மாந்தகுலத்தின் தாயினமாக தமிழினம் அமையப்பெற்றதால் அன்பு, பண்பு, அறிவு, அறம், ஒழுங்கு, நுட்பம், வீரம், வினைத்திறன் இவையெல்லாம் ஒருங்கே அமைந்து சிறப்புகளை அடைந்துள்ளது. ஆயினும் மொழிவழி அடிப்படையில் தான் ஒரு தனித்தன்மை வாய்ந்த இனம் என்பதை உணராததால் எல்லா வகையான இழிவுகளையும், கொடிய அழிவுகளையும் தொடர்ந்து சந்தித்து வருகின்றது. தாய்மைப் பண்பை வேற்றினங்கட்கு வழங்கும் அளவிற்கு தன்னினத்திற்கு வழங்காததால் உட்பகை மட்டுமே மேலோங்கி ஓர்மை அடைவதற்கு வழியே இல்லாமற் போயிற்று.
உலக வரலாற்றில் எவ்வகை சிறப்புத் தகுதியும் இல்லாத இனங்கள் எல்லாம் இன்று எல்லா நிலைகளிலும் ஆளுமை செலுத்துகின்றன. தமிழினமோ எல்லாவகை சிறப்புக் கூறுகளையும் பெற்றிருந்தாலும் இனநலம் எனும் அடிப்படை இல்லாததால் இதற்கு எவர் முன்னின்று உழைத்தாலும் இனம் மீட்சிபெற முடியவில்லை. வேற்றினத்தார் சிலர் இதன் மீது பரிவுகாட்டும் அளவிற்குகூட தமிழினம் தன்னைத்தானே அன்பு செலுத்திக்கொள்ளும் நல்லியல்பை இன்னும் பெறமுடியவில்லை.
மாறாக தன்னைத்தானே சிதைத்துக் கொள்வதிலும், காட்டிக்கொடுப்பதிலும், வேற்றினங்கட்கும் - பிறகூறுகளுக்கும் அடிமையாய் இருப்பதிலும், அதிலே இன்பம் துய்ப்பதிலும் அளவுகடந்த ஈடுபாடு உடையதாக உள்ளது. இந்த மெலிவை வேற்றினத்தார் மிக நுட்பமாக பயன்படுத்தி தமிழினம் என்றும் ஒரு மொழிவழி இனமாக உருக்கொள்ளக் கூடாது என்பதில் மிகத்தெளிவாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்தியத் துணைக்கண்டத்தில் எல்லா மொழிவழி இனங்களும் தனித்தனி நாட்டினமாக தலைநிமிரவும், ஆளவும் இசைவளித்து மகிழக்கூடியவர்கள், தமிழினம் தன்னினம் அழிக்கப்பட்டதே என்று கண்ணீர் விடுவதற்காக சிறுஅளவில் கூடினாலும் அதனை தீங்கானதாகவும், வன்முறை எனவும், வளரவே கூடாது என்றும் வகைவகையாய் கூச்சலிடுகின்றனர். கொடிய சட்டங்களைக் கொண்டு ஒடுக்குகின்றனர்
தமிழினத்திலிருந்து திரிந்த இனங்கள் தமிழினத்திற்கு எதிராக இயங்கினாலும் தாய்மைப் பண்பினால் எதிர்க்கின்ற எண்ணமே எழாமல் தமிழினம் எளிதில் வீழ்ச்சி அடைகிறது. தாய்மைப் பண்பு அளவற்று வளர்வதால் தற்காப்பு உணர்ச்சி முழுவதும் அழிந்து விடுகிறது. தாயானது சேய்களின் தவறுகளையும் தீங்குகளையும் பொறுத்துக்கொள்கிறது என்பதால் அது கோழையாகிவிட்டது என்பதன்று. தாய் பொறுக்கமுடியாமல் வெகுண்டெழுந்தாலோ, மனத்தளவில் சினந்தாலோ சேய்கள் வாழவே முடியாது என்பதை சேயினங்கள் உணருதல் வேண்டும்.
தமிழினம் தன்னின் உட்பகையால் தன்னையே அழித்துக்கொண்டதே தவிர வேற்றினங்களை ஒருபொழுதும் அழிக்க முற்பட்டதே இல்லை. உலகினங்கள் தமிழினத்தை அழித்துவிட்டு வாழ முற்படுகையில் உலகில் உட்பகை மட்டுமே மேலோங்கி மாந்தகுலமே அழிந்துவிடும். இது அறச்சினத்தின் வெளிப்பாடன்று, இயற்கையின் இயங்கியலாகும். எந்தவொரு மூலத்தின் கருவைச் சிதைத்தாலும் அதனின் வடிவமே வேறாகிவிடும்.
தமிழினத்தின் மீட்சி என்பது உலகின் மீட்சியாகும். ஆதலால் உலகின் நலனை விரும்புகிறவர்கள் தமிழினத்தின் நலனை விரும்புதல் வேண்டும்.
மொழியாலும் இனத்தாலும் திராவிடர்களாக இருப்பவர்கள் தமிழ், தமிழன், என்பனவற்றுள் ஒளிந்துகொண்டு தமிழுக்கும் தமிழினத்திற்கும் எதிரான வேலைகளை தொடர்ந்து தொய்வில்லாமல் செய்துவருவதால் தமிழும் தமிழினமும் தெளிவுபெறவே முடி யவில்லை. தமிழினம் எந்த முட்டையாக இருந்தாலும் அவையம் காக்கும், எந்த குட்டியாக இருந்தாலும் பால் கொடுக்கும் என்பதைத் தெரிந்த திராவிடர்களும், வேற்றினத்தாரும் தமிழினத்துடன் இரண்டறக் கலந்துவிட்டது போன்று நடித்து முனைப்புடன் செயல்பட்டு தமிழினத்தை அழித்து வருகின்றனர்.
இதனின் முன்னணி திராவிடத் தலைவராக மு. கருணாநிதி திகழ்கிறார். ஆரியர் முதல் ஆங்கிலேயர் வரை எத்தனையோ படையெடுப்புகள் நிகழ்ந்து இருந்தாலும் தமிழைத் தமிழர்களே வெறுத்தொதுக்கும் இழிநிலையை திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளே மிகச்சிறப்பாக செய்துள்ளன. குறிப்பாக கருணாநிதி தனது நுட்பமான சூழ்ச்சித் திறன் வாயிலாக தமிழர்களை சிதைப்பதற்காக மட்டுமே தமிழை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். வாழ்வதற்கே வழியற்று இருந்த கருணாநிதி இன்று தமிழும் தமிழினமும் வாழ்வதற்கு வழியே இல்லாமல் அழித்தொழித்து வருகிறார்.
இவர் தொலைக்காட்சியைத் தொடங்கி பண்பாட்டை அழித்தார், ஒரு உருவாய் அரிசியால் உழவை அழித்தார், வெளியுறவுக் கொள்கையால் ஈழத்தமிழர்களை அழித்தார், மதுவினால் மாந்த வளத்தை அழித்தார், குடும்ப அரசியலால் கொள்கையை அழித்தார், திராவிடத்தால் தமிழினத்தை கருவழித்தார், தன்னலவெறியால் அறத்தை அழித்தார், பணத்தினால் வாக்குரிமையின் வலிமையை அழித்தார், இலவயத்திட்டங்களால் தன்னம்பிக்கையை அழித்தார், விலைகட்டுப்பாட்டையும் அழித்தார். இவ்வாறு அழித்தல் அரசராக நாளும் புகழ்பெற்று வருகிறார்.
தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி அளவிலும் தமிழ்மொழி முழுமையான பயிற்றுமொழியாக இல்லாமல், ஒரு மொழிப் பாடமாகவும் இல்லாமல் பிச்சை கேட்கும் நிலையில் இருந்தது. கடுமையான போராட்டங்களின் விளைவாக ஆங்கிலப் பள்ளிகளில் மொழிப்பாடம் என்னும் பிச்சை போடப்பட்டுள்ளது. இருப்பினும் ஆங்கிலவழிப் பள்ளியில் தமிழில் பேசினால் சாவுத்தண்டனை வழங்குவதற்கு வாய்ப்பு இன்னும் வளமாகவே உள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக தமிழை எழுதவும், பேசவும் தெரியாத தலைமுறையினரை ஆங்கிலவழிக் கடைகள் திராவிட ஆட்சிகளின் துணையுடன் செய்து வந்துள்ளன.
அரசுப்பள்ளி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் பயில வைப்பதேயில்லை. இப்படிப்பட்ட நல்லவர்களால் தமிழ் எப்படி வாழும்? மெக்காலே என்பவரின் அடிமைமுறைக் கல்வியால் தமிழ்வழிக் கல்வி உயிர்ப்பு அடைவதற்கு வாய்ப்பே இல்லை. அவரின் கல்விமுறை அறிவுழைப்பிற்கும் உடலுழைப்பிற்கும் பகைமுரண்களையும் சுரண்டல்களையும் நீடிக்க வைப்பதற்கு மட்டுமே பயன்படும். அறிவுழைப்பும் உடலுழைப்பும் கலந்த கல்விமுறையே மாந்தகுலத்தை பொதுமைப்படுத்தும். அறத்தின் ஆட்சியை நிறுவி நிலைபெறச் செய்யும்.
ஆங்கிலவழிக் கல்வியின் மூலம் உழைப்பாளர்களை மிக நுட்பமாக சுரண்டவும், ஒடுக்கவும், வேண்டியே நன்கு பயிற்றுவிக்கப்படுகின்றனர். இதன்மூலம் நாம் பெற்றெடுத்து வளர்க்கும் பிள்ளைகளே அறத்திற்கும் நமக்கும் எதிராக செயல்படுவர். இவர்களை நாம் விரும்பினாலும் தடுக்க முடியாது.
ஆட்சிமொழிச் சட்டம் அரசு அலுவலகங்களில் மட்டும் படங்காட்டுகிற வேலைகளை செய்து வருகிறது. இருமொழிக் கொள்கையால் உயர்மட்ட அலுவலர் பொறுப்புகளில் தமிழ் எழுத, படிக்கத் தெரியாதவர்களும் பணியில் அமர முடிகிறது. நடுவணரசு அலுவலகங்களில் தமிழுக்கு மதிப்பே கிடையாது. தனியார் கடைகளில், நிறுவனங்களில் தமிழ்ப்பெயர்ப் பலகைகளை தொல்லியல் ஆய்வு செய்துதான் தேடிப்பார்க்க வேண்டும். தமிழ் ஊர்ப்பெயர்கள் பெரும்பாலும் சிதைக்கப்பட்டுள்ளன. அண்மைக்காலங்களில் குழந்தைகட்கு பெற்றோர்கள் தமிழ்ப் பெயர்களை வைப்பதேயில்லை.
வழக்கு மன்றங்கள் மூலம் வளமான வருவாயை எடுப்பதற்கு ஆங்கிலத்தை வணிகமொழியாக வைத்துள்ளனர். ஆங்கிலம் தெரியாதவர்கள் அழிவை காண்பதுதான் மீதமாகும். வழக்குகள் தாய்மொழியில் நடைபெற்றால் வழக்குமன்றம், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைக்கான போராட்டக்களமாக மாறிவிடும் எனும் அச்சத்தில் ஆளும் பிரிவினர் ஆங்கிலத்தை ஒடுக்குமுறை மொழியாகப் பயன்படுத்துகின்றனர்.
கால்கோள் எடுத்து கருவறை தீரும் வரை கோயிலை உருவாக்கிய தமிழர்கள் தன்னையும் தமிழையும் மதியாது பார்ப்பனர்களை நெறியாளர்களாக அமர்த்தி அழகு பார்த்துக்கொண்டு சமற்கிருத ஒலிப்பில் மயங்கி தம்மின் சாவிற்குப்பிறகும் சமற்கிருதத்திற்கு வாழ்வளிக்கின்றனர்.
ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, காதலர் விழா, காமக்களியாட்டம், அழகிப்போட்டி, பாலியல் தொழில்முறை, குடும்பத்துடன் குடித்து கூத்தடித்தல், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், இயற்கையை அழிப்பதில் மகிழ்தல், வேதிவகை வேளாண்மையால் மண்ணையும், உடலையும் கெடுத்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் நோயர்களாக இருத்தல், ஆங்கிலமருத்துவ அறுவைத் தொழிற்சாலைகளுக்கு உடல்களை பெருமளவு வழங்குதல் போன்றவை ஆங்கில வழிக் கல்வியாலும், ஆங்கிலேயர்வழி சிந்தனையாலும் வளர்ந்தனவையாகும். தமிழை இவ்வாறெல்லாம் திட்டமிட்டு அழித்தொழித்துவிட்டு அதற்கு நீத்தார் வழிபாடு செய்வது போன்று உலகத்தமிழ் செம்மொழி மாநாடு என்று கூத்தாட முனைவது எவ்வகையில் அறமாகும்?
தமிழ்நாட்டில் தமிழ்தான் கல்விமொழி, ஆட்சி மொழி, வழிபாட்டு மொழி, அறமொழி என்றும், தமிழக அரசுப்பணிகள் தமிழ்வழியில் பயின்றவர்கட்கு மட்டுமே வழங்க இயலும், தனியார் நிறுவனங்களும் தமிழை செயலாண்மை மொழியாக்க வேண்டும் என சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்திய பின்பு செம்மொழி மாநாடு நடத்தினால் அது தமிழுக்கும் தமிழர்க்கும் பெருமையாக அமையும். மாறாக கருணாநிதி தான் செய்கின்ற தவறுகளை எல்லாம் மறைப்பதற்கு தமிழக அரசின் பலநூறு கோடிகளை செலவழித்து செம்மொழி மாநாடு எனும் கூத்தை நடத்த இருப்பது தேவையா?
அறிவியல் வளர்ச்சியின் பெயரால் நிலவுலகை அளவற்று நாம் சீரழித்து வருகையில் அதை சமன்மை செய்யும் பொருட்டு இயற்கை சீற்றமெடுத்து தீர்வு காண்பது போன்று கருணாநிதி அவர்கள் எவ்வளவு கரவாக அழித்தொழிப்பு வேலைகளை செய்து மறைத்து வந்தாலும் மானமுள்ள தமிழர்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் என்பது திண்ணம்.
-வ.நா.தன்மானன், செஞ்சி (