வரலாற்றுப் பெருமிதங்களைக் கொண்டது வேலூர் மாவட்டம். அதன் தொன்மையான வரலாறுகள் ஆனாலும், விடுதலை காலத்திய சிப்பாய்க் கலகமானாலும் சிறப்புமிக்க தனித்துவமானது அது. அதைப் போலவே தலித் வரலாற்றிலும் அம்மாவட்டம் தனித்தன்மை கொண்டது. முதுகுளத்தூர் கலவரம் நடைபெற்ற காலத்தில், இப்பகுதியில் தலித் விடுதலைப் பணியாற்றிய தளபதி பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி அவர்கள், எழுநூறு பேர்கள் அடங்கிய படை ஒன்றை முதுகுளத்தூர் நோக்கி அணியமாக்கினார் என்பது மிகவும் முக்கியமானது. ஒடுக்கப்பட்ட தொழிலாளர் நலனுக்காக ஜெ.ஜெ. தாஸ் தோற்றுவித்த  தொழிற்சங்கங்கள் மிகத் தீவிரமாகச் செயல்பட்டன.

DSC_0381_370இத்தகைய சமூக வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட வேலூர் மாவட்டத்தில் ஒரு பல்கலைக்கழகம் இல்லாமல் இருந்தது. கடந்த முறை தற்போதைய முதல்வர் ஆட்சியிலிருந்த 2002 ஆம் ஆண்டு, நவம்பரில் வேலூர் மாவட்டத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முன்பு வடாற்காடு மாவட்டமாக இருந்தது. அப்போது திருவண்ணாமலை மாவட்டமும் இதனுடன் இணைந்திருந்தது. தற்போது இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட சூழலில், திருவண்ணாமலை மாவட்டமும் பல நிகழ்த்துக் கலைகளைக் கொண்ட மாவட்டமாகத் திகழ்கிறது. குறிப்பாக, பறையிசைக் கலைஞர்கள் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இம்மாவட்ட மக்களின் பண்பாட்டுடன் கலந்து கல்வியினைத் தர வேண்டும்; அதனடிப்படையில் நிகழ்த்துக் கலைகளை ஊக்குவித்து, அதற்கான ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகத் துறைகள் தொடங்கப்பட வேண்டும் என்பது இப்பல்கலைக் கழகத்தின் நோக்கம். அது மட்டுமின்றி, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் இருக்கை ஒன்றைத் தொடங்க வேண்டும் என்பதற்காக, மய்ய அரசின் சமூக நீதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை 2008 இல் இசைவளித்தது. அம்பேத்கர் ஆய்வு தொடர்பான துறையையும் தொடங்க வேண்டும் என்பதுதான் அதன் அடிப்படை.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கர் படிப்பியல் துறையைத் தொடங்க 27.12.2006 அன்று, இப்பல்கலையின் ஆட்சிக்குழுக் கூட்டம் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. 2006 – 2009 கல்வியாண்டில் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் தேர்தலில் பல்கலைக்கழக ஆசிரியர் பிரதிநிதியாக ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர் அய்.இளங்கோவன், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகப் பிரதிநிதி பேராசிரியர் இல. பிரதாபன் ஆகியோர் இதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றைய துணை வேந்தர் டாக்டர் இல.கண்ணன் தமக்கே உரிய காரணங்களுக்காக, சுமார் 14 மாதங்கள் இத்துறையைத் தொடங்க தொடர் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. எனவே, 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டத்தில் அய்.இளங்கோவன் மற்றும் இல.பிரதாபன் ஆகியோர் தலைமையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் உண்டான நெருக்கடி காரணமாக, துணைவேந்தர் வேறு வழியின்றி தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்களுக்கு எழுத ஒப்புக்கொண்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இதன் விளைவாக, அடுத்த சில மாதங்களில் ஆளுநர் அனுமதியும் கிடைத்தது. எனினும் மூன்றாண்டுகள் ஆன பின்பும் இத்துறையைத் தொடங்க, பல்கலைக்கழக நிர்வாகம் துளியளவும் முயற்சி எடுக்கவில்லை.

இந்நிலையில், 28.11.2011 அன்று நடந்த ஆட்சிக்குழு கூட்டத்தில் அம்பேத்கர் படிப்பியல் துறைக்கு ஒரு பேராசிரியர், இரண்டு இணைப் பேராசிரியர்கள் மற்றும் மூன்று உதவிப் பேராசிரியர் பதவியை ஏற்படுத்த ஒப்புதல் கோரியபோது, தமிழக அரசின் உயர்கல்வித்துறைச் செயலர் முனைவர் ஆர். கண்ணன், துறையைத் தொடங்க பணமில்லை எனவும் தற்போது செயல்பட்டு வரும் ஆங்கிலத்துறையை மூடிவிட்டு, அத்துறைக்கு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை அம்பேத்கர் படிப்பியல் துறைக்கு மாற்றச் சம்மதித்தால் பரிசீலிக்கலாம் என்றார்.

“ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வியின் ஏணிகளில் ஏற ஆங்கிலம் அவர்களுக்கு பெருந்தடையாக இருக்கிறது. அவர்கள் ஆங்கில அறிவையும் சமூக அறிவையும் ஒருசேர பெற வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்நிலையில், அம்பேத்கர் படிப்பியல் துறை தொடங்க வேண்டுமானால், ஆங்கிலத்துறையை மூடவேண்டும் என்ற உயர்கல்வித்துறைச் செயலரின் பேச்சு பண்ணையார்த்தனமானது. மநுதர்மத்தின் கல்விமுறையை நிலைநாட்டும் வகையிலான இந்தப் பேச்சு, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமையைப் பறிக்க முனைவதாகவே கருதவேண்டியிருக்கிறது'' என்கிறார் பேராசிரியர் அய். இளங்கோவன்.

ஆங்கிலத்துறையை மூட வேண்டுமென்ற உயர்கல்வித்துறைச் செயலரின் கருத்துக்கு ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. வேலூர் காந்திநகர் ஆக்சீலியம் கல்லூரி முதல்வர் சகோ.யூஜினி பாத்திமா மட்டுமே ஆங்கிலத் துறையை மூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இவரது எதிர்ப்பினை கல்வித்துறை செயலர் கண்டுகொள்ளாததுடன் இவர் இருக்கும் கல்லூரி மீது நடவடிக்கை பாயும் எனவும், தான் விழிப்புணர்வு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றியதாகவும் மிரட்டியுள்ளார். இவரது மிரட்டல் செயல்பாடு, தலித் மக்களின் கல்வி உரிமையில் மிகப்பெரிய பங்கத்தை உண்டாக்குமென இப்பகுதி கல்வியாளர்களும் சமூக சிந்தனையாளர்களும் கவலை கொள்கின்றனர்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் படிப்பியல் துறை தொடங்க முன் வராததற்குக் காரணம் தீண்டாமை எனில், வேறு சில விஷயங்களும் அதை உறுதிப்படுத்துகின்றன. மய்ய அரசு ஏற்படுத்தியுள்ள டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை இப்பல்கலைக்கழகத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இருக்கையைத் தொடங்க இசைவளித்துள்ள போதிலும் பல்கலைக்கழக நிர்வாகம் மெத்தனப்போக்கையே கடைப்பிடிக்கிறது.

தமிழகத்தின் முன்னோடி பல்கலைக்கழகங்களில் தலித் ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவர்களின் பணிசார், கல்விசார் பிரச்சனைகளைத் தீர்க்க உதவ உருவாக்கப்பட்டுள்ள பட்டியல் சாதியினர், பழங்குடியினத்தவர்க்கான சிறப்புத் தனிப்பிரிவு இதுவரையிலும் இப்பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படவில்லை. மேலும், பட்டியல் சாதியினர் – பழங்குடியினத்தவரின் குறைதீர்ப்புக்காக இப்பல்கலையில் இவ்வினத்தைச் சார்ந்த தகுதியுடைய ஒரு தொடர் அலுவலரை நியமிக்க வேண்டுமென்பது விதி. அதுவும் நடக்கவில்லை. தமிழக முதல்வர் இப்பல்கலைக்கழகப் பிரச்சனையில் நேரடியாகத் தலையிட்டு, அம்பேத்கர் படிப்பியல் துறையைத் தொடங்கவும் தாறுமாறாகப் பேசித்திரியும் உயர்கல்வித்துறைச் செயலரை உடனே மாற்றியும், இப்பல்கலைக்கழகத்திற்குத் துணை வேந்தராக ஒரு தலித் கல்வியாளரை, சமூகவியலாளரை நியமித்தால்தான் தீண்டாமை முடிவுக்கு வருமென இப்பகுதியின் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்களின் கல்வியறிவு மறுக்கப்பட்டதற்கான காரணம் சாதிய காழ்ப்புணர்வுதான் என்பதை வெளிப்படுத்தவும், திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் இத்தகைய சாதிவெறிப் போக்கைக் கண்டித்தும் கடந்த 9.12.2011 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 வரை பறை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு பேராசிரியர் அய். இளங்கோவன் அவர்கள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்து அவர் பேசுகையில், “திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் நிரப்பப்படவேண்டிய ஆசிரியர், அலுவலர் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கிறது; அதற்குக் காரணம் போதிய விலை படியாததே. அம்பேத்கர் இருக்கையைத் தொடங்காததற்குக் காரணம் துணைவேந்தர்களின் சாதிய சார்புதான். ஆகவே இப்படிப்பட்ட தற்போதைய துணைவேந்தரை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும்; உடனடியாக அம்பேத்கர் இருக்கையைத் தொடங்க வேண்டும்'' என்றார். பிறகு அவர் எழுப்பிய முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை அப்படியே பங்கேற்பாளர்கள், செய்தியாளர்களிடம் சேர்த்தது.

கல்லூரிப் பேராசிரியர்கள் பலர், ஆசிரியர்கள், அரசு அலுவலர் சங்கத்தினர், தலித் இயக்கங்களின் வேலூர் மாவட்ட முன்னோடிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லதா, க.சுரேஷ், மங்கையர்க்கரசி எழுத்தாளர் அழகிய பெரியவன், ரெவரென்ட் அய்சக் கதிர்வேல், சுரேந்தர், வழக்குரைஞர் சைலஸ், ஜோதிபாசு,பேராசிரியர் இல.பிரதாபன், எஸ். குமார், சாந்தி, சகுந்தலா, சசிகலா, திருஞானம், உஷா, சரோஜினி, பேபி சலீனா, பிரபாகரன், செல்லக்குமார், சிவசங்கர், ரவி கஜேந்திரன், BEFI, சிவராமன், BHEL லோகநாதன், ராமஜெயம், சரவணராஜ், வாரா, விக்னேஷ், முனைவர் கலைச் செல்வி, பேராசிரியர் வணங்காமுடி, முனைவர் நிர்மல், ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் இடையிடையே போளூர் மாணிக்கம் – ஜெயக்குமார் குழுவினரின் பறையிசை முழங்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில், இப்போராட்டத்தை தமிழகமெங்கும் பரவச் செய்வது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 – யாழன் ஆதி

கடைசியாக வந்த தகவல் : மேற்கூறிய ஆர்ப்பாட்டம் நடைபெற்ற மூன்றாவது நாளில் (13.12.2011) துணைவேந்தர் ஜோதி முருகன் மீது ஆதாரத்துடன் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால், அவருக்கே உரிய காரணங்களுக்காக அவர் பதவி விலகினார்.

Pin It