தமிழ் நாட்டில் பொது வாழ்க்கைக்கு வந்து பெண் விடுதலைக்காக மட்டும் பாடுபடாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக சாதி ஒழிப்பிற்காக, சுயமரியாதைக்காக தங்களது உயிரைப் பணயம் வைத்து சமூகப் பணி செய்தவர்கள், சுயமரியாதை இயக்கப் பெண்கள். இவர்களில் முதன்மையானவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் அவர்கள். சமூக, பண்பாட்டுப் போராட்டங்களில் ஈடுபட்ட மற்ற பெண்களைப் போலவே இவருடைய எழுத்துகளும் வரலாறும் ஆவணப்படுத்தப்படவில்லை.

திராவிட இயக்கப் பின்னணியில் வாழும் பல சுயமரியாதை இயக்கப் பெண்களின் வாழ்க்கை ஆவணப்படுத்தப்படாத நிலையில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் வரலாற்றைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த பா. ஜீவசுந்தரி. ராமாமிர்தத்தின் கையெழுத்துப் பிரதிகளை எல்லாம் அவர் வாழ்ந்த இடத்திற்கே சென்று சேகரித்துள்ளது, சிறந்ததோர் கள ஆய்வு.

“இந்தத் தொகுப்பு ஒரு முழுமையான தொகுப்பல்ல. இரண்டாம் பாகம் கொண்டு வரும் முயற்சியில் அவரே ஈடுபடுவார்” என்று சின்னக்குத்தூசி இந்நூலுக்கான முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது உண்மை என்றாலும், ஜீவசுந்தரியின் உழைப்பும் ஆர்வமும் அனைவரின் பாராட்டைப் பெறக்கூடியது.

ராமாமிர்தம் பற்றிய ஒவ்வொரு தகவலும் அவருடைய எழுத்துகளில் இருந்தே சொல்லப்பட்டுள்ளது. இதனால் இசைவேளாளர் சமூகத்தில் உள்ள பல்வேறு சிக்கல்களையும், புதிய தகவல்களையும் வாசகர்கள் பெற முடிகிறது. இந்த சமூகத்தில் பிறந்த ஒரு பெண், அதே சமூகத்து ஆணை திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்குப் பிறக்கும் பெண் ‘தேவதாசி’ தொழில் செய்வதற்கு தடை விதிக்கப்படும். அதே போல ஆண்கள் தன் அக்கா, தங்கைகளுக்கு ‘பார்ப்பு’ வேலை என்று சொல்லக் கூடிய ‘மாமா’ வேலை செய்பவர்களாகவும், அவர்கள் நடனமிட நட்டுவனாராக இருக்கவும் இந்து மதம் அவர்களுக்கு ‘அருளியுள்ளது.'

தான் தப்பித்து, தன் மகளையும் காப்பாற்றி மற்ற பெண்களைப் போல வாழ நினைத்த ராமாமிர்தத்தைப் பெற்ற அன்னை, வறுமையின் காரணமாக குழந்தை ராமாமிர்தத்தை ஒரு தேவதாசியிடம் பத்து ரூபாய்க்காக விற்று விடுகிறார். இந்து மதம் கொடுத்துள்ள ‘தகுதி'களில் இருந்து தப்பிவிட முயன்றாலும் மீண்டும் அந்த சகதியிலேயே தள்ளிவிடும் சூதுவாது நிறைந்த மதம் அது. அப்படிதான் ராமாமிர்தத்தின் வாழ்க்கையில் எது ஒழிய பாடுபட்டாரோ, அந்த வாழ்க்கையே அவருக்கு தொடக்கமாகவும் அமைந்தது. ஆனால், அதிலிருந்து மீண்டு காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று ஒரு சமூகப் போராளியாக அவர் மாறியுள்ளார்.

காங்கிரஸ் இயக்கத்தில் இருக்கும்போது, அவர் செய்த கதர் கட்டுதல், கள்ளுண்ணாமை பிரச்சாரம், சுயமரியாதை இயக்கத்தில் பெரியாரோடு இணைந்து சமூகப்பணியில் ஈடுபட்டபோது சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, தேவதாசி விவாகம், இந்து மத எதிர்ப்பு என எந்தப் போராட்டத்தை எடுத்துக் கொண்டாலும் அதனை மூர்க்கத்தோடு செய்து முடிக்கும் கொள்கை சண்டைக்காரியாக ராமாமிர்தம் இருந்துள்ளார் என்பதை ஜீவசுந்தரி பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் வேறு இடங்களைக் காட்டிலும் தஞ்சையில்தான் தேவதாசி முறை வேரூன்றி இருந்தது. ஏனென்றால் அங்கு தான் சோழன் ஆட்சியில் பெரிய கோயிலைக் கட்டி, அந்த நூற்றாண்டிலேயே 400 தேவரடியார்களை அமர்த்தி ‘சாதனை’ (நல்ல வேளை கின்னஸ் புத்தகம் அப்போது இல்லை) புரிந்தான் முதலாம் ராஜராஜன் (பெரியாரால் ‘காலிப்பயல்' பட்டம் பெற்றவன்). சனாதன, பார்ப்பன தஞ்சாவூரில் இசை வேளாளர் சமூகத்தில் பிறந்து, அதனை ஒழிக்க ஒவ்வொரு பெண்ணையும் தனித்தனியாக சந்தித்துப் பேசி, அவர்களை அந்த இழிவில் இருந்து மீட்டதோடு மட்டுமின்றி, அவர்களைப் பொது வாழ்க்கைக்கும் கொண்டு வந்து பார்ப்பன இந்து மதத்திற்கு எதிராக மிகப் பெரிய பண்பாட்டுப் போரையே நடத்தி இருக்கிறார் ராமாமிர்தம். இதற்காக அவர் பொய் வழக்கைச் சந்திக்க வேண்டியிருந்தது. பாலில் விஷம் கலந்து அவர் சார்ந்த சமுதாயப் பெண்ணே அவரை சாகடிக்க முயற்சி செய்துள்ளார், என்ற கொடுமையான செய்திகள் எல்லாம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திரைப்படக் குழுவினர் அமெரிக்கா, அய்ரோப்பா போன்ற நாடுகளுக்கு படப்பிடிப்பிற்காக செல்லும் போது, பணம் சம்பாதிக்கும் ஆசையில் திரைப்படக் குழுவுக்கு தொடர்பில்லாத பலரை படக்குழுவினர் என்று பொய் சொல்லி அழைத்துச் சென்று, அங்கேயே விட்டு விட்டு வந்துவிடுவதாக புகார்கள் அண்மையில் கூறப்பட்டன. இது போன்ற பித்தலாட்டத்திற்கு தமிழ்நாட்டில் முன்னோடியாக செயல்பட்ட ஒருவர் காங்கிரசின் பெருந்தலைவராக இருந்துள்ளார். அவர், நாட்டியக் கலைஞர்கள் என்று பொய் சொல்லி இரண்டு ‘தேவதாசி’ பெண்களை தஞ்சாவூரில் இருந்து இங்கிலாந்துக்கு அனுப்ப முயற்சி செய்துள்ளார்.

இதனைத் தெரிந்து கொண்ட சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த டி.என். ராஜரத்தினம் பிள்ளை அதைக் கடுமையாக எதிர்த்து அறிக்கை விடுத்தார். இது, ராமாமிர்தத்திற்கு புது தெம்பை அளித்ததாக புத்தகத்தில் பதிவாகியுள்ளது. இந்தப் பொய்யைச் சொன்ன ‘சத்தியசீலர்' யார் என்றால், தேவதாசி முறை வேண்டும் என்று சட்டப் பேரவையில் ‘வீர’ முழக்கமிட்ட சத்தியமூர்த்தி அய்யர். இவர் மட்டுமல்ல, அப்போது ராஜாஜி போல் மேல் இருந்த பார்ப்பான், கீழ் இருந்த பார்ப்பான், நடுவுல இருந்த பார்ப்பான், பிச்சை எடுத்த பார்ப்பான் என எல்லோருமே ‘தேவதாசி முறை' வேண்டும் என்று இந்து மத ‘தர்மத்தை' காக்க வரிந்து கட்டினார்கள்.

அப்போது பெரியார், சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள் அனைவரின் பெரும் போராட்டத்திற்குப் பிறகே ‘தேவதாசி முறை ஒழிப்பு' சட்டத்தைக் கொண்டு வர முடிந்தது, டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரால், இசை வேளாளர்களின் சமூக இழிவுகளுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டில் படிந்திருக்கும் ஒவ்வொரு இழிவுக்கும் பார்ப்பனர்களும், இந்து மதமுமே வேராக இருந்துள்ளன. தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என தலித் மக்கள் மீது திணித்த தீண்டாமைக் கொடுமையாக இருந்தாலும் சரி, ‘தேவிடியாள்’ குழந்தைகளான சூத்திரர்களின் இழிநிலையõக இருந்தாலும் சரி, இதற்கெல்லாம் காரணம் யார்? தன்னை ‘பிராமணன்' என்று சொல்லி உயர்சாதியாக அறிவித்துக் கொண்டு, அதனை கட்டிக்காத்து செயல்படுத்தி வரும் பார்ப்பனர்களை நாம் ஏன் பார்ப்பனர்கள் என்று சொல்லக்கூடாது?

இந்நூலில் பெரியார் நடத்திய ‘பார்ப்பனரல்லாதோர் மாநாடு' என்ற இடத்தைத் தவிர, அனைத்து இடங்களிலும் ‘பிராமணர்' என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படி சொல்வதன் மூலம் ஆசிரியரே இந்நூலில் குறிப்பிட்டுள்ளது போல், ஓர் ஆணை திட்டும் போதும் ‘தேவிடியா மகனே' என்று திட்டும் அளவிற்கு அந்த முறை ஒழிந்தாலும் அந்தச் சொல் இன்னும் சமூகத்தில் வேரூன்றி இருக்கிறதென்றால், அது பார்ப்பனர்கள் ஏற்படுத்திய பண்பாட்டுச் சீரழிவு அல்லவா? பார்ப்பனர்களை ‘பிராமணர்கள்’ என்று அழைப்பது, மற்றவர்களை இழிவானவர்கள் என்று அழைப்பதற்கு சமம். இதன்படி ‘பிராமணர்’ என்று பார்ப்பனரை அழைப்பதால், எந்த ‘தேவதாசி முறை' ஒழிய காலம் முழுவதும் பாடுபட்டாரோ, அவரையே இறந்த பிறகும் ‘தேவிடியாள்' என்று அழைப்பது போன்றதாகும்.

இந்தியாவை அடிமை செய்து கொள்ளையடித்த வெள்ளைக்காரன் ஆட்சியில் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த பென்டிங் பிரபுவால் ‘சதி முறை'யை ஒழிக்க சட்டமியற்ற முடிந்தது. அப்போது கூட பார்ப்பனக் கூட்டம், சனாதனம் கெட்டுவிடும் என்று எப்படி ஒப்பாரி வைத்தது என்பதை வரலாறு கூறுகிறது. அதே போல ‘தேவதாசி முறை'க்கும் சென்னை ஆளுநராக இருந்த வென்லாக் முதன் முதலாக அரசின் சார்பில் ஆதரவளிக்க மறுத்தார். இவரது நிகழ்ச்சிகளில் நடன மாதர்கள் மற்றும் தேவதாசிகள் இடம் பெற அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த ஆண்டு என்னென்ன நடந்தது என்று கூடுமானவரையில் குறிப்புகள் கொடுத்திருக்கலாம். அப்போதுதான் காலச்சூழல் படிப்பவர்களுக்குப் பிடிபடும். சுயமரியாதை இயக்க கொள்கைத் திட்டம் உருவாக்கும் போது, உடன் இருந்த ஒரே பெண் மூவலூர் ராமாமிர்தம்தான். ஆனால் "நான் அவருக்கு (பெரியாருக்கு) எதிரியாகிவிட்டேன்'' என்று ராமாமிர்தம் சொல்வதற்கான காரணம் என்ன? மணியம்மை திருமணத்தை சாக்கிட்டு அண்ணா வெளியேறிய போது, ராமாமிர்தமும் வெளியேறினார். அதன் பிறகு அவருடைய செயல்பாடுகள் என்ன, அவருடைய வீரியம் எங்கே என்பதெல்லாம் கேள்வியாகவே இருக்கிறது.

இதையெல்லாம் வெளிக்கொணரும் போது, ஆய்வு மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். அவருடைய செயல்பாடுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டன என பல இடங்களில் ஆசிரியர் வருத்தப்படுகிறார். ராமாமிர்தம் குறித்த ஜீவசுந்தரியின் ஆய்வு, விரிந்த தளத்தில் இல்லாமல் தஞ்சையை ஒட்டியே அமைந்துவிடுவது, தவிர்க்க வேண்டியதாக நமக்குப்படுகிறது.
சுயமரியாதை இயக்கமானாலும் சரி, திராவிட இயக்கமானாலும் சரி, பொதுவுøடமை இயக்கமானாலும் சரி – பேசியவர்களைவிட, போராடியவர்களைவிட, எழுதியவர்களின் பெயர்களே இறந்த பிறகும் இயக்கத்திற்குள்ளும் வெளியிலும் பேசப்பட்டுள்ளன.

1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற போது, பல பெண்கள் அதிலும் கர்ப்பிணிப் பெண்கள் சிறையில் சென்று அங்கேயே குழந்தை பெற்று, குழந்தைக்கு ஒரு வயதிற்கும் மேல் ஆன பின்பு வெளியே வந்தார்கள். இதுபோல பொதுவுடைமை இயக்கத்திலும் பல போராளிப் பெண்கள் இருந்திருப்பார்கள். ஆனால் இவர்களின் வரலாற்றை எல்லாம் யார் எழுதுவது?

ராமாமிர்தத்தின் வரலாற்றை எழுதும் போது பெரியார், சுயமரியாதை இயக்கம் தொடர்பான விஷயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. ‘தேவதாசி முறை’ ஒழிப்பில் பெரியார், சுயமரியாதை இயக்கத்தின் பலம் அபரிமிதமானது. பல இடங்களில் ராமாமிர்தத்தை தன்னிச்சையாக செயல்பட்டவராகவே காண்பிக்க ஆசிரியர் முயலும் போது, தனக்கு தெரியாமலேயே கம்யூனிஸ்ட் கட்சி வாடையை வீசிவிடுகிறார். ராமாமிர்தத்தின் சமூகப் பணியின் தொடக்கமும் அவருடைய அறிவும் தனித்துவமானது என்பதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

ஆனால் ராமாமிர்தம் பெரியாருக்கு எழுதிய கடைசிக் கடிதத்தில் – "கட்சி தோன்றியது முதல் இன்று வரையில் உதவியோ, பதவியோ விரும்பாது தாங்கள் இட்ட கட்டளைப்படி தேவதாசி விவாகம், விதவா விவாகம், கலப்பு விவாகம், விவாகரத்து இன்னும் பல ஆரம்பத்தில் சொன்னீர்கள்; நான் அவற்றை நடத்திக் காட்டியவளல்லவா?'' என்று ஆதங்கப்பட்டுள்ளார். தனக்கு கட்சியை நடத்த தகுதியில்லையா என்று பெரியாரை கேள்வி கேட்கும் போது, ‘நீ சொல்லித்தானே எல்லாம் செய்தேன்' என்று பெரியாரின் செயல்பாடுகளுக்குப் பக்கபலமாக இருந்ததை அவரே கூறுகிறார்.

காந்தி பற்றி நூலாசிரியர் குறிப்பிடும் ஓரிடத்தில் 1920 வாக்கில் காந்தி 2 வது ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தை ஆரம்பித்தார் என்று சொல்கிறார். ஆனால் 1921-22ஆம் ஆண்டுகளில் ஒரு முறைதான் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது. 1930க்குள் இன்னொரு ஒத்துழையாமை போராட்டம் நடைபெறவில்லை. இது, வரலாற்றுத் தகவல் பிழை. இந்த நூலில் ராமாமிர்தம் எழுதி காணக் கிடைக்காத பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது மிக முக்கியமானது. குறிப்பாக ‘இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும்' என்ற கட்டுரை, ‘இன இழிவு ஒழிய இஸ்லாத்தை தழுவுங்கள்' என்ற பெரியாரின் கட்டுரைக்கு இணையாக அமைந்துள்ளது.

சமூக பண்பாட்டில் அகமும், புறமுமாய் இயங்கி வரும் மதம் குறித்து சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் சமூக வெளியில் நின்று இவ்வளவு புரிதலோடு ஒரு பெண் பேசுவதென்பது அசாத்தியமானதாகும். அப்போது இயங்கிய சுயமரியாதை இயக்க ஆண்களுக்கு எந்தவிதத்திலும் குறைவானவரல்ல ராமாமிர்தம். வரலாறு எழுதும்போது மனச்சாய்வுகளும், தவறுகளும் தவிர்க்கப்பட வேண்டும். எனினும் பார்ப்பன இந்து மதத்திற்கு எதிரான ராமாமிர்தம் என்கிற சண்டைக்காரியின் வரலாற்றைத் தொகுத்த முதல் பெண் என்ற முறையிலும், தொகுக்கப்பட்ட முதல் நூல் என்கிற வகையிலும் ஜீவசுந்தரி நம்மால் பாராட்டப்பட வேண்டியவர்.
Pin It