இறைநம்பிக்கை என்பது தொடக்கத்தில் அச்ச உணர்வினாலும், பயனளித்த இயற்கைக்கு ‘நன்றி’ தெரிவிக்கும் முயற்சியாகவும் ஏற்பட்டதாகவே கூறல் வேண்டும். திராவிடர்களின் பகுத்தறிவும் கடவுளர் கோட்பாடும் ஆரியர்களின் கடவுள் கோட்பாட்டைப் போன்று மகத்தானவைகளாக, புராணங்களில் குறிப்பிடப் பெறும் மகாசக்திகள் பெற்றதாக இல்லை. முழுக்க, முழுக்க நாட்டுப்புறவியல் சார்ந்ததாக மட்டுமே இருந்தது. திராவிடரின் கடவுளர் கோட்பாடானது பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டதாகும். திராவிடத் தெய்வங்கள் அனைத்துமே இம்மைக்கு மட்டும் (இப்பிறவிக்கு) ‘பயன் தரும் நோக்கில் அல்லாது’ நன்றி தெரிவிக்கும் நோக்கில் மட்டுமே வணங்கப்பட்டன. திராவிடர்கள் தங்கள் கடவுளர்களை பேரற்புதங்கள் செய்பவர்களாக நம்பவில்லை.

திராவிடர்களின் கடவுளர்

திராவிடர்களின் கடவுளர்கள் அனைவருமே மனிதனாக வாழ்ந்து மரணத்தை தழுவியர்தாம். மூத்தோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஏற்பட்ட மூத்தோர் வணக்கமே பேரளவில் கோயில் கட்டி மதில்சுவர் ஏழுப்பி வழிபாடு செய்யும் அளவுக்கு வளர்ச்சி பெற்றது. திடீர் இறப்பும், கொடிய இறப்பும் நேர்ந்தவர்களும் கூட வழிபடப் பெற்றனர். சங்ககால குறுநில மன்னனான நன்னனால் ஒரு மாங்கனிக்காக படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் நினைவாக உருவாக்கப்பட்ட வழிபாடே மாசானியம்மன் வழிபாடாக (கோவை மாவட்டத்தில் தனிக்கோயில் உள்ளது) தோற்றம் பெற்றது. கணவனை இழந்த கண்ணகியின் கோபத்தை தணிக்கும் பொருட்டு கண்ணகிக்கும் தனிக் கோயில் ஏற்படுத்தப்பட்டது. இத்தகைய கண்ணகி வழிபாடானது ஆரிய செல்வாக்கால் துர்க்கையம்மன் வழிபாடாக காலப்போக்கில் மாற்றம் பெற்றது.

ayyanar statueதூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் பாண்டிய நெடுஞ்செழியனின் சகோதரனான வெற்றிவேற் செழியன் கண்ணகியை சாந்தப்படுத்தும் நோக்கில் கண்ணகிக்கு கோயில் எடுப்பித்தான் அது செழியனின் காலகட்டத்திற்குப் பின்னர் வெற்றி வேலம்மனாக வழிபடப்பட்டு, பின்னர் காலப்போக்கில் தலைவிரி கோலமாக இருந்த கண்ணகி சிலை பூமிக்குள் புதைக்கப்பட்டு, அதன் மேலேயே துர்க்கை சிலை நிறுவப்பட்டது. அத்துர்க்கை சிலையும் சேதமடைந்துவிட கடந்த 2014 நடைபெற்ற குடமுழுக்கின் போது அச்சிலையும் கருவறைக்குள் 6 மீட்டர் அளவிலான குழியைத் தோண்டி மண்ணுக்குள் புதைக்கப்பட்டது.

போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக நடப்பெற்ற நடுகல் (அவர்களை புதைத்த இடத்தில்) வழிபாடு செய்யப் பெற்றது. போரில் அவர்களுக்கு துணைபுரிந்த யானை, குதிரை போன்றவை அவ்வீரர்களுக்கு வாகனங்கள் ஆக்கப்பட்டன. இத்தகைய நடுகல் வணக்கமே, அய்யனார் முனியன் வழிபாடாக தோற்றம் பெற்றது. அய்யன்- தலைவன் என்பது பொருளாகும்.

தமிழரின் லோகாயுதக் கோட்பாடு (பகுத்தறிவுக் கொள்கை)

பகுத்தறிவுக் கொள்கைக்கு வித்திட்டவர்கள் மகாவீரரும் புத்தரும் ஆவர். இவர்களது சமகாலத்திலேயே லோகாயுதக் கோட்பாட்டை வலியுறுத்திய மற்றொரு சிந்தனையாளர் மற்கலி கோசலர் ஆவார். அசீவக சமயம் இவரால் தோற்றம் பெற்றது. மற்கலி கோசலரின் நண்பரும் லோகாயுதக் கொள்கையில் தலைசிறந்தவரும் சங்க இலக்கியப் புலவருமான பூரணகாயபர் தமிழராவார். புத்திரின் சம காலத்தைச் சேர்ந்தவர் இவராவார். பூரணகாயபர் மறுகால் தலைகல்வெட்டில் (நெல்லை மாவட்டம் சீவலப்பேரிக்கு அருகில்) ‘வெண்காஸிபன்’ என்று குறிக்கப்படுகின்றார். வைதீக புராணங்கள் இவரை ‘காஸ்யபமுனிவர்’ எனக் கூறி தமதாக்கிக் கொண்டன. பூரணகாயபர் நினைவாகவோ (அ) அவருக்காகவோ ‘மறுகால்தலை கற்படுக்கை’ உருவாக்கப்பட்டிருக்க வேண்டுமென்பது பேரா.க. நெடுஞ்செழியன் கருத்தாகும்.

அசீவக சமயத்தவருக்கும் முதுமக்கள் தாழி முறைக்கும் உள்ள தொடர்பு

புதிய கற்கால கட்டத்தில் திராவிடர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த முதுமக்கட்தாழி முறையானது திராவிடர்களின் தனிப்பெரும் பண்பாட்டுப் பழக்கமாகும். ‘தாழியுடன் கவிழ்ப்போர்’ என மணிமேகலை இவ்வழக்கத்தை சுட்டும். செயற்கரிய செயலை செய்தார், சான்றோர், இனக்குழுக்களின் தலைவர்கள் தாயின் கருப்பை வடிவிலான பானையில் இட்டு மீண்டும் பிறந்து வருவர் என்ற நம்பிக்கையில் இவ்வாறு புதைக்கப்பட்டனர்.

பெரும்பாலும் அசீவகத் துறவிகளே தாழியில் புதைக்கப்பட்டதாக இலக்கியங்கள் குறிப்பிடும். சோழன் கிள்ளி வளவன் இறந்துவிட, அவன் புகழைப் பாடும் தமிழ்ச் சங்கப் புலவர் ‘ஐயூர்முடவனார்’ பானைகள் செய்யும் குயவரை விளித்துப் பாடும் பாடல் ‘கலஞ்செய் கோவே, கலஞ்செய் கோவே’ என அமைந்துள்ளது. அசீவகத் துறவிகள் வாழ்வின் இறுதி நாட்களில் தாழியில் புகுந்து தவம் மேற்கொண்டு உயிர் துறப்பர் பூரணகாயபர் உயிர் துறந்ததும் இவ்வாறேயாகும். இன்றைய நாளிலும் வள்ளுவக் கணியர்களை (அமர்ந்த நிலையில்) புதைப்பது மரபாக ஒரு சில இடங்களில் இருந்து வருகின்றது.

திராவிட தெய்வ வழிபாட்டின் உண்மைத் தன்மையும் ஆரியர்களின் புனைவும்

சிவ வழிபாடென்பது திராவிடத் தமிழரின் குறிஞ்சி நிலம் சார்ந்த மலை வழிபாடேயாகும். குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த திராவிடர்கள் தங்களது வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்யும் இயற்கை செல்வங்களைத் தந்த மலையை வழிபட்டனர். மலை வழிபாடே, காலப் போக்கில் சிவ வழிபாடாக வைதீக ஆரியர்களால் மாற்றம் பெற்றது. மலையின் மேலே தோன்றும் பிறைச்சந்திரன் சிவனுக்கு அணிகலனாகவும், மலையிலிருந்து விழும் அருவி சிவனது தலையிலிருந்து உற்பத்தியாகும் கங்கையாகவும் உருவகிக்கப்பட்டன. இன்றைய பெரும்பாலான பிரசித்தி பெற்ற சிவாலயங்கள் மலையில் இருப்பது (திருவண்ணாமலை, கைலாயம்) இதனை உறுதிப்படுத்தும்.

ஆரியர்கள் சிவ வழிபாட்டை தமதாக்கிக் கொண்டமை மிகப் பிற்காலத்தது ஆகும். வேதத்தில் கூட திராவிடர்கள் சிசுனதேவர்கள் (ஆண் குறி வழிபாட்டினர்) என்று இகழ்ந்து கூறப்பட்டுள்ளமை நோக்கத்தக்கதாகும். மலையை எல்லா இடங்களிலும் வணங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் மலையை உருவகித்து உருவாக்கப் பெற்ற ‘சிறிய குவிந்த கல்லை’ (லிங்க வணக்கம்) திராவிடர்கள் வணங்கத் தலைப்பட்டனர். இதுவே சிவ வழிபாடாக தோற்றம் பெற்றது. சிவன் தொடர்பான புராணச் சேர்க்கைகள் அனைத்தும் ஆரிய ஆதிக்கத்தின் விளைவாகவே உருவானவையாகும்.

பௌத்த சமயத்தை தோற்றுவித்த புத்தருக்கு ‘விநாயகன்' என்ற பெயருண்டு. தமிழகத்தில் இருந்த புத்தர் கோயில்கள் கி.பி 5ம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் விநாயகர் கோயில்களாக (பிள்ளையார் கோயில்கள்) தோற்றம் பெற்றதாக மயிலை. சீனி. வேங்கடசாமி குறிப்பிடுவார். புத்தர் தனது தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் போது அழகிய வெள்ளை யானையின் தோற்றத்தில் இருந்ததாக புத்த ஜாதகக் கதைகள் குறிப்பிடும். இதனை அடிப்படையாகக் கொண்டே ‘விநாயகர் உருவம்’ உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் காலப் போக்கில் இதனையும் ஆரியம் தனதாகக் கொண்டது. புத்தர் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒருவராக சேர்க்கப்பட்டார். புத்தரது வழிபாடே கேரளத்தில் ஐயப்ப வழிபாடாக திரிந்ததாகக் கூறலாம். ஐயப்பனது வரலாறு புராணமாக இருந்தாலும், புத்தரது வரலாற்றிற்கும் ஐயப்பனது புராண வரலாற்றிற்கும் நெருங்கிய ஒற்றுமைகள் (இருவருமே மன்னனின் மைந்தர்கள் இருவருமே அரச பதவியைத் துறந்து சந்நியாசம் போந்தவர்கள்) இருப்பதை மறுக்க இயலாது.

பௌத்தர்களின் மணிமேகலா தெய்வம் வைதீக சமயத்தவரின் அன்ன பூரணியம்மன் ஆக்கப்பட்டாள் (இருவரது கைகளிலும் அட்சயப் பாத்திரம் உண்டு). சமணர்களின் யட்சி வழிபாட்டிலிருந்து தோற்றம் பெற்ற சரஸ்வதி வைதீக சமயத்தவர்களால் கல்விக் கடவுள் ஆக்கப்பட்டாள்.

புராணப் புரட்டல்கள்

திராவிடத் தெய்வங்களை வைதீக சமயம் தமதாக்கிக் கொண்டதோடு மட்டுமல்லாமல், புராணங்களில் திராவிடத் தெய்வங்கள் பழித்தும் பேசப்பட்டனர். பௌத்த சமயத்திலிருந்து தோற்றம் பெற்ற விநாயகரை (புத்தர்) பார்வதி தேவியின் உடல் அழுக்கிலிருந்து தோற்றம் பெற்றதாக புராணங்கள் இழிவுபடுத்திக் கூறுகின்றன. புத்தரது வழிபாடான ஐயப்பனின் தோற்றம் பற்றி புராணங்கள் ‘சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் (இருவருமே ஆண்கள்) பிறந்தவர் என்றும் இழித்துரைக்கின்றன.

திராவிட சிறுதெய்வ வழிபாட்டில் வேளாண்மையில் ஆற்றிய பங்கினை நன்றியோடு போற்றும் வகையில் ஏற்பட்ட ‘காளை வழிபாடு’ காலப் போக்கில் நந்தி வழிபாடாக (சிவனின் வாகனம்) வைதீக சமயத்தில் மாற்றம் பெற்றது. புத்தருக்கு அறவான், அறவோன் என்ற சில சிறப்புப் பெயர்கள் உண்டு; தமிழகத்தில் விழுப்புரம் அருகே இருந்த ‘அறவான்கோயில் (தற்போது - கூத்தாண்டவர் கோயில்) காலப்போக்கில் வைதீக சமயத்தவரால் அரவான் கோயிலாக அழைக்கப் பெற்றது. புராணங்கள் அரவான் அர்ஜூனனுக்கும் கிருஷ்ணணுக்கும் பிறந்த மகனாக குறிப்பிடுகின்றன.

தீபாவளிப் பண்டிகை பற்றி புராணங்கள் கிருஷ்ணன் நரகாசுரனை அழித்த நாளையே தீபாவளி எனக் கொண்டாடுவதாக குறிப்பிடுகின்றன. ஆனால் உண்மை யாதெனில் தீபாவளியானது சமண சமயத்தை தோற்றுவித்த மகாவீரர் பரிநிர்வாணம் (இறந்த தினம்) அடைந்த நாளேயாகும். தீபாவளியன்று எண்ணைய் தேய்த்து குளிக்கும் வழக்கம் இறப்புச் சடங்கில் செய்யப்படும் முறையை ஒத்ததாகும். மகாவீரர் மரணமடைந்தது பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட சமணத்திற்கு பேரிழப்பு, ஆனால் வைதீக சமயத்தினருக்கு தங்கள் சமயம் பரவ கிடைத்த பொன்னான வாய்ப்பாகும். வரலாற்றின் பக்கங்களை நோக்குவோமானால் விஜயநகர மன்னரான கிருஷ்ண தேவராயரே தீபாவளிப் பண்டிகையை குடிமக்கள் அனைவரும் கொண்டாட ஆணையிட்ட முதல் மன்னராவார். அதன் முன்புவரை திராவிடத் தமிழர்கள் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடியதாக சான்றுகள் இல்லை. மேலும் பண்டிகையைக் கொண்டாடாத மக்களிடம் அபராதமும் விதிக்கப்பட்டது.

சோழர்கள் காலத்தில் குற்றங்களுக்குத் தண்டனையாக திருக்கோயிலில் நொந்தா விளக்கு (அணையா விளக்கு) எரித்திட நெய், எண்ணெய் தீபம் ஏற்றுமாறு அரசு நிர்வாகத்தால் கட்டளையிடப்பட்டது, அது காலப்போக்கில் பாவங்களைப் போக்கும் கழுவாயாக கற்பிதம் செய்யப்பட்டு மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தற்காலத்திலும் திருக்கோயில்களில் பரிகாரமாக விளக்கேற்றும் முறை பின்பற்றப்பட்டு வருகின்றது.

திராவிடர்களின் கடவுள் கோட்பாடானது முழுக்க முழுக்க பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டதேயாகும். மன்னர்தம் ஆதரவு செல்வந்தர்களின் உதவிகள் போன்றவற்றால் ஆரிய சமயம் வலுப்பெற்று, திராவிட தெய்வ வழிபாட்டை புறக்கணிக்கச் செய்தது. அவதாரக் கடவுளர்கள் எல்லாம் இங்கு எட்டவே நிற்கின்றனர். அடித்தள வகுப்பைச் சேர்ந்த குப்பனும், சுப்பனும் திராவிட வழிபாட்டில் கடவுளாக்கப்பட்டனர். குப்பனுக்கும் சுப்பனுக்கும் திராவிட வழிபாட்டில் முதல் மரியாதை தரப்பட்டு படையல்களும் படைக்கப்பட்டன.

இவையாவும் சமூகத்தில் உயர்நிலையில் இருந்த ஒரு சாரரைப் பாதித்தன. தங்களது பிழைப்பிற்கு பேராபத்து ஏற்படும் எனக் கருதி ஊர் எல்லையில் காவல் தெய்வங்களாக திராவிடக் கடவுளர்களை கையில் ஆயுதத்துடன் காவலாளியாக நிறுத்திட வழிவகை செய்தனர். ஊருக்கு எல்லையில் திராவிடக் கடவுளர் மட்டும் நிறுத்தப்படவில்லை. திராவிடப் பண்பாடும், கலாச்சாரமும், முன்னோர்களுக்கு மரியாதை தந்த மானுடப் பண்பும் நிறுத்தப் பட்டதென்றே கருத வேண்டும். ஆகவே பகுத்தறிவு நீதியில் அமைந்த திராவிட கடவுளர் கோட்பாட்டை உணர்ந்து அவற்றை பேணிப் பாதுகாப்பதும் மீட்டெடுப்பதும் அவசியமாகும்.

துணை நின்ற நூல்கள்

1. நா. செல்வராசு, தொல் தமிழர் சமயம், பெங்களூர் 2001.
2. நா. வானமாமலை, தமிழர் பாண்பாடும் தத்துவமும், சென்னை, 1973.
3. வெ.வேதாசலம், இயக்கி வழிபாடு, மதுரை, 1989.
4. க. நெடுஞ்செழியன், அசீவகம் என்னும் தமிழர் அணுவியம், திருச்சி, 2002.
5. James Bisset pratt, The Pilgrimage of Buddhism, New Delhi, 1996.
6. K.Rajan, South Indian memorial Stones, Tanjore, 2000.
7. P.T.Srinivasa Iyengar, History of the Tamils, Madras, 1929.
8. N, Subramanian, Tamil Social History, Chennai, 1997.
9. M.Rajamanickanar, The Development of Saivism in South India, Dharmapuram, 1964.

- பேரா. இல.கணபதி முருகன், இயக்குநர், திராவிட வரலாற்று ஆய்வுக் கழகம், உதவிப் பேராசிரியர், முதுகலை வரலாற்றியல் மற்றும் ஆராய்ச்சித் துறை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரி, திருத்தணி – 631209

Pin It