periyar 366பிரபல வருணாச்சிரம தருமவாதியாகிய பண்டித மதன் மோகன மாளவியா அவர்களைப் பற்றி, நாம் அதிகமாக யாருக்கும் எடுத்துக் கூறத் தேவையில்லை. அவர் இங்கிலாந்து சென்றபோது, கங்கை நீரும், களிமண்ணும் மடிசஞ்சிகளும் கூடவே கொண்டு சென்ற வைதீகர் என்பது தெரியும். ‘சூத்திரன்’ என்பவன் ஒருவன் மோட்சமடைய வேண்டுமானால் “அவன் இருபத்தோரு ஜென்மங்கள் நற்குலத்தில் பிறந்து, சற்கருமங்களைச் செய்து, பிராமண பக்தனாயிருந்து கடைசியில் பிராமணனாகப் பிறந்து தான் மோட்சம் பெற வேண்டும்” என்ற பிராமணீய மதக்கொள்கையில் உறுதியான நம்பிக்கை யுடைய முதிர்ந்த வயிரம் வாய்ந்த வைதீகர் என்பது அவருடைய போக்கை உணர்ந்தவர்கள் எல்லோருக்கும் தெரியும்.

இத்தகைய வைதீக மாளவியா அவர்கள் அரசியல் சீர்திருத்தத்தில் தீண்டாதவர்களுக்குத் தனித்தொகுதி அளிப்பதை அடியோடு மறுக்கின்றார் என்ற விஷயமும் தெரியாததல்ல. இப்படிப்பட்ட இவர் சென்ற சிவராத்திரி வாரத்தின்போது, காசியில் கங்கைக்கரையில் நடந்த “தசாஸ்வமேதக் கூட்டத்தில்” இந்து மதத்தைச் சேர்ந்த சகல வகுப்பினருக்கும் ஜாதி பேதமின்றி “மந்திரதீக்ஷை” கொடுத்தாராம்! அப்போது 150 பேர்களுக்குமேல் 500 பேர்களுக்குள் அடங்கிய தீண்டாதார்களுக்குச் “சமயதீக்ஷை” கொடுத்தாராம்!

இவ்விஷயங்கள் பத்திரிகைகளிலெல்லாம் வெளியாகியிருக்கின்றன. என்றுமில்லாமல் இப்பொழுது திடீரெனத் தீண்டாத வகுப்பினர்மேல் திரு. மாளவியா அவர்களுக்குக் கருணை பிறந்து “சமயதீக்ஷை” அளிக்கப் புறப்பட்டது எதற்காக? அவர்கள் இந்த உலகத்திலிருந்து கொண்டு “சமத்துவம் வேண்டும் சமத்துவம் வேண்டும்” என்று சொல்லிக் கொண்டு வருணாச்சிரம தருமத்தைக் கெடுக்க வழி தேடுகின்றனர். ஆகையால் அவர்களை ஒரேயடியாக மோட்சலோகத்திற்கு அனுப்பிவிடலாம் என்ற எண்ணத்தின் பேரிலா? அல்லது அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள தீண்டாமையைப் போக்கிச் சமத்துவம் அளிக்கவா? என்று கேட்கின்றோம். அல்லது “தீண்டாதவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆகையால் அவர்களைத் தனியாகப் பிரிக்கக் கூடாது. அவர்களுக்கும், அரசியல் சீர்திருத்தத்தில் பொதுத்தொகுதிதான் அளிக்கப்பட வேண்டும். இந்துக்கள் தீண்டாதார்களை வெறுத்து ஒதுக்கவில்லை. அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து சமத்துவம் கொடுத்து வருகின்றார்கள்” என்று இந்துமகா சபைக்காரர்களும், காங்கிரஸ்காரர்களும் கூறி வருவதற்கு அடையாளமாக இக்காரியத்தைச் செய்யத் தொடங்கினாரா? என்று கேட்கின்றோம்.

இவ்வாறு “சமயதீக்ஷை” கொடுக்கப் பட்ட தீண்டாத வகுப்பினர்களை இன்று திரு. மாளவியாவின் கூட்டத்தார் உடன் வைத்து உண்ணவும் பழகவும் தயாராயிருக்கிறார்களா? என்றும் கேட்கிறோம். ஒருநாளும் அவர்கள் இதற்குச் சம்மதிக்க மாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆகவே தீண்டாதார்களை ஏமாற்றும் பொருட்டுச் சமயத்திற்குத் தகுந்தபடி செய்யப்படும் ஒரு தந்திரந்தான் திரு. மாளவியா அவர்களால் செய்யப்பட்ட “சமயதீக்ஷை” என்பதை உணர வேண்டும்.

இவ்வாறு திரு. மாளவியா போன்றவர்கள், தீண்டாதார்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் புரோகிதங்களைக் கண்டு ஏமாறாமலிருக்குமாறு தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கு எச்சரிக்கை செய்கின்றோம். இந்து மத நம்பிக்கையும், இந்து மத வேதங்களில் நம்பிக்கையும் உள்ள எந்த இந்துக்களும், “பிறப்பினால் எல்லோரும் சமம்” என்பதை ஒத்துக்கொண்டு எல்லா வகுப்பினர்களுக்கும் சமத்துவம் கொடுக்கச் சம்மதிக்க மாட்டார்கள் என்பதை அறிய வேண்டுகிறோம். வீணாக யாரும், “சமய தீக்ஷை”, “மந்திர தீக்ஷை” என்ற பெயர்களைக் கேட்டு, வருணாச்சிரம தருமவாதிகளின் வலைக்குள் சிக்கிவிட வேண்டாமென மீண்டும் எச்சரிக்கை செய்கின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.03.1932)

Pin It