dhanush karnan copy copyதிக்கெட்டும் திமிறி எழும் போர்ப்பறை இசையில், "கண்டா வரச் சொல்லுங்க" பாடலுடன், கர்ணன் திரைக்காவியம் ஆரம்பமாகிறது. பாடலைக் காட்சிப்படுத்தும் போது, ஒரு ஓவியன் தீப்பந்தத்தைத் தூரிகையாக்கிக், கதாநாயகன் படத்தைக் கருமைப் படர்ந்த ஓவியமாய் வரைந்து முடிப்பது, அழகியல் உணர்திறனின் உச்சம்.

இப்பாடலைப் படத்தின் ஊடும் பாவுமாய் இருக்கும் கதாபாத்திரங்களான சிறியோர் முதல் முதியோர் வரை உச்சரிப்பதுக் கவினுறு காட்சி. இவர்களோடு பார்வையாளர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். பார்வையாளர்களுடைய கர ஒலியின் அதிர்வலையில் திரையரங்கம் திக்குமுக்காடுகிறது.

பாடலின் போதுதீச்சட்டி முன் ஒரு பெண் தலைவிரி கோலமாய் ஆடும் ஆட்டம் எல்லோரையும் பிரமிக்க வைக்கிறது. ஆரம்பமே வெறித்தனமான அமர்க்களந் தான்.

கதைக்களம்:

தொல்பொருள் அகழாய்வு நடந்த ஆதிச்சநல்லூர் (தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளது) பறம்பிற்கு அருகே புளியங்குளம் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்துக்குப்போற்றுதலுக்குரியவரலாற்றுச் சிறப்புண்டு.

ஆம்... உலக நாகரிகத்தின் தோற்றுவாயாகப்புளியங்கும் கிராமம் இருந்திருக்குமோ? என்ற ஐயப்பாடு எழுவதாகத் தொல்லியல் துறையினரே கூறினர். ஆதிச்சநல்லூர் – புளியங்குளம் கிராமங்களுக்கு இடையே உள்ள 144 ஏக்கர் நிலத்தைத் தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

தொல்லியல் துறை நடத்திய அகழ்வாராய்ச்சியில் 2400 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழியில் தமிழ் எழுத்துகள், நெல், உமி இத்துடன் போர்க் கருவிகள் கிடைத்துள்ளன. மேலும் இரும்பு, பொன் ஆகிய உலோகங்களின் பயன்பாடும் கிடைத்துள்ளன.

இத்தகைய வரலாற்றுத் தொன்மை மிகுந்த புளியங்குளம் கிராமமே கர்ணன் படத்தின் கதைக்களம். இயக்குநர் மாரி செல்வராஜின் பூர்வீகக் கிராமம் புளியங்குளம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கதையின் மையக்கரு:

புளியங்குளம் கிராமம் திருநெல்வேலி – திருச்செந்தூர் முக்கிய சாலையில் இருந்து சுமார் ஒன்றரைக் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஊரில் இருந்து முக்கிய சாலைக்கு வந்தால் அங்கு பேருந்து நிறுத்தம் கிடையாது. பேருந்து நிறுத்தம் கூட ஆதிக்கத்தின் குறியீடாக இருந்த காலகட்டம் அது.

புளியங்குளம் கிராமத்திற்கான பேருந்து நிறுத்தம் வேண்டி அற வழியில், அமைதியான முறையில், சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டுப் பல முறை அவ்வூர் மக்கள் போராடியும் தீர்வு கிட்டவில்லை. அம்மக்களின் மனது எரிமலையாய் நாளும் குமுறியது. ஒரு நாள் வெடித்துக் கிளம்பியது. 1977 ஆம் ஆண்டில் ஒரு தனியார் பேருந்தை (ஜெபமணி) அடித்து நொறுக்கிச் சேதம் ஏற்படுத்துகின்றனர்.

இதன் பின்னர் வேறொரு நிகழ்வில் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை மக்களிடம் கொடுத்த வாக்கை மீறிப் போலீசார் கைது செய்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அவ்வூர் மக்கள் “செய்துங்கநல்லூர்” காவல் நிலையத்தை அடித்து நொறுக்கி அவரை மீட்டுச் செல்கின்றனர். இந்த இரண்டு உண்மை நிகழ்வுகளே கர்ணன் திரைக்காவியத்தின் மையக்கரு ஆகும்.

பொடியன்குளம் பெயர்க்காரணம்:

திரையில் வரும் கிராமத்திற்குப் “பொடியன்குளம்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தைப் பூடகமாக இயக்குநர் உரைக்கிறார். நிற்காமல் செல்லும் பேருந்து மீது முதல் கல் வீசித் தாக்குதல் நடத்துகிறான் ஒரு பொடியன் (சிறுவன்). இதைப் பார்த்து வீறு கொண்ட இளைஞர்கள் அந்த பேருந்தை அடித்து நொறுக்கி முழுமையாகச் சேதப்படுத்துகின்றனர்.

இதனைத் தொடர்ந்து எஸ்.பி தலைமையில் போலீஸ் படை பொடியன்குளம் கிராமத்திற்கு விரைகிறது. அக்கிராமத்தை முற்றுகையிட்டுச் சூறையாடக் காத்திருக்கிறது.

இதைக்கண்டு கிஞ்சித்தும் அச்சமடையாத அவ்வூர்ப் பொடியன்கள் (சிறுவர்கள்) இப்போது போலீசார் மீது கல்வீசி முதற் தாக்குதல் நடத்துகின்றனர். இதனைத் தொடர்ந்து ஊரே போலீசார் மீது தாக்குதல் நடத்துகிறது. இதனைத் தொடர்ந்து போலீசார் ஊர் மக்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்தி ஊரையே சூறையாடுகின்றனர்.

ஊருக்கு ஒரு பிரச்சனை என்றால் முதற் தாக்குதல் நடத்துவது பொடியன்களே என்பதால் அவ்வூர்க்குப் “பொடியன்குளம்” என்று இயக்குநர் பொருத்தமாகப் பெயர் வைத்துள்ளார். இதே போன்று சம காலத்தில் 1995 ஆம் ஆண்டு கொடியங்குளம் கிராமத்தில் போலீசாரின் கொடுந்தாக்குதல்நிகழ்ந்தேறியது. எனவே வாழுந் தலைமுறை பொடியன்குளத்தைக் கொடியங்குளத்தோடு ஒப்பிட்டு உரையாடுகிறது.

மகாபாரதக் கதாபாத்திரங்கள்:

கர்ணன் திரைக்காவியத்தின் கதாபாத்திரப் பெயர்கள் பெரும்பாலும் மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களாகவே காணப்படுகின்றன. இதற்கு ஒரு காரணம் உண்டு. இன்றளவும் புளியங்குளம் கிராமத்தில் வாழ்வோரின் பெயர்கள் மகாபாரதக் கதாபாத்திரப் பெயர்களாகவே காணப்படுகின்றன.

புளியங்குளம் கிராமத்தை ஒட்டியுள்ள தாமிரபரணி ஆற்றங் கரையில் இம்மக்களுக்குச் சொந்தமான “பாண்டியராஜா” கோயில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரைமாதம் கடைசி வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய ஐந்து நாட்கள் இக்கோயிலில் திருவிழா விமரிசையாக நடக்கும். இத்திருவிழாவில் மகாபாரதப் போர்க்களக் காட்சிகள் பெருஞ்சிறப்புடன் நிகழ்த்தப்படும். எனவே தான் அவ்வூரில் மகாபாரதக் கதாபாத்திரத்தின் பெயர்கள் பண்டைய காலந் தொட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளன.

ஊர்க்குடும்பன்:

ஒரு பிரச்சனை என்று பேசும் போது ஊர்க்குடும்பன் தலைப்பாகையுடன் அமர்ந்து பதில் சொல்வார் என்பது கிராம நடைமுறை. கர்ணன் திரைக்காவியத்தில் எஸ்.பி ஊருக்குள் வந்து விசாரிக்கும் போது தலைப்பாகையுடன் இருக்கும் ஊர்க்குடும்பன் பதில் சொல்கிறார்.

அப்போது எஸ்.பி. தலைப்பாகையை எடுக்க மாட்டாயோ? என்று கோபத்தில் கேட்கும்போது, அவர் ஊர்க்குடும்பர், தலைப்பாகைக் கட்டிப் பதில் சொல்வது தான் நடைமுறை என்று யோகிபாபு கூறுவது ஆயிரங்காலத்து நடைமுறையைப் பறைசாற்றும் உரையாடல் ஆகும்.

தமிழ்க்குடிகளிடம் முதலில் தோன்றியது ஊர்க்குடும்பு எனும் குடும்பிய ஆட்சி முறையே ஆகும். இதற்கான சான்று காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டில் காணப்படுகிறது. இதனை அடியொற்றியே புளியங்குளம் கிராமத்தில் இன்றளவும் ஊர்க்குடும்பு முறை நடைமுறையில் உள்ளது.

ஊர்க்குடும்பன் என்பவர் ஊரின் தலைவர் ஆவார். எந்த ஒரு பிரச்சனைக்கும் ஊர்க்குடும்பன் தலைமையில் ஊர்க்கூட்டம் நடத்தித் தீர்வு காணப்படும். இன்றும் இவ்வூர் மக்கள் காவல் நிலையம் சென்று புகார் கொடுப்பதில்லை.

சில நேரம் இதையுந் தாண்டி யாரேனும் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தால், ஊர்க்குடும்பன் அனுமதி பெற்றே, போலீசார் ஊருக்குள் நுழைந்து விசாரணை செய்ய முடியும். இது தான் இன்றைய நடைமுறை. இதுவே ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பஞ்சாயத்து ஆட்சிமுறை. இன்றைய உள்ளாட்சி அமைப்பிற்கு அடிப்படை.

இராஜ மேளம்:

வாள் கொண்டு கர்ணன் ஒரே வெட்டில் மீனை இரு துண்டாக்கியவுடன் ஊரே மகிழ்ச்சிப் பெருக்கில் ஆடித் திளைக்கிறது. அப்போது பின்னணி இசையாக இராஜ மேளம் முழங்குகிறது. அது அம்மக்களின் வீர நிலைப் பண்பாட்டை வெளிப்படுத்தும் கொண்டாட்டமாய் ஒலிக்கிறது.

ஆனால் நடுகல் வழிபாட்டு வழக்காற்றில் சுடலைமாடசாமி நடுநிசியில் வேட்டைக்குப் போகும் முன் சாமி ஆடுபவர்களின் அருள் பெருக்கமடைய அடிக்கப்படும் இராஜ மேளம் இன்றும் நடைமுறையில் உள்ளது. அதுவே இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

திரைக் கதாபாத்திரங்கள்:

விரல் விட்டு எண்ணக்கூடிய நடிகர்களே இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். ஆனால் புளியங்குளம் கிராமமே இதில் நடித்துள்ளது. சிறுவர் கூட்டம், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள், முதியோர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் நடித்துக் கதைக் களத்தைச் செழுமைப் படுத்துகின்றனர்.

இயல்பாகவே அந்தந்தத் தளத்தில் உள்ளோர் அதற்கான கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதால் கற்பனைக்கோ, மிகைப்படுதலுக்கோ இடமில்லை. புளியங்குளத்தில் உள்ள உண்மையான கபடிக் குழுவே அதில் நடித்துள்ளது.

கபடிப்போட்டியின் நடுவராக நடித்துள்ள முருகன் ஏற்கெனவே இப்பகுதியில் நடைபெறும் கபடிப் போட்டிகளில் நடுவராகப் பங்கேற்பவர் ஆவார்.

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு வாலிபனுக்கு ஒரு கிழவன் கூட்டாளியாக இருப்பது இன்றும் கண்கூடு. இப்படத்தில் வாலிபன் கர்ணனும், கிழவன் ஏமராஜனும் கூட்டாளியாக இறுதிவரை உலா வந்து களம் காண்பது கூடுதல் சிறப்பு.

ஏமராஜனாக நடித்திருக்கும் மலையாள நடிகர் லால் உடல் மொழியை வெளிப்படுத்தும் விதம், உணர்வுகளை வடிக்கும் விதம், கவர்ந்திழுக்கும் கட்டைக் குரல், தெளிவான பேச்சு எல்லாமே மலைப்பூட்டுகிறது. விருது பெரும் தகுதி அவரிடம் நிறைந்து கிடக்கிறது. ஆளுமைமிகு நடிப்புத் திறனால் தனுஷ் வேறு ஒரு தளத்தை நோக்கிக் காலூன்றுகிறார்.

இவ்வாறு ஒவ்வொருவரின் நடிப்பையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஒற்றை வரியில் கூறுவதென்றால் அனைவரின் நடிப்பும் இயல்பாய் உள்ளது. இதற்கு மேல் எதுவும் தேவையில்லை என்ற நிலையில் அவர்களின் நடிப்பு நிறைவடைகிறது.

மின்னும் கலைஞர்கள்:

புளியங்குளம் மக்களின் சமூகப் பண்பாட்டு நெறிமுறைகளை உள்ளடக்கிய வாழ்வியலின் பொருட் பொதிவை, இசையில் பொருத்திக் காட்டிய இசைஅமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களைப் புகழ்ச்சியின் உச்சியில் வைத்துப் பார்வையாளர்கள் கொண்டாடுகின்றனர்.

ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், நடிகர்கள் மீது ஒளியை வழிய விடவில்லை. காட்சி மொழியில் கவிதை பேசுகிறார். இவரது ஒளியமைப்பு புளியங்குளம் கிராம மக்களின் வாழ்வியலை மனத்தால் உள்வாங்கித் திரைக் கதைக்குள் பார்வையாளனைக் கூட்டிச் செல்கிறது.

ஒரு பிரம்மாண்டமான கிராமத்தைக் கலை இயக்குநர் இராமலிங்கம் உயிர்ப்புடன் உருவாகியுள்ளார்.

கண்டா வரச் சொல்லுங்க பாடலில், போர்ப்பறையின் தாள உச்சத்தில், மென்மையான நடன அசைவுகளின் வடிவத்தால், நடன இயக்குநர் சாண்டி, நடனக் கலையின் நுட்பத்தைப் புதுப்பிக்கிறார்.”போராடடா ஒரு வாளேந்தேடா” என்ற பாடல் பின்னணி இசையில் ஒலிக்கும் போது கதாநாயகி ரஜிஷா ஆடும் ஆட்டம் “சாண்டி ஸ்பெஷல்.”

பார்வையாளர்களைக் கேள்விக்குள்ளாகும் குறியீடுகளாய் கழுதை, குதிரை, கன்னி தெய்வம் ஆகியவை உள்ளன. கால் கட்டப்பட்டக் குதிரை ஒடுக்குதலின் குறியீடாகவும், அடங்காத ஆளுமையின் குறியீடாகக் குதிரையும்,திருமணதிற்கு முன் இறக்கும் பெண்களை வழிபடும் கன்னி தெய்வ வழிபாடு வலிமையின் குறியீடாகவும் இப்படத்தில் வலம் வருகின்றன.

வளைவான வெட்டும் பரப்புடைய அரிவாளின் பயன்பாட்டைக் கூட இயக்குநர் தரம் பிரித்துக் காட்டுகிறார். தேங்காய் உடைக்கத் தனி அரிவாள், முள் விறகு தரிக்கத் தனி அரிவாள்.

இன்றும் கிராமங்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் “கிடா” வெட்டுவதற்குப் பயன்படுத்தும் அரிவாளை வேறு எதற்கும் பயன்படுத்த மாட்டார்கள் என்பது நடைமுறை.

தடம் பதித்த வசனங்கள்:

கருத்துச் செறிவுமிக்க வசனங்கள் படம் நெடுக பார்வையாளர்கள் மனதில் தடம் பதிக்கின்றன. அவற்றுள் சில....

“நம்மைப் போல் அவர்கள் இருக்க வேண்டாம் அவர்களாவது பறந்து போகட்டும்” என்று இளைய தலைமுறைக்காகக் கர்ணன் பெரியோரிடம் வாதாடுவது, கர்ணன் மீது திரௌபதைக் காதல் கொள்வதை ஏமராஜன் சொல்லும் போது

“என்னைப் பார்த்து யாருக்காவது உலை கொதிக்குமா”என்று கர்ணன் பதிலுரைப்பது,

திருமண வயதைக் கடந்தும் திருமணமாகாத அக்கா தனது தம்பி கர்ணன் காதல் வயப்பட்டதை அறிந்து துடித்துப்போய்“ எவங்கூடவும் ஓடிப் போகத் தெரியாமாலா” இவ்வளவு நாள் இருக்கேன் என்று கூறுவது,

“பத்து ஆண்டிற்கு முன் என் தங்கை இறந்தாள் இப்படியே அடங்கிப்போனா ஏறி மேய்வாங்க”

“அடுத்தவங்க காலப்பிடிச்சா அப்படியே நசுங்கிப் போயிடுவோம்” என்று கர்ணன் சமூகக் கள நிலவரத்தை எடுத்துரைக்கும்போது,

“நிமிர்ந்து பார்த்துட்டோம், இனி குனிய மாட்டோம்” என்று எஸ்.பி.யிடம் அழுத்தம் திருத்தமாக உறுதிபடக் கர்ணன் கூறுவது, எல்லாமே அருமை பெருமையான கிராமத்து இயல்பு நிறைந்த உரையாடல்கள்.

நாயக பிம்பம்:

கதாநாயகன் மீன் வெட்டிய கொண்டாட்டத்தில் படம் ஆரம்பிக்கிறது. கடைசிக் காட்சியில் கதாநாயகன் எஸ்.பி.யின் தலையை அறுக்கும் வன்முறையில் நிறைவுறுகிறது.

திரண்டெழுகின்ற சமூகத்தால்,அநீதிகளுக்கெதிராய்த் தீர்வு காண முடியும் என்பதே கர்ணன் சொல்லும் சேதி. உண்மையிலேயே கர்ணன் என்ற பிம்பம் புளியங்குளம் கிராமத்தில் இல்லை. ஆனால் அங்குள்ள இளைஞர்கள் ஒவ்வொரும் கர்ணன் தான் என்பதே வெளிப்படை.

- ச.மோகன்