கலக்காரர் தோழர் பெரியாருக்கும் அவரது இயக்கத்துக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல தோழர்கள் உற்ற துணையாக இருந்து அவருடைய கொள்கைகள் நிறைவேற பல முனைகளில் மிகக் கடுமையாக உழைத்து வெற்றி தேடித் தந்துள்ளார்கள்.

அந்த வகையில் கிழக்கே மடத்துக்குளம் துவங்கி மேற்கில் ஆனைமலை வரை - தெற்கில் மலைப்பகுதியான வால்பாறை துவங்கி நீலமலை (ஊட்டி) முடிய இருந்த ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி வட்டத்தில் அமைந்துள்ள ஆனைமலை என்கிற சிறு கிராமத்தில் தனது உழைப்பால் தோழர்களின் அரவணைப் போடு ஒரு கிராமத்தையே மாற்றி அமைத்த கலகக்காரர் தோழர் பெரியாரின் சாதி ஒழிப்பு போராட்ட வீரர், சுயமரியாதை இயக்கச் சுடர்ஒளி - பெரியாரியல் கொள்கைகளை நிறைவேற்ற உழைத்த செயல் வீரர் தோழர் ஆனைமலை நரசிம்மன் அவர்களின்  வாழ்வும் பணியும் இத்தொகுப்பில் இளைய தோழர்கள் அறியத்தக்க வகையில் தொகுத்து அளிக்கப் படுகிறது.

தோழர் பெரியார் அவர்கள் எப்பொழுதும் திராவிடர் கழகப் பணிகள் பற்றித் திட்டமிடுவதானாலும், ஓய்வு எடுத்துக்கொள்வதானாலும் குறிப்பிட்ட சில அமைதியான இடங்களுக்குச் செல்வது வழக்கம். அத்தகைய இடங்களில் ஆனைமலையும் ஒன்று. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ளது. வயல்களும், தோப்புகளுமான இயற்கை சூழப்பட்ட அமைதியான ஊர். ஊரை அடுத்து ஆழியாறும், உப்பாறும் ஒன்று கூடும் இயற்கைச்சூழல். எல்லா மதத்தினரும், சாதியினரும் ஒருங்கிணைந்து வாழும் இடம். அவ்வூரில் செல்வச் செழிப்பும், கல்விச் சிறப்பும் உடைய கன்னடிய நாயக்கர் குடும்பங்கள் உள்ளன. அவற்றில் நாராயண நாயக்கர் புகழ் பெற்றவர். அவர் துணைவியார் குஞ்சம்மாள் இவர்களுக்கு மூன்று ஆண்பிள்ளைகள், இரண்டு பெண்பிள்ளைகள், இவர்களில் கடைசி மகனாகப் பிறந்தவரே நரசிம்மன் ஆவார்.

இளமைத் துறவு

1906 ஆம் ஆண்டு நரசிம்மன் பிறந்தார். இவர் சென்னை அடையாற்றில் பள்ளிப்படிப்பை முடித்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மீனாட்சி கல்லூரியில் தத்துவப் பாடத்தில் பி.ஏ.பட்டம் பெற்றார். கல்லூரி மாணவராக இருந்தபோது காவி உடையும், தாடியுமாக இருந்துள்ளார். இமயமலை ரிஷிகேஷத்திலும் சென்று தங்கி இருந்தார். இவரது துறவு மனப்பான்மையை அறிந்து பெற்றோர்கள் மிகக் கவலையடைந்தனர். நரசிம்மனுடைய அண்ணன் சங்கரநாராயணன் என்பவர் ஏற்கனவே சன்னியாசி யாகிப்போனவர். அதனால் பெற்றோர் இவரைக் கட்டாயப்படுத்தி ஜானகி என்ற உறவுக்காரப் பெண்ணை மணம் முடித்தனர். அதனால் நரசிம்மன் ஆனைமலையிலேயே தங்க நேரிட்டது.

பிறந்த ஊருக்கே புதியவராகத் தோன்றினார் நரசிம்மன். ஊர்மக்கள் இவரை ‘வேல் நாயக்கர்’ என்று தான் குறிப்பிடுவார்கள். இல்வாழ்க்கையில் ஈடுபட்ட நரசிம்மனுக்கு நாட்டு விடுதலை உணர்வில் விருப்பம் ஏற்பட்டது. காந்தியாரின் நிர்மாணத் திட்டப்பணிகளில் பங்கு கொண்டார். அதன் ஒரு பகுதியாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் அடைய படிப்பு அறிவு கொடுக்க தாழ்த்தப்பட்டோர் இரவுப் பாடசாலையை ஆரம்பித்தார். அதன் திறப்பு விழாவிற்கு சத்திய மூர்த்தி, இராஜாஜி ஆகியோரை அழைத்து இரவு விழா நடத்தினார். அதற்கு வெங்கட்டராஜ் (ராஜா பீடிகாரர் மாமா) என்பவரை ஆசிரியராக நியமித்து அவரே சம்பளம் கொடுத்து நடத்தினார்.

இராஜாஜி, சத்தியமூர்த்தி போன்றவர்கள் ஆனைமலையில் அந்தக் காலத்தில் ஊர் பண்ணாடி வீடு என்கிற (கோவிந்தராஜ் நாயக்கர் வீடு ) அதில் தங்கினார்கள்.

ஆனைமலையில் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக உண்டு உறைவிட இடம் உருவாக்கினார். பேரூராட்சி உறுப்பினர் தோழர் ஏ.எம்.மாசாணி அவர்களை வார்டனாக வைத்து சபாநாயகர் சிவசண்முகம் பிள்ளை அவர்களை அழைத்துத் திறப்பு விழா நடத்தினார். இந்தத் தங்கும் விடுதியில் சுற்றி 15 மைல் தொலைவில் உள்ள சிறிய கிராமங்களான சமத்தூர், கோட்டூர், அங்கலக் குறிச்சி, சேத்துமடை, காளியாபுரம், வேட்டைக் காரன்.புதூர், சுப்பே கவுண்டன்புதூர், பொன்னாயூர் ஆகிய பகுதிகளில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்களைப் பெற்றோர் சம்மதத்துடன் கல்வி பயில உதவி புரிந்தார். இங்கு தங்கி படித்த பல தாழ்த்தப்பட்ட மாணவர்கள் காவல்துறை, கல்வித்துறையில் ஆசிரியர்களாக, வங்கிகளில் அதிகாரிகளாக அரசுப் பணியில் பல பதவிகளில் இடம் பெற்று, இன்று அந்த அந்தக் கிராமங்களில் சுயமரியாதையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

பெரியார் இயக்கத்தால் தீண்டாமை ஒழிப்பு

இந்தக் காலகட்டத்தில் கலகக்காரர் தோழர் பெரியாரின் சமூக மறுமலர்ச்சி இயக்கமான திராவிடர் கழகத்தில் இணைந்து பெரியாரின் பெரும்பணிக்குத் துணை நின்றார். இவருடைய எளிமையும் பழகும் தன்மையும் ஒட்டி இவருக்கு உற்ற துணையாக ஏ.எம்.திருமூர்த்தி, ஏ.எம்.திருவேங்கடம், நஞ்சப்பன், கே.காளிமுத்து, காதர் மைதீன், முகமது அனிபா, ஆறுமுகம் ஆகிய எட்டு தோழர்களுடன் இணைந்து அனைத்துக் கிராமங் களிலும் பெரியாரின் கொள்கைகளை, துண்டறிக் கைகள், தெருமுனைக் கூட்டங்கள் வாயிலாகப் பரப்புரை பணியையும், வாரம்தோறும் தாழ்த்தப் பட்ட மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள குழந்தைகளைத் திரட்டி ஊர்வலமாக சாதி, தீண்டாமை ஒழிப்புப் பாடல்களைப் பாடிக் கொண்டும் மக்கள் மத்தியில் பரப்புரை செய்து கொண்டும் ஆற்றங்கரையை அடைவர். அங்கு அவர்களுக்குத் தோழர்களின் உதவியோடு முடி திருத்தி, குளிக்கச் செய்து புதிய ஆடைகளை வழங்கி, தீண்டாமைக்கு எதிராகப் போராடினார். இதன் காரணமாக ஆனைமலையில் இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட தீண்டாமை வன் செயல்கள் 1960 க்கு முன்பே மறைந்து சமத்துவம் மலர்ந்தது.

தோழர் பெரியாரின் தொடர்பால் பல்வேறு சாதி ஒழிப்புப் பணிகளில் தனித்தும் ஒத்த கருத்து உடையவர்களுடனும் தோழர்கள் இணைந்து பல புரட்சிகரமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார். அதில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் (சேரியை) பகுதியில் பைமாசி நஞ்சப்ப கவுண்டருக்குச் சேர்ந்த காலியிடம் இருந்தது. அதில் தாழ்த்தப்பட்ட மக்கள் பல குடும்பங்கள் குடிசைகள் போட்டுக் குடியிருந்து வந்தார்கள். எதிர்பாராமல் அவை தீப்பிடித்து எரிந்துவிட்டன. தீப்பிடித்த இடம் வேண்டாம் என்று நஞ்சப்பகவுண்டர் அவர்கள் அதை விலைக்குக் கொடுக்கலானார்.

தமிழ்நாட்டின் முதல் சமத்துவக் குடியிருப்பு

இத்தருணத்தில் தோழர் பெரியார் அவர்கள், தோழர் நரசிம்மனுக்குச் சில அறிவுரைகள் வழங்கி அதனைச் செயல்படுத்துவதின் மூலம் உங்கள் பெயரும் நமது கழகத்தின் கொள்கைகளும் மேலும் வலுவடைந்து மக்கள் உங்களை காலாகாலத்திற்கும் உங்கள் மறைவிற்குப் பிறகும் உங்கள் பெயர் நிலைத்து நிற்கும் என்று கூறினார்.

1) உங்களிடம் உள்ள நிலங்களின் ஒரு பகுதியை அல்லது புதியதாக வாங்கியோ உங்கள் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பகிர்ந்து கொடுங்கள்.

2) உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி உங்கள் பேரூராட்சியில் அரசு நிலத்தைச் சகல தரப்பு மக்களையும் உள்ளடக்கிய சமத்துவக் குடியிருப்பு ஒன்றை அமைத்துத் தாருங்கள்.

3) உங்கள் பேரூராட்சியில் ஒரு தாழ்த்தப் பட்டவரைப் பேரூராட்சித் தலைவர் ஆகக் கொண்டுவர முயற்சி செய்யுங்கள் என்றும் கூறினார்.

தோழர் பெரியாரின் ஆலோசனைகளை ஏற்று உடனடியாகச் செயல்படுத்தும் முனைப்புடன் செயல்பட்டார். முதலில் தீ விபத்தில் குடிசைகளை இழந்த தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருந்த இடத்தின் உரிமையாளர் பைமாசி நஞ்சப்பகவுண்டர் விற்க முன் வந்த அந்த இடத்தைத் தானே முழுத் தொகையும் கொடுத்து அந்த இடத்தை வாங்கி - அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பிரித்துக் கொடுத்தார். அந்த இடத்தில் குடியிருப்புகளைச் சொந்தப் பணத்தில் ஏற்பாடு செய்து கொடுத்தார். அந்த இடங்களை அவர்களுக்கே சொந்த மாக்கினார்.

பொதுத்தொகுதியில் சக்கிலியர் தலைவராகத் தேர்வு

தோழர் பெரியாரின் மூன்றாவது ஆலோசனையான ஆனைமலை பேரூராட்சிக்கு மன்றத் தலைவர் பொறுப்பில் ஒரு தாழ்த்தப்பட்டவரை நியமிக்க முன்முயற்சி எடுத்தபோது அப்பதவிக்கு உரிய இடம் 1948 இல் பொதுத்தொகுதியாக இருந்தது. அந்தத் தேர்தலில் தோழர் நரசிம்மனின் உறவினரான வெங்கிடுகிருஷ்ணன் போட்டியிட முடிவு செய்து மனுத்தாக்கலும் செய்திருந்தார். இந்நிலையில் தனது உறவினரின் வேட்பு மனுவைத் திரும்பப் பெறச்செய்து தனது முழு செல்வாக்கையும், மக்கள் ஆதரவையும் ஒன்று திரட்டி, தன்னுடன் காந்தி நிர்மாணப் பணிகளில் உடன் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட சக்கிலியர் சமுதாயத் தோழர் ஏ.எம்.மாசாணி என்பவரை நிறுத்தி வெற்றி பெறச் செய்தார்.

இந்தத் தோழர் ஏ.எம்.மாசாணி அவர்கள்தான் இந்தியாவிலேயே முதல் தாழ்த்தப்பட்ட பேரூராட்சி மன்றத் தலைவராகத் தேர்வானவர் ஆவார். தோழர் பெரியாரின் ஆலோசனைகளையும், தோழர் நரசிம்மனின் செயல்பாடுமே இந்தச் சரித்திரச் சாதனைக்குக் காரணமாகும். அப்போது தமிழக சட்டமன்றத் தலைவராக இருந்த திரு.ஜே.சண்முகம் பிள்ளை அவர்களை, ஆனைமலைக்கு அழைத்து வந்து தன் வீட்டில் தங்க வைத்து ஆனைமலையில் பல்வேறு பகுதிகளில் சமபந்தி விருந்து நடத்தி, சாதி தீண்டாமைக்கு எதிராகப் பரப்புரை நிகழ்த்தினார்.

நரசிம்மன் நகர்

இவரால் பேரூராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட தோழர் ஏ.எம்.மாசாணி மற்றும் மன்ற உறுப்பினர்கள் அனைத்துக் கட்சித் தோழர்களை இணைத்துக் கொண்டு அரசுடன் போராடி இன்றைய வார்டு எண் 18 பழைய வார்டு எண் 9 ஆக இருக்கும் குடியிருப்புப் பகுதியை உருவாக்கி இதில் அனைத்துச் சாதியினரும் கலந்து வாழத்தக்க வகையில் குடியிருப்புப் பகுதிகளாகப் பிரித்து அரசுமூலம் மக்களுக்குப் பகிர்ந்து அளிக்கும் பணியில் வெற்றிகண்டார்.

இதனை நிறைவேற்ற அவர் உழைத்த உழைப்பிற்கு அனைவரும் சேர்ந்து அப்பகுதிக்கு ‘நரசிம்மன் நகர்’ என்று பெயர் சூட்டி வாழ்ந்து வருகி றார்கள். இவரது பெரும் முயற்சியில் ரங்காராம் பூங்கா நரசிம்மன் நகரில் 5 ஆம் வகுப்புவரை ஒரு ஆரம்பப் பாடசாலை, ஆனைமலையில் ஒரு ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் குடிநீர்த் திட்டம் போன்றவைகள் கொண்டு வரப்பட்டன.

தோழர் பெரியாருடன் இணைந்து செயல் பட்ட காலங்களில் 06.12.1938 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று பெரியார் உடன் பெல்லாரி சிறையில் இருந்தபோது அவர் பட்டதாரி என்பதாலும், வருமான வரி செலுத்துபவர் என்ற அடிப்படை யிலும் சிறையில் முதல்வகுப்பு தரப்பட்டது. ஆனால், “தோழர்கள் எல்லோரும் மூன்றாம் வகுப்பில் இருக்கும்போது எனக்கு மட்டும் முதல் வகுப்பா?” என்று மறுத்துவிட்டார்.

ஒருநாள் சிறையில் எம்.என்.ராய் எழுதிய ஆங்கிலப் புத்தகம் படித்துக் கொண்டிருந்த நரசிம்மனிடம் சிறை அதிகாரி தானும் அப்புத்தகத்தைப் படிக்க விரும்பினார். உடனே புத்தகத்தை அவருக்குக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். மறுநாள் அதிகாரி புத்தகத்தை நரசிம்மனிடம் கொடுத்துவிட்டு ஒன்றும் புரியவில்லை என்றார். நரசிம்மன் அவருக்கு புரியும்படி விளக்கிக் கூறினார். அப்போதிருந்த சிறை அதிகாரி அவர்மீது அன்பும், மரியாதையும் காட்டினார். சிறையில் தேர்வு எழுத விரும்பிய ஒரு கைதிக்குப் பாடம் நடத்தி தேர்வு எழுதச் செய்தார்.

கருஞ்சட்டைத் தொண்டர் படைத் தளபதி

27.08.1944 இல் சேலம் மாநாட்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்ற அண்ணா கொண்டு வந்த பெரியாரின் தீர்மானத்தை முழுமனதோடு வரவேற்றார். அதுமுதல் திராவிடர் கழகத்தில் தீவிரத் தொண்டராக மாறினார். பெரியாருக்கு மிகவும் நெருக்கமானவராக ஆனார். பெரியாரின் பயணத்தின் போது உடனிருந்து உதவிகள் செய்து வந்தார்.

1945 திருச்சி மாநாட்டுக்குப் பிறகு திராவிடர் கழகமும், கருஞ்சட்டைத் தொண்டர்படையும் செல்வாக்குப் பெற்றன. அப்பொழுது தொண்டர்படைத் தளபதியாக நரசிம்மன் செயல்பட்டார். சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சி, தண்டால், பஸ்கி அவருக்குக் கை வந்த கலை. அக்கலையைத் தொண்டர்களுக்கும் பயிற்சி அளித்து எழுச்சி அடையச் செய்தார்.

11.05.1946 இல் மதுரையில் கருஞ்சட்டைப்படை மாநாட்டுப் பந்தலைப் பார்ப்பனர்கள் தீயிட்டுக் கொளுத்தியபோது இமயம் என எழுந்து நின்ற நரசிம்மன் கழகத் தலைவர்களையும், தோழர் களையும், பாதுகாப்பான இடங்களில் சேர்ப்பதில் முனைப்புடன் செயல்பட்டார். பெரியாரின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் முன்னணித் தொண்டராகத் திகழ்ந்தார். மிக முக்கியப் பொறுப்புகளை பெரியார் நரசிம்மனிடம் ஒப்படைத்தார்.

பெரியாருடன் பயணங்கள்

21.12.1944 முதல் 24.12.1944 வரை வடநாட்டில் தோழர் எம்.என்.ராய் அவர்களின் தீவிர ஜனநாயகக் கட்சியால் (Radical Democratic Party Conference)) மாநாடுகள் நடத்தப்பட்டன. மாநாட்டில் தோழர்கள் பெரியார், மணியம்மையார் ஆகியோருடன் பிற்படுத்தப்பட்ட, பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டிலும் மேலும் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.

09.02.1950 இல் தோழர்கள் பெரியார், மணியம்மை செக்கரட்டரி சண்முகம், வேலூர் திருநாவுக்கரசு ஆகியோருடன் பம்பாய் திராவிடர் கழக மாநாட்டில் கலந்து கொள்ள பம்பாய் சென்றார்.

01.02.1959 இல் கார் மூலம் புதுடெல்லி சுற்றுப்பயணத்தில் தோழர் பெரியாருடன் அன்னை மணியம்மையார், ஆனைமலை ஏ.என்.நரசிம்மன், அவரின் உறவினர் இராமகிருஷ்ண அம்மாள், ஆசிரியர் கி.வீரமணி, புலவர். இமயவரம்பன், டிரைவர் சீனிவாசனுடன் 20 நாட்களுக்கு மேலாக பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள மோட்டார் வேனிலேயே புதுடெல்லி பயணமானார்.

23.11.1954 இல் பர்மாவில் ரங்கூன் நகரில் நடந்த பெளத்த மாநாட்டிற்குத் தோழர் பெரியார், மணியம்மையார், ஆனைமலை இராமகிருஷ்ண அம்மாள், சேலம் கே.ராதாராம் ஆகியோருடன் சென்றார்.

09.07.1949இல் குறிப்பிட்ட சில தோழர்கள் உடனிருந்து பெரியார் - மணியம்மையார் பதிவுத் திருமணம் நடந்தது. உடனே அவர்கள் ஆனைமலை வந்து நரசிம்மன் வீட்டில் 15 நாட்கள் தங்கியிருந்தார். அப்பொழுது ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் முன்னாள் அமைச்சரான மறைந்த என்.வி.நடராசன் அவர்களும் உடன் இருந்தனர்.

போராட்டங்கள் - சிறை வாழ்க்கை

அதன்பின் திராவிடர் கழகத்தில் தோழர் பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்களாகிய  சென்னை முரளிகபே பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம்., சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் தமிழ் அர்ச்சனைப்  போராட்டம்.

1952, 1953, 1954 ஆகிய மூன்று வருடங்கள் ரயில் நிலையம், அஞ்சல் நிலையம் ஆகிய இடங்களில் குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம், இந்தி ஒழிப்புப் போராட்டம்.  ஆகஸ்ட்டில் ராமன் பட ஒழிப்புப் போராட்டம்.

1953-இல் பிள்ளையார் உருவபொம்மை உடைப்புப் போராட்டம். 26.11.57 இல் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம். சட்ட எரிப்பில் 9 மாத சிறை தண்டனைக் கொடுத்தார்கள். இது அல்லாமல் சாதி ஒழிப்பிற்காக நீடாமங்கலம் ஆறுமுகம் அவர்கள் தலைமையில் நீடாமங்கலத்திலிருந்து சென்னை வரை நடந்து பரப்புரை மேற்கொண்டார்கள்.

1952-இல் மத்தியில் காங்கிரசு ஆட்சி அமைத்தபோது தென்னாட்டு இரயில்வே நிலையங்கள் அஞ்சலகங்களின் பெயர் பலகைகள் இந்தி மயம் ஆக்கியது,இதனை எதிர்த்து 1952 ஆகஸ்டு 1.,1953-ஆகஸ்ட் 1, 1954 ஆகஸ்ட் 1 ஆகிய நாட்களில் தமிழகம் எங்கும் இந்தி எழுத்துக்களைத் தார் பூசி அழிக்கும் போராட்டம் பெரியாரால் நடத்தப்பட்ட போது நரசிம்மனும் தீவிரமாக ஈடுபட்டார். 1953-இல் நடைபெற்ற பிள்ளையார் உருவ பொம்மை உடைப்புப் போராட்டத்திலும் முன்னணித் தொண்டராகச் செயல்பட்டார்.

தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவுப் போராட்டம்

அன்னாரது கழகப்பணியில் சிறந்த பணியாக சாதி ஒழிப்பின் முத்தாய்ப்பாக தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு ஏ.எம்.மாசாணி அவர்கள் தலைமையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கோவில் வழிப்பாடுக்குரிய பொருட்களைத் தனது சொந்தச் செலவில் வாங்கிக் கொடுத்து ஆனைமலை ஈஸ்வரன் கோவிலுக்குள் அழைத்துச்சென்று ஆலைய நுழைவுத் தீண்டாமையை முறியடித்து தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதையை மீட்டுக் கொடுத்த போராட்டம் இன்றளவும் அம்மக்களால் நினைவு கூறப்படுகிறது. மக்கள் அதை எண்ணி மகிழ் கிறார்கள்.

பெரியாருடன் ஓய்வு நேரங்கள்

ஆனைமலை ஆற்றங்கரையை அடுத்து நரசிம்ம னுக்குச் சொந்தமான தென்னந்தோப்பு, குளிர்ச்சி யான சோலையும் உண்டு. மக்கள் போக்குவரத்து நிறைந்த பகுதி. அங்குள்ள நெடுஞ்சாலையையொட்டி திராவிடர் கழகக் கட்டிடமும் அதில் பகுத்தறிவுப் படிப்பகமும் நரசிம்மனால் அமைக்கப் பட்டிருந்தன.

தந்தை பெரியார் அவர்கள் ஆனைமலைக்கு வரும்போதெல்லாம் அங்கு தங்கி ஓய்வு எடுப்பார். அந்தக் கட்டிடத்தில் வெளிப்பகுதிக்கு வந்து நின்று கொண்டும், உலாவிக் கொண்டும் இருப்பார்.மக்கள் கூட்டம் அவரைக் கண்டு செல்லும்.

ஆனைமலை நாயக்கர் தெருவில் நரசிம்மனின் வீடு உள்ளது. மாடிக் கட்டிடம் முன்னால் பரந்த புல்வெளி. நுழைவு வாயிலில் உயரமான இரும்புக் கதவுகள். பெரியாரின் வேன் வருவதற்காகவே வீட்டின் முன் நுழைவுவாயிலில் தனி வழி அமைத்து இருந்தார் நரசிம்மன். அவ்வழி இப்பொழுதும் இருக்கிறது. மாலை வேளையில் புல்வெளியில் கட்டில் போட்டு பெரியார் அமர்ந்திருப்பார். அவரருகில் புல் தரையில் நரசிம்மன் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்.

நரசிம்மன் எப்பொழுதும் புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர். ஆனைமலை ஊராட்சி மன்றத் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். முரட்டுத் துணியாலான வட்டக் கழுத்து ஜிப்பாவும், லுங்கியுமே அவர் அணியும் ஆடைகள். பற்களால் நோய் உண்டாவதை அறிந்து எல்லாப் பற்களையும் எடுத்துவிட்டார். மொட்டைத் தலையுடனேதான் எப்பொழுதும் இருப்பார். தெருவில் நடக்கும்போது தலை குனிந்தவாறே செல்வார். எல்லாரிடமும் பணிவாகவும், சிரித்த முகத்துடன் பழகுவார். அதிகமாகவும் உரத்த குரலிலும் யாரிடமும் பேசமாட்டார். நரசிம்மனுக்கு சங்கர், பீட்டர், லில்லி என்ற மூன்று மகன்கள். லில்லி மட்டுமே இப்பொழுது இருக்கிறார்.

தோழர்களின் குடும்பப் பாதுகாப்பு

26.11.1957-இல் தோழர் பெரியார் அறிவித்த சாதிக்கு பாதுகாப்பு அளிக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளை எரிக்கும் போராட்டத்தில் ஆனைமலையில் தோழர் ஏ.என்.நரசிம்மன் தலைமையில் தோழர்கள் ஏ.எம்.திருமூர்த்தி, ஏ.எம்.திருவேங்கடம், நஞ்சப்பன், கே.காளிமுத்து, ஆறுமுகம், முகமது அனீபா, காதர் மைதீன் ஆகிய எட்டுத் தோழர்கள் கலந்துகொண்டு சட்டத்தைக் கொளுத்தி 9 மாதச் சிறைத் தண்டனை பெற்று கோவை மத்தியச் சிறையில் மற்றத் தோழர்களுடன் மூன்றாம் வகுப்பிலேயே இருந்தார்.

சிறையில் இவரின் அடக்கத்தையும், ஆற்றலையும் சிறை அதிகாரிகள் மதித்து வந்தனர். சிறையில் தலைமுடியும், தாடியும் வளர்த்து வந்தார். தண்டனையிலிருந்து விடுதலைச் செய்தி வந்தபோது சிறையில் ஒலிபெருக்கி ஏற்பாடு செய்து அதிகாரிகள் பாராட்டுரைகள் வழங்கினார்கள். சிறைக்கதவுகள் திறக்கப்பட்டு நரசிம்மனும்,தோழர்களும் வெளியில் வந்தபோது மக்களால் வரவேற்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். விடுதலைக்குப் பின்பும் கழகப் பணிகளைத் தொடர்ந்தார்.

சிறையில் இருந்து விடுதலை ஆனபின் தன்னோடு சட்டத்தை எரித்து தண்டனை பெற்று தன்னுடன் சிறையில் இருந்த தோழர்களைத் தனது குடும்ப உறுப்பினர்களாகவே பாவித்து அவர் களுடைய இன்ப துன்பங்களில் பங்கேற்று நல்ல தலைமைப் பண்பாளராகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு அவர்களைப் பேணிப் பாதுகாத்தார்.

சாதி ஒழிப்பிற்கு நாட்டுப் பிரிவினையே வழி என்று பெரியார் முடிவு செய்தார். எனவே 1960 இல் தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப்பட எரிப்புப் போராட்டம் பற்றி அறிவித்தார். அதிலும் நரசிம்மன் எழுச்சியுடன் பங்கு கொண்டார்.

09.03.1964 இல் காமராசர் ஆட்சியில் நில உச்சவரம்புச் சட்டம் இயற்றியதை உச்சநீதிமன்றம் செல்லாது என அறிவித்ததைக் கண்டித்து 15.03.1964 முதல் 05.04.1964 முடிய சுப்ரீம் கோர்ட் கண்டனநாள் கூட்டங்களை நடத்துமாறு பெரியார் ஆணையிட்டதை ஏற்று நரசிம்மன் செயல்பட்டார்.

உடல்நலம் குன்றியும் கழகநலன் காத்தவர்

திராவிடர் கழகத்தில் இருந்து பணியாற்றுவதிலே நரசிம்மன் அளவற்ற மகிழ்ச்சியுடையவராய் இருந்தார். தோழர் பெரியாரும் நம்பிக்கையுள்ள உண்மையான தொண்டராகவே நரசிம்மனை மதித்தார். உடல் நலம் குன்றிய நிலையிலும் கழகப் பணிகளை ஆற்றி வந்தார். இந்த நிலையில் இதயநோய் தாக்கியது. மருந்து என்பதையோ, சிகிச்சை என்பதையோ அறியாது வாழ்ந்தவர் நரசிம்மன். அவரால் எழுந்து நடமாட முடியவில்லை. நாளுக்கு நாள் நோயின் வலிமை வளர்ந்தது. உடலிலும் செயல்கள் தளர்ந்தன.

பெரியாரின் எண்ணங்கள் மிக உயர்ந்தவை, உறுதியானவை பாமரர்களுக்காக பெரியார் ஆற்றிவரும் செயல்கள் உண்மையானவை. அவரைப்போல் உலகில் ஒருவரைப் பார்க்கமுடியாது என்று தன்னைக் காண வருபவர்களிடம் அமைதியான குரலில் சொல்லுவார். இந்த ஒப்பற்ற தோழரை, கலகக்காரர் தோழர் பெரியார் பல்வேறு இயக்கப் பணிகளையும், போராட்டங்கள் தொடர்பான பணிகளையும் தாம் தலைநகரில் இல்லாமல் வெளிமாநில மற்றும் வெளிநாட்டுப் பயணங்களிலும், சிறைத் தண்டனைப் பெற்று சிறையில் உள்ளபோதும் இயக்கத்தை வழி நடத்தும் பொறுப்புக்களில் இவருக்கும் பகிர்ந்து அளித்தார்.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தில் நிர்வாகக் குழுவிலும் இயக்கத்தின் பொறுப்பிலும் இவர்மீது நம்பிக்கை வைத்து இவரையும், இவரது உறவினரான ஆனைமலை இராமகிருஷ்ண அம்மாள் அவர்களையும் நியமனம் செய்தார்.

எழுத்தாற்றல்

தோழர் பெரியாரின் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலரில் (பக்-37) நரசிம்மன் எழுதிய கட்டுரை அவரது உண்மையான மனநிலையை வெளிப்படுத்துவதாகும் அதன் சுருக்கம் இதோ!

விஞ்ஞானம் வளர்ந்துள்ள இக்காலத்திலும் தமிழ்மக்கள் சாணியைப் பிடித்து வைத்து வழிபட்டால் எல்லா நன்மையும் கிடைக்கும் என்றும், பார்ப்பானின் காலை கழுவிக் குடித்தால் உடலும், உள்ளமும் சுத்தி பெறும் என நம்பி அதன்படி நடந்து தங்கள் பொன்னான நேரத்தையும், பணத்தையும் வீணாக்கி வருகிறார்களே.

இந்த நிலையில் பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக்கம் மிகமிகத் தேவையானதே திராவிடர் கழகக் கொள்கை, மக்கள் ஒவ்வொரு வரும் எதையும் துணிவுடன் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும் என்கிறது. பெரியார் அவர்களின் சுறுசுறுப்பும், இடைவிடாத முயற்சியும், துணிவும், வாழ்க்கைமுறையும் என்னைக் கவர்ந்திருக்கிறது. மேலும் அவர் கருத்துகளை ஏற்று பிறரிடமிருந்து எதையும் எதிர்பாராமல், உறுதியுடன் செயல் ஊக்கத்தையும் கொண்ட தொண்டர்கள் கழகத்தில் ஏராள மானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் நெருங்கிப் பழகுவது எனக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கொடுக்கிறது. இவைகளே என்னை இன்னும் பெரியார் தொண்டனாக கழகத் தொண்டனாக இருக்கச் செய்கிறது என்றார். செல்வச் செருக்கும், கல்விச் செருக்கும் சிறிதும் இல்லாத நரசிம்மன் தன்னுடைய தலைவர் மீதும், கழகத்தின் மீதும், தொண்டர்கள் மீதும் எத்தகைய அன்பும், மரியாதையும், ஈடுபாடும் வைத்திருந்தார் என்பதை இக்கட்டுரையில் விளக்குகிறார்.

மறைவு

இத்தகைய கொள்கை உறுதிமிக்க சாதி ஒழிப்புப் போராட்ட வீரரும் சுயமரியாதை இயக்க வீரருமான தோழர் ஆனைமலை நரசிம்மன் அவர்கள் 02.07.1967 அன்று இயற்கை எய்தினார்.

சென்னை மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த தோழர் பெரியார் ஆனைமலை செல்ல வேண்டும் என்று துடித்தார். மருத்துவர்கள் அடியோடு மறுத்துவிட்டனர். அதனால், மணியம்மை யாரும் போகமுடியவில்லை. 03.07.1967 விடுதலையில் பெரியார் எழுதினார்.

“கழகத்தின் கண்போன்ற தோழர் நரசிம்மன் அவர்களை இயக்கத்தின் முக்கியப் பொறுப்பில் எனக்குப் பின்னால் அமர வைக்க நினைத்திருந்தேன். ஆனால் அவர் என்னை முந்திக் கொண்டார். எவ்வளவோ செல்வக் குடும்பத்தில் பிறந்தும் துறவிபோல், என்னிடம் உண்மை, அன்புவைத்து, என்னோடு சுற்றிக் கொண்டிருந்தார். அருமை நண்பர், அனைவரும் பின்பற்றத்தக்க மனிதர் (Exemplary) என்று தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்.

27.08.1967 விடுதலையில் தோழர் ஏ.என். நரசிம்மன் அவர்களின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து, நாடெங்கிலும் உள்ள திராவிடர் கழகக் கிளைகள் நிறைவேற்றி அனுப்பிய இரங்கல் தீர்மான விவரம் விடுதலை யின் கடைசிப் பக்கத்தை நிறைத்து வந்தது.

அமைதிப் புரட்சியாளராக சாதி ஒழிப்பில் தீவிரக் களப் பணியாளராகப் பணியாற்றிய தோழர் ஆனைமலை நரசிம்மன் திராவிடர் கழக வானத்தில் சாதி ஒழிப்புச் சுடர் ஒளி வீசுகிறார்.

நன்றி:

1) சட்ட எரிப்புப்போராளி தோழர் ஏ.எம்.திருமூர்த்தி அவர்கள் தோழர் நரசிம்மன் அவர்களின் நேர்முக உதவியாளரைப் போலச் செயல்பட்டு வந்தவர். அன்னார் வாய்மொழியாகக் கூறிய பல தகவல்களை குறிப்பேட்டில் பதிய வைத்திருந்து - காட்டாறு குழு அணுகிக் கேட்டவுடன் அப்பதிவுகளை அளித்து இக்கட்டுரையின் ஆக்கத்திற்கு உதவிய தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் ருக்மணி அவர்களுக்கும்,

2)  திராவிடர் கழக வெளியீடுகளான வடநாட்டில் பெரியார் ஒரு சுற்றுப் பயணத் தொகுப்பு தொகுதி 1 மற்றும் 2

3) தமிழ்க் குடிஅரசு பதிப்பகம் சென்னை 5 -வெளியீடான “தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு” நூல்களுக்கும்

4) தோழர் நரசிம்மன் அவர்களின் நூற்றாண்டுவிழா 2006 இல் வந்தபோது தோழர் ஆனைமலை நரசிம்மன் அவர்களின் அபிமானிகள் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆனைமலைக் கிளையால் வெளியிடப் பட்ட துண்டறிக்கைக்கும்.

5) தோழர் ஏ.எம்.மாசாணி அவர்களின் மகனும், முன்னாள் பேரூராட்சி உறுப்பினரும், கிராம நிர்வாக அலுவலரும் (பணி ஓய்வும்) பெற்றவருமான தோழர் மா.சாமிநாதன் அலைபேசியில் பல செய்திகளை பகிர்ந்துகொண்ட அவருக்கும் நன்றி.

Pin It