கவிஞர் பாலா மரணச் செய்தி என்னைத் திகிலடையச் செய்துவிட்டது. திருவண்ணாமலையில் தமுஎகச-வும், சாகித்ய அகாடெமியும் சேர்ந்து நடத்திய மூன்றுநாள் இலக்கிய முகாமில் ஆரோக்கியமான சுறுசுறுப்புடன் அலைந்து உலவிக் கொண்டிருந்தார். சாகித்ய அகாடமியின் உயர் மட்டக் குழுவின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக இருந்தார். மூன்று நாட்களும் என்னுடன் நிறையப் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு அவர் மீது எப்போதும் ஒருபாசம் உண்டு. மரியாதை உண்டு.

புதுக்கோட்டை மீரா பதிப்பகம் சுந்தர் அவர்கள் எனது 'சிபிகள்' தொகுப்பை முதன்முதலாக வெளியிட முன்வந்த போது அதற்கு மிகுந்த பெருந்தன்மையுடன் அணிந்துரை வழங்கினார். அதற்கு 'எடைக்கல்' என்றொரு புதிய தலைப்பும் தந்திருந்தார் பாலா.

'உரத்து முழங்குகிறவர் என்ற முன்முடிவுடன் கதைகளை வாசித்துப் பார்த்தேன். உணர்ந்து முழங்குகிறவர்தான் என்று புரிந்து கொண்டேன்' என்று வெளிப்படையாக வெள்ளை மனதுடன் எழுதியிருந்தார். புதுக்கோட்டையில் இருந்தபோது, தமுஎகச தோழர்கள் கந்தர்வன், ஜீவி, முத்துநிலவன், தங்கம்மூர்த்தி போன்ற இலக்கியவாதிகளுடன் நேசமான நெருக்கம் கொண்டிருந்தார். தோழர் எஸ்.ஏ.பெருமாள் போன்ற தலைவர்களுடன் மதிப்பான உறவு பூண்டிருந்தார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பணியாற்றுகிற காலத்தில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுடன் நெருங்கிய உறவு வைத்திருந்தார். தமுஎகச நடத்திய முக்கிய நிகழ்வுகளிலெல்லாம் பங்கெடுத்துக் கொள்வார்.

சின்ன உருவம். வட்ட முகம். வழுக்கைத் தலை. முழுக்கைச் சட்டையை இன்பண்ணியிருப்பார். கொத்து மீசையும், சத்தமில்லாத மென்மைப் புன்னகையும் அவரது அடையாளம். குரலிலும் வார்த்தையிலும் மென்மை இருக்கும். கொண்ட கருத்தில் உறுதியாக இருப்பார்.

வானம்பாடி யுகத்துக் கவிஞர். கவிஞர் மீரா, அப்துல் ரகுமான், சிற்பி பாலசுப்பிரமணியம், மு.மேத்தா போன்ற பெரும் ஆளுமைகளுடன் சமதையாக இயங்கி வந்தவர்.

இவரது 'சரர்ரியலிசம்' என்ற கட்டுரை நூல் ஆழத்தினாலும், அடர்த்தியினாலும், ஒளிமிக்க தெளிவினாலும் இலக்கிய உலகில் ஆழ்ந்த அதிர்வுகளை நிகழ்த்தி, அழுத்தமான முத்திரை பதித்தது.

அதே போல, 'புதுக் கவிதைஒரு புதுப்பார்வை' என்ற கட்டுரை நூலும் மிகுந்த ஆரோக்கியமான அதிர்வையும், விளைவையும் நிகழ்த்தியது.

'நினைவில் தப்பிய முகம்' 'இன்னொரு மனிதர்கள்' 'வரவேற்பறைகளும் திண்ணைகளும்' ஆகிய அவரது மூன்று கவிதைத் தொகுப்புகள் அவரது படைப்பாற்றலையும் அவரையும் இலக்கிய உலகின் நீங்கா இடத்தில் நிலைக்க வைக்கும்.

ஆங்கிலத் துறைப் பேராசிரியராக பணியாற்றினாலும், தமிழிலக்கியச் சூழலில் தடம்பதித்த கவிஞர். சுயபார்வைகளும், தனித்துவ மொழிநடையும், அழகியல் வெளிப்பாடும் கொண்டவர். சகல பகுதி இலக்கிய முகாமினரின் பேரன்பைப் பெற்றிருந்த அவரை, மரணமும், பேரன்புடன் அரவணைத்துக் கொண்டது. மரணத்தை கவிஞன் எப்போதும் தோற்கடிப்பான்! பாலாவும், அவரது படைப்புகளின் வாயிலாக மரணம் கடந்து வாழ்கிறார்.

- மேலாண்மை பொன்னுச்சாமி