இன்றுள்ள திராவிடச் செல்வவான்கள், திராவிட அறிஞர்கள், திராவிடப் பட்டம், பதவி வேட்டைக்காரர்கள் பலர் எப்படித் தன்மானமற்று ஆரியர்களுக்கு உதவியாகவும், உளவாளிகளாகவும் இருந்து வருகிறார்களோ – எப்படி ஆரியர்களுக்கு கோயிலும் சத்திரமும் வேதபாடசாலையும் தர்மமப் பள்ளிக் கூடங்களும் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார்களோ அதுபோல்தான், திராவிட மன்னர்கள் – திராவிடச் செல்வவான்கள் ஆரியர்களுக்கு அடிமையாகிய அவர்கள் உயர்வுக்கும் சோம்பேறிப் பிழைப்புக்கும் ஆதாரமான அநேகக் காரியங்களைச் செய்தார்கள்.

இன்றுள்ள பண்டிதர்களில் சிலர் எப்படி ஆரியர்களுக்கு கூலியாளாக இருந்து கொண்டு, கொஞ்ச நஞ்சம் பாக்கியுள்ள இலக்கண இலக்கியங்களைக் கூட ஆரியமயமாக்க உடந்தையாக இருக்கிறார்களோ, சர்க்காராரும் அப்படிப்பட்டவர்களையே திராவிட இலக்கியம் அமைக்க ஏற்படுத்துகிறார்களோ – அதுபோலவேதான், அந்தக் காலத்திலும் பல பண்டிதர்கள் ஆரியர்களுக்கு அடிமையாகி, அநேக இலக்கியங்களை ஆரிய சமயத்துக்கு ஆதாரமாக இயற்றிவிட்டுப் போய்விட்டார்கள். இவற்றை அடியோடு அழித்துதான் புதுப்பிக்க வேண்டியிருக்கிறதே ஒழிய, பழுதுபார்த்துச் சரிசெய்யக் கூடியதாக ஏதும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை.

அறிவுள்ள திராவிட மக்களையும் ஆரியத்திற்கு நிரந்தர அடிமைப்படுத்தினது சைவமும் வைணவமும்தானே ஒழிய வேறல்ல. ஏனெனில், திராவிடர்கள் வேதத்தையும், மநுதர்ம சாஸ்திரத்தை யும் ஒழிக்கச் சம்மதித்தாலும் சைவ, வைணவ புராண சமயத்தையும் புராண மரியாதையையும் ஒழிக்கச் சம்மதிக்கவே மாட்டார்கள் போல் காணப்படுகிறது. ராமாயணம், பாரதம், பாகவதம், பக்தவிஜயம், கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் முதலாகியவைகளை நீக்கிவிட்டால் – திராவிடர்களுக்கு இப்படிப்பட்ட உருவக் கடவுள்கள் இருக்குமா என்று பாருங்கள். அப்புறம் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், அவர்கள் அல்லாத திராவிட மக்களுக்கும் பேதம் இருக்காது; பல வேற்றுமை உணர்ச்சிகளும் இருக்காது.

திராவிட நாட்டில் 100க்கு 3 பேர்களாயுள்ள ஆரியர்களுடன் சேர்ந்து கொண்டு, அவர்களும் நாமும் ஒன்று என்று எண்ணிக் கொண்டிருக்கிற உணர்ச்சியின் பயனாய், நமது வர்க்கத்தையே சேர்ந்த கிறிஸ்தவர், முஸ்லிம், ஆதிதிராவிடர் ஆகியவர்களை வேறாகவும் வேறுபட்ட வகுப்பார்களாகவும் கருதி விலக்கி வைத்திருக்கிறோம். அவர்களுடைய வெறுப்புக்கும் விரோதத்திற்கும் ஆளாகி இருக்கிறோம். அதனாலேயே நாம் பலம் குன்றிவிட்டோம்.

இந்த மாதத்தில், பல ஆயிரக்கணக்கான பேர் ஆண் பெண் இணையாய்த் திருப்பதிக்குப் போய், தாங்கள் சம்பாதித்த அரும் பொருளையும் கொட்டிக் கொடுத்து, தலையையும் மொட்டையடித்துக் கொண்டு வருகிறார்கள். அழகான புதுக் கல்யாணப் பெண்ணும் மாப்பிள்ளையும்கூட மொட்டை அடித்துக் கொண்டு வந்துவிடுகிறார்கள். ரயிலில் நிற்பதற்குக்கூட இடமில்லாமல் கூட்டம் போகிறது. இவற்றால் என்ன பயன்? எந்த ஆரியனாவது இப்படிப் பணம் கொட்டிக் கொடுத்து, ஜோடி ஜோடியாய்த் தலையை மொட்டையடித்துக் கொண்டு வருகிறானா?

இனி அடுத்த மாதத்திற்கு திருவண்ணாமலைக்கு கூட்டம் கூட்டமாகப் போவார்கள். அங்கு மக்கள் சாப்பிடத்தகுந்த அருமையான வெண்ணெயையும், நெய்யையும் டப்பா டப்பாவாய், குடம் குடமாய் நெருப்பில் கொட்டப் போகிறார்கள். இதற்கு ஏதாவது அறிவான சமாதானம் உண்டா? நெய் சாப்பிடக் கிடைக்காத மக்கள் எத்தனை பேர் கஷ்டப்படுகிறார்கள்? இவர்களை வஞ்சித்து நெய்யை நெருப்பில் கொட்டுவதில் என்ன பயன்? ஆரியர்களுடைய தர்ம சாஸ்திரங்களில் சூத்திரன் நெய், பால் சாப்பிடக் கூடாது என்று இருக்கிறது. அதனால்தான் ஆரியர் உண்டு மீந்த நெய்யை நெருப்பில் கொட்டுவதற்காக, ஹோமமும் கிருத்தி கையும் ஏற்படுத்தினார்களோ என்னமோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.

இல்லாவிட்டால் எந்த மனிதனாவது வெண்ணெயையும் நெய்யையும் நெருப்பில் கொட்டுவானா? நமது முட்டாள்தனத்திற்கு இதைவிட வேறு என்ன தான் ஆதாரம் வேண்டும்? கொஞ்சம்கூட மனம் பதறாமல் அள்ளி அள்ளி நெருப்பில் நெய்யைக் கொட்டுவதும், அதைப் பல ஆயிரக்கணக்கான மக்கள் கண் குளிரப் பார்ப்பதும் ஓர் உற்சவமாயிருந்தால், ஒரு யோக்கியமான அரசாட்சி இருக்குமானால், இந்தக் கொடுமையை அரை நாழிகை சகித்துக் கொண்டு இருக்குமா என்று கேட்கிறேன். இப்படியே அடுத்து அடுத்து எத்தனை பண்டிகைகளும் உற்சவங்களும் வரப் போகின்றன என்று சிந்தித்துப் பாருங்கள்.

இவைகளால் நமது புத்தி பாழõவது எவ்வளவு? பணம் பாழாவது எவ்வளவு? இவ்வளவு முட்டாள்தனமான காரியங்களும், கெட்ட பலன்களும் திராவிடர்களுக்கு அல்லாமல் உலகில் வேறு யாருக்காவது இருந்து வருகிறதா? நமது பண்டிதர்கள் இதற்கு ஆக என்னவாவது செய்கிறார்களா? ஸ்தல புராணங்கள் விற்கவும், புராண இதிகாசங்களுக்குப் புதிய தத்துவார்த்தம் எழுதி அவைகளைக் கொண்டு புண்ணிய காலட்சேபம் பண்ணவும் இவைகளை உபயோகித்துக் கொள்கிறார்களே தவிர, கண்டித்துப் பேசி மக்களுக்கு அறிவூட்டுகிறார்களா? இப்படியே இருந்தால், என்று திராவிடனின் விடுதலை நாள் வரக்கூடும்?

(13.10.1940 அன்று சென்னையில் ஆற்றிய தலைமை உரை. குடியரசு -27.10.1940)

Pin It