பரமக்குடியில் உள்ள தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தில் 11.9.2011 அன்று மரியாதை செய்வதற்காக குழுமியிருந்த மக்கள் மீது அதிமுக அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 தலித் மக்கள் கொல்லப்பட்டனர். இப்படுகொலையை, அரசே நியமித்துள்ள விசாரணைக்குழு விசாரித்து அறிக்கை கொடுத்தால் அது எவ்வளவு அபத்தமானதாகவும், பொய்யானதாகவும் இருக்கும் என்பதைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதனால் அரசு அமைத்த நீதிபதி சம்பத் ஆணையத்தை பாதிக்கப்பட்ட மக்கள் புறக்கணித்தனர். எனவே, அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் "பரமக்குடி துப்பாக்கிச்சூடு எதிர்ப்பு நடவடிக்கைக் குழு' பொது விசாரணையை மதுரையில் நடத்தியது.

Paramakudi_Book_370பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலும், கலவர சமயத்தில் பொறுப்பில் இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் நேரில் கண்டோர் பலரிடம் பேசி பெறப்பட்ட உண்மைகளின் அடிப்படையிலும் இவ்விசாரணைக் குழு அறிக்கையை உருவாக்கியது. சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் டிசம்பர் 3 அன்று, பரமக்குடி துப்பாக்கிச்சூடு எதிர்ப்பு நடவடிக்கைக் குழு நடத்திய நிகழ்வில் இவ்வறிக்கை வெளியிடப்பட்டது. மகாராட்டிர முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி எச். சுரேஷ், பி.எஸ். கிருஷ்ணன், கே. சுப்பிரமணியம், வி. கருப்பன், ரூத் மனோரமா, சுதாராமலிங்கம், கல்விமணி, ஆர்.பி. சிறீகுமார், வசந்திதேவி, தியாகு, பொன்னீலன் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்களைக் கொண்ட பொதுவிசாரணைக்குழுவின் அறிக்கையை வசந்தி தேவி வெளியிட, துப்பாக்கிச் சூட்டில் பலியான தோழர்களின் உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து வசந்திதேவி ஆற்றிய உரை “நாங்கள் பொதுவிசாரணைக்காகச் சென்றபோது, மக்கள் எங்களிடம் தங்கள் மனக்குமுறல்களை கொட்டித்தீர்த்தனர். பரமக்குடியில் நடைபெற்ற சம்பவம் என்பது தமிழ்நாட்டின் மிகப் பெரிய தலைக்குனிவு. இச்சம்பவத்தைப் பற்றிய பத்திரிகை செய்திகள், சாட்சியங்கள், மருத்துவமனைக்கு சென்று திரட்டிய ஆதாரங்கள் அனைத்தையும் விசாரித்ததில், ஒன்றுமறியா மக்கள் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் இது என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில்தான் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

“இம்மானுவேல் சேகரனின் குருபூசைக்கு தலித் மக்கள் சென்ற போது கொதித்தெழுந்து, பொதுச் சொத்துகளுக்கு நாசம் விளைவித்தார்கள் என்றும், அதற்காகத்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றும் அரசு மற்றும் காவல்துறை சொல்வது உண்மையல்ல. ஏனென்றால், வேடிக்கை பார்க்க வந்தவர்கள் கூட, துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியுள்ளனர் என்பதுதான் பாதிக்கப்பட்டோர் மற்றும் நேரில் கண்டவர்களின் வாக்குமூலங்களாக உள்ளன. ஆயுதம் இல்லாமல் பொது இடங்களில் கூடும் மக்களை கட்டுப்படுத்த சில வரைமுறைகள் உள்ளன. இதனை காவல்துறை பின்பற்றவே இல்லை. மாறாக, இப்படுகொலையை நிகழ்த்த, இந்திய அரசியல் சாசனத்தில் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் எல்லாம் மீறப்பட்டுள்ளன. இவையனைத்தையும் கணக்கில் கொண்டுதான் விசாரணைக்குழு அறிக்கையை அளித்துள்ளது.''

விசாரணைக்குழுவில் இடம்பெற்ற தியாகு : “செப்டம்பர் 11 அன்று, பரமக்குடியில் திட்டமிட்ட படுகொலை நடைபெற்றது என்பது, இந்த அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. சம்பவம் பற்றி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் பொய் என்பது விசாரணையில் கண்கூடாகத் தெரியவந்துள்ளது. தமிழக அரசியல் சாதி, சமயச் சார்பற்றதாக இல்லாமல், சாதி வெறியர்களின் கையில் சிக்கி இருக்கிறது. அரசுக்கும் சாதிக்கும் உள்ள உறவிற்கு சான்றுதான் பரமக்குடி படுகொலை.''

பரமக்குடி துப்பாக்கிச் சூடு எதிர்ப்பு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சந்திர போஸ் : “செப்டம்பர் 11 அன்று சமத்துவப்போராளி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை சீர்குலைக்க சாதி வெறி ஜெயலலிதா அரசு, காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு கொடூரத்தை நிகழ்த்தியுள்ளது. கலவரத்தன்று இறந்த ஆறு பேரில் இருவர் அடித்தே கொல்லப்பட்டுள்ளனர். இவ்வளவு வன்முறைகளையும் நடத்திவிட்டு, சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா, ஒட்டுமொத்த மக்களின் பிரதிநிதியாகப் பேசாமல், முத்துராமலிங்கத் தேவரை இழிவுபடுத்தி எழுதியதால்தான் வன்முறை வெடித்தது என கூசாமல் பொய் சொல்கிறார்.

“அதே போல, அவர் அமைத்த விசாரணைக் குழுவின் மீதும் எங்களுக்கு துளியும் நம்பிக்கையில்லை; அந்தக் குழுவின் தலைவர் நீதிபதி சம்பத்தின் மீதும் நம்பிக்கையில்லை. ஏனென்றால், மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தின் போது, காவல்துறையினரால் அடிக்கப்பட்டு, தாமிரபரணியில் வீசப்பட்டு 17 பேர் இறந்தனர். இந்தப் படுகொலை தொடர்பாக ஒரு ரிட் மனு தாக்கல் செய்தபோது, அப்போது நீதிபதியாக இருந்த சம்பத், நீங்கள் சந்தேகப்படுவதற்கு எவ்வித நியாயமும் இல்லை என்றார். அப்படிப்பட்டவரிடம் இருந்து நியாயத்தை நாங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்? அடுத்ததாக மதுரை சிந்தாமணி, இளையான்குடி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு பற்றி விசாரிக்க சம்பத் குழுவிற்கு அதிகாரம் இல்லை. இவ்வாறான பல காரணங்களால்தான் நாங்கள் சம்பத் குழுவைப் புறக்கணித்தோம்.

“பரமக்குடி தொடர்பாக நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் குரல் எழுப்ப வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் சுமார் 2000 தலித்துகளாவது இது போன்ற கலவரங்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவங்கள் நடந்து முடிந்த பின்னர் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எங்களுக்கு ஆறுதல் கூற வருகிறார்கள். இந்தப் பிரச்சனைகளை எப்போது, எப்படி அவர்கள் தீர்க்கப்போகிறார்கள் என்ற கேள்வியை அரசியல் கட்சித் தலைவர்கள் முன் வைக்கிறேன்.''

ப. சிவகாமி, சமூக சமத்துவப்படை : “முதுகுலத்தோர் கலவரத்தின் முதலாம் குற்றவாளியான முத்துராமலிங்கத் தேவருக்கு அரசே குருபூசை நடத்துவது என்ன நியாயம்? குற்றவாளிகளுக்கு விழா எடுக்கும் சமூகத்தில், ஒப்பாரி வைப்பதை விட்டுவிட்டு, தலித் மக்களின் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றுவோம்.''

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி : “பரமக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பொதுவிசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும். கலவரத்தின் போது தலித் மக்கள் பயன்படுத்தும் கிணற்றில் விஷம் கலக்கப்பட்டதற்கெல்லாம் எந்த வழக்கும் பதியப்படவில்லை. தேசிய மனித உரிமை ஆணையம் இந்தக் கலவரம் குறித்து விசாரிக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் சிறையில் வாடும் தலித்துகளை, குறிப்பாக பாளையங்கோட்டை சிறையில் உள்ள தலித்துகளை சாதிவாரியாகப் பிரித்து வைத்து பாகுபாட்டோடு நடத்துகிறார்கள் என்ற செய்திகள் எல்லாம் நம்மை நிலைகுலையச் செய்கின்றன. இந்நிலையில் வீரப்போராளி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை ஒரு மதச்சடங்கான நாளாக மாற்றாமல், அவரின் செயல்களுக்கு வடிவம் கொடுத்து செயல்பட்டால்தான் தலித் மக்களின் சிக்கல்களுக்கு நாம் தீர்வைக் காண முடியும்''

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் : “ ஜெயலலிதா சட்டமன்றத்தில் சொன்ன காரணங்களை ஏற்க முடியாது. பரமக்குடியில் நடந்தது சாதிக்கலவரமே அல்ல. இம்மானுவேல் சேகரனின் குருபூசையை நடத்தக் கூடாது என்றோ, அங்கு தலித் மக்கள் போகக் கூடாது என்றோ ஆதிக்க சாதிகள் சொல்லவில்லையே. பின்னர் அது எப்படி சாதிக் கலவரமாக இருக்க முடியும். தலித் மக்கள் கலவரம் செய்ய நினைத்திருந்தால்; காவல்துறைக்கும் சமமான சேதம் ஏற்பட்டிருக்காதா? 2008 முதல் 2011 வரை சுமார் 42 முறை துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. அதில் கொல்லப்பட்ட 29 பேர் தலித்துகள்தான் .''

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மா.லெ. மக்கள் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த ஜெ. சிதம்பரநாதன் : “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் அடித்துக் கொண்டார்கள். இப்போது ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு தேசமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கேரள மாநிலம் தண்ணீர் தரவில்லை என்றால் போராடுகிறோம். ஆனால், கிராமத்தில் தலித்துகள் கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது என்ற நிலைதான் உள்ளது. சிங்களவர்கள் தமிழக மீனவர்களை கொன்று குவிப்பதைக் கண்டு கொதிக்கிறோம். ஆனால், பரமக்குடியில் படிக்கச் சென்ற பழனிக்குமார் என்ற தலித் குழந்தையை கள்ளர் சாதிக்காரன் படுகொலை செய்கிறான். இதுதான் உண்மை நிலையாக இருக்கிறது.''

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மா.லெ. விடுதலை அமைப்பைச் சேர்ந்த பாலசுந்தரம் : “பரமக்குடி கலவரம் பற்றி ஜெயலலிதா சட்டமன்றத்தில் பேசிய பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். ஜெயலலிதாவின் பேச்சில் இருந்து பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் அவரின் பங்கு இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. எனவே, அவரை விசாரிக்க வேண்டும். அவரைச் சுற்றியுள்ள சாதிவெறிக் கும்பலையும் விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா நடத்துவது ஒரு தலித் விரோத ஆட்சி.''

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் : “நாம் ஆண்ட பரம்பரை என்றாலும், இப்போது அடிமையாய் இருக்கிறோம் என்பதுதான் உண்மை. பரமக்குடி படுகொலை என்பது அரச பயங்கரவாதம். அதனால்தான் பழனிக்குமார் கொலை செய்யப்பட்டதற்கான பொய்க் காரணத்தை சட்டமன்றத்தில் ஜெயலலிதாவால் பேச முடிகிறது. நாம் அரசியல் அதிகாரத்தைப் பற்றி கவலைப்படாமல், யார் நம்மை பலியாக்குகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்துகிறோம். வெண்மணி,போடி, பரமக்குடி போன்ற தலித் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நுழையும் அரச பயங்கரவாதம் ஏன் அக்ரகாரத்திற்குள் நுழைவதில்லை?''

இந்நிகழ்ச்சியில், வி.பி.துரைசாமி, வைகோ, ஜான் பாண்டியன், வடிவேல் ராவணன், கே.எம். செரீப், சுப.அண்ணாமலை, எஸ். நடராஜன், மீ.தா. பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குறிப்பாக பரமக்குடியிலிருந்தும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றனர்

அநாத்மா

முக்கியப் பரிந்துரைகள்

 பரமக்குடி, சிந்தாமணி, இளையான்குடி துப்பாக்கிச் சூடு விசாரணையை சி.பி.அய்.க்கு மாற்ற வேண்டும்.

 தலித் மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளில் உள்ள ஆதிக்க சாதி காவலர்களுக்கு பதிலாக கூட்டத்தை ஒழுங்குபடுத்த பிறசாதி காவலர்களை நியமிக்க வேண்டும்.

 கலவரத்தில் காயம்பட்டவர்கள் மதுரைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பப்பட வேண்டும். அதற்கான செலவுகளை அரசே ஏற்க வேண்டும்.

 மண்டலமாணிக்கம் பள்ளியில் நடைபெற்ற வன்கொடுமை காரணமாக, பள்ளப்பச்சேரி பகுதியைச் சேர்ந்த 105 மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் பெற்று பள்ளியை விட்டு விலகியுள்ளனர். அவர்களின் கல்வி தொடர வழிவகை செய்ய வேண்டும்.

 தலித் மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பது அல்லது வாங்குவது ஆகியவற்றைத் தடைசெய்யும் சட்டவரைவு ஒன்றை தமிழக சட்டப் பேரவையில் கொண்டு வர வேண்டும்.

 ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் அரசு ஒப்பந்தங்களில் தலித்துகளுக்கு சமமான அளவு ஒப்பந்தங்களை வழங்க வேண்டும். ஒப்பந்தப் பணிகளை நிறைவு செய்ய வங்கிகள் மூலம் நிதியுதவி வழங்க வேண்டும்.

 ஒவ்வொரு மாவட்டத்திலும் தலித்துகளுக்கெதிரான வன்கொடுமைகளை விசாரிக்கத் தனி சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்.

 விசாரணையில் உள்ள மாணவன் பழனிக்குமார் கொலை வழக்கை உடனடியாக விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்.

 வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை உடனடியாக விசாரிக்க, சிறப்பு நடமாடும் நீதிமன்றம் அமைக்க வேண்டும்.

 பட்டியல் சாதியைச் சேர்ந்த பெண்களை சத்துணவுக் கூட சமையல்காரராய் பணியமர்த்த வேண்டும். சமையல்காரராய் இல்லாத பட்சத்தில் அவர்கள் உணவு பரிமாறுபவர்களாக இருக்க வேண்டும்.

Pin It