கீற்றில் தேட...

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், முத்துக்காடு ஊராட்சியில் வேங்கைவயல் என்பது பட்டியலின பறையர் சாதி மக்களை மட்டுமே கொண்ட 26 குடும்பங்கள் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் வாழும் சிற்றூராகும். 2012.2022 நாளிலிருந்து ஒரே மாதிரியான நோய்த் தொற்றின் காரணமாக நான்கு குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர். மருத்துவரின் கூற்றுப்படி குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தபோது மலம் கலந்தது தெரியவருகிறது. இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே மற்றும் அதிகார வர்க்கங்கள் படை சூழ 26.12.2022 அன்று வேங்கைவயலுக்கு செல்கின்றனர். அப்போது அங்கு பட்டியல் சாதியினர் கோவிலுக்குள் செல்லமுடியாது, தேனீர் கடையில் தனிக்குவளை முறை ஒவ்வொரு சாதிக்கும் இருக்கிறது, பட்டியலின மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்படவில்லை, அவர்களது நிலங்கள், வரத்துவாரி ஆகியன பரிக்கப்பட்டுள்ளது என்பதை கூடுதலாக அறிகின்றனர்.

நிலை இவ்வாறிருக்க இறையூரில் உள்ள முக்குலத்தோர் பிரிவிலுள்ள அகமுடையர்களும் (சுமார் 30 குடும்பங்கள்), வலையர் எனும் முத்தரையர்களும் (சுமார் 270 குடும்பங்கள்) சேர்ந்து ‘நாங்களெல்லாம் ஒன்றாகத்தான் இருக்கிறோம். ஒரு சிக்கலும் இல்லை” என்று முத்தையா உள்பட கூறியுள்ளனர். இதனையறிந்த மாவட்ட ஆட்சியர் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்துச் செல்ல முயன்றபோது ‘ஏய் எச்சக்களா நாய்களா வெளியே போங்க” என்று சாமியாடி கூறிய சிங்கம்மாளையும் (முத்தரையர்), தேனீர் கடையில் தனிக்குவளை வைத்திருந்த மூக்கையா மற்றும் அவரது மனைவி மீனாட்சி (அகமுடையார்) ஆகியோர் 28.12.2022 அன்று கைது செய்யப்படுகின்றனர்.vengai vayal 377முத்தையா நீரில் மலம் கலத்தல்

வேங்கைவயல், இறையூர் இரண்டையும் பிரிப்பது ஒரு குறுக்கு சாலை மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி வேங்கைவயலில் உள்ளது. இத்தொட்டியை சுமார் ஒரு ஆண்டுகளுக்கு முன்னால் இயக்கியவர் சண்முகம். இவர் முத்தரையர். இவர் சுமார் 30 ஆண்டுகளாக வேங்கைவயலில் நீர்த் தேக்கத் தொட்டியின் ஆப்ரேட்டராக பணிபுரிந்துள்ளார். இவர் முத்தையாவின் உறவினர். இந்நிகழ்வின்போது அத்தொட்டியை முத்தையாவின் கைத்தடி காசிவிஸ்வநாதன் இயக்கியுள்ளார்.

பிரதமர் மோடி குடிநீர் குழாய் பதிப்பு வேங்கைவயலில் நடந்தபோது அதில் நடைபெறும் ஊழல்களை வேங்கைவயல் மக்களிடம் சண்முகம் அம்பலப்படுத்துகிறார். மேலும் வேங்கைவயல் மக்களுக்கு குடிநீர் முறையாக கொடுக்க வேண்டும் என முத்தையாவிடம் போராடுகிறார்?. ‘நீ இந்த ஊருக்குத் தலைவரா? நான் தலைவரா? ‘எனக் கடுப்பாகிய முத்தையா, சண்முகத்தை பணியிலிருந்து நீக்குகிறார். சண்முகம் மீண்டும் அப்பணியைப் பெற அவர் சார்ந்திருக்கும் சங்கம் மூலம் போராடி வருகிறார். அவரது போராட்டத்திற்கு வேங்கைவயல் மக்கள் துணை நிற்கின்றனர். இவை ஒருபுறமிருக்க, கிராம சபைக் கூட்டத்தில் வேங்கைவயல் மக்களுக்கு 2 இலட்சம் குடிநீர் வாங்கியதாக முத்தையா பொய்யாக கணக்கு எழுதி வைத்திருந்ததை எதிர்த்து வேங்கைவயல் மக்கள் கணக்கு கேட்கின்றனர். இவ்விரண்டு நிகழ்வுகளும் முத்தையா குடிநீரில் மலம் கலக்க உடனடிக் காரணமாக அமைகின்றன. தொலைக்காட்சி செய்திகள், சமூக வலைதளங்கள், வெவ்வேறு சாதி மக்களிடையே கண்ட பேட்டிகள், காவல் துறையின் ஒரு சார்பான விசாரணை தோரணைகள், சுற்றுப் புறச்சாட்சிகள் ஆகியவற்றினை பகுத்தும் தொகுத்தும் ஆராய்ந்தால் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்தது ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவின் கணவர் முத்தையா கும்பல் என்பதை உறுதிபடுத்துகிறது.

தி.மு.க. அரசின் கபட நாடகம்

முத்தையா முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்துள்ளார். அடுத்து முத்துக்காடு ஊராட்சி பெண்களுக்கு மாற்றப்பட்டதால் அவரது மனைவியை நிறுத்தி வெற்றி பெறச் செய்துள்ளார். இந்தியா முழுமையிலும் பணம் தான் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்பதை சொல்ல வேண்டியதில்லை. முத்தையா அ.தி.மு.க.விலும் முத்தரையர் சங்கத்திலும் உள்ளார். முத்தரையர் சங்கம் பாதிக்கப்பட்ட சண்முகத்திற்காக நிற்கவில்லை. ஏனெனில் ஏழைகளுக்காக எந்த சாதிச் சங்கமும் நிற்க முடிவதில்லை.

26.12.2022-க்குப் பிறகு இறையூர், வேங்கைவயலுக்கு உண்மையைக் கண்டறியச் சென்ற எல்லா கட்சிகளுக்கும், எல்லா ஊடகங்களுக்கும், எல்லா சமூக ஆர்வலர்களுக்கும் உறுதியாக தெரியும் வேங்கைவயல் மக்கள் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கவில்லை என்று. ஆனால் திராவிட மாடல் தி.மு.க. அரசும், அதிகாரவர்க்கமும் வேங்கைவயல் மக்களது தலையில் பழியை போடும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் முத்தையாவைவிட மிகக் கொடூரமானர்கள், கேவலமானவர்கள். இவர்கள் தமிழ்நாட்டு மக்களால் தண்டிக்கபட வேண்டும்.

26.12.2022 அன்று மலம் கலந்த குடிநீர் மட்டுமே சேகரிக்கப்பட்டது. பிறகு நான்கு நாட்கள் கழித்து குப்பைத் தொட்டியிலிருந்து எடுக்;கப்பட்ட மல மாதிரிகளைத்தான் டி.என்.ஏ சோதனை செய்கிறார்கள். அறிவியல்படி வேங்கைவயல் மக்களை குற்றவாளியாக காட்ட இருக்கிறார்கள். தமிழ் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது மலம் யாருடையது என்பதல்ல? அந்த மலத்தை குடிநீர்த் தொட்டியில் அள்ளிப்போட்டது யார்? என்பதே. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கிய போது அதனை கேலி செய்த மாணவர் இராஜேந்திரன் கருணாநிதியின் காவல் துறையால் கொல்லப்பட்டார். பிறகு அவரது பெற்றோர்களை துன்புறுத்தி தனது மகன் இல்;லையென காவல் துறை எழுதி வாங்கிக் கொண்டது. இப்படிப்பட்ட காவல் துறை வேங்கைவயலில் எதையும் செய்யலாம்

திராவிட மாடல் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இருவரது ஆட்சிக் காலங்களில் பட்டியலின மக்களை காவல் துறை மூலம் தனிமைப் படுத்தி ஒடுக்கியதை (கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, தீ வைப்பு போன்றவை அடங்கும்) பட்டியலிட்டால் இச்சிறு கட்டுரை போதாது. ஐந்திணை மக்கள் கட்சி சந்திரபோஸ் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விடுத்த விண்ணப்பத்தில் 1995 முதல் 1997 வரையிலும் 672 தீண்டாமை வன்முறை நடந்ததாக குறிப்பிடுகிறார். இதில் 95 பேர் இறந்துள்ளனர். காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 49 பேர். இதனால் தனியார் மற்றும் பொது சொத்துக்கள் 109 கோடி இழப்பாகும்.

2022 டிசம்பர் 26 ஆம் நாளிலிருந்து வேங்கை வயலுக்குச் சென்ற அதிகார வர்க்கம் இந்நாள் வரை மலம் கலந்தது யார் என்று தெரியவில்லை என்கிறது. அதே நேரத்தில் உலகை ஏமாற்ற பல்வேறு சதித் திட்டங்களை வேங்கைவயலில் நிகழ்த்துகிறது. தமிழ்நாட்டு சட்ட அமைச்சர் மாண்புமிகு ரகுபதி ‘எல்லோரும் ஒன்னாதான் இருக்காங்க, இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை, இங்கு தீண்டாமை இருப்பதாக சித்தரிக்கப்படுகிறது” என்கிறார். பொங்கல் நேரத்தில் அவ்வூரில் அரசு சமத்துவப் பொங்கல் வைத்தது. அப்பொங்கலில் பிற்படுத்தப்பட்ட மக்கள் யாரும் பங்கேற்கவில்லை. பட்டிலியன மக்கள் மூன்றுமுறை கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். மூன்று முறையும் கோவில் கழுவி விடப்பட்டுள்ளது. இதற்காக சட்ட அமைச்சர் வெட்கப்பட வேண்டும்.

காவல் துறையின் அத்துமீறல்

2022 டிசம்பர் 26க்குப் பிறகு குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்தவர்களைக் கண்டு பிடிக்க வேங்கைவயலுக்குச் சென்ற புதுக்கோட்டை காவல் துறையும், சி.பி.சி.ஐ.டி. போலீசும் வேங்கைவயல் மக்களை குற்றவாளியாக காட்டும் முயற்சியில் விடாப்பிடியாக ஈடுபட்டுள்ளனர். பிடித்த முயலுக்கு மூன்று கால் என காட்டவேண்டும். எனவே, வேங்கைவயல் மக்களிடம் வழக்கை ஏற்றுக் கொள்ளச் சொல்லி ஆசை காட்டுவது, அடித்து உதைப்பது, வேறு வேறு வழிகளில் அச்சுறுத்துவது போன்ற கேடுகெட்ட முறைகளை கையாண்டுள்ளனர். மேலும் அம்மக்களையே விசாரணை என்ற பெயரில் வேலைக்கு செல்ல விடாமல் தடுத்து கீழ்படிய வைக்கும் சூழலை ஏற்படுத்தி உள்ளனர். ஆனால் அம்மக்களோ வாச்சாத்தி மக்கள் போல் உறுதியாக நிற்கின்றனர். தமிழ்நாட்டு காவல் துறையில் இச்செயல் எந்த நாகரீக மனிதனையும் வெட்கப்பட வைக்கும்.

தி.மு.க., பி.ஜே.பி ஆகியவற்றின் கூட்டுச் சதி

இந்தியாவை 1857 க்கு முன்னால் ஆண்ட கிழக்கிந்தியக் கம்பெனியும், அதன் பிறகு 1947 வரை ஆண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் மக்களிடையே நிலவுகின்ற சாதி, மத, மொழி முரண்பாடுகளை தங்களது ஆதிக்கத்திற்காக கையாண்டது. அதே போன்ற பிரித்தாளும் கொள்கையை இந்திய டெல்லி ஆண்;டைகளும் அவர்களது எடுபிடிகளான தி.மு.க., அ.தி.மு.க. அரசுகளும் கையாண்டு வருகின்றன. டெல்லி ஆண்டைகளிடம் விசுவாசம் காட்டுவதில் பெரும் போட்டியே தி.மு.க., அ.தி.மு.க. இடையே நிலவுகிறது. தி.மு.க., அ.தி.மு.க வினர் தங்களது எடுபிடி நிலையை எண்ணி வெட்கப்பட்டதில்லை. அ.தி.மு.க. கொள்ளைக் கும்பல் பி.ஜே.பி. கும்பலிடம் சரணடைந்து விட்டது. தி.மு.க. , பி.ஜே.பி. மோடிக் கும்பலை எதிர்ப்பதாக நாடகமாடுகிறது.

1991 க்குப் பிறகு தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற பெயரில் தொழிற்துறை, வேளாண்துறை, சேவைத்துறை அனைத்தும் உள்நாட்டு பன்னாட்டு பெரும் கார்பரேட் முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளர்கள், நடு;த்தர வர்க்கங்கள் வீதிக்கு வீசப்படுகின்றனர். மேலும் இந்தியாவில் பல்வேறு மொழிகளைப் பேசும்; தேசிய இனங்கள் தங்களது அரசு உரிமைக்காக அதாவது இறையாண்மைக்காகப் போராடி வருகின்றன. இச்சிக்கல்களை இந்திய ஆளும் வர்க்கங்கள் ஜனநாயக முறையில் தீர்க்கப்போவதில்லை. ஆகையினால் இவை பெரும் கலவரங்களாக வெடிக்கின்றன. இதனை வடகிழக்கு இந்தியாவில் காணலாம்.

இந்நிலையில் மோடி அரசானது எல்லா ஜனநாயக உரிமைகளையும் காலில் போட்டு மிதித்து உள்நாட்டு, பன்னாட்டு கார்பரேட் முதலாளிகளுக்கே ஆட்சி நடத்துகிறது. அதுவும் குஜராத் வணிக முதலாளிகளான அதானி, அம்பானிகளுக்காகவே ஆட்சி நடத்துகிறது. அமெரிக்க இண்டன்பர்க் அறிக்கை மோடிக் கும்பல் அதானியின் பங்குச் சந்தை திருட்டில் ஈடுபட துணை நின்றதையும், இங்கிலாந்து பி.பி.சி.ஆவணப்படம் மோடியே குஜராத் இஸ்லாமிய இனக்கொலைக்கு திட்டமிட்டு தலைமையேற்று வழிநடத்தியதையும் அம்பலப்படுத்தியது. இதிலிருந்து மக்களது கவனங்களை திசை திருப்பவே வட இந்தியாவில் மதக் கலவரங்களை மோடிக் கும்பல் நடத்துகிறது. தென்னிந்தியாவில் அதற்கான வாய்ப்பின்மையால் சாதிக் கலவரங்களை உருவாக்கத் திட்டமிடுகிறது. இதற்கு எடுபிடி தி.மு.க அரசு துணை போகிறது. தி.மு.க.-வின் திராவிட மாடல், சமூக நீதி, பாசிச எதிர்ப்பு என்பதெல்லாம் ஸ்டாலின் வாய்ச்சவடால் என்பதை வேங்கைவயல் காட்டுகிறது.

திராவிட மாடல் தி.மு.க. அரசே!

 வேங்கைவயல் மலம் டி.என்.எ. சோதனை பெயரில் வழக்கை திசை திருப்பாதே !

 தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே சாதி மோதலை உருவாக்காதே !

 நீர்த் தேக்கத் தொட்டியில் மலம் கலந்த முத்தையாவை கைது செய் !

 முத்துக்காடு ஊராட்சி மன்றக் கணக்கை தணிக்கை செய் ! முறைகேடுகளைக் கண்டுபடி !

 பட்டியலின மக்கள் உழுது பயிட்ட சுமார் 23 ஏக்கர் நிலங்களை மீட்டு அம்மக்களுக்கே உரிமையாக்கு ! அவ்வூரிலுள்ள இனாம், பினாமி நிலங்களைக் கைப்பற்றி இறையூரிலுள்ள முத்தரையர், அகமுடையர் ஆகிய ஏழை, கூலி விவசாயிகளுக்கு வழங்கு!

 அய்யனார் கோவிலை அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வா ! அதற்கான சட்டமியற்று!

- பாரி