தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் துப்புரவுப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட 156 பேர் இறந்துள்ளனர். அண்மையில் வெளிவந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாநில அரசு பத்து லட்ச ரூபாய் இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும். குறிப்பாக, கிராமப் புறங்களில் துப்புரவுப் பணியாளர்கள்தான் மனித மலத்தையும் அகற்றுகின்றனர். எனவே, துப்புரவுப் பணியாளர்களும் கையால் மலமள்ளும் தொழிலாளர்களாகக் கருதப்பட்டு அவர்களுக்கும் மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.

– எம். ராமைய்யா, அமைப்புச் செயலாளர். தமிழ்நாடு ஆதி ஆந்திரா அருந்ததியர் மகாசபை

‘மேக் இன் இண்டியா'

“நாடு முழுவதும் 40 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 20 கோடி மக்கள் ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களுக்கு மிக அருகில் வசிக்கின்றனர். ரயில்களில் உள்ள கழிவறைகளை தினமும் 4 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்து கின்றனர். இதனால் நாள்தோறும் 400 டன் என்ற வகையில் 1.46 லட்சம் டன் மனிதக் கழிவுகள் இந்தியா முழுவதும் ரயில் தண்டவாளப்பகுதிகளில் தேங்குகின்றன. இக்கழிவுகளிலிருந்து 60 லட்சம் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் காற்றில் பரவுகின்றன. இதனால் தண்டவாளங்களுக்கு அருகில் வசிப்போர் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆட்படுகின்றனர்.''

– மதுரை உயர் நீதிமன்றத்தில் டி. தர்பார் ராஜா தொடுத்துள்ள பொதுநல வழக்கில்...

 பிரதமர் அவர்களே, முதலில் பசுமைக் கழிவறைகளை இந்தியாவில் தயாரியுங்கள்!

செந்தமிழ் பேசுவோரை வெளியேற்றுவது ஏன்?

dalit family

 

ஊரைவிட்டே துரத்தப்பட்ட -ஜீவதினேஷ், கணேஷ், ஜெயந்தி, அபினேஷ்

நத்தம்பட்டி கிராமம் திருச்சி திருவெறும்பூருக்கு அருகில் உள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் – ஜெயந்தி தலித் இணையருக்கு ஜீவதினேஷ், அபினேஷ் என்ற இரு மகன்கள். அக்கிராமத்தில் உள்ள பாலமுத்து என்ற சாதி இந்து, இருபது அடி ஆழம் உள்ள குளத்தில் நீச்சல் தெரியாத ஜீவதினேஷை 6.4.2014 அன்று தள்ளிவிடுகிறான். தத்தளிக்கும் ஜீவதினேஷைப் பார்த்து எள்ளி நகையாடுகிறான். இதைக் கண்ட அபினேஷ் வீட்டுக்குச் சென்று தன் தந்தையை அழைத்து வந்து அண்ணனை மீட்டெடுக்கிறான். இதைத் தட்டிக்கேட்ட தாய் ஜெயந்தியையும் குளத்தில் தள்ளிவிடுகிறான் பாலமுத்து. மேலும், வீட்டிற்கு அடியாட்களை அழைத்து வந்து இக்குடும்பத்தினரை செருப்பால் அடித்துள்ளான். “இக்கிராமத்தில் உள்ள ஒரே தலித் குடும்பம் நாங்கள்தான் என்பதால் எங்களை ஜாதி இந்துக்கள் விரட்டுகின்றனர். காவல் துறையில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நாங்கள் ஊரைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை'' என்கிறார் கணேஷ் ("இந்தியன் எக்ஸ்பிரஸ்' 26.4.2014). சேரித்தமிழன் செந்தமிழ் பேசினாலும் அயலான்தானா?

எங்கே போனார்கள் கருத்துச் சு’தந்திர'வாதிகள்?

ஊரெங்கும் புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. சமூக வலைத்தளங்களை எல்லாரும் பயன்படுத்தும் அளவுக்கு மக்கள் நாயகம் தழைத்தோங்குவதாக நா வலிக்க கத்துகிறார்கள். ஆனால், சமூக நடைமுறை எப்படி இருக்கிறது? “தங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தலித் இளைஞர் அக்கிராமத்தில் நிலவும் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளைப் பற்றி ஒரு சிறுகதை எழுதி அதை சிறு நூலாகவும் வெளியிட்டிருப்பதால், புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜாதி இந்துக்கள் அந்த தலித் எழுத்தாளரின் குடும்பத்தை ஊரைவிட்டே ஒதுக்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள குளந்திரன்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த து. குணசேகரன் "ஊரார் வரைந்த ஓவியம்' என்ற சிறுகதையை 12.7.2014 அன்று வெளியிட்டிருக்கிறார். இதற்கு பிறகு அவருக்கும் குடும்பத்தினருக்கும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. குணசேகரனின் தந்தை தமது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கும்படி புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இதற்குப் பிறகு இக்கிராமத்தில் மணல் குவாரியில் வேலை செய்து கொண்டிருந்த பத்து தலித்துகளை வேலையை விட்டு விரட்டியடித்துள்ளனர்; எந்த ஒரு தலித்தும் சாதி இந்துக் கடைகளில் பொருட்கள் வாங்கக்கூடாது என்றும் தடை விதித்துள்ளனர்'' ("இந்தியன் எக்ஸ்பிரஸ்' 13.8.2014).

“இதேபோல, கொத்தமங்கலத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு "கருவாட்டு ரத்தம்' என்ற நூலை எழுதிய ம.மு. கண்ணனின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டு, அவர் ஊரை விட்டே விரட்டப்பட்டிருக்கிறார். இது குறித்து கண்ணன் கூறும்போது, “உண்மையை எழுதியதற்காக என்னை இந்தளவிற்கு தொந்தரவு செய்கிறார்கள். ஆனால், எனது புகார் மனு மீது நீரமங்கலம் காவல் நிலையத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதும் என்னை ஊருக்குள் நுழைய அனுமதிப்பதில்லை. இவ்வாறு கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் புத்தகம் எழுதுவோர் விரட்டியடிக்கப்படும் சம்பவம் குறித்து போலிசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எழுத்தாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்'' என்கிறார் ("தி இந்து' தமிழ் 17.8.2014). போலிசார் தலித்துகளுக்குப் பாதுகாப்பு கொடுத்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள்!

புதிதாக முளைத்துள்ள டி.எம். கிருஷ்ணா என்ற முற்போக்குவாதி, "தி இந்து' (மே 14, 2014) தமிழ் ஏட்டுக்கு அளித்துள்ள பேட்டியில், “ஒரு பிராமணராகவோ, தலித்தாகவோ, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவோ யாருமே பிறப்பதில்லை. ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோதான் பிறக்கிறது'' என்று சொல்லிவிட்டு, அதற்கு அடுத்த நான்காவது வரியிலேயே “நான் ஒரு பிராமண குடும்பத்தில்தான் பிறந்தேன்'' என்று புரட்சித் திருவாய் மலர்ந்திருக்கிறார். இத்தகு புரட்சிகர கருத்துகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்காகத்தான் முழு பக்கத்தையும் அந்த ஏடு அவர் பேட்டிக்கென அர்ப்பணித்திருந்தது. வெறும் ஆணாக மட்டுமே பிறந்த குணசேகரனை கீழ் ஜாதி என்று இந்து சமூகம் தான் அடையாளப்படுத்தியிருக்கிறது. அதனால்தான் அவர் சமூக விலக்கம் (social ostracisation) செய்யப்பட்டிருக்கிறார். இது, மரண தண்டனையைவிட கொடியது என்கிறார் அம்பேத்கர். தன் சமூகம் சந்திக்கும் கொடுமைகளை எழுதியதற்காக ஒரு தலித் ஊரைவிட்டே துரத்தப்பட்டுள்ளார். கருத்துச் சுதந்திரம் பறிபோவதாக அவ்வப்போது கூக்குரலிடும் எவரும் துரை குணசேகரனுக்காகப் போராடவில்லை. அதற்கும் தலித்தாகப் பிறந்த ஒரு சத்தியச்

சந்திரன் என்ற வழக்குரைஞர்தான் உதவிக்கு வந்திருக்கிறார். இவருக்குப் பாதுகாப்பு வழங்கி மீண்டும் அவ்வூரில் வாழ மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

நன்றி கொன்ற இந்துக்கள்

dalit rameshதமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஜாதி பாகுபாடு அதன் உச்ச நிலையை அடைந்துள்ளது. பாட நூல்களில் இடம் பெற்றுள்ள டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்களுக்கு நடத்தக்கூடாது என விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில் உள்ள எஸ்.ஆர். அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளியில் படிக்கும் ஒரு தலித் மாணவர் சாதி இந்துக்களால் தாக்கப்பட்டு, தற்பொழுது மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் (பெயர் மறைக்கப்பட்டுள்ளது) அளித்துள்ள பேட்டியில், “ஆசிரியர்கள் அம்பேத்கர் தலைப்பில் பாடம் நடத்தத் தொடங்கினாலே சாதி இந்து மாணவர்கள் கேலி செய்யத் தொடங்கிவிடுவார்கள். சிலர் ஆசிரியர்கள் மீது கல்லெறிந்த சம்பவங்களும் உண்டு. சாதி இந்து மாணவர்கள் தங்கள் சாதி தலைவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்களை பள்ளியில் நடத்தும்போதுகூட, பள்ளி நிர்வாகிகள் அதைத் தடுப்பதில்லை. இதுபோன்ற சாதிய பாகுபாட்டை நாங்கள் எழுப்பினால், ஜாதி இந்து மாணவர்கள் தங்கள் ஜாதிக்காரர்களை அழைத்து வந்து நாங்கள் வீட்டிற்குப் போகும் வழியில் எங்களைத் தாக்குவார்கள்'' ("இந்தியன் எக்ஸ்பிரஸ்' 10.9.2014). அரசுப் பள்ளிகளின் நிலை இப்படியிருக்க, நீதிமன்றங்களின் நிலை எப்படி இருக்கிறது? “திண்டிவனத்தில் நீதிமன்ற அறையில் இருந்த அம்பேத்கரின் புகைப்படத்தை அகற்றும்படி தேவநாதன் என்ற சார்பு நீதிபதி ஆணையிட்டதாகவும் அதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யும்படி ஆணையிடக்கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது'' ("தினமணி' 31.5.2014). இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்கும் சட்டத்தை வடிவமைத்த ஒரு மனிதநேயச் சிந்தனையாளருக்கு இந்த நாடு காட்டும் நன்றியைப் பார்த்தீர்களா? வெட்கங்கெட்ட நாட்டின் நன்றி கெட்ட இந்துக்கள்.

யார் முதன்மைக் குற்றவாளி?

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் +1 படிக்கும் பி. ரமேஷ் (16) தன் கையில் வாட்ச் ஒன்றைக் கட்டியிருந்தார். ஒரு தலித் வாட்ச் கட்டுவதை சகிக்காத ஜாதி இந்துக்கள் வாட்சை பிடுங்கி எறிய முயன்றதை ரமேஷ் எதிர்த்தார். இதற்கு பிறகு இரு நாட்கள் கழித்து திருத்தங்கல் ரயில் நிலையம் அருகே நடந்து சென்ற ரமேசை 15 ஜாதி இந்துக்கள் வழிமறித்து, அவருடைய கைகளை கத்தியால் வெட்டியுள்ளனர். இவர்களிடமிருந்து தப்பித்த ரமேஷ் சிவகாசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். திருத்தங்கல் ரயில்வே காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் ("இந்தியன் எக்ஸ்பிரஸ்' 4.9.2014). “இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஜாதி அமைப்புகள் முக்கியப் பங்காற்றுகின்றன'' என்று சற்றும் கூச்சமின்றி எஸ். குருமூர்த்தி வாந்தியெடுத்ததை நாளேடுகள் வெளியிட்டுள்ளன ("தினமணி' 14.7.2014). இவ்வாறு ஜாதியை நியாயப்படுத்தி பேசுகின்றவர்கள்தான் வன்கொடுமை களுக்கு வழிவகுக்கின்றனர். எனவே, காவல் துறை இத்தகு முதன்மைக் குற்றவாளிகளைத்தான் முதலில் கைது செய்ய வேண்டும்.

Pin It