தமிழக அரசியல் மீண்டும் ஒருமுறை பரபரப்புக்குள்ளாகி இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு பா.ம.க.வால் நெருக்கடி ஏற்படப் போவதாக ஊடகங்கள் அச்சுறுத்திக் கொண்டிருந்தன. மாறாக, பாட்டாளி மக்கள் கட்சிக்குத்தான் தற்பொழுது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, அடுத்த தேர்தல் கூட்டணிக்கான ‘ஆய்வு'கள் தீவிரமாக அரங்கேறத் தொடங்கிவிட்டன. இத்தகைய போலி பரபரப்புகளை ஏற்படுத்தி, மக்களின் சிந்தனையை மழுங்கடித்துதான் - பத்திரிகைகள் தங்கள் வயிற்றைக் கழுவிக் கொண்டிருகின்றன.

மக்களை அரிக்கும் எரிபொருள், இன்றியமையாத பொருட்களின் விலையேற்றம் மற்றும் பணவீக்கத்திற்கான மூல காரணங்கள் பற்றிகூட, ஊடகங்களில் ஆரோக்கியமான விவாதங்கள் முன் வைக்கப்படுவதில்லை. அவையும் அரசியல் கண்ணோட்டத்துடனேயே அணுகப்படுகின்றன. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் அதிரடி மற்றும் சந்தர்ப்பவாத போக்கைக் கையாளும் பா.ம.க.வின் ‘வீக்கம்' தான் பெரும்பாலான சாதி அமைப்புகளுக்கு ‘வளர்ச்சி'க்கான முன்மாதிரி.

பா.ம.க.வின் சாதி அரசியல் வெளிப்படையானதுதான் என்றாலும், தமிழ்த் தேசியவாதிகள் இக்கட்சியை ஆதரித்தே வருகின்றனர். ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பதும், நல்ல தமிழில் பேசுவதுமே தமிழின உணர்வுக்கான தகுதியாக அவை கருதுகின்றன போலும்! அதனால்தான் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, வன்னியர் சங்கத்தின் நகலான பா.ம.க. இருக்க முடியும் என்று கருதுகின்றனர்.

திராவிடக் கட்சிகளின் ஊழல்களுக்கு, பா.ம.க. போன்ற சாதிக் கட்சிகள் தீர்வாகாது. பா.ம.க.வின் ஒருசாதி ஆதிக்கமே ஊழலுக்கு வழிவகுக்கிறது. மருத்துவர் ராமதாசின் குடும்ப அரசியல் ஒன்றும் தி.மு.க.வுக்கு சளைத்ததல்ல. திராவிடக் கட்சிகள் மீது நமக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், பிற்படுத்தப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக அவற்றைக் கருத இடம் இருக்கிறது அக்கட்சிகளில். ஒருசாதி ஆதிக்கத்திற்கு வாய்ப்பு குறைவு.

பார்ப்பனத் தலைமையிலான திராவிடக் கட்சியை இதில் இணைக்க முடியாது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது, பெரியார் சமத்துவபுரங்களை உருவாக்கியது, அருந்ததியர் உள் ஒதுக்கீடு போன்ற பல்வேறு சமூக நீதித் திட்டங்களுக்கு தி.மு.க. வழிவகுத்திருக்கிறது. இருப்பினும், அக்கட்சித் தலைமையின் குடும்ப அரசியல் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.

வளர்ந்து வரும் தலித் இயக்கங்கள்கூட, ராமதாசின் சாதி அரசியல் சூத்திரத்தைக் கண்டு மயங்குகின்றன. சாதி ஒழிப்பை மறந்து. சாதி அரசியல் தான் அதிகாரத்துக்கான வழி என கருதுகின்றன. ராமதாஸ் தன் சாதிக்கு நேர்மையாக இருப்பதற்குப் பெயர் சாதி வெறி. இது, சாதியை நிலைப்படுத்தவே வழிவகுக்கும். பாட்டாளி மக்கள் கட்சியாகட்டும், பசுமைத்தாயகமாகட்டும், மக்கள் தொலைக்காட்சியாகட்டும், அண்மையில் தொடங்கப்பட்ட தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கமாகட்டும் அனைத்தும் வன்னியர் சங்கமாகவே காட்சியளிக்கின்றன. ஆனால், இவை எல்லாவற்றிற்கும் தமிழ்தான் முகமூடி!

வன்னியர் சங்கத் தலைவர் குரு, அமைச்சர்களின் நாவை வெட்டுவேன், தலையை வெட்டுவேன் என்றெல்லாம் பேசுவதை நியாயப்படுத்தி, அவருக்கு மாவீரன் பட்டத்தையும் கொடுத்துவிட்டு வன்முறை என்றால் என்னவென்றே தெரியாது என்று சாதிக்கிறார் ராமதாஸ். பா.ம.க.வின் ஜாதி வன்முறை, சேரிகளில் இன்றளவும் எதிரொலித்துக் கொண்டுதானிருக்கின்றன. இத்தகைய சாதிக் கட்சியினுடனான கூட்டணி, தமிழ் மொழியைப் பாதுகாக்கும் கூட்டணியாக மட்டும் இருக்க முடியாது. அது, தலித்துகளையும் பாதுகாக்க வேண்டும்.

2011இல் ஆட்சியைக் கைப்பற்றும் கனவில், பா.ம.க. தமிழக அரசுக்கு எதிராகத் தீவிரமாகக் களமிறங்குகிறது. ஆனால், மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையையும், அணுசக்தி ஒப்பந்தத்தையும் விமர்சித்தோ, தனியார் துறையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தியோ, ஈழத்தமிழர்களைக் கொல்ல இலங்கை அரசுக்கு ஆயுதம் அனுப்புவதைத் தடுக்கவோ எந்த நெருக்கடியையும், குறைந்தபட்ச கண்டனத்தையும் கூட அது தெரிவித்ததில்லை.

மதவாதத்திற்கு எதிரான மதச்சார்பற்ற கூட்டணியில், சாதி ஆதிக்கத்திற்கும் இடமளிக்கக்கூடாது. மற்ற கட்சிகள் எல்லாம் சாதிக்கு அப்பாற்பட்டதென்று நாம் சொல்ல வரவில்லை. ஆனால், பா.ம.க.வின் ஒருசாதி அரசியல், ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது. ஒரு சாதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு கட்சியும் அதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் மற்றும் இடதுசாரிகளை உள்ளடக்கிய கூட்டணியே எதிர்காலத் தமிழகத்தைக் காப்பாற்றும்.
Pin It