ரோஹித் வெமூலாவின் அந்தக் கடிதத்தில் இருந்த மரணக் குறிப்பு மிக மிக மென்மையானதே! ரத்தத்தைச் சூடாக்கும் அல்லது அணுக்களைக் கிளர்ந்தெழச் செய்யும் நேரிடையான அறைகூவல் ஏதும் அதிலில்லை. சமூக இழிவை எதிர்த்து சமநீதிக்காகப் போராடிக் கொண்டிருந்த இளைஞனொருவனின் விருப்பத்தை, கனவை, தேடலை, பின்னடைவை, தோல்வியை, வெறுமையை, அன்பை மிகுந்த அமைதியுடன்  அவ்விறுதிக் கடிதம் நமக்குச் சொல்கிறது. 

Dalit Rhothi 600ஒருவேளை ரோஹித்தின் பண்புநலன்களோ, கருத்தியல் புரிதல்களோ நமக்குத் தெரியாமல் போயிருந்தால், வாழ்வை எதிர்கொள்ள முடியாத அழுத்தத்தில் முடிவைத் தேடிக் கொள்ளும் பரிதாபத்திற்குரிய ஏனையோரின் மரண வாக்குமூலங்களில் ஒன்றாகவே அவரது இறுதிக் கடிதமும் நிலைத்திருக்கும். ஆனால், உயிருடன் இருந்த கடைசி நொடி வரையிலான ரோஹித்தின் எண்ணங்களும் செயல்பாடுகளும் துடிப்பும் சமூக நீதிக்கானதாக அத்தனை உண்மைத்தன்மையுடன் இருந்ததினால் அக்கடிதத்தில் உள்ள ஒவ்வொரு சொல்லும் உயிர்த்தெழுந்தது.

அதனாலேயே அது எல்லைகளை உடைத்து பலரது இதயங்களையும் சுண்டும் வேலையைச் செய்கிறது. சேரிகளில் சுமந்த சாதிய இழிவை உயர் கல்வி நிலையங்களில் அனுபவிக்கும் இந்தியாவின் ஒடுக்கப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்த எண்ணற்ற முதல் தலைமுறை இளைஞர்களின் இன்றைய அடையாளமாக மாறியிருக்கும் ரோஹித் வெமூலாவின் கடிதமே ஆயுதமாகி போராட்டத்திற்கான களத்தை அமைத்துக் கொடுத்திருக்கும் இவ்வேளையில் இரண்டு கேள்விகள் நம் முன்னே உறுதியாக எழுந்து நிற்கின்றன.

ஒன்று அது ’எத்தனை நியாயங்கள் கற்பிக்கப்பட்டாலும் ரோஹித்தின் மரணம் ஏற்புடையதாகிறதா? இரண்டாவது, தன் உயிரையே கொடுத்து ரோஹித் அமைத்துத் தந்திருக்கும் (போர்)களத்தில் அமர்ந்து கொண்டு நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

ரோஹித் போன்ற ஓர் உறுதிமிக்க அம்பேத்கரியவாதி இப்படியொரு முடிவைத் தேடிக் கொண்டது அம்பேத்கரியக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வோர் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை மேலும் சிக்கலாக்குகிறது. இந்நாட்டில் உள்ள சாதியவாதிகளை ஒப்பிடும்போது, சாதி ஒழிப்பை வாழ்வின் லட்சியமாக்கிக் கொண்ட அம்பேத்கரியவாதிகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.

அந்த மிகச் சிலரில் ஒவ்வொருவரும் தம் வாழ்நாள் துடிப்பனைத்தையும் திரட்டி சாதிக்கு எதிராகப் போராடியாக வேண்டிய தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில் அம்பேத்கரியவாதிகள் ஒவ்வொருவரும் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டியது சமூக விடுதலைப் போராட்டத்தின் பொறுப்புமிக்கச் செயல்பாடாகிறது.  அம்பேத்கர் மாணவர் பேரவையின் தலைவராக இருந்து சாதியத்தை வேரறுக்க உழைத்த ரோஹித்தின் இருப்பும் இழப்பும் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அவரே உணராமல் போனதுதான் வேதனை.

 இது போன்ற தற்கொலைகள் உணர்ச்சிக் கொந்தளிப்பிற்கும் அரசியல் விளையாட்டுக்கும் பயன்படுகிற அளவிற்கு, அம்பேத்கரது, ரோஹித்தினுடையது, நம்மை போன்ற அம்பேத்கரியவாதிகளது லட்சியமான சாதி ஒழிப்பிற்கு எள்ளளவும் பயன்படப் போவதில்லை. இதற்கு முன்னர் நடந்த தற்கொலைகளில் நாம் கற்ற படிப்பினையும் அதுவே.

சமூக மாற்றம் நிகழ்ந்துவிடுமென தமது உயிரையே விலையாகக் கொடுத்தவர்களுக்கு தம் மரணம் சிறு அசைவையேனும் இந்த கெட்டித்தட்டிப்போன அமைப்பில் உண்டாக்கிவிடாதா என்ற ஆதங்கமும் எதிர்பார்ப்பும் இருந்திருக்கும். ஆனால் இங்கே என்ன நடந்தது? கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் அதிக அதிர்வலைகளை ஏற்படுத்திய தற்கொலைகள் முத்துக்குமார் மற்றும் செங்கொடியினுடையது. அவர்கள் என்ன காரணத்திற்காகத் தீக்குளித்தார்களோ அந்தக் காரணங்கள் அப்படியே இருக்கின்றன. ஆனால் அவர்கள் இல்லை.

அவர்கள் தற்கொலை செய்து கொண்ட போதும் இதே போன்ற தற்காலிகக் கொந்தளிப்புகள் களைகட்டின! அந்தக் கொந்தளிப்புகள் ஒருவகையில் அந்த அநியாய மரணத்தை நியாயப்படுத்துவதாகவும் அமைந்தன. தற்கொலைகளின் தன்மை இதுதான். தனிப்பட்டதோ சமூகத்திற்கானதோ அவை தற்காலிக கொந்தளிப்புகளை நிச்சயம் உண்டாக்குகின்றன. அதற்கு மேல் அவற்றால் ஒரு  பயனுமில்லை. ரோஹித்துடைய மரணமும் அவ்விடத்தை விரைவில் எட்டிவிடும்.

‘வெகுகாலத்திற்கு முன்னரே இயற்கையிடமிருந்து மனிதர்கள் துண்டிக்கப்பட்டுவிட்டதை அறியாமலேயே நான் அவர்களை நேசித்தேன். காயப்படாமல் நேசித்தல் என்பது உண்மையிலேயே கடினமானதொன்றாகிவிட்டது. மனிதர்கள் ஒருபோதும் நட்சத்திரத் துகள்களால் ஆன அற்புதமாகக் கருதப்படுவதில்லை. என் பிறப்பு ஒரு மோசமான விபத்து. என் குழந்தைமை காலத்து தனிமையிலிருந்து என்னால் மீளவே முடியவில்லை. கடந்த காலங்களில் இருந்தே மெச்சப்படாத குழந்தை நான்’- ரோஹித் தன் மரணக் குறிப்பில் இப்படி எழுதுகிறார். 

ரோஹித் போன்றவர்களுக்கு சில உண்மைகளை நாம் சொல்ல வேண்டி இருக்கிறது, தீண்டத்தகாதவர்களாகப் பிறக்க நேரிட்ட ஒவ்வொருவரின் இதயத்தைப் பிளந்து பார்த்தாலும் இப்படியான சொற்களையும் குமுறல்களையும் அலையலையாகப் பார்க்க முடியும். அண்மையில் தற்கொலை செய்துகொண்ட விழுப்புரம் மாவட்டம் ஆசனூர் கிராமத்தைச்  சேர்ந்த துப்புரவுப் பணியாளர் அய்யாறு தனது தற்கொலைக் குறிப்பில், ’பஞ்சாயத்துத் தலைவர் சாந்தியினுடைய கணவர் செல்வராஜின் ஆணைகளை நான் ஏற்க மறுத்தால் அவர் என்னை கடுஞ்சொற்களால் திட்டுவார். அதை எதிர்த்து நான் கேள்வி கேட்டால், நான் கீழ்ச்சாதியில் பிறந்தவன் என்பார்.

அப்போதெல்லாம் நான் இவ்வுலகில் வாழத் தகுதியற்றவனாக உணர்வேன்’’ - 20களின் பிற்பகுதியில் இருக்கும் அய்யாறுவின் தற்கொலைக் குறிப்பு இப்படி முடிகிறது, ‘பயம் என்பது ஒரு துளி விஷத்திற்கு இணையானது’. ரோஹித் உணர்ந்த வலிக்கும் வெறுமைக்கும் எவ்வகையில் குறைந்தது அய்யாறுவினுடையது? ரோஹித்தைப் போல ஆழ்ந்த வாசிப்பனுபவம் இல்லாத, கருத்தியல் ரீதியாக பலப்படாத, ரோஹித் அளவிற்கான கல்வித் தகுதியும் இல்லாத அய்யாறுவை இப்படியொரு கனத்த வரியை எது எழுத வைத்திருக்கக் கூடும்! இந்நாட்டின் தலித்துகள் ஒவ்வொருவருக்கும் அவர்களது வலிகளே வார்த்தைகளாகின்றன. ஆனால், ரோஹித்தின் கடிதத்தில் இச்சமூகம் உணர்ந்த அநீதியை அய்யாறுவின் கடிதத்தில் உணரவில்லை? ஏன் இப்படியொரு கடிதம் எழுதப்பட்டு அய்யாறு தற்கொலை செய்து கொண்டதே பலருக்கும் தெரியாது.  

சாதி கடந்து சக மனிதரோடு புழங்குவதற்கு தடைவிதிக்கப்பட்ட கொடுமையை தலித் மக்கள் எத்தனை நூற்றாண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். காதலுக்கும் அன்பிற்கும் நட்புணர்வுக்கும் எல்லைகளில்லை என்ற போதும் அவற்றை சேரிகளுக்குள், தம் புலன்களுக்குள் முடக்கிக் கொள்ள அவர்கள் எத்தனை காலமாகக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். எண்ணிப் பாருங்கள், எத்தனை தலைமுறைகளாகக் கடத்தப்படும் தனிமைப்படுத்துதல் இது!

கண்களில் நட்சத்திரங்களைச் சுமந்து கொண்டு படிப்பை பாதியில்விட்டு, பிணமெரிப்போர், செருப்புத் தைப்போர், மலக்குழிகளுக்குள் இறங்குவோர் எத்தனை எத்தனை! இந்நாட்டில் தலித்தாகப் பிறப்பதென்பது தலித்துகள் அனைவருமே எதிர்கொள்ளும் மீட்சியில்லா மோசமான விபத்துதான். எந்த தலித் குழந்தையும் அதன் திறமைக்காக, அறிவுக்காக, ஆர்வங்களுக்காக, சாதனைகளுக்காக எப்போதுமே மெச்சப்படுவதில்லை.

சுய உழைப்பில் எத்தனை பெரிய உயரங்களை தலித்துகள் எட்டினாலும் அவ்வுயரங்களை அரூபமாக்கிவிடுவதில் இச்சமூகம் வல்லமை பெற்றது. அம்பேத்கருக்கே அதுதான் நேர்ந்தது. மறுப்பதற்கில்லை.

ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர்கள் சாதி ரீதியான ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டதும், அதை எதிர்த்த போது ஆதிக்கசாதி இந்துத்துவவாதிகளின் அழுத்தத்தின் பேரில் பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டதும் ஏற்கவியலா அத்துமீறல்களே!

ஆனால் இந்த அத்துமீறல்கள் எங்குதான் இல்லை? இருளையும் ஒளியையும் போல திட்டுக்களாக இல்லாமல் சாதி ஆதிக்கமானது காற்றைப் போல எங்கெங்கும் நிறைந்திருக்கும் சமூகமல்லவா இது? அந்த அத்துமீறலை எதிர்த்து நின்றிருக்க வேண்டுமென நாம் எதிர்பார்ப்பது கருத்தியல் ரீதியாக பலப்படாத சாமானியரிடம் அன்று. அம்பேத்கர் மாணவர் பேரவையின் ஊக்க சக்தியாக இருந்து பற்பல மாணவர்களையும் வழிநடத்திய ரோஹித் என்ற அம்பேத்கரியவாதியிடம்.

அம்பேத்கரை முழுமையாக உள்வாங்கியவர்கள் சமூகத் தளத்தில் ஒருபோதும் எதிர்மறைவாதியாக இருக்க முடியாது; தோல்விகளும் நெருக்கடிகளும் அவர்களுள் கனன்றெரியும் நம்பிக்கைத் தீயின் மீது நீர் ஊற்றி அணைத்துவிட முடியாது. சாதி என்பது மனித மாண்புரிமையின் மீதான மிகப்பெரிய நெருக்கடி என்பதை உணர்ந்தவர்களே அம்பேத்கரியவாதிகளாக இருக்கவியலும்.

ரோஹித் நம்பியதைப் போல, உண்மையிலேயே, மரணத்தால் தற்கொலைகளால் நம்மை நம் துயரங்களிலிருந்தும் இழிவுகளிலிருந்தும் விடுவித்துவிட இயலுமா? இங்கே ’நாம்’ என்பது தனிநபரையா குறிக்கிறது? நாம் என்பது நம்மைப் போன்ற எல்லோரையும் சுட்டுகிறதெனில், ஒடுக்கப்பட்டவர்கள்  எல்லோருமே மரித்துவிடுவதா நம்மை இழிவு செய்யும் இந்து மதத்திற்கும் சாதிய கட்டமைப்புக்கும் எதிராக நாம் ஆற்றும் ஒரே எதிர்வினை? நமது வேலை மரித்துப் போவதா அல்லது நம்மை சிதைக்கும் சாதியை மரிக்கச் செய்வதா? எது நம்மை குழப்புகிறது, எது நம்மை சோர்வடையச் செய்கிறது? நிற்பது போர்க்களமென  அறிந்துவிட்ட பின்னர் சோர்வடைதல் தகுமா? 69 ஆண்டுகால சுதந்திர, குடியரசு இந்தியாவில் 18 கோடி தலித்துகள் சாதியின் பெயரால் வதைக்கப்பட்டதாக, கொல்லப்பட்டிருப்பதாக தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் சமீபத்திய தொகுப்பறிக்கை குறிப்பிடுகிறது.

நாம் போராட வேண்டியது ரோஹித் என்ற ஒற்றை மனிதரை முன் வைத்தா அல்லது இந்த 18 கோடி பேரின் மரணம் மற்றும் துயரத்திற்கு நியாயம் கேட்டா? நாம் இவ்வாறுதான் தனித்தனியான நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கப் போகிறோமா அல்லது கருத்தியல் ரீதியான மாற்றத்திற்குத் தேவைப்படும் களப்பணியை ஆற்றப் போகிறோமா? இந்த கேள்விகளுக்கான விடைதான், அடுத்த 70 ஆண்டுகளில் தலித்துகளின் நிலை குறித்த தொகுப்பறிக்கையில் நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை உண்டாக்கச் செய்யும்.

இப்போதும் கூட ரோஹித் வெமூலாவின் கடிதம் பேசப்படும் அளவிற்கு  அவரது மரணத்திற்கான காரணங்கள் பேசப்படவில்லை. ரோஹித்தின் வார்த்தைகள் பொதுச் சமூகத்தின் குற்றவுணர்ச்சியைக் கிளறும் வகையில் இருப்பதால் அதைப் பற்றி நல்லவர்களாக சில நாட்கள் பேசிக் கொண்டிருப்போம். நாள்தோறும் தீண்டாமைக் கொடுமைகளையும் பாகுபாடுகளையும் அனுபவித்து வரும் தலித் மக்கள் விரக்தியுற்று தற்கொலை செய்து கொண்டாலோ, வன்கொடுமைக்கு பலியானாலோ அவர்களின் துயரங்களை மட்டும் பேசும் சாதி இந்து சமூகம் அதற்கான காரணங்களை ஒருபோதும் பேசத் துணிவதில்லை.

சமூகத்தின் எல்லா நிலைகளிலும் நிலவும் பாகுபாடுகளைப் போலவே கல்வி/உயர்கல்வி நிறுவனங்களிலும் சாதிய ஒடுக்குமுறைகள் ஆழமாக வேரூன்றியுள்ளன. இருபது கோடி தலித் மக்களில் வெறும் 2.24 விழுக்காட்டினரே (44 லட்சத்து 80 ஆயிரம் பேர் மட்டுமே) பட்டதாரிகளாக இருக்கின்றனர் என்கிறது மக்கள் தொகை புள்ளிவிபரம். இதில் உயர்படிப்பு , ஆய்வு மாணவர் என்ற இடத்தை வெகு சிலரே எட்ட முடியும் என்ற அவலநிலைதான் 69 ஆண்டுகால சுதந்திரத்திற்கு பின்னரும் நீடிக்கிறது. மத்திய, மாநில அரசுகள்,   தொழிற்படிப்பு கல்வி உதவித் தொகையாக தமிழகத்திற்கு வழங்க வேண்டியது 2014&-15 இல் 1,147 கோடி ரூபாய்.

ஆனால் வழங்கப்பட்டதோ 334.77 கோடி ரூபாய் மட்டுமே! ஆதிதிராவிடர் பழங்குடியினர் துறையின் கீழ் பராமரிக்கப்படும் சுமார் 1,300 தலித் விடுதிகளின் நிலையைப் பார்த்தாலே புரியும் சாதிய அவலத்தின் எல்லை.

ஆனால் யாரேனும் செத்துப் போனாலேயொழிய நமக்கு அது செய்தியாவதில்லை. செத்துப் போனாலும் கூட, அதற்கு முன்னர், உணர்ச்சிகளுக்கு ஆட்பட்ட அறிவுச் சமூகத்தைச் சலனப்படுத்துகிற வகையில் தேர்ந்த ஆங்கிலத்தில் உயர்தர மொழிநடையில் மரணக் குறிப்பை எழுதி வைத்துவிட வேண்டும். அப்போதுதான் சுரணைகள் கிளறப்பட்டு அது சற்றேனும் எதிர்வினையாற்றும்.  இப்போதும் கூட ரோஹித் பற்றியான விவாதம் தனிநபரை மையப்படுத்தியதாகவே நகர்கிறது. இங்கே நிலவும் சாதியப் பாகுபாடுகள் குறித்த பரந்துபட்ட விவாதமாக அது மாறவில்லை. மாறவும் மாறாது.

மரணத்தை விடவும் கொடூரமான எத்தனை வகையான சாதிய இழிவுகள் தலித் மக்கள் மீது ஏவப்படுகின்றன? ஆனாலும் மரணம்தான் குறைந்தபட்சம் அதை பேசுபொருளாகவேணும் ஆக்குகிறது என்பதாலேதான் ரோஹித் போன்ற அறிவாளிகள் கூட, ’மரணத்தை மிஞ்சிய விடுதலை இல்லை’ என்கிறார்கள்.  ஆனால் இச்சமூகத்தின் சாதிய கட்டமைப்பை தமது அறிவாற்றலாலும் இடையறாத உழைப்பாலும் போர்க்குணத்தாலும் அசைத்துப் பார்த்த இருபெருந்தலைவர்களான அம்பேத்கரும் பெரியாரும் உடலை வருத்துகிற காந்தியின் பட்டினிப் போராட்டத்தையே கடுமையாக எதிர்த்தனர்.

சமூக மாற்றத்திற்காகப் பணி செய்யும் போராளிகள் இறுதி மூச்சு வரை போராட வேண்டுமென்பதுதான் விதியே தவிர, போராட்டத்தின் அடையாளமாக உயிரை மாய்த்துக் கொள்வதென்பது அம்பேத்கர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து (கருத்தியல்) தேரை பின்னோக்கி இழுக்கும் செயலாகிறது.

அம்பேத்கரிடமிருந்து அம்பேத்கரியவாதிகள் கற்க வேண்டிய முதல் பாடமே சோர்வின்மையும் நேர்மறை அணுகுமுறையும் விடாமுயற்சியும்தான். தன் மீதான ஒடுக்குமுறைகளுக்கு மரித்திருக்க வேண்டுமெனில் அம்பேத்கர் எத்தனை முறை மரித்திருக்க வேண்டும்! அம்பேத்கரியவாதியான ரோஹித்தை நெஞ்சில் ஏந்தியிருக்கும் எண்ணற்ற இளைஞர்கள் ரோஹித்தின் தவறான முடிவை ஒருபோதும் தீர்வெனக் கருதிவிடக் கூடாது. அவர்கள் ஒருபோதும் அம்பேத்கரியத்தை இத்தனை  வலுவற்றதாகப் புரிந்துகொண்டுவிடக் கூடாது. 

நாம் வாழ்கிற காலத்தில் நம்மால் சாதியை ஒழித்துவிட முடியாதுதான். ஆனால் என்றோ நிகழப் போகும் அந்த லட்சிய நோக்கத்திற்கு, அற்புத நிகழ்வுக்கு நாமெல்லோரும் நமது வாழ்நாளில் நிறைவாக உழைக்க வேண்டும். சோர்ந்துவிடாமல், நம்பிக்கையை இழந்துவிடாமல் நமது அறிவாயுதத்தை சாதியை ஒழிக்கும் வரை தலைமுறைகளுக்குக் கைமாற்றித் தர வேண்டும். அவ்வளவுதான்.

“இவ்வுலகை சீர்கெடுக்க நினைப்போர் ஒருநாள் கூட ஓய்வெடுப்பதில்லை. நான் ஏன் ஓய்வெடுக்க வேண்டும்?’’ கருப்பினப் பாடகரான பாப் மார்லேயின் இந்த வரிகள் இதயத்தில் இருக்கட்டும். சாதியைக் காப்பாற்றுகிறவர்கள் ஓய்வின்றி வேலை செய்யும்போது, நமது சாதி ஒழிப்புப் பணிக்கு மரணம் கூட எவ்வகையிலும் இடையூறாக வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்போம்.

நாம் போராட வேண்டியது ரோஹித்தை முன் வைத்தன்று, அம்பேத்கரை முன்னிறுத்தி! நாம் எடுத்துச் செல்ல வேண்டியது ரோஹித்தின் கடிதத்தை அன்று, அம்பேத்கரின் கருத்தியலை. அதைச் செய்யவிடாமல்தான் ரோஹித் தடுக்கப்பட்டார், அதற்காகத்தான் அவர் மரித்தும் போனார். ரோஹித்தின் தற்கொலையை வைத்து உணர்ச்சி நாடகங்களை நடத்தி, அக்கொலையை ஓர் ஒற்றை நிகழ்வாக ஆக்கிவிடாமல் அம்பேத்கரின் சாதி ஒழிப்புக் கருத்தியலுக்காக உழைப்பதுதான் ரோஹித்தின் மரணத்திற்கு நாம் கோரும் சரியான நீதி!

அதைச் செய்ய நாம் தயாராகாத வரை நம் பக்கம் விழும் பிணங்களின் எண்ணிக்கைக்கு முடிவே இருக்கப் போவதில்லை. சாதிக்கு பலி என்பது ரோஹித்தில் தொடங்கவும் இல்லை; ரோஹித்துடன் முடிவதும் இல்லை. அதனால் நபர்களையும் நிகழ்வுகளையும் கடந்து நாம் கருத்தியல் மாற்றத்திற்கு உழைக்கத் தயாராக வேண்டும்.

அம்பேத்கரியவாதிகளுக்கு அதைத் தவிர வேறு வாழ்நாள் கடமை இல்லை.                            

Pin It