ரோகித் வெமுலாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அசோக்குமார் ரூபன்வால் தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் கமிட்டி தனது அறிக்கையை அளித்துள்ளது. ரோகித் வெமுலாவின் மரணத்தை கொச்சைப்படுத்துவதற்காக அன்று ஆர்.எஸ்.எஸ் வானரங்கள் என்ன என்ன பொய்களை பரப்பினார்களோ, அதை எல்லாம் ஒன்றாகத் திரட்டி அறிக்கையாகக் கொடுத்துள்ளார் அசோக்குமார் ரூபன்வால். இந்த அறிக்கை விசாரித்து உண்மையை வெளிக்கொணரும் நோக்கில் தயார் செய்யப்பட்ட அறிக்கையே இல்லை என்பதை இதை படிக்கும்போதே உணரமுடியும். அசோக்குமார் ரூபன்வால் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த அரிய உண்மைகள் இவைகள் தான்.
1) ரோகித்வெமுலா தலித் வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல.
2) தனக்கு தானே தலித் என்று அறிவித்துக் கொண்டவர்.
3) ரோகித்தின் தாயார் ராதிகா அரசின் சலுகைகளைப் பெறவேண்டியே தலித் சான்றிதழ் பெற்றுள்ளார்.
4) ரோகித் தனிப்பட்ட காரணங்களுக்காகவே தற்கொலை செய்துகொண்டார்; வெளிக்காரணங்களால் அல்ல. அவரது மன விரக்திதான் அவரை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியிருக்கின்றது.
5) ரோகித் எந்த வகையிலும் பாரபட்சமாக நடத்தப்படவில்லை. அவர் பல்கலைக்கழக விடுதியில் இருந்து நீக்கப்பட்டதற்கும் அவரது தற்கொலைக்கும் சம்பந்தமே இல்லை.
6) எம்.எல்.சி ராமச்சந்திரராவ், அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயே மற்றும் ஸ்மிருதி இராணி ஆகியோர் அவர்களது கடமைகளை மட்டுமே செய்தனர்.
7) தற்கொலை கடிதத்தில் உலக நடப்புகளே தனது தற்கொலைக்கு காரணம் என்று எழுதி வைத்துள்ளார்.
இப்படி பல அபத்தமான பொய்களின் மீது இந்த அறிக்கை கட்டமைக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் நோக்கமே இந்த வழக்கில் இருந்து காவி பயங்கரவாதிகளை காப்பாற்றுவதுதான். இதில் சொல்லப்பட்ட அனைத்தும் அப்பட்டமான பொய்கள். ரோகித் வெமுலா தலித் வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என்று சொல்வதன் மூலம் இவர்கள் எதை நிறுவ முயல்கின்றார்கள்? ரோகித்துக்காக போராடியவர்கள் அவர் தலித் என்பதற்காகத் தான் போராடினார்கள், அவர் ஒரு தலித்தல்லாதவராக இருந்திருந்தால் இந்தப் போராட்டமே நடந்திருக்காது என்று காட்டவா? இல்லை பி.ஜே.பி தலித்துக்களுக்கு எதிரான கட்சி கிடையாது, தாங்கள் கொன்றது ஒரு தலித்தை அல்ல என்று நிறுவுவதற்காகவா? குஜராத் கலவர வழக்கில் மோடிக்கு தொடர்பே இல்லை, காஷ்மீரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கும் இந்திய இராணுவத்திற்கும் சம்மந்தமே இல்லை என்று சொன்னால் அது எவ்வளவு மலிவான பொய்யாக இருக்குமோ அதற்குச் சற்றும் குறைந்தது இல்லை ரோகித் தலித் அல்ல என்பதும்.
ரோகித்தின் சாதி குறித்த குண்டூர் மாவட்ட ஆட்சியர் காந்திலால் தாண்டே தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கான தேசிய ஆணையத்திடம் ஏற்கெனவே தனது அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அதில் குண்டூர் தாசில்தாரிடம் உள்ள ஆவணம் சார்ந்த ஆதாரங்களின் படி ரோகித் சக்ரவர்த்தி வெமுலா இந்து மலா பிரிவைச் சேர்ந்தவர் என்றும், இது ஆந்திராவில் தாழ்த்தப்பட்ட சாதிப்பிரிவில் உள்ளது என்றும் தெளிவுபடுத்தி இருக்கின்றார். ஆனால் இந்த அறிக்கை அதை முற்றிலுமாக மறைத்து திட்டமிட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ரோகித் தலித் தான் என்று ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட பல்கலைக் கழக துணைவேந்தர் பி. அப்பாராவ், மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா உட்பட 5 பேர்மீது SC/ST க்கு எதிரான வன்முறைகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்பதால் திட்டமிட்டு ‘ரோகித் தலித் அல்ல’ என்று பொய் சொல்லுகின்றார்கள்.
மேலும் அவரது தற்கொலைக்குத் தனிப்பட்ட காரணங்கள் தான் காரணம் என்று சொல்வதும், ரோகித் எந்தவிதமான ஒடுக்குமுறையையும் சந்திக்கவில்லை என்று சொல்வதும் கடைந்தெடுத்த பார்ப்பன பொய்யாகும். யாகூப் மேனன் தூக்கிலிடப்பட்டதற்கு எதிராக அவர் சார்ந்து இயங்கிவந்த அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு(ASA) மூலம் போராடி வந்தார். இதனால் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்துக்கும் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக பல்கழைக்கழக துணைவேந்தர் ரோகித்வெமுலா உள்ளிட்ட 5 மாணவர்களை திட்டமிட்டே பல்கலைக்கழகத்தில் இருந்து இடை நீக்கம் செய்தார். அதுமட்டு அல்லாமல் ரோகித் வெமுலாவுக்கு வரவேண்டிய கல்வி உதவித் தொகையும் திட்டமிட்டு நிறுத்தப்பட்டது. அவர் பல்கலைகழக விடுதியில் இருந்து நீக்கப்பட்டதோடு, மாணவர்கள் பயன்படுத்தும் உணவகம், நூலகம் என்று எதையும் பயன்படுத்தக்கூடாது என தடைவிதிக்கப்பட்டது. ஒரு மாணவனை இதற்கு மேல் நெருக்கடிக்கு உள்ளாக்க முடியுமா? ஒரு சாதாரண வறுமையான குடும்பப் பின்னணியில் இருந்து படிக்க வந்த மாணவனின் உதவித்தொகையை நிறுத்தி, விடுதியில் இருந்து வெளியேற்றி, உணவகம் உட்பட அனைத்தையும் பயன்படுத்த தடைவிதித்து இனி சாவதைத் தவற வேறுவழியே இல்லை என்ற சூழ்நிலையை ஏற்படுத்தி இறுதியில் அவனை கொன்றும் போட்டுவிட்டு, இப்போது அவன் மரணத்துக்குத் தனிப்பட்ட விரக்திதான் காரணம் என்று சொல்வது எவ்வளவு கேடுகெட்ட பொய்?
மரண தண்டனைக்கு எதிராகப் போராடுவது என்ன அவ்வளவு பெரிய தேசதுரோகமா? பொய் சாட்சிகளின் அடிப்படையிலும், இஸ்லாமிய வெறுப்பின் அடிப்படையிலும், இந்திய சமூகத்தின் பொது மனசாட்சியைத் திருப்திபடுத்தவும் அப்பாவி இஸ்லாமியர்களை தூக்கில் தொங்கவிடும் போது அதற்கு எதிராக யாரும் குரல் கொடுக்கக் கூடாதா? சுயமரியாதை உள்ள மனிதனாக இருந்தால் அதை எதிர்க்கத்தானே செய்வார்கள்… ரோகித்தும் அதைத்தானே செய்தார். வேறு என்ன தவறு செய்தார். மெக்கா மசூதியில் குண்டு வைத்தாரா? ஆஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தாரா? சம்ஜவ்தா விரைவு ரயிலில் குண்டு வைத்தாரா? குண்டுவைத்து நூற்றுக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்களை கொன்ற காவி பயங்கரவாதிகள் எல்லாம் சுதந்திரமாக சுற்றிக் கொண்டுதானே இருக்கின்றார்கள். மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடினார் என்ற ஒரே காரணத்திற்காக ரோகித்தின் மீது ஆர்.எஸ்.எஸ் கும்பல் அதன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டது.
தங்களின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடும் ரோகித்தை எப்படியாவது இல்லாமல் செய்துவிட வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் காலிகளின் திட்டம். அதை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்கள் சாதித்தும் கொண்டார்கள். பி.ஜே.பியின் தலித் விரோத அரசியலை அம்பலப்படுத்தும் ஒரு குறியீடாக ரோகித் மாறிவிட்டார். அதை அழிப்பதற்காக தான் இப்படி ஒரு கேடுகெட்ட அறிக்கையை அவர்கள் தயார் செய்து இருக்கின்றார்கள்.
ரோகித்தின் இறுதி கடிதத்தைத் தங்களுக்கு ஆதரவாக அவர்கள் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கின்றார்கள். அதில் அவர் யாரையும் குறிப்பிட்டு குற்றம் சாட்டவில்லையாம், இந்த உலகத்தில் வாழப் பிடிக்காமல்தான் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டு உள்ளாராம். எனவே மற்ற யாரையும் ரோகித்தின் மரணத்திற்குப் பொறுப்பாக்க முடியாதாம். எவ்வளவு அப்பட்டமான பொய்! தன்னை பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்த துணைவேந்தர் அப்பாராவிற்கு அவர் கைப்பட எழுதிய கடிதத்தில் “மாணவர்கள் சேர்க்கைக்காக பல்கலைக்கழகத்திற்கு வரும்போதே நீங்கள் அம்பேத்கரை படிப்பதாக இருந்தால் இதை உபயோகியுங்கள் என்ற வழிகாட்டுதலுடன் தயவு செய்து 10 மில்லி சோடியம் அசைட்டை கொடுத்துவிடுங்கள். இதே போல கல்லூரி விடுதியில் தங்கும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் உற்ற துணையான தலைமை வார்டனிடமிருந்து நல்ல தாம்புக்கயிரையும் கொடுத்து விடுங்கள்” என்று எழுதியுள்ளார். மேலும் “என்னைப் போன்ற மாணவர்களைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்” என்றும் தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளார். இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும் - ரோகித்தின் தற்கொலைக்கு அப்பாராவும், ரோகித்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி அவருக்கு உத்தரவு போட்ட ஸ்மிருதி ராணியும், பண்டாரு தத்தாத்ரேயும் இவர்கள் அனைவரையும் பின்னின்று இயக்கிய அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் காலிகளும்தான் காரணம் என்பதற்கும்.
தங்களை இந்த வழக்கில் இருந்து காப்பாற்றிக் கொள்ள குற்றவாளிகளே தயாரித்த அறிக்கைதான் நீதிபதி அசோக்குமார் ரூபன்வால் தனது அறிக்கைபோல கொடுத்துள்ளார். அந்த அறிக்கையில் உள்ள அனைத்துமே அப்பட்டமான பொய்கள். தலித்துகளின் மீதான ஆர்.எஸ்.எஸ் காலிகளின் மனநிலையையே இந்த அறிக்கை காட்டுகின்றது. அது ரோகித் வெமுலாவையும், அவரது தாயாரையும், அவர்களுக்கு நியாயம் கிடைக்கப் போராடிய முற்போக்குச் சக்திகளையும் கொச்சைப்படுத்தும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதைவிட ஒரு கேவலமான அறிக்கையை யாரும் தயாரிக்க முடியாது. இந்த அறிக்கை ஒன்றே நல்ல சான்று ஆர்.எஸ்.எஸ் தலித்துகளுக்கு எந்தளவிற்கு எதிரானது என்பதையும், மோடி அரசு எவ்வளவு கேடுகெட்ட கீழ்த்தரமான மோசடி அரசு என்பதையும் புரிந்துகொள்ள...!
- செ.கார்கி