ஜோதிகளின் பிதாவிடமிருந்து
இறங்கி வரும்
வானத்தின் ஈவுகளிடமிருந்து
தம் மழலைகளைப்
பாதுகாக்கவும்,
வெட்டவெளியில் நடுநிசியில்
நிகழும்
நாயினதைப் போன்ற
புணர்ச்சிகளிலிருந்து
தம்மைத் தப்புவிக்கவும்
போக்கும் திக்குமில்லாது
நடைபாதையில்
கழிந்து கொண்டிருக்கிறது
எளிய மனிதர்களின் நாள்.

காப்பாற்ற பிஞ்சுகளையும்
வக்கற்ற வீட்டுப்பெண்டிரையும்
கவர்ந்து வந்து
பாலுணர்வுப் பொறிகளாக்கி
தம் காமத்திற்கு
தினுசுகளைத் திரட்டிவைக்கும்
ஆதிக்கத்திடம் சாரமிழந்து
சாடைபோட்டு மினுக்குகிறது
ஊர்ப் பண்பாடு

மேற்கின் குதத்தை
முகமாக்கிய ஊர்
உயர்வு தாழ்வென
உறுமிக் கொண்டிருக்க,
சத்துறிஞ்சப்பட்டு
சாரைசாரையாய்
சாவூருக்குப் பாலகர்கள்
பொடிநடையாய்ப்
போய்க்கொண்டிருக்க,
கேளிக்கைகளின் போதையேற்றி
நினைவை தப்ப வைத்து
வாலிபம் தாள்ளாடுகிறது
அரோகரா! அரோகரா!

Pin It