Karlmarx_title_620

கம்யூனிச மற்றும் சோசலிச இயக்கங்கள் அய்ரோப்பாவில் வெகு காலமாக இயங்கி வருகின்றன. அவர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தனர். தொழிற்சாலைகளும் எந்திரங்களும் மனித சமூகத்தின் எதிரிகள் என்றும் சுரண்டலின் காரணிகள் மற்றும் ஊற்றுகள் என்றும், உழைக்கும் வர்க்கத்தின் துயரங்களுக்கான காரணிகள் என்றும் அவற்றைத் தாக்கவும் அழிக்கவும் செய்தனர். இறுதியாக, டிசம்பர் 1847இல் கம்யூனிஸ்டுக் கட்சியின் அறிக்கையை தயாரிக்கும் பொறுப்பை மார்க்ஸ் மற்றும் ஏங்கல்சிடம் கம்யூனிஸ்டு  லீக் ஒப்படைத்தது. 30 நாட்களுக்குள்  "கம்யூனிஸ்டு கட்சியின் அறிக்கை' என்ற 30 பக்கங்களாலான சிறு வெளியீட்டை மார்க்ஸ் தயாரித்தார். இந்த அறிக்கை, ஆளும் வர்க்கத்தின் உறுப்பினர்களை அச்சத்தின் பிடியில் தள்ளியது. அவர்கள் தூக்கமற்ற இரவுகளை கழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

பின்னர், மார்க்ஸ் இந்த கருத்தியலை, "மூலதனம்' என்று அறியப்பட்ட தனது நூலில் விரிவாக விளக்கினார். இதில், கூடுதல் உழைப்புச் சுரண்டலுக்கான காரணத்தையும் உண்மையான ஊற்றையும் அவர் அடையாளம் காட்டினார். உற்பத்தித் திறனை பெருக்கும் எந்திரங்கள் உண்மையில் மனித சமூகத்தின் நண்பர்களே. அதிக செல்வத்தை உற்பத்தி செய்வது ஒரு சிக்கலாக இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. ஆனால், எந்திரங்கள் பன்முகச் சிக்கல்களுடன் தோன்றியவையாக உள்ளன.

முதலீட்டாளர்களின் லாப நோக்கம், உற்பத்தியின் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது. ஏனெனில், அதிக உற்பத்தி லாபத்தை குறைக்கிறது. எனவே தனது கருத்தியலில், மார்க்ஸ், சோசலிசத்தை உற்பத்தியின் உச்சத்தை எட்டும் ஒரு கட்டமைப்பாக சித்தரிக்கிறார். தனிப்பட்ட உடைமைகளுக்கு எவ்வித இடமும் கிடையாது. அதே நேரத்தில், நவீன முதலாளித்துவ முறையிலான பொருளாதார அமைப்பின் பாதிப்பின் கீழ் மனித இனத்தின் எதிர்கால வரலாற்றின் போக்கு, தனது இலக்கை அடைய வன்முறையின் பாதையைத் தேர்ந்தெடுக்கும் என்பதையும் அவர் வெளிப்படுத்துகிறார்.

தனது அறிக்கையின் முன்னுரையில் மார்க்ஸ் இவ்வாறு பதிவு செய்கிறார் : ""ஒரு பிசாசு அய்ரோப்பாவை பீடித்துள்ளது. அது கம்யூனிச பிசாசு. இந்த பிசாசை துரத்த பழைய அய்ரோப்பாவின் அனைத்து சக்திகளும் ஒரு புனித கூட்டணியில் இணைந்துள்ளன. போப், ஜார் (ரஷ்ய மன்னர்), மெட்டர்நிச், கய்சாட், பிரெஞ்சு அடிப்படைவாதிகள், ஜெர்மானிய காவல்துறை உளவாளிகள். இந்த சிறுபிள்ளைத்தனமான கதையான "கம்யூனிசபிசாசு' என்பதை, கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக, உலகத்தின் முன் எதிர்கொண்டு, தங்களின் கண்ணோட்டங்கள், நோக்கங்கள் மற்றும் தன்மைகளை கட்சியின் அறிக்கையாக வெளியிட வேண்டிய நேரம் வந்துவிட்டது.''

கம்யூனிஸ்டுக் கட்சியின் அறிக்கை என்பது மனித இனத்தின் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால வரலாறே அன்றி வேறொன்றுமில்லை. மனித நாகரிகத்தின் வரலாற்றின் அனைத்து மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிகளின் போக்கின் இரைச்சலில் ஒரு சிறந்த இசையைக் கண்டறிந்ததே மார்க்சியம் ஆகும். எனவே, மனித இனத்தின் வரலாறு குறித்த துல்லியமான ஒரு நிலையை அறிக்கை வெற்றிகரமாகக் கணித்தது. இது, கடந்த காலத்தின் அடிப்படையில் மனித சமூக வரலாற்றின் தற்போதைய நிலையை வெளிப்படுத்துவதாகவும், ஒரு கருத்தியலின் அடிப்படையில், மனித சமூகத்தின் வரலாற்றின் வளர்ச்சியில் எதிர்காலப் போக்கை கணிப்பதாகவும் இருந்தது. வேறு சொற்களில் சொல்வதானால், வரலாற்று ரீதியிலான சமூக மாற்றங்களின் அடிப்படையிலேயே அவரது கருத்தியல் எழுந்தது. மார்க்ஸ் சூழலை நன்றாக உணர்ந்திருந்தார்.

அதனால் அவர் இவ்வாறு எழுதினார் : "கம்யூனிஸ்டுகளின் கருத்தியல் முடிவுகள் எவையும், "இது'வோ அல்லது "அது'வோ முழுமையான சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் என்ற எந்த கண்டுபிடிப்பின் அடிப்படையிலும் உண்டானதல்ல. நிலவக்கூடிய வர்க்கப் போராட்டத்தின் விளைவாகவும், நமது கண் முன் நடந்து கொண்டிருக்கக் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இயக்கத்தின் விளைவாகவும் எழக்கூடிய உண்மையான உறவுகளை அது வெளிப்படுத்துகிறது. அவ்வளவே.''

நிகழ்காலம் என்பது கடந்தகாலத்தின் விளைவு மற்றும் இறுதி என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. தவிர்க்க இயலாமல் ஒரே தாளகதியுடன் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளையும் போக்கையும் சீர்தூக்கி, மனித சமூகத்தின் எதிர்கால வரலாற்றின் தவறற்ற விளைவை கணிப்பதும், சமூகத்தின் உற்பத்தித் திறனின் உச்ச பலனை அடைவதற்காக அதன் திசையை கட்டுப்படுத்தக் கூடிய வழிமுறையை கூறுவதுமே மார்க்சியம். எனவே, மார்க்சின் கருத்தியல், அறிவியல் சோசலிசம் எனப்படுகிறது. அதாவது, சோசலிசத்தின் துல்லியமான விளக்கம். சமூக உண்மைகளை அறிவியல் அடிப்படையில் விளக்குவது. அது, சமூக கூறுகளை தத்துவ ரீதியிலான வெற்றுக் கணிப்புகளாகக் கூறுவதல்ல. இதனால்தான் மார்க்சியத்தின் மற்றொரு பெயர் "வரலாற்றின் உலகியல் விளக்கம்' அல்லது மக்களின் மொழியிலான உலகியல் எனப்படுகிறது.

"மூலதனம்' என்ற தலைப்பில் மூன்று பாகங்களாக இது குறித்த மிக விரிவான விளக்கத்தை அளித்ததன் மூலம், அறிக்கையின் மதகுகளை மார்க்ஸ் திறந்து விட்டார். இந்த கருத்தியலானது, தனித்துவமான அறிவாற்றலைக் கொண்டதாகவும், அறிவு நுட்பத்தின் மிகத் துல்லியமான வெளிப்பாடாகவும் இருந்தது. ஆனாலும், இயற்கையின் விளைவாக, இந்த கருத்தியலை ஏற்றுக் கொள்வதால் தங்கள் சுகவாழ்வு பறிக்கப்படும் என்று மிரண்டவர்கள், இந்த கருத்தியல் கொடூரமானது என்றும், சாத்தானுடையது என்றும் உச்ச குரலில் கூக்குரலிட்டனர்.

தனது ஈடன் தோட்டத்தின் கீழ்ப்படிதலுள்ள காவலாளியும், தன்னால் சுரண்டப்படுபவருமான ஒருவர், நல்லது எது தீயது எது என்றும் நண்பர் யார் எதிரி யார் என்றும் பகுத்தறியும் அறிவாற்றலையும் புரிதலையும் பெறக்கூடிய "அறிவு மரத்தின்' பழங்களை உண்ண கற்றுக்கொடுக்கப்படுவதை எவரும் விரும்ப மாட்டார்கள் என்பது வெளிப்படையான உண்மை. அவ்வாறு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் சாத்தான் என்றே மகுடம் சூட்டப்படுவார்.

உண்மையில் சாத்தான் என்ன செய்தான்? "அறிவின் மரத்திலி'ருந்து பழங்களை உண்ணுமாறு ஆதாமிடம் கூறியதைத் தவிர அவன் வேறொன்றும் செய்யவில்லை. அவருடைய நோக்கமும் தீயதல்ல. அந்தப் பழங்களை உண்பதன் மூலம் ஆதாமும் அவரது துணையான ஏவாளும், "கடவுளை'ப் போல அறிவாற்றல் நிரம்பியவர்களாக மாறுவார்கள்; கடவுளைப் போல அவர்களாலும் நல்லது எது தீயது எது என்று பகுத்தறிய முடியும். ஆதாமை ஒரு பொய்யைச் சொல்லவோ அல்லது ஏதேனும் குற்றவியல் செயலைப் புரியவோ இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வரக்கூடிய எந்தவொரு செயலையும் செய்யவோ சாத்தான் தூண்டவில்லை.

ஆதாம் தனது தோட்டத்தில் இலவசமாகப் பணிபுரிய வேண்டுமென்று கடவுள் விரும்பினார். அதனால் "அறிவின் மரத்திலி'ருந்து பழங்களை உண்ணக்கூடாது என்று கட்டளையிட்டார். "அதை உண்டால் நீ நிச்சயம் சாவாய்' என கடவுள் ஆதாமை மிரட்டினார். மார்க்சும் தீயது எதையும் செய்யவில்லை. ஆனால் தீயவராக அழைக்கப்பட்டார். நவீன தொழில்மய "ஈடன் தோட்டத்தின்' பாதுகாவலர்களுக்கு அறிவின் பழங்களை அவர் அளித்ததாகத் தெரிகிறது. "உடையவர்கள்' எனப்படும் வர்க்கத்தினரால் ஊக்குவிக்கப்படும் சிந்தனையாளர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ எழுத்தாளர்கள் மார்க்சிய சிந்தனையை கூறு போட்டு ஆய்ந்து, தங்களுக்கு சாதகமாக அதை அழிக்க தங்கள் பேனாக்களை கையிலெடுத்தனர். அந்தக் கருத்தியலை சிதைத்தும் தவறாக விளக்கியும், அதை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பவும் செய்தனர்.

மார்க்ஸ் செய்ததையே டாக்டர் அம்பேத்கரும் செய்தார். பார்ப்பனிய சமூக அமைப்பினால் கல்வி பெறவோ, அறிவாற்றலைப் பெறவோ அனுமதி மறுக்கப்பட்டு, கண்களை மூடிக்கொண்டு அறியாமையில் இருந்த தனது மக்களை நோக்கி "கற்பி, போராடு, ஒன்று சேர்' என்று அறிவுறுத்தினார்.

மார்க்சிய கருத்தியல், இந்தியாவை தவிர மற்ற அனைத்து நாடுகளிலும் பணக்காரர்களுக்கும் அதிகாரத்தில் இருந்த அனைவருக்கும் சைபீரிய குளிரின் நடுக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கு மாறாக, இந்தியாவில், அதிகாரத்தில் உள்ளவர்களால் திறந்த மனதோடும் கரங்களோடும் மார்க்சியம் போற்றப்படுகிறது. அதுவும் குறிப்பாக இந்தியாவின் சில பகுதிகளில். இந்திய ஆளும் வர்க்கம் மார்க்சியம் போன்ற ஓர் அச்சமூட்டும் கருத்தியலை முழுமையானது என்றும் சமூகத்திற்குப் பயனளிக்கக்கூடியது

என்றும் அறியும்போது, "பாபாசாகேப்' என்ற சொல்லையோ "அம்பேத்கரியம்' என்ற கருத்தியலையோ கேட்ட மாத்திரத்திலேயே அச்சத்தாலும் வெறுப்பாலும் நடுங்குகின்றனர்.

இந்திய பார்ப்பனத் தலைவர்கள் மார்க்சியத்தைப் பிரச்சாரம் செய்யவும் கற்றுக் கொடுக்கவும் செய்கின்றனர். ஆனால், அம்பேத்கரியத்தை ஒதுக்குகின்றனர். அவர்களது அலுவலகங்களிலும் வீடுகளிலும் லெனின், ஸ்டாலின் மற்றும் மார்க்சின் படங்கள் தொங்குகின்றன. முக்கிய இடங்களில் அவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால், டாக்டர். அம்பேத்கர் மற்றும் பெரியாரின் படங்களோ சிலைகளோ கம்யூனிஸ்டுகளால் அவமானப்படுத்தப்பட்டும் அழிக்கப்பட்டும் உள்ளன.

இந்து ஆளும் சாதிகள், பெரியார் மேளா, அம்பேத்கர் மேளா அல்லது புலே, சாகு மகாராஜ் மேளா போன்றவற்றை நடத்த எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். டாக்டர் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் எழுதியுள்ள நூல்களுக்கு தடைவிதித்துள்ளனர். மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சுடன் பார்ப்பனர்களுக்கு மாற்றுக் கருத்தோ, மோதலோ, சண்டையோ இல்லை. மார்க்ஸ் அவர்களுக்கு ஆபத்தானவரே அல்லர். ஆனால், அம்பேத்கர் சகித்துக் கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ இயலாத அளவுக்கு ஆபத்தானவர்!

இந்தக் கூறு, இந்தியாவில் மார்க்சியத்தின் சந்தேகத்துக்குரிய பங்கு குறித்த ஆர்வத்தையும் கவனத்தையும் தூண்டுகிறது. ""பார்ப்பனர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் எதுவும் தலித்துகளின் நலன் மற்றும் மகிழ்ச்சிக்கு தீங்கு விளைவிப்பதாகவே இருக்கும்; பார்ப்பனர்களை வருத்தப்பட வைக்கும் எதுவும் தலித்துகளுக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும்'' என்ற கூற்று அப்பட்டமான உண்மையாகத் தோன்றுகிறது. இது, அறிவுப்பூர்வமான மற்றும் சரியான கூற்றாக உள்ளது. ராமாயணத்தில் சூத்திரனான சம்பூகனின் எழுச்சியினால் ஒரு பார்ப்பனக் குழந்தையின் அகால மரணம் ஏற்படுவதாகவும், சம்பூகனின் தலையை வெட்டிய பிறகு இறந்த பார்ப்பனச் சிறுவன் உயிர்ப் பெறுவதாகவும் சொல்லப்பட்ட இதிகாச காலத்திலிருந்து வரக்கூடிய சமூக மனநிலையையே இது வெளிப்படுத்துகிறது.

மறுபுறம், முதல் புரட்சியாளரான கவுதம புத்தரின் காலத்திலிருந்தும் பல்லாண்டு காலமாக, உழைக்கும் வர்க்கம் அல்லது சூத்திர சாதிகளில் (தீண்டக்கூடிய மற்றும் தீண்டத்தகாத) இருந்து எழுந்த மனித இனத்தின் பெருந்தலைவர்கள் அனைவரும், பார்ப்பனியம் அல்லது சாதியம் மற்றும் பார்ப்பனர்களுக்கு எதிராகவே கிளர்ச்சி செய்துள்ளனர். இந்தியாவின் உழைக்கும் வர்க்கம், பல நூற்றாண்டுகளாகத் தாங்கள் விரும்பும் விடுதலையைப் பெற அவர்களுக்கு அம்பேத்கரியம் உள்ளது. ஆனால் அம்பேத்கரியத்தை யார் பின்பற்றினாலும் அதற்கும் ஆளும் சாதிகள் கடும் எதிர்ப்பினைத் தெரிவிக்கின்றனர். சீர்திருத்த இயக்கங்களுக்கும் பொதுவாக எந்த சமூகத்திலும் வரவேற்பு இருப்பதில்லை.

ஆனால், இந்து சமூகம் இறந்து போனவர்களால் ஆளப்படுவதை மறுத்ததில்லை. அனைத்து இதிகாசப் பாத்திரங்களும், மனிதர்களோ மிருகங்களோ, தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக அறிவாளிகளாக, வழிபாட்டுக்கு உரியவர்களாக இந்துக்களால் கருதப்படுகின்றனர். கடந்த காலத்துடன் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு சிறந்த சான்றாக இருப்பது இந்திய சமூகமே. இந்துக்கள்
நிலை மாறுவதை விரும்பாதவர்கள். அனைத்து வரலாற்று ஆய்வாளர்களும் இந்த வியப்பான உண்மையை சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தியர்கள், தங்கள் பழங்காலப் பண்பாட்டை மறக்காதவர்கள் மட்டுமல்லர் அதைப் போற்றுவதிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

தங்களின் பாரம்பரியமான கடந்தகாலத்திலிருந்து ஓர் அடி கூட நகர அவர்கள் தயாராக இல்லை. இறந்த காலத்தினால் ஆளப்படுவதையே அவர்கள் விரும்புகின்றனர். எவ்வளவு அறிவுப்பூர்வமானதாகவும், முற்போக்கானதாகவும், மனிதநேயமுடையதாகவும், புரட்சிகரமானதாகவும், சீர்திருத்தமுடையதாகவும் அம்பேத்கரியம் இருந்த போதும், ஆளும் சாதியின் எந்தவொரு உறுப்பினரும் இதுவரை அதை ஏற்றுக் கொள்ளவோ, பிரச்சாரம் செய்யவோ இல்லை என்பதே இந்திய இந்து சமூகத்தின் கடினமான உண்மையாகும்.

ஆளும் சாதி பார்ப்பனர் எவரும் இதுவரை பெரியாரின் கருத்தியலைப் பிராச்சாரம் செய்யவோ, அவரது இயக்கங்களை ஆதரிக்கவோ இல்லை. அவை எதைப் பற்றி பேசுகின்றன என்பதைப் படித்து அறியக் கூட அவர்கள் தயாராக இல்லை. இங்கே, இந்தியாவில், மார்க்ஸ், லெனின் அல்லது மாவோ அல்ல; புலே, பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரே விரும்பத்தகாதவர்கள். 

மூலம் : எஸ்.கே.பிஸ்வாஸ்

தமிழில்: பூங்குழலி

Pin It