மதக்கலவரங்களைத் தடுக்க     மத்திய அரசு கொண்டுவரவுள்ள வகுப்புவாத வன்முறைத் தடுப்புச் சட்டத்தை ஜெயலலிதா அரசும், பா.ஜ.க.வை பிரதிநிதித்துவப்படுத்தும் மோடி அரசும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இவர்களின் பொய் முகத்தை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி, சென்ற இதழில் வெளிவந்த கட்டுரையின் இறுதிப் பகுதி இது.

ஜெயலலிதா ஆட்சேபிக்கும் அம்சங்கள் இதில் என்ன உள்ளன?

 (4) “இந்த உத்தேச சட்ட முன்வடிவின் 20 ஆவது பிரிவு, மாநில சுயாட்சியை நேரடியாகத் தாக்கக்கூடியதாக உள்ளது. இந்தப் பிரிவு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எண்ணத்திற்கும், மாநிலங்களுக்கு அதிக அளவில் சுயாட்சி கொடுக்க வேண்டும் என்ற சர்க்காரியா ஆணையம் உள்ளிட்ட இதர ஆணையங்களின் பரிந்துரைக்கும் எதிரானது. திட்டமிட்ட வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறை நிகழ்வு என்பது, அரசமைப்புச் சட்டம் 355ஆவது சட்டப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள "உள்நாட்டுக் குழப்பம்' என்ற பொருளுக்கு உட்பட்டது (that the occurrence of organized communal and targeted violence would constitute 'internal disturbance' within the meaning of Article 355 of the Constitution) என்று இந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளதால், தலைக்கு மேல் கத்தி போல, எப்பொழுது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்ச உணர்வை மாநில அரசாங்கங்களுக்கு இது ஏற்படுத்தும்.

“இந்தப் பிரிவு, குறிப்பாக மத்திய அரசு மட்டுமே திட்டமிட்ட வகுப்புவாத மற்றும் வன்முறைகள் குறித்து கவலைப்படுவது போன்றும், மாநில அரசுகள் இத்தகைய குற்றங்களுக்கு துணை போவது போன்றும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.'' (It particularly gives the impression that it is only the Centre which is greatly concerned about organised communal and targeted violence while the State governments abetted such crimes.)

“மாநில அரசை நடத்திச் செல்லும் அளவுக்கு, புலன் விசாரணை, புகார்கள் மீதான விசாரணை போன்றவற்றில், விஞ்சிய அதிகாரம் மற்றும் செயல்திறன் இந்த தேசிய அதிகார அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.

“அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், மேலதிகாரிகளின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாமை மற்றும் கலகத்தை ஆதரிக்கும் வகையில், இந்த உத்தேச சட்டத்தின் முன்வடிவு அமைந்துள்ளது. இது, ஒட்டுமொத்த குழப்பம் மற்றும் சட்டத்தின் ஆட்சி இல்லாமை ஆகியவற்றை ஏற்படுத்தி, அதன் மூலம் நாட்டில் சட்டம் ஒழுங்கை முழுவதுமாக நிலைகுலையச் செய்துவிடும்.

“வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறையைத் தடுக்கும் போர்வையில், மாநில அரசுகளைப் புறந்தள்ளிவிட்டு, அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசிடம் குவித்து, அதன் மூலம் மாநில அரசுகள் எந்த அதிகாரமும் இல்லாமலும், மத்திய அரசின் கருணைப் பார்வையில் இருக்கும்படியும் வைத்திருப்பதற்கான ஒரு வெளிப்படையான முயற்சிதான், இந்த வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறை (நியாயம் மற்றும் இழப்பீடு வழங்க வழிவகை செய்தல்) தடுப்புச் சட்ட முன்வடிவு 2011 ஆகும்.

“ஒருவேளை, உச்ச நீதிமன்றத்தின் "எஸ்.ஆர். பொம்மை தீர்ப்புரை' யின் காரணமாக அரசமைப்புச் சட்டப் பிரிவு 356 இன் படி, மாநில அரசுகளைக் கலைக்கும் வாய்ப்பு மத்திய அரசுக்கு குறுகி உள்ள காரணத்தால், மாநில அரசுகள் எப்போது வேண்டுமானாலும் கலைக்கப்படலாம் என்ற அச்சுறுத்தல் எப்போதும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை இது கொண்டுள்ளது போலும்.

“வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறை நிகழ்வுகளில் மாநில அரசுகளை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு, மத்திய அரசுக்கே ஒட்டுமொத்த அதிகாரங்களை வழங்குவதாக இந்தச் சட்டம் அமைந்துள்ளது. நீதிபதி சர்க்காரியா ஆணையம் மத்திய – மாநில அரசுகளின் உறவுகள் பற்றி கூறப்பட்ட நெறிமுறைகளை இந்த சட்ட முன்வடிவு சீர்குலைக்கிறது. விரோதப் போக்குடைய மத்திய அரசு, எதிர்க்கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் உள்ள மாநிலங்களை அரசமைப்புச் சட்டப் பிரிவு 356 இன்படி, கலைக்கும் அதிகாரத்திற்கு நீதிமன்றத் தீர்ப்புகளால் தடை ஏற்பட்டுள்ள நிலையில், அதனைத் தவிர்க்கும் வகையில், புதிய தந்திரமாக இந்தச் சட்ட முன்வடிவு உள்ளதாகத் தோன்றுகிறது (This vitiates the norms for Centre - State relations envisaged by the Justice [ R. S. ] Sarkaria Commission. The Bill appears to be a new ruse to side-step the judicial constraints imposed on the indiscriminate use of Article 356 of the Constitution against opposition-ruled States by an antogonisitc Centre)  

“இந்தச் சட்ட முன்வடிவு சட்டமாக்கப்பட்டால், மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல் சக்திகளைச் சேர்ந்தவர்கள் சதித்திட்டம் தீட்டி, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் நிலையற்ற சூழ்நிலையை உருவாக்கக் கூடிய நிலை ஏற்படலாம்.

“வன்முறையில், போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்தால், சம்பந்தப்பட்ட மாநில அரசானது கருத்து வேறுபாட்டினை அடக்குமுறை மூலம் முடக்குவதான பழிக்கு ஆளாக நேரிடும். மாறாக, வன்முறை நிகழ்வதால், வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறை நிகழ்வதாகக் கூறி, மெய்மைக் கூறுகளை முற்றிலும் விட்டுவிட்டு, தனது விருப்பங்களையும் கருத்துகளையும் சார்ந்திருக்கிற பொதுப்படையான சட்டத்தின் பிரிவுகளைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட மாநில அரசு கலைக்கப்படக் கூடும்.

“இது ஜனநாயகத்திற்கு விரோதமான பாசிச (anti-democratic and fascist) சட்ட முன்வடிவு என்பதைத் தவிர வேறல்ல. இடர்ப்பாடான சூழ்நிலையில் உற்சாகத்தையும் கோட்பாடுகளையும் இழந்த மத்திய அரசு, ஆதாய நோக்கத்துடன் அறிமுகப்படுத்தியுள்ள இந்தச் சட்ட முன்வடிவு முற்றிலும் விரும்பத்தகாத ஒன்றாகும். ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் இந்தச் சட்ட முன்வடிவினை முழுமையாக எதிர்க்க வேண்டியது அவர்தம் கடமையாகும். இந்தச் சட்ட முன்வடிவை அறிமுக நிலையிலேயே ஒட்டுமொத்தமாகத் தூக்கி எறிவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்'' (It is wholly undesirable piece of legislation that is being introduced with vested notions by a Central regime that is not only running out of steam but also ideas for survival. It is the sacred duty of all those who believe in democracy to oppose this Bill in toto and take every step to throw this Bill lock, stock and barrel at the introduction stage).

 ஜெயலலிதாவின் இந்தக் கூற்று உண்மைக்கு முரணானது. சட்ட முன்வடிவின் பிரிவு20, வகுப்பு இணக்கம், நீதி, இழப்பீடு ஆகியவற்றுக்கான தேசிய அதிகார அமைப்பு (National Authority For Communal Harmony, Justice and Reparation) எப்படி உருவாக்கப்பட வேண்டும் என்பதைச் சொல்கின்றதே தவிர, வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறையைத் தடுக்கும் விடயத்தில் மத்திய, மாநில அரசாங்கங்களுக்குள்ள அதிகாரங்களைப் பற்றி அல்ல.

“திட்டமிட்ட வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறை நிகழ்வு என்பது, அரசமைப்புச் சட்டம் 355ஆவது சட்டப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள "உள்நாட்டுக் குழப்பம்' என்ற பொருளுக்கு உட்பட்டது (that the occurrence of organized communal and targeted violence would constitute 'internal disturbance' within the meaning of Article 355 of the Constitution) என்று இந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளதால், தலைக்கு மேல் கத்தி போல, "எப்பொழுது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்ச உணர்வை மாநில அரசாங்கங்களுக்கு இது ஏற்படுத்தும்' என்று ஜெயலலிதா கூறுவது, சங் பரிவாரம் தொடர்ந்து நடத்திவரும் பொய்ப் பிரச்சாரத்தில் உள்ள கருத்துதான்.

"திட்டமிட்ட வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறை' என்பது அரசமைப்புச் சட்டம் 355 ஆவது சட்டப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள "உள்நாட்டுக் குழப்பம்' என்ற பொருளுக்கு உட்பட்டது' என்று இந்த சட்ட முன்வடிவில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அதேபோல, சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்கள் தங்கள் மாநிலங்களில் வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறைகளைத் தடுக்கத் தவறினால், மத்திய அரசாங்கம் தலையிடும் என்றும் இந்த சட்ட முன்வடிவு எந்த இடத்திலும் கூறுவதில்லை.

(5) “இந்த உத்தேச சட்ட முன்வடிவின் 20ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டு உள்ள திட்டமிட்ட வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறை குறித்து மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்கள், தேசிய அதிகார அமைப்பிற்கு உள்ள அதிகாரம் மற்றும் செயல்பாடுகள், மாநில அரசுக்குள்ள அதிகாரங்கள் முழுவதையும் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதோடு மட்டுமில்லாமல், மாநில சுயாட்சிக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானதாகவும் உள்ளது.

“மாநில அரசுகளுக்கும், அனைத்து மட்டத்தில் உள்ள பொது ஊழியர்களுக்கும் ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் வழங்கும் அதிகாரம் இந்த தேசிய அதிகார அமைப்பிற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் மாநில அரசுகளுக்கும், பொது ஊழியர்களுக்கும் (ணீதஞடூடிஞி ண்ஞுணூதிச்ணtண்) இருக்கிறது.''

உண்மையில், எந்தவொரு விசாரணையையும் நடத்தும்படி மாநில அதிகார மய்யங்களுக்கு தேசிய அதிகார அமைப்பு ஆணைகள் (directions) அனுப்பலாம் என்றும், அந்த ஆணைகள் மாநில அதிகார அமைப்புகளைக் கட்டுப்படுத்தும் என்றும்தான் சட்ட முன்வடிவு பிரிவு 32 (Powers of the National Authority) கூறுகிறது. மாநில அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலுமுள்ள ஊழியர்களையும் அதிகாரிகளையும் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று இந்தச் சட்ட முன்வடிவு எந்த இடத்திலும் கூறுவதில்லை. ஒரு குறிப்பிட்ட வன்முறை நிகழ்வு குறித்த தகவலோ, அறிக்கையோ மத்திய அரசாங்கத்திடமிருந்தோ, சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்திலிருந்தோ, தேசிய அதிகார அமைப்பு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் வந்து சேராவிட்டால், தனக்கு வந்துள்ள புகார்கள் தொடர்பாக தானாவே சுயமாக விசாரிக்கும் அதிகாரத்தை, பிரிவு 33 தேசிய அதிகார அமைப்புக்கு வழங்குகிறது.

இந்த சட்ட முன்வடிவு கூறும் தேசிய அதிகார அமைப்பு, கிட்டத்தட்ட தேசிய மனித உரிமை ஆணையம் போன்றதுதான். தேசிய மனித உரிமை ஆணையச் சட்டத்தின்படி (National Human Rights Commission Act) எவ்வாறு "தேசிய மனித உரிமை ஆணையமு'ம் (National Human Rights Commission), "மாநில மனித உரிமை ஆணையங்களு' ம்(State Human Rights Commission )உருவாக்கப்பட்டுள்ளனவோ (அவற்றின் செயல்பாடுகளைப் பற்றிப் பேசுவதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல) அதேபோலவே, வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறை, நீதி, இழப்பீடு ஆகியவற்றுக்கான தேசிய அதிகார அமைப்பின் கூடவே ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அதிகார அமைப்பு (State Authority) அமைக்கப்பட வேண்டும் என்று இச்சட்ட முன்வடிவு கூறுகிறது. தேசிய அதிகார அமைப்பு தேசிய மனித உரிமை ஆணையத்தைப் போலவே ஒரு சிவில் நீதிமன்றத்துக்குள்ள அதிகாரங்களைக் கொண்டிருக்குமேயன்றி, குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரங்களை அல்ல.

இந்த சட்ட முன்வடிவின் விளக்கக் குறிப்பு பக்கம் எண் 3 இல் குறிப்பிடப்படுவது போல, கண்காணிப்பு மற்றும் குறை நிவர்த்தி அதிகாரங்களும் பொறுப்பும் தேசிய அதிகார மய்யம், மாநில அதிகார மய்யம் ஆகிய இரண்டுக்கும் தரப்பட்டுள்ளது. வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறையைத் தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அரசாங்க ஊழியர்கள் (அதிகாரிகள்) செயல்படுகிறார்களா என்பதையும் அரசாங்க ஊழியர்கள், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் இழைப்பீடும் கிடைப்பதை உத்திரவாதம் செய்கிறார்களா என்பதையும் உறுதி செய்யும் கட்டளையை நிறைவேற்ற வேண்டியவை ஆகும்.

அரசாங்க அதிகாரிகள் சட்டப்படி செயல்படுவதைக் கண்காணிக்கவும், அறிவுரை கூறவும், அவர்களுக்கு அதை நினைவூட்டவும், சட்டப்படி செயல்படத் தவறினால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கவும் தேசிய, மாநில அதிகார அமைப்புகள் கடமைப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் இப்போதுள்ள மத்திய, மாநில அரசாங்கங்கள், நீதித் துறை முதலானவற்றின் அதிகாரங்கள் எதனையும் எடுத்துக் கொள்வதில்லை; சட்டத்தை நிலைநாட்டும் எந்தவொரு அரசாங்க நிறுவனத்திற்கும் மாற்றீடாக அவை அமைவதில்லை. மாறாக, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஏற்கனவே உள்ள அமைப்புகள், சிறப்பு நீதிமன்றங்கள் முதலியன பாரபட்சமின்றி செயல்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க மட்டுமே செய்யும்.

இந்தச் சட்ட முன்வடிவு கூறும் சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றங்களை விசாரணை செய்து தண்டிக்க புதிய சட்டப் பிரிவுகள் ஏதும் சேர்க்கப்படவில்லை. மாறாக, ஏற்கனவே உள்ள இந்தியத் தண்டனைச் சட்டம் போன்றவற்றைக் கொண்டே இதைச் செய்ய வழிவகுக்கிறது.

மேலும், குறிப்பிட்ட மாநிலத்தில் நடந்த வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறைகள் குறித்த முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தல், புலன் விசாரணை செய்தல், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தல், சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தல், குற்ற வழக்குகளை நடத்துதல் ஆகிய அனைத்தும் அந்த மாநில அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டவையே. சிறப்புக் குற்றவியல் வழக்குரைஞரை (public prosecutor) நியமிப்பது குறித்து ஜெயலலிதா கூறுவதை, இந்த சட்ட முன்வடிவு பிரிவு 76 கூறுவதுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். ஜெயலலிதாவின் அறிக்கை கூறுகிறது:

“இந்த உத்தேச சட்ட முன்வடிவின் கீழ் உள்ள குற்றங்களுக்கான குற்ற வழக்குகளை தாக்கல் செய்வதற்கான சிறப்பு குற்றவியல் வழக்குரைஞரை நியமிக்கும் தனிப்பட்ட அதிகாரம்கூட, இந்தச் சட்டத்தில் மாநில அரசுக்கு இல்லை. மாநில அரசு சிறப்பு குற்றவியல் வழக்குரைஞரை நியமிப்பதற்கு முன், அவ்வாறான நியமனம் செய்வதற்கான அறிவிக்கையை வெளியிட்டு, அதன் மீது பொது மக்களிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளைப் பெற வேண்டும் என்று இந்த உத்தேச சட்ட முன்வடிவில் உள்ளது''

சட்ட முன்வடிவு பிரிவு 76 கூறுகிறது:

76. Special Public Prosecutors: (1) For every State, the concerned State Government shall, by notification in the official Gazette, appoint a panel of Special Public Prosecutors for prosecuting offences under this Act, and who shall be deemed to be Special Public Prosecutors under sub-section (8) of Section 24 of the Code of Criminal Procedure 1973 within the meaning of clause (u) of Section 2 thereof. (2) Special Public Prosecutors shall conduct the prosecution of offences under this Act in a fair and impartial manner and in the interest of justice. In the event the Special Public Prosecutor conducts the prosecution in a biased manner against the interest of the informant or the victim, the State Gvernment may, on its own or an information received from a victim or informant, replace the Special Public Prosecutor.

Exhibition_pic_370குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் சம்பந்தப்பட்ட பிரிவுகளின்படி, அரசிதழில் அறிவிக்கை கொடுத்து சிறப்புக் குற்றவியல் வழக்குரைஞர்களை மாநில அரசாங்கம் நியமிக்க வேண்டும். சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படுவது எவ்வாறு அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட வேண்டுமோ அதே போன்றதுதான் இதுவும்.' பொது மக்களிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளைப் பெறுவது' ஒரு வேளை ஜெயலலிதாவின் "உள்ளார்ந்த ஜனநாயக விருப்பமாக'  இருக்கக்கூடும்! ஆனால், இந்த சட்ட முன்வடிவில் அதற்கு இடமில்லை.

எனவே, ஒரு மாநில முதலமைச்சர் பொறுப்பில் உள்ளவர் அப்பட்டமான ஒரு பொய்யைக் கூறும் போது, மதச்சார்பின்மை, ஜனநாயகம், சாதி ஒழிப்பு முதலியவற்றை உயர்த்திப் பிடிப்பதாகக் கூறும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஏதும் அதைத் தட்டிக் கேட்கவில்லை.

(6) "இந்த உத்தேச சட்ட முன்வடிவில், அத்தியாயம் 7இல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், இழப்பீடு உரிமையை ஈடு செய்தல், இழப்பீடு வழங்குவதற்கான பொறுப்பு ஆகியன மாநில அரசுக்கு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை எல்லாம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல் மற்றும் வகுப்புவாத வன்முறை ஆகிய சூழ் நிலைகளில் மாநில அரசுக்குரிய இயல்பான செயல்களாகும். மாநில அரசுக்குரிய இந்த அதிகாரங்களை பறித்துக் கொண்டும், அதிகாரத் தோரணையோடும், மேற்பார்வையிடுபவராகவும் தன்னை மத்திய அரசு கருதிக் கொண்டுள்ளதாக இந்தச் சட்டம் அமைந்து உள்ளது. (The Bill only seems to point out that the Government of India is arrogating to itself the normal powers of the State government (s) and is putting itself in an overbearing and supervisory role).

உண்மையில், இந்த சட்ட முன்வடிவின் அத்தியாயம் 7இன் (Chapter 7) கீழ் வரும் பிரிவுகள் 87 முதல் 110 வரையிலான அனைத்தும் மாநில அரசாங்கங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டவையே. இந்த அதிகாரங்கள் ஏதும் பறிக்கப்படவில்லை. இந்த சட்ட முன்வடிவு செய்ய முனைந்திருப்பதெல்லாம், வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாடு முழுவதற்கும் ஒரே சீரான இழப்பீட்டை வழங்க முற்படுவதுதான். இதுவரை இழப்பீட்டின் அளவு என்பது சம்பந்தப்பட்ட மாநிலங்களில் அதிகாரத்தில் உள்ளவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் பக்கச்சார்புகளுக்கும் உட்பட்டதாகவே இருந்துள்ளது. எனவே, வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் என்பது போல, ஒவ்வொரு வகையான பாதிப்புக்கும் கணிசமான இழப்பீடை வழங்க இந்த சட்ட முன்வடிவு வழி செய்கிறது. இழப்பீடு விவரங்கள் இந்த சட்ட முன்வடிவின் பட்டியல் IVஇல் (Schedule VI) தரப்பட்டுள்ளன.

ஜெயலலிதாவின் அறிக்கையில் இருப்பதாக "தி இந்து' நாளேட்டின் செய்தி குறிப்பிடுவதாவது: "Many of of the offences sought to be covered by this proposed law are left to the subjective interpretations of the authorities concerned and are open to gross misuse, particularly considering the sweeping powers vested in the Bill'

அதாவது, உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட முன்வடிவில், விரிந்த அதிகாரங்கள் தரப்பட்டிருப்பதன் காரணமாக, அச்சட்ட முன்வரைவில் சொல்லப்படும் குற்றங்களில் பல, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அகவயமான விளக்கத்துக்கு உட்படுத்தப்பட்டு, அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது என்கிறார் ஜெயலலிதா. அவரது ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட "தடா', "பொடா' சட்டங்களில் சொல்லப்பட்ட குற்றங்களில் தொடர்புடைய பல அதிகாரிகளின் அகவயமான விளக்கத்துக்கு உட்படுத்தப்பட்டு, அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டதை மறந்துவிட்டார் போலும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மாநில அரசாங்கங்களுக்குள்ள இயல்பான அதிகாரங்களை இந்த சட்டமுன்வடிவு பறித்துக் கொள்வதாகக் கூறும் ஜெயலலிதா, இதே போன்ற ஆட்சேபனைகளை சி.பி.அய்., தேசியப் புலனாய்வு முகாமை சட்டம் (National Investigation Agencey Act), சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றுக்கும் தெரிவிப்பாரா?

7) “அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மேலதிகாரிகளின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாமை மற்றும் கலகத்தை ஆதரிக்கும் வகையில் இந்த உத்தேச சட்டத்தின் முன்வடிவு அமைந்துள்ளது. இது, ஒட்டுமொத்த குழப்பம் மற்றும் சட்டத்தின் ஆட்சி இல்லாமை ஆகியவற்றை ஏற்படுத்தி, அதன் மூலம் நாட்டில் சட்டம் ஒழுங்கை முழுவதுமாக நிலைகுலையச் செய்துவிடும்.''

இதேபோன்ற விமர்சனத்தைத்தான் சங்பரிவாரம் செய்து வருகிறது. அதற்குக் காரணம், இந்திய அரசியல் சட்டத்துக்கும் பிற சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு, நரேந்திர மோடியின் ஆணைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களும், குஜராத் வன்முறையில் மோடிக்கு நேரடியாகத் தொடர்பு உள்ளது என்று கூறத் துணிந்தவர்களுமான சஞ்சய் பட் போன்ற உயர் போலிஸ் அதிகாரிகளை மனதில் வைத்தே இந்த விமர்சனம் செய்யப்படுகிறது. அதாவது போலிஸ் அதிகாரிகள், சட்டம் கூறுகிறபடி நேர்மையாக நடந்து கொள்வது, ஆர்.எஸ்.எஸ்.ஸையும் ஜெயலலிதாவையும் பொருத்தவரை, "கீழ்ப்படியாமை',"கலகம் விளைவித்தல்', "சட்டம் ஒழுங்கை நிலைகுலையச் செய்தல்' என்பனவாகின்றன!

இந்த சட்ட முன்வடிவை வரைந்தவர்கள், நாட்டின் பல்வேறு தரப்பினரால் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகள், சந்தேகங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நாற்பத்தி ஒன்பது திருத்தங்களை அதில் செய்திருக்கின்றனர். அதில் இன்னும் பல குறைகளைக் கண்டறிய முடியும். ஆனால், அவற்றை நேர்மையான விவாதங்களின் மூலம்தான் செய்ய வேண்டுமே தவிர, அதிலுள்ள விடயங்களைத் திரித்துக் கூறுவதன் மூலமும் பச்சைப் பொய்கள் நிரம்பிய பிரச்சாரத்தை முடுக்கிவிடுவதன் மூலமும் அல்ல.

உண்மையில் வகுப்புவாத சக்திகளுக்கும் குறிப்பாக, சங் பரிவாரத்துக்கும் அவர்களது நேர்முக, மறைமுக ஆதரவாளர்களுக்கும் கசப்பூட்டுகின்ற பிரிவு இந்த சட்ட முன்வடிவில் உள்ளது. அதாவது, அரசாங்கம் சாராத எந்தவொரு அமைப்பில் கட்டளையிட்டு தனது உறுப்பினர்களைச் செயல்பட வைக்கும் கட்டளை இடக் கூடியவர், அந்த உறுப்பினர்களின் வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறையைத் தடுக்கத் தவறுபவரும்கூட, அந்த உறுப்பினர்கள் செய்த குற்றங்களை இழைத்தவராவார் என்று பிரிவு 15 கூறுகிறது.

2. இனி, இந்த சட்ட முன்வடிவின் பின்னணியையும், சங் பரிவாரம் செய்து வரும் பொய்ப் பிரச்சாரங்களையும் பார்ப்போம். முதலாவதாக, இந்த சட்டமுன்வடிவு கடந்த அறுபத்தி மூன்று ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள இந்து பெரும்பான்மையினருக்கும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் இடையே நடந்த வகுப்பு மோதல்களை மட்டும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதல்ல. இந்த சட்ட முன்வடிவு கூறும் ' சிறுபான்மையினர்' (minority) மதச் சிறுபான்மையினர் மட்டுமல்லர்; மொழிச் சிறுபான்மையினர், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் ஆகியோரும் "சிறுபான்மையினர்' என்னும் வகையினத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அது மட்டுமின்றி. "சிறுபான்மையினர்' என்பவர்கள் (பட்டியல் சாதியினர், பழங்குடியினர் தவிர) இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர் என்று இந்த சட்ட முன்வடிவு கூறுகிறது. பஞ்சாபில் சீக்கியர்களும் ஜம்முகாஷ்மீரில் முஸ்லிம்களும் பெரும்பான்மையினர்; ஆனால், பிற மாநிலங்களில் அவர்கள் சிறுபான்மையினர். அதேபோல தமிழ்நாட்டில் தமிழர்களும் பீகாரில் பீகாரிகளும் பெரும்பான்மையினர்; ஆனால், பிற மாநிலங்களில் சிறுபான்மையினர். ஜம்மு காஷ்மீரில் சீக்கியர்களும் இந்துக்களும் பவுத்தர்களும் சிறுபான்மையினர். எனவே, அவர்களை "சிறுபான்மையினர்' என்று அந்த மாநில அரசாங்கம் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று இந்த சட்ட முன்வடிவு விரும்புகிறது.

இந்த "சிறுபான்மை' சமூகங்களைச் சேர்ந்தவர்கள், அவர்கள் அப்படிப்பட்டவர்களாக இருக்கின்ற காரணத்தாலேயே திட்டமிட்ட, பரவலான (organised mass violence) வன்முறைத் தாக்குதலுக்கு உட்படும்போது, அந்த வன்முறை நிகழ்வுகள் நடைபெறும் மாநிலங்களிலுள்ள அரசாங்கங்கள், இந்திய அரசியல் சட்டத்தின்படியும் நாட்டிலுள்ள பல்வேறு சட்டங்களின்படியும் நேர்மையான, நியாயமான நடவடிக்கைகளை மேற்கொண்டு மேற்சொன்ன சிறுபான்மையினரைப் பாதுகாக்கத் தவறியதுடன், அந்த சிறுபான்மையினருக்கு எதிராகவும் பெரும்பான்மையினருக்கு சாதகமாகவும் (நேரடியாக உதவி செய்தல் அல்லது கண்டும் காணாமல் இருத்தல்) பாரபட்சமாகவும் நடந்து கொண்டதை கருத்தில் கொண்டு இந்த சட்ட முன்வடிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிகழ்வுகள் ஏதோ தொலைவான கடந்த காலத்தைச் சேர்ந்தவை அல்ல; மிக அண்மையில் நடந்தவை; மீண்டும் நிகழக்கூடிய அபாயத்தை உருவாக்குபவை. இத்தகைய நிகழ்வுகளுக்கு எடுத்துக்காட்டாக, இந்த சட்ட முன்வடிவின் விளக்கக் குறிப்பு (பக்கம் 1) கீழ்க்கண்டவற்றைச் சொல்கிறது: மகாராட்டிராவிலும் அஸ்ஸாமிலும் வேறு இடங்களிலும் பீகாரிகள் மீதும்; அஸ்ஸாமிலுள்ள நெல்லீ, மத்தியப் பிரதேசத்திலுள்ள பகல்பூர், மகாராட்டிரத்திலுள்ள பிவாண்டி, மும்பை ஆகியவற்றிலும் குஜராத்திலும் முஸ்லிம்கள் மீதும்; கர்நாடகாவில் தமிழர்கள் மீதும்; ஒரிஸ்ஸாவிலுள்ள காந்தாமாலில் கிறித்துவர்கள் மீதும்; நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டியல் சாதியினர், மற்றும்  பழங்குடியினர் மீதும் நடத்தப்பட்ட திட்டமிட்ட, பரவலான வன்முறைகள்.

pic_370கடந்த அறுபத்தி மூன்று ஆண்டுக்கால அனுபவங்களைக் கருத்தில் கொண்ட சட்ட முன்வடிவு, இந்தியாவிலுள்ள சட்டங்களும் அரசு நிறுவனங்களும் ஒரு மாநிலத்திலுள்ள ஓர் ஆதிக்கக் குழுவின் மீது மத, மொழி, சாதி அடையாள அடிப்படையிலான குற்றங்கள் இழைக்கப்படும்போது, ஒப்பீட்டு நோக்கில் பாரபட்சமின்றி செயல்படுவதையும் ஆனால் ஆதிக்கம் செலுத்தாத குழுக்களின் மீது குற்றங்கள் இழைக்கப்படும்போது அப்படிப் பாரபட்சமின்றி நடந்து கொள்வதில்லை என்றும் கூறுகிறது. (இதை பல்வேறு மாநிலங்களில் நடந்த திட்டமிட்ட வன்முறை நிகழ்வுகள் குறித்து தொடர்புடைய மாநில அரசாங்கங்கள் நியமித்த விசாரணை ஆணையங்களும்கூட மெய்ப்பிக்கின்றன).

எனவே, அரசு நிறுவனங்களின் பக்கச்சார்பான நடைமுறைகளையும் அரசின் பாரபட்சத்தையும் நீக்கி, நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஒரே சீராகப் பயன்படுத்தப்படும் வகையிலும், வன்முறை நிகழ்வுகள் நேர்ந்தால் – பாரபட்சமற்ற, நேர்மையான புலன் விசாரணையையும் குற்ற வழக்கையும் நடத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நிவாரணம், இழப்பீடு, மறுவாழ்வு ஆகியவற்றை வழங்கவும் வழிவகை செய்வதற்காகவே "வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறைத் தடுப்பு சட்ட முன்வடிவு 2011' கொண்டு வரப்படுவதாக "விளக்கக் குறிப்பு' கூறுகிறது.

சங் பரிவாரம் கூறுவதுபோல, இந்தச் சட்ட முன்வடிவு இந்தியாவின் எல்லா இடங்களிலும் பெரும்பான்மையினர்தான் ("இந்துக்கள்' என்னும் சொல்லை பா.ஜ.க. பயன்படுத்துவதில்லை) வன்முறைக் குற்றங்கள் செய்பவர்கள், எல்லா இடங்களிலும் பாதிக்கப்படுபவர்கள் சிறுபான்மையினர்தான் ("முஸ்லிம்கள்' என்று பா.ஜ.க. வெளிப்படையாகக் கூறுவதில்லை) என்னும் அனுமானத்தின் பேரிலேயே இந்த சட்ட முன்வடிவு உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறுவது உண்மைக்கு மாறானது. (உண்மையில், இந்தியாவில் கடந்த அறுபத்தி மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறை நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களில் மிகப் பெரும்பான்மையினர் இந்த சட்ட முன்வடிவு கூறும் "சிறுபான்மையினர்' தான் என்பதற்கு ஏராளமான புள்ளிவிவர சான்றுகள் உள்ளன).

Exhibition_pic13இந்த சட்ட முன்வடிவில் வரையறுக்கப்படும் "சிறுபான்மையினர்' என்பவர்கள், குறிப்பிட்ட மாநிலத்திலோ, யூனியன் பிரதேசத்திலோ உள்ள "பெரும்பான்மையினர்' மீது "திட்டமிட்ட, பரந்த வன்முறை' யை இழைக்கும் பட்சத்தில், அந்தக் குற்றங்கள் தொடர்பான நடவடிக்கை எடுப்பது குறித்து இந்த சட்ட முன்வடிவு ஏதும் கூறுவதில்லை என்று சங் பரிவாரம் கூறுகிறது. முதலாவதாக, அப்படிப்பட்ட நிகழ்வுகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன என்றாலும், அப்படி அந்த "சிறுபான்மையினர்' நடத்தும் "திட்டமிட்ட, பரந்த வன்முறை' யும் கூட இந்த சட்ட முன்வடிவின் படி "வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறைக் குற்றமா'கக் கருதப்பட்டு, அதில் கூறப்பட்டுள்ள சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் முதலியன தரப்படும்.

"பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்' கொண்டு வரப்பட்ட போது மட்டுமின்றி, இன்றும்கூட சிலர் பட்டியல் சாதியினரும் பழங்குடியினரும் அவர்கள் அல்லாத பிறர் மீது இழைக்கும் வன்முறைக் குற்றங்கள் தொடர்பாக அந்தச் சட்டம் ஏதும் சொல்வதில்லை என்று கூறுகிறார்கள். முதலாவதாக, பட்டியல் சாதியினரும் பழங்குடியினரும் அவர்கள் அல்லாத மற்றவர்கள் மீது வன்முøறைக் குற்றங்கள் புரியலாம் என்றோ, அத்தøகய குற்றங்களுக்கு தண்டனை இல்லை என்றோ அச் சட்டம் கூறுவதில்லை. இரண்டாவதாக, அப்படிப்பட்ட குற்றங்களைப் பட்டியல் சாதியினரோ, பழங்குடியினரோ செய்தால் அவற்றைக் கையாள வேறு குற்றவியல், தண்டனைச் சட்டங்கள் உள்ளன. சமுதாயத்தில் மிக பலகீனமாக உள்ள பகுதியினரைப் பாதுகாப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட சிறப்புச் சட்டங்களிலொன்றே இது. இது போன்ற இன்னொரு சிறப்புச் சட்டத்திற்கு எடுத்துகாட்டாக "குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்ட' த்தைச் [Domestic Violence (Prevention) Act] சொல்லலாம்.

பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் ஆகியவற்றில் இரு சாதிகளை/பழங்குடியினரைச் சேர்ந்தவர்களிடையே நடக்கும் வன்முறைக் குற்றங்களை – "பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்' கருத்தில் கொள்வதில்லை என்று விமர்சித்த அதே வக்கிர மனங்கள்தாம் இப்போது, "சிறுபான்மையினர்’ களுக்கு இடையே நடக்கும் வன்முறைக் குற்றங்களை "வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறைத் தடுப்பு சட்ட முன்வடிவு'

கருத்தில் கொள்வதில்லை என்று கூறுகின்றன. அதாவது "குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம், இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த மனைவிமார்களுக்கு இடையே நடக்கும் வன்முறைகளைக் கருத்தில் கொள்வதில்லை என்று கூறுவதற்கு நிகரான வாதம்தான் இது. இத்தகைய வன்முறைகளைக் கையாள்வதற்கு எல்லோருக்கும் பொதுவான சட்டங்கள் உள்ளன.

இந்தச் சட்டம் "திட்டமிட்ட, பரந்த வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறை' யைத் தடுப்பதற்கும், அந்த வன்முறைக் குற்றத்தை விசாரணை செய்து, தண்டிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் முதலியவற்றை வழங்கவும் வழிவகை செய்யும் சட்டமேயன்றி, தனிப்பட்ட நபர்கள் ஒருவர் மீது ஒருவர் புரியும் வன்முறைக் குற்றங்கள் தொடர்பானது அல்ல. இந்தக் குற்றங்களைக் கையாள நாட்டில் வேறு சட்டங்கள் உள்ளன.

இந்த சட்ட முன்வடிவு, இந்த நாட்டிலுள்ள யாரையும் "குடிமகனா(ளா)கப் பார்ப்பதில்லை, ஒவ்வொருவரையும் அவரவரது சாதி, மத அடையாளத்துடனேயே பார்க்கிறது என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறுகிறார். அரசியல் சட்டமும் பிற சட்டங்களும் எல்லோரையும் குடிமக்களா' கப் பார்த்த போதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படும் தன்மையிலும் சரி, சமூகபண்பாட்டுக் களத்திலும் சரி – ஒவ்வொருவரும் சாதி, மத, மொழி அடிப்படையில்தானே பார்க்கப்படுகின்றனர். காழ்ப்புணர்வு என்பது எல்லா மட்டங்களிலும் இருக்கத்தானே செய்கின்றது.

இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு டெல்லியிலும் நாட்டின் வேறு பகுதிகளிலும் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த படுகொலைகள், உடைமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஓநாய்க் கண்ணீர் விடும் பா.ஜ.க.வும் அவர்களது கூட்டாளிகளான அகாலி தளத்தினரும் மட்டுமல்லாது, சோசலிச மரபில் வந்ததாகக் கூறிக் கொள்ளும் நிதிஷ் குமார், மதச்சார்பற்ற மரபுக்கு உரிமை கொண்டாடும் நவீன் பட்நாயக், அம்பேத்கர் மரபுக்கு உரிமை கொண்டாடும் மாயாவதி, பா.ஜ.க. கூட்டணிக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் மாறி மாறித் தாவிக் கொண்டிருக்கும் மம்தா பானர்ஜி ஆகியோர் தங்கள் சுயநல, சந்தர்ப்பவாத அரசியல் ஆதாயத்திற்காகவே இந்த சட்ட முன்வடிவை எதிர்க்கின்றார்களோ ஒழிய, நேர்மையான கொள்கை நெறிகளின் அடிப்படையில் அல்ல.

2002 இல் குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலுக்கும் நரேந்திர மோடிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்துவரும் சங் பரிவாரம், "மாநில சுயாட்சி' என்னும் பெயரால் இந்த சட்ட முன்வடிவை எதிர்க்கிறது. அரசியல் சட்டப் பிரிவு 377இல் ஜம்முகாஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புத் தகுதியை (இது நடைமுறையில் இல்லை) நீக்க வேண்டும், 'சிறுபான்மையினர் உரிமைகள்' என்று அரசியல் சட்டத்தில் ஏதும் குறிப்பிடப்படக்கூடாது என்றும் கூறிவரும் சங்பரிவாரமும் அதன் நேரடியான, மறைமுகமான ஆதரவாளர்களும் இந்த நாட்டில் "திட்டமிட்ட வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறை' ஏதும் நடந்ததே இல்லையா, அந்த வன்முறை நிகழ்வுகளை அதிகாரத்தில் இருப்போர் கண்டும் காணாதது போல் இருந்ததோடு, நேரடியாகவும் மறைமுகமாகவும் அவற்றுக்குத் துணை போனது இல்லையா என்னும் கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

இந்த சட்ட முன்வடிவு ஏற்கனவே நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டிருந்தால், "பரமக்குடி நிகழ்வு' க்கு சம்பந்தப்பட்ட காவல் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு இருந்திருக்கும்.

"ஊரக வேலை வாய்ப்புத் திட்டச் சட்டம்', "கல்வி உரிமைச் சட்டம்', "தகவல் அறியும் உரிமைச் சட்டம்' ஆகியனவற்றை கொண்டுவர முடிந்த நவ தாராளவாத மன்மோகன் சிங் ஆட்சி தற்போது ஏராளமான ஊழல் புகார்களிலும் அரசியல் நெருக்கடிகளிலும் சிக்கிக் கொண்டிருக்கிறது. அது, பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை சமாளித்து, "வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறைத் தடுப்புச் சட்டத்' தை நிறைவேற்றுமா என்பது சந்தேகத்திற்குள்ளாகிவிட்டது.

கடந்த காலத்தைப் போலவே "ஊழல் எதிர்ப்பு' என்பது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வலுவான சாதனமாக சங் பரிவாரத்தால் மிகுந்த ஊக்கத்துடன் பயன்படுத்தப்படுகிறது. எனினும், இந்த சட்ட முன்வடிவு எந்தக் காரணங்களுக்காக ஜெயலலிதாவால் எதிர்க்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்வதன் மூலம், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் அவர் இணைவார் என்பதையும், அதற்கு முன்னதாக இந்துத்துவப் பண்பாடும் அரசியலும் தமிழகத்தில் நன்கு வேரூன்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார் என்பதையும், அதன்

பொருட்டு அவர் தமிழ்த் தேசியர்கள் சிலரையும் பயன்படுத்திக் கொள்ளும் அதேவேளை, திராவிட இயக்கத்தால் விளைந்த ஆக்கப்பூர்வமான விளைவுகள் அனைத்தையும் முற்றிலுமாகத் துடைத்தெறிவார் என்பதையும் புரிந்து கொள்ள "அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக' த்தை அகற்றும் முடிவு இன்னொரு சமிக்ஞையாக விளங்குகிறது.

– முற்றும்

ஒரிசா மாநிலம் காந்தமாலில் 2008 ஆம் ஆண்டு இந்துத்துவவாதிகள் தலித் மக்கள், கிறித்துவர்கள் மற்றும் பழங்குடியினர் மீது கடும் தாக்குதலை நடத்தினர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பல ஆண்டுகள் கடந்தும் தங்கள் சொந்த வீடுகளுக்கு திரும்ப முடியாமல், குழந்தைகள் தங்கள் படிப்பைத் தொடரமுடியாமல் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இம்மதக் கலவரத்திற்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இந்நிலையில் National Solidarity Forum என்ற அமைப்பு இப்பிரச்சனையை கவனப்படுத்தும் வகையில் 25.8.2010 அன்று "காந்தமால் நாள் கடைப்பிடித்தது.

ஆகஸ்ட் 25 அன்று சஷி மெமூரி மற்றும் வெங்கடேஷ் (Shashi Memuri and Venkatesh)ஆகிய இரு தலித் ஓவியர்கள் காந்தமõலைச் சுற்றியுள்ள 50 கிராமங்களுக்குச் சென்று வரைந்த ஓவியங்களையே, கடந்த 'தலித் முரசு' இதழின் முகப்பிலும், இக்கட்டுரையிலும் பயன்படுத்தியுள்ளோம்.

Pin It