கல்வியும் சமூகமும் நவீன வாழ்வியலில் பிரிக்க முடியா தவை. அறியாமை, மூட நம்பிக்கை ஆகியவற்றை வேரறுக்க, கல்வி என்னும் கத்தியைப் பயன்படுத்த வேண்டும். எழுதப்படும் இலக்கியங்களும், சமூக மாற்றத்திற்கான ஆக்கங்களும் படிக்கப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் இருக்குமானால் அது சமநிலை சமூகத்தை உருவாக்கி இருக்கும். கல்வியறிவைப் பெறுவதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கும் தலித் சமூகம், அதை சமூக மாற்றத்திற்காகவும் பயன்படுத்த வேண்டும் என அழுத்தமாக தன் எழுத்துகள் மூலம் சொல்கிறார் ஜெனிபர். திண்டுக்கல்லில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் ஜெனிபருடைய கல்வியியல் சிந்தனைகளும், தலித் பெண்ணியக் கோட்பாடுகளும், தலித் குழந்தைகளின் மீதான அக்கறையும் அவருடைய எழுத்துகளில் நிறைந்திருப்பதால், படைப்பாக்க வெளியைக் கடந்தும் வாசிப்போரின் கவனத்தை ஈர்க்கிறார். ஜெனிபர் எழுதத் தொடங்கியது.
எட்டாம் வகுப்பு படிக்கும்போது. அப்போதே அவர் சிறுகதைகளை எழுதி இருக்கிறார். பெண்ணடிமைத்தனத்தையும், வரதட்சனைக் கொடுமைகளையும் அவர் கதைகளில் சித்தரித்திருக்கிறார். படிக்கும் காலங்களில் சாதி இந்து மாணவிகளிடமிருந்த வேறுபட்ட போக்கு அவரை மேலும் சாதிக்கு எதிரான செயல்பாட்டில் கூர்மைப்படுத்தியிருக்கிறது. பத்தாம் வகுப்பு வரை மறைக்கல்வியில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற ஜெனிபர், மிகச்சிறந்த பேச்சாளர். திண்டுக்கல் பகுதியில் பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக, சமூக சிக்கல்களை முன்னெடுப்பதில் முன்னணியில் இருக்கிறார். பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் கற்பிக்கப்பட்ட மதம், கடவுள், சமூக அகநிலை இவற்றுக்கு எதிராகப் பேசியதால் அனை வராலும் வெறுக்கப்பட்டிருக்கிறார். ஆனாலும் தன் நியாயங்களை எடுத்துக் கூறி சூழலை வென்றிருக்கிறார்.
எறையூர் ஆலய சாதிப் பிரச்சினை குறித்து திண்டுக்கல்லில் ஒரு தலித் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, அந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு துண்டறிக்கைகளை அச்சிட்டுள்ளார். அதில் அவர் எழுதியிருந்த செய்திகளையும், எழுத்தின் கூர்மையையும் கண்டு எழுத்தாளர் சிவகாமி அளித்த ஊக்கம்தான் அவரை தொடர்ந்து எழுத வைக்கிறது. எழுதுவதற்காக தான் தண்டிக்கப்படவேண்டும். அதுதான் தனக்கு கிடைக்கும் வெகுமதி என்று கூறும் ஜெனிபர், "சரியானவற்றை சொல்லுவதால் தப்பாக அறியப்படுகிறேன்' என்கிறார். தலித்தியத்திலிருந்து உலகத்தைக் காண்பதும்; உலகத்திலிருந்து தலித்தியத்தைக் காண்பதும் அவருடைய பார்வை.
பள்ளிகளில் தலித் குழந்தைகளின் நிலை என்ன? கிராமங்களில் உள்ள தலித் குழந்தைகளின் பெற்றோர்கள் கூலி வேலைகளுக்குச் சென்று விடுவதால், பராமரிப்பின்றி வரும் அவர்களின் தோற்றத்தை கேலிக்குள்ளாக்குவது; சில ஆசிரியர்களின் சாதிய உணர்வால் வகுப்பறைகளில் குறும்புகளைச் செய்யும் குழந்தைகளை தேவைக்கு அதிகமாக தண்டிப்பது; இழிவாகப் பேசுவது; இலவச நோட்டு புத்தகம் வாங்க வரும்போது அவர்களை இழிவாகப் பார்ப்பது; "எல்லாந்தான் சும்மா வருது; ஆனா ஒண்ணுத்தையும் படிக்காதீங்க' என்று அவர்களுக்குத் தரப்படும் உரிமைகளை எள்ளுவது, தலித் மாணவிகளை கழிவறைகளைச் சுத்தம் செய்ய வைப்பது; கல்வி உதவித் தொகை தரும்போது, அவர்களை இழுத்தடிப்பது என இன்றும் கூட தலித் குழந்தைகள் சந்திக்கும் சாதிய மென்கொடுமைகள், அவர்களின் கல்வி கற்கும் உளவியலை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்கின்றன.
பள்ளிக்கூடம் சுதந்திரமான இடம் என்பது மறக்கடிக்கப்பட்டு, அது கசப்பான அனுபவங்களைத் தரும் இடம் என்னும் உளவியலை உருவாக்கி விடுகிறது. அதனால் தலித் குழந்தைகள் செல்வதற்குக் கூடாத இடமாகப் பள்ளிகள் மாறி விடுகின்றன. இத்தகைய சாதி ஆதிக்க உளவியலை பள்ளியிலிருந்து தகர்க்க வேண்டும் என்னும் குரல் பள்ளியிலேயே ஒலிப்பது ஜெனிபரிடமிருந்துதான்! ஆசிரியர் என்பவர் மாணவர்களை சில தகவல்களைக் கொண்டு இட்டு நிரப்புகிறவராக இருக்கக் கூடாது; ஆக்கத்திறன்களை நோக்கி குழந்தைகளை இயக்குவதே சிறந்த ஆசிரியருக்கு உள்ள சவால். ஆசிரியர் பாடத்தைக் கற்பிக்கும்போது மாணவர்கள் தங்களிலிருந்து சமூகத்தையும், சமூகத்திலிருந்து தங்களையும் உணர வேண்டும். அதுதான் கற்றல்-கற்பித்தலின் முதன்மையான நோக்கம் என்கிறார்.
தற்பொழுது செயல்வழிக் கற்றல் தொடக்கக் கல்வியில் கொண்டு வரும் மாற்றங்களை துல்லியமாக ஆய்கிறார் ஜெனிபர். அதற்காக அவர் எழுதிய புத்தகம் "தொடக்கக் கல்வியும் செயல்வழிக்கற்றலும்'-மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூகக் கொடுமைகளுக்கு ஒத்துப் போக வைக்காமல், அத்துமீறும் கல்விதான் சமூகத்தை மாற்றும் என்னும் புதிய கல்விக் கொள்கையினை அவர் எழுத்துக்கள் வலியுறுத்துகின்றன. தலித் பெண்ணியம் குறித்து விரிவாக அலசும் கட்டுரை ஒன்றை "புதிய கோடாங்கி' இதழில் எழுதியுள்ளார் ஜெனிபர். ஆண், சாதி, வர்க்கம் என்னும் மும்முனைத் தாக்குதலை சந்திக்கும் தலித் பெண்ணுக்கு, உலகமயமாக்கல் ஏற்படுத்தியுள்ள சிக்கல், இன்னும் கூடுதலான சுமையைத் தருகிறது என்னும் அவருடைய பார்வை புரிந்து கொள்ளப்பட வேண்டும். தலித் குடும்பங்களிலுள்ள பெண்களின் மீதான ஒடுக்குமுறை, தலித் ஆண்களின் புரிதலுக்காக இன்னும் காத்துக் கொண்டுதான் இருக்கிறது. தலித் பெண்களின் தோள்களின் மேல் ஏறி நின்று கொண்டு, தலித் விடுதலை பேசும் தலித் ஆணாதிக்கம், எந்த விதத்திலும் பிற சாதிய ஆணாதிக்கத்திலிருந்து மாறுபட்டதல்ல என்னும் அவரின் கோட்பாட்டையும் ஆய்வு செய்து தீர்வு காண வேண்டியது, தலித் அறிவுலகத்தின் பொறுப்பு. தலித் அல்லாதோரின் தலித்தியம், இன்றைக்கும் விவாதத்திற்கு உட்படுத்தக் கூடியதாகவே இருக்கிறது.
அண்மையில் வால்பாறையில் நடைபெற்ற தமிழ்க் கவிஞர்களின் கூடல் நிகழ்வை (13.6.2009) இங்கு பதிவு செய்வது பொருத்தமாகவே இருக்கும். மதிவண்ணனின் அரசியல் கவிதைகள் குறித்த கேள்வி, அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தலித் அரசியலை தலித் அல்லாதவர்கள் ஏன் எழுதவில்லை என்ற கேள்விக்கு, "அப்படியெல்லாம் கேட்க முடியாது' என்ற பதில்தான் தலித் அல்லாத எழுத்தாளர்களிடமிருந்து வந்தது. மேலும், "தலித்தைப் பற்றி எழுதினீர்களா என்று கேட்டீர்களே! கங்காணிகளைப் பற்றி நீங்கள் எழுதினீர்களா என்று நாங்கள் கேட்டால் என்ன சொல்வீர்கள்?' என்று கவிஞர் ரசூல் புன்னகையோடு கேட்டது, "தலித் அல்லாதாரின் தலித்தியம்' இன்றளவும் சாதியத்தை மீறாததாகவே இருக்கிறது என்பதைப் புரிய வைத்தது. "தலித்துன்னா என்ன வேணுன்னாலும் பேசலாமா?' என்று தொடங்கி, வசவு சொற்களால் முற்றுப் பெற்ற தலித்தல்லாத "மகாகவி' ஒருவரின் சாதிப் பார்வையும் நோக்கத்தக்கது.
இந்நிலையில் ஜெனிபரின் கருத்தை அப்படியே தருகிறோம்: “அதே சமயம் தலித் அல்லாதோரின் தலித்துகளுக்கான பச்சாதாபம் என்பதன் அடிப்படை என்ன? தேவை என்ன? எல்லை என்ன? போக்கு எத்தன்மையது? என்பது குறித்து ஆய்வு தேவை. ஏதோ தமது ஆதிக்க சாதி நிலை ஒரு பிறப்புரிமை தகுதி போலவும், அதை மறுத்து தலித்துகள் மட்டத்திற்கு தங்களை இறக்கி அவர்களுக்காக சிந்திப்பதை மிகப் பெரிய தியாகமாகவும் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது-ஒரு சாதிய பார்வையின் கோளாறு அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?''
உண்மையை உரத்துப் பேசும் ஜெனிபர், ஒரு கீழ் ஜாதிக்காரன் தன்னை "தலித்' என்று அடையாளப்படுத்திக் கொள்வது, சாதியைக் காப்பாற்றுவதற்காக அல்ல; மாறாக அதை முற்றிலும் அழிப்பதற்காகத்தான் என்கிறார்! அதைப் போலத்தான் தலித்தல்லாதவர்களும் தங்களின் சாதியத்தை அழிக்க முன்வர வேண்டும். சாதியற்ற சமத்துவமான இந்நிலை (தலித்) தான் சமூக ஜனநாயகத்தை உருவாக்கும். தன்னை இந்துவாக அடையாளப்படுத்திக் கொண்டே பெண்ணுரிமை பேசுகின்றவர்களைப் போல, தன் சாதியை அழிக்காமலே சாதி ஒழிப்பு பற்றி பேசுவதும் மாயையே என்னும் கருத்தினை ஜெனிபர் தன் எழுத்தின் மூலம் நிறுவுகிறார்.
பெண்கள் சமூகக் கடமையாற்ற, வாழ்வியல் சூழலே பெருந்தடையாக உள்ளது. தன் வீடு, தன் குழந்தை என்று தான் சுருங்கிப் போய்விடக்கூடாது என்னும் எச்சரிக்கை உணர்வுடன் ஜெனிபர் தொடர்ந்து கடமையாற்றுகிறார். எல்லா தலித் எழுத்தாளர்களுக்கும் உள்ள அதே சிந்தனை ஜெனிபருக்கும் உண்டு. அது என்னவெனில், தன்னுடைய எழுத்து விமர்சிக்கப்பட வேண்டும் என்பது. சிறுகதைகளையும் எழுதிக் கொண்டிருக்கும் ஜெனிபர், கல்வி-சமூக-அரசியல் தளங்களில் குறிப்பிடத்தக்க கருத்தாளராகத் தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கிறார்.