருகே கண்டெடுக்கப்பட்டது. முதல் செய்தியே குறிப்பாக தமிழ் நாளேடுகளில் அது தற்கொலை என்றே பரப்பப்பட்டது. தண்டவாளத்துக்கு அருகில் இல்லாமல் வேறெங்காவது உடல் கண்டெடுக்கப்பட்டிருந்தால் அது கொலை என்றாகி இருக்கும். தண்டவாளம் என்கிற இந்த இடம்தான் இந்த மரணத்தை தற்கொலையாக இருக்கக்கூடும் என்கிற கருத்தை தோற்றுவித்தது. இன்றைக்கு ஏறக்குறைய அந்த மரணத்தை தற்கொலை என்று காவல்துறை முடிவு செய்து அறிவித்தே விட்டது. அரசு எந்திரமும் ஆதிக்க சக்திகளும் நினைத்தால் எதைவேண்டுமானாலும் செய்துவிட்டு, அதை வேறு ஒன்றாக நிறுவும் அதிகாரம் கொண்டவை என்பதற்கு இளவரசன் மரணமும் சான்று பகர்கிறது.

நத்தம் கிராமத்தில் இளவரசனின் இறுதி நிகழ்வு அன்று திரண்டிருந்த கூட்டத்தின் முன் அவரது தாய் கதறி அழுதார்: “என் பிள்ளையை கையை உடைத்துப் போட்டிருந்தால்கூட காலம் முழுவதும் நான் அந்த அழகு முகத்தைப் பார்த்துக்கொண்டே வீட்டில் அவனை வைத்துக் காப்பாற்றி இருப்பேனே! இப்படி கொன்று போட்டார்களே'' என்று பெற்ற வயிறு எரிய கதறி அழுதார். நத்தம் கிராமத்தில் "இளவரசனின் படுகொலைக்கு நீதி வேண்டும்' என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் காணப்பட்டன. காவல்துறையின் கெடுபிடிகளை மீறி வெவ்வேறு வழிகளில் கிராமத்துக்குள் புகுந்துவிட்ட பல்வேறு தலித் கிராமங்களின் மக்களும் அதை கொலை என்றே நம்புகிறார்கள்.

ஊடகங்களில் அனல் பறக்கும் விவாதங்கள் நடந்தன. அது கொலையாக இருக்கக்கூடும் என்பதற்கான சந்தேகங்களை அவை வெளியிட்டன. அதன் உச்சமாக ராஜிவ்காந்தி கொலை வழக்கின் புலனாய்வு அதிகாரியும் மிகச் சிறந்த தடய அறிவியல் வல்லுநருமான பேராசிரியர் சந்திரசேகர், இது குறித்து எழுப்பியிருந்த கேள்விகளுக்கு இப்போதும் காவல் துறை பதிலளிக்கவில்லை. இது கொலையாக இருக்கக்கூடும் என்கிற கோணத்தில் தொடக்கத்தில் இருந்தே காவல்துறை செயல்படவில்லை. அதை தற்கொலை என்று கூறி விஷயத்தை முடிக்க என்னவகையான வேலைகளை செய்யவேண்டுமோ அவை அத்தனையையும் அது செய்தது. ஒரு சாதாரண மனிதருக்குக் கூட இளவரசனின் உடல் கிடந்த கோணம், இடம், பட்ட காயங்கள் என்று பலவற்றை பார்க்கையில் எழும் சந்தேகங்கள் இயல்பானவை.

சரியாய் இளவரசனின் பை இருந்த இடத்திலேயே அவர் உடலும் எப்படி கிடந்தது? அந்த குறிப்பிட்ட இடத்தில் ரயிலின் வேகம் 90 கி.மீ. இருந்திருக்கும். ஒரு 50 கி.மீ. வேகத்தில் செல்லும் ரயிலில் அடிபட்டால்கூட உடல் பத்தடி, இருபதடி என்று தூக்கி எறியப்பட்டிருக்கும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் தடய அறிவியல்துறையில் முன்பு பணிபுரிந்தவருமான தொல். திருமாவளவன் எழுப்பும் அடிப்படை கேள்விகளுக்குக் கூட காவல்துறையிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ரயிலில் அடிபட்டால் ஓர் உடலில் First Injury என்றும் Second Injury என்றும் இரண்டு வகையான காயங்கள் இருக்கும். First Injury என்பது ரயிலில் அடிபடும்போது படும் காயங்கள். Second Injury என்பது தூக்கி எறியப்பட்டு கீழே விழுகையில் படும் காயங்கள். இளவரசனின் உடலில் First Injury மட்டுமே உள்ளது. தூக்கியெறியப்பட்டு விழும்போது சரளைக் கற்கள் குத்தியோ, நிலத்தில் அடிபட்டோ சிறிய சிராய்ப்புகளும் காயங்களும் இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் இல்லை.

ரயிலில் அடிபட்ட உடல் தூக்கியெறியப்பட்டால் உடலில் உள்ள நுரையீரல், இருதயம், வயிறு போன்ற பகுதிகள் குலைந்துவிடும். ஆனால், இளவரசனின் பிரேத பரிசோதனை அறிக்கை அப்பகுதிகள் intact ஆக இருந்தன என்கிறது. சிறுநீர்ப்பையில் இருந்த சிறுநீர் முழுவதும் வெளியேறி இருக்கவேண்டும். ஆனால் 150 மில்லி சிறுநீர் உடலில் காணப்பட்டது. விந்து வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் வெளியாகவில்லை. இளவரசனின் சட்டைக் காலரில்கூட ரத்தம் இல்லை. இது எப்படி சாத்தியம்?

ரத்தம் வழிந்து சட்டை நனைந்திருக்காவிட்டாலும்கூட ஒரு துளி ரத்தம் கூட காலரில் இல்லை எனும்போது, அவர் கீழே விழுந்தபின் படுத்துக்கிடந்த நிலையில்தான் தலையில் தாக்கப்பட்டிருக்கிறார் என்று திருமாவளவன் கூறுவதைப் புறந்தள்ளிவிட முடியுமா? அவர் முழங்கையில் ஒரு பெரிய காயம் காணப்பட்டது. ஏதோ ஒன்றால் தாக்கப்படும்போது அதைத் தடுத்து நிறுத்தும் விதமாக கைகளை உயர்த்திய நிலையில் முழங்கையில் அடிபட்டு தடுமாறி கீழே விழுந்திருக்கலாம்; கீழே விழுந்தபின் தலையில் தாக்கப்பட்டதால்தான் ரத்தம் சட்டைக் காலருக்குக்கூட வராமல் போனது. அதன் காரணமாகவே மூளை தெறித்து விழுந்திருக்கிறது என்கிற இந்தக் கூற்று ஒப்புக்கொள்ளக்கூடியதாகவே உள்ளது. மூளை சற்றுகூட சிதையாமல் அப்படியே முழுதாகக் கிடக்கிறது. ரயிலில் அடிபட்டால் இது சாத்தியமே இல்லை. மூளையை யாரோ மிதித்த காலடித் தடம் தெளிவாக புகைப்படங்களில் இருப்பதை திருமாவளவன் கூட்டமொன்றில் தெரிவித்தார். அந்த காலடித் தடம் யாருடையது என்று ஏன் காவல்துறை விசாரிக்கவில்லை? ரயிலில் அடிப்பட்டு சாகும் ஒரு மனிதனின் சட்டைகூட கசங்காமல் இருப்பதன் மர்மம்தான் என்ன?

அஸ்ரா கர்க்கின் அறிக்கைப்படி இளவரசனுடன் அப்போது யாருமே இல்லை; அவர் தனியாகவே அந்த தண்டவாளத்துக்கு அருகே இருந்தார். அங்கே பாதி சாப்பிட்ட நிலையில் ஒரு வாழைப்பழம் கிடந்தது. அப்படியெனில் அதை அவர் தான் சாப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, இளவரசனுடைய வயிற்றில் வாழைப்பழம் இல்லை. மேலும், அங்கே ஒரு பீர்பாட்டில் இருந்தது. அந்த பீர் முழுவதையும் அவர்தான் குடித்தார் என்றால் அது அவருடைய வயிற்றில் இருந்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 30 மில்லி திரவம்தான் அவருடைய வயிற்றுக்குள் இருந்தது. மஞ்சள் நிறத்திலான அந்த திரவத்தில் எந்த குறிப்பிட்ட வாடையும் இல்லை என்கிறது முதல் உடற்கூராய்வு அறிக்கை.

ஒரு மரணம் கொலையோ, தற்கொலையோ அங்கே மோப்ப நாய் வரவழைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வரவழைக்கப்படாதது ஏன்? உடலுக்கு அருகே கிடந்த கையுறை ஒன்று குறித்த மர்மத்துக்கு இப்போது வரை விடையில்லை. அந்த கையுறை முதலில் அந்த இடத்தில் கிடந்ததைப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். அதற்கான புகைப்பட ஆதாரமும் இருக்கிறது. ஆனால் காவல் துறை வந்த சிறிது நேரத்தில் அந்த கையுறை அங்கிருந்து அகற்றப்பட்டது. அதை காவல்துறையே எடுத்ததாக அப்போது அங்கிருந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். இப்போது அந்த கையுறை எங்கே? யாரிடம் இருக்கிறது? அந்த கையுறை குறித்த விவரங்களை ஏன் காவல்துறை வெளியிடவில்லை? மரணம் நிகழ்ந்த சுற்றுப்புற இடத்தை வழக்கமாக ஆய்வு செய்யும் காவல்துறை ஏன் அவ்வாறு செய்யவில்லை? கொலையாயினும் தற்கொலையாயினும் மிக அடிப்படை விஷயமாகிய தடய அறிவியல் சோதனை ஏன் நிகழ்த்தப்படவில்லை? நிபுணர் எவரையும் அழைத்துவந்து கைரேகை சோதனை எதுவும் நடத்தப்படவில்லையே ஏன்? அந்த வாழைப்பழம், மதுபாட்டில், பை என்று அவற்றில் படிந்திருக்கும் கைரேகைகள் யாருடையவை என்று ஏன் சோதனையிடவில்லை?

இளவரசனுடைய கபாலம் பிளந்த உடலை பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆராய்ந்து பார்த்தால், ரயிலின் முன்பு போய் நின்றால் பக்கவாட்டிலோ, முகத்திலோ அல்லது பின்னந்தலையிலோ மட்டுமே அடிபடும். ரயில் வானத்திலிருந்து கீழ்நோக்கி வந்தது போல தலையின் மேற்பக்கம் தாக்கப்பட்டு மண்டை உடைந்திருப்பது எப்படி? இல்லையெனில் நான்கு கால் பிராணியாக இருந்தால்தான் இப்படி அடிபடுவதற்கான சாத்தியம் உண்டு. இளவரசன் இரண்டு கால் மனிதர். வலுவான ஆயுதம் கொண்டு மேற்புறம் தாக்கியிருக்கும்பட்சத்தில்தான் தலை ஒருபுறம் கீழே அழுத்தப்பட்டு மண்டை பிளந்திருக்க முடியும். இவை எல்லாவற்றையும் விட, ரயிலை இயக்கிய ஓட்டுநர் அப்படி ஒரு சம்பவத்தை தான் பார்க்கவில்லை என்று கூறியிருப்பதையும், எந்தவிதமான விபத்தும் அன்று நடக்கவில்லை என்றும் கூறியிருப்பதையும் ஏன் காவல்துறை கவனத்தில் கொள்ள மறுக்கிறது?

"எய்ம்ஸ்' மருத்துவர்களின் அறிக்கையில் தட்டையான ஓர் உலோகப்பொருள் தாக்கியதில் இளவரசன் இறந்திருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. அதுதான் "எய்ம்ஸ்' டாக்டர்கள் செய்ய வேண்டிய வேலை. அது ஆயுதமாகவும் இருக்கலாம் அல்லது ஓடும் ரயிலாகவும் இருக்கலாம் என்று மருத்துவர்கள் ஒருபோதும் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. ஓடும் ரயிலை உடற்கூராய்வு அறிக்கைக்குள் இழுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? அப்படியே இருந்தாலும் அது ஆயுதமாகவும் இருக்கலாம் என்கிற அவர்களின் கருத்து ஏன் புறந்தள்ளப்பட்டு, ஓடும் ரயில் மட்டுமே காவல் துறையால் எடுத்துக்கொள்ளப்படுகிறது? இந்தக் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் காவல் துறை பதில் சொல்லத் தயாராய் இல்லை.

இதுவரை இளவரசனின் மரணம் தற்கொலைதான் என்று நான்கு முறை பத்திரிகைகளில் வெளியானது. முதல் முறை சம்பவம் நடந்தபோது. இரண்டாவது முறை இளவரசன் எழுதியதாக சொல்லப்படும் கடிதத்தை வெளியிட்டபோதே அஸ்ரா கர்க் அது தற்கொலைக் குறிப்பு என்றும், அது இளவரசன் எழுதியதுதான் என்றும்கூறி தற்கொலை என்று கூறியது ஊடகங்களில் வெளியாகியது. ஆனால் அப்போது அக்கடிதத்தின் உண்மைத்தன்மை சோதிக்கப்படவே இல்லை. தடய அறிவியல் நிபுணர்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அது இளவரசனுடைய கையெழுத்துதானா என்று உறுதிசெய்யாமலேயே அஸ்ரா கர்க் அறிவித்தது ஏன்?

"எய்ம்ஸ்' மருத்துவர்களின் அறிக்கை சீல் வைக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின் தருமபுரி செசன்ஸ் நீதிமன்றத்துக்கு அந்த அறிக்கை அனுப்பப்பட்டது. அறிக்கையை பிரிக்காத நிலையில் ஊடகங்களின் செய்தி அறிக்கைகள் இளவரசன் தற்கொலை செய்துகொண்டதாக "எய்ம்ஸ்' மருத்துவர்கள் கூறுகிறார்கள் என்று வெளியானது. இது மூன்றாவது முறை. ஆனால் "எய்ம்ஸ்' மருத்துவர்களின் அறிக்கை திறக்கப்பட்டபின் பார்த்தால், அவர்கள் எங்கேயும் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறவே இல்லை என்பது தெரிந்தது. இப்படி ஒரு பொய்யான தகவல் எப்படி ஒரே நேரத்தில் எல்லா பத்திரிகைகளுக்கும் அளிக்கப்பட்டது என்பதற்கு இப்போதுவரை பதில் இல்லை. அஸ்ரா கர்க் ஆகஸ்ட் 7 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் இளவரசன் தற்கொலை செய்துகொண்டதாக அறிவித்தபோது, நான்காவது முறையாக ஊடகங்கள் அதை வெளியிட்டன.

இளவரசன் எழுதியதாக காவல் துறை ஒரு தற்கொலைக் குறிப்பை வெளியிட்டது. அந்த தற்கொலைக் குறிப்பு குறித்த சந்தேகங்களுக்கும் விடையில்லை. ரயில்வே காவல்துறை சொல்லித்தான் இளவரசனின் தந்தை இளங்கோவுக்கே முதலில் விஷயமே தெரியும். ரயில்வே ஊழியர்தான் உடலை முதலில் பார்த்திருக்கிறார். ஆனால் இளவரசனின் பின்பாக்கெட்டிலிருந்துதான் கடிதம் எடுக்கப்பட்டதாக காவல்துறை கூறுகிறது. இளவரசனின் உறவினர் ஒருவர் அதை எடுத்து வைத்துக்கொண்டு நான்கு நாட்கள் கழித்து காவல்துறையிடம் அளித்ததாக தகவல். சாமான்ய மக்களுக்கு கொலை, தற்கொலை என்று காவல்துறை விசாரிக்கவேண்டிய அத்தனை சம்பவங்களிலும் காவல்துறை வரும்வரை உடலைத் தொடக்கூட அஞ்சுவதுதான் மனித சைக்காலஜி. உடலின் பாக்கெட்டுகளை சோதனை போட்டு கடிதத்தை எடுத்து அதை மறைக்கும் அளவுக்கு உறவினர் ஒருவர் போக முடியுமா? அதிலும் காவல்துறையும் மக்களும் இருக்கையில் அது சாத்தியமா?

தன்னுடைய இறுதிப் பேட்டியில் இளவரசன், “நான் பிறந்த சாதிதான் இவங்களுக்குப் பிரச்சனையா போச்சு. இவ்வளவு செய்றவங்க எதையும் செய்வாங்க'' என்று கூறியிருந்தார்.

இதைத்தான் யோசிக்கவேண்டி இருக்கிறது. ஆனால், தடய அறிவியல் நிபுணரை வைத்து காவல்துறை நடத்திய கையெழுத்துப் பரிசோதனையில் இது இளவரசனின் கையெழுத்துதான் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பரிசோதனைக்குப் போகும் முன்பாகவே அது இளவரசன் எழுதிய கடிதம்தான் என்று உண்மைத்தன்மையை சோதிக்காமலேயே அஸ்ரா கர்க் அறிவித்ததன் பின்னணி என்ன? அப்படி அறிவித்ததாலேயே இப்பரிசோதனையை மேற்கொண்ட நிபுணரிடம் அறிவித்ததை உண்மையாக்க அறிக்கை கேட்டு வாங்கியிருக்க வாய்ப்பிருக்கிறதா, இல்லையா? அத்துடன் இது இளவரசனின் கையெழுத்துதானா என்று சரி பார்க்க கொடுத்த மாதிரி கையெழுத்துப் பிரதி எது? அதை காவல் துறை பகிரங்கமாக வெளியிடுமா? சென்னையைச் சேர்ந்த மனோஜ்குமார் என்கிற நண்பரிடமும் சித்தூரைச் சேர்ந்த நண்பரிடமும் இளவரசன் இறுதியாகப் பேசியதாக தகவல் வந்தது. மனோஜ்குமாரை காவல்துறை அழைத்து, நாங்கள் சொல்வதைச் சொல்லவேண்டும் என்று சொன்னதை கண்ணால் பார்த்ததாக "டிராபிக்' ராமசாமி தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் கூறியதை ஏன் விசாரிக்கவில்லை?

தனது உறவினரான அறிவழகனிடம் பேசுகையில் சித்தூருக்கு வேலைக்குச் செல்லவேண்டும். நீயும்கூட வருகிறாயா என்று இளவரசன் கேட்டதாகவும் அதற்கு அறிவழகன் வேலை இருக்கிறது வரமுடியாதே என்று பதிலுரைத்ததாகவும், இன்னும் பத்து நிமிடத்தில் வருகிறேன். அங்கேயே இரு என்று இளவரசன் கூறியதாகவே செய்திகள் முதலில் வந்தன. அதன்பிறகு அறிவழகன் போன் செய்தபோது அழைப்புக்கு பதிலில்லை என்பதுதான் முதலில் வந்த செய்தி. பத்திரிகைகளில் அறிவழகனின் பேட்டியும் வந்தது. பின்னாளில் காவல்துறை விசாரணையின்போது மட்டும் ஏன் எல்லாம் மாறிப்போயின? அவர் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் பேசினார் என்பதாக காவல் துறை தனது விசாரணையில் கண்டறிந்ததாகச் சொல்கிறது.

சூலை 2 அன்று சென்னையில் இருந்த இளவரசன் திவ்யாவிடம் ஒரு வார்த்தை பேச துடித்து, அவரது அலைபேசி எண்ணை கண்டுபிடித்துச் சொல்லுமாறு பலரிடம் கேட்டதற்கான சாட்சியங்கள் உள்ளன. ஆனால், இறப்பதற்கு சில நாட்கள் முன்பு இளவரசன் திவ்யாவிடம் அலைபேசியில் பேசி தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறியதாக காவல்துறை கூறுகிறது. திவ்யாவின் தாய் தேன்மொழியிடமும் இளவரசன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறியதாக காவல்துறை கூறுகிறது.

அப்படியே ஒரு வாதத்துக்காக காவல் துறை சொல்வதை ஒப்புக்கொண்டாலும், ஒருவர் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்று சொல்வதோ, தற்கொலை மனநிலையில் இருப்பதையோ வைத்துக்கொண்டு, அவருக்கு ஒரு மரணம் நேர்ந்தால் அது தற்கொலைதான் என்று முடிவு செய்ய இயலுமா? அவர் தற்கொலை மனநிலையில் இருக்கிறார் என்றால் அந்த மனநிலையை ஏன் அவருடைய எதிரிகள் பயன்படுத்தியிருக்கக் கூடாது? ஒரு வாதத்துக்காக கேட்கிறோம்: அந்தக் கடிதத்தை அவரே எழுதி இருந்தாலும், சூலை 1 ஆம் தேதிக்கு முன்னால் எழுதப்பட்ட கடிதத்தை அவர் வைத்திருந்திருக்கிறார். குறைந்தது 4 நாட்கள் அந்தக் கடிதம் அவரிடம் இருந்திருக்கும். அந்தக் கடிதத்தை எழுதி வைத்த பிறகும் அவர் குறைந்தது நான்கு நாட்களாக தற்கொலை எண்ணத்தை செயல்படுத்தாமல் இருந்திருக்கிறார். அய்ந்தாவது நாளும் அப்படியே இருந்திருக்க வாய்ப்பில்லையா என்ன? இவருடைய தற்கொலை எண்ணத்தை சாதகமாக்கி ஏன் ஒரு கொலை நிகழ்ந்திருக்கக் கூடாது. இப்படித்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று சொல்ல முடியாவிட்டாலும், இப்படி நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு என்று காவல்துறை ஏன் விசாரணை மேற்கொள்ளவில்லை? தொடக்கத்திலிருந்தே இதை தற்கொலை என்று சொல்லி கணக்கை முடிக்கவே காவல்துறை துடித்தது எதனால்?

காவல்துறையின் கணக்குப்படி இது தற்கொலை என்றால், குறைந்தபட்சம் தற்கொலைக்குத் தூண்டியவர்கள் என்கிற வகையில் ஒருவரைக்கூட காவல்துறை விசாரிக்கவில்லை; எந்த நடவடிக்கையும் இல்லை; கைதுகள் இல்லை; வழக்குகளும் இல்லை! நாகராஜ் (திவ்யாவின் தந்தை) தற்கொலை செய்துகொண்டார் என்று கூறி அதற்குக் காரணமானவர்கள் என சிலர் மீது வழக்கு போட முடிந்த காவல் துறையால் ஏன் இளவரசனின் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது ஒரே ஒரு வழக்கைக்கூட பதிவு செய்ய முடியவில்லை? தருமபுரி காவல்துறை தன்னிச்சையாகவே குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறதா? அல்லது மேலிடத்திலிருந்து வரும் உத்தரவா? அல்லது சாதியவாதிகளின் தூண்டுதலா? மிரட்டலா?

மூன்று ஊர்களை எரிக்கும்போது என்ன செய்தது காவல்துறை? ஊரை எரித்தவர்கள் இன்றைக்கு சுதந்திரமாக நடமாடுகிறார்கள். ஆனால், இளவரசனின் இறுதி நிகழ்வுக்கு வந்திருந்தவர்களுக்கு தடை விதித்து கைது செய்தது காவல்துறை. இதையெல்லாம் யாருடைய தூண்டுதலின்பேரில் செய்கிறது காவல்துறை? சிறப்புப் புலனாய்வுக் குழுவில் பேராசிரியர் சந்திரசேகரன் இடம்பெறவேண்டும் என்று கோரி தொல்.திருமாவளவன் தொடர்ந்த வழக்கை இதோ அதோ என்று இழுத்தடித்த நீதிமன்றம், இறுதியில் அவரைப் பயன்படுத்திக் கொள்வதா வேண்டாமா என்பதை தமிழக அரசின் முடிவுக்கே விட்டுவிட்டது.

அஸ்ரா கர்க் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் இப்படிக் கூறியிருக்கிறார்: இதுவரை நடந்த விசாரணையின் அடிப்படையில் இளவரசன் கொல்லப்பட்டார் என்பதற்கான எந்தவிதமான ஆதாரமும் கிடைக்கவில்லை. மேலும் இளவரசன் மரணம் கொலைதான் என்ற சந்தேகம் எழுவதற்கான எந்தவிதமான சூழ்நிலையும், காரணியும் முற்றிலும் இல்லை.

இத்தனை சந்தேகங்கள் உள்ள ஒரு மரணத்தை, சூழலும் காரணியும் முற்றிலும் இல்லை என்கிறார். மூளையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரேதப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக வந்த ரயில் மோதியதால்தான் இப்படி காயம் ஏற்பட்டிருப்பதாக காவல்துறை நம்புகிறது என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. காவல்துறை நம்புவது ஒரு விஷயமே இல்லை. மக்கள் நம்பவேண்டுமில்லையா? காவல்துறை தான் நம்பும் ஒரு விஷயத்தை மக்கள் மீது ஏன் திணிக்கிறது?

காவல்துறையினரின் இந்த சந்தேகத்தை, நேரடியாக ஆய்வு மேற்கொண்ட "எய்ம்ஸ்' டாக்டர்கள் குழுவினரும் கவனத்தில் எடுத்துக் கொண்டனர். ரயில் மோதியதால்தான் இவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று அவர்களும் கூறியுள்ளனர் என்கிறது அறிக்கை. அப்படியெனில் காவல்துறை "எய்ம்ஸ்' மருத்துவர்களை அவர்கள் விருப்பத்திற்கு பணி செய்யவிடாமல் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனக்கு தேவையானதை கேட்டு வாங்கியதற்கான ஒப்புதல் வாக்குமூலமாக இதை எடுத்துக்கொள்ளலாமா?

மற்றபடி, இளவரசன் துன்புறுத்தப்பட்டதற்கான, அடித்து காயப்படுத்தப்பட்டதற்கான எந்த தடயமும் அவரது உடலில் இல்லை என்கிறது அஸ்ரா கர்க்கின் அறிக்கை. சித்திரவதை செய்து, அடித்துக் காயப்படுத்திய தடயத்தை, தற்கொலை செய்து கொண்டதாக ஜோடிப்பவர்கள் ஏற்படுத்துவார்களா என்ன? உயிரை எடுப்பதுதான் நோக்கம் எனும்போது சித்திரவதைக்கு எங்கே இடமிருக்கிறது? ஒரே அடியில் ஓர் உயிரை மாய்த்துவிடவும் முடியும் என்பதால் இத்தகைய தகவல்களை தேவையில்லாமல் எதற்காக அறிக்கையில் சேர்க்கிறது காவல்துறை?

இளவரசன் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டார் என்று யாரும் குற்றம் சாட்டவில்லை. அடித்து காயப்படுத்தப்பட்டதற்கான எந்த தடயமும் அவரது உடலில் இல்லை என்கிறது அறிக்கை. பிரேதப் பரிசோதனை அறிக்கையோ இரும்புப்பொருள் தாக்கியதால் உயிரிழந்ததாகக் கூறுகிறது. அது ஓடும் ரயிலாகவும் இருக்கலாம் என்றும் கூறுகிறது. ஒருவேளை ஓடும் ரயிலாக இல்லாவிட்டால், வேறு என்ன? தானாக இரும்புப்பொருள் வந்து தாக்குமா? அல்லது இளவரசன் தன்னைத்தானே இரும்புப்பொருளால் தாக்கிக் கொண்டாரா?

ஒரு படுகொலையை மறைக்க எத்தனை முயற்சிகள்? எத்தனை ஜோடனைகள்? எத்தனை? கண் துடைப்புக் காட்சிகள்? மரணத்தில் உள்ள சந்தேகங்களை போக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஆனால் இது சாதி காப்பாற்றும் அரசு. இங்கே அரசாங்கமும் காவல்துறையும் ஆதிக்க சாதிகளும் நினைத்தால் ஒரு கொலையை மூடி மறைக்க அதிகாரத்தின் துணைகொண்டு அத்தனை வேலைகளையும் பார்த்துவிட முடியும் என்பதற்கு இளவரசனுடைய கொலைதான் சாட்சி. ஆனால், மக்கள் மன்றம் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இளவரசனின் தந்தை இளங்கோ, தன் மகனின் மரணத்தை தற்கொலை என்கிற கோணத்திலேயே காவல்துறை விசாரித்து வருவதை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். “எனது மகனுக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் இல்லை. எனது மகன் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் குறித்தும் போலிசார் உரிய விசாரணை நடத்தவில்லை. இதுபோல இந்த வழக்கில் விசாரிக்க வேண்டிய பல்வேறு மர்மங்கள் இருக்கும்போது, இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது விசாரணையை திசைதிருப்பும் முயற்சியாகும். எனவே, இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும்'' என்று அவர் அண்மையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இளவரசன் மரணம் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.

பேராசிரியர் சந்திரசேகர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறப்பான முறையில் புலனாய்வு செய்த அதிகாரி. அவர் வழக்குரைஞர் சங்கரசுப்பு மகன் கொலை வழக்கில் புலனாய்வு செய்து இரண்டு ஆண்டுகளுக்குப்பின் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, அந்த வழக்கு குறித்த தனது கருத்துகளையும் புலனாய்வையும் வெளியிட்டார். அதன்பிறகு வழக்கின் போக்கே திசை மாறியது. இளவரசனுடைய வழக்கிலும் பேராசிரியர் சந்திரசேகரை புலனாய்வு செய்யக் கோரி திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், அரசு விரும்பினால் அவருடைய புலனாய்வை இவ்வழக்கில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறது. எனவே, தமிழக அரசு இதை ஏற்க முன்வர வேண்டும்.

தருமபுரி தலித் மக்களின் பொருள் ஆதாரத்தையும் உடைமைகளையும் வாழ்விடங்களையும் சாதி இந்துக்கள் சீர்குலைத்ததற்கு இழப்பீடாக, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பெயரில் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதோடு தங்களின் கடமை முடிந்து விட்டதாக அரசு கருதக்கூடாது. இதுபோன்ற கட்டடங்களாலும் பிற நிவாரணங்களாலும் மனித மாண்பைப் பெற்றுத்தர முடியாது.தருமபுரியில் தலித் மக்கள் மீது இழைக்கப்பட்ட வன்கொடுமைகளுக்கும், இளவரசனின் மரணத்திற்கும் இழப்பீடாக நீதியை மட்டுமே கோரி நிற்கிறார்கள் தலித் மக்கள்!

Pin It