Avvai 450சமூகமாக இருந்தாலும் குடும்பமாக இருந்தாலும் எல்லா வெளிகளிலும் ஊடுபாவாகப் பற்றிப் படர்ந்து காக்கும் ஆற்றலாக விளங்குபவர் பெண். வேட்டையாடி, உணவு சேகரித்து உண்டுவாழ்ந்த காலத்தில் பெண்ணே ஆகச்சிறந்த பகிர்ந்தளிக்கும் தலைமைப் பண்பை ஏற்றுள்ளார் என்பது மானிடவியல், வரலாற்றியல் அறிஞர்கள் ஆய்ந்து கண்ட உண்மையாகும்.வேளாண்மையைக் கண்டடைந்ததும் மனித இனம் வலது கைப்பழக்கம் கொள்வதற்கும் பெண் இனமே காரணம் என்று சொல்லப்படுகிறது.

“ஆணைக் காட்டிலும் பெண் மூளை முன்கூட்டியே திட்டமிடும் ஆற்றல் கொண்டது - பல வேலைகளைக் குழப்பம் இன்றி ஒரே நேரத்தில் செய்யும் திறமை கொண்டது” என்கிறது அறிவியல். இவ்வளவு ஆளுமைகளைக் கொண்ட பெண்ணினம் சமகாலத்தில்தான் ஓரளவு விரவிப் பரவி பல்துறைகளில் கால் பதித்திருக்கிறது; என்றாலும் ஆணுக்கு இணையாக எண்ணப்படுகிறதா என்பது கேள்விக்குறியே.

தமிழக வரலாற்றில் சங்க காலம், அதற்கு முற்பட்ட காலங்களில் பெண்கள் பரவலாக எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதற்குப் பல்வேறு சான்றுகள் தொல்லியல் அறிஞர்களால் சுட்டப்படுகின்றன. அகழ்வாராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள பானை ஓடுகளில் உள்ள கீறல்கள் அவற்றுள் ஒரு சான்று. ‘இக்கீறல்கள் பானைகளின் உரிமையாளர் பெயர்களாகவும் இருக்கலாம்’ என்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

இவை ஒருபுறமிருக்க, தமிழ் இலக்கிய இலக்கண மரபில், தொல்காப்பியத்திற்கு இணையான, பழமையான இலக்கிய வடிவங்களாக சங்க இலக்கியம் என்று சொல்லப்படுகிற “பாட்டும் தொகையும்”என்பன கருதப்படுகின்றன. இத்தனிப்பாடல்களின் தொகுப்புகள்,பழந்தமிழரின் காதல் - வீரம் பற்றி பாடிய பாடல்களாகும். சிறப்பு வாய்ந்த இப்பாடல்களை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்கிற பதினெட்டு நூல்களாகத் தொகுத்தளித்துள்ளனர்.

சங்கப் புலவர்கள் (பெயர் அறியப்பட்ட - பெயர் இடப்பட்ட படைப்பாளிகள் - பெயர் அறியப்படாத படைப்பாளிகளும் உண்டு) 417 படைப்பாளிகளுள் 41 பேர் பெண் படைப்பாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சங்ககாலம் முதலே ஆணாதிக்கம் நிலைபெற்றுவிட்ட தமிழ்ச் சூழலில் 9ஆம் நூற்றாண்டில் (சில தொகுப்புகள் பாண்டிய, சேர மன்னர்களால் தொகுக்கப்பட்டுள்ளன. சிலவற்றிற்கு தொகுத்தோர் யாரென்று தெரியவில்லை) தொகுக்கப்பட்ட இப்பாடல்களில் தவிர்க்க முடியாதபடி பெண் படைப்பாளிகளின் பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன என்பது எண்ணிப்பார்க்கத்தக்கது. அதற்குப் பின்னான அறஇலக்கிய காலத்துப் படைப்புகளிலும் காப்பிய இலக்கியங்களிலும் பெண் படைப்பாளிகள் இல்லை என்பதும் தொடர்ந்து பக்தி இலக்கியங்களில் ஆண்டாள், காரைக்கால் அம்மையார் போன்றோரின் பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தகுந்தன. 

அதனைத் தொடர்ந்து பனிரெண்டாம் நூற்றாண்டு ஒளவையார் எழுதிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன், ஆசாரக்கோவை போன்ற நூல்கள் கிடைக்கின்றன. 17, 18ஆம் நூற்றாண்டுகளில் ‘பந்தன் அந்தாதி’ போன்ற நூல்கள் ஒளவையாரின் பெயரில் பதிவாகியுள்ளன. ஆனால், அது ஒளவையாரால் எழுதப்பட்டதா என்கிற கேள்வி ஆய்வாளர்களிடம் உண்டு. 19, 20ஆம் நூற்றாண்டில் கல்வி பரவலாக்கம், அச்சு ஊடகப் பரவலாக்கம் நிகழ்ந்த பிறகு, பல பெண் படைப்பாளிகள் வெளிச்சத்திற்கு வந்தனர்.

சங்க இலக்கியங்களைப் பொறுத்தவரையில் பெண்பாற் புலவர்களின் 181 பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை அகம், புறம் என்ற இரு பொருண்மைகள் சார்ந்தவை. இந்த வரிசையில் பெண்படைப்பாளிகள் சிலரின், ஒரு பாடல் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.தொகுப்பாளர்களின் அரசியல் மற்றும் பாலினச் சார்பு சங்கப் பாடல் தொகுப்பு முறையில் தொழிற்பட்டிருக்க வாய்ப்புண்டு. பெண்பாற் புலவர்கள் எத்தனைபேர் என்பதிலும் ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. 

‘ஆணாதிக்கம் அது இது என்று சொல்வதெல்லாம் வெறும் புனைவு. பெண்களை மறைத்துவிட்டு ஆண்கள் மேலெழ வேண்டிய அவசியம் எந்தக் காலத்திலும் இல்லை’ என்று சிலர் சொல்லலாம். அப்படியானால், உலக நிறுவன மதங்கள் அனைத்திலும் முதன்மை வழிபாட்டுக்குரியவர்களாக ஆண்கள் மட்டுமே ஏன் இருக்கிறார்கள்? வெளித்தெரியும் பழம்பெரும் தத்துவங்களைச் சொன்னவர்கள் பெரும்பான்மையும் ஏன் ஆண்களாகவே இருக்கின்றனர்? படைப்பாளியின் பெயர் அறியப்படாத ஆகச் சிறந்த இலக்கிய-இலக்கணங்களுக்குக் கூட ஏன் ஆண் பெயர்களையே சூட்டிச் சொல்லப்படுகின்றனர்? தமிழில் சுருக்கமாகவும் செறிவாகவும் கருத்துரைத்தால் அந்தப் பெண் படைப்பாளியை ஏன் ‘கிழவி’யாகக் காட்சிப்படுத்துகிறார்கள்? ஒரு குழந்தை அறிவுப்பூர்வமாகப் பேசினால் இன்றைக்கும், ‘கிழவி மாதிரி பேசறா பாரு!’ என்று ஏன் சொல்கிறோம்? இவற்றிற்கெல்லாம் பின்புலமாக ஓர் ஆணாதிக்க மனநிலை உள்ளதா? இல்லையா? இவை மாற வேண்டுமென்றால் பொதுப் புத்தியில் பதிவாகியிருக்கும் உயர்ந்தவன் - தாழ்ந்தவள், முன்புத்தி - பின்புத்தி போன்ற புரிதல்களில் மாற்றம் தேவையாக உள்ளது.

சங்க இலக்கியத் தொகுப்பு காலந்தொட்டு சமகாலம்வரை ஆணாதிக்கச் சமூகத்தின் மறைத்தலுக்கு அப்பாலும் வெடித்துக்கொண்டு வெளிக்கிளம்பியுள்ளனர் பெண்கள். பழந்தமிழ் இலக்கிய மரபான சங்க இலக்கியத்தில், அகம் சார்ந்து 26 பாடல்களும் புறம் சார்ந்து 32 பாடல்களும் இடம்பெறும் அளவிற்கு உழைத்த பாடினி ஒளவை அவர்களின் படைப்புலகம் குறித்துக் காணலாம்.

ஒளவை, கபிலர், அகத்தியர், புகழேந்திப் புலவர் போன்ற பெயர்களில் தமிழ் இலக்கிய வரலாறு நெடுக பலர் இருந்துள்ளனர் என்பதை நாம் அறிவோம். “உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு” என்று சொன்ன ஆத்திசூடி ஒளவையாரைக் காட்டிலும் “எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே” என்று பாடிய சங்ககால ஒளவையின் காலம் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது.

சங்க கால ஒளவையிடம் ஆற்றல் மிகுந்த சொல்லும் வீரமும் தன்மானச் செருக்கும் அன்பும் நிறைந்திருந்தன. பெண்ணின் ஆழ்மனத் தவிப்பையும் ஆணின் பிரிவுத் தவிப்பையும் தனது அகப் பாடல்களில் நேர்த்தியாகப் பதிவு செய்தவர் இவர்.

சான்றாக, காதலனைப் பிரிந்து வாடும் ஒரு பெண்ணின் உணர்வைத் தன் சுயஅனுபவத்தால் அன்றி,

முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?

ஓரேன், யானும்: ஓர் பெற்றி மேலிட்டு

‘ஆஅ! ஒல்’ எனக் கூவுவேன் கொல்? (குறுந்தொகை - 28)

என்று பாடியிருக்க முடியாது. அதாவது, ‘என் காதல் நோயின் கொடுமையை அறியாத தென்றல், என்னை அலைக்கழிக்கிறது. இதையறியாத ஊரார் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனது நிலையை நான் எவ்வாறு கூறுவேன்? முட்டுவேனோ? தாக்குவேனோ? ‘ஆ’வென்றும் ‘ஒல்’லென்றும் குரலெடுத்துக் கூவுவேனோ? என்ன செய்வது என்று அறியாமல் இருக்கிறேன்’ என்கிறாள் தலைவி. இவ்வளவு வெளிப்படையாக ஒரு பெண் தன் உணர்வுகளைப் பாடல்களில் வெளிப்படுத்துவது சங்ககாலத்தில் பெருவழக்காக இல்லை. சில சங்கப் பெண்படைப்பாளிகளிடம் மட்டுமே இத்தகைய தனித்தன்மை வாய்ந்த குரலைக் காணமுடிகிறது. அதில் ஒளவையும் ஒருவர். பெரும்பாலும் சங்கப் பாடல்களிலும் ‘பெண்வெளி’ என்பது குடும்பம், ஆண், குழந்தை இவர்களைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ‘பெண்ணின் உணர்வுகள் வெளிப்படைத் தன்மையாக இருக்கக் கூடாது’ என்பது நெறியாகப் பின்பற்றப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இவற்றையெல்லாம் மீறி, ஒளவை போன்றோரின் படைப்புவெளி ஒரு மாற்றுப் பார்வைகொண்டது என்றே சொல்ல வேண்டும்.

பொதுவாக, சங்க இலக்கியப் பாடல்கள் - அது பெண் படைப்பாளிகள் பாடிய பாடலாக இருந்தாலும் ‘ஆணின் பிரிவுக்காக ஏங்கும் பெண்ணின் நிலை’,தலைவனைப் பிரிந்து வாடும் போது,‘ஒப்பனை ஏதும் செய்து கொள்ளாமல், எண்ணெய் கூட தடவிக் கொள்ளாமல்’ தவிக்கும் பெண் உணர்வுகளை அழுத்தமாகப் பதிவு செய்து கொண்டே வருகின்றன. இந்தக் கட்டுப்பாடுகளை ஆணாதிக்கம் பெண்ணினத்திற்காக வகுத்த ‘ஒழுக்க நெறி’களாகவும் வாசிக்க முடிகிறது. இந்நெறிகளை மீறிய பாடல்கள் சில, எல்லாவற்றையும் மீறிக்கொண்டு சங்கத் தொகுப்புகளில் இடம் பெற்றுவிட்டன.

சமகாலத்தில் பெண்ணின் உடல் அரசியலைப் பேசும் பெண் படைப்பாளிகளுக்கு சங்கப் பெண் படைப்பாளிகள் முன்னோடிகள் என்பதற்குப் பல சங்கப் பாடல்கள் சான்றுகளாக உள்ளன. ஒளவையின் “வெந்திறல் கடுவளி பொங்கர்ப் போந்தென...” என்று தொடங்கும் குறுந்தொகை - 39ஆம் பாடல், ‘தன் மார்புக்கிடையே தூங்கும் தூக்கத்தைத் தவிர்த்துச் சென்ற தலைவன் சென்ற பாதை’யின் கடுமையைப் பற்றிப் பேசுகிறது. இந்தப் பாடல், தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் தவிப்பு, உடல் வெப்பமாக மாற, அதனால் அவள் படும் அவத்தையை வெளிப்படுத்தி நிற்கிறது.

ஒளவை, யாருக்கும் அடிபணியாத கல்விச்செருக்கு கொண்டவராகவும் அதியன் மீது தீரா அன்பு கொண்டவராகவும் மக்கள் மீது பற்று கொண்டவராகவும் இருந்துள்ளதை அவரது பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. அதோடு போர்வீரரின் வீரத்தைப் போற்றி, பல பாடல்கள் பாடியுள்ளதையும் மறுப்பதற்கில்லை. சான்றிற்கு புறநானூற்று 295ஆம் பாடலில், ‘போர்க்களத்தில் பகை நாட்டு வீரர்கள் தாக்கி சிதைத்த போதிலும் புறமுதுகு காட்டாது வீரமரணம் அடைந்த மகனின் நிலையைக் கேட்ட தாயின் வற்றிய மார்புகள் அவளது வயோதிகக் காலத்திலும் ஊறிச் சுரந்தன’ என்று எழுதுகிறார். இதுபோன்றே போரில் மாண்ட பல வீரர்களின் மாண்புகளைப் பல பாடல்களில் விதந்து பாடியுள்ளார் ஒளவை.

அதியன் மீது அன்பு கொண்டிருந்த ஒளவை, அவன் வீரமரணம் அடைந்த செய்தி கேட்டு நெஞ்சுருகப் பாடியுள்ளார். ‘கள் சிறிய அளவில் கிடைத்தால் எமக்கு அளிப்பவன், அதிக கள் கிடைத்தால் நான் பாட எங்களோடு சேர்ந்து உண்ணும் அதியன் அஞ்சி’க்குப் பிறகு, “இனி பாடுநரும் இல்லை; இனி பாடுநருக்கு ஒன்று ஈகுநரும் இல்லை” (புறநானூறு - 235) என்று அவன் வள்ளல் தன்மையையும் பண்பையும் சேர்த்தே பாடிப் புலம்பித் தவிக்கிறார் ஒளவை.

அதியமான் அஞ்சி மறைந்த பின்பு,‘இந்தக் காலைப் பொழுதும் மாலைப் பொழுதும் இல்லாது போகட்டும், என் வாழ் நாளும் இல்லாது போகட்டும்’ என்பதை, இல்லாகியரோ, காலை மாலை!

அல்லாகியர்; யான் வாழும் நாளே!

என்று தொடங்கும் புறநானூற்று - 232ஆம் பாடலில் ஒளவை தனக்கும் அதியனுக்கும் இருந்த அன்பை வெளிப்படுத்துகிறார். நீண்ட நாள் வாழும் நெல்லிக்கனியை அதியன் ஒளவைக்கு வழங்கினான் என்பதை,

....................................................................

பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட

சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,

ஆதல் நின் அகத்து அடக்கி

சாதல் நீங்க, எமக்கு ஈந்தனையே! (புறநானூறு - 91)

என்று கூறி, ‘அதனால் அதியன் அஞ்சியே! நீ “நீல மணிமிடற்று ஒருவன் போல”வாழ்வாயாக’ என்று வாழ்த்துவதும் அவர்களின் நட்பிற்கான சான்றுகளுள் சில. ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் எதிர்பார்ப்பு அற்ற நட்பு சாத்தியம் என்பதற்குச் சான்று இது.

அத்தகைய அதியன்,‘தான் வந்தது தெரியாமல் காலம் தாழ்த்திவிட்டான்’ என்பதற்காக, அங்கிருந்த வாயில் காப்போனிடம்,

வாயிலோயே! வாயிலோயே!

என்று தொடங்கி,

......................................................

மரம்கொல் தச்சன் கைவல் சிறாஅர்

மழுஉடைக் காட்டகத்து அற்றே

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே (புறநானூறு - 206)

என்று முடியும் இப்பாடலில், ‘தன் போன்ற கல்வியாளர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் உலகின் எந்தத் திசைக்குச் சென்றாலும் சோறு உண்டு; சிறப்பு உண்டு’ என்று கூறிச் செல்லும் மனஉறுதி ஒளவைக்கு இருந்துள்ளது.

அதியனுக்கும் தொண்டைமானுக்கும் நடக்கவிருந்த போரையும் அப்போரில் மாண்டு போகவிருந்த மக்களையும் ஒரு சிறுபாடல் வழியாக நிறுத்தினார் ஒளவை என்பர். அந்தப் பாடலில், எதிரி மன்னனை வசைபாடவில்லை, மிரட்டவில்லை. ‘புகழ்வது போல் இகழ்ந்து கூறி’ அதியனின் படைச் சிறப்பை எடுத்துரைத்து,போரைத் தவிர்க்கச் செய்துள்ளார் படைப்பாளி.

இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி

கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய்அணிந்து,

கடியுடை வியல் நகரவ்வே; அவ்வே,

பகைவர்க் குத்தி, கோடு, நுதி சிதைந்து,

கொல்துறைக் குற்றிலமாதோ என்றும் -

உண்டாயின் பதம் கொடுத்து,

இல்லாயின் உடன் உண்ணும்

இல்லோர் ஒக்கல் தலைவன்

அண்ணல் என்கோமான் வைந்நுதி வேலே.

எனும் புறநானூற்று 95ஆம் பாடலில், ‘உன்னுடைய படைக்கலன்கள் மாலைகள் சூட்டி, நெய் தடவி, அழகுற அடுக்கப்பட்டுள்ளன. செல்வம் இருக்கும்போது அனைவருக்கும் உணவிட்டு, இல்லாதபோது இருப்பதைப் பகிர்ந்துண்டு வாழும் ஏழைகளின் உறவுக்குத் தலைவனான அதியன் 

அஞ்சியின் கூரிய வேல்கள் பகைவரைத் தாக்கித் தாக்கி முனை மழுங்கி கொல்லனின் உலைக்களத்தில் இருக்கின்றன’ என்று கூறுகிறார் ஒளவை.

இப்பாடலில் உள்ள உள்ளார்ந்த மிரட்டல் அதியனின் பகை அரசை நடுங்கச் செய்ய வல்லது. இந்த ஆற்றல், கல்விச் செருக்குள்ள ஒரு படைப்பாளிக்குரியது. தன் படைப்பறிவின் மீது அளப்பறிய நம்பிக்கையும் சுயமரியாதையும் கொண்ட பெண் படைப்பாளிகள் சங்ககாலம் முதல் பலர் இருந்துள்ளனர். அந்த வரிசையில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் சங்ககால ஒளவை.

Pin It