தமிழீழப் படுகொலையைத் தொடர்ந்து தமிழகத்தில் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்ற கோஷம் வலுவாக எழுகிறது. அப்படி சொல்கிறவர்கள் ஈழ ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். 

 திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்கிறவர்கள் என்ன காரணத்தை சொல்கிறார்கள் என்று பார்த்தால் புலிகளுக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டார், செயலலிதா புலிகளுக்கு  எதிராக செயல்ப்படுகிறார் என்ற குற்றச்சாட்டுதான் எழுகிறது.

prabakaran and kovai ramakrishnan

அவர்கள் இருவரும் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்துள்ளார்கள். மறுக்கவில்லை. அதே நேரம் புலிகளுக்காக இங்கே திராவிட இயக்கத்தினர் செய்ததை அள்ளிப் போடாமல் கொஞ்சமாக கிள்ளிப்போடுகிறேன்... 

1980களில் ஈழஆதரவு அலை தமிழகம் முழுவதும் வீசிய தருணம், அப்போது இந்தியா தனது அதிகாரத்தின் கீழ் நடக்கக்கூடிய அமைப்புகளுக்கு மட்டுமே உதவ முன்வந்தது. ஈழப்போராட்டத்தில் இந்தியா ஒருபோதும் புலிகளை நம்பியதில்லை.

இந்திய அரசு புலிகளை தவிர்த்து மற்றைய இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சியைக் கொடுத்தது. இந்தியா புலிகளுக்கு பயிற்சி அளிக்காததினால் அன்றைக்கு முதல்வராக எம்.ஜி.ஆரை புலிகள் நாடியதன் பின் புலிகளுக்கும் இந்தியா பயிற்சி கொடுத்தது.

இந்தியா புலிகளுக்கு கொடுத்த பயிற்சி வெறும் சாதரண பயிற்சிதான், ஆகவே புலிகள் தங்கள் சுயமாக பயிற்சி எடுக்க நினைத்து அதற்காக இங்கே உள்ள அமைப்புகள் இயக்கங்களிடம் உதவி கேட்டு நின்றபோது புலிகளுகளுக்கு திராவிட இயக்கத் தோழர்களின் சொந்த இடத்தில் பயிற்சி எடுக்க அனுமதித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யத் தயாரானார்கள்  திராவிட இயக்கத் தோழர்கள்.

முதல்கட்டமாக தோழர் கொளத்தூர் மணி அவர்களும்,தோழர் கோவை.ராமகிருஷ்ணன் அவர்களும்  சொந்த இடத்தை புலிகளுக்கு பயிற்சி எடுக்கக் கொடுத்தும், புலிகளின் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவ தங்களுடைய பெரியாரிய மேடையில் ஈழஆதரவுக்கு என்று உண்டியல் வைத்து அதன்மூலம் கிடைத்த பணத்தை புலிகளுக்கு கொடுத்து உதவினார்கள்.

எம்.ஜி.ஆரும் பல உதவிகள் செய்தார் (திராவிட கட்சி)

அதே நேரம் நாடாளுமன்றத்திலும் ஈழத்துக்காக ஓங்கி ஒலித்தது ஒரு குரல். குரலுக்கு சொந்தக்காரர் வை.கோபாலசாமி. ( இவரை இந்திய நாடாளுமன்றப் புலி என்று அழைத்தனர் )

prabakaran and kolathoor maniஇப்படி திராவிடக் கட்சியில் சிலரும், திராவிட இயக்கத்தில் பலரும் புலிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈழப்புலிகளுக்கும் ஈழத்துக்கும் குரல் கொடுத்தும் உதவியும் வந்தார்கள்.

இந்தியாவின்  நிர்பந்தத்தின் பெயரில்  புலிகளுக்கும்-இலங்கை அரசுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டு இந்திய அமைதிப்படை அங்கே சென்ற பிறகு ஈழத்தில் இந்தியா தமிழ் மக்களை கொன்றபோது, இந்தியாவுடன் புலிகள்  சண்டையிட்டும் வந்தார்கள்,  அப்போதெல்லாம் தமிழகத்தில் புலிகளுக்கு தோழமையாக களத்தில் நின்றவர்கள் திராவிட இயக்கத் தோழர்கள்.

1991ல் ராஜிவ் காந்தி படுகொலையினால் ஏற்பட்ட சில சம்பவங்களில் அதிகமாக பாதிக்கப்பட்டது திராவிட இயக்கத் தோழர்களும் திமுகவுமே. ராஜிவ் காந்தியை கொலை  செய்தவர்களில் ஈழத்தமிழர்களும் அடங்குவர் என்ற காரணத்தை ரா அமைப்பு சரியாக கையாண்டது. புலிகளுக்கும் தடை, புலி ஆதரவாளர்களுக்கும் தடை, சிறை என அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் திராவிட இயக்கத் தோழர்கள்.

ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பிறகு  பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாடு பெரியார் திடலில் நடந்தது. நடத்தப்பட்ட இடம் சமத்துவ பெரியாரின் மண்ணில்.

ராஜிவ் படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர்களுக்கு ஆதரவாக துணிச்சலாக நின்றவர்கள் அன்றைக்கு  அய்யா நெடுமாறனும் திராவிட இயக்கத் தோழர்களுமேதான். அவர்கள்தானே 19 தோழர்களுடைய தூக்குதண்டனையை ரத்து செய்யப் போராடியவர்கள். .

ராஜிவ் படுகொலைக்குப் பிறகு தடா வழக்கை முதன்முதலாக சந்தித்தவர்கள் திராவிட இயக்கத் தோழர்கள் தோழர்.கோவை ராமகிருஷ்ணன் மற்றும் தோழர் ஆறுச்சாமியும்தானே, இதை மறந்துவிட்டு திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனம். 

ராஜிவ் காந்தி படுகொலையில் முக்கியமான இருவரை இன்னும் விசாரிக்கவில்லை என்ற உளவுத் துறையின் அறிக்கையில் இருந்த தோழர்கள் பெயர்கள் கோவை.ராமகிருஷ்ணன் & ஆறுச்சாமிதானே… இவர்கள் திராவிட இயக்கத்தின் வித்துக்கள்தானே... மறுக்கமுடியுமா?

தன்னுடைய சொந்த இடத்தையும் சொந்தப் பணத்தையும் எடுத்து புலிகளுக்கு உதவுகிறார் என்று குற்றம்சாட்டப்பட்டவர் தோழர் கொத்தூர் மணி அவர்கள். அவரைப் போன்று ஈழப்போராட்டத்திற்க்காக அதிகமுறை சிறை சென்ற திராவிட எதிர்ப்பாளர்கள் ஒருவரைக் காட்டமுடியுமா?

2002ல் செயலலிதா மீண்டும் ஆட்சியைப் பிடித்தபோது தமிழகத்தில் புலி ஆதரவாளர்கள்மீது அடக்குமுறைகளும் சிறைத்தண்டனையும் ஏவப்பட்டது. அதில் அதிகம் பாதிப்படைந்தது திராவிட இயக்கத்தோழர்கள்தானே.

2007ல் நான்காவது ஈழப்போர் தொடங்கியப் பொழுதிலிருந்து தமிழகத்தில் தொடர்ந்து போராடியும், பல உதவிகளை மறைமுகமாக செய்தும் வந்தவர்களில் பெரும்பாலனோர் திராவிட இயக்கத்தவர்கள்தானே.

2009ல் கருணாநிதியால் ஈழப்போராட்டங்கள் நசுக்கப்பட்டபோது அதை எதிர்த்து நின்ற தோழர்களில் திராவிட இயக்கத் தோழர்களும்  உண்டு என்பது மறந்துவிட்டதா?

2009ல் இலங்கைக்கு இந்திய ராணுவ வண்டியில் ஆயுதம் கொண்டு சென்றபோது அதை வழிமறித்து உடைத்தவர்கள் திராவிட இயக்கத் தோழர்களும் சில அமைப்புகளைச் சார்ந்தவர்களும்தானே!

ஈழப்போர் இறுதியில் சீமானின் உதவியாளரிடம் கடைசியாக சூசை பேசியதாக சொல்லப்பட்ட குரல் பதிவிலும்கூட அண்ணன் வைகோவிடம் சொல்லுங்கள் என்று சூசை சொன்னாரே, அதன் அர்த்தம் என்ன? வைகோ திராவிடக் கட்சிதானே?

இத்தனையும் நடந்து முடிந்த பின் செயலலிதா எதிரி, அதனால் திராவிடமும் எதிரி என்று சொல்பவர்களே... கிட்டு மீது வெடிகுண்டு வீசியவர்கள் யார்? அவர்கள் திராவிட இயக்கத்தவர் இல்லையே?

பொட்டம்மான் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார்? தேசியத் தலைவரை கொலை செய்யத் திட்டம் தீட்டிய இந்தியாவின் கையாள் மாத்தையா என்ன திராவிட இயக்கமா?  புலிகள் இயக்கம்தானே…!

  மாத்தையா செய்ததை சுட்டிக்காட்டும்போது மாத்தையாவை துரோகி என்று சொல்லும் திராவிட எதிர்ப்பாளர்கள், செயலலிதா துரோகம் செய்தபோது மட்டும் வாக்குகளுக்காக திராவிடம் துரோகம் செய்ததாக புரளி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் கருணாநிதி துரோகம் செய்துவிட்டார் திராவிட துரோகம் செய்துவிட்டது என்று குதிப்பவர்களே ஈழத்தில் கருணாவும் மாத்தையாவும் துரோகம் செய்ததை, தமிழ்த்தேசியம் துரோகம் செய்ததாக எடுத்தக்கொள்ளலாமா?

ஈழப் போராட்டத்தில் அனைத்து இடங்களிலும் எதிரியாகவும் துரோகியாகவும் இருந்தது இந்தியமே. அந்த இந்தியத்தை எதிர்க்கத் துப்பில்லாமல் இங்கே புலிகளின் தோழமைகளை வந்தேறிகள், வடுகர்கள் என்று பொய் பிரச்சாரம் செய்பவர்கள் ‘புலிகள் ஆதரவாளர்’ என்ற பெயரில் இந்தியத்திற்கு கங்காணி வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான்.

சரி திராவிடம்தான் துரோகம் செய்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சொல்கிற திராவிட எதிர்ப்புத் தோழர்கள் எத்தனை பேர் புலிகளுக்காகவும், ஈழத்துக்காகவும் சிறை சென்று, தன் சொந்த உடமைகளை இழந்தவர்கள் என்ற பட்டியல் தர முடியுமா? 

புலிகளை கூலிப்படை என்றவருக்கு வீரவணக்கம், புலிகளை தீவிரவாதிகள் என்றவருக்கு கூனுகும்பிடு என்று அலைபவர்களின் பார்வையில் திராவிடம் தீதுதான். 

1980களில் ஆரம்பித்த புலிகள் ஆதரவும், ஈழஆதரவும் மாற்றம் பெறாமல் இன்றும் இருப்பது திராவிட இயக்கத் தோழர்களிடம்தான்,

பொய்யர்கள் பொய்கள் உரைக்கட்டும்; நாம் திராவிடத்தின் துணைகொண்டு தமிழ்த் தேசியமாக தமிழீழத்தை அடைவோம்.

-       தமிழ் மறவன்

Pin It